இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சின்னம், இரு கைகள் ஒரு அகல் சுடரைக் காப்பது போலிருக்கும். இன்று மானுடம் எதிர்கொள்ளும் சிக்கல் இந்த உலகை பேரழிவிலிருந்து காப்பது எப்படி என்பதே.
உலக முதலாளித்துவமும், இடது சாரியும், அடிப்படையில் ஒன்றே என்று சொன்னால், ஏற்றுக் கொள்ள முடிகிறதா? வழமையான வாழ்முறைகளை விடுத்து, இயந்திர உலகைக் கட்டமைப்பதில் இரண்டும் ஒன்றே! பின் நவீனத்துவ இடது சாரிகள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளிலிருந்து பல மேற்கத்திய கலாசாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்; அது, அந்த அமைப்புகளுக்கு எதிரான புரட்சி அல்ல, அதுவே அமைப்பாக உருவெடுக்கிறது. இரண்டுமே இராணுவ யுக்திகளை மேற்கொள்கின்றன- கலாசாரத்தைத் தாக்கி, அதன் மறு கட்டமைப்பு என்ற பெயரில், வரலாறு முதல் பன்முகத்தன்மை வரை அனைத்தையும், தம் நோக்கத்திற்கு வளைத்து‘ தேச அடையாளம்’ என்று ஒன்று கூவுகிறது; இந்தத் துண்டங்களை மற்றொன்று செல்வமாக்கி விடுகிறது.
நாம் எதிர்கொள்ள அஞ்சும் உண்மைகளை பால் கிங்க்ஸ்நார்த், (Paul Kingsnorth) தன் கட்டுரைத் தொகுப்பில் அழுத்தமாக, ஆழமான கேள்விகளாக முன்வைக்கிறார். இன்னொரு கணையும் பாய்கிறது: இன்றைய சூழியலாளர்களின் கருத்துரு, வழமையான வாழ்வறிவின் மிகைப்படுத்தப்பட்ட மாற்றுரு ஆகும். ‘சூழல் நீதி’ என்பதை, காலனியாதிக்க எதிர்ப்பு, பால் சமத்துவம், இன்னும் பலவகையானவற்றுடன் இணைத்து, இது ஒரு கலவையான மன நிலையைக் கொண்டுவந்துவிட்டது- மேற்கில், பல கல்வியாளர்கள், நிறுவனங்கள், அரசுகள் என்று இதைத் தழுவிக் கொண்டுவிட்டனர். ‘பேரழிவுச் சிக்கல்’ என்று சொன்னாலும், அதற்கான தீர்வாக, உலகை, ‘முன்னேறும் மாதிரியில் மறு-பொறியாக்கம்’ (re-engineering) செய்யுமாறு எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள் சூழலியலாளர்கள்.. காற்றாலைகள், சூர்யத் தட்டுகளால் மின்சாரம் போன்றவைகளை உலகம் முழுதும் செயல்படுத்தி, பசுமை உலகைப் படையுங்கள் என்று தீர்வு சொல்கிறார்கள். சமூக நீதி கிடைக்குமாறு, பொருளாதாரத்தை சீர் படுத்துங்கள், நிகர பூஜ்ய (Net Zero) நிலையை எய்துங்கள். இதனால், அனைத்துமே நலமாக இருக்கும் என்ற எண்ணம் நல்லதே- செயல்படுத்துதல்?
