Site icon சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026

மரமேறும் தவளை

This entry is part 16 of 14 in the series ஹைக்கூ

雨蛙
芭蕉にのりて
そよぎけり

ஆமெகயேரு
பாஷோவ்னினொரிதே
சோயோகிகெரி

மழைப்பொழிவில்
வாழையில் ஏறிய தவளை
நடுங்கியது

கவிஞர் தகாராய் கிகாகு (1661-1707)

ama gaeru / bashō ni norite / soyogi keri 

தகாராய் கிகாகு பாஷோவின் சீடர். புகழ்பெற்ற மருத்துவரின் மகன் தொழில்முறைக் கவிஞனாவது இன்றைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்க இயலாதது. அன்றைய ஜப்பானில், ஆட்சியாளர்களின் மருத்துவராக கிகாகுவின் தந்தை இருந்தும், கிகாகு மருத்துவராகாமல் தன்னைக் கவிஞராக முன்னிறுத்தினார். 

ஒப்பீட்டளவில் கிகாகுவின் கவிதைகளில் ஆழ்ந்த கருத்துகள் இல்லையென்பது சில ஆய்வாளரின் கருத்து. இருப்பினும் பாஷோவின் சீடர்களுள் முக்கியமானவராக அவர் கருதப்பட்டார். இந்தக் கவிதையை, கிகாகு தன்னுடைய குருவின் பெயர் ஹைக்கூவில் இருக்கும்படி எழுதியதால், இது முக்கியமான இடத்தைப் பெறுகிறது. 

பாஷோ என்னும் சொல் வாழையையும் குறிக்கும், ஹைக்கூ உலகில் கவிஞர் பாஷோவையும் குறிக்கும். கஜென் தத்துவத்தில் நிலையாமையின் குறியீடாக வாழையும் அதில் ஏறும் தவளையும் கொள்ளப்படுகின்றன. இயற்கை, ஜென் தத்துவம் என்ற இரண்டு பார்வைகளைக் கொண்ட கவிதையில் தானாக இணைந்த குருவின் பெயர் என்னும் மூன்றாவது கோணத்தையும் கொண்ட ஹைக்கூ என்னும் பெயர் பெற்றது.

முதல் அடி:

ஆமெ – மழை – 雨 – あ (ஆ), め (மெ)

கயேரு – தவளை –  蛙 – か (க), え (ஏ), る (ரு)

முதல் அடியில் மழை’யில்’ தவளை என எழுதாமல், வேற்றுமை உருபைத் தவிர்த்துவிட்டு, மழை தவளை என இரண்டு வார்த்தைகளை மட்டும் எழுதினாலும் கவிதை காட்சிப்படுத்துவது குழப்பமின்றித் தெளிவாகின்றது. ஹிராகனா எழுத்துருவில் ஹைக்கூ இலக்கணப்படி  ஐந்து எழுத்தெண்ணிக்கையைப் பெற்றது முதல் அடி.  

காஞ்சியில்: 雨蛙

ஹிராகனாவில்: あめかえる

தமிழ் ஒலிப்பில்: ஆமெகயேரு

பொருள்: மழையில் தவளை

கயேரு, கவாசு இரண்டும் தவளையைக் குறிப்பிடும் சொற்கள். இரண்டும் மாறி மாறி இடம்பெறுவதுண்டு. பரவலாக அறியப்பட்ட பழைய குளம் (Old pond) ஹைக்கூவில் தவளை ‘கவாசு’ எனச் சொல்லப்பட்டிருக்கும்.

இரண்டாம் அடி:

பாஷோவ் – 芭蕉 – 芭 – ば (பா), 蕉 – しょう – ஷோவ்

னி – に (னி)

னொறிதே – の (னொ), り (ரி), て (தே) 

இரண்டாம் அடியில் வாழையுடன் ‘னி’ (に) என்னும் வேற்றுமை உருபு சேர்ந்து ஏழு  எழுத்தெண்ணிக்கையை நிறைவு செய்தது. முதல் அடியில் உருபு இல்லாமலும், இரண்டாம் அடியில் உருபு இருந்தும் ஹைக்கூவின் இலக்கணம் கடைப்பிடிக்கப்பட்டது. பாஷோ என்பது எழுதெண்ணிக்கையில் ‘பா’ ‘ஷோ’ ‘வு’ என மூன்றாகக் கணக்கிடப்படும். வாழையோ கவிஞரோ பாஷோவின் சரியான ஒலிப்பு பாஷோவ். பேச்சு வழக்கில் வ் (வு) அழுத்தம் பெறாமல் பாஷோ என ஒலிக்கப்படுகிறது.

