Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

தாமரை இலைத் தண்ணீர் வாழ்க்கை!

வாசலில் தோழிகளுடன் பாண்டி ஆடிக் கொண்டிருந்தேன். ‘டொய்ங், டொய்ங்’ என்ற துந்தனா மீட்டுதலுடன் (எனக்குப் புரியாத) தெலுங்கு மொழியில் பாடியபடி தூரத்தில் அந்த மொட்டைத்தலை சாமியார் வந்துகொண்டிருந்தார். அதே பாண்டியின் நாலுகால் பாய்ச்சலில் அத்தனை பெண் குழந்தைகளும் எங்கள் வீட்டு உள்கூடத்தில் சத்தம் போடாமல் வந்து ஒளிந்துகொண்டு விட்டோம். ஏன் இந்த பயம் தெரியுமா? பிள்ளை பிடிப்பவன் வந்து விட்டானோ என்றுதான்! யார், எது எனத் தெரிந்து கொள்ள இயலாத வயது. பெற்றோர், பெரியவர்களின் பயமுறுத்தல்கள் அதிகம்!

பாட்டி அடுக்களையில் இருந்து வந்து எட்டிப் பார்த்தாள். “ஏன் குழந்தைகளா, யாரைப் பார்த்து பயம்? அந்த சாமியார் உங்களை ஒண்ணும் பண்ணிட மாட்டார். இந்தா மீனு, இந்த உழக்கு அரிசியை அவர் பையில் போட்டுவிட்டு வா,” என்றாள். வெகு தயக்கத்துடன் சென்ற எனக்குத் துணையாகத் தானும் வந்தாள். சாமியார் பாடிக்கொண்டே சிரித்தார். நான் பயத்துடன் நின்றேன். 

அரிசியைப் போட்டுவிட்டு அவர் பாடுவதைக் கேட்டபடி நின்று கொண்டிருந்தாள் பாட்டி. தாத்தா வேலை நிமித்தம் ஆந்திராவில் பல வருடங்கள் வசித்ததனால் பாட்டிக்குத் தெலுங்கு மொழி அத்துப்படி. ஆகவே சாமியார் பாடியது பாட்டிக்குப் புரிந்தது போலும்.

சாமியார் பாடிக்கொண்டே துந்தனாவைத் திரும்ப மீட்டிக்கொண்டு சென்றார். பாட்டி அவர் பாடிய பாட்டின் வரிகளை முணுமுணுத்தபடி உள்ளே சென்றாள்.

எனக்கு இப்போது பாண்டி ஆட்டத்தில் கவனம் இல்லை. “பாட்டி, அவர் என்ன பாடினார்? நீ ஏன் அதைத் திரும்பப் பாடறே? எனக்கு அர்த்தம் சொல்லிக்கொடேன்,” என்றபடி அவள்பின் ஓடினேன்.

தொடரும் முன்பு குட்டி முன்னுரை! 

துந்தனா என்பது ஒற்றைக் கம்பி கொண்டதொரு இசைக்கருவி. இது இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. ஒற்றைக்கம்பி கொண்ட தம்புரா போன்ற இதனை மீட்டிக்கொண்டு அக்காலத்தில் தெருவில் பாடியபடி பிச்சை எடுப்பவர்கள் இருந்தனர். பிச்சை இடுவது, தான தர்மம் செய்வது, அதுவும் சன்னியாசிகளுக்கு உணவளிப்பது என்பது குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களின் கடமையாகக் கருதப்பட்ட காலம் அது. என் பாட்டி, அப்பா காலம்!! 

இவர்களில் சிலர்தான் துந்தனாவை மீட்டியபடி பலப்பல பாடல்களையும் பாடிக்கொண்டு வந்தனர். பாட்டி விளக்கினபோதுதான் அவற்றின் பெருமை எனக்கு ஒருவாறு பிடிபட்டது. இவற்றை எழுதியவர்கள் யார் என்று அப்போது தெரியவில்லை. இப்போதும் தெரியவில்லை!! ஆனால் வாழ்க்கையை அலசி அலசிப்பார்த்து, ஆராய்ந்து, அணுவணுவாகக் கூறிட்டுப் பார்த்தவர்களால் மட்டுமே புரிந்துகொண்டு ரசிக்க முடிந்த இந்தப் பாடல்களை ஒரேயொரு சங்கீத வித்வான்தான் எனக்கு விவரம் நன்கு புரிந்து, நான் சங்கீதத்தில் திளைத்தபோது, பாடிப் பதிவு செய்து இசைக் குறுந்தகடாக வழங்கினார் – அவர்தான் தனது இசையால் பெரும்பாலான மக்களைக் கவர்ந்த திரு. பாலமுரளி கிருஷ்ணா.