வலது சாரியைச் சேர்ந்த பலர், (Nigel Farage) நைஜெல் ஃபாராஜ் (Brexit-ப்ரெக்ஸிட் புகழ்) சூழல் நலிவை, அவநம்பிக்கை கொண்டு பார்த்ததைப் போல, ட்ரம்பின் வெள்ளை மாளிகை அறிஞர்கள் (!) சிலர் சூழல் நலிவை, வெற்றுப் புரளி என்று சொல்கிறார்கள். ஆயினும், பியன் பென்சேன்ட் (Bien Pensant) போன்ற அமைப்புகளில்/ குழுக்களில் சூழல் நலிவு என்பதை அபாயம் என உணர வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். மனிதர்களுக்கு இந்தப் புவியின் மீது அளவுகடந்த தேவைகள் இருக்கின்றன என்பதை இரு சாரர்களும் உணரவில்லை. தற்செயலாக, மானுட மையத்தை முதன்மைப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் 21ம் நூற்றாண்டின் சூழலியல்வாதிகளுக்கு, அவர்களின் இந்த அலட்டலே இன்றைக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பதே புரியவில்லை. பெரு மதிப்பிற்குரிய பசுமையில் வசதியான இறையச்சத்தை கலக்காமல், உயிர்க் கோளத்தின் உள்ளார்ந்த உண்மை மதிப்பினை சிந்தித்து செயலாற்ற அவசரத் தேவை இருக்கிறது என்பதை நம்ப வேண்டும்.
பாலின் Against the Machine இந்தத் தேவையை நிறைவேற்றுவதைப் பற்றி பேசுகிறது. பேரழிவை அச்சமூட்டும் கவர்ச்சியுடன் இந்தப் புத்தகம் சித்தரிக்கிறது; இதைப் படிக்கும் முன் நாம் உலகைப் பற்றி கொண்டிருந்த எண்ணங்கள் வேறு படித்தவுடன் எழும் சிந்தனைகள் வேறு. நாம் பல காலமாக சந்தேக்கப்படுவதுதான்- சூழலியல் நம் இன்றைய உலகின் நோய்; சூழலியலாளர்கள் அற்பமான தீர்வுகளை நவீன முலாம் பூசித் தருவது நமது நிலையை இன்னமும் மோசமாக்கிவிடுகிறது. Myth of the Machine (1967-70) என்ற நூலை எழுதிய லூயிஸ் மம்ஃபோர்ட்டை (Lewis Mumford (1895-1990),) பால் இங்கே குறிப்பிடுகிறார்: “இந்த மாபெரும் தொழில் நுட்பங்களைக் கொண்டு, அதிகாரமிக்க சிறுபான்மையினர், ஒரே மாதிரியான, பன்முகத்தன்மையற்றுப் போகும்படி, அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக, மாபெரும் கோள அமைப்பை, தானியங்கிகளால் கட்டமைப்பார்கள். தன்னாட்சியோ, சுய சிந்தனைகளோ இல்லாமல், மனிதன், மெத்தனமாக, இயந்திரத்தின் ஆளுமைக்கு உட்படுவான். அவனை இயந்திரமாக்கிவிடுவார்கள் அல்லது தன்னுணர்வற்ற, கூட்டு உணர்விற்கு அடி பணிந்து வாழ்வான்.”
50 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சொன்னது இன்றைய உலகில் நிதர்சனமாகி வருகிறது. மனிதனுடன் மனிதன் கொள்ளும் தொடர்பை விட மனித-இயந்திரத் தொடர்புகள் பெருகிவிட்டன. பொழுது போக்குவதற்கு, பொருட்கள் வாங்குவதற்கு, கலைகளை ரசிப்பதற்கு இன்று வாய்ப்புகள் பல்கிப் பெருகிவிட்டன- ஆனால், அவை அனைத்துமே செயற்கை நுண்ணறிவு செயலிகளின் வாயிலாக நம் விருப்பங்களாக அமைகின்றன. நம் உணவுகள், விவசாயிகளால் மட்டுமே, மனித உழைப்பை முதன்மையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதில்லை, அவைகள், பதப்படுத்தட்டு, வேதிப் பொருட்களால் அவற்றின் ஆயுள் நீட்டிக்கப்பட்டு, நெகிழி உறைகளில் பொதியப்பட்டு நம்மிடம் வருகின்றன. பல ‘ஒளி ஆண்டுகளுக்குப்’ பிறகு, இக்கணத்தில் நாம் காணும் விண்மீன் ஒளியைப் போல நேர இடைவெளி இதில் இருக்கிறதல்லவா? மனித- இயந்திர பெரும் பிணைப்பில், மனிதம் என்பது அதன் இடைவெளிகளில் காணப்படுகிறது.
