Site icon சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

காசு மேல காசு வந்து…!

பெரும்பான்மையான தொகுதிகளை வென்ற கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் அப்படித்தான் நடக்கும் என்பது நிச்சயமில்லை என்பதற்கு இன்றைக்குத் தமிழகத்தில் நடக்கும் அரசியல் காட்சிகளே சான்று. இந்த நிச்சயமின்மை அரசியலில் மட்டும்தான் என்பதில்லை.  பெருந்தொகைப் பரிமாற்றம் நடக்கும் பல இடங்களிலும் இப்படி நடப்பதுண்டு. குறிப்பாக ஏலத்தில் மற்றவர்களைக் காட்டிலும் அதிகத் தொகை தந்து ஏலத்தில் வென்றுவிட்டால் போதும் என்பதில்லை. அத்தொகையைச் சரியான நேரத்திற்குள் தர முடியும் என்ற உத்திரவாதத்தையும் அளிக்க வேண்டும். விற்பவர்கள் இந்தப் பரிவர்த்தனை சரியானபடி முடிவுக்கு வரும் என்று நம்ப வேண்டும். இல்லையேல் ஏலத்தில் வென்றவர்களைத் தவிர்த்துவிட்டு வேறு  ஒருவருக்கோ மறு ஏலத்திற்கோ செல்லும் வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு நிகழ்வு ஐபிஎல்லில் நிகழ்ந்திருக்கிறது. 

இந்த வருட ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்னர், கடந்த மார்ச் மாத இறுதியில், வெளி வந்த செய்திக் குறிப்பு ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னது. பெங்களூர் ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புதிய உரிமையாளர்கள் குழுமங்களுக்கு விற்கப்பட்டன என்பதே அந்தச் செய்தி. அதில் எல்லாரையும் புருவம் உயர்த்தச் செய்தது அவ்வணிகள் விற்கப்பட்டத் தொகைதான். 2025ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய ஆர்சிபி அணியை ஆதித்யா பிர்லா தலைமையிலான குழுமம் 1.78 பில்லியன் டாலர்கள் (சுமார் 16,650 கோடி ரூபாய்கள்) கொடுத்து வாங்கி இருக்கிறார்கள் என்றும் அதே சமயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கால் சோமானி என்ற தொழிலதிபர் தலைமையிலான குழுமம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1.635 பில்லியன் டாலர்கள் (சுமார் 15,300 கோடி ரூபாய்கள்) கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் என்று அந்தச் செய்திக் குறிப்பு தெரிவித்தது. 

இந்தச் செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்னரே அடுத்த திருப்பமும் நிகழ்ந்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமை சோமானி குழுமத்தினரிடம் இருந்து பறிக்கப்பட்டு இந்திய வம்சாவளித் தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் தலைமையிலான குழுமத்தினருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் இவ்வணியை வாங்க 1.65 பில்லியன் டாலர்கள் (சுமார் 15,650 கோடி ரூபாய்கள்) தருவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எதனால் இந்த மாற்றம் என்பதற்குத் தெளிவான காரணங்கள் ஏதும் தரப்படவில்லை. சோமானி குழுவினர், நாங்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கி விட்டோம் என்றுதான் நினைத்தோம். ஆனால் இப்படி மாறி இருப்பது தங்களுக்கு வருத்தமளிக்கின்றது என்ற ரீதியில் அறிக்கை ஒன்றை மட்டும் வெளியிட்டிருக்கின்றனர். ஏன் இந்த மாற்றம் என்பதை ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்போ, லக்ஷ்மி மிட்டல் தரப்போ, சோமானி தரப்போ, ஐபிஎல் நிர்வாகமோ, பிசிசிஐ நிர்வாகமோ தெளிவுபடுத்தவில்லை. சோமானியைப் பொருத்த வரை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. 

இது ஒரு புறம் இருக்கட்டும். வருடத்தில் இரண்டு மாதங்களே விளையாடப்படும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு எதற்காக இவ்வளவு விலை? இதைத் தெரிந்து கொள்ள கொஞ்சம் ஐபிஎல் வரலாற்றைப் பார்க்க வேண்டும். இல்லை, அதற்கும் முன்னர் டி20 போட்டிகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒரு நாள் ஆட்டங்களுக்கும் வரும் கூட்டம் குறைந்து கொண்டே வருவதைக் கண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று எடுத்த பல முயற்சிகளில் கூட்டத்தை மீண்டும் கிரிக்கெட்டின் பக்கம் திருப்பிய வடிவம் டி20. குறைவான நேரம், பரபரப்பான ஆட்டம், கிரிக்கெட்டைத் தாண்டிய கேளிக்கை என்று மக்களைக் கவரும் வண்ணம் டி20 அமைந்தது. ஆனால் சர்வதேசக் கிரிக்கெட் தளத்தில் இதற்கு உடனே இடம் கிடைக்கவில்லை. 2005ஆம் ஆண்டுதான் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் விளையாட்டாக பழைய கால சீருடைகளை எல்லாம் மாட்டிக் கொண்டு முதல் சர்வதேச டி20 போட்டி ஒன்றை விளையாடினர். அப்பொழுது அவர்கள் இது தங்கள் உலகையே புரட்டிப் போடும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். 

தொடர்ந்து டி20 போட்டிகள் ஆங்காங்கே நடைபெற்றாலும் எல்லாரும் இந்த மாற்றத்தில் கலந்து கொள்ளவில்லை. முக்கியமாக இந்தியா இதை விஷப்பரிட்சையாகத்தான் பார்த்தது. 2007ஆம் ஆண்டு ஆண்களுக்கான முதல் டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் என்ற அறிவிப்புதான் இந்தியாவை இந்த வகைக் கிரிக்கெட்டை ஆடத் தள்ளியது. டிசம்பர் 2006ஆம் ஆண்டு, இவ்வடிவம் உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் கடந்த பின்னர்தான், இந்தியா தன் முதல் டி20 ஆட்டத்தை விளையாடியது. 

பெரும் தயக்கத்தோடுதான் இந்தியா இந்த வடிவத்தை எதிர்கொண்டது என்றாலும் விதி வேறு விதமாக விளையாடியது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. அதுவும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சௌரவ் கங்குலி போன்ற பெரும் தலைகள் ஓய்வெடுக்கப் போகிறோம் என ஒதுங்கிக் கொள்ள அன்று இளம் கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனியின் தலைமையில் இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் அத்தனை பேரும் இளைஞர்கள். இவர்கள்தாம் டி20 கிரிக்கெட்டின் வரலாற்றையே நிர்ணயம் செய்தவர்கள். 

இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி இன்றி ஜீ டிவி குழுமத்தினரின் முயற்சியால் ஐசிஎல் என்ற தொடர் தொடங்கப்பட்டது என்பது போல சில காரணங்கள், இந்திய கிரிக்கெட் வாரியத்தை தனக்கான டி20 தொடராக ஐபிஎல்லை அறிமுகப்படுத்த வைத்தது. அன்றைக்கு அவ்வாரியத்தின் முக்கியப் புள்ளியாக இருந்த லலித் மோடிதான் இந்தக் கதையின் கதாநாயகன். அவர் எடுத்த முயற்சியால் ஐபிஎல் பற்றிய அறிவிப்பு 2007ஆம் ஆண்டே வெளிவந்தது. 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி ஐபிஎல்லின் முதல் போட்டி நடைபெற்றது. டி20 கிரிக்கெட்டை ராஜபாட்டையில் ஏற்றியது. 

2007ஆம் ஆண்டு ஐபிஎல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டாகி விட்டது. 2008ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தியாக வேண்டும். இந்த குறுகிய காலகட்டத்தில் இதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்தாக வேண்டும். எப்படி விளையாட வேண்டும், எத்தனை அணிகள், யார் இந்த அணிகளை வாங்கப் போகிறார்கள், இப்போட்டிகளின் தொலைக்காட்சி உரிமம் எவ்வளவு என்பது போல எத்தனையோ முடிவுகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம். அனைத்தையும் செய்து காட்டினார் லலித் மோடி. எட்டு அணிகள், ஒவ்வொரு அணியும் ஓர் இந்திய நகரத்தை மையமாக வைத்துச் செயல்படும். இந்த அணிகளை வாங்க ஏலம் ஒன்று நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார். மக்களிடையே இது எவ்வளவு வரவேற்பைப் பெறும் என்பது பற்றி எல்லாம் அதிகம் தெரியாத காலம். ஆனாலும் இந்தியா உலகக் கோப்பையை வென்றிருக்கிறது அதனால் இதை நம் மக்கள் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த அணிகளை வாங்கப் போட்டி போட்டனர் பலர். கிரிக்கெட்டில் பல காலம் ஊறி இருந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர், இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, கிங்பிஷர் நிறுவனத்தின் விஜய் மால்யா, நடிகர்கள் ஷாரூக் கான், ப்ரீத்தி ஜிந்தா எனப் பலரும் களத்தில் இறங்கினர்.

