Site icon சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026

எது சனாதனம்?

சனாதன தர்மம் குறித்த சர்ச்சை தமிழ்நாட்டில் மீண்டும் எழுந்துள்ளது.

2026 இல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டு சட்டசபையில் தன் முதல் உரையில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ‘சனாதானத்தை ஒழிப்போம்’ என்று சொல்லி தன் உரையை முடித்தார்.

இதற்கு முன்னர் 2023 இல் உதயநிதி அவர்கள் சனாதனம் என்பது ஒரு நோய் பரப்பியை போல ஒழிக்கப்பட வேண்டியது என்று சொல்லி அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உதயநிதி ஸ்டாலின் அப்போது சட்டசபை உறுப்பினர் மட்டுமல்ல இளைஞர் நலத்துறை- விளையாட்டுத்துறை அமைச்சர். அத்துடன் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர். அந்த மாநாட்டின் பெயரே ‘சனாதன ஒழிப்பு மாநாடு’. இந்த மாநாட்டை நடத்தியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம். இது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய அமைப்பு.

இந்த எதிர்ப்பு பட்டவர்த்தனமான ஹிந்து சமய எதிர்ப்பு.

திராவிட இயக்கத்தினரிடம் நீங்கள் ஏன் இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறீர்கள் என்று கேட்டால் ’நாங்கள் இந்து என்பதால் இந்து மதத்திலுள்ள சீர்கேடுகளை எதிர்க்கிறோம்’ என்பார்கள். மற்றொரு நேரம் தமிழர்களாகிய நாங்கள் இந்துக்களே அல்ல. தமிழருக்கு சமயம் இல்லை என்பார்கள். இந்த நிலைபாட்டில் தமிழ் தேசியவாதிகள் என்போரும் இணைந்து கொள்வார்கள்.

இப்போது இந்து மதத்தை இழிவு படுத்தினால் அதற்கு அரசியல் விளைவுகள் இருக்கும் என்பதால் சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள் இன்னொரு நிலைபாட்டை இப்போது எடுக்கிறார்கள். அது: ’இந்து மதம் வேறு. சனாதனம்’ வேறு என்பது.

இவர்கள் பார்வையில் சமுதாய ஏற்ற தாழ்வுகளையும் தீண்டாமை போன்ற சமுதாய தீமைகளையும் பெண்ணடிமைத்தனத்தையும் தீண்டாமை போன்ற சமுதாய தீமைகளையும் மதத்தை பயன்படுத்தி நியாயப்படுத்துவதே சனாதனம். சுருக்கமாக சமுதாயத்தில் நிலவும் அனைத்து தீமைகளுக்குமான ஒரு பெயர் சனாதன தருமம் என்று இவர்கள் சொல்கிறார்கள். எனவே ’சனாதனத அழிப்பு’ என்கிற வெறுப்பு நிலைபாட்டை இப்படி சொல்லித்தான் நியாயப்படுத்துகிறார்கள்.

இதன் எதிர் நிலைபாடு என்னவாக இருக்க வேண்டும்?

சனாதன தர்மமும் இந்து சமயமும் ஒன்றே என்பதாக இருக்க வேண்டும். சாதியமும் பெண்ணடிமைத்தனமும் தீண்டாமையும் வேறெந்த சமுதாயக் கொடுமையும் தீமையும் சனாதனம் அல்ல என்பதாக இருக்க வேண்டும்.

இந்த விடயம்தான் சிக்கலை ஏற்படுத்துகிறது.

வலதுசாரி இந்து தரப்பில் பிரபலமான பேச்சாளர், சட்டவல்லுனரும் கூட. அவர் எல்லா இந்துக்களும் சனாதன தர்மத்தைச் சார்ந்தோர் அல்ல என்கிறார். வலதுசாரி இந்து அமைப்புகளின் வியூக வகுப்பாளர், ஐஐடிகளிலெல்லாம் உரையாற்றும் ஹிந்து அறிவுஜீவி ஒருவர், அவர் இந்தியாடுடே ஊடக சந்திப்பில் சனாதன தர்மமும் வர்ண தர்மமும் வேறில்லை என்றும், திருவள்ளுவரே பிராம்மணன் காலைத் தொட்டு வணங்காமல் ஒருவருக்கு ஆன்மிக ஈடேற்றம் கிடைக்காது என்பதாகவும் பேசினார். அவர் பேசும் வர்ண தர்மம் என்பது பிறப்படிப்படையிலானது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவர் தெய்வமாக வணங்கும் குருபீடம் அப்படித்தான் சொல்கிறது. வலதுசாரி குரல்கள் மட்டுமல்ல பல்வேறு வடமொழி வல்லுனர்கள் சனாதன தர்மத்தைக் காப்பாற்ற குரல் எழுப்புகிறவர்கள் பிறப்படிப்படையிலான வர்ண முறையை ஆதரிப்பதைக் காணலாம். ஏன் அவ்வப்போது பால்ய விவாகத்தை கூட ஆதரிக்கும் குரல்கள் சனாதனம் என்று தம்மை சொல்லும் தரப்பிலிருந்து வருவதை காண்கிறோம்.

அப்படி என்றால் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் திராவிட இயக்கத்தினரும் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? பிறப்படிப்படையிலான வர்ண அடுக்கினை வலியுறுத்துவதுதான் சனாதனமா? அப்படி என்றால் பிறப்படிப்படையிலான ஏற்றத்தாழ்வை ஏற்காத எவரொருவருக்கும்ம், மனிதர் அனைவரும் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்கிற சித்தாந்தம் கொண்ட எவரொருவருக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டிய விடயமாக இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அதாவது:

சனாதனம் பிறப்படிப்படையிலான வர்ணத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் ஆதரிப்பது எனவே ஒழிக்கப்பட வேண்டியது என்று மார்க்சியவாதிகளும் திராவிட இயக்கத்தினரும் ஒரு பக்கம் சொல்கிறார்கள்.

