Site icon சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

வாக்தேவி துதி

1.
உன் பேரொளி பொழியும் விழியின்
சின்னஞ்சிறு கீற்றால்
நான் பெற்ற சிற்றொளிக்கே
நல்லூழ் செய்தவன் நானேயென
இறுமாந்திருந்தேன் ஞானவாகினி
உன் பார்வையை விலக்கி
என்னை காரிருளில் மூழ்கடித்து
என்போல் தீயூழ் செய்தவன் யாருமில்லை என
உணர்த்திவிட்டாயே தேவி


2.
உன் அருகாமையால் அடைந்த
மகிழ்வின் இனிமைக்கு அடியில்
கசப்பின் மீச்சிறு துளியை
உணர்ந்தது போலவே
உன்னால் அடைந்த
பிரிவின் கசப்பிற்குள் உறைந்துள்ள
இனிமையையும் உணர்ந்து
உன் எண்ணத்தை
ஈடேற்றிவிட்டேன் தேவி


3.
கடினமான கற்களும்
நோகக் கூடாதெனக் கருதி
புல்லும் நலுங்கிடாத மெல்லடி
வைத்து நடந்த நாமகளே
மோப்பக் குழைந்திடும்
என் மனதைப் பற்றி எண்ணாமல்
விரைவடி வைத்து மறைந்ததேன் தேவி


4.
வெறியாட்டு உச்சத்தை எட்டுவதற்கான
ஊக்கத்தை ஒரு விழியிலும்
மதுரத்தில் நனைந்த தேன் இறகின்
பித்திற்கான தன்மையை
மறு விழியிலும் கொண்ட பிராமியே
அவ்விரு விழிகளின் உச்சத் திறனை
என் மீது பொழிந்து விட்டு சென்றாயே
எப்படித் தாங்குவேன் தேவி


5.
மனதில் நிறைந்துள்ள உன் நினைவகற்றி
படைக்கும் கலைமீது கூர் கொள்ளவெனவே
ஊழ்கம் பயின்றேன் காயத்ரி
அந்தோ பரிதாபம்
என் உள்ளக் கூர்மை
உன்னை விட்டு கிஞ்சித்தும்
அசையவில்லை தேவி


6.
உன் அண்மையால்
தண்வெண்ணெயென பொங்கிப்பொங்கி
பெருகிய என் படைப்பூக்கம்
உன் சேய்மையால்
வெந்நெய்யென உருகி
வழிந்தோடிவிட்டது தேவி

Exit mobile version