பாஷோவ்னி – வாழையில், னொரிதே – ஏறியது. னொரி என்றால் ஏறுவது. குரங்கு மரம் ஏறுவதையும் னொரிதே எனக் குறிப்பிடுவர்.    

காஞ்சி + ஹிராகனா கலந்து: 芭蕉にのりて

ஹிராகனாவில்: ばしょうにのりて

தமிழ் ஒலிப்பில்: பாஷோவ்னினொரிதே

பொருள்: வாழைமரத்தில் ஏறியது

மூன்றாம் அடி ஹிராகனாவில் : そよぎけり

தமிழ் ஒலிப்பில்: சோயோகிகெரி 

ஹைக்கூவைத் திருப்பி முடிக்கும் விதமாக, ஆட்டம் கண்டது என்னும் சொல் இடம்பெறுகிறது. இது சோயோகி + கெரி என இரண்டு சொற்களை எழுதப்பட்டது. そ (சோ), よ (யோ), ぎ (கி) – ஆட்டம். ‘சோயோகி’, சமகால ஜப்பானிய மொழியில் ‘சோயோகு’ என ஒலிக்கப்படுகிறது. இதன் பொருள் பக்கவாட்டில் லேசாகச் சாய்ந்து சாய்ந்து ஆடுவது. தென்னை மரம், மூங்கில், போன்றவை காற்றில் லேசாக ஆடுவதை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

け (கெ) り (ரி) – கெரி, இதன் பொருள் உணரப்பட்டது.

இவ்விரண்டு சொற்களும் சேர்ந்து மூன்றாம் அடியில் நுட்பமான கருத்தாக அசைதல் உணரப்பட்டது என்பதைக் குறிப்பிடுகின்றன. பக்கவாட்டில் அசைவதைத் (sway) தெளிவாகக் குறிப்பிட்டதால் மூன்றாம் அடியில் சொல்லப்படும் அசைதல் ‘வினை’ மரத்தைத்தான் குறிப்பிடுகிறது என்பது உறுதி. உரையாசிரியர் பார்வைக்கு ஏற்ப அதைத் தவளையின் நடுக்கம் என மொழிபெயர்த்தல் இயலாது. ‘ஆட்டம் உணரப்பட்டது’ அல்லது ‘அசைதல் உணரப்பட்டது’.

சித்திரம் : வர்த்தமான்

மழைப் பொழிவால் வாழை மரம் சாய்ந்து சாய்ந்து ஆடுகிறது. அதன் மேல் தவளை ஏறுகின்றது. வழுக்குவதற்குக் காட்டாகச் சொல்லப்படும் வாழையில், அதிலும் மழையிலும் காற்றிலும் ஆடிக்கொண்டிருக்கும் அம்மரத்தில் அது ஏறுவதும், ஜென் மரபின்படி நிலையாமையின் குறியீடாகக் கவிதையில் வெளிப்படுகின்றது.

வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றமாக,

மழை தவளை
வாழைமரத்தில் ஏறி
ஆட்டத்தை உணர்ந்தது

கவிதையை உள்வாங்கிய மொழிமாற்றமாக

மழைப்பொழிவில்
வாழையில் ஏறிய தவளை
நடுங்கியது

கடைசி அடியின் மொழிமாற்றம் மரத்தின் நடுக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை; கவிதையிலிருந்து உள்வாங்கிய ஜென் தத்துவத்தின் ‘நிலையாமை’ மட்டுமே பிரதிபலிக்கப்படுறது.

(தொடரும்)

ஹைக்கூ

உடைபட்ட ஊன்றுகோல்
Exit mobile version