பல தெலுங்குமொழி பேசும் நண்பர்களைக் கேட்டதில் இவை தத்துவப் பாடல்கள் என அறிந்து கொண்டேன். இயற்றியவர் யாரென அறிய இயலவில்லை! வாழ்வின் நிலையாமையைக் கூறும் பாடல்கள். இது என்ன புதிதா? வள்ளுவரிலிருந்து மற்ற எத்தனையோ புலவர்கள் இந்தக் கருத்தில் பாடவில்லையா என்ன? 

நான் திரும்பக் கேட்கிறேன்: பாடியிருந்தால் என்ன? ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமான கருத்துக்களைக் கேட்கும்போது புதுமையாகத்தான் இருக்கிறது. ஏதோ வகையில் உள்ளத்தைத் தொட்டுச் செல்கின்றன இவை. பாடப்பட்ட விதமா? சொல்லப்படும் கருத்துக்களா? 

இவற்றிற்குத் தத்துவம் எனப் பெயரிட்டுள்ளார்கள்! தத்துவம் என்றால் பொருள்களின் உண்மைக் குணம் என ஒரு பொருள். இந்தப்பாடல்களில் காணப்படும் செய்திகள் மிக எளியனவாக இருந்தாலும் அவை எதோ ஆழ்ந்த கருத்தை மானிடர்களுக்கு உணர்த்துகின்றன என்பதே உண்மை! மேலெழுந்தவாரியாகக் காணும் பொருட்கள் அல்ல.

இவை தமிழில் காணும் சித்தர் பாடல்களுக்கு இணையானவை எனலாமா?

பாடல்களையும் கருத்துக்களையும் பார்க்கலாமா?

  முதலில் ‘ஏமி சேதுரா லிங்கா’ எனும் பாடல்: 

‘லிங்கா, நான் என்ன செய்வேன்?

உனக்கு அபிஷேகம் செய்ய கங்கைநீரை எடுக்கச் சென்றால் அது மீன்களால் எச்சில் படுத்தப் பட்டதாக இருக்கிறதே! என்னசெய்வேன் சம்போ? என்ன செய்வேன் மகாதேவா?

உனக்கு அபிஷேகம் செய்யப் பசுவின் பாலை எடுக்கச் சென்றால், அது கன்றினால் எச்சில் படுத்தப் பட்டதாக இருக்கிறதே, நான் என்ன செய்வேன் லிங்கா? மாதேவ மூர்த்தி?

உனக்குப் பூஜை செய்ய தும்மி மலர்களைப் பறிக்கச் சென்றால் அவற்றில் தேனீக்களும் வண்டுகளும் ஏற்கெனவே தேனருந்தி எச்சில் படுத்தி உள்ளன. நான் என்ன செய்வேன் லிங்கா?’

இறைவன் மீது உண்டான அபரிமித பக்தியினால் அவனுக்குப் பூஜை செய்யப் பயன்படுத்துபவை தூய்மையாக இருக்க வேண்டும் என்பது கூற்று. ஆனால் கண்ணப்பன் செய்ததும் (வாயினில் நீரைக் கொணர்ந்து அபிடேகம் செய்தது முதலியன) அபரிமித பக்தியினால்தானே? ஆகவே சாமானிய மனிதன் ‘நான் கண்ணப்பன் செய்ததுபோலச் செய்வேன்’ என்று  குதர்க்கம் பேசலாமா? மற்றவர்களின் செய்கைகளை எடைபோட – அவை நம்மை நேரடியாகப் பாதிக்காதவரை – நாம் யார்? இதனையே சித்தர்களும் கூறியுள்ளனர். 

