
சிதைந்த ஜனநாயகத்தின் மத்தியில் எழுந்த நம்பிக்கை
இந்த 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. சில நேரங்களில் அமைதிக்கான பரிசு அமைதியின் நிறைவேற்றமல்ல; மாறாக அது அறத்திற்கான போராட்டத்தின் அங்கீகாரம். அதன் குரலாக இம்முறை வெள்ளையாடை அணிந்த ஒரு பெண்ணின் அடங்காத நடையை இவ்வுலகம் காண்கின்றது. இவரின் பெயர் இன்று வெனிசுலாவிற்குள் மட்டுமல்ல, உலகளவில் “நீதி, சுதந்திரம், ஜனநாயகம்” என்பதற்கான ஒலி.
வெனிசுலா, அந்த நாட்டின் பெயரே இன்று உலகத்தின் மனங்களில் ஆழ்ந்த வலியும், தாங்க முடியாத நம்பிக்கையின்மையும் உருவாக்கும். ஒருகாலத்தில் எண்ணெய் வளம் பெருகிய பூமி, கடந்த இருபது ஆண்டுகளில் அரசியல் அடக்குமுறையாலும் பொருளாதார வீழ்ச்சியினாலும் வறுமையின் இருண்ட அடுக்கு வரை மக்கள் தள்ளப்பட்டனர். ஹியூகோ சாவேஸ் தொடங்கிய “சாவேஸ்மோ” ஆட்சி, மக்கள் நலனின் பெயரில் அரசு நிறுவனங்களைப் பிடித்து, அதிகாரத்தை தனது நிழலாக மாற்றியது. அவரின் வாரிசான நிக்கோலஸ் மதுரோ, 25 ஆண்டுகளாக அந்த நிழலைப் பாதுகாத்து வருகிறார். சாவேஸ் தொடங்கிய இந்த அரசியல் தத்துவம், நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில் முழுமையாக அதிகாரமயமான (authoritarian) வடிவம் பெற்றது.
மதுரோ அரசு நீதித்துறை, தேர்தல் ஆணையம், இராணுவம், ஊடகம் என்று அனைத்து மாநில நிறுவனங்களையும் அரசுத் துறைகளையும் ஊடகத் துறையையும் தன் எதேச்சாதிகார கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், மக்களின் மனம் அவர்கள் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்து விடுதலையை நோக்கியே இருந்தது. அந்தச் சூழலில், வெள்ளையாடையில் செபமாலையுடன் தெருக்களில் நடந்து, மக்களின் மனங்களில் ஒளியை ஏற்றிய பெண் மரியா கொரினா மச்சாடோ.
மரியா கொரினா மச்சாடோ வெனிசுலாவில் வளர்ந்து வரும் சர்வாதிகார மைய அரசியலுக்கு எதிராக ஜனநாயக போராட்டத்தை வழிநடத்தி வருபவர். இவரின் பயணம் நம்பிக்கையின் யாத்திரை போல இருந்தது. அரசாங்கம் இவரின் பாதுகாவலர்களை நீக்கிவிட்டாலும் அச்சப்படாது இவர் பாதுகாப்பில்லாமல் தெருக்களில் நடந்தார்
தெருவில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் கரகாஸ் நகரில் 1992 ஆம் ஆண்டில் அடீனியா அறக்கட்டளை (Atenea Foundation) என்ற நிறுவனத்தை நிறுவி சமூகப் பணியில் ஈடுபட்டார் பொறியியலும் நிதி படிப்பும் பயின்று, சிறிய வணிக வாழ்க்கை அனுபவம் கொண்ட இவர்.
மக்களின் கண்ணீர் இவரின் தோள்களில் விழ, “மரியா! எங்களைக் காப்பாற்று!” என்று அரற்றினர். ஒரு பெண்ணின் நம்பிக்கை, நாட்டின் மீள்பிறப்பு ஆகும் என்கிற உண்மையை இவர் நடையால் நிரூபித்தார்.
மரியா கொரினா மச்சாடோ அவரின் உரைகள் அரசியல் பிரசாரங்கள் அல்ல , அவை மக்களின் உயிர் மீதான உறுதிமொழிகள்.
“நம் குழந்தைகளுக்காக!
பசியும் பயமும் இல்லாத வெனிசுலாவுக்காக!”
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சொமாட்டே (Súmate) அமைப்பின் நிறுவுநர்களில் ஒருவராக ஆனார். சொமாட்டே என்பது ஸ்பானிய மொழியில் “ஒன்றாகச் சேர்த்தல்” என்று பொருள். இந்த அமைப்பு தேர்தல் முறைகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. குடிமக்களுக்கு தேர்தல் நடைமுறைகள், ஜனநாயக உரிமைகள் குறித்த பயிற்சியையும் தேர்தல் கண்காணிப்புகளையும் நடத்தி வருகின்றது. 2010 ஆம் ஆண்டு மரியா கொரினா மச்சாடோ தேசிய சபைக்கு போட்டியிட்டபோது, அவர் பெற்ற வாக்கு எண்ணிக்கை வெனிசுலா தேர்தல் வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க அதிகபட்ச வாக்கு எண்ணிக்கை ஆகும். 2014 ஆம் ஆண்டு, மதுரோவின் அரசு அவரை பதவியில் இருந்து நீக்கியது.
நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், மச்சாடோ தேர்தலில் போட்டியிடத் தடைசெய்யப்பட்டார். மிரட்டல்களை எதிர்கொண்டார், ஆனால் ஒளி போல மக்களின் இதயங்களில் நுழைந்தார். அவர் தான் போட்டியிடவில்லை ஆனால் அவர் எட்முண்டோ கொன்சாலஸ் அவர்களுக்கு ஆதரவு தந்தார்.
2024 ஜூலை மாத அதிபர் தேர்தலுக்குப் பிறகு, வெனிசுலா அரசு எதிர்க்கட்சியினர்மீது கடுமையான அடக்குமுறையை நடத்தியது. மதுரோ அரசின் கடுமையான எச்சரிக்கைகளும், “என்னை தோற்கடித்தால் இரத்த ஆறு ஓடும்” என்ற மிரட்டல்களும் மக்களை அச்சுறுத்தவில்லை. மச்சாடோ ஆதரித்த வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற நம்பிக்கை பரவிய நிலையில், கைது செய்யப்படுவதைத் தவிர்க்க மச்சாடோ தலைமறைவானார்.
மச்சாடோவின் உயிருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அவரின் முக்கிய ஆலோசகர்கள் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மச்சாடோவின் துல்லியமான இருப்பிடம் தெரியவில்லை. இருப்பினும், அவர் இன்னும் வெனிசுலா நாட்டிற்குள் தங்கி, எதிர்க்கட்சியை வழிநடத்தி வருகிறார்.
இவரின் அரசியல் கோட்பாடுகள் என்பது ஜனநாயக மீட்பு, பொருளாதார சீர்திருத்தம், சமூக நலன்கள் மற்றும் நியாயம்.மச்சாடோவின் முக்கிய இலக்கு வெனிசுலாவின் ஜனநாயக அமைப்புகளை மீண்டும் நிறுவுவது. இவர் மதுரோவின் அதிகாரமய அரசுக்கு எதிராக நேரடி மாற்றத்தை கோருகிறார்; “சீர்திருத்தங்கள்” அல்ல, “மாற்றம்” என்பதே இவரின் மொழி.
இவர் சோசலிச பொருளாதார முறைமைக்கு மாற்றாக, தனியார்மயமடைந்த சந்தை பொருளாதாரம் வேண்டுமென வலியுறுத்துகிறார். பெரும்பாலும் மாநிலக் கட்டுப்பாட்டில் இருந்த PDVSA எண்ணெய் நிறுவனம் ஊழலால் சீரழிந்தது; அதனை மறுசீரமைத்து தனியார்மயப்படுத்த வேண்டும் என இவர் வாதிடுகிறார்.
சிலர் இவரின் கொள்கைகள் ஏழைகளுக்கு பாதிப்பாகும் எனக் கூறினாலும்,
மச்சாடோவின் பார்வையில் “சுதந்திரமான சந்தை வளர்ச்சி” தான் சமூக முன்னேற்றத்தின் நீடித்த வழி.
ஏஞ்சலா மேர்க்கலைப் போல உறுதியானவராகவும், ஆனால் தாயைப்போல மக்களிடம் மென்மையாகவும் மச்சாடோ இன்று தெருக்களில் பேசுகிறார். “நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக” என்ற இவரின் கூச்சல், வறுமையில் வாழும் மக்களுக்கு தங்கள் நாட்டை மீண்டும் ஒன்று சேர்க்கும் கனவாக மாறியது.
“சவிஸ்மோவின் இறுக்கமான பிடி” (Chavismo’s Chokehold) எனப் பெயரிடப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்தியது போல, 2024 தேர்தல் போட்டியல்ல. அது வெறும் அரசியல் நாடக காட்சி மட்டுமே. மதுரோ 51% வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்; எதிர்க்கட்சியின் வேட்பாளர் எட்முண்டோ கொன்சாலஸ், மச்சாடோவின் ஆதரவுடன் 44% என்று கூறப்பட்டது.
ஆனால் உண்மையான வாக்கு எண்ணிக்கை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டன. தேர்தல் கணக்காய்வுகள் வெளிவரவில்லை. எதிர்க்கட்சியின் கண்காணிப்புக்கு தடைகள் விதிக்கப்பட்டன. வெளிநாட்டில் உள்ள வெனிசுலா குடிமக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
கார்ட்டர் மையம் (The Carter Center) கூட தன் அறிக்கையில் “இந்த தேர்தல் ஜனநாயகமானதல்ல; சர்வதேச சட்ட அளவுகோல்களுக்கும் முரணானது. ” என்று கூறியது.
