
புத்தம்புது அனுபவங்களை நித்தமும் கொடுக்கும் ஊர்களுக்கு நீங்கள் சென்றதுண்டா? வாருங்கள்! மலேசியாவின் குச்சிங்(Kuching) சென்று வருவோம்.
மேலே உள்ள படத்தில் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது மலேசியா.தென்சீனக்கடல் நடுவே இருக்கிறது. இருபுறமும் மலேசியா விரிகிறது. குச்சிங் இருக்கும் பகுதி, புரூணை (Brunei) என்ற நாட்டின் பக்கத்தில் உள்ளது.
சிங்கப்பூரிலிருந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் மூன்று நாட்கள் சென்ற இந்த பயணத்தை நான் திரும்பிப்பார்க்கும் போது, ‘கற்றது கைமண்ணளவு’ என்ற சொற்றொடர் தான் முன்னிற்கிறது.
குச்சிங் ஆசியாவின் வெப்பமண்டல மழைக்காடுகளையும், சதுப்பு நிலக்காடுகளையும், மலைகளையும் கொண்ட ஊர்.
உலக அளவில் போர்னியோ(Borneo) என்ற தீவுப்பகுதி மிகப்பிரபலம். இது இருநூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த தாவர மற்றும் விலங்கியல் ஆராச்சியாளர்கள் அதிகம் வந்து சென்ற பகுதி.
இங்கே அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது சராவாக் ஆறு (Sarawak).
குச்சிங் இருக்கும் மாநிலத்தின் பெயரும், ஆற்றின் பெயரும் ஒன்று தான்.
சரவாக் ஆற்றின் கரையில் உள்ள நகரம் குச்சிங்.
ஆர்ப்பரிக்காமல் மௌனித்து இருக்கும் இவ்வாற்றின் இருகரைகளிலும் அரசின் முக்கியக் கட்டிடங்கள் இருக்கின்றன.
எந்த ஊருக்குப்போனாலும் அங்கேக் கோயிலைத்தேடுவது எங்கள் வழக்கம்.
அதிலும் நம் தமிழர்கள் இரு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழும் ஊர்களில் கோயில்கள் அதிகம் இருக்கும்.
சில கோயில்களைக் கூகிள் அண்ணன் காட்டினார்.
காட்டு வழியில் இருந்த மடங்கு மாரியம்மன் கோயிலுக்கு காலை எட்டு மணி அளவில் சிற்றுந்தில் பயணப்பட்டோம்.
இக்கோயில் வெள்ளை ராஜா ஆண்ட பகுதியில் இருக்கிறது. ஆனால், இந்த ராஜா கிழக்கிந்திய கம்பெனியால் அனுப்பப்பட்டவர் அல்ல.
கோயிலின் வாசல் வரும் வரை குச்சிங்கின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்வோம்.
ஜேம்ஸ் புரூக் (James Brooke) என்ற ஆங்கிலோ இந்திய மரபில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு இளைஞருக்கு, அவருடைய அப்பா வழியில் கிடைத்த சொத்தில், தி ராயலிஸ்ட் என்ற பெயர் கொண்ட பாய்மர படகு ஒன்றை வாங்க முடிந்திருக்கிறது.
அவர் போர்னியோ பகுதிக்கு வந்து சேர்ந்தபோது (1838), புரூணை நாட்டு சுல்தான், கடற்கொள்ளையர்களின் மோசமான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகினார். உள்நாட்டில் உள்ள கொரில்லாப் படைகளும் சுல்தானுக்கு தலைவலியாக இருந்தபோது, அவருக்கு உதவியிருக்கிறார் ஜேம்ஸ் புரூக்.
அதற்குக் கைமாறாக குச்சிங்கை சுல்தான் ஜேம்ஸ் ப்ரூக்கிடம் கொடுத்தார்.
முதல் இருப்பத்தியாறு ஆண்டுகள், தனக்கான ஒரு நாட்டை, சீன, மலாய், இந்திய வம்சாவளியினர் அனைவரோடும் சேர்ந்து நிர்மாணித்தப்பிறகு, ஜேம்ஸ் புரூக், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப்பெற்றார்.
உலக வரலாற்றில் வேறு எங்கும் இல்லாதபடி, தனியாக, அரசு வம்சத்தில் இல்லாத ஒரு வெள்ளை இளைஞன் உருவாக்கிய சாம்ராஜ்யம் மூன்று தலைமுறைகள் தொடர்ச்சியாக ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறது.