நாம் நமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்யும்போது நமது மனச்சாட்சி என ஒன்று கூறும் நியாயமான பாதையில் செல்லவேண்டும். அதுவே கர்மயோகம்.


அடுத்த பாடல் உலகியலை, வாழ்க்கையின் நிலையாமையை, மிக உருக்கமாக எடுத்துரைக்கிறது.  

நின்னு விடிசியுண்டலேனையா – உன்னை விட்டால் எனக்கு வேறுயார் புகலிடம் எனும் தத்துவம். இறைவனைப் பூரண சரணாகதி அடைந்துவிட்டால் பின்  ஒன்றினைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை எனும் பொருள்!

சிவ மஹாதேவ! சங்கரா! சரணம்.
நான் உன்னை விட்டு அகல மாட்டேன்.
நீ எனது தந்தை.
எனது குற்றங்களையெல்லாம் பொறுத்துக் கொள்பவன்.
நான் உனது சிறிய மகன்.
எல்லாவற்றிற்கும் காரணமானவனும், எல்லாமாகவே இருப்பவனும்
எல்லாவற்றின் ஆத்மாவாக இருப்பவனும் நீயே!
பத்மபாலா, சம்போ!
உனது நாமங்கள் பெரிதினும் பெரியவை.
ஆனால் நீ என்னைக் கருணையோடு கடைத்தேற்றாவிட்டால்
அவை அனைத்தும் ஒன்றுக்கும் உதவாது.
நான் உன்னை விட்டகல முடியாது.

அருமையான தத்துவம். 
'வேண்டத்தக்கது அறிவோய் நீ:
வேண்டமுழுதும் தருவோய் நீ' எனும் திருவாசக வரிகளை நினைவுகூரலாம்.

''ஊட்டுவிப் பானும் உறங்குவிப் பானுகிங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின்வழி 
ஆட்டுவிப் பானும் ஒருவன்உண் டேதில்லை அம்பலத்தே.

பட்டினத்தார் பாடல்

(நாம் உயிர் வாழ உணவு அளிப்பவனும், உறங்கச் செய்பவனும் இப்பூவியில் ஒருவர் மற்றவரை விட்டு விலக காரணமானவனும், பிரிந்தவர்கள் மீண்டும் இணைய காரணமானவனும், இருவினையாகிய நல்வினை, தீவினை என்ற பாசக்கயிற்றை வைத்து நம்மை ஆட்டி வைப்பவனும் ஒருவன் தில்லையம்பலத்திலே இருக்கிறான்.)

  பலப்பல செய்கைகளையும் நாம் நடத்த உறுதுணையாக இருப்பவன் இறைவன்; பகுத்தறிவுவாதிகளுக்கு, இது இயற்கையின், நியமம். இதனைத்தான் துந்தனா சாமியார்களும் மிக எளிய பாடல்களாகப் பாடினார்கள்.


கூடு, சின்ன போயரா என்பது அடுத்த பாடல்.

அழகான சின்னப்பையா,
காக்கையின் கூட்டை ஆலமரத்திலிருந்து பிடுங்கி எடுத்ததுபோல
அழகான சின்னப்பையா,
மலைகளை நான் என் கால்களால் அளக்க வேணுமென்றால்,
எங்கே பார்த்தாலும் வரிசையான ஆலமரங்களையே பார்க்கிறேன்
அழகான சின்னப்பையா,
காக்கையின் கூட்டை ஆலமரத்திலிருந்து பிடுங்கி எடுத்ததைப் போல
உனது காதுகளில் நீ ஐந்து கற்கள் கொண்ட தோட்டை அணிந்திருக்கிறாய்.
தன் அலகில் ஒரு ரத்தினத்தை வைத்திருக்கும் காக்கை பேசாது; பேச முடியாது.
அழகான சின்னப்பையா,
நான் ஒரு மூட்டை நெல்லுடன் குன்றின்மேல் ஒரு வண்டியை ஓட்டிச் செல்லுவேன்.
காக்கையின் கூட்டை ஆலமரத்திலிருந்து பிடுங்கி எடுத்ததுபோல
அழகான சின்னப்பையா.

    தத்துவங்களின் அர்த்தத்தை உண்மை, உட்பொருள், சாரம் என்றெல்லாம் கொள்ளலாம். நிஜம், இந்தப் பிரபஞ்சம், வாழ்க்கை இவை பற்றிய அடிப்படைக் கொள்கைகளை இவை குறிப்பிடுகின்றன.

வாழ்க்கையைப் புரிந்து கொள்ள தத்துவங்கள் உபயோகப்படுகின்றன. நமக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையேயான தொடர்பை உணரவும் இவை வழிவகுக்கும்.

அந்த வகையில் இந்தப் பாடல் உலக வாழ்வில் நமது மனம் பற்று வைத்திருப்பதனை எள்ளி நகையாடுவதாக உள்ளது எனலாம்.      காக்கைக்கு ரத்தினம் எதற்கு? அதன் அலகில் தேவையற்ற அந்த ரத்தினம் உள்ளவரை அதனால் வாயைத் திறக்க முடியாது. மனிதன் சேர்க்கும் பொருள்களும் அப்படியே. அவனை அவை ஓரிடத்தில் கட்டிப் போடுகின்றன.

ஒன்றுமில்லாமல் போனால் குன்றில் ஏறுவது சுலபம். மூட்டை நெல்லை வண்டியில் கொண்டு போனால் ஏறுவது அத்தனை சுலபமில்லையே!

இத்தகைய வாழ்வியல் தடங்கல்களைச் சுட்டி நகையாடும் பாடல் இது என எண்ணத் தோன்றுகிறது.


அடுத்தது ஆழ்ந்த தத்துவப்பாடல்:
வஸ்தா வட்டிதே போதா வட்டிதே
ஆசெ எந்துகந்தா……

நீ வெறுங்கையோடு [இவ்வுலகிற்கு] வந்தாய்;
வெறுங்கையோடு போகப் போகிறாய்.
இதற்கிடையே ஏன் பல ஆசைகளை வளர்த்துக் கொள்கிறாய்?
உனது செயல்கள் (நீ செய்யும் தான தர்மங்கள்) ஒன்றே
கெட்டுப்போகாத பதார்த்தங்கள்; 
உன்னுடன் கூட எப்போதும் வருபவை.
உயிருள்ளவரைதான் உறவுகளும் உண்டு
வாழ்வின் ஆதாரமான அமுதம் உன்னிடம் உண்டு
அது முடிவுற்று, நீ செல்லும்போது யாரும் உன்னுடன் வருவதில்லை.
ஐம்பூதங்களால் ஆன நாம் இந்தப் புதிரான உலகில்
பொம்மைகளாக உலவுகிறோம் என்பார்கள்.
ஆனால் நிச்சயமற்ற இவ்வுலகில் கடைசிவரை நாம்
நமது விருப்புவெறுப்புகளுடன் வளர்கிறோம்.
ஆகவே உனது தர்மங்களைச் செய். 
அவையே உன்னுடன் கூட வரும்.

எளிதான பொருள்: உனது தர்மங்களைச் செய்; அவை உன்னுடன் கூட வரும். நீ ஒன்றையும் உன்னுடன் கொண்டு வரவில்லை; இன்றையும் எடுத்துக்கொண்டும் போகப்போவதில்லை.
	இவை அனைவரும் அறிந்த வாழ்வியல் தத்துவங்கள்; ஆனால் மாயையால் அனைத்தும் மறைக்கப்பட்டு நாம் நமது போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம். வெகுசில ஞானிகளால்தான் இவற்றை நிராகரித்து இப்படிப்பட்ட 'தாமரை இலைத் தண்ணீர்' வாழ்க்கை வாழ முடியும்!

இன்னொரு தத்துவம்: ‘அந்தி அந்தக வன்டி……’ என்பது.