பால், என்னவோ, இந்த நிலை மாறும் என்றும், புது நாகரீகம்- உலகின் சூழலை அச்சுறுத்தாத தொழில் நுட்பங்களற்ற ஒன்றாக எழும்பும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். ஆனால், மேலோட்டமாகக் கூட வரலாறு காட்டும் செய்தி ஒன்று உண்டு. இயந்திரமயமாக்கலை, நுட்பத்தை ஒதுக்கிவிட்டால், நல்ல நிலை கிடைக்கும் என்று நம்புவது சரியான ஒன்றில்லை. காட்டுமிராண்டித் தனமும், பிரிவும், பிளவும், அழிவும் அதிகமாகும் என்பதைத் தான் வரலாறு காட்டுகிறது. இயற்கை மற்றும் மனிதனின் பேரழிவு இதன் விளைவாக இருக்கும்.
சற்று அவரது ஆன்மீகப் பயணத்தைப் பார்ப்போம். 1972ல் பிறந்த அவர், ஆக்ஸ்போர்டில் நவீன வரலாறு படித்தார். கல்லூரியை விட்டு வெளி வந்தவுடனேயே, ‘சாலை கட்டமைப்பிற்கு’ எதிராகக் குரல் கொடுத்து கைதானார். ‘மதச்சார்பற்ற பெருங்கனவின்’, (Secular Utopianism) எதிர்ப்புக் கொள்கைகள் அவரை க்ரீன்பீஸ் (Greenpeace) போன்ற சூழலியல் கொள்கையாளர்களிடமிருந்து விலக்கின. 2009ல், மற்றவர்களுடன் இணைந்து, ‘கருமலை திட்டத்தை’ (Dark Mountain) கொண்டு வந்தார். இது ஒரு இலக்கிய- தத்துவ அமைப்பு; “அறிவியல் குறுகிய பார்வையில் கரி உமிழ்வைப் பற்றி மட்டுமே கவலை கொண்டுள்ளது- இயற்கையின் ஆன்மாவை உணரவில்லை.” விரைவில், அவர் இங்கிலாந்தை விடுத்து, அயர்லாந்தின் கால்வேக்குச் (Galway) சென்று விட்டார். அயர்லாந்தின் மேற்குக் கடற்கரையிலுள்ள கால்வே, அந்த நாட்டின், பண்பாட்டு மையம் என்று கருதப்படும் ஒன்று; அங்கே அவர் விவசாயம் செய்து, கதிரறிவாள் கொண்டு கதிரறுத்து, களம் சேர்த்து வாழ்கிறார். இன்றளவும், அவரும், அவரது குடும்பமும் அங்கேதான் உள்ளனர்.
மீள மீளத் தொடர்ந்து இம்முறையில் சென்றால், உலகை, இயற்கையைக் காக்க முடியும் என்பது அவரது செய்தி. இந்த மீட்சிக்கு எந்த ஆன்மீகம் உதவும்? ரோமானிய கீழைமரபு கிருத்துவத்தில் (Romanian Branch of Eastern Orthodox Christianity) இப்போது இருக்கும் அவர், நாத்திகத்திலிருந்து ஆன்மிகத்திற்கு வந்து, ஜென் புத்தக் கொள்கைகளில் சிலகாலம் ஈடுபட்டு, அதைத் தழுவி வாழ்ந்து, ஆத்ம வாதிகளின் (animists)கூற்றுக்களை ஏற்று, இயற்கை உபாசகர்களான நவீன பாகன் (Pagan) மதத்தினரின் கொள்கைகளான ‘பருவக் காலத்திற்கேற்ற உணவுகள், வழமையான பண்பாடுகள் கொண்டு வாழ்தல் இனிதாம்’ என்று விதந்தோதிவிட்டு இன்று ரோமானிய கிருத்துவ கோட்பாடுகளுக்குள் வந்து சேர்கிறார். 2021ல் வெளியான ‘சிலுவையும், இயந்திரமும்’ என்ற அருமையான ஒரு கட்டுரையில், தன் மாற்றங்கள், எதிர்பாராமலும், சுய முயற்சியின்றி யதேச்சையாகவும் நடந்தன என்று சொல்கிறார். ஒரு விக்கன் (Wiccan)சடங்கில், கலந்து கொள்ள இயலாமல், தான் திடீரென நோய்வாய்ப்பட்டதும், பின் வந்த மாதங்களில் தவிர்க்க இயலாத உண்மையிடம் சரணடைந்ததையும் சொல்கிறார்.
