நானும் அவரும்
ஜயபாஸ்கரனின் கவிதைகளை மிகத் தாமதமாகவே பரிச்சயம் செய்து கொண்டேன். கொங்குதேர் வாழ்க்கை கவிதைத் தொகுப்பை புரட்டிக் கொண்டிருந்த போது அவரது எமிலி டிக்கின்சன் கவிதையின் சாய்மான வெளிச்சம் என்னை சட்டென ஈர்த்தது. அதை மொழிபெயர்க்கவும் செய்தேன். பின்னர் விடுமுறைக்கு சென்னை சென்றிருந்த போது புத்தகக் கடையொன்றில் அவரது அவன் அவள் அர்த்தநாரி என்ற மெல்லிய கவிதைத் தொகுப்பின் கடைசிப் பிரதியை வாங்கவும் செய்தேன். அதில் “எருக்கின் பழுத்த இலைகள் போன்ற இக்கவிதைகளில்” என்று அவரது சுய அடையாளப்படுத்தலுக்கு பின்னால் நாச்சியார் திருமொழி ஆண்டாளின் வரியும் ஒத்திசைத்ததை உணர்ந்து முறுவலித்தேன். சங்கக் கவிதையின் குரல் தணிவும், ஆண்டாளின் அலறல் தவித்த வலியும், எமிலியின் நித்திய அநித்திய அகச் சிக்கல்களும், காரைக்கால் அம்மையாரின் ஈம பூமித் தனிமையுமே தனது கவிதையின் ஊற்று என்று அவர் கூறியதை நானும் நண்பர் நட்பாஸும் தொகுப்பை வாசித்தும் விவாதித்தும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டோம். எங்கள் சென்சிபிலிட்டிக்கு உகந்தவர் என்பதையும் தமிழ்ச் சூழலில் அதிகம் பேசப்படாத முக்கிய கவிஞர்களுள் ஒருவர் என்பதையும்.தொகுப்பின் சில கவிதைகளை Emily Dickinson in the Temple Town of Madurai என்ற தலைப்பில் மொழிபெயர்த்தேன்.ஆனால் இவை அனைத்தையும் செய்து முடித்தும்கூட கவிதையின் ஏதோ ஒரு மையச்சரடை தவறவிட்டது போல் ஒரு உணர்வு மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தது. நாளடைவில் அதை மறக்கவும் செய்தேன். பின்னர் 2022ல் அவரது எமிலி டிக்கின்சனின் கவிதை மொழிபெயர்ப்பை செப்பனிட உதவி செய்தேன். பிரதி உபகாரமாக அவர் எனது எலியட் புத்தகத்துக்கு முன்னுரை எழுதிக் கொடுத்தார். அதன்பின் வாட்சாப்பில் அவ்வப்போது மட்டுமே பேசிக் கொண்டோம். ஜூலை 2024 வாக்கில் ஜயபாஸ்கரன் தன் கவிதைகளின் முழுத் தொகுப்பை காலச்சுவடு கொண்டுவரப் போவதாகவும் அதன் முன் வரைவை நான் திருத்திக் கொடுக்க முடியுமா என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதை வாசிக்கையில் ஒரு பொறி தட்டியது. முன்னர் நழுவவிட்ட சரடு இப்போது பிடிபட்டது போல் தோன்றியது. அதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள அவரை மிக விரிவான ஒரு பேட்டி எடுத்தேன் ( சொல்வனம் இதழில் ‘பால்மாறி ஆடும் கவிதைகள்’ என்ற தலைப்பில் நவம்பர் 2024 ல் வெளிவந்தது.) இருவருக்குமே அப்பேட்டி பெரும் திறப்பாக அமைந்தது எழுத்தாளனாக நான் அடைந்த பேறுகளில் முக்கியமான ஒன்று. பல வருடங்களாக, (நான் மதுரை சென்ற போதும், அவர் அமெரிக்கா வந்த போதும் ) ஏதேதோ காரணங்களுக்காக, நேருக்குநேர் சந்தித்துக் கொள்ள முடியாத குறையை ஒரு வழியாக 2025 வருடப் பிறப்பன்று மதுரைக்குச் சென்று தீர்த்துக் கொண்டேன்.