அனைத்தும் அறிந்த தலைவன் கூறுகிறான்:
தாமரை இலைபோல (எதிலும் ஒட்டாமல்) வாழ்
இந்தப் பருப்பொருள் உலகில் நீ மகிழ்ச்சியாக இருக்கலாம்.
சிலர் கூறுவர்: அன்னை, தந்தை, தலைவன் அனைத்தும் இறைவனே என்று;
இது ஆன்மீக சாதனையின் உச்சம்.
இவை அனைத்தையும், சடங்குகளையும் ஒதுக்கிவிடு;
உயர்பொருளோடு ஒன்றிவிட்டவர்களுடன் சேர்ந்துவிடு!
அதுவே எங்கும் எவற்றிலும் நிறைந்த பரம்பொருள் என உணர்ந்து கொள்.
உனது அகந்தையை ஒழித்துவிடு.
நிறைவான இவ்வுலகை விழிப்போடு உணர்ந்திரு; அவ்வகையில்
இவ்வுலகம் தளைப்படுத்தாது என அறிந்துகொள்.
நீ ‘தாமரை இலை’ போலப் பற்றற்று விடுதலையாகி வாழ்வாய்!

தாமரை இலை என்றது ‘எதிலும் ஒட்டாமல்’ எனக் கொள்ள வேண்டும்.

அகந்தையை ஒழித்தால் ‘நான்,’ எனும் எண்ணம் பறந்து விடும். இங்கு பகவான் ரமணர் தன் உடலை, தனக்குத் தொடர்பற்ற ‘இது’ எனக் குறிப்பிட்டு வந்ததனை நினைவு கூரலாம். உடல் தனக்குச் சொந்தமானதல்ல எனும் நினைவை எப்போதும் நினைவு வைத்திருக்க வேண்டும். 

தாகூர் கூட ‘இந்த உலகம் எனும் விழாவில் தான் பங்கேற்க வந்ததாகவும், தான் வந்த காரியம் முடிவுற்றதனால் விடைபெறுவதாகவும்’ பல கவிதைகளில் கூறியுள்ளார்.

புராணக் கதைகளில் கூறப்படும் ‘மதாலஸா’ எனும் அன்னையின் தன் குழந்தைக்கான தாலாட்டும்  (தன்னை அறியும் தாலாட்டு, சொல்வனம், செப் 8, 2024) இந்தக் கருத்தையே பிரதிபலிக்கின்றது.

அகந்தையை அழிக்க வேண்டும் என்பதில் கருத்து ஒற்றுமையை அனைத்துப் பெரிய மகான்களிடமும் காண்கிறோம். குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் சொல்கிறார்: அகந்தை என்பது கிழங்குபோல மானிடர்கள் உள்ளத்தில் வேரோடிக் கிடக்கிறதாம். இந்தனை அகழ்ந்து எடுத்துப் பிடுங்கிக் களைபவர்கள் உள்ளத்தில் மீனாட்சியம்மை விளக்காக ஒளி வீசுகிறாள் என்பார்.

‘அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோவிற்கு ஏற்றும் விளக்கே!”

எளியவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்றெல்லாம் மக்கள் கருதும் துந்தனா சாமியார்கள் லேசுப்பட்டவர்களல்ல. தத்துவங்களைப் பொதிந்த பாடல்களை வாரி வழங்கினார்கள். மிகச் சிலவே நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.

நான் சொல்ல நினைத்தது அதிகம். ஆயினும் சொல்லப் புகுந்தபின்  சுருக்கிச் சொன்னால் புரிந்துகொள்பவர்களிடையே எதற்குப் பெரிய வியாக்கியானம் என எண்ணியே விரிவினைத் தவிர்த்தேன். இவற்றை எண்ணிப் பார்த்து அசைபோட்டு மகிழலாம். 

எனக்குத் தெரிந்தவரை பொருள் கேட்டும், படித்துப் புரிந்து கொண்டும் விளக்கியுள்ளேன். தெலுங்குமொழி தெரிந்தவர்கள் இன்னும் விளக்கம் தரலாம். தயவுசெய்து பதிவிடுங்கள்.

சிந்தா நாஸ்தி கில – கட்டாயமாக எந்தக் கவலையும் இல்லை.

————————————————–

பி. கு. இந்த தத்துவப் பாடல்கள் அனைத்திற்கும் ஒரே ஆதாரம் திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குறுந்தகடுதான். இதன் யூடியூபுக்கான இணைப்பை இங்கு காணலாம்.

Exit mobile version