தன்னுடைய இந்த மத, மன மாற்றங்கள் அவருக்கு வியப்பான புதிராக இருந்த போதிலும், அதில் உள்ளார்ந்த தர்க்கம் ஒன்றிருக்கிறது. Savage Gods (2019)ல் அவர் தனது ஆன்மீகத் தாகத்தையும், கேள்விகளையும் பற்றி எழுதுகிறார். மொழியின் போதாமைகளை, அது பிளவு பட்டுள்ள உலகை பாலமாக இணைக்கத் தவறுவதை, மறைமுக உண்மைப் பொருளை உணர்த்தத் தவறுவதை கேள்வி கேட்கிறார். கிருத்துவ மதத்தின் எந்தவொரு பிரிவைக் காட்டிலும், மொழியின் எல்லைகளை மரபுசார் கிருத்துவம் எடுத்துச் சொல்கிறது. கடவுள் என்பதை அது ‘இறைமை என்பது என்ன?’ என்பதைக் காட்டிலும் ‘இறைமை என்பது என்ன இல்லை’? என்பதன் மூலம் சொல்கிறது. வழிபாடு, நோன்பு, பிரார்த்தனை இவைகளெல்லாம் உண்மையை அறிய உதவும் கருவிகள்- அறிவார்ந்த காரணங்கள் அதை உணர உதவுவதில்லை. கிரேக்கத் தத்துவங்கள் கட்டமைத்த மேலைக் கிருத்துவம் பொருண்மை உலகை ஒதுக்கச் சொல்வதைப் போல, மரபார்ந்த கிருத்துவம் சொல்வதில்லை. ப்ளாடோ சொன்ன ‘இருள் குகை’ Dark Cave)அல்ல இந்த உலகம்; இறைமையின் துல்லியமான குறியீடு. கவனமில்லாமலோ, வேண்டுமென்றோ இதன் சூழலைச் சிதைப்பவர்கள், பேரழிவிற்கு வித்திட்டு, பெரும்பாவம் செய்கிறார்கள். எனவே, மரபிற்கும், சூழலிற்கும் உள்ளார்ந்த நேயம் இருக்கிறது.
அவர் சூழலியல் சிதைவை, ‘பேரழிவு’ என்றே பார்க்கிறார். “நம் முன்னோர்கள் நாம் வாழும் இந்தக் காலத்தை பேரழிவுக் காலம் என்றே சொல்வார்கள் என நான் சொல்வது மிகையில்லை. மேற்கின் அரசியலில் நாம் காணும் சித்தப்பிரமைகள், சினம், குழப்பம், சொன்ன வாக்கை நிறைவேற்றாத நிலை, அமைப்புகள் சரிவர இயங்க முடியாத நிலை அனைத்திற்குமே, அந்த வார்ப்புரு இயந்திரக் கட்டமைப்புகளே காரணமாகி, மனித வாழ்வு இன்னது என்று நாம் அறிய முடியாதபடி செய்து, நம்மைத் தனிமைப்படுத்தி விட்டது.
இந்த இயந்திரமய நாகரீகத்தை உடைப்பதன் மூலம், எந்த இயற்கையிலிருந்து மனிதன் மாறுபட்டு தன் வாழ்வை இன்று அமைத்துக் கொண்டுவிட்டானோ, அதைத் தழுவிக் கொண்டு இயற்கைக்குத் திரும்ப வேண்டும். இந்த இயந்திரக் கட்டுப்பாட்டில் இருப்பவன் வருந்தினால், அவன் மீட்கப்படுவான். இறையம்சம் கொண்ட மனிதனை ஒரு இயந்திரம் மாற்ற முடியுமா? சாத்தானைப் போல அதி விஷம் கொண்ட சக்தி மிக்கதாக தொழில் நுட்பம் இருக்கலாம். ஆனால், அது நீடிக்காது; அதன் வீழ்ச்சி, தூய்மைப்படுத்துவதாகவும், மீட்சியாகவும் அமையும்.