அவரும் அவளும்
எமிலி, ஆண்டாள், சங்கக் கவிதை எல்லாம் சரி, ஜயபாஸ்கரனுடையை தணிவுடன் பொருந்திப்போகிறவைதான். ஆனால் அவர் ஆளுமைக்கு முற்றிலும் பொருத்தமில்லாத காரைக்கால் அம்மையாரின் மிகை, எதனால் அவர் அதற்குள் சென்று தன்னைப் பொருத்திக் கொண்டார் என்ற கேள்வியே இப்பேய்முலை அமுது தொகுப்பை வாசிக்கையில் முதலில் தோன்றியது. காரைக்கால் அம்மையாரின் பதிகங்களின் மூர்க்கமான ஒருமை தமிழிலக்கியத்தில் ஏன் பக்தி இலக்கியத்திலும்கூட அலாதியானது. முற்றிலும் அவை தங்களை இடுகாட்டில் நிகழ்த்திக் கொள்கின்றன. இந்த இடத்தை நாம் சங்க இலக்கியப் போர்க்களத்தை விவரிக்கும் புறப் பாடல்களிலும் குறிப்பாக மணிமேகலையின் சக்கரவாளக்கோட்டமுரைத்த காதையிலும் சந்தித்திருக்கிறோம்.
பிறவோ ரிறந்த அழுவிளிப் பூசலும்
நீண்முக நரியின் தீவிளிக் கூவும்
சாவோர்ப் பயிருங் கூகையின் குரலும்
புலவூண் பொருந்திய குராலின் குரலும்
ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நிரந்தரமாக ஒலிக்கும் சக்ரவாளக் கோட்டமே காரைக்கால் அம்மையாரின் திருவாலங்காடாக உருமாறுகிறது.
சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்
தழலுள் எரியும் பிணத்தைவாங்கித்
தான்தடி தின்றணங் காடுகாட்டிற்
கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டுநட்டம்
அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும்
அப்பன் இடந்திரு ஆலங்காடே
ஆனால் ஒரு வித்தியாசமும் இருக்கிறது. முன்னதில் மணிமேகலைக்கு சரீர இன்பங்கள் மற்றும் லௌகீக உலகின் நிலையாமையை உணர்த்துவதற்காக இட்டுச் செல்லப்படும் ஒரு தற்காலிக களமாக இந்த இடம் வருகிறது. அதிலிருந்து மணிமேகலை துறவியாக உலகிற்கே மீண்டும் திரும்ப வேண்டும் . பின்னதிலோ இந்த அகோரமான இடுகாடே நிலையா உலகின் மாயைகளுக்கு எதிராக முக்தி அளிக்கவல்ல சிவபெருமானின் ஊர்த்துவ நடனத்தில் மனதை ஒருமைப் படுத்துவதற்கான நிரந்தரக் களமாக கட்டமைக்கப் படுகிறது. இவ்விடத்தில் அம்மையார் அப்பெருமானுடன் ஆடும் பேயாகவே தன்னை உருவகித்துக் கொள்கிறாள்.
உரையினால் இம்மாலை
அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற்
பேய்சொல்
என்றே அற்புதத் திருவந்தாதி முடிகிறது. “காரைக்காற்பேய் செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார்” என்று மூத்த திருப்பதிகங்கள் முடிகின்றன.
ஜயபாஸ்கரன் நிஜ உலகைக்காட்டிலும் பிரதிகளாலான ஒரு பேயுலகிலேயே அதிகம் சஞ்சரிப்பவர். பிரதிகளின் இடுகாட்டில் சொற்களும், வரிகளும், பாத்திரங்களும், அவற்றைப் படைத்த ஆளுமைகளும் ஊர்த்துவ நடனம் ஆடும் அரங்கின் கீழ் எரிந்த சாத்தியப்படாத விழைவுகளின் சாம்பலைப் பூசிக் கொண்டு ஒரு இலக்கிய உபாசகராக அவர் ‘எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?’ என்று கேள்வியுடன் அமர்ந்திருக்கிறார். இதனால் தான் பெரும்பாலான இவர் கவிதைகளில் பிற இலக்கிய வரிகள் மேற்கோள்களாகவோ பூடகமாகவோ இடம் பெறுகின்றன. இது தீர்வல்ல, ஒரு விதமான தப்பித்தலே என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். அதைப் பேசும்
‘நூலறிவு பேசி
நுழைவிலாதார் திரிக’
என்கிறாய்
சற்றுக்
கடிந்து
நூலறிவின்
கணக்கற்ற
கால்களில்
ஊர்ந்து செல்லும்
என் கவிதை வரிகள்
நடுங்குகின்றன
என்ற கவிதையும் தன்னை காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி வரியை மேற்கோள் காட்டியே தன்னை நிகழ்த்திக் கொள்கிறது. சொர்க்கம் என்ற ஒன்று இருக்குமாயின் ஜயபாஸ்கரனைப் பொறுத்தவரையில் அது ஒரு பிரதிகளின் ஆலயமாகவே இருக்க முடியும். எனவேதான் அம்மையாரின் ‘புலாற்றலையின் உள்ளுணும்’ ‘கண்ணார் கபாலக் கலமும்’ இவர் கவிதையில் ஹாம்லெட்டில் வரும் யோரிக்கின் மண்டையோட்டையே உடனழைத்து வருகின்றன. கனிந்து எரியும் அம்மையாரின் கவிதைக்கு சிவபெருமான் ஆடுகையில் ‘தீக்குள் விரலாய்’ என்ற பாரதியின் உவமையும் தன்னை இடையில் இருத்திக் கொள்கிறது. இவரே மற்றொரு கவிதையில்
ஆடுகிறான்
குழகன்
பாடுகிறாய்
கூளியோடு
நீ
இடையில்
கடக்கும்
பேய்த் தேர்
நான்.
பேய்க்கும் பேயனுக்கும் இடையே அவர்களை சுமக்கும் வாகனமாகத் தன்னை பாவித்துக் கொள்கிறார்.
மீண்டும் மீண்டும் அம்மையாரை எலும்புடன் ஜயபாஸ்கரன் தொடர்புபடுத்துகிறார். எலும்புச் சொற்கள், எலும்பு முலை, எலும்புக் கவிதை இப்படி…அம்மையார் சரீரத்தின் இச்சைகளைத் துறந்து ஆலங்காட்டில் தாண்டவம் ஆடும் சிவனின் பாதங்களுக்கு அடியே ஒரு எலும்புக்கூடாக தன் கவிதைகளை ஓதிக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படை. இச்சைகளின் கலமான உடம்பை சிதையில் எரித்தழித்தாலும் எலும்புகள் மீந்திருக்கின்றன. இம்மீதமே நம்மை பிறப்பு இறப்பு சக்கரத்திற்குள் மீண்டும் இருத்துகிறது. பரம்பொருள் இம்மீதத்தை மாலையாக அணியும் வரை முக்தியில்லை. இதனால் தான் அம்மையார் பொறுமையாக காத்திருக்கிறார். அவர் கவிதைகளில் நாயகி பாவம் முற்றிலும் இல்லாதிருப்பது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அவர் எப்போதுமே இறைவன்-பக்தை என்ற படிநிலையை மீற முயல்வதில்லை.
ஆனால் ஜயபாஸ்கரன் கவிதைகளிலோ நாயகி பாவமே பெரும்பாலும் நவீனச் சிக்கல்களுக்கு மடைமாற்றப் படுகிறது. அம்மையாரின் எலும்புகளைக் காட்டிலும் ஆங்கிலக் கவி டன்னின் “ A bracelet of bright hair about the bone” தான் அவர் கவிதைத் தொகுப்பிலிருந்து நாம் கட்டமைத்துக் கொள்ளும் மனோபாவத்துக்கு அணுக்கமானது. விழைவு சாத்தியமில்லை என்று ஆகிவிட்ட பின்பும் அதை “முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்லாக” அசைபோட்டபடி களித்திருக்கும் மனநிலை. இந்த மனநிலை குற்றவுணர்வையும் உடனழைத்து வருகிறது, உடலை அழித்து அது விழையும் இன்பத்தை ஆலங்காட்டு எலும்புக்கூட்டுப் பேய் விழையும் பேரானந்தத்துடன் இணையும் ஒரு உன்னதத்தை தருவித்துக் கொள்கிறது. பால் அடையாளச் சிக்கல்களிலிருந்து விடுபட பாலையே கேள்விக்கு உட்படுத்தும் அர்த்தநாரி படிமத்தில் உறைகிறது.
பிறரறிய லாகாப்
பெருமையருந் தாமே
பிறரறியும் பேருணர்வுந்
தாமே – பிறருடைய
என்பே அணிந்திரவில்
தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
என்ற அற்புதத் திருவந்தாதிப் பாடலில் வரும் மூன்று பிறமைகளை நாம் ஜயபாஸ்கரனின் கவிதைகளின் வெளிச்சத்தில் வாசித்துப் பார்க்கலாம் . மற்றமையில் மட்டுமே சாத்தியத்தைக் காணும் தன்மை, தன்மை மற்றமை இரண்டையும் உள்ளடக்கும் ஒருமையை விழைகிறது. அர்த்தநாரியாக ஆடும் அந்த ஒருமை அனைவரின் எலும்புகளையும் மாலையாக அணிந்துகொண்டு ஆடுவதால், அந்த ஒருமையில் அனைத்து விழைவுகளுமே சாத்தியப்படுகின்றன. எலும்பு முலைக் காம்பிலும் அமுதம் சுரக்கிறது.
