2010-ஆம் ஆண்டின் கோடையில், செர்மின் இல்டிரார் (Sermin Ildirar) ஒரு மடிக்கணினி, ஒரு கையடக்க புரொஜெக்டர், மற்றும் ஒரு நூற்றாண்டாக திரைப்பட கோட்பாட்டாளர்களைக் குழப்பிக் கொண்டிருந்த ஒரு கேள்வியுடன் கிழக்கு துருக்கியின் மலைப்பகுதிகளுக்கு காரில் சென்றார்: திரைப்பட படத்தொகுப்பு (editing) ஏன் நமக்கு அந்நியமாக இல்லை?
தெற்கு துருக்கியின் இஸ்பார்த்தா மலைப்பகுதிகளில் தனிமையில் வாழும் ஒரு குழுவை நோக்கி பயணித்தார் இல்டிரார். எழுபதுகளில், அரசாங்கம் அவர்களை மலை உச்சியிலிருந்து கீழே கொண்டுவர குடியிருப்புகளைக் கட்டியது, ஆனால் இந்தக் குடும்பங்கள் மின்சாரத்தை விட தனிமையைத் விரும்பினர். அவர்கள் தொலைக்காட்சியோ திரைப்படமோ பார்த்ததில்லை. நவீன வாழ்க்கை முறையால் மாசுபடாத இக்குழுவால் மனித புலனுணர்வு பற்றிய ஒரு அடிப்படைக் கேள்விக்கு பதிலளிக்க முடியும் என்று நம்பினார் இல்டிரார்.
கேள்வி இதுதான்: சினிமாவைப் புரிந்துகொள்வது இயற்கையானதா அல்லது கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றா?
திரைப்பட வரலாற்றின் பெரும்பகுதியில், இதற்கான பதில் தெளிவாகத் தெரிந்தது. 1895-ல் லூமியர் சகோதரர்கள் பாரிஸில் தங்களது முதல் படங்களைத் திரையிட்டபோது – தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தொழிலாளர்கள், நிலையத்திற்கு வரும் ரயில் – பார்வையாளர்கள் உடனடியாகப் புரிந்துகொண்டனர். ஆனால் அது விளங்காமல் போயிருந்தால்? அந்த பாரிஸ் அரங்கத்திலேயே இந்த முழு ஊடகமும் கலக்கத்தை உண்டாக்கும் ஒரு விந்தையாக நிராகரிக்கப்பட்டு இறந்திருக்கலாம்.
இருபது ஆண்டுகளுக்குள், திரைப்பட இயக்குநர்கள் க்ளோஸ்-அப் (close cut), எஸ்டாப்லிஷிங் ஷாட் (establishing shot), மேட்ச் கட் (match cut), கிராஸ்-கட்டிங் (cross cutting) போன்ற நுட்பமான காட்சி இலக்கணத்தை உருவாக்கினர். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த நுட்பங்களை உள்ளுணர்வாகப் புரிந்துகொண்டது போல் தோன்றியது.
“நாம் இயற்கையாகப் பார்க்கும் விதத்தைப் பிரதிபலிப்பதால் திரைப்படங்கள் நமக்கு புரிகின்றன” என்ற கோட்பாடு எளிமையானதாக இருந்தது. நீங்கள் ஒரு அறைக்குள் நுழையும்போது, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் உள்வாங்குவதில்லை – இங்கே அங்கே பார்க்கிறீர்கள், பிறகு துண்டுகளிலிருந்து காட்சியை உருவாக்குகிறீர்கள். சினிமாவும் இதையே செய்கிறது என்று நம்பப்பட்டது.
தொடர்ச்சி படத்தொகுப்பு இயற்கையான புலனுணர்வைப் பிரதிபலிப்பதால் அது இயல்பாக அமைகிறது என்ற விளக்கம் பல தசாப்தங்களாக விஞ்ஞானிகளுக்கு திருப்தி அளித்தது. ஆனால் அந்த துருக்கிய கிராமத்தில், இந்த ஒருமித்த கருத்தைப் புரட்டிப்போடும் ஒன்றை இல்டிரார் கண்டுபிடிக்கப் போகிறார்.
பார்வையின் இலக்கணம்
தனது முதல் சோதனைப் படத்தில் எளிய ஷாட்-ரிவர்ஸ் ஷாட் காட்சியை காண்பித்து “எத்தனை பேரைப் பார்த்தீர்கள்?” என்று கேட்டார் இல்டிரார்.
“ஒருவர் வந்தார், போனார். பிறகு இன்னொருவர் வந்தார்” என்றார் ஒரு பெரியவர்.