இயந்திரம் இல்லா உலகை அவர் எப்படிச் சொல்கிறார். விக்டோரிய இயற்கை உபாசகரான ரிச்சர்ட் ஜெஃப்ரிஸ், தனது After London (1887), நாவலில், சொல்வதைத் தான் பாலும் சொல்கிறார்- “பூமியின் சுழற்சி அச்சில் சிறிது மாற்றம் நிகழ, லண்டன் சதுப்பு நிலமாகிவிடுகிறது; நடுக்காலகட்டத்தில் வாழ்ந்ததைப் போல பிரபுத்துவ வம்சாவளியும், கைவினைஞர்களின் தொழிற் சிறப்பும் இலங்கும் நாடாக இங்கிலாந்து மாறிவிடுகிறது;” இதே காட்சியை விவரிக்கும் ஜே ஜி பல்லார்ட் தன் The Drowned World (1962) நாவலில் கதா நாயகனின் உள்முகப் பயணமாக, மிகப்பழங்காலத்திற்குச் சென்றுவிடுவதாகக் காட்டுகிறார்.
டி எச் லாரன்ஸ் கனவு கண்ட Rananim இல், சுயசிந்தனையுள்ள தூண்டப்பட்ட மனிதர்கள், தன்னிறைவுடன், ஃப்ளோரிடா, கார்ன்வெல், புது மெக்ஸிகோ போன்ற சாத்தியங்கள் உள்ள இடங்களில் இயந்திர உதவியில்லாமல் வாழ்வதை, பாலின் “இயந்திரங்களுக்கு எதிராக” கட்டுரை எதிரொலிக்கிறது. 1915-17 வரை லாரன்ஸ், கேதரீன் மேன்ஸ்ஃபீல்டிற்கு எழுதிய உணர்ச்சிமிக்க கடிதங்கள் தன்னுடன் இணைந்து அப்படியொரு இடத்தை அமைக்க அவரை அழைக்கின்றன. அவர் எண்ணம் செயல் வடிவம் பெறவில்லை. ஆனால், தன் புனைவில் அவர் அதைக் கொண்டு வந்தார்- The Plumed Serpent (1926), மற்றும் Apocalypse; பிந்தைய நாவல், அவர் இறப்பதற்கு சற்று முன்னர் 1929-30 களில் அவரது சிந்தனைத் தொகுப்பாக ‘வெளிப்பாட்டு நூல்’ என்று வெளியானது.
உலகம் அழியும் என்று ஊகப் புனைவு மிக்க சில நாவல்களை பால் எழுதியிருக்கிறார். The Wake (2014), Beast (2016) and Alexandria (2020) என்ற புனைவுகள், ‘நார்மன் வெற்றியிலிருந்து’ (வில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுத்து அதை ஆக்கிரமித்தது) ஒரு ஒற்றைச் செய்தியைக் கொண்டு, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இங்கிலாந்தின் ஃபென்லான்டில் துறவி மடம் போன்ற ஒன்றில், இருப்பை, ‘பெண்’ என்பவரின் வழிகாட்டுதலில், இயந்திரங்களற்ற வாழ்க்கை வாழ்வதான சித்தரிக்கும் நாவல்கள் இவை. அதில் ஆபத்துக்கள் வருகின்றன- இலக்க இடமான ‘அலெக்ஸான்ட்ரியாவில்’ அழியாத இலக்கமாக வாழ முடியும் என அரக்கனை ஒத்த ஒரு செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு ஆசை காட்டுகிறது. முடிவில், அன்னங்கள் நீந்துகின்றன; அலக்சாண்ட்ரியா முடிவுறுகிறது. இயற்கை ஒழுங்கு வருகிறது.
