பரிவாதினி இசை மலர் -பாகம் 2
மலர் ஆசிரியர்: எஸ்.சிவகுமார்
மலர் தொடர்பிற்கு :99809 92830
“காதார் குழையாட பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட சீதப் புனலாடி சிற்றம்பலம் பாடி
வேதப்பொருள்பாடி அப்பொருளா மாபாடி சோதித் திறம்பாடி சூழ்
கொன்றைத் தார்பாடி ஆதித் திறம்பாடி அந்தமா மா பாடி பேதித்து நம்மை
வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடலோரெம்பாவாய் .”
திரு.மாணிக்கவாசகர் அருளிச்செய்த திரு வெம்பாவையில் மேற்கூறிய பதிகம் 14 வதாக இடம்பெற்றுள்ளது.
பாடலும், ஆடலும், பூம்புனல் ஆடலும் அனைத்துமே வாழ்வியல் முறையாகவும் ஆன்மீகம் சார்ந்தும் இருந்த ஒரு அழகை இதில் நாம் காண்கிறோம்.
இசையும் லயமும்,நடனங்களும் நாடகங்களும் மனித ஆன்மாவை எவ்வண்ணம் செழுமைப்படுத்தி வந்திருக்கின்றன என்று நாம் அறிகிறோம். இத்தகைய அழகியல் அம்சங்களோடு மிகச்சிறந்த இயல் இசை நாடக நாட்டிய அம்சங்கள் பொருந்திய என்றும் வாடாத மலராக இந்த இசை மலர் வந்திருக்கிறது. பல அடுக்குகள் கொண்ட மொட்டு ஒன்று இதழ் இதழாக விரிந்து நறுமணத்தை பரப்புவது போல இந்த மலரின் அமைப்பு இருக்கிறது.
மானுட குணங்களை மேம்படுத்துவதற்காக பூமியில் உதித்த பரம் பொருளான ராமன், தன் மனித இயல்பை, தியாகராஜ சுவாமிகளின் காலத்தில், அவரது இல்லத்திற்கே வரும்போது கூட மாற்றிக் கொள்ளாதது, ‘தெய்வம் மனுஷ்ய ரூபேன’ என்ற கூற்றை மெய்ப்பிக்கும் அழகான நிகழ்ச்சி. அதை எழுத்தோவியமாக ஒரு அழகான கதையாக கு. அழகிரிசாமி எழுதியது, இந்த இதழுக்கு மணிமகுடமாக இருக்கிறது. லவ குசன் என்ற இரு ஆண்மகவைப் பெற்ற சீதை, ஒரு பெண் குழந்தையை அள்ளி அணைத்துக்கொள்ளும் அருமையான ஓவியம், கேசவ்ஜியின் கைவண்ணத்தில், அருகில் கோதண்ட பாணி, இந்த அரச தம்பதியரை கண்குளிர தரிசிக்கும் தியாகராஜர் குடும்பம், அத்தனைக்கும் சிகரம் அந்த வயதான முதிர்ந்தவளை தனக்கு சமானமாக சொல்லும் ரகுராமன் கற்பனையும் கலையும் இசையும் ராகங்களும் கதையிலும் அட்டைப்படத்திலும் மிளிர்ந்து மிளிர்ந்து நம்மை அசைக்கின்றன. ‘ராம நீ சமான மெவரூ?’ ‘எந்த ருசிரா, ராமா, ஏமி ருசிரா?’
சாணத்தால் வாசல் தெளித்து, அழகான பச்சரிசி கோலம் போட்டு, காவியால் செழுமைப்படுத்தி, முன் நடையில் மஞ்சளும், பசுஞ்சாணமும் கொண்டு மெழுகி, தலை வாசலில் மாவிலைத் தோரணமும், சிறு தேர் போன்ற மேஜையில் பட்டு விரித்து, பீடத்தில் தலை வாழை இலையில், நெல் பரப்பி, அதன் மேலே மற்றொரு தலை வாழை இலையில், பச்சரிசி இட்டு, கலசம் வைத்து, அன்னையை, தென்னங்கூந்தல் பின்னிய அச்சிறு தேரில் அன்புடன் அமர்த்தி, ஏமனி சங்கர சாஸ்திரியின் வீணை இசையுடன் ஆராதிப்பதைப் போன்ற தெய்வீகம், அமைதி, மன நெகிழ்ச்சி இந்த மலரைப் படிக்கையில் எனக்குக் கிட்டியது.