கிராமவாசிகள் காட்சிகளை இணைக்கவில்லை. அனுபவமுள்ள பார்வையாளர்கள் இரண்டு பேர் உரையாடுவதைக் காணும் இடத்தில் அவர்கள் தொடர்பற்ற தனித்தனி நிகழ்வுகளைக் கண்டனர். தொடர்ச்சியான காட்சியைப் பார்ப்பதற்குப் பதிலாக புகைப்பட ஆல்பத்தில் படங்களைப் பார்ப்பது போல் இருந்தது.
ஷாட்-ரிவர்ஸ் ஷாட் சினிமாவுக்கு மிகவும் அடிப்படையானது. 1910 முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு படத்திலும் இது இடம்பெறுகிறது. குழந்தைகள் கூட இதை உடனடியாகப் புரிந்துகொள்கின்றனர் – அல்லது அப்படித்தான் அனைவரும் நினைத்தனர்.
கிராமவாசிகளுக்கு புரிந்துகொள்ளும் திறன் இல்லை என்று கூற முடியாது. அவர்களிடம் இல்லாதது இடைவெளிகளை செயல்பூர்வமாக நிரப்பும் கற்றுக்கொண்ட திறமையே. சினிமாவுடன் வளர்ந்தவர்களுக்கு இந்த மன கட்டுமானம் மிகவும் தானியங்கியாக நடப்பதால், நாம் அதைச் செய்கிறோம் என்பதையே மறந்துவிடுகிறோம்.
கண் கோட்டுப் பொருத்தம் (eyeline match), தோள் வழி காட்சிக் கோணம் (over-the-shoulder shot) – எதுவும் வேலை செய்யவில்லை. மக்கள் மறைந்து மீண்டும் தோன்றுவதாகவே கிராமவாசிகள் விவரித்தனர்.
திரைப்பட படத்தொகுப்பு பற்றி புரிந்து கொள்வது பிறவியிலேயே வரும் ஒன்றல்ல, கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பது தெரியவந்தது.
பின்னர் எதிர்பாராத ஒன்று நடந்தது. கிராஸ்-கட்டிங் காட்சியைக் காட்டியபோது – பெண் சமையல், ஆண்கள் வயல் வேலை – அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டனர். “பெண் தேநீர் தயாரிக்கும்போது, ஆண்கள் வேலை செய்கிறார்கள்.”
கிராஸ்-கட்டிங் சிக்கலானது. பல இடங்களையும் நேரக்கோடுகளையும் ஒரே நேரத்தில் மனதில் வைத்திருக்க வேண்டும். ஆனால் முதல்முறை பார்வையாளர்களுக்கு அது எளிதாக இருந்தது. சினிமா பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்த அனைத்தும் தவறாக இருக்குமோ?
புலப்படாத குருட்டுத்தன்மை
“உங்கள் கட்டைவிரலை கை நீட்டிய தூரத்தில் பிடியுங்கள், அதுதான் உங்கள் தெளிவான கவனத்தின் அளவு. மற்றவை மங்கல்” என்று விளக்குகிறார் லண்டன் பல்கலைக்கழக உளவியலாளர் டிம் ஸ்மித்.
நம் கண்கள் வினாடிக்கு மூன்று முறை சாக்கேட்ஸ் (saccades) எனப்படும் வேக தாவல்களைச் செய்கின்றன. 20-200 மில்லி வினாடிகள் நீடிக்கும் ஒவ்வொரு சாக்கேடின் போதும் நீங்கள் பார்வையற்றவர்.
“உங்கள் கண் மிகவும் வேகமாக அசைவதால் விழித்திரையில் விழும் பிம்பம் மங்கலான ஒளியின் கீறல். உங்கள் மூளை அதை முடக்கிவிடுகிறது.”
சாக்கேடிக் சப்ரஷன் (saccadic suppression) எனப்படும் இந்த நிகழ்வுடன், நாம் இரண்டு-மூன்று வினாடிக்கு ஒருமுறை கண் சிமிட்டுகிறோம். விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு நாம் பார்வையற்றவர்கள்.
துண்டுகளை ஒன்றாக இணைக்கும் மூளைத் திறனால் இந்த தொடர்ச்சியின்மையை நீங்கள் கவனிப்பதில்லை. “நாம் தொடர்ந்து துண்டுகளிலிருந்து அனுபவத்தைக் கட்டமைக்கிறோம்” என்கிறார் ஸ்மித்.
திரைப்பட படத்தொகுப்பு ஏன் வேலை செய்கிறது என்பதற்கு இந்த அறிவியல் புரிதல் சரியான விளக்கமாகத் தோன்றியது. சினிமா நமது மூளை உருவாக்கும் தொடர்ச்சியான பார்வை என்ற ஏமாற்றுவேலையைப் பயன்படுத்துகிறது.