ஆனால், நிஜ உலகில் இயந்திர அழிவு என்பது மாறுதலாகத்தான் இருக்கும். போல்ஷெவிக் சதிக்குப் பிறகு, ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரை நினைவில் கொள்ளுங்கள். கடைசி முடியரசான ரோமனாவ் 30 பகுதிகளாகச் சிதறுண்டது; மன்னரும், சுற்றமும், உற்றமும் கொல்லப்பட்டனர்; பன்னிரண்டிற்கும் மேற்பட்ட அயல் இராணுவம் இந்தப் போரில் உட்புகுந்தது; இந்தப் போர் தொடர்ந்த 3-5 வருடங்களில், 10 மில்லியன் மக்கள், இந்தச் சண்டை சிக்கலினால் இறந்தார்கள்.
பஞ்சத்தினாலும், தொற்றுக்களாலும், 80 இலட்சம் பேர் இறந்தார்கள்; பத்து இலட்சம் பேர் போரால்; செமிடிக் எதிர்ப்பு என்ற பேரால் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள், படுகொலை செய்யப்பட்டனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அப்போதுதான் கடைசி ஜாரின் காலத்தில் முளைவிடத் தொடங்கிய இயந்திரப் பொருளாதார அமைப்புகள் இல்லாமலாக, உள்ளூர் பொருளாதாரம் மாற்றாக கைகொள்ளப்பட்டது; அவர்களுக்கு சிவப்பு, வெள்ளை இராணுவத்தினர் மிகுந்த தொல்லைகள் கொடுத்தனர். மேற்கு ரஷ்யாவின் தாம்பாவ் பகுதியில், மாபெரும் புரட்சி வெடித்தது; அந்தோ பரிதாபம்- போல்ஷெவிக்குகள், கிராமங்களை எரித்தனர்; விவசாயினர் மீது விஷ வாயு செலுத்தினர்.
அத்தனை போர் அழிவும் மீட்சி எதையும் அளிக்கவில்லை. மாபெரும் இறுக்கமான வலுவான கட்டமைப்பு, அரசாட்சியின் அராஜகத்தை ஒழிப்போம் என்ற முழக்கங்கள், வன்முறைகள் ஆகியவை கொண்டு போல்ஷெவிக்கினர் வென்றனர். வலுவான அதிகாரத்தைக் கொண்டு, கூட்டு விவசாயம், சேகரிப்பு ஆகியவற்றை மக்கள் மீது திணித்தனர். இலட்சக்கணக்கோர் மடிந்தனர், பல குழந்தைகள் அனாதைகளாயினர், கால் நடைகள் படு கொலை செய்யப்பட்டன, நர மாமிசம் உண்பது சமூகத்தில் நிகழ்ந்தது. 1941ல் நாஜிக்கள் படையெடுத்தனர், மீண்டும் இலட்சக்கணக்கில் சாவு, கொடூரங்கள்; 20 மில்லியன் மக்கள் மடிந்தனர்- வரலாறு வழக்கம் போல நடந்தது.
உலகளவில் இத்தகைய செயல்பாடுகளை எண்ணிப் பாருங்கள்- அதன் துண்டாடுதல்கள் முன்னர் பார்த்ததை விட பயங்கரமாக இருக்கும். மக்கள் தொகை அதிகரித்து வருவதைப் பற்றி பாலும், அவர் விமர்சிக்கும் சூழலியலாளர்களும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. பல் நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது; பல உயிரினங்களின் இனம் அழிந்து வருகிறது; இன்று 8 பில்லியனாக இருக்கும் மக்கள் தொகை 2050ல் 10 பில்லியனை எட்டும் என கணித்துள்ளார்கள். அவர்கள், இயந்திரங்களை நம்பித்தான் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். சென்ற சில நூற்றாண்டுகளில் நாம் கண்ட அதிகரித்த விளைவுகள், ஹைட்ரோ கார்பனின் உபப் பொருட்கள். கப்பல்கள், இரயில்கள், இயந்திர உதவியுடன் விவசாயம், குளிர் பதன சாதனங்கள் இவை போன்றவை இல்லாமல், இந்த அளவில் மக்கள் பிறந்திருக்க முடியாது. உலகளாவிய தொழில்- கட்டமைப்பு இல்லாமல், பலர் வாழ்வதே கேள்விக்குறியாகி விடும். பசுமை விவசாயத்தின் மூலம், இன்றைய, மேலும் நாளை அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு உணவு அளிக்க முடியும் என சூழலியலாளர்கள் சொல்கிறார்கள். இது உண்மையாகக் கூட இருக்கலாம்-ஆனால், உலகம் முழுவதிலும் இதைச் செயல்படுத்த முடியுமா? மேலை நாடுகளில் இதை செய்ய முடிந்தால் கூட இந்தியா, சீனா இன்னும் சில நாடுகளில், அவர்களின் மக்கள் தொகை மிகுந்திருப்பதால், படிம எரி பொருட்களைப் பயன்படுத்தி, இயந்திர மயமாக்கி, சூழலில் வெப்பத்தையும், மாசினையும் அவர்கள் அதிகரிப்பதை நிறுத்த முடியாதே?
