Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

கோசின்ரா கவிதைகள்

1

ஒளியின்
நிழல்
கருப்பு
நிழலின்றி ஒளி
வெளியே வருவதில்லை


2

காதல் என்பது
படிக்கட்டுகள் இருக்கும்
ஆழமான கிணறு
ஒவ்வொரு படிக்கட்டில்
இறங்கியவுடன்
படிக்கட்டு மறைந்து விடும்
மேலே ஏற வேண்டுமெனில்
நினைவு நூலேணிதான் இருக்கிறது


3

அவனுடன்
விளையாட
அவனோடு இருந்தது
அவன் நிழல் மட்டுமே


4

பாம்பு
உரித்த சட்டை அங்கேயிருந்தது
எந்தப்பாம்பும்
அதை அணிய
எடுத்துக்கொண்டு போனதில்லை
ஒரு பாம்பின் சட்டையை
இன்னொரு பாம்பு அணிவதில்லை


5

வானம் அழகானதுதான்
ஆனால் விதைகள்
நிலத்தை நம்புகின்றன
அது பறக்க நினைத்தால்
பறவைகள் உதவுகின்றன
வேறிடத்திற்கு குடி பெயர்கின்றன


6

சற்று முன்
வெளியே பறந்துக்கொண்டிருந்த
கறுப்பு நிறக் காகம்
எனக்குள் பறந்துக் கொண்டிருகிறது
வெளியே சுற்றிக்கொண்டிருந்த காதல்
எனக்குள் இடம் பெயர்ந்ததைப்போல
இப்பொழுது காகத்திற்கு
மொழியை பழக்குகிறேன்
அது பழக்கமானதும்
சொற்களை பொறுக்கியெடுத்து
ஒரு கூட்டை கட்டி விடும்
சில சமயம் காக்கை கட்டிய கூட்டில்
நான் இருப்பேன்
காகத்திடம் பறத்தலை கற்றுக்கொண்டு
சில சமயம்
என் உடல் காகமாகி விடும்
அப்போது நான்
பறந்துக்கொண்டே ஆகாயத்தின் திசைகளை
என் சொற்களால் பாடுவேன்
ஆகாயம் என்னை பின் தொடர்ந்து
என் உடலில் காக்கை கூட்டில் வசிக்கும் வரும்
காகம் சொல்லும்
நீ இப்பொழுது ஆகாயத்தால் ஆனவன்
இதோ உன் துளி நிலம்
ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது
அந்த துளி நிலத்தில் பெரும் சமுத்திரம்
அந்தச் சமுத்திரக் கரையில் நிற்கிறது
ஒரு படகாய் உன் வீடு
அந்த வீட்டின் அருகே போய் கேள்
என் பாடல் கேட்கும்
அந்தப்பாடலில் இருக்கிறது
ஆகாயத்திலிருந்து உன் வீட்டிற்கு செல்லும் வழி

Exit mobile version