கண் சிமிட்டலும் வெளிப்பாடும்
1974-ல் வால்டர் மர்ச் “The Conversation” படத்தை எடிட் செய்தார். மணிக்கணக்கில் ஜீன் ஹேக்மேனின் காட்சிகளை வெட்டித் தொகுத்தார்.
ஒரு அதிகாலை நடைப்பயணத்தில் ஜான் ஹஸ்டன் எழுதியதைப் படித்தார்: “அறையின் ஒரு மூலை விளக்கிலிருந்து எதிர் மூலை விளக்கைப் பார்க்கும்போது நீங்கள் மென்மையாக பான் செய்வதில்லை. பார்க்கிறீர்கள், சிமிட்டுகிறீர்கள், மீண்டும் பார்க்கிறீர்கள். அந்த சிமிட்டல்தான் கட்.”
மர்ச் எடிட்டிங் அறைக்கு விரைந்தார். அவர் வெட்ட விரும்பும் தருணங்கள் பெரும்பாலும் ஹேக்மேனின் கண் சிமிட்டல்களுடன் ஒத்துப்போனது.
அன்றாட வாழ்க்கையில் மக்களைக் கவனித்தார். ஒரு கருத்தைப் புரிந்துகொள்ளும் தருணத்தில், “இந்த நபர் சொல்வது புரிகிறது” என்று நினைக்கும்போது, கண் சிமிட்டல் நிகழ்கிறது.
“கண் சிமிட்டல் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொன்றைப் பிரிக்கிறது. ஒரு ஷாட் என்பது ஒரு கருத்து. அந்தக் கருத்து முழுமையடையும்போது கட் வர வேண்டும். படத்தொகுப்பு சிந்தனையின் தாளத்தை நிறுவுகிறது.”
“ஒரு காட்சி (shot) என்பது ஒரு கருத்து,” என்று மெர்ச் பின்னர் தனது செல்வாக்குமிக்க புத்தகமான ‘இன் தி பிளிங்க் ஆஃப் அன் ஐ’ (‘In the Blink of an Eye’) இல் எழுதினார். ஒரு காட்சி திரையில் இருக்கும்போது, ஒரு கருத்து வெளிப்படுத்தப்படுகிறது. அந்தக் கருத்து முழுமையடையும்போது — நடிகர் மற்றும் பார்வையாளர் இருவரும் அதைப் புரிந்துகொள்ளும்போது — அப்போதுதான் வெட்டு (cut) வர வேண்டும். படத்தொகுப்பு, அதன் மிக அடிப்படையான மட்டத்தில், சிந்தனையின் ஒரு தாளத்தை நிறுவுகிறது. அது நாம் பார்ப்பதை மட்டுமல்ல, நாம் சிந்திக்கும் வேகத்தையும் கட்டுப்படுத்துகிறது.
பார்வையாளர்கள் செயல்களின் முடிவில், முக்கிய தருணங்களில் ஒத்திசைந்து சிமிட்டுகிறார்கள் என்று ஜப்பானிய ஆய்வாளர் தமாமி நகானோ (Tamami Nakano) கண்டுபிடித்தார் -. “சிமிட்டல் நிரப்பப்பட்ட எடிட் போன்றது, வெற்று இடையூறு அல்ல, அடுத்த தகவலுக்குத் தயாராகும் செயல்பூர்வ செயல்முறை.”
உலகெங்கும் ஆராய்ச்சியாளர்கள் ஒரே முடிவுக்கு வந்தனர்: மனித புலனுணர்வு துண்டு துண்டானது, சினிமா இந்தத் துண்டாடலைப் பயன்படுத்தி வேலை செய்கிறது.
பின்னர் இல்டிராரின் கிராமவாசிகள் அனைத்தையும் உடைத்தெறிந்தனர்.
புதிரின் கடைசி முடிச்சு
ஏன் கிராமவாசிகளால் சிக்கலான கிராஸ்-கட்டிங்கைப் புரிந்துகொள்ள முடிந்தது ஆனால் எளிய உரையாடலைப் புரிந்துகொள்ள முடியவில்லை?
கிராமத்திற்கு புதிய படங்களுடன் திரும்பியபோது இல்டிராரிற்கு பதில் கிடைத்தது. இந்த முறை, அவர் புதிரின் கடைசி பகுதியைச் சேர்த்தார்: ஒலி. “அஸ்ஸலாமு அலைக்கும்,” என்று ஒரு ஷாட்டில் ஒருவர் கூறினார். “அலைக்கும் அஸ்ஸலாம்,” என்று ரிவர்ஸ் ஷாட்டில் இன்னொருவர் பதிலளித்தார்.