பலரும் அறிந்த வி.ஸ்ரீராமின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கத்தை அனுராதா கிருஷ்ணசாமி சிறப்பாகச் செய்திருக்கிறார். வசந்தகுமார், எத்தனை மென்மையாக வீணை வாசித்தார், எத்தனை மென்மையுடன் ஆனால், சரியாக செயல் விளக்க நிகழ்ச்சிகளில் தன் கருத்தைத் தெரிவித்தார் போன்ற செய்திகள், கலைக்கென வாழ்ந்த மனிதர்களும் நம்முடன் இருந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டியது. அதில், வசந்தகுமார், சுலோச்சனா பட்டாபிராமன், எம், எல்.வி, பாலசந்தர், சிட்டிபாபு ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன
வீணையைப் போன்ற தெய்வீக அம்சம் பொருந்திய இசைக்கருவிகள் வெகு சிலவே; வீணையின் அமைப்பை நமது மனித உடல் அமைப்புடன் ஒப்பிட்டு அறிவுபூர்வமாக பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. அந்த வீணையின் கானத்தில் தானே வாசித்து (கௌளை) தானே மயங்கிய ஒரு காயகியைப் பற்றி வித்யாதரன் எழுதிய நாவலில் இருந்து சில பகுதிகள் அருமையாக தரப்பட்டுள்ளன. பாரிசுக்கு போ என்கிறார் ஜெயகாந்தன். “நமது சங்கீதமே ஒரு ராகத்தின் நுணுக்கங்களை எல்லாம் ஒரு பாடகன் அல்லது ஒரு வாத்தியக்காரன் நுணுகி நுணுகி வெளியிடுவதில் தான் இருக்கிறது மேற்கத்திய இசையில் பல ஸ்கேல்களில் குறுக்கும் நெடுக்கும் தறியில் நெய்யப் படுவது போல் அனந்தமான இழைகளால் அது ஊடும் பாவுமாய் உருவாக்கப்படுகிறது”. ஆனாலும் மனோதர்மத்திற்கான இடம் மேற்கத்திய இசையில், இசை அமைப்பாளருக்கு மட்டுமே வாய்க்கிறது என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.
தனக்கு ஒப்பாரும் மிக்காரும் எவரும் இல்லை என்று வீண் கர்வத்தை சுமக்கும் ஒரு மனிதரை வே.ராகவன் தன்னுடைய ‘பாகவத நாடகம்’ என்ற சிறுகதையிலும், ‘இருண்ட நெஞ்சில் ஒளி பிறக்குமோ’ என்ற நாவலில் சுஜாதா விஜயராகவனும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்கள். அனுலோமம் பிரதிலோமம், ஷட்ஜத்திற்கும் ரிஷபத்திற்கும் சாவேரியில் வித்தியாசம் ரொம்ப ரொம்பக் குறைவு என்ற அழகிய செய்திகளும் இவரது நாவல் சுருக்கத்தில் இடம்பெற்றுள்ளது அபாரம்.