மும்பை அணிக்குத்தான் அதிக விலையாக சுமார் நூற்றுப் பன்னிரெண்டு மில்லியன் டாலர்கள் தரப்பட்டது. இருப்பதிலேயே குறைந்த விலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத்தான்.  அதற்குத் தரப்பட்ட அறுபத்தேழு மில்லியன் டாலர்கள் மும்பை விலையில் கிட்டத்தட்ட பாதிதான். அப்படி வெறும் அறுபத்தேழு மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்ட அணிதான் இன்றைக்கு 1.65 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருபத்தைந்து மடங்கு வளர்ச்சி. அதுவும் வெறும் பதினெட்டே ஆண்டுகளில். இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது என்று பார்க்கும் முன் முதல் ஏலத்திற்கு பின் சில அணிகளின் பங்குகள் விற்கப்பட்ட விலைகளையும் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட அணிகளுக்காகப் பெறப்பட்டத் தொகைகளையும் பார்ப்போம். 

இவ்வணிகள் தொடங்கப்பட்ட அடுத்த வருடமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குகளில் ஒரு சிறுபான்மைப் பகுதியை நடிகை ஷில்பா ஷெட்டியும் அவரது துணைவரும் வாங்கினார்கள். அவர்கள் அதற்குக் கொடுத்த விலையின் படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு 140 மில்லியன் டாலர்கள். அதாவது ஒரே வருடத்தில் 67 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்ட அணியின் மதிப்பு இரண்டு மடங்குக்கு மேலாக ஆனது. 2009ஆம் ஆண்டு இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டன. புனே, கொச்சியை சார்ந்த இவ்வணிகள் ஐபிஎல்லில் சேர அவர்கள் கொடுக்க வேண்டிய விலை முறையே 370 மில்லியன் டாலர்களும் 333 மில்லியன் டாலர்கள். ராஜஸ்தான் அணியை ஒப்பு நோக்கினால் இது மீண்டும் ஒரு வருடத்தில் மேலும் இரு மடங்கு மதிப்பு உயர்ந்ததைக் காண்பிக்கிறது. 

ஆனால் எல்லாமே நன்றாகத்தான் போனது என்றில்லை. 2011ஆம் ஆண்டு மட்டும் விளையாடிய கொச்சி அணி செலுத்த வேண்டிய பணத்தைப் புரட்ட முடியாமல் ஒரே வருடத்தில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. அதே போல டெக்கான் சார்ஜர்ஸ் அணியினரும் தொடர்ந்து அணியை நடத்த முடியாமல் சன் டிவி குழுமத்திற்கு தங்கள் அணியை 2012ஆம் ஆண்டு விற்றுவிட்டனர். 107 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கிய அணியை அவர்கள் விற்றது வெறும் 85 மில்லியன் டாலர்களுக்குத்தான். பிசிசிஐயுடனான பல்வேறு கருத்து வேறுபாடுகளால் புனே அணியை வாங்கிய சஹாரா குழுமமும் தான் ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக 2013ஆம் ஆண்டு அறிவித்தது. முதலில் எட்டு அணிகளுடன் தொடங்கப்பட்ட ஐபிஎல், இவ்விரு அணிகளோடு பத்து அணிகள் கொண்ட தொடராக மாறி, இப்பொழுது மீண்டும் எட்டு அணிகள் கொண்ட தொடராகத் திரும்பியது. இத்தனை பிரச்னைகளை எதிர் கொண்டாலும் ரசிகர்களின் அமோக வரவேற்பு ஐபிஎல்லுக்குக் கிடைக்கத்தான் செய்தது.

சூதாட்டம் குறித்த குற்றச்சாட்டுகள் வெளிவர சென்னையும் ராஜஸ்தானும் தொடரில் இருந்து இரண்டு வருடங்கள் விலக்கி வைக்கப்பட்டன. அவர்கள் இடத்தை நிரப்ப இரண்டு வருடங்களுக்கு மட்டுமே என்ற புரிதலோடு வேறு இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டன. அவை ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்டும் குஜராத் லயன்ஸும். இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் என்றாலும் இவ்வணிகள் கலந்து கொள்ளத் தர வேண்டிய தொகை முறையே 240 மில்லியன் டாலர்களும் 127 மில்லியன் டாலர்களும். குறுகிய காலத்திற்கு இவ்வளவு பெரிய தொகை நிர்ணயம் செய்தது ஐபிஎல் அணிகளின் வளர்ந்து வரும் மதிப்பைப் பறைசாற்றியது. 