சனாதன தர்மம் என்றால் அது சாதிய ஏற்ற தாழ்வை, பிறப்படிப்படையிலான வர்ணத்தைக் கடைபிடிப்பது ஆணுக்கு பெண் அடங்கியிருக்க வேண்டும் என்பதையும் நியாயப்படுத்துவது என்றும் இந்த கோட்பாடுகளே நம் சமுதாயத்தை காப்பாற்றி நம் பண்பாட்டை சனாதனமாக வைத்திருக்கிறது என்று குறுகிய மதவாதிகளும் அதையே சொல்கிறார்கள்.

மாற்றத்தை விரும்பாதது மாற்றத்தை எதிர்ப்பது மாறவே மாறாதது சனாதனம் என்பதே இருபக்கதவரது வாதமும்.

உண்மையில் சனாதனம் என்கிற வார்த்தைக்கான பொருள் என்ன?

சனாதனம் என்கிற வார்த்தைக்கான பொருள் அழிவற்றது என்பது. தொடக்கம் இன்னதென சொல்லமுடியாத புராதனமானதென்றாலும் என்றென்றும் நீடித்து வாழ்வது. அப்படி ஒரு தர்மம் இருக்க வேண்டுமென்றாலே அது தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக் கொள்ள வேண்டும். It should adapt itself. தொடர்ந்து பரிணமித்தபடியே இருக்க வேண்டும். எனவே சனாதன தர்மம் மாற்றமில்லாதது அல்ல. அது என்றும் வாழ்வது. அது என்றும் வாழ்வது என்பதாலேயே அது தன்னைத் தொடர்ந்து மாற்றி தகவமைத்துக் கொள்வது அதன் நியதி ஆகிறது.

இது வேத காலம் முதலே ’சனாதனம்’ என்கிற சொல்லோடு இணைந்ததொரு பொருள். அதர்வண வேதத்தில்

சனாதனமேனம் அஹுர்ருயதாதுஸ்தாய் புனர்நவஹா
சனாதனம் ஏனம் அஹுர் யுதாயதுஸ்யாத் புனர் நவஹா


தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு தகவமைத்துக் கொண்டும் வாழ்கிறது சனாதன தர்மம். எனினும் அதன் அடிப்படை என்று ஒன்று உண்டல்லவா? அது என்னவாக இருக்கும்?

அது வர்ண அமைப்பா? அது பால்ய விவாகமா? தீண்டாமையா? பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன் பிறிதொருவன் தாழ்ந்தவன் என்பதா? ஏதோ ஒரு தெயுவத்தின் மீதோ ஒரு இறைவாக்கினர் மீதோ ஒரு குறிப்பிட்ட இறைநூலின் மீதோ உள்ள நம்பிக்கையா?

மகாபாரதத்தில் ஒரு அழகான கதை உள்ளது.

கடும் தவம் செய்யும் அந்தணன் ஒருவன். ஜாஜலி என்பது அவன் பெயர். அவன் உட்காராமல் நின்றபடியே உடலை வருத்தி தவம் செய்கிறான். அப்போது அவன் சடாமகுடத்தில் பறவை ஒன்று கூடு கட்டி குடியேறிவிடுகிறது. முட்டைகளிட்டு முட்டைகளை பொறித்து குஞ்சுகளை வளர்க்கிறது. தவம் முடிந்த பின்னரும் ஜாஜலி தான் அசைந்தால் இந்த பறவையின் குடும்பத்துக்கு இடையூறு என்று அசையாமல் நிற்கிறான். அவை கூடு கலைத்து சென்ற பிறகும் அவை நிச்சயமாக திரும்ப வரப்போவதில்லை என உறுதியான பின்னரே அவன் நீராட செல்கிறான். தனது அகிம்சை விரதத்தை நினைத்து அவனுக்கு இறுமாப்பு ஏற்படுகிறது. ஆனால் அவன் நீராடும் போது நீர்தேவதைகள் காசியில் வாழும் துலாதரன் என்பான் ஜாஜலியை விடச் சிறந்த தர்மவான் என்பதை அவனுக்கு சொல்கின்றன. அவன் துலாதரனை கண்டு அவனிடமிருந்து உபதேசம் பெற செல்கிறான். ஏதோ பெரிய ஞானியை எதிர்பார்த்து சென்ற ஜாஜலிக்கு பெரிய ஆச்சரியம். அவன் காண்பது வனங்களிலிருந்து கிடைக்கும் வேர்கள், மூலிகைகள், எண்ணெய் இத்யாதிகளை விற்கும் ஒரு வியாபாரி. ஆனாலும் பணிவுடன் அந்த வணிகனிடம் உபதேசம் கேட்கிறான் ஜாஜலி. அப்போது அந்த வன வியாபாரி சனாதன தர்மமென்றால் என்னவென்பதை விளக்குகிறான்:

தர்மம் சரஹஸ்யம் சனாதனம் சர்வபூத ஹிதம் மைத்ரம்’

அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வது, அனைத்துயிர்களிடமும் நல்நட்பு கொண்டிருப்பது.

இதுதான் சனாதன தர்மம். இதுதான் அடிப்படை.

இந்த சனாதன தர்மத்தை ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கைக்கு ஏற்றி சொல்ல முடியுமா? குறிப்பிட்ட சடங்காச்சாரங்களுக்கு மட்டுமான பெயரென சொல்லிவிட முடியுமா? முடியாது. இது ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையையோ சடங்கையோ சார்ந்தது அல்ல.

எது அழிந்தாலும் அழியாத அறம் சனாதன தர்மம்.