கங்காணி முறை என்பது மலேசியா போன்ற பகுதிகளில் மிகப்பிரபலம். அதே மலேசியாவில் தான் ஆண்டான் அடிமை முறையில் மனிதர்களை அடிமைகளாக வைத்திருக்கக்கூடாது என்ற கொள்கை உடையவராக ஜேம்ஸ் புரூக் இருந்தார்.
இந்த காலகட்டத்தில், இங்குள்ள இடத்தில் கரும்பு, காபி போன்றவற்றைப் பயிரிட எண்ணி, இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அந்தத் தொழிலாளர்கள் காட்டுக்குள் அமைத்த ஆலயம் தான் மடங்கு மாரியம்மன் கோயில் (Matang Mariamman Temple).
பின்னர் இந்த இடம் பயிரிடத் தோதாக இல்லாமல் போனதால் கைவிடப்பட்டபிறகு, ஆலயமும் மனித நடமாட்டமில்லாமல் மறைந்துவிட்டது. பின்னர், 1968 ஆண்டு அபி பின் பெங்காலி (Abi Bin Bengali) என்ற மலேசிய வேடர், கண்ணில் இந்த ஆலயம் பட, மீண்டும் அரசாங்கம் புனரமைப்பைச் செய்து ஆலயத்தைத் திறந்திருக்கிறது.
நாங்கள் சென்ற போது மலைப்பகுதியில் மூன்றரைக் கிலோமீட்டர் உள்ள சாலையில் ஏறுமுகமாக நடக்க வேண்டியிருந்தது.
கீழே உள்ள முனீஸ்வரரைக் கும்பிட்டு ஏறினோம். மிக மிக உயரமான, பருத்த மரங்கள் கண்ணில் பட்டன. மேலே பார்க்கப்பார்க்க ஒரு வித பிரமிப்பு ஏற்பட்டது.
சுவர்க்கோழிகளைத்தவிர பகல் என்றாலும் சத்தமில்லை. எதிரே கண்ணில்பட்ட மலாய்க்காரர்களிடம் புன்னகையைப் பறிமாறினோம்.
காட்டுச்சாலையில் மேலே ஏற, மஞ்சள் நிறத்தில் எங்கள் கண்ணில் பட்டது, மாரியம்மன் ஆலயம். மரத்தால் செய்யப்பட்ட கூரை கொண்ட கோயில்.
மாரியம்மன் மிக அழகாய் எங்களை எதிர்பார்த்திருந்தாள்.
காலை மட்டுமே திறந்திருக்கும் இந்த கோயிலில் அங்கிருந்த பூசாரி எங்களுக்குக் கேசரி, வடை, சுண்டல் எனக் கொடுத்து அன்பைப்பொழிந்தார். அவர் ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன், என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
மடங்கு மாரியம்மன் இரு நூற்றாண்டுகளாகத் தமிழரோடு இருப்பவள்.
வெளிநாட்டில் வாழ்வதால், குலதெய்வத்தின் கோயிலுக்கு அடிக்கடிப் போக வாய்க்காத எங்களுக்கு, இந்த ஆலயத்தரிசனம் மிகுந்த மன ஆறுதலைத்தந்தது.
அடுத்ததாக நாங்கள் சென்ற இடம், பகோ தேசியப்பூங்கா.
வடிவேலு பாணியில் மூக்குப் புடைப்பாக இருக்கும் ப்ரோபோசிஸ் (Proboscis) குரங்குகள் இங்கு அதிகம் இருக்கின்றன.
கீழே உள்ள படம் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பகோ தேசியப்பூங்காவின் மத்தியில் கடலுக்கு மத்தியில் நிற்கும் பாறைகளைக்காட்டுகிறது.
காலை நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்து ஒரு வாடகை சிற்றுந்தில் பகோ வாசல் வரை வந்துவிட்டோம். அங்கிருந்து ஒரு படகுச் சவாரி. முதலில் ஆற்றில் போவதாக நினைத்தோம். விசைப்படகு மெல்ல மெல்ல வேகமெடுக்க, ஜில்லென்றக்காற்று கன்னத்தில் தன் வேகத்தைக்காட்டியது. அரைமணி நேரத்தில் ஆறு தென்சீனக்கடலில் சென்று சேரும் இடத்தை அடையத்தொடங்கினோம். நீல நிற வானம், கடல், அங்கங்கே அடர்ந்த மரங்கள் கொண்ட வனங்கள் என்று யாருமில்லா சூழலில் மனம் ஒன்றத்தொடங்கியது.