2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு பகுதிப் பங்குகளை மீண்டும் விற்றது. இம்முறை அது பெற்ற விலையை வைத்துப் பார்த்தால் அவ்வணியின் மதிப்பு 300 மில்லியன் டாலர்களாக உயர்ந்து இருந்தது. அதே வருடம் ஐபிஎல்லில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸும் குஜராத் டைட்டன்ஸும் செலுத்திய நுழைவுக் கட்டணம் முறையே 940 மில்லியன், 750 மில்லியன் டாலர்கள். இதோடு ஒப்பு நோக்கிப் பார்க்கும் பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பீடு குறைவுதான். இந்த எண்ணம் சரியே என்பதை இந்த வருடம் அந்த அணியின் பங்குகள் பெற்ற 1650 மில்லியன் டாலர்கள் மதிப்பீடு உறுதிப்படுத்துகிறது.  இதோடு பார்த்தால் அதிக ரசிகர்கள், அதிக நட்சத்திரங்கள், நடப்பு சேம்பியன் என்று மேலும் பல வகையில் உயர்ந்து நிற்கும் ஆர்சிபி அணிக்கு கிடைத்திருக்கும் விலை குறைவே என்றும் தோன்றுகிறது. மதிப்பீட்டளவில் முதலிரண்டு அணிகளாகக் கருதப்படும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகளின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். 

எதற்காக இத்தனை மதிப்பு? சுருக்கமாகச் சொன்னால் வரவுக்கேற்ற செலவு. அவ்வளவுதான். ஐபிஎல் கொழிக்கிறது. அதில் பங்கு பெறும் அனைவருக்கும் அதனால் நல்ல வருமானம் கிடைக்கிறது. அதன் நீட்சியாக மதிப்பு உயர்கிறது. இந்த மதிப்பு வரக் காரணங்கள் என்று நான்கினைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

முதலாவது தொலைக்காட்சி மற்றும் இணையவெளி நேரடி ஒளிபரப்பு உரிமைகளுக்கான விலை. ஒரு வருடத்தில் 74 போட்டிகள்தாம். இரண்டு மாதங்களில் மொத்தத் தொடரும் முடிந்து விடுகிறது. ஆனால் இந்தப் போட்டிகளைப் பல்வேறு ஊடகங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பும் உரிமைக்காக ஊடக நிறுவனங்கள் பெரும் தொகையைச் செலுத்தத் தயாராக இருக்கின்றன. காரணம் அதன் மூலம் அவர்கள் பெறக்கூடிய விளம்பர வருமானம். 2023ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஒளிபரப்பு உரிமைகளுக்காகச் செலுத்தப்பட்டிருக்கும் தொகை 6.1 பில்லியன் டாலர்கள். ஐபிஎல் ஆரம்பித்த பொழுது சோனி நிறுவனத்துடன் ஒளிபரப்பு உரிமைகளுக்காகப் பத்தாண்டு காலத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்பொழுது சோனி நிறுவனம் தந்த விலை 1 பில்லியன் டாலர்கள்.  ஆண்டுக்கு நூறு மில்லியன் டாலர்கள் என்பதில் இருந்து இன்று ஆண்டுக்கு 1.2 பில்லியன் டாலர்கள் என்று வளர்ந்திருக்கிறது ஒளிபரப்பு உரிமைகளுக்கானத் தொகை. இத்தொடரை நடத்தும் பிசிசிஐ, விளையாடும் அணிகள் என எல்லாருக்கும் இதில் பங்கு உண்டு என்பதால் இவ்வகையில் வரும் வருமானம் அதிகம். இவ்வருமானம் கூடக்கூட அதைப் பெறும் அணிகளின் மதிப்பு உயர்வது இயல்புதானே. 

இரண்டாவது இந்த அணிகளைப் பின் தொடரும் ரசிகர் பட்டாளம். ஒவ்வொரு ஆட்டம் நடைபெறும் பொழுதும் நேரிலும் தொலைக்காட்சி, இணையம் மூலமாகவும் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள்தொகையைக் காட்டிலும் அதிகம். இதனால் வரும் நுழைவுச் சீட்டு, சீருடை விற்பனை போன்ற வகையில் கிடைக்கும் வருமானம் அந்தந்த அணியினருக்குச் செல்கிறது. ஆனால் அவற்றைத் தாண்டி தமக்கென இவ்வணிகள் உருவாக்கி வைத்திருக்கும் வணிக அடையாளத்திற்கான மதிப்பும் இந்த அணிகளின் மதிப்பீட்டை உயர்த்துகின்றன. கீழுள்ள பட்டியலைப் பாருங்கள். இத்தனைக்கும் இதிலிருக்கும் ஐந்து அணிகளில் மூன்று அணிகள் இவ்வருடம் நன்றாக விளையாடக் கூட இல்லை. 