இதை கம்பர் கூறுகிறார்: ’கறங்கு கால் புகா கதிரவன் ஒளிபுகா மறலி மறம் புகா இனி வானவர் புகார் என்கை வம்பே திறங்கு காலத்து யாவையும் சிதையினும் சிதையா அறம் புகாது

இராவணன் வேத சடங்குகளை செய்பவன். அந்தண குலத்தவன். ஆனால் அவனிடம் சனாதன தர்மம் இல்லை. அவனது இலங்கையில் செல்வம் இருந்தது, மாட மாளிகளைகள் கூட கோபுரங்கள் இருந்தன. வேள்விக்கூடங்கள் இருந்தன. கோவில்கள் இருந்தன. ஆனால் பிரபஞ்சமே அழிந்தாலும் அழியாத சிதையா அறம் அங்கே இல்லை.

எனவே சனாதன தர்மம் என்பது சடங்குகளையும் மத நம்பிக்கைகளையும் சார்ந்த ஒன்று அல்ல. அப்படி நம் பாரத மரபு கருதவில்லை.

சரி. சமூக பழக்க வழக்கங்களை தர்மம் எனக் கொண்டு அவற்றை சனாதனம் என சொல்லலாமா?

பகவத் கீதை முழுக்க சனாதனம் என்பது பயன்படுத்தப்படும் விதத்தை பார்ப்போமென்றால் இதற்கான பதில் நமக்கு கிடைக்கும்.

ஒரு சமுதாயத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள் மரபுகள் ஆகியவற்றை அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவை மாறாதவை என்றும் அதுவே சனாதனமான தர்மம் என்றும் கருதுவது இயல்பான விடயம்தான். அர்ஜுனன் அப்படித்தான் கருதினான் எனவே அர்ஜுன விஷாத யோகத்தின் நாற்பதாவது சுலோகத்தில் அவன் சொல்கிறான்.

குலக்ஷயே ப்ரணச்யந்தி குலதர்மா சனாதன:

குலமே அழிந்தால் என்றுமே அழியா நிலையுள தர்மம் குன்றிடுமன்றோ

அடுத்து அதே அத்தியாயத்தின் 43 ஆவது சுலோகத்தில் சாதி தர்மத்துக்கும் குலதர்மத்துக்கும் மற்றொரு அடைமொழி கொடுக்கிறான். அவை சாச்வதமான தர்மங்களாம்.


உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாச்ச சாச்வதா:

(தமிழாக்கம்) நிலையாயுள்ள சாதி தர்மங்களும் குலதர்மங்களும் நலியக்கெடுமே

ஒட்டுமொத்த பகவத் கீதையில் சாதி தர்மம் குலதர்மம் என்கிற வார்த்தைகளை அருச்சுனன் மட்டுமே பயன்படுத்துகிறான். ஆனால் மீதம் 17 அத்தியாயங்களில் ஒரு இடத்தில் கூட ஸ்ரீ கிருஷ்ணர் சாதி தர்மம் குல தர்மம் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தவே இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக ஸ்வதர்மம் ஸ்வபாவம் என்கிற வார்த்தைகளை அவர் பயன்படுத்துகிறார். இவை தனிமனித இயற்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.

இதை கருத்தில் கொண்டு சனாதனம் என்கிற வார்த்தையை ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் அது அர்ஜுனனின் பார்வையை ஏற்கும்படியாக உள்ளதா என்பதை காணலாம்.

உன் சுயம் உன்னுள் உள்ளது. அது உடைக்கப்பட முடியாதது

அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்யோ அசோஷ்ய ஏவச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுர் அசலலோ அயம் சனாதன:
[2:24]

-அச்சேத்யோ அயம்- என்கிறார் கிருஷ்ணர். மிக முக்கியமான பண்பு இது. இன்றைக்கு நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு அரசியல் வார்த்தை தலித் என்பது. ஒடுக்கப்பட்டு வரலாற்றில் சொந்த சகோதரர்களாலேயே அநீதி இழைக்கப்பட்டு சுரண்டப்பட்டு மனிதத்தன்மையே இல்லாத தீண்டாமை என்கிற கொடூர தீமைக்கு ஆட்படுத்தப்பட்ட சமுதாயங்கள் அப்பெயரை பயன்படுத்துகின்றன. இந்த பெயருக்கு ’உடைந்தவர்’ என்ற பொருளும் உண்டு. நீ உடைக்க முடியாதவன். உடைக்க முயற்சி செய்யும் எதனாலும் உடைக்க முடியாதது உன் சுயம். அதைக் கொண்டு சமூக அநீதிகளை எதிர்த்து நில் என்னும் சக்தி பொருந்திய செய்தியை வைத்துக் கொண்டு அதை செவி மடுப்போருக்காக அமைதியாக காத்திருக்கிறது இந்த சுலோகம். அந்த சுயம் எல்லா மனிதருள்ளும் இருக்கிறது. மொழி, மதம், சாதி, தேசியம், பாலினம் என்று எந்த வேறுபாட்டையும் கொள்ளாதது அந்த சுயம். அந்த சுயத்தை இந்த சுலோகத்தில் சனாதனம் என்கிறார் பகவான். ஒவ்வொரு மனிதனும் சுயமும் அகமும் சனாதனமானது என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

அடுத்ததாக கிருஷ்ணர் வேள்வியில் எஞ்சுவதை உண்ணுபவர் சனாதனமான பிரம்மத்தை அடைவர் என்கிறார். இது ஞானகர்மசன்னியாசயோகமான நான்காவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

யக்ஞ-சிருஷ்டாஅம்ருத-புஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதனம் [4:31]