மாற்றம் உடனடியாக நிகழ்ந்தது. மௌனமான ஷாட்-ரிவர்ஸ் ஷாட்டைப் புரிந்துகொள்ள முடியாத அதே கிராமவாசிகள் இப்போது இரண்டு ஆண்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகிறார்கள். அவர்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், உரையாடலில் ஈடுபட்டிருந்தனர் என்பதை சரியாகப் புரிந்துகொண்டனர்.
அந்த ஒலி தகவலை மட்டும் சேர்க்கவில்லை; அது, கிராமவாசிகள் அந்தப் படங்களைப் புரிந்துகொண்ட விதத்தையே அடிப்படையாக மாற்றியது. “ஒலி அவர்கள் மனதில் காட்சியைச் செயல்படுத்தியது. தொடர்பற்ற துண்டுகளை ஒரு முழுமையாக உணர முடிந்தது.” தொடர்பற்ற துண்டுகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, அவர்களால் திடீரென்று அதை ஒரு முழுமையானதாக உணர முடிந்தது. அந்த எளிய ஒலிக்குறிப்பு தனித்தனிப் படங்களிலிருந்து ஒன்றிணைந்த இடம் மற்றும் காலத்தின் மனக் கட்டுமானம் என்ற ஆழமான ஒன்றைத் தூண்டியிருந்தது.
ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றி விவாதித்தபோது “கதை ஒரு வகையான இணைப்பு நூலாகச் செயல்பட்டது” என்ற ஒரு ஆழமான புரிதலுக்கு வந்தனர். மக்களால் சினிமாவைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதல்ல விஷயம், சரியான புரிதல் உத்தியைப் பயன்படுத்துவதுதான் விஷயம். அதற்குத் தீர்வு சிக்கலான பயிற்சியோ அல்லது நீண்டகாலக் கல்வியோ அல்ல. அவர்கள் விவாதித்தபடி, அந்த நபரிடம், “இவற்றைத் தனித்தனிப் படங்களாக நினைக்காதீர்கள், அவற்றை ஒன்றாக இணைத்து ஒரு கதையாக உருவாக்குங்கள்” என்று கூறினால் மட்டும் போதுமானது. அப்போது திடீரென்று அவர்கள் அதைப் புரிந்துகொண்டு, படங்களை ஒரு கதையைச் சொல்லும் செயல்களின் தொகுப்பாக இணைக்கிறார்கள். அந்தச் செயல், அதாவது கதையின் இணைப்பு நூல், ஒரு காட்சியை மற்றொரு காட்சியுடன் இணைக்க உதவுகிறது
“சினிமா, இயற்கையான பார்வையைப் பின்பற்றுவதால் வேலை செய்வதில்லை,” என்ற ஆழமான முடிவுக்கு வருகிறார் இல்டிரார். “மாறாக, ஒரு குறிப்பிட்ட புரிதல் உத்தியைப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்வதால்தான் அது வேலை செய்கிறது. அந்த விதியை நீங்கள் அறிந்துகொண்டால், மற்றவை எல்லாம் தானாகவே தொடரும். ஒரு திரைப்படத்தில் உள்ள தொடர்ச்சியான படங்களை, தொடர்ச்சியான இடம் மற்றும் காலமாக இணைக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். “
கிராஸ்-கட்டிங் முரண்பாடு விளக்கமடைந்தது. பெண் சமைப்பது, ஆண்கள் வேலை செய்வது அன்றாட வாழ்க்கையிலிருந்து பரிச்சயம். சமையல்-வயல்வேலை உறவைப் பற்றிய வாழ்நாள் அனுபவம் அந்த இடைவெளிகளை நிரப்பியது.
பார்வையின் துண்டு துண்டான இயல்பு – அத்தனை சாக்கேட்களும் கண் சிமிட்டல்களும் – சினிமா வேலை செய்வதற்கான சாத்தியத்தை உருவாக்கியது. ஆனால் சாத்தியம் மட்டும் போதாது. தொடர்ச்சியான ஷாட்களை தொடர்ச்சியான கதையாக இணைக்க வேண்டும் என்ற மரபை நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த வகையான இணைப்பு உருவாக்கத்திற்கு நம் மூளை தயாராக உள்ளது, ஆனால் சினிமாவுக்கான குறிப்பிட்ட பயன்பாடு கலாச்சார ரீதியானது, உயிரியல் ரீதியானது மட்டும் அல்ல.
[“The Cinema Within” (2024) என்ற ஆவணப்படத்தை முன் வைத்து எழுதிய கட்டுரை]
References:
- Watching Film for the First Time: How Adult Viewers Interpret Perceptual Discontinuities in Film
- Blink-related momentary activation of the default mode network while viewing videos
(கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்கள் இல்டிரார் தனது சோதனைகளுக்காக உபயாகப் படுத்தியவவை அல்ல. இவை மாதிரி உதாரணங்கள்).