அவளும் நாமும்
இத்தொகுப்பு காரைக்கால் அம்மையாரையும் அவர் ஜயபாஸ்கரன் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பாடுகிறதென்றாலும் அம்மையாரையும் விஞ்சிவிடும் ஓர் ஆளுமை இத்தொகுப்பில் ஆச்சரியமான விதத்தில் பதிவாகி இருக்கும் விதமே இத்தொகுப்பின் மணிமகுடம் எனலாம். கவிஞரின் பெரியம்மா ஒரு அழகான சிறுகதைப் பாத்திரத்தின் ஆழத்துடன் தொகுப்பின் இரண்டாம் பகுதியில் பரிணமிக்கிறார். சமயோஜிதர், அனுபவத்திலிருந்து வாழ்வதற்குத் தேவையான ஞானத்தை மட்டுமே இயல்பாக வடிகட்டிக் கொண்டவர். “மன விகாரங்களைப் புரிந்துகொள்ளும் ஆதிவாசியின் சூட்சுமம் ஆழ்மனதிலேயே இருந்திருக்கிறது” அவருக்கு என்று ஒரு கவிதை நுட்பமாக அவதானிக்கிறது. எப்படிப்பட்ட சூட்சுமம் என்றால் கவிஞர் தன் வாழ்நாள் முழுதும் கவிதைகளில் பூடகமாக பொதிந்து வைத்திருக்கும், நாம் இன்னமும் விமர்சனத்தைக் கொண்டு அகழ்ந்து கொண்டிருக்கும் விஷயத்தை அவர் ஒரே ஒரு அபாரமான சொல்லாடலின் வழியே சட்டென போட்டு உடைத்து விடுகிறார்:
‘ஆண் மருதாணிச் செடி’ என்று சொல்லிவிட்டாள்
பார்த்த மாத்திரத்தில் பெரியம்மா
‘அரக்காகப் பற்றுகிறது’ என்று முனகினேன்
‘பித்த உடம்பு ’ என்றாள்.
அதற்கு பின் வருவதோ, நமக்கு அவர் கவிதைகளை நுட்பமாக வாசிக்கத் தெரிந்திருந்தால் நாம் கண்டறிந்திருக்கக்கூடிய விழைவுகள் முடக்கப்பட்டிருக்கும் ஒரு வாழ்வின் அலப்பரிய சோகம்.
‘பலவகைப் பித்தம்’ என்று நினைத்துக்கொண்டேன்.
சொல்லியிருந்தால் புரிந்துகொண்டிருப்பாள்
எல்லாவற்றையும்
என்றுதான்
தோன்றுகிறது
இங்கிருந்துதான் அவர் முழுக்கவிதைத் தொகுப்பு வாசிக்கப்பட வேண்டும். டிரான்ஸ்கிரெஸ்சிவ் எழுத்து என்றெல்லாம் உரக்க அரற்றிக் கொண்டிருக்கும் உலகில் இவரது தணிவான பூடகத்தை எவரும் செவிமடுக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.
‘நூலறிவு பேசி /நுழைவிலாதார் திரிக’ என்பதை எவ்வளவு தெளிவாக ஆரவாரமில்லாமலும் உணர்த்திவிடுகிறாள் பெரியம்மா. பெரியப்பா கவிஞரின் கேளாச் செவியை சுத்த மாயையைப் பேசிக் கொட்டிக்கொண்டிருக்கையில் அவள் அடுக்களைக்குள் பாத்திரங்களைக் கழுவச் சென்றுவிடுகிறாள். அவளுக்குத் தெரியும் மாயையே என்றாலும் அதில்தான் அவள் ஜீவிதத்தை அவள் நடத்தியாக வேண்டும் என்று. சிவனின் சங்காரத் தாண்டவத்தைக் காண அவள் ஆலங்காடு செல்லத் தேவையில்லை. ‘அது தான் இங்கேயே எல்லாம் நடக்கிறதே’ என்று சிக்கனமாக ஞானத்தை அளிக்கக் கூடியவள் அவள். க.நா.சு கூறியதைப் போல் ‘யான் என்ற அரங்கு போதும்’ அவளுக்கு. ஆலங்காடுக் காளி , பழையனூர் நீலி, காரைக்கால் பேய் என்ற புனிதங்களை எல்லாம் ‘சாகசக்காரிகள் எல்லோரும்’ என்று அலட்சியமாகப் புறந்தள்ளக் கூடியவளும்கூட.
வாழ்வை வாசிக்கத் தெரிந்தவள், நல்ல விமரிசகியாக இருந்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டேன்.
பேய்முலை அமுது பின்னுரை – ஜூன் 2026-ல் வெளியாகிறது