அலங்காரத்திலும், திரைப்படங்களிலும் அதிக ஆர்வம் உள்ள மனைவியையும், சங்கீத சர்ச்சைகளில் விருப்பமுள்ள கணவனையும் ‘லக்ஷ்மி’ என்ற நாவலில் அனுத்தமா படைத்திருக்கிறார். அந்த நாவலின் ஒரு பகுதி இவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்றால் நாவல் எத்தனை அற்புதமாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. கே பி சுந்தராம்பாள் எழுதியுள்ள சினிமாவில் சாஸ்திரிய சங்கீதம் நல்ல விவரங்களோடு சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. “ஈசனின் உருவத்தோற்றமே நாதம் என்ற இசை என்பதாக நமது ஏட்டுச் சுவடிகள் படிக்கின்றன. சாஸ்திரிய சங்கீத இசை அமைப்புக்கு சினிமாவில் ஆதரவு கொடுக்க வேண்டும்” அவரது வேண்டுகோளை மிகத் தெளிவாகச் சொல்கிறார் ; “அதில் பாஷை வேற்றுமைக்கு இடமே இல்லை.”
தீக்ஷதரின் கிருதிகள் எப்படி இருக்கின்றன? சிதம்பர சுப்பிரமணியன் ‘கனவில் பிறந்த கீர்த்தனை’ என்பதில் அந்த அனுபவம் சிறப்பாக வெளிப்படுகிறது. “களங்கமற்ற இரவினிலே, நிலவின் ஏக்கத்தில், தென்றல் இனிமையில், தனிமையின் துக்கத்தில், அசைந்து அசைந்து தூக்கிச் செல்லும் அமைதியின் அலைகள் ஆத்மீக உணர்ச்சி கொண்டு பொங்கிவரும் பேரின்ப ஊற்றுகள் பட்டத்து யானை பவனி வருவது போல் பல்லவி சரணங்கள் அசைந்து அசைந்து ஒரு மிதப்புடன் ஆடி வருகின்றன.”
முதன் முதலில் ஹிந்தோள வசந்தம் ராகத்தில் சந்தான ராமசாமி என்ற தீக்ஷதரின் கிருதியை நான் கேட்டபோது ராகம், பாவம், சாகித்திய அமைப்பு, சரணத்தில் வரும் ஒளி ஒலி பிரவாகம், இலக்கிய நயம், இசை நயம் அனைத்தும் என்னை அசைத்தன. ‘சந்ததம் யமுனாம்பா புரி நிவசந்தம், ஹிந்தோள வசந்தம், சந்த மாதவம், ஜானகி தவம் சச்சிதானந்த வைபவம், சிவம் என்ற அனுபல்லவியைத் தாண்ட மனமில்லாமல் சரணத்தில் புகுந்தேன், வியந்தேன்.
இன்று தி.ஜா இருந்தால் நான் அவரது காதுகளை, இசைஞானத்தை, எழுத்தில் அதை கொண்டு வந்த வித்தையை நிச்சயமாக காப்பீடு செய்து இருப்பேன். புல்லாங்குழலும் வயலினும் பங்கு பெற்ற ஒரு கச்சேரி. குழல் வாசிப்பவர் வாசிக்கும் போது காலகதிகளை ரக்தியாகக் குழைத்து புதிய புதிய பின்னல்களைப்பின்னி தன்னம்பிக்கை கொண்ட நிச்சய உணர்வுடன் வாசிக்க, வயலின் வாசித்தவர் அந்த மோகனமான இசையை தனது வில்லால் அறுத்து கழுகுக்கு போட்டுக் கொண்டிருந்தாராம் . வில்லும் கம்பியும் சேரும்போதே ஒரு நரநரப்பு. சுருதியில் எதற்காக சேர வேண்டும் என்று கேட்பது போல் ஒரு அசட்டை. இதைக் கலை முயற்சி என்று கொண்டாடி ஆத்ம சித்திரவதை வேறு செய்கிறார்கள். பிருந்தாவனம் அதில் புல்லாய் பிறந்தாலும் திருமலையில் படியாய் கிடந்து பவளவாய் கண்டாலும் தி.ஜாவின் ரசனையை விட்டு நான் பிரியப் போவதில்லை