இந்த தேர்தல் முடிவு “மக்களின் வாக்கின் பிரதிபலிப்பு அல்ல, மதுரோவின் அதிகாரத்தின் பிரதிபலிப்பு.”.
மக்கள் மெளனமாக இல்லை. தேர்தலுக்கு பின் வெனிசுலா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. எதிர்க்கட்சியினர் மீது அரசு வன்முறை நிகழ்ந்தது. ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
“இது தேர்தல் அல்ல, தந்திரம்!” என்று சாவேஸ்மோவின் தொட்டிலாகக் கருதப்பட்ட ஏழை குடியிருப்புகளிலும் மக்கள் தெருக்களில் வந்து முழங்கினர்.
அமெரிக்கா, பிரேசில், ஐரோப்பிய கூட்டமைப்புகள் இணைந்து மதுரோவின் வெற்றியை சந்தேகித்தன.அமெரிக்க அதிபர் டிரம்ப், கரீபிய கடலில் “போதைப்பொருள் கும்பல்களுடன் ஆயுத மோதல்” என்ற பெயரில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினார். அது வெனிசுலா அரசுக்கு நேரடி எச்சரிக்கை. டிரம்ப் நிர்வாகத்தின் சில உயர்பதவி அதிகாரிகள் “மதுரோவை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்” என்ற கருத்தையும் வெளிப்படையாக ஆதரித்தனர்.
அதிகாரம் மாறுமா என்ற கேள்வி தொடர்கின்றது. மதுரோவின் கட்சி அரசாங்க நிறுவனங்களை முழுமையாக கட்டுப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். அப்படியென்றால், உண்மையான வெற்றியாளர் எட்முண்டோ கொன்சாலஸுக்கு அதிகாரம் மாற்றப்படுமா? அல்லது ஜனநாயகம் இன்னொரு முறை “நிலையான நிலைமை” என்ற பெயரில் ஒத்திவைக்கப்படுமா?
மதுரோவின் ஆட்சியால் தடைசெய்யப்பட்டாலும், மச்சாடோவின் இயக்கம் மக்களின் இதயங்களில் பெரும் ஒளி எழுப்பியது. இவர் ஜனநாயகத்தின் அடிப்படையான நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தார்.
இந்தப் பின்னணியில்தான் நோர்வே நோபெல் கமிட்டி,
“அமைதியான வழிமுறையில் ஜனநாயகத்திற்காக போராடிய துணிவுக்கும்,மக்களின் உரிமைகளை மீட்கத் தன்னிலை மறந்த அர்ப்பணிப்பிற்கும்” மச்சாடோவை 2025 ஆம் ஆண்டின் நோபல் அமைதிப் பரிசு வழங்கி கௌரவிக்கின்றது.
வரலாறு எப்போதும் நினைவூட்டுவது போல, நோபல் பரிசு அரசியலின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டதில்லை. பல காலங்களாக, அமெரிக்காவும் அதன் மேற்கு கூட்டாளிகளும் இந்த விருதை தங்களுடைய நுண்ணிய அரசியல் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். தங்களின் சித்தாந்தத்தில் பொருந்தும் நபர்களை பாராட்டி, முதலாளித்துவ ஆதிக்கத்தைச் சவாலிட்ட குரல்களை புறக்கணித்து வருகின்றனர். கம்யூனிசமும் சோசலிசமும் அவர்களுக்கு வெறுப்புக்குரியவை மட்டுமல்ல; அச்சத்துக்குரியவையும் ஆகும். டொனால்ட் டிரம்ப் கூட இந்த நோபல் அமைதிப் பரிசைப் பெற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படையாகச் சொன்னவர். அந்த அடிப்படையில், இவ்வாண்டின் தேர்வு கூட ஒரு மிக நுணுக்கமாக கணிக்கப்பட்ட அரசியல் சைகையாகவே இருக்கலாம்.
மரியா கொரினா மச்சாடோ மக்களின் உண்மையான குரலாக, தொடர்ந்து அதிகாரத்தையும் சிறப்பையும் கேள்வி கேட்க அஞ்சாத தலைவராக உருவெடுக்கப்போகிறாரா அல்லது வெளிச்சத்துக்குள் குறுகிய காலம் தோன்றி, பின்னர் ஆதிக்கத்தின் பக்கம் சாய்ந்த பலரின் பாதையைப் பின்பற்றப்போகிறாரா? 1991 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi)யின் ரோஹிங்யா விவகாரம் போல சிக்கிக் கொள்ளுவாரா?
வரலாற்றை நாம் கூர்ந்து கவனித்தால், உலக சக்திகள் ஜனநாயகம் அல்லது அமைதியில் ஆர்வம் கொண்டவர்கள் அல்ல என்பது விளங்கும். அவர்கள் அமைதியாக அந்தப் பகுதியின் எண்ணெய் வளங்களையும் தங்களின் ஆதிக்கங்களையும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில், இதுவும் அதே பழைய கதைதானா என்று கேள்வி எழுகின்றது.
முந்தைய பதிவுகள்:
