Site icon சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026

ஒளியின் நதி 

திசையற்ற வெளி

​உன் வருகைக்காகச் செதுக்கிய
நிமிடங்களின் சிற்பங்கள்
யாரும் தீண்டாத வெற்று பீடங்களாகக் கரைகின்றன.
​வாக்குறுதிகளின் நிழல்வெளிகளை உதிர்த்துவிட்டு
எனது ஏகாந்தம்
தன் கருநீலச் சிறகுகளை விரிக்கிறது.
​ஏமாற்றத்தின் தழும்புகளில்
இப்போது
மௌனத்தின் மது வழிகிறது.
​நீ தந்துவிட்டுப் போன வெற்றிடத்தை
பேரண்டத்தின் திறவுகோலாக மாற்றிக்கொண்டேன்.
​இனி…
காத்திருத்தலின் சுழிக்குள் நானில்லை;
வருத்தியதை விடுத்து
மீளா இன்பத்தின் பெருவெளியில்
ஒளியின் துகள்களாய் நான்!


உந்திச் சுழி

இன்பத்தின் வாயிலாக உள்
நுழைத்து நரகத்தின் எரி கற்களாய்
எரித்து நாளும்
கனன்று எரிந்து சாம்பலாய்
போகும் முன்னே பிதுக்கி
தள்ளியது காலம்
சுழற்சியின் தொடக்கத்தில் கண்
மூடியவன் முடிவில் புரண்டு படுத்தான்
புத்துயிர்ப்பின் கணத்தில்
வாயில் திறந்தது உந்திச்
சுழியில் தோன்றியது உலகம்
சயனச் சிரிப்பில் ஈர்த்த
தத்துவம் கணிந்து பரவி
சுழன்று சகஸ்ரத்தில் இறங்கி
உயிரூட்டி எதிரெளித்து
பனிப்பாறை குளிர்ச்சியில்
உறைந்து கோடிக்கணக்கான
ஆண்டுகளில் வெடித்து
பிழம்பாய் தெறித்து உருகி
வழிந்ததும்
எழுந்தமர்ந்து கண் விழி திறந்தது
பிரபஞ்சம் முழுவதும் இருள் பரவியது.
பிளிச்சிட்ட கண்ணொளி சூரியனாக
சந்திரனாகி கண்சிமிட்டிய
பொழுது உலகம் விழித்தது.


பளிங்குக் கண்

ஆழ்ந்த மெளனம் நிரம்பிய
மரக் கூட்டங்கள் நிறைந்த
பகுதியில் அமர்ந்திருந்தேன்
சாம்பல் நிற, புள்ளிகள் நிறைந்த
உடலும், இறக்கையும் கொண்ட
மணிப் புறா
வலது தோளில் வந்தமர்ந்தது பயமின்றி
சிறிய பளிங்கு கண்ணில்
பிரபஞ்சத்தை , அன்பை , கருணையை கண்டேன்
தலையை திருப்பி திருப்பி பார்த்தது
எதிரில் , தொடையில் நடந்ததில்
சிலிர்த்தது உடல்
சற்று நேரம் நின்று கண்களை
உற்று பார்த்தது
நயன மொழியில் என்னுள்ளத்தை
ஊடுருவி ஒன்றுமில்லாமல் செய்தது , வெற்றிடம் சூழ்ந்தது
சட்டென்று என்னை தூக்கியபடி பறந்தது , ஓடையின் சலசலப்பு
துல்லியமாக கேட்குமிடத்தில்
இறக்கி வெற்றிடத்தை மேலும் வெற்றிடமாக்கியது
கணத்தில் அமர்ந்த இடத்திற்கே
திரும்பினோம்
இடது தோளில் அமர்ந்த புறா
காதருகில் மொளனத்தை மொளனமாக உபதேசித்து பறந்தது.

Exit mobile version