படகை ஓட்டியவர், முட்டியளவு தண்ணீரில் இறக்கிவிட்டார். அங்கிருந்து நடந்து பகோவின் உண்மையான வாசலை அடைந்தோம். அங்கேயே இரவு தங்கவும் அறைகள் இருக்கின்றன. காட்டுக்குள் போக பத்து விதமான பாதைகள், வெவ்வேறு கடின நிலைகளோடு எங்களுக்காகக் காத்திருந்தன.
ஒரு சிலப் பாதைகளில் சென்று வந்தோம். எங்களைத்தவிர அங்கங்கே தென்பட்ட, பெரிய அளவு எறும்புகள், அணில்கள், பறவைகள், காட்டுப்பன்றிகள், முகம் மட்டுமே கருமை கொண்ட குரங்குகள் போன்றவற்றைப்பார்த்து வந்தோம்.
சில இடங்களில் இயற்கை அழகு மிகுந்திருக்கும். ஆனால் மக்கள் கூட்டமும், பேச்சு சத்தமும், நம்மை அந்த சூழலில் ஒன்ற முடியாமல் தடுக்கும்.
குச்சிங்கில் நாங்கள் போன போது அங்கு பொங்கல் போன்ற ஓர் அறுவடைத்திருவிழா காலம் (Gawai Festival). அங்கு வசிப்பவர் பலரும் அவரவர் சொந்த கிராமங்களுக்குப்போய் இருந்தார்கள் என்பதால் நாங்கள் இயற்கையோடு இயைந்தோம்.
உலகின் மிகப்பெரிய பூ எது என்று உங்களுக்குத்தெரியுமா?
சூரியகாந்தி, சம்பங்கி, செவ்வந்தி, வாடாமல்லி, பவள மல்லி, ஆர்கிட், தாமரை, மல்லி, முல்லை,ரோஜா, வெட்சி, இருவாட்சி, காந்தள், குவளை என்று பல பெயர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இரஃப்லேசியா துவான் முதே (Rafflesia Tuan Mudae) என்பது தான் உலகின் மிகப்பெரிய பூ. இது குச்சிங் அமைந்திருக்கும் சரவாக் மாநிலத்தில் பூக்கிறது. இதை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஒடோர்டோ பெக்காரி. (Odardo Beccari)
ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, ஆப்பிரிக்கா, போன்ற இடங்களில் பல வகையான உயிரினங்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்த பெருமைக்குரியவர் பெக்காரி.
இவர் ஆராய்ச்சி செய்யத்தேவையான இருப்பிடம், உதவிக்கு ஆட்கள் என்று வேண்டிய வசதிகளைச் செய்து, இவரைத்தங்க வைத்து உபசரித்தார், சார்லஸ் புரூக் (Charles Brooke) என்ற வெள்ளை ராஜா. இவர் தான் நாம் முதலில் சந்தித்த ஜேம்ஸ் புரூக் ராஜாவிற்கு அடுத்தபடியாக குச்சிங்கைப் பல ஆண்டுகள் நல்லமுறையில் ஆண்டவர்.
பெக்காரி நான் முன்னர் சொன்ன மாரியம்மன் கோயில் உள்ள மடங்கு பகுதியில் ஒரு குடிசையை அமைத்து தன் ஆராய்ச்சிக்குத்தோதாக பல விஷயங்களை அங்கு சேகரித்து வைத்திருந்தார்.
இன்றளவும் , மலேசியாவின் தாவரவியல், மற்றும் விலங்கியல் பற்றி அறிய இவர் எழுதிய நூல் தான் ஆதாரமாக இருக்கிறது.
இப்போது மலருக்கு வருவோம்.
உலகின் மிகப்பெரிய மலர் தரையில் பரங்கிப்பழம் போல தான் அமர்ந்திருக்கிறது. இது தாவரத்தின் இயல்புகொண்டது அல்ல. அது , பிரண்டைக்கொடி போன்ற ஒன்றின் தண்டுப்பகுதியில் துளையிட்டுத் தன்னைச் சேர்த்துக்கொள்கிறது.
அம்மையிடமிருந்து தொப்புள்கொடி வழியாகப் பிள்ளை எப்படி உயிர்ச்சத்துகளை எடுத்துக்கொள்கிறதோ, அப்படி இந்த உயிரினமும், பிரண்டைக்கொடியிலிருந்து தனக்குத்தேவையானச் சத்துகளை உறிஞ்சி, பின் மொட்டு வைக்கிறது. ஒரு இரஃப்லேசியா துவான் முதே பூ மலர ஒன்பது மாதங்கள் எடுக்கும். விரிந்தப் பூவின் விட்டம் ஒரு மீட்டர் அளவுக்குக்கூட இருக்கும். ஆனால் மலர்ந்த பின்னர் ஏழு நாட்களுக்குள் அது உதிர்ந்து விடும். மாமிசத்தின் வாடை உடைய இந்த மலரைப் பார்ப்பதற்காகவே உலகமெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள்.