இங்கு வேள்வி என்பது சடங்கல்ல. அல்லது சடங்கு மட்டுமல்ல. வாழ்வனைத்துமே வேள்வி. வாழ்வின் அனைத்து செயல்பாடுகளும் வேள்வி. ஒருவர் பொருள் ஈட்டி அந்த பொருளால் சமுதாயத்துக்கு நன்மை செய்வது வேள்வி. கற்றலும் கற்பிப்பதும் வேள்வி. விவசாயம், உணவு உற்பத்தி வேள்வி. அதே அத்தியாயத்தில் கிருஷ்ணர் சொல்கிறார்

த்ரவியயக்ஞாஸ்
தபோயக்ஞா
யோக யக்ஞாஸ் ததாபரே
ஸ்வாத்யாய ஞானயக்ஞாச்ச யதய ஸன்ஷித-வ்ரதா
[4:28]


(தமிழாக்கம்) பொருளீட்டி பகிர்தல் வேள்வி, தவமும் வேள்வி, யோகமும் வேள்வி ஆராய்ந்து கற்றலும் ஞான வேள்வி அவ்வேள்வியை வேட்போர் நல்லொழுக்கம் உடையோர்.

உணவு உற்பத்தியும் வேள்வி. அந்த உணவை பகிர்ந்து உண்ண வேண்டும். அப்படி விருந்தோம்பல் செய்வதே வேள்வி. அதிதிக்கு உணவளிப்பதும் வேள்வி. மகாபாரதம் இதை பொன்னிற கீரி கதை மூலமாக விளக்குகிறது.

வேள்வியில் மிகுவதை உண்ணும் சான்றோர் பாவம் யாவும் வென்றோராம்

புஞ்ச்யதே தே த்வஹம் பாபாத் யே பசந்தி ஆத்மகாரணாத்.
தத்தம் பொருட்டே சமைக்கும் கயவர்
பாவம் தனையே உண்போராம்
இங்கு உணவு என்பது நாம் அனுபவிக்கு அனைத்து பௌதீக வளங்களையும் வளங்களால் நாம் துய்க்க உருவாக்கும் செல்வங்களையும் உணவு உட்பட குறிக்கும்.


விருந்தோம்பல் வேள்வி என்பதை திருவள்ளுவரும் சொல்கிறார்.

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.


அடுத்ததாக சனாதனம் என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் (ஞான விஞ்ஞான யோகம் அத்யாயம் 7) அனைத்து உயிர்களிலும் உள்ள உயிர் வித்து என்பதாக பயன்படுத்துகிறார்.

பீஜம் மாம் சர்வபூதானாம் வித்தி பார்த்த ஸநாதனம் [7:10]

அனைத்துக்குள்ளும் இருந்து இயங்கும் உயிர்விசை உயிரியக்கமாக என்னை அறிவாய் அந்த இயக்கம் சனாதனமானது.

உலக மதங்கள் பலவும் இறைவனை கர்த்தராக காணும் இயல்புடையன. அவன் உயிர்களை வடிவமைக்கிறான். எப்படி ஒரு பொறியியலாளர் இயந்திரங்களை வடிவமைக்கிறாரோ அவ்வாறு இறைவன் உயிரினங்களை வடிவமைக்கிறான். எதற்காக? சில மதங்களில் எல்லா உயிர்களும் மனிதனுக்காக படைக்கப்பட்டவை என்கிற கோட்பாடு உண்டு. இதனால் பல சூழலியல் பேரிடர்களை மானுடமும் உயிரினங்களும் சந்தித்தன. லின் வைட் ஜூனியர் என்கிற புகழ்பெற்ற தொழில்நுட்ப வரலாற்றாசிரியர் – அதாவது தொழில்நுட்பங்கள் வரலாற்றில் எப்படியெல்லாம் உருவாகி வந்துள்ளன, அவற்றின் தாக்கம் என்ன என்பதை ஆராயக்கூடியவர். அவர் தாம் எழுதிய ’நம் சூழலியல் பிரச்சனையின் வரலாற்று வேர்கள்’ எனும் பிரசித்தி பெற்ற ஆய்வுத்தாளில் இந்த மத நம்பிக்கை – அதாவது உலகமே மனிதனின் மகிழ்ச்சிக்காக படைக்கப்பட்டது- என்ற நம்பிக்கையே நம் சூழலியல் பிரச்சனைகளுக்கு காரணம் என்கிறார்.

ஆனால் ஆண்டவன் வடிவமைப்பாளன் என்கிற கோட்பாட்டை இன்று அறிவியல் உடைத்துவிட்டது. குறிப்பாக பரிணாம அறிவியல். இது குறித்து சிறப்பான நூல் ஒன்றை ரிச்சர்ட் டாவ்கின்ஸ் எழுதியிருக்கிறார் ‘Blind Watchmaker’ . எலிஸபெத் ஸஹ்தோரிஸ் என்கிற உயிரியியலாளர் – systems biologist- உலக மதங்களை இரண்டாக பகுக்கிறார். இறைவன் படைப்புக்கு வெளியே சிருஷ்டி கர்த்தராக இருக்கும் மதங்கள் – இவற்றை allopoietic என கூறுகிறார். ஒவ்வொரு உயிரிலும் உயிரற்றதிலும் இயக்க சக்தியாக உள்ளுறையும் இறைத்தன்மையை முன்வைக்கும் மதங்கள் – இவற்றை autopoietic மதங்கள் என்கிறார். கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை முந்தைய வகை மதங்கள். ஹிந்து மதம், தாவோ, பௌத்தம் இவையெல்லாம் autopoietic மதங்கள்.


இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் பரம்பொருள் என்பது சனாதனமாக அனைத்து உயிர்களிலும் உள்ள உயிர் விதை என்கிறார். அதுவே உயிரியக்கமாக விகசிக்கிறது. எனவே அனைத்து உயிர்களுக்கும் அவையளவிலேயே ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. இந்த பார்வை அறிவியலுக்கும் சுற்றுச்சூழலியலுக்கும் உகந்த பார்வை.