என்ன செய்யலாம்? ஜேம்ஸ் லவ்லாக் சொன்ன Gaia கோட்பாடு உதவலாம். அது என்ன கையா தியரி? சூழல் அறிவியல் சொல்கிறது- மனித செயல்பாடுகள், இந்த உயிர்க்கோளத்தில், அதன் கடல்களில், அதன் மண் வளங்களில் ஏற்படுத்தும் விளைவுகள், வரம்பு மீறிச் செல்கின்றன. எனவே, ஜேம்ஸ், ந்யூக்ளியர் சக்தியைப் பயன்படுத்தச் சொல்கிறார்; மரபு மாற்றப்பட்ட விளைபொருட்கள், நெடுக்குவாட்டில் விவசாயம், இவை நெடுங்காலம் நீடிக்கும், நிலைத்த பலனைக் கொடுத்து, மனிதன் இந்தப் புவிக்கோளத்தை துஷ்ப்ரயோகம் செய்வதைத் தடுக்கும் என்று ஜேம்ஸ் சொல்கிறார். (இந்தியாவில் பசுமைப் புரட்சி எவ்வாறு தோன்றியது? பல காரணங்கள் மறைமுகமானவை- ஆனால், பசியும், பட்டினியும் முதன்மைக் காரணங்கள். உணவிற்காக ஏன் நாம் உலக அரங்கில் கையேந்த வேண்டும் என்று சிந்தித்தார்கள். இரசாயன உரம், அதிக அளவில் உழு இயந்திரக் கருவிகள், சற்றே மரபு மாற்றப்பட்ட விளை பொருட்கள் ….நம் மக்களின் பசியை மட்டும் போக்கவில்லை; ஏற்றுமதி செய்து உலகின் பசிப்பிணியை மணிமேகலை போல் ஆற்றியது. ஆயினும், இன்றளவிலும், நம்மாழ்வார், சுவாமிநாதன் கருத்து மோதலும் இருக்கிறது.) ஜேம்ஸ், இயந்திரங்களை அரக்கத்தன்மை உள்ளவைகளாகப் பார்க்கவில்லை; அவை இயற்கையின் பரிணாம வளர்ச்சி என்றே பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தேனீக்கூடுகளைப் போலவே, வளரும் நகரங்களும் பார்க்கப்பட வேண்டும். பால் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், நாட்டுப்புறங்களைப் போன்ற எழில், நகரங்களுக்கும் உள்ளது. 2019ல் வெளி வந்த தனது நூலில், ஜேம்ஸ், உலகை சமநிலைப் படுத்தும் ஒன்றாக, கையன் கோட்பாட்டைக் கைகொள்ளும் ஒன்றாகவே செயற்கை நுண்ணறிவைப் பார்க்கிறார். பால் இதை ஒத்துக் கொள்கிறாரா?
அடுத்த (இறுதிப்) பகுதி:
உசாவி:
https://www.newstatesman.com/culture/2025/10/the-prophecies-of-paul-kingsnorth- Mr. John Gray 15/10/25