நாங்கள் போனபோது இந்த மலர் குச்சிங்கில் பூத்திருக்கவில்லை.
சார்லஸ் புரூக் என்ற இரண்டாவது வெள்ளை ராஜாவின் அரசாங்கத்தில், பள்ளிகள், நீதிமன்றங்கள், நூலகம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. அவரது ஆட்சிக்காலத்தில் தான் குச்சிங்கில் சீன வியாபாரிகள் செழிக்கத் தொடங்கினர். கிருத்துவ மத மாற்றம் செய்வோரை, உள்ளூர் கலாச்சார மரபுகள் மாறிப்போகாதபடி கட்டுக்குள் வைத்திருந்தார் இந்த இளைய ராஜா. ஒடோர்டோ பெக்காரி தான் கண்டுபிடித்த இரஃப்லேசியா துவான் முதே மலருக்கு சார்லஸ் புரூக் மன்னருக்கு நன்றி செலுத்தும்விதமாக இளைய ராஜா என்ற பொருள் கொண்ட துவான் முதே என்ற தொடரை மலரின் பெயரோடுச் சேர்த்தார்.
நாமெல்லாம் எதிலிருந்து வந்தோம்?
அவர்களைத்தரிசிக்க வேண்டியது முக்கியம் என்று செம்மங்கோஹ் இயற்கை சரணாலயத்திற்கு வந்தோம். மனிதக்குரங்குகளைச் சட்டவிரோதமாக வைத்திருப்பவர்களிடமிருந்து மீட்டெடுத்து, அவற்றுக்குப் பாதுகாப்பான மறுவாழ்வு தருவது இவர்களின் குறிக்கோள்.
இது நாம் வழக்கமாக பார்க்கும் சரணாலயம் போல இல்லை. அடர்ந்த காட்டின் மையப்பகுதியில் நம்மைச்சுற்றி நிற்க வைக்கிறார்கள். குரங்குகளைப்பெயர் சொல்லி அழைத்துப்பார்க்கிறார்கள்.
மனிதக்குரங்குகள் தாமாக உணவைத்தேடும் பழக்கத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவை வந்தால் மட்டுமே அவற்றுக்குப் பழங்கள் தரப்படுகின்றன.
நாங்கள் சென்ற ஜூன் மாதம், காட்டுக்குள் பழங்கள் அதிகம் கிடைக்கும் என்பதால் அவை வெளியே வராது என்றார்கள்.
மலாய் மொழியில் ஒராங் என்றால் ஆள். உட்டான் என்றால் காடு. ஒராங்குட்டான், காட்டின் ஆள். முற்றிலும் வளர்ந்த ஆண் ஒராங்குட்டான் 150 கிலோ எடை வரை கொண்டிருக்கிறது. பெண் குரங்கு அதில் பாதியளவு இருக்கும். கன்னங்கள் பெரிதாக இருப்பது, ஆண். ஓர் ஆண் பல பெண் குரங்குகளோடுக்கூடுகிறது. ஒராங்குட்டான் அன்றன்றைய இரவுக்கெனத் தூங்கக் கிளைகளுக்கு மத்தியில் இடம் அமைக்கிறது.
குறைந்தபட்சம் 25 குரங்குகள் இங்கு வாழ்வதாகச் சொன்னார்கள். தொப்பி, உணவுப்பொருட்கள், குடை என்று எல்லாவற்றையும் பதுக்கி, அமைதி காத்தோம். காட்டின் ஆள் வரவே இல்லை.
நாங்கள் திரும்ப நினைக்கும்போது, கிளைகள் சலசலக்க, வேகமாக இளநீரைப்பறித்துக் குடித்துத் தூக்கி வீசினார் ஒரு முதிர்ந்த ஒராங்குட்டான். அவர் வந்த பின்னர்பெரிதாகவும், சிறியதாகவும் இருவரைப்பார்க்க வாய்த்தது. அங்கிருந்த கண்காணிப்பாளரின் “நீங்கள் பாக்கியவான்கள்” என்ற சொல்லில் மகிழ்ந்து விடைபெற்றோம்.