எட்டாவது அத்தியாயமான அக்ஷரப்ரஹ்ம்ம யோகத்தின் 20 ஆவது சுலோகத்தில் அனைத்துக்கும் அப்பாலான பிரபஞ்ச சத்தியமாக சனாதனமாக இருக்கும் அடிப்படை வஸ்துவை சொல்கிறார். நமக்கு வெளிப்படும் பிரபஞ்சம் உள்ளது. அதே போல வெளிப்படாத பரிமாணங்களும் பிரபஞ்சங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் அப்பாலான ஆனால் அனைத்துடனும் கலந்து அனைத்தையும் நீங்கி நிற்கும் அந்த பரம வஸ்து- அனைத்து இருப்பின் அடித்தளமாக இருப்பதை சனாதனம் என்கிறார்:

பரஸ் தஸ்மாத்து பாவ: வ்யக்த்தோ அவ்யக்தோ ஸனாதன:

இங்கு ஸனாதனம் என்பது பிரபஞ்சம் தழுவிய ஒரு தத்துவத்தை குறிக்கிறது.


விஸ்வரூப தரிசனத்தில் அர்ஜுனனுக்கு அறிவுக்கண் விழிப்படைகிறது.

த்வம் அக்ஷரம் பரமம் வேதி தவ்யம்
த்வமஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதானம்
த்வம் அவ்யய ஸாச்வத-தர்ம-கோப்தா
ஸனாதனஸ்-த்வம் புருஷோ மதோ மே
[11:18]

இறுதியாக ஸனாதனம் என்பதை ஜீவலோகத்தில் அதாவது உயிரிமண்டலத்தில் உயிர்களில் அழிவற்ற அம்சமாக இருப்பதாக கூறுகிறார் கிருஷ்ணர்:

மமைவான்ஷோ (மம ஏவ அன்ஷோ) ஜீவலோகே ஜீவபூத சனாதன: (15:7)


சனாதனம் என்பதை அர்ஜுனன் சமுதாயத்தில் நிலவும் சில நடைமுறைகள் என்கிற பொருளில் பயன்படுத்தினான். சமுதாய ஏற்றதாழ்வுகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக பயன்படுத்தினான்.

முதலில் நித்ய: ஸர்வகத: ஸ்தாணுர் அசலம் அயம் சனாதன: என ஒவ்வொரு மனிதன் அகத்திலுள்ள அவன் சுயத்தை சனாதனம் என்றார்.

அடுத்ததாக ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் நன்மைக்கு பங்களித்து தான் வாழ்வதை
யக்ஞ சிருஷ்டாம்ருத-புஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதனம்’ என்றார்.

பின்னர் அனைத்துயிர்களிலும் உறையும் இறையை ‘பீஜம் மாம் சர்வபூதானாம் வித்தி பார்த்த ஸநாதனம்‘ என்றார்.

பிரபஞ்சம் தழுவிய தத்துவமாக பரஸ் தஸ்மாத்து பாவ: வ்யக்த்தோ அவ்யக்தோ ஸனாதன: என்று சொன்னார்.

இறுதியாக மமைவான்ஷோ (மம ஏவ அன்ஷோ) ஜீவலோகே ஜீவபூத சனாதன: (15:7)

இங்கெல்லாம் சனாதனம் என்பது பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்த பரிபூரணானந்தமான தத்துவம் வெவ்வேறு நிலைகளில் நம் இருப்புடன் -சுயம் தொடங்கி சமூகம், உயிரி மண்டலம், இப்பிரபஞ்சம்- என அனைத்துடனும் இணைந்து இயங்கி அனைத்தையும் நீங்கியும் நிற்கும் சத்தியத்தின் குணமாக காட்டுகிறார்.

பாரதத்தில் தோன்றிய இதர மார்க்கங்கள், மரபுகள், வழிமுறைகள் ஆகியவையும் சனாதனம் என்கிற பதத்தை பயன்படுத்தியுள்ளன.

பகவான் கௌதம புத்தர் தம்முடைய தம்மத்தை சனாதனம் என அழைத்தார். சமணரான அமரகோசர் தனது சமஸ்கிருத சொற்களஞ்சியமான அமர கோசத்தில் சனாதனத்தை சாஸ்வதமானது உறுதியானது ’த்ருவ’ நித்யமானது, எப்போதும் இருப்பது சதாதனம் – சனாதனம் என்கிறார்.

சீக்கிய மரபின் அடிப்படையான மகா வாக்கியம் ‘சத் ஸ்ரீ அகால்’ என்பது. சீக்கிய மதப்பற்றாளர்கள் தம்மை அகாலி என்றே சொல்வர். சத் ஸ்ரீ அகால் என்பது சத்தியம் சுந்தரம் சனாதனம் என்பதாகும் காலத்தால் அழிக்க முடியாதது. காலத்தை கடந்தது அகால். அந்த தர்மத்தை பின்பற்றுகிறவன் அகாலி. சனாதனம் என்றால் காலத்தை கடந்து காலத்தால் அழிவற்றதாக இருப்பது. அப்படிப்பட்ட தர்மத்தை பின்பற்றுகிறவன் சனாதனி.

எனவே சனாதனம் என்பது அடைமொழி. இதை ஒரு சமுதாயத்தில் நிலவும் சில நடைமுறைகளுடன் இணைப்பதை கீதை மறுக்கிறது.

வடலூர் வள்ளல் பெருமான் தமது ஞான மரபை சாகா கலை என்று அழைத்தார். அதாவது காலத்தால் அழியாத நித்திய வாழ்வை ஜீவகாருண்யம் மூலம் அளிப்பது – ஆங்கீரச ஆண்டு புரட்டாசி மாதம் இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. மற்ற எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாத கல்வியையும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி யிருக்கிறதாகக் காணப்படுமாகில், அது இந்து வேதாகமங்களில் சொல்லியிருப்பதின் ஏகதேசங்களென்பது உண்மை.