வேதாரண்யம் வேதமூர்த்திக்கு அவரது நூற்றாண்டில் மிகச்சிறந்த அஞ்சலியாக லலிதாராமின் கட்டுரை வந்துள்ளது. பொதுவாக நாகஸ்வர கலைஞரின் நாதத்தை பாடகரின் குரல் வளம் போல் இயற்கையில் அமைந்தது என்று கருதுவதுண்டு . அணசு மற்றும் உலவுக்கும் இடையில் ஒரு தகர குழாயை பொருத்தி தனி வழி கண்ட நாத மூர்த்தி செய்தது ஒரு இமாலய சாதனை. இவ்வாறாக மாற்றப்பட்ட வேதமூர்த்தியின் நாகஸ்வரத்தில் வழக்கத்திற்கு மாறாக நான்கு பிரம்ம துளைகள் உள்ளன. அந்த நான்கில் ஒன்று அடைக்கப்பட்டுள்ளது. வீணையின் நாதத்தை நாகஸ்வரத்தில் கொண்டு வந்த மகான். ஆலாபனையில் மத்திய சஞ்சாரம் வெகுவாக இடம் பெற்றுள்ளது; ராக ஆலாபனையில் பஞ்சமத்தில் இருந்து வழுக்கி ரிஷபத்தை தொடும் சாருப் பிரயோகங்கள் வீணைக்கு உரித்தானவை .அதை நாகசுரத்தில் கொண்டு வந்த வேதமூர்த்தியைப் பற்றி பலரும் அறியாத அருமையான செய்திகளை சிறப்பான கட்டுரையில் சொல்லியிருக்கும் இருக்கும் லலிதாராமின் பார்வை அற்புதம்.
திருச்சி எஸ் ஆர் சி காலேஜ். ஒரு நாள் மாலை மதுரை சோமு வந்தார். இளம் பெண்களுக்கு இசைந்தவாறு கச்சேரி அருமையாக அமைந்தது. முடிவாக மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலின் தொடக்கத்தில் விருத்தம் போல் எங்களையும் அவருடன் பாடச் சொன்ன அந்த நிகழ்ச்சி மனதை விட்டு மறையவில்லை. அவர் குரல் செய்த ஜாலங்கள் பெரிய ரசிகர்களுக்கு கிட்டிய விலையற்ற நாத அனுபவங்கள் என்று சிவகுமார் எழுதுகிறார். “அன்று அனுமந்திர ஸ்தாயியிலிருந்து தார ஸ்தாயி வரை அவர் குரல் செய்த மாயம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது என்று சுப்புடு எழுதியிருந்ததாக” சிவகுமார் சொல்வது நெகிழ வைத்தது. அது என்னவோ மதுரைக்கும் பாடகர்களுக்கும் தோடி அமிர்தமாக வர்ஷிக்கிறது. மணி ஐயர், மதுரை சோமு, டி என் எஸ் யாரைச் சொல்ல யாரை விட?
சிவனின் கையில் இருக்கும் தமருவிலிருந்து பிறந்தது சப்த அலைகள், மொழிகள். இறைவனை சப்தப்பிரமாணம் என்று சொல்வார்கள் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை அவர்களைப் பற்றிய ஸ்ரீநிவாச ஐயங்காரின் கட்டுரை மிக அழகாக இருந்தது. “இரு கைகளாலும் நினைத்தது நினைத்தவாறு சொற்களை பேச வைக்கக் கூடிய மிருதங்கத்தை போலவே ஒரு கையாலேயே சொற்களைப் புரட்டிப் புரட்டி வாசித்து பேச வைக்க வேண்டியதான கஞ்சீரா வாத்தியத்திலும் அரிய லயப் பிரச்சாரங்களை, அதி வேக காலத்திலும் செவிக்கு இனிமை தருமாறும் சாதிக்கலாம் என்பதை அவர் நிருபித்து விட்டார்”. பிள்ளை சிறந்த லட்சண லக்ஷய வித்வான். லயமும், சாகித்தியங்களும் அறிந்தவர். ஹார்மோனியப் பெட்டி ஒன்றை ஒரு ஹிந்துஸ்தானி வித்வான் திருவனந்தபுரத்தில் வறுமையால் விற்க முனைந்த போது அதைத் தடுத்து அவரையும் உபசரித்து செங்கோட்டைக்குத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் எஸ் ஜி கிட்டப்பாவிடம் அறிமுகம் செய்து அந்த வித்வானின் வாழ்வில் விளக்கேற்றியவர். சுப்பிரமணிய ஷேத்திரங்களில் ஒவ்வொரு வருஷமும் தங்கி தீட்சை வளர்த்துக்கொண்டு திருப்பணி ஆற்றிய பிள்ளை அவர்களுக்கு ஒரு நல்ல சமர்ப்பணம் இந்தக் கட்டுரை.