மூன்றாவது காரணம் இந்த அணிகளை வாங்குவது என்பது அரிதாகக் கிடைக்கும் வாய்ப்பு. இத்தனை கோடி ரசிகர்கள், இத்தனை பில்லியன் பணம், உலகெங்கிலும் பார்வையாளர்கள் ஆனால் இருப்பதென்னவோ பத்து அணிகள்தாம். அவர்கள் விளையாடுவது ஆண்டுக்கு இரண்டு மாதம். மொத்தமாக எழுபத்தைந்து போட்டிகள் கூட இல்லை. இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் லீக்களில் கலந்து கொள்ள முடியாது என்ற விதிமுறை வேறு. இப்படி எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால் இப்போட்டிகள் மீதான ஆர்வம் நீர்த்துப் போகாமல் செறிவாக இருக்கிறது. இந்த அணிகளின் பங்குகளை வாங்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நான் நீ என்று போட்டி போட்டு வாங்க உலகெங்கிலும் இருந்து முதலீட்டாளர்கள் குவிகின்றனர். வாங்க இவ்வளவு கிராக்கி இருந்தால் விலை கூடத்தானே செய்யும். 

இறுதியாக ஐபிஎல் அணியின் சொந்தக்காரர்களுக்கு மற்ற நாடுகளில் நடக்கும் லீக்குகளில் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறது. இங்கிலாந்தில் நடக்கும் தி ஹண்ட்ரட் லீக், தென்னாப்பிரிக்காவில் நடக்கும் எஸ் ஏ 20 லீக், அமீரகத்தில் நடக்கும் ஐஎல்டி20 லீக், மேற்கிந்தியத் தீவுகளின் சிபிஎல் லீக், அமெரிக்காவில் நடக்கும் எம்எல்சி லீக் என்று எல்லாவற்றிலும் இந்திய அணிகளின் உரிமையாளர்கள் சில அணிகளையாவது வாங்கி இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக்கின் உரிமை விற்கப்படும் பொழுதும் இவர்களுக்கு அவ்வணிகளை வாங்கும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இதற்குக் காரணம் இவர்கள் மூலம் அந்த லீக்குகள் இந்தியச் சந்தைக்குள் நுழையலாம் என்பதே. ஆண்களுக்கான லீக்குகள் என்பது மட்டுமில்லாமல் பெண்களுக்கான லீக்குகளிலும் இவர்கள் கைதான் ஓங்கி இருக்கிறது. இதனாலும் மதிப்புக்கூட்டல் நிகழ்கிறது என்பது உண்மை. 

இன்றைக்கும் அமெரிக்க என்எப்எல் என்ற அமெரிக்க புட்பாலுக்கான லீக், இங்கிலாந்தின் இங்க்லிஷ் ப்ரீமியர் லீக் என்ற கால்பந்தாட்ட லீக் போன்றவற்றில் இருக்கும் சில அணிகளின் மதிப்பு ஐபிஎல் அணிகளின் மதிப்பை விடப் பல மடங்கு. ஆனால் ஐபிஎல்லை விட பல தசாப்தங்கள் முன்னராகவே அந்த லீக்குகள் தொடங்கப்பட்டதும், அவற்றுக்கான சந்தைகள் உலகளாவியவை என்பதையும் கணக்கில் கொண்டால் ஐபிஎல் வெறும் பதினெட்டு ஆண்டுகளில் அவற்றோடு ஒப்பு நோக்கும் அளவு வளர்ந்திருப்பதே அசுர சாதனைதான். 

இதில் இன்னுமொரு சுவாரசியம் இருக்கிறது. இந்த அணிகளுடன் பிசிசிஐ செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த அணிகளின் பங்குகளை வர்த்தகம் செய்யும் பொழுது அதன் மதிப்பில் ஐந்து சதவிகிதத்தை ஐபிஎல் / பிசிசிஐக்கு அவ்வணிகள் செலுத்த வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளின் விற்பனை மூலம் இவர்களுக்குக் கிடைக்கப் போகும் தொகை 185 -190 மில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணிகளின் மதிப்பு அவர்கள் மற்ற லீக்குகளில் வைத்திருக்கும் அணிகளுக்கும் சேர்த்துதான் என்பதால் இந்த விற்பனையால் ஐபிஎல் / பிசிசிஐக்குக் கிடைக்கும் தொகையை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. 

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் 67 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போன ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவ்வருடம் விற்கப்பட்ட பொழுது ஐபிஎல்லுக்குக் கிடைக்கும் கட்டணம் மட்டுமே 85 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்பதே ஐபிஎல்லின் மகத்தான வெற்றிக்குச் சாட்சி!


Exit mobile version