ஆங்கிலேய ஆட்சியின் காலத்தில் சமூக தேக்கநிலை நிலவியது. சாதியக் கொடுமைகள், பெண்களை அடக்குதல், பாலிய விவாகம், தீண்டாமை இவைதான் இந்து மதம் என்கிற சூழலை காலனிய ஆதிக்கமும் இங்கிருந்த இயல்பான சமூக தேக்கநிலையும் உருவாக்கியிருந்தன. அதை எதிர்த்து மிகத் தீவிரமாக குரல் கொடுத்த இயக்கம் ஆரிய சமாஜம். ஆரிய சமாஜத்தை உருவாக்கிய தயானந்தர் தம் இயக்கத்தை புதிய மதமல்ல என்று விளக்கினார். அப்போது அந்த இயக்கத்தின் சமயம் ‘சனாதன வேத சமயம்’ என விளக்கினார்.

ஆரிய சமாஜமே சாதி ஒழிப்பில் மிக முக்கியமான போராட்டங்களை நிகழ்த்தியது. பெண்கள் விடுதலையில் ஆரியசமாஜிகளே புகழ்பெற்ற சர்தா சட்டத்தின் மூலம் பால்யவிவாகத்தை ஒழித்தனர். உருவவழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவரென்றாலும் ஆலய நுழைவு போராட்டங்களுக்கும் ஆலய நுழைவு சட்ட முன்வரைவுகளுக்கும் ஆரிய சமாஜிகள் பெரும் ஆதரவு அளித்தனர். வித்தல்பாய் படேல் சாதி மறுப்பு திருமணங்களை சட்டபூர்வமாக்கிட மசோதாவை கொண்டு வந்த போது அதை ஆதரிக்க மகாத்மா காந்தி கூட தயங்கிய நிலையில் ஆரிய சமாஜிகள் அதை வரவேற்றனர். இன்றைய உத்தராகாண்ட் பகுதியில் 1920களில் நடந்த டோலா பல்கி இயக்கம் – பட்டியல் சமுதாயங்களாக வகைப்படுத்தப்பட்ட மக்கள் தம் திருமண விழாக்களில் பல்லக்குகளை பயன்படுத்த போராடிய இயக்கம். இதில் ஆரிய சமாஜமே பெரும் பங்கு வகித்தது.

யுவால் நோவா ஹராரியை அறிந்திருப்பீர்கள். அறிவியல் தொழில்நுட்பம், மானுட சமுதாயம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதும் சிறந்த எழுத்தாளர். அவர் தமது நூலான ஹோமோ தெயூஸில் தயானந்த மகரிஷி குறித்து எழுதியுள்ளார். பெண்கள் உரிமைகள் குறித்து அன்றைய காலகட்ட போப்பின் கருத்துகளையும் தயானந்தரின் கருத்துகளையும் ஒப்பிடும் யுவால் நோவா ஹராரி தயானந்த சரஸ்வதியின் கருத்துகள் போப்பின் கருத்துகளை விட ஒப்பீட்டளவில் முற்போக்கனவையாக இருந்ததாக சொல்கிறார்.

இந்த ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதிதான் தமது சமயத்தை ‘சனாதன வேத தருமம்’ என அடையாளப்படுத்தினார்.

சுவாமி விவேகானந்தர் சனாதன தர்மம் என்பதை உலகனைத்தையும் ஒரு குடும்பமாக அனைத்து சமயங்களையும் அரவணைக்கும் வேதாந்த சமயத்தின் பெயராக முன்வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் எந்த சமயத்தையும் மாற்றி அமைக்க முன்வரவில்லை ஏனென்றால் உண்மையில் அவை எல்லாம் ஒரே சனாதன தர்மத்தின் பாகங்களே என்பதை அவர் உணர்ந்திருந்தார் என கூறினார் ஸ்வாமி விவேகானந்தர். 1907 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் அனைத்து உரைகளும் கட்டுரைகளும் கடிதங்களும் தொகுத்து வெளியிடப்பட்ட போது அவை ‘சனாதன தர்மத்தின் உயர்வை’ வெளிப்படுத்துபவை என்றே அறிமுக கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது.

சனாதன தர்மத்தை மிகவும் தெளிவாக ஹிந்து சமயத்துடன் சிறப்பாக இணைத்து அதே நேரத்தில் அதன் உலகளாவிய சமன்வயத்தன்மையை வெளிப்படுத்தி சனாதன தர்மத்தை இந்த தேசத்தின் அடிப்படை இயற்கையாக கூறியவர் ஸ்ரீ அரவிந்த கோஷ் ஆவார். அவரது புகழ் பெற்ற உத்தர்பாரா பேருரையில் சனாதன தர்மமே இந்த தேசத்தின் அடிப்படை என்பதை மிக ஆணித்தரமாக அரவிந்தர் முன்வைத்தார்.

ஹிந்து சமயம் என நாம் அழைப்பது ஏன் சனாதன சமயமென்றால் அதுவே பொதுமைத்தன்மை வாய்ந்த மற்றனைத்து சமயங்களையும் அரவணைக்கும் சமயமாகும். That which we call the Hindu religion is really the eternal religion, because it is the universal religion which embraces all others. சர்வ பொதுத்தன்மை கொண்டதாக ஒரு சமயம் இல்லாதிருந்தால் அது சனாதனமாக முடியாது. (If a religion is not universal, it cannot be eternal. ) ஒரு குறுகிய மதம், பிளவுபடுத்தும் கோட்பாட்டை கொண்ட மதம், அனைவரையும் ஏற்காது புறந்தள்ளும் மதம் சில காலம் வாழலாம். குறுகிய ஏதோ நோக்கத்துக்காக வாழலாம், [ஆனால்]சனாதன தர்மமானது அறிவியலின் கண்டுபிடிப்புகளையும், தத்துவத்தின் ஊகங்களையும் தன்னுள் அடக்கி, முன்கூட்டியே எதிர்பார்த்து, பொருள்முதல்வாதத்தை வெல்லக்கூடியது. இது மனிதகுலத்திற்கு கடவுள் நமக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பதை உணர்த்தும் ஒரே மதம்; மனிதன் கடவுளை அணுகக்கூடிய அனைத்துச் சாத்தியமான வழிகளையும் தன் எல்லைக்குள் தழுவிக்கொள்ளும் ஒரே மதம். இது எல்லா மதங்களும் ஒப்புக்கொள்ளும் உண்மையை ஒவ்வொரு கணமும் வலியுறுத்தும் ஒரே மதம் — அவர் எல்லா மனிதர்களிலும், எல்லா பொருட்களிலும் இருக்கிறார்; அவருக்குள் நாம் இயங்குகிறோம், நமது இருப்பைப் பெறுகிறோம் என்பதை. இது நாம் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு நம்புவதோடு மட்டுமல்ல, நமது இருப்பின் ஒவ்வொரு அங்கத்தாலும் அதை உணர்ந்துகொள்ளச் செய்யும் ஒரே மதம்.


ஆரிய சமாஜத்தின் முற்போக்கான சாதிய ஒழிப்பு, பால்ய விவாக ஒழிப்பு போராட்டங்களை எதிர்த்த பிற்போக்காளர்களும் தம்மை சனாதனிகள் என அழைக்க ஆரம்பித்தனர். காலனிய அரசாங்கத்துக்கும் இது வசதியாக இருந்தது. எனவே சனாதனிகள் எனும் பெயர் பிற்போக்காளர்களுக்கான பெயராக தம்மை ஆச்சாரவாதிகளாக நிலைநிறுத்திக் கொள்வோருக்கான பெயராக மாறியது.

ஆனால் சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்த பல இந்து ஆன்மிக தலைவர்கள் சனாதன தர்மம் என்கிற அழகிய பெயரை இப்படி பிற்போக்குத்தனமான சக்திகளுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. வைக்கம் ஆலய சத்தியாகிரகத்தின் போதும் தீண்டாமை எதிர்ப்பின் போதும் கட்டுப்பட்டித்தனமான வைதீகர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்த போது காந்திஜி தன்னை சனாதனி என்றும் அந்த சனாதன தர்மத்தின் அடிப்படையிலேயே தீண்டாமை எதிர்ப்பையும் ஆலய பிரவேச இயக்கத்தையும் தாம் நடத்துவதாக அறிவித்தார். 1921 இல் யுங் இந்தியா பத்திரிகையில் மகாத்மா இந்த பிரகடனத்தை செய்தார். தன்னை சனாதன தர்மி என பெருமையுடன் அறிவித்த மகாத்மா பௌத்தமும் சமணமும் ஹிந்து மதத்திலிருந்து வேறல்ல என்பதையும் பின்னர் கூறினார்.

அத்வைத பரமாச்சாரியாரான ஸ்ரீ நாராயண குருதேவர் ‘ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனுஷருக்கு’ என்னும் மகாவாக்கியத்தை வலியுறுத்தியவர். 1928 இல் ஜகத்குரு ஸ்ரீ நாராயண குருதேவர் மகா சமாதியடைந்தார். 1927 இல் ஆலப்புழை பகுதியில் ஆற்றிய உரையில் அவர் தமது சாதியமற்ற அத்வைத மார்க்கத்தை சனாதன தர்மமென்றே குறிப்பிட்டார். தம் சமாதிக்கு முன்பான இறுதி செய்தியில் இதையே அவர் கூறினார். அவரது சிஷ்யர்களிலேயே பலர் அன்று கேரளத்தில் நிலவிய மிக மோசமான மனிதத்தன்மையற்ற சாதியத்துக்கு எதிராக கிறிஸ்தவத்துக்கோ அல்லது மிகக் குறைந்த பட்சம் பௌத்த்தத்துக்கோ மதம் மாறுவதே சுயமரியாதை மீட்டெடுப்பதற்கான ஒரே மார்க்கமென நம்பினர். ஏன் தம் குருவிடமே கூட மதமாற்றத்தை சிபாரிசு செய்ய அவ்வப்போது வலியுறுத்தினர். எனவே இந்த இறுதி செய்தியில் அத்வைத பரமாச்சாரியாரான ஸ்ரீ நாராயண குரு கூறினார், ‘மதமாற்றமில்லாமல் சமூக ஏற்றதாழ்வுகளும் நம் கஷ்டங்களும் தீராது என திடமாக நம்புவோர் இந்த சனாதன தர்மத்துக்கு மதம் மாறட்டும். அதுவே அவர்களது மதமாற்றமாகவும் விடுதலை பிரகடனமாகவும் இருக்கட்டும்.” இது ஆலப்புழாவில் ஜகத்குருவும் அத்வைத பரமாச்சாரியாருமான ஸ்ரீ நாராயணகுரு சாதி கேட்காத சாதி பார்க்காத சாதி கூறாத அனைவரையும் அரவணைக்கும் அன்பே சனாதன தர்மத்தின் அடிப்படை அதுவே சனாதன தர்மம் என்றார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த பாரம்பரியத்தில் வந்த துறவி சுவாமி சித்பவானந்தர். அவரது தீண்டாமை ஒழிப்பு பணிகள் மகாத்மா காந்திஜியால் சிலாகிக்கப்பட்டன. சுவாமியை சந்தித்த போது காந்திஜி தீண்டாமையை எதிர்த்த போதிலும் பிறப்படிப்படையிலான வர்ண அமைப்பில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். முதல் சந்திப்பிலேயே சித்பவானந்த சுவாமி காந்திஜியிடம் இது தவறு என்றும் பிறப்பினால் ஒருவருடைய வர்ணம் தீர்மானிக்கப்படலாகாது என்றும் ஒரே அன்னையின் குழந்தைகள் தத்தம் இயற்கையால் வெவ்வேறு வர்ணத்தவராக முடியுமென்றும் கூறினார். பிற்காலத்தில் காந்திஜி தன் பார்வையை மாற்றிக்கொண்டார். ஸ்ரீ நாராயணகுருவிடமும் அத்வைத கல்வி பெற்றவர் சுவாமி சித்பவானந்தர். திருவாசகத்துக்கான உரையை அவர் எழுதியது பரமாச்சாரியாரான ஸ்ரீ நாராயணகுருவின் ஆக்ஞையினாலேயே ஆகும். இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் தன்னிகரற்ற வேதாந்த கேசரியாக விளங்கியவர் சித்பவனாந்த சுவாமி ஆவார். சமரசமற்ற சாதிய எதிர்ப்பு பார்வை கொண்ட அவர் காயத்ரி மந்திரம் அனைத்து மக்களுக்கும் அனைத்து பாலினத்தோருக்கும் உரியது என தெள்ளத்தெளிவாக கூறியவர்.