எப்போதோ புவியியல் பாடத்தில் படித்தவற்றை நேரில் காணும் வாய்ப்பு, தேவதை குகையில்(Fairy Cave) வாய்த்தது. முதல் இருபது நிமிடப் பாதையில் ஒளி இல்லாமல் துழாவிச்செல்ல நேர்ந்தது. கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் இருள் சூழ்ந்தப் பாதையில் சென்றால், குனுங் கபூர் என்ற மலை உச்சியை அடையலாம். நாங்கள் சென்ற பாதையில், அரை மணிநேரத்தில் மிக அழகான, கல் விழுதுகள்(Stalagmite) தென்பட்டன.
கோலாலம்பூரில் உள்ள பத்துமலை குகைகளை விட பெரிதாகவும், ஒரு பெரிய விமானம் நிற்கும் அளவிலான பெரிய குகை இது.
கஷ்டங்கள் வந்தால் துவண்டுபோகும் மனிதர்களைக்கண்டு இங்குள்ள தாவரங்கள் என்ன நினைக்கும்?
ஆமாம், இந்த குகையிலும் தாவரங்கள் உள்ளன.
ஒற்றை இலை கொண்ட தாவரம் ஒன்று அதிக சூரிய ஒளி இல்லாத, சுண்ணாம்பு பாறைகள் கொண்ட இந்த இடத்தில் இருக்கிறது.
இந்தச் செடி கொடுப்பதைக்கொடு, அதில் எனக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு மற்றவற்றைத் திருப்பித்தருகிறேன் என்பதைப்போல அதிகப்படியானச் சுண்ணாம்பை இலையோரம் வெளியேற்றுகிறது.
மாலையானதும் பசிக்க ஆரம்பித்தது. மலேசியாவில் இந்தியக்கடைகளில் தோசை, பிராட்டா போன்றவை பரவலாகக் கிடைக்கும்.
பல பேராலும் விரும்பப்படும் இந்த சிலோன் சீஸ் பரோட்டா கடை எங்கள் விடுதிக்கு மிக அருகில் இருந்தது. இரவு உணவுக்காகப் போனால், உள்ளே செல்லவே ஒரு மணிநேரம் ஆகும் என்பது போல, கடை வாசலில் மக்கள் கூட்டம் இருந்தது. புகைப்படம் மட்டுமே எடுக்க முடிந்தது.
அடுத்ததாக வேறொரு கடைக்கு நடந்தோம். வழியில் ஒரு கடையில் தமிழ் கண்ணில் பட்டது.
அந்த காலத்து, இரும்புப்பெட்டி, ஹோல்டு ஆல்(Hold All) போன்ற பல பொருட்கள் காட்சிக்கு இருந்தன. அந்த இடத்தில் உணவும் கிடைத்தது.
இம்முறை லக்ஸாவைத்(Laksa) தேர்ந்தெடுத்தோம். சிங்கப்பூர், மலேசியா இரு நாடுகளிலும் அதிகமாக விரும்பப்படும் உணவு. பெரும்பாலும் இது சைவமாக இருக்காது.
அந்த இடத்தில் எங்களுக்காக சைவமாக்கிக்கொடுத்தார்கள்.
புளிப்பும் காரமும் கலந்த சுவையில் உள்ள நீரில், நூடுல்ஸ், துருவிய கேரட், நறுக்கிய காளான், எலுமிச்சை, சோயாப்பாலில் செய்யப்பட்ட ஓரிரு டோஃபூ(Tofu) துண்டுகள் போன்றவைகளைக் கொண்டது தான் லக்சா.
இரவு நேரம் சரவாக் ஆற்றைச்சுற்றி மின்விளக்குகள் ஒளிர்ந்தன. நீங்கள் கீழே உள்ள படத்தில் காண்பது அஸ்தானா (Astana) எனப்படும் ஓர் அரண்மனை.
மன்னர் சார்லஸ் புரூக் (இளையராஜா) தன் ராணிக்காகக்கட்டியது. இது அரசின் முக்கியக்கூட்டங்களை நடத்த இன்றுவரை பயன்பாட்டில் இருக்கிறது.
அறுபது சதவீதம் காடுகளைக்கொண்ட மாநிலம் சரவாக். இதை முழுதாகச் சுற்றிப்பார்க்க எங்களுக்குப் பல பயணங்கள் தேவைப்படும்.
விண்டுரைக்க, அறிய, அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவ தெத்தனை அத்தனை யோசனை,
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை
கோலமே நினைக்காளியென் றேத்துவேன்
என்ற மஹாகவி பாரதியின் பாடலை நினைவுகூர்ந்து, இயற்கையை வணங்கி, வியந்து விடைபெற்றோம்.
