கணேசனுக்கு மூச்சிரைத்தது. அவனை இடித்துத் தள்ளிக் கொண்டு ஒரு உருவம் பின்னாலேயே ஓடி வந்தது, துரித கதியில் இயங்கி இடது புறம் உள்ளே பாய்ந்தது.
கணேசன் சிறு வயதுப் பழக்கத்தில் வலது புறம் பார்த்தான். ஒரு இடமும் காலியில்லை. அதற்குள் வண்டி ஒரு குலுக்கலில் கிளம்பியது. கணேசன் விழுந்திருப்பான். நல்ல வேளையாக இடது புறம் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டான்.
கிளம்புகிற மாதிரி பாவ்லா காட்டிய வண்டி நகராமல் நின்று விட்டது.
இப்போது கணேசன் மிதமிஞ்சிய அவநம்பிக்கையில் இடது புறம் பார்த்தான். அவன் அவநம்பிக்கை வீண் போகவில்லை. ஒரு இடமும் காலியில்லை. அவனை இடித்துத் தள்ளி முன்சென்ற மனிதர், இவனை விடவும் நன்றாக வயதானவர், அதற்குள் இடம் பிடித்து இருந்தார்.
அங்கு இருக்கை காலியாக இருந்ததை அவர் வீட்டில் இருந்து கிளம்பும் போதே யூகித்திருக்க வேண்டும்.
கணேசனே அகஸ்மாத்தாகத் தான் இந்த பெட்டியில் ஏறினான்.
அவன் வீட்டில் இருந்து சானடோரியம் ஸ்டேஷன் தான் சமீபம். அவன் தினமும் அங்கு தான் ஏறுவான். இருந்தாலும் தாம்பரத்தில் இருந்து கிளம்பினால் ஃபாஸ்ட் என்று நிற்காமல் துரிதகதியில் போகும் வண்டியில் உட்கார இடம் கிடைக்கும் என்ற அசட்டு நம்பிக்கையில் எதிர்ப்புறமாகத் தாம்பரம் போகும் வண்டியில் ஏறி இறங்கினால், ஏதோ தண்டவாளக் கோளாறு காரணமாக ஃபாஸ்ட் வண்டியைக் கேன்ஸல் செய்து விட்டார்கள்.
அடித்துப் பிடித்து அடுத்த ப்ளாட்ஃபாரத்திற்காக நெஞ்சடைக்கப் படியேறி வந்தால் ஃபாஸ்டில் அனுதினம் பயணிப்பவர்கள் இவனை விட வேகமாக இருக்கிறார்கள். வந்த காரியத்தில் மண் விழுந்து விட்டது.
இன்னும் முப்பத்து இரண்டு கிலோமீட்டர்கள் ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஜனத்திரளில் கால்கடுக்க நின்றவாறு பிரயாணிக்க வேண்டும்.
இதற்கு இவ்வளவு மெனக்கெடாமல் சானடோரியத்திலேயே ஏறியிருக்கலாம். இந்நேரம் கிண்டி போயிருக்கலாம்.
அதற்குள் வலது புறம் இருந்த இருக்கைகளில் மூன்றாவது சீட் நிரம்பி விட்டது.
அது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி. இரண்டிரண்டு இருக்கைகள் கொண்ட இடத்தில் இரண்டாவது இருக்கைக்காரன் பெரிய மனது பண்ணி இடுங்கிக் கொண்டு இன்னொரு ஆளுக்கு இடம் கொடுப்பது Third seat என்னும் மூன்றாவது இருக்கை.
ப்ராட் கேஜ் வண்டிகளில் இயல்பாகவே மூன்று இருக்கைகள் இருக்கும். ஆனால், இது கல்பகாலமாக மீட்டர் கேஜ்.
மீட்டர் கேஜ் பெட்டிகளில் மூன்றாவது சீட்டுகளில் அமர்ந்து பிரயாணம் பண்ண சர்க்கஸ் கம்பெனியில் குறைந்த பட்சம் அப்ரன்டீஸாகவாவது வேலை பார்த்திருக்க வேண்டும்.
கணேசன் மாதிரியான ஆசாமிகளுக்கு வேண்டாவெறுப்பாக இடம் கொடுப்பவனே இரண்டாவது இருக்கையில் அமர்பவனாக அமைவான்.
கணேசனுக்கு இடம் கொடுக்கும் போது மட்டும் அவனுக்குத் தன்னுடைய இருக்கை பிதுரார்ஜித சொத்தாகத் தெரியும். கணேசன் போன்றவர்கள் அவர்களுக்கு சொத்தை அபகரிக்க வந்த பங்காளியாகவே தென்படுவர்.
பொதுவாக கணேசன் யாரிடமும் இடம் கேட்க மாட்டான். கூச்சம் தான் காரணம். சமயங்களில் பிடிவாதமாகத் தருவித்துக் கொண்ட தைரியத்தில் கேட்டு வைப்பான்.
முகச்சுளிப்போடு கிடைக்கும் இடத்தில் உட்கார்வது போல ஊசலாடிக் கொண்டே வருவான். உட்காருவது போல் ஒருமணி நேரம் நடிக்க சிவாஜி கணேசனால் கூட முடியாது.
அவனது அதிர்ஷ்டம் அவனது சக பிரயாணிகள் வேண்டும் என்றே பீச் ஸ்டேஷனில் கூட அசுவாரஸ்யமாக இறங்குபவர்களாக இருப்பார்கள்.
வண்டி நகர நகரக் கூட்டம் எகிறி இரண்டு இருக்கைகளின் நடுவிலும் கூட நிற்க ஆரம்பித்து விடுவார்கள். அம்மாதிரி சமயங்களில் கணேசனுக்கு மூச்சு முட்டும்.
அவனைச் சுற்றி மக்கள் வெள்ளம் அணை போட்டு இருக்க பாதித் தொடையில் பட்டும் படாமல் சுவற்றில் கோடு கிழித்தாற் போல இருக்கையில் உரசிக் கொண்டு இருப்பவனை சேவை நாழியில் பிதுக்குவது போல் பிதுக்கி எடுப்பார்கள்.
நல்லதாகக் காலை உணவை அவர்கள் உட்கொண்டிருக்க வேண்டுமே என்று கணேசனுக்குக் கவலையாக இருக்கும்.
பொங்கலாக இருந்தால் பரவாயில்லை. சில பேர் பொங்கலோடு முந்தின நாள் மீந்திருந்த வடையையும் தின்று விட்டு கணேசனை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.
நடுவில் ஆள் நிற்பது ஆபத்தானது. யாராவது இடைப்பட்ட நேரத்தில் இறங்கினால் கணேசனால் நகர்ந்து நன்றாக உட்கார முடியாது.
நடுவில் நின்று கொண்டு இருப்பவர் சுவாதீனமாக கணேசனை இன்னமும் வெளியில் தள்ளி அமர்ந்து கொள்வார்.
பரம்பரையாக சிவப்பு நிற கர்சீப்பை காலரில் செருகி வைத்திருக்கும் அவர் உடலை வஸ்தாதைப் போல் பெருக்கி சோம்பல் முறிப்பார்.
அம்மாதிரி சமயங்களில் கணேசன் அநேகமாக வண்டிக்கு வெளியேகூட தள்ளப்படுவான். ஜனத்திரளால் தடுக்கப்பட்டு கதவில் மாட்டிய எலிபோல் உள்ளே எலும்புகள் நறநறவென்று அரைபடுவது உள் காதில் கேட்கும்.
இடது புறம் நிறைய மூன்றாவது இருக்கைக்கான சாத்தியக் கூறுகள் இருந்தன. ஆனால், கணேசன் தன்னுடைய இயலாமையையும் தொடர்ச்சியாக நீளும் அதிர்ஷ்டமின்யையும் நொந்து கொண்டு கதவுப் பக்கம் நகர்ந்தான்.
அங்கு ஏற்கனவே ஒரு பெரியவர் பையைத் தரையில் வைத்து விட்டுப் பின்னால் சாய்ந்து கொண்டு நின்று கொண்டு இருந்தார். கணேசன் அவரைத் தாண்டிக் கொண்டு கதவுப் பக்கம் போய் நின்று கொண்டான். ஆனால், ஒரு காலை வெளியில் தொங்கவிட்டு ஊசலாட முயற்சிக்கவில்லை. அதற்கெல்லாம் அவன் பழகிக் கொள்ளவில்லை. எதைக் கண்டாலும் பயப்படுவது ஒன்றே குலத்தொழிலாக அவன் கொண்டிருப்பது.
இப்போது நின்று கொண்டு இருக்கும் இடம் நல்ல இடம். கால் வலிக்கும். ஆனால் நல்ல காற்று வரும். அதை ரசித்துக் கொண்டே இருக்கும் நேரங்களில் கால்வலி தெரியாது.
தனது நீடித்த துரதிர்ஷ்டத்திலும் சமயங்களில் இந்த மாதிரி அதிர்ஷ்டம் அடிக்கிறது.
கணேசன் தன் தோள்பையை வாகாக இடுக்கிக் கொண்டு சௌகரியமாக நின்று கொண்டு நீண்ட பயணத்திற்குத் தன்னை தயார்ப் படுத்திக் கொண்டான். அதற்குள் மேலும் கொஞ்சம் பேர் ஏறினார்கள்.
மிகவும் அழுக்கான ஒருவன் கையில் ஒரு குரங்குக் குட்டியை இழுத்தவாறு கணேசன் நின்ற இடத்திற்கு எதிர்ப்புறம் வந்து தரையில் அமர்ந்து கொண்டான். குரங்கைப் பிணைத்திருந்த கயிற்றின் மறு முனையைத் தோதாகக் கட்டக் கைகளை உயர்த்தி இடம் தேடினான்.
“அதானே பாத்தேன்” என்று கணேசன் நினைத்துக் கொண்டான். அவன் எதிர்பார்த்த ஏதோவொரு சங்கடம் வந்து விட்டது.
பயணம் முடிவதற்குள் குரங்கு தன்னைக் கண்டிப்பாகக் கடித்து விடும் என்று தான் தோன்றியது. குரங்கு கடிக்கு வைத்தியம் பழகியவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தெரியாது. கோடியில் ஒருத்தருக்கு நேரும் விபத்திற்கெல்லாம் யாராவது செலவழித்துப் படிப்பார்களா என்ன?
வித்தைக்காரன் முதலில் மேல் கம்பியில் கட்டலாம் என்று நினைத்தவன் பின்னர் என்ன நினைத்தானோ நடுவில் இருந்த கம்பியில் கட்டுவதற்கு அதைத் துழாவினான்.
கணேசன் தன் காலை இழுத்துக் கொண்டான். அவனது ஜாதகக் கஷ்டத்தின் பிரகாரம் அவன் காலிலேயே குரங்கைக் கட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
அதற்குள் வண்டிக்குள் மூன்று பேர் ஏறினர்.
அதில் நடுநாயகமாக இருந்தவன் அடேங்கப்பாவாக இருந்தான். ஆறடியைத் தாண்டிய உயரம். தடித்த தொடைகள் தெரிய லுங்கியை மடித்துக் கட்டி இருந்தான். ஆஜானுபாவனாக பலத்த புஷ்டியுடன் இருந்தான்.
இந்த மாதிரி புஷ்டியாக இருக்க இவன் என்ன மாதிரியான உணவை அனுதினம் உட்கொள்ள வேண்டியிருக்கும்? அந்த அளவு உணவிற்காக செலவழிக்கும் ஒருவன் பின்னர் ஏன் இவ்வளவு அழுக்காக உடையணிந்து வரவேண்டும்? காலில் கூடக் கடுமையாக தேய்ந்த ரப்பர் செருப்பு தான் அணிந்து இருக்கிறான்?
தடித்த துணியிலான முழுக்கை சட்டையை முழங்கை வரை சுருட்டி விட்டிருந்தான். எதிர்பார்த்தது போல் சட்டையில் முதலிரண்டு பித்தான்கள் போடப்படவில்லை. அவன் தலை வாரப்படாமல் கலைந்து கிடந்தாலும் எண்ணெய் காணாமல் இல்லை. எண்ணெய் நிறையவே தடவி வெறும் கையால் சிலுப்பி விட்டுக் கொண்டு வந்திருக்கிறான்.
அவன் கூடவே வந்த இருவரும் நோஞ்சானாகவே இருந்தார்கள்.
வந்தவர்கள் நேராக கதவுப் பக்கம் வந்தனர்.
இவன் மட்டும் நேராகக் கணேசன் பக்கம் வந்தான். வரும் வழியில் பெரியவரை வலிக்கிற மாதிரி இடித்து அவர் “யப்பா” என்று முனகினார்.
கணேசனையும் இடித்துப் பின்னால் தள்ளிவிட்டு கதவுப் பக்கம் நுழைந்தான்.
அவன் இடித்த வேகத்தில் கணேசன் நிலை குலைந்து பெரியவர் மேல் விழ, பெரியவரும் சரிந்து ஆனால் கீழே விழாமல் கம்பியைப் பிடித்துக் கொண்டார்.
பெரியவர் சுதாரித்துக் கொண்டு கணேசனைப் பார்த்து “பகுத்தறிவே இல்லாம எருமை மாடு மாதிரி இடிக்கிறியே.. அறிவு இல்லை?” என்றார்.
கணேசனுக்கு இருந்த பதட்டத்தில் அவர் தன்னை எருமை மாடு என்று சொல்கிறார் என்று மட்டும் புரிந்தது.
அந்த துக்கத்தை விட, அவர் மேல் விழுந்ததில் லவலேசமும் தன் குற்றம் ஏதுமில்லை என்பதும் அந்தப் பெரியவருக்குத் தெரிந்திருக்கும் என்றாலும் அவர் தன்னைத் திட்டியது தான். அவரைக் காலால் தீண்டியது போல அவரைத் தொட்டு இரு கன்னங்களிலும் ஒரு கையால் போட்டுக்கொண்டு “சாரி” என்றான்.
அதற்குள் அந்தத் தடியன் இன்னும் கணேசனை வலுவாக நகர்த்தி, “நவுருன்னா நவுர மாட்டியோ” என்று இரைந்தான்.
கணேசன் நகர்வதற்கு இடமின்றி எந்தப் பக்கம் போகலாம் என்று விழித்தான்.
“இன்னாடா மொறைக்கிறே” என்றான் அவன். அவன் அப்பா கூட அவனை இத்தனை வருடங்களில் “டா” போட்டு அழைத்ததில்லை.
அதற்குள் அவன் நண்பன், மன்னிக்கவும், தோஸ்தாகப் பட்டவன், “இன்னாடா மாமு” என்று உதவிக்கு வந்தான்.
கணேசனை மிரட்டுவதற்கு இன்னொருவன் சகாயம் தேவையில்லை என்ற அடிப்படை அறிவு கூட அவனிடம் இல்லாமல் இருந்தது.
கணேசன் நடுங்கிக் கொண்டே சாய்மானத்தை விட்டு விட்டு நடுவில் வந்து நின்று கொண்டான். அவனுக்கு அழுகையாய் வந்தது. ஒரு கேவலமான சௌகரியம் கூட அவனுக்கு நிலைக்க மாட்டேன் என்கிறது.
இப்போது அந்தத் தடியன் அப்படியே மடங்கிக் கீழே கணேசன் நின்று கொண்டு இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டான். அப்போது அந்த மூன்றாவது ஆள், “மாமு.. நீ சென்டருக்குப் பூடு மாமு.. நான் இங்ஙனக் குந்திக்கிறேன்” என்று சொல்ல, அவன் இவனுக்கு சிம்மாசனத்தைத் தியாகம் செய்து விட்டு அதே கெத்தோடு நகர்ந்து நடுவில் இருந்த கம்பியில் சைக்கிள் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.
கணேசனை மிரட்ட அவனுக்கு உதவிக்கு வந்த இரண்டாவது நபன் அவனுக்கு இடது புறம் மூன்றாமவன் உட்கார்ந்த மாதிரியே வலது புறம் அவனைப் பார்த்த மாதிரி மடங்கி அமர முயன்றான்.
அப்போது தான் ஏற்கனவே கீழே குரங்கோடு அல்லாடிக் கொண்டு இருந்த மனிதனைப் பார்த்து, “யார்ரா நீ.. எயுந்திரிடா” என்று இரைந்தான்.
அவன் இவனை வெகு அலட்சியமாகப் புறக்கணித்து, குரங்கை எங்காவது கட்டுவதில் கண்ணாக இருக்க, தலைவனாகப் பட்ட தடியன், அவனைப் பின் தலையில் தட்டி, “எந்திரிடா.. வேற எங்கனாச்சும் போ.. பிச்சக்காரப் பயலுக்கு பீக் அவுர்ல என்னடா வேலை” என்றான்.
அவன் பயப்படாமல் “டிக்கிட் வாங்கிரிக்குது” என்றான் கொச்சையாக.
“டிக்கிட் வாங்கினா.. நீ ஓனரா?.. மவனே.. கீச்சுருவேன்.. எறங்குடா மரியாதையா.. “
அவன் மறுபடியும் “டிக்கிட்” என்று ஆரம்பிக்க, “மவனே.. சொல்னேக் கீறேன்.. டிக்கிட் உன்க்குத் தானே வாங்கிருக்க.. கொரங்குக்கு வாங்கலே இல்லே” என்று அவன் கையில் இருந்த கயிற்றை வலுவாகப் பிடுங்கி, குரங்கைப் பிடித்துத் தரையில் தள்ளி விட்டான்.
“ஐயோ ராமா.. கோட்டி கோட்டி” என்று அலறிக்கொண்டே அவனும் வெளியில் குதித்துத் தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளைத் தெலுங்கில் பிரயோகித்து, தப்பிவிடலாம் என்ற யோசனையில் அசமஞ்சமாக இருந்த குரங்கை லாவகமாகப் பிடித்து ஒரமாக நின்று கொண்டான்.
அவனது வசவுகளை ஓரளவு புரிந்து கொண்டு அவனை இவன் எட்டி உதைக்க முற்பட்டும், அவனது நீண்ட செழுமையான கால்களால் அவனைத் தீண்ட முடியவில்லை. ஆனால், அவனது கட்டைவிரல் அவனைத் தீண்டி இருக்கும்.
அதற்குள் வண்டி கிளம்பி விட்டது. இந்த நாடகத்தை சுவாரஸ்யமாக எல்லோரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். ஆனால் அவன் நிமிர்ந்து கணேசனைப் பிரத்யேகமாகப் பார்த்து, “இன்னாடா லுக்கு உடறே” என்றான்.
கணேசனுக்குக் குலை நடுங்கி விட்டது.
இவன் தன்னையும் ஓடுகிற ரயிலில் இருந்து தள்ளி விட்டு விடப் போகிறானே என்று பயம் வந்து விட்டது.
ஒரு சிங்கிள் ட்ரிப்புக்கு டிக்கெட் வாங்கினவனையே வெளியே தள்ளி விட்டவன், மூன்று மாசத்திற்கு சீசன் டிக்கெட் வாங்கினவன் என்று தெரிந்தால் என்ன செய்வானோ?
அதை விட, இந்த ரயிலை விட்டால், அடுத்த ரயில் எப்போது வருமோ?
இப்பவே பத்து நிமிடம் ஆபீஸூக்கு லேட்டாகத் தான் போக வேண்டியிருக்கும்.
பத்து நிமிடம் என்றால் பரவாயில்லை.
கெஞ்சினால் யாருமே ஒப்புக் கொள்ளும் அசட்டு முகக்களை கணேசனிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது.
ஆனால், என்னதான் ரெண்டுங்கெட்டானாக இருந்தாலும் அதற்கு மேல் அனுமதி தரமாட்டார்கள்.
புதிதாக வந்திருக்கும் நிர்வாகி கொஞ்சம் கண்டிப்பானவர்.
திருப்பி விட்டால் மறுபடியும் ஒரு மணி நேரம் பிரயாணித்து கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி நேரங்கள் கழித்து வீடு திரும்ப வேண்டியிருக்கும்.
அம்மாவுக்கு தூக்கி வாரிப் போடும். அவனை அவள் ஏதோ தினக்கூலி வாங்குபவன் என்று தான் நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.
ஒன்று, ஒரேயடியாக வேலை போய்விட்டது என்று தான் நினைத்துக் கொள்வாள். அல்லது ஒரு நாள் சம்பளம் போய்விட்டது என்று நினைத்துக் கொள்வாள்.
நெடுங்காலம் காத்திருந்து ஒரு அசட்டுப் பிள்ளையைப் பெற்று விட்டோமே என்று அவளுக்குத் தீராத ஆற்றாமை.
மார்க்கண்டேயன் வேண்டுமா மண்ணாங்கட்டி வேண்டுமா என்று மக்கட்பேற்றின் போது அவளை எந்தக் கடவுளும் கேட்கவில்லை.
அவளுக்குக் கணேசன் பிறப்பதற்கு அரை செகண்ட் முன்னால் பக்கத்து பெட்டில் மார்க்கண்டேயன் பிறந்திருக்க வேண்டும். அலாட்மென்ட் பிரகாரம் அவளுக்கு மண்ணாங்கட்டி பிறந்து விட்டது.
கணேசன் அவனை நிராதரவாகப் பார்த்து விட்டு மிதமிஞ்சிய துக்கத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்று இடது புறம் திரும்பி உள்ளே நுழைந்தான். அது இன்னும் அடைசலாக மாறவில்லை.
இன்னும் சில நொடிகளில் சானடோரியம் வந்து விடும். அங்கு சில பேர் ஏறுவார்கள். அதற்குள் எங்காவது இடம் பிடித்து வாகாக நின்று கொள்ள வேண்டும்.
கணேசன் உள்ளே இடம் தேடி முதல் “பே”யின் உள்ளே நுழைய எத்தனித்த போது அதன் காற்று வராத உட்புறம் பெண்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்து இயல்பாகத் தயங்கினான்.
அடைத்துக் காற்று வராத சன்னலோரம் ஒரு பெண்மணியும் அதன் இந்தப் பக்கம் ஒரு நடுத்தர வயதுடைய மனிதர் வலது கையை இருக்கையின் பின்புறம் அணைகட்டியதைப் போல் நீட்டியிருக்க, நடுவில் ஒரு கல்லூரிப் பருவத்தில் இருக்கக் கூடிய ஒரு பெண்ணும் அமர்ந்து இருந்தனர்.
கணேசனுக்கு அந்தப் பெண்ணை இன்னும் சற்று நன்றாகப் பார்த்தால் தேவலாம் போல இருந்தது. ஆனால், கூச்சத்தினால் இடம் தேடுவது போல அரைகுறையாகப் பார்த்துக் கொண்டான். கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது அந்தப் பெண்.
ஆனால், பெண்கள் இருக்கும் இடத்தில் நடுவில் நிற்பது அநாகரீகமான செயல் என்பதால் எதிர் சீட் பக்கம் ஒட்டியவாறு நின்று கொண்டான்.
அங்கு இருவர் தான் அமர்ந்து கொண்டு இருந்தனர்.
இரண்டாவது இருக்கையில் இருக்கும் நபர் இவனைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தார். கணேசனும் முடிந்தவரை பதிலுக்குப் புன்னகைத்தான்.
அவனையெல்லாம் பார்த்து யாரும் புன்னகைப்பதில்லை. ஓடும் நாயை கல்லெடுத்து அடிப்பதில் சிறுவர்களுக்குக் கிட்டும் இன்பம் அவன் மீது எரிந்து விழுவதில் எல்லோருக்கும் கிட்டுகிறது.
“உக்காந்துக்கறியா தம்பி” என்று நகர்ந்து இடம் கொடுத்தார்.
சன்னல் இருக்கையில் இடம் கிடைத்து அமர்ந்திருந்த நபர், ஏதோ மௌரிய சாம்ரஜ்யத்தை வெற்றி கொண்டவர் போன்ற முகபாவத்துடன் அமர்ந்திருந்தவர், மூன்றாவது நபரின் கடைச்செருகலை அங்கீகரிக்கவில்லை.
அவர் தமது உடலை இன்னமும் நன்றாகத் தளர்த்தி தனது இருக்கையில் மீதமிருந்த ஓரிரண்டு மில்லி மீட்டர்களையும் ஆக்ரமித்துக் கொண்டார்.
ஆனால், இரண்டாம் இருக்கைக்காரர் மனம் தளராமல் தன் இருக்கையிலேயே தன்னை ஒடுக்கிக் கொண்டு கணேசனுக்கு அவனுக்கான அவிர்ப்பாகத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்தார்.
கணேசன் ஓரத்தில் அமர்ந்து கொண்டு அவரை நன்றியுடன் பார்த்தான்.
அவனுக்குத் தெரியாத ஒரு சூட்சமம் உண்டு.
கணேசன் போன்ற இடுப்பே தென்படாத நோஞ்சான்களுக்கு இடது/வலது பாகத்தைப் பகிர்வதில் ஒரு சௌகரியம் இருக்கிறது.
இவன் அமராவிட்டால் வேறு எவனோ நல்ல தாட்டியாக உரிமையுடன் நடுவில் அமர்ந்து கொள்வான். நடுவில் இருப்பவரை நன்றாக நெருக்கி இடுங்கியவாறு அமரும்படி செய்து விடுவான்.
கணேசன் போன்றவர்கள் சாதுவாக இருப்பதோடு, காகிதம் போல் இருக்கையோடு ஒட்டிக்கொண்டு, மூன்றாவது நபர் அமர்ந்திருக்கும் சுவடே இல்லாமல், பயணம் சுகமாக அமையும்.
வண்டி சானடோரியத்தில் நுழைந்தது. கணேசன் அன்றாடம் ஏறுவது. அவன் வீடு சரியாக ஒரு மைல். தினமும் வேகு வேகு என்று சைக்கிளில் வந்து ஸ்டாண்டில் போட்டுவிட்டு வருவான்.
அங்கு பொதுவாக அவ்வளவாக மக்கள் ஏற மாட்டார்கள்.
மக்கள் திபுதிபுவென்று ஏறுவதெல்லாம் பழவந்தாங்கல் மற்றும் மவுண்ட் ஸ்டேஷன்களில் தான்.
பாகிஸ்தான் மீது படையெடுப்பது போலத்தான் ஜனத்திரள் அவ்விரு நிலையங்களிலும் ஏறும்.
அங்கு ஏறுபவர்கள் எல்லோருக்குமே ஒரேயொரு குறிக்கோள் தான். சில நொடிகளுக்குள் உள்ளே நுழைந்து விட வேண்டும். நிற்பதற்கு வாகாக ஓரங்குலமாவது கத்தியின்றி ரத்தமின்றி சம்பாதித்துக் கொண்டு விட வேண்டும்.
அமர்ந்து செல்லும் இருக்கைகளுக்காக எந்த நாளுமே ஆசைப்படாத தியாகிகள் பெருவாரியாக வசிக்கும் இடங்கள் அவை.
இந்த முறையும் சானடோரியத்தில் ஆட்கள் பெருவாரியாக ஏறவில்லை.
ஓரிரண்டு பேர்தான் ஏறினர்.
அதில் ஒருவர் சற்றே காலியாக இருந்த கதவுப் பக்கம் சென்றார்.
பொதுவாகவே நிறைமாத கர்ப்பிணி போல் வண்டி வரும் போது ஏதேனும் ஓரிடம் காலியாக இருக்குமானால் அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று அர்த்தம்.
இந்த இடம் நமது தாட்டியான துஷ்ட மனிதனால் ஆக்கிரமிக்கப் பட்டு, அவனது பராக்ரமத்தால் பாதிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் மெதுவாக அகன்று போனதால் நிரப்பப் படாமல் இருந்தது.
ஏறிய இருவரில் ஒருவர் உட்பக்கம் போக, இன்னொரு நபர், கெச்சலாக இருந்தவர், சர்ரென்று தீபாவளி கேபிள் கார் போல கதவுப் பக்கம் போனார்.
போனவர் நம் நண்பரைப் பார்த்து “இப்படி வழீலல்லாம் ஒக்காரப் படாது.. அதுவும் என்னமோ கொழந்தேள் சைக்கிள் கால் போட்டுண்டு ஊஞ்சலாடற மாதிரி ஊஞ்சலாடிண்டிருக்கே.. அடிச்சுப் பிடிச்சு ஆஃபீஸ் போறவாளுக்கு என்ன மரியாதை? மரியாதையா எழுந்து நின்னுக்கோ.. மத்தவாளுக்கும் காத்து வேணும்”
அவருக்குக் காத்து கிடைத்ததோ இல்லையோ காது நிறைய வேறெதோ கிடைத்தது.
அவ்வளவு துரிதமாக தேம்பாவணி உள்ளிட்ட காப்பியங்களில் இருந்து தேம்பத் தேம்ப இலக்கியம் பரிமாறப்படும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
கொஞ்சம் இல்லை, நிறையவே பயந்து போனார் அவர்.
கொஞ்சம் தழைந்த குரலில் அவர் , “உங்க நல்லதுக்குத் தான் சார் சொன்னேன்.. பார்க் ஸ்டேஷன்ல ப்ளாட்ஃபார்ம் இந்த சைடு தானே வரும்.. இடிச்சுடப் போறுதேன்னு சொன்னேன்.. மனுஷாளுக்கு மனுஷா ஒரு கரிசனம்”
அவன் பதிலை மறுபடியும் யாருடைய தாய்மொழியிலோ சொன்னான். அடுத்த அரை நொடியில், அவனோடு சுகதுக்கங்களைப் பரிமாறிக் கொண்டு இருந்த அந்த ஆத்மா, ஏதோவொரு திக்கில் கூட்டத்தில் சரணடைந்தது.
வண்டி நிதானமான வேகத்தில் சானடோரியத்தை விட்டுக் கிளம்பியது.
ட்ரைவருக்கு வீட்டில் ஏதோ பிரச்சினை என்றான் ஒருவன்.
அவரு ட்ரைவர் இல்லடா என்றான் இன்னொருவன்.
பின்ன, பைலட்டா என்றான் இன்னொருவன்.
“தெரியலைடா.. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பேரு இருக்குல்ல.. அது மாதிரி இவருக்கும் என்னமோ பேரு இருக்குது”
“அது என்னவா இருந்தா நமக்கென்ன? கிளம்பின நேரமே சரியில்லை மச்சி.. லேட்டுக்கு மேல லேட்டா மீட்டர் ஏறிக்கினே இருக்கு”
நல்ல வேளை, இவர்கள் பாடக் கிளம்பவில்லை.
கணேசன் அன்றாடம் பயணிக்கும் பெட்டியில் ஒரு பாட்டு கோஷ்டி இஷ்டத்துக்கு பாடிக்கொண்டே வருவார்கள். ஒரே கூக்குரலாக இருக்கும்.
அதில் ஒரு இஸ்லாமிய இளைஞர் சப்னோம் கீ பாட்டை அற்புதமாகப் பாடிக் கேட்டிருக்கிறான்.
அவ்வளவு கிட்டத்தில் கேட்ட போது தான் அது சப்புமெக்கு ராணிக்கபு வாயக்கீது இல்லை என்பதை கணேசன் புரிந்து கொண்டான்.
முதலில் ட்ரைவரைக் கிண்டல் செய்தவன், “டேய்.. நான் சொன்னதை ட்ரைவர் கேட்டுட்டார் போலருக்குடா.. பிக்கப் பண்ணிட்டாரு பாரு”
வண்டி நிஜமாகவே வேகம் எடுத்தது.
ஆனால், என்ன காரணமோ குரோம்பேட்டை நிறுத்தம் தாண்டி அரைமைலில் மறுபடி நங்கூரம் பாய்ச்சி நின்று விட்டது.
“வாய வெச்சான்டா இவன்.. நின்னிடிச்சி மறுபடியும்”
கணேசனுக்கு நிலை கொள்ளவில்லை.
அலுவலகத்தில் என்ன செய்வார்களோ? அவன் வழக்கமாக செல்லும் வண்டி இல்லை இது. அது தான் சரியான நேரத்தில் செல்வது. ஆனால், ஃபாஸ்டில் பயணம் செய்து அலுவலகம் வருபவர்கள் இதில் தான் வந்தாக வேண்டும். தன்னைப் போல் வேறு சிலரும் தாமதமாக வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், எவ்வளவு பேர் என்று தான் தெரியவில்லை.
கணேசன் இப்போது எதிர் சாரியைப் பார்த்தான்.
அவனுக்கு நேரெதிரே இருந்த தகப்பனார் கண்களை மூடிக் கொண்டு தனக்குத் தானே சன்னமாக ஏதோ சினிமாப் பாட்டை சாதகம் செய்து கொண்டிருந்தார்.
சன்னலோர அம்மாக்காரி எதையோ டப்பாவில் இருந்து எடுத்து மென்று கொண்டு இருந்தாள். நடுநடுவே பெண்ணிடம் நீட்ட அது சங்கோஜத்துடன் மறுத்து விட்டது.
இது தான் நல்ல சமயம் என்று அந்தப் பெண்ணை நன்றாக நோட்டம் விட்டான்.
சற்றே மாநிறம். வெளிர் பிங்க் நிறத்தில் சுடிதார் அணிந்து இருந்தது. ஒல்லியாகத்தான் இருந்தது. திருமணம் ஆன கொஞ்சம் வருடங்களில் அவள் அம்மா மாதிரி தொளதொளவென்று ஆகும் சாத்தியக் கூறுகள் அதிகம்.
ஆனால், கணேசனுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்து விட்டது.
அந்தச் சிறு அவகாசத்திற்குள் அவன் அந்தப் பெண்ணைக் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தான். அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களா, தரையில் கொள்ளையடிப்பவர்களா என்பதில் அவனுக்கு ஒரு குழப்பம் இருந்தது. கொள்ளைக்காரர்களை விரட்டி விட்டு, அவளது சிவிகையை ஒற்றைத் தோளில் சுமந்து அரசரிடம் ஒப்படைத்து இருந்தான்.
எதிர்த்த மூன்றாவது சீட்டில் தொப்பையை விகாரமாகத் தள்ளிக் கொண்டு இருந்த அவளது தகப்பனை அரசனாக்க மனம் ஒப்பவில்லை. தனக்கு இருக்கை கொடுத்து அங்கீகரித்த மனிதரே அரசராகும் தகுதியுள்ளவர். அவரிடம் கேட்டுப் பார்க்கலாம், தன் காதலிக்குத் தந்தையாக முடியுமா என்று. நல்ல மனிதர். ஒப்புக் கொள்வார் என்று தான் தோன்றுகிறது. ஆனால், அந்தத் தொளதொள அம்மாக்காரியை மகாராணியாக ஏற்றுக் கொள்வதில் அவருக்கு ஆட்சேபணைகள் இருக்கலாம். அப்பாவை மாற்றும் பட்சத்தில் அம்மாவையும் சேர்த்து மாற்றினால் தான் என்ன?
அவன் நீடித்த இந்த சிந்தனையில் இருந்த போது அந்தப் பெண்ணை விட்டுக் கண்ணை எடுக்கவில்லை.
சுய உணர்வு வந்து பார்த்தால் அந்தப் பெண் ஒரு சிறு முறுவலிப்பில் அவனைப் பார்ப்பது தெரிந்தது.
அந்தப் பெண்ணிற்கும் கணேசன் மூலமாக ஒரு வந்தியத்தேவன் கிடைத்திருக்கலாம்.
கணேசனுக்கு ஓஹாய் என்று கத்திக் கொண்டு வெளியில் எட்டிப் பார்த்துக் கையை நீட்டி ஏதாவது பாட்டுப் பாட வேண்டும் போல் இருந்தது.
ஆனால், அங்கு தான் அந்தத் தடியன் கடோத்கஜன் மாதிரி ஊஞ்சலாடிக் கொண்டு இருக்கிறான்.
அவன் நினைப்பு வந்ததும் கணேசனுக்கு முழு உணர்வும் வந்து விட்டது.
அவன் தனது பார்வையை சற்றே அகற்ற, அம்மாக்காரி இவனையே எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டு இருந்தாள். கணேசன் திடுக்கிட்டுத் தனது பார்வையைப் பக்கத்து சீட் நல்ல மனிதரிடம் திருப்பினான்.
அவர் வயதிற்கு அவர் அம்மாக்காரியை நோட்டம் விடுவார் என்று நினைத்து கணேசன் ஏமாந்து போனான்.
அவர் படு சீரியஸாக எந்த உலக நடப்பிலும் கவனமின்றி, பரிசுத்த வேதாகமம் படித்துக் கொண்டிருந்தார்.
கணேசன் பழைய ஆர்வக் கோளாறினாலும் அம்மாக்காரியின் பார்வையை உதாசீனப் படுத்துவதற்காகவும், ஓரக்கண்ணால் அவர் படிப்பதை எட்டியும் எட்டாமலும் பார்த்தான்.
அவர் படித்த பக்கத்தில் சங்கீதம் என்று இருந்தது.
அசுவாரஸ்யமாக மனதில் பதியாமல் சும்மாவேனும் பார்த்த போது “ஒலிமுகவாசலில் நின்றான்” என்று இருந்தது.
ஒலிமுகவாசல், ஒலிமுகவாசல் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டான்.
அதற்குள் அவர் கவனம் சிதறி, கணேசன் தன் புத்தகத்தை மேய்வதைப் பார்த்து விட்டு “படிச்சுட்டுக் கொடுங்களேன் தம்பி” என்று நீட்டினார்.
கணேசன் பயந்து போய் “அய்யய்யோ வேண்டாம் சார்” என்று மறுத்தான்.
“நீங்க பயப்படற மாதிரியான புஸ்தகம் இல்லை தம்பி இது.. இது எங்களோட வேதம்.. பழைய ஏற்பாடு படிச்சிக்கிட்டு வரேன்.. சங்கீதம் வரை வந்திருக்கேன்.. ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் சங்கீதம் படிங்க.. நீங்க என்ன மாதிரியான நிம்மதியை எதிர்பார்க்கறீங்களோ அது கிடைக்கும்..
பாவத்திற்காளான தாவீது தன் வீடிழந்து நாடிழந்து எதிரிகளால் அன்னாடம் துரத்தப் பட்டு அடிக்கப்பட்டு, தன் மனந்திரும்பி அறிக்கையிட்டு ஆண்டவர் கிட்டே கதறி அழுவுறான். அது தான் சங்கீதம்.
ஆண்டவர் அத்தனை பேரை விட்டு விட்டு பாவஞ்செய்த தாவீதை மன்னித்துத் தனது வலது பாரிசத்துல வச்சிக்கறார்.. அவ்வளவு வல்லமையுள்ளது இந்த சங்கீதம்”
கணேசன் சன்னல் ஓரம் இருந்த மனிதரைப் பார்த்தான்.
அவர் நெற்றி நிறைய விபூதி பட்டையாக அணிந்திருந்தார். குங்குமத்தைக் குழைத்து அதையும் ஒரு மெல்லிய கோடாக வரைந்திருந்தார். (இந்த மாதிரி ஆசாமிகளுக்கு இடது பாரிசத்தில் இடம் கிடைக்குமோ?) நல்ல வெள்ளைக் கதர் சட்டையும் வேட்டியும் அணிந்து இருந்தார். இவர்களது சம்பாஷணையில் இஷ்டப் படாதவர் போல கண்களைப் பாசாங்குடன் மூடித் தூங்குவது போல் காட்சி கொடுத்தார். பொதுவாக இப்படித் தூங்காமல் தூங்குவது திருநங்கைகள் கைகளைத் தட்டிக் கொண்டு யாசகம் கேட்கும் போது தான்.
கணேசன் தன் பார்வையை இவர் மீதே திருப்பினான். ஒரு மெல்லிய பெருமூச்சு அவன் உள்ளே ஓடியது. அவனது இதயத் துடிப்பு அவனுக்கே கேட்டது. அவரை நிமிர்ந்து பரிதாபமாகப் பார்த்தான்.
“என்ன தம்பி.. நான் உங்களை மதம் மாத்தப் பாக்குறதா பயப்படுறீங்களா?”
“சேச்சே.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்” என்றான். அவனால் எந்த மதத்திற்கும் லாபமில்லை என்பதை அவர் வெகு சீக்கிரம் அறிந்து கொண்டு விடுவார்.
“சும்மா எட்டிப் பார்த்தேன் சார்.. இதுவொரு அசிங்கமான பழக்கம் என் கிட்ட.. மண்டைல ஒண்ணும் ஏறாது.. சும்மா எட்டிப் பாப்பேன் அவ்வளவு தான்.. ஆனா..”
“சொல்லுங்க”
“இன்னிக்கி ஒரு வித்தியாசமான வார்த்தையைப் படிச்சேன்..ஒலிமுகவாசல்னு.. சில வார்த்தைகள் சில பாட்டுக்கள்.. சில முகங்கள்.. பார்த்த மாத்திரத்தில் பச்சுன்னு புடிச்சிக்கும்ல.. அந்த மாதிரி புடிச்சிக்கிச்சு” என்று ஓரக்கண்ணால் அந்த யுவதியைப் பார்த்தான்.
அவள் முகத்தில் ஒரு இளநகை அரும்பியது.
ஆஹா.. இது காதல்தான் என்று கணேசனின் மனம் துள்ளிக் குதித்தது.
“ஒலிமுக வாசல் அப்படீங்கறது என்ட்ரன்ஸ் மாதிரி “
“வாசல்னாலே அதான சார் “
“இல்லை.. இது சாதாரண வாசல் இல்லை..
“வேறெந்த வாசல்.. எங்கள் மதத்தில் கூட இந்த மாதிரி ஒரு வாசல் உண்டு.. வருடத்திற்கு ஒரு நாள் பெருமாள் கோயில்களில் திறக்கும் அந்த வாசலுக்கு சொர்க்க வாசல் என்று பெயர்.”
“கேள்விப் பட்டிருக்கேன்”
“மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி. அன்னிக்கு தான் இந்த சொர்க்க வாசல் திறப்பாங்க.. அதைத் தாண்டி நுழையறவங்களுக்கு உடம்போட வைகுண்டம் போயிட்டு வந்த பலன் கிடைக்குது. அன்னிக்கு பெருமாளை தரிசிக்க வருபவர்களுக்கு ஏகப்பட்ட புண்ணியங்கள் கிடைப்பதாக ஐதீகம் “
அதற்குள் வண்டி மறுபடியும் கிளம்பி வேகமெடுத்தது.
“இது அந்த மாதிரி இல்லை தம்பி.. லிட்ரலா ஒலிமுகவாசல் அப்படீன்னா வெளி என்ட்ரன்ஸ் தான்.. ஆனால், அதில் வேறொரு அர்த்தம் பொதிந்து இருக்கிறது..”
கணேசன் வெளியே இலக்கில்லாமல் பார்த்தான். சன்னல் மனிதர் தலையைத் தூக்கவில்லை. வண்டி பல்லாவரத்தை விடுவேனா என்று போக்கு காட்டிக் கொண்டு இருக்கிறது.
எதிர் முனையில் ‘பா..’வென்று அவசியம் இல்லாமல் ஒரு இன்ஜின் மட்டும் சபர்பன் தடத்தில் விரைந்தோடியது. கதவில் ஊசலாடுகிறவர்கள் கர்சீப்பைக் கடித்துக் கொண்டு ப்ளாட்ஃபாரத்தில் உலாத்திக் கொண்டு இருந்தனர்.
ஸ்டேஷனுக்கு இந்தப் பக்கம், ஒரு கூடை நிறைய கொய்யாப்பழங்கள் தூக்க மாட்டாமல் ஒரு கிழவி வண்டியைப் பிடித்துவிடும் நிராசையோடு வந்து கொண்டு இருந்தாள். ஒரு மெலிந்த நாய் ஒரு காரணமும் இல்லாமல் வானத்தைப் பார்த்து ஒரு சிறு கணம் ஊளையிட்டு அடங்கியது. அதை பழகின பயத்துடன் ஒரு சிறுவன் பார்த்து ஒதுங்கி நிற்க, அவனுக்கு சற்றே பெரிய சிறுமி, அவன் தமக்கையாக இருக்க வேண்டும், அந்த மெலிந்த நாயை கல்லெடுத்து அடித்தாள். நாய் எந்த எதிர்ப்பும் காட்டாமல் பஞ்சர் ஆன பட்சண வண்டி மாதிரி அசங்கி அசங்கி யார் வீட்டுக்கோ ஓடியது.
வண்டி மெதுவாக நகரத் துவங்கியது.
“என்ன தம்பி, தூங்கிட்டீங்களா?”
“இல்லை சார்… யோசிச்சிக்கிட்டு இருக்கேன்”.
என்ன யோசித்தாய் என்று அவர் கேட்டால் மானக்கேடாகி விடும்.
அவர் தொடர்ந்தார் ..
கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின் படி, தன் மகனை ஆபிரகாமின் சந்ததியில் தான் அனுப்பினார். அவர் மனிதனின் பாவங்களைக் களைய, தன் இரத்தத்தை சிந்தினார்.
அவருடைய வருகையை அநேகமாக எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அவர் வரும் போது எருசலேமில் இருக்கிற ஒலிமுகவாயில் வழியாகத்தான் பிரவேசிப்பார் என்று ஒரு சாரார் நம்புகின்றனர்.பொதுவாக தேவ மகிமை இறங்கும் இடம் தான் ஒலிமுகவாசல்”
“அப்படியானால் ஏசுநாதர் பிரவேசிக்கும் வழிதான் அதுவா?”
“அப்படியில்லை. அப்படி இல்லாமலும் இல்லை.”
கணேசன் சிரித்தான்.
“என்ன சார்.. விசு மாதிரி குழப்பறீங்க”
“தம்பி.. நாம மறுபடியும் ஆரம்பத்திலேருந்து வருவோம்”
ஐயையோ என்று மனதில் பயந்தான் கணேசன். வண்டி திருசூலம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் புறப்பட்டது.
இந்த மனிதர் எதுவரை போகிறார் என்று கேட்கலாமா என்று தோன்றியது.
அதற்குள் அவர், “சாதாரண பாஷைல ஒலிமுகவாசல்னா மெயின் என்ட்ரன்ஸ் தான்.. உள்ளே நுழையும் வாசல்”
“அப்போ வெளில போறதுக்கு வேற வாசல் உண்டா?”
அவர் கணேசனை ஆழ்ந்து நோக்கினார். இந்தப் பையன் தம்மைக் கிண்டல் செய்கிறானோ என்று அவருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால், கணேசனின் முகத்தில் அந்தக் களை இல்லை.
அவனால் ஒருத்தரைக் கிண்டல் செய்ய முடியும் என்று யாருமே, ஏன் கணேசனே கூட நினைத்துப் பார்க்க முடியாத முகவெட்டு. இவன் எப்படி இந்த மாதிரிக் கேள்விகள் கேட்கிறான்? ஏதோ சாத்தானின் வேலை தான் இது.
கணேசனுக்கும் தான் எப்படி இவ்வளவு புத்திசாலித்தனமாக கேள்விகள் கேட்கிறோம் என்று ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பெண்ணை இந்த முறை நேராகவே பார்த்தான். அதுவும் இவர்கள் உரையாடலை கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த திடீர்க் காதலால் தான் தனக்கு ஞானம் கிடைத்து புத்திசாலியாக மாற முடிந்திருக்கிறது என்று அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
அதற்குள் மீனம்பாக்கம் வந்து விட்டது. அவர் பைபிளை மடியில் வைத்து விட்டு ஏதோவொரு பக்கம் பார்த்து கைகளைக் கும்பிட்டுக் கொண்டார். கணேசனும் அந்தத் திக்கைப் பார்த்தான். ஒன்றும் புலப்படவில்லை.
இப்போது அவர் கணேசனின் மணிக்கட்டை இறுகப் பிடித்துக் கொண்டு, “தம்பி.. இது பெரிய சப்ஜெக்ட்.. அவ்வளவு சுலபமா சொல்ல முடியாது.. இருந்தாலும் நீ கேட்டியேன்னு சொல்றேன்.. வாசல்னு சொல்றது உள்ளே நுழையறதைத்தான்.. வெளியே போறது பத்தி எங்கியும் சொல்லலை.. எப்படி வேணும்னாலும் போகலாமா இருக்கும்.. ஆனா, நுழையும் போது அது ஒரு நிகழ்வு.. வெளியே போறது எக்ஸிட் அல்லது எஸ்கேப்.. உலகத்தின் உள்ளே நுழைய நிறைய பாக்கியம் செய்ய வேண்டியிருக்கிறது.. அவ்வளவு சுலபத்தில் யாரும் உள் நுழைய முடிவதில்லை.. உங்கள் கடவுளுக்குக் கூட வாசல் தான் இருக்கிறது.. அவர் எந்நாளும் அந்த வாசல் வழியாக வெளியேறுவதில்லை..
ஒலிமுகவாசல் என்பது விசேஷமான நுழைவாயில்.. அதைப்பற்றி சங்கீதத்தில் வருகிறது. சாமுவேல் சொல்கிறார். இன்னும் நிறையப் பேர், உங்கள் பாஷையில் மகான்கள் ஜோஷ்வா, யோபு என்று நிறையப் பேர் சொல்கிறார்கள். அது கடவுளின் அனுக்கிரகத்தோடு சம்பந்தப்பட்டது”
கணேசன் சன்னல் வழியே பார்த்துக் கொண்டே கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்தான். அவரது குரலின் நெகிழ்ச்சி அவனது இதயத்தை இளகச் செய்தது. அவரது கருத்தை ஒப்புக் கொண்டதற்கு அடையாளமாய் வெளியேயிருந்து பார்வையை விலக்காமல் ஏதோ சொல்ல முயன்ற போதுதான் “தடால்” என்று ஒரு சத்தமும் “ஹா…….” என்று ஒரு அலறலும் கேட்டது.
சன்னலுக்கு வெளியே தடித்த மூங்கில் போல ஏதோ பறந்து விழுந்தது. சன்னல் ஓர மனிதரின் தலையும் வெள்ளை உடுப்பும் க்ஷண நேரத்தில் சிவப்பாய் மாறின.
அனிச்சையாக அத்தனை பேரும் எழுந்து நின்றனர். வண்டி நிற்காமல் விரைய யாரோ யாரையோ உந்தி யாரோ சங்கிலியைப் பிடித்து இழுத்தனர்.
மக்கள் ஏறாத வாசல் பக்கம் யாரோவொரு கிழவி ” ஐயையோ கடவுளே” என்று அலறினாள். மச்சான் மச்சான்.. மாமா.. மாமா என்ற குரல்கள் ஊடே வயிற்றையேக் கிழித்துக் குடலை வெளியே எடுத்து எறிந்து விடும் அளவிற்கு அந்த அலறல் நீடித்தது.
இந்த சந்தர்ப்பத்தில் சன்னல் மனிதர் எழுந்து தன் உடலெல்லாம் நிரம்பி இருந்த ரத்தத்தைப் பார்த்து மயக்கம் போட்டு விழுந்தார்.
எதிர் சாரியில் இருந்த பெண்ணின் அப்பா துரிதமாகப் பின்னால் வரும் அலறலின் காரணத்தைக் கண்டு பிடிக்கத் தாவியவர், அதே வேகத்தில் வேட்டியைப் பிடித்துக் கொண்டு திரும்பவும் தாண்டி வந்து “கால் போச்சு கால் போச்சு” என்றார்.
அதற்குள் கதவின் அருகில் உள்ளே அமர்ந்து இருந்த அவனது சகாக்கள் அந்த கடோத்கஜனை அலற அலற உள்ளே இழுத்துப் போட்டிருந்தனர். அவன் வலியாலும் அதிர்ச்சியாலும் துடித்துக் கொண்டு இருந்தான். அவனது சகாக்கள் இருவரும் ஐயோ..ஐயோ.. என்று தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழுதனர்.
ரத்தம் மேலும் பெருக்கெடுத்து வண்டியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் இவர்கள் இருந்த இடத்திற்குள் பரவியது.
அதைப் பார்த்து எல்லோரும் இருக்கையின் மீது ஏறிக் கொள்ள, அதே முயற்சியில் இருந்த எதிர் சீட்டுப் பெண் பொங்கி வந்த தனது குமட்டலை அடக்க முடியாமல் கணேசன் மேல் வாந்தி எடுத்து விட்டது.
கணேசனுக்கும் குமட்டல் வந்தது. அந்தப் பெண் ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்றைக்கு என்று பார்த்துத் தண்ணீர் பாட்டில் எடுத்து வரவில்லை. எடுத்து வந்த வேறு யாரும் அதைக் கொடுக்க முன் வரவும் இல்லை.
ஆனால் பாவம் அந்தப் பெண்ணின் அம்மாக்காரி கணேசனிடம், “தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி.. என் வயசுக்கு நானே இத்தனை ரத்தம் பார்த்தது இல்லை.. என் பொண்ணு சின்னப் பொண்ணு.. பயத்துல குமட்டிடிச்சு”
அவள் அப்பாவும் தன் பங்குக்கு, “நாங்க அசைவம் தான்.. ரத்தம் புதுசு இல்லை.. ஆனாலும் ” என்று இழுத்தார்.
அசைவம் என்ற வார்த்தையைக் கேட்டதும் கணேசன் தன் உடுப்பைக் குனிந்து பார்த்துக் கொண்டான். “அடக் கடவுளே”.
இதற்குள் வண்டி ஒரு குலுக்கலில் நின்றது. மிகச் சரியாக இந்த கம்பார்ட்மென்ட் நங்கநல்லூர் சப்வே மேல் வரும்படி வண்டியை நிறுத்தி இருந்தார் டிரைவர்.
வெளியில் குதிக்கவும் வழியில்லை.
அவனது குருதி நிற்காமல் கம்பார்ட்மென்ட் வெளிவாசல் வழியாக சப்வேயில் வழிந்தது. அதன் வழியாக விரைந்திருக்கும் ஏதோவொரு இரு சக்கர வாகனத்தின் மீது கண்டிப்பாக விழுந்திருக்கும்.
ரத்தத்தைப் பார்த்து மேலும் சிலர் மயக்கமுற்றனர். பெட்டியில் இருந்த ஓரிரண்டு பெண்மணிகள் பெருங்குரலில் அழவாரம்பித்தனர்.
அக்கம் பக்கம் பெட்டிகளில் இருந்து பயணிகள் வந்து அலைமோதி கால்கள் வெட்டுப்பட்ட மனிதனை ஒரு தடவையாவது பார்க்கத் துடித்தனர். ஆனால், சப்வே தடுத்ததால் நுழைய முடியவில்லை.
அவன் குரல் கம்மிப்போய் அரை மயக்கத்தில் முனகலாகத் தேய்ந்து போயிருந்தான்.
“இவ்வளவு ரத்தம் போயிட்டே.. இவன் பொழைப்பான்ற” என்று எவனோ கூட்டத்தில் முனகினான்.
கார்டு பெட்டி பெட்டியாய்த் துழாவி, விஷயம் அறிந்து வண்டியை நகர்த்துவதற்குள் பத்து நிமிடங்கள் வீணாகின.
அந்த மனிதனின் சகா அழுகையின் ஊடே விளக்கினான்.
மீனம்பாக்கம் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் ஒரு லாரி, தண்டவாளம் அருகே காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்காக செங்கல் கொண்டு வந்திருக்கிறான். ரயில் வருவதைக் கவனிக்காமல் ரிவர்ஸில் வந்தவன், சரியாக இவர்கள் பெட்டியிடம் வரும்போது ரயிலில் மோதி விட்டான்.
அதில் இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டு வந்தவனின் இரண்டு கால்களும் முட்டிக்கு சற்றே மேலாகப் பிய்த்துக் கொண்டு போய்விட்டது.
வண்டியைப் பழவந்தாங்கல் ஸ்டேஷனில் நிறுத்தி டிரைவரும் கார்டும் ஸ்டேஷனில் இருந்த ஒரு காங்கிமேன் உதவியுடன் அந்த மனிதனை ஒரு ஸ்ட்ரெச்சரில் கிடத்தி வாசல் வழியே வெளியே எடுத்துச் சென்றனர்.
அந்த மனிதனிடம் எந்த அசைவும் தென்படவில்லை. உயிர் நீடிக்கிறதா என்று தெரியவில்லை.
இல்லாவிட்டாலும் அவனை அப்புறப்படுத்தி ஜிஎச் எடுத்துச் சென்று நியதிகளை முடிக்கிறவரை அவனால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.
குறுகலாகக் கம்பியால் பிரித்திருக்கும் வாசலைத் தாண்ட சிரமப்பட்டது.
கணேசன் தன் அருகில் நின்று கொண்டு இருந்தவரை நிமிர்ந்து பார்த்தான். அவர் பைபிளை நெஞ்சோடு அணைத்தவாறு அவனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார். இவன் பார்ப்பதை உணர்ந்து அவரும் இவனைப் பார்த்தார்.
வெளியே போகும் போது கூட புதிதாக ஒரு வாசல் திறக்கக் கூடும். அதில் மகிமையோடு பிரவேசிக்க முடியும் என்றால் அதுதான் ஒலிமுகவாசல்.
கணேசனுக்குப் புரிந்த மாதிரி தான் இருந்தது.