அவர் சனாதன தர்மம் குறித்து கூறுகிறார்:

சனாதன தர்மம் என்பது யாண்டும் இருந்து வரும் வாழ்க்கை தத்துவங்களாம். சனாதன தர்மம் என்னும் பெயர்தான் ஹிந்து மதத்திற்குப் பொருத்தமானது. மற்ற மதங்கள் மத ஆச்சாரியர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளவைகள். ஆனால் சனாதன தர்மமோ தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்ஙனம், வாழ்ந்து வா என்று வாழ்க்கை முறையை வரையறைத்து வைத்திருப்பது அறம். எக்கோட்பாடு வாழ்க்கையை தாங்கியிருக்கிறதோ அது தர்மம். பிரபஞ்சம் முழுவதும் தர்மத்தை ஆதாரமாகக் கொண்டது. தீயின் தர்மம் தகிப்பது; நீரின் தர்மம் நனைப்பது; காற்றின் தர்மம் உலர்த்துவது. மனிதன் பண்பாட்டில் மேலே வரவர இவன் அனுஷ்டிக்க வேண்டிய தர்மம் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டு மேலானதாக அமைந்திருக்கிறது. சனாதன தர்மம் மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அதில் அடங்கியிருக்கின்ற உண்மைகளை யாருமே தனியுரிமை பாராட்ட முடியாது. மற்ற மதங்கள் புருஷ தத்துவம் அல்லது மத ஸ்தாபகர்களுடைய ஜீவிதத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் சனாதன தர்மமோ வஸ்து தந்திரம் தத்துவபூர்வ உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இனி உண்மையோ உலகமக்கள் எல்லோருக்கும் பொதுவானது. ஆதலால் சனாதன தர்மம் அழிந்து பட்டுப்போகாது. அதை அழிக்க யார் முயன்றாலும் அதற்கு அழிவை உண்டுபண்ணுவது சாத்தியப்படாது.

எனவே சனாதன தர்மம் என்பது இந்து சமய பெருங்குடும்பத்துக்கான அடைமொழி. இந்த மண்ணில் தோன்றிய எந்த ஆன்மிக மரபும் சமய மார்க்கமும் சனாதனம் எனும் அடைமொழிக்கு உரியதாகும். இந்த அடைமொழியை குறுகிய சாதியத்துடனோ ஒரு குறிப்பிட்ட சடங்காச்சாரத்துடன் மட்டுமோ இணைக்கும் குறுக்கும் மக்கள் அதை அறியாமையால் செய்கின்றனர். அல்லது ஏதோ மோசமான உள்நோக்கத்துடன் செய்கின்றனர்.

இதிலுள்ள ஆபத்துக்கள் இருவகையானவை. ஒன்று ஆன்மிக சமுதாய சீர்திருத்தவாதிகளான மகரிஷி சுவாமி தயானந்தர் அத்வைத பரமாச்சாரியர் ஸ்ரீ நாராயண குரு மகாத்மா காந்தி சுவாமி விவேகானந்தர் தமிழகத்தின் தன்னிகரற்ற வேதாந்த கேசரி சுவாமி சித்பவானந்தர் ஆகியோரின் செயல்பாடுகளால் செம்மையடைந்த அழகான பதமான சனாதன தர்மத்தை பிறப்படிப்படையிலான வர்ண தர்மமே சனாதனம் என்றுநம்பும் சாதிய போலி-பழமைவாதிகள் கைகளில் இது கொடுத்துவிடும். இரண்டாவதாக இந்துக்கள் இந்த பதத்தை மறுதலிக்கும் போது கிறிஸ்தவ மதப்பரப்பு அமைப்புகள் இந்த பெயரை தம்முடையதாக்கிக் கொள்வர். இது மிகப்பெரிய ஆன்மிக பண்பாட்டு மோசடியாகும்.

எனவே ஒவ்வொரு ஹிந்துவும் அவனோ அவளோ வைதீகரோ, அத்வைதியோ, சைவரோ வைணவரோ சீக்கியரோ த்வைதியோ பௌத்தரோ வனவாசி ஆன்மிக மரபுகளை பின்பற்றுபவரோ, பிற மதங்களை பழிக்காத அனைத்து ஆன்மிக மரபுகளையும் மதிக்கும் ஒவ்வொருவரும் சனாதன தர்மியே!

ஈஸ தம்மோ ஸனாதனோ








Exit mobile version