டைகர் வரதசாரியாரைப் பற்றி மைசூர் வாசுதேவாசார்யார் எழுதியுள்ள கட்டுரை, முன்னவரை முழுமையாக அறிமுகம் செய்கிறது. “காட்டாறு போன்றது அவரது சங்கீதம். அது கடவுளுக்குப் படைக்க வேண்டிய சங்கீதம்.” மேதைகள் சிறுபிள்ளைத்தனமாகவும் இருப்பார்கள் எனவும் இக்கட்டுரை சொல்கிறது. சட்டையை முன் பின்னாகப் போட்டுக் கொள்வது, உள்சட்டை அணியாமல், கோட் போட்டுக் கொள்வது, தலைப்பாகை சுற்றத் தெரியாததால், யார் கட்டிக் கொடுத்தாலும், அதற்குள் தலையை நுழைத்து விடுவது, அவரது நகைச்சுவை உணர்ச்சி என பல சுவாரசியங்கள் இக்கட்டுரையில்.
பழைய நாதஸ்வர வித்வான்கள் பற்றி ரங்க ராமானுஜ ஐயங்கார் சொல்வதைக் கேளுங்கள். “இரண்டு பர்லாங்கு தூரத்திலும், பளிச்சென்று கேட்கும் கம்பீரமான நாதம், கர்னாடக சுத்தமான ராக ஆலாபனை, அழுத்தமான துரித கால ஸஞ்சாரிகள், விஸ்தாரமும், விவகாரமும் நிறைந்து, த்ரிகாலங்களிலும் மிகவும் நிர்ணயமான பல்லவி இவை செம்பொன்னார் கோயில் ராமஸ்வாமி வாசிப்பில் செவ்வனே விளங்கின.” சின்னப் பக்கிரி நல்ல கருமை நிறம், கட்டழகான தேகம், சிறிய தலை, எப்பொழுதும் விபூதி தரித்த விசாலமான நெற்றி, பெரிய கண்கள், வாசிக்கும் பொழுது தோள்களைத் தொட்டு விரியும் கழுத்து, இடையில் கரையில்லாத மல் வேஷ்டி, அதன் மேல் சுற்றிக்கட்டிய விலை மதிக்கக் கூடாத சரிகைப் பட்டாடை, தோளின் மீது ஒரு உள்ளூர் துண்டு, கழுத்தில் இரண்டு வடம் தங்கச் சங்கிலி, கையில் தங்க நாகஸ்வரம், மனம் மொழிகளுக்கு அப்பாற்பட்ட கற்பனை” என்று கண் முன்னே சின்னப் பக்கிரியை காட்டிவிடுகிறார் ஆசிரியர். பேகடா ராகத்தில், மன்னார்குடி ராஜகோபாலன் உற்சவத்தில் அவர் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக உருகி உருகி இசைத்த அந்த நாதப்பிரவாகம்; மத்திம தைவதத்தை அம்சமாகவும், மத்திம ஷட்ஜ ஸ்வரங்களை நியாஸ்மாகவும் அமைத்து, மந்தர பஞ்சமத்திலிருந்து தார ஸ்தாயி வரை துரிதகால வரிசைகளைத் தொடுத்தபடி மணிக்கணக்கில் அவர் வாசித்ததுதான் அவரது கடைசி கச்சேரி என அறியும்போது மனம் பதைபதைக்கிறது. இந்தக் கட்டுரையில், திருச்சேறை வெங்கட்ராமன், செம்பொன்னார் கோயில் ராமஸ்வாமி, சிவக்கொழுந்து பிள்ளை, மன்னார்குடி சின்னப்பக்கிரி ஆகியோரின் புகைப்படங்களுடன், ஓவியங்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன.
திருவாலங்காடு தியாகராஜ சாஸ்திரிகள் பற்றிய கட்டுரை யானையின் தந்தத்தில் இருந்து அபூர்வமாகக் கிடைக்கும் முத்தை ஒத்தது. புதுக்கோட்டை சமஸ்தானம் இத்தகைய கலைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆதரித்திருக்கிறது. அடையப்பலம் அப்பய்ய தீட்சதர், ராமச்சந்திர தொண்டைமான், தனம்மாள், திருக்கோடிகாவல் கிருஷ்ணையர், திருவாலங்காடு சுந்தரேசையர், செம்மங்குடி நாராயணசாமி ஐயர் ஆகியோரின் புகைப்படங்கள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
தவில் வாசிப்பதற்கு முதலில் எதில் பழக வேண்டும்? சிலம்பக் கட்டையில். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றி, அவரது தவில் வாசிப்பை சிலாகித்து வந்துள்ள கட்டுரை ஒரு சோகச் செய்தியையும் தாங்கி வந்துள்ளது. தனது ஒரே மகனுக்கு, தன் மூத்த பெண்ணின் மகளை மணம்செய்விக்க நிச்சயித்து, மணநாளுக்கு முந்திய இரவில் 3 மணிக்கு உறங்கச் சென்றவர், காலையில் கண் விழிக்கவில்லை.
பொங்கிப் பெருகிய ராகப் பிரவாகமான கோபால கிருஷ்ணையர், ஃபோனோ வயலின் என்றொரு கருவி வைத்திருந்தாராம். கட்டுரையின் முன்னுரையிலேயே பல சுவையான செய்திகள் உள்ளன. படித்து இரசியுங்கள்.
பி கே என்ற பி. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி அவரது சீடர் எழுதியுள்ள கட்டுரை, அதன் உள்ளடக்கத்தாலும், அதில் இடம் பெற்றுள்ள பி. கே, பி. ராஜம் ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்ரமண்ய ஐயர் ஆகியோரின் புகைப்படங்களாலும் நம் கவனத்தை ஈர்க்கிறது.
சித்தார்த்தன் தனது குருவான எல்.வெங்கடேச ஐயங்காருக்கு உணர்ச்சியும், நன்றியும் மிகுந்த காணிக்கையை தன்னுடைய கட்டுரையில் சமர்ப்பித்திருக்கிறார். கார்ட்டூன் மற்றும் புகைப்படங்கள் அருமை.
கொன்னக்கோல் என்பது லயச்சொற்கட்டுகளை வாயால் சொல்லும் முறை. அதில் பெயரெடுத்தவர் பக்கிரியாபிள்ளை. 1910லிருந்து காஞ்சி நாயனா பிள்ளை, ஜலதரங்கம் ரமணைய செட்டியார், பக்கிரியா பிள்ளை மூவரும் இணைந்து கச்சேரிகளில், கொன்னக்கோலை மேடையேற்றி வெற்றியும் கண்டனர்.
ஊஞ்சல், பத்யம், லாலி, கும்மி, சிந்து முதலியவைகளை மட்டும் பொழிந்ததுமல்லாமல், உள்ளம் உருக்கும் கீர்த்தனைகளையும், ராகமாலிகைகளையும் இயற்றியுள்ள நீலகண்டசிவன் பற்றிய கட்டுரை நான் அறிந்திராத தகவல்களைச் சிறப்பாகச் சொல்கிறது. திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை, இராமனாத ராஜாக்களும், சிவனாரின் பெருமையை உணர்ந்து மிகுந்த சன்மானங்கள் கொடுத்து கௌரவம் செய்திருக்கிறார்கள். அவரின் முகாரி ராக கீர்த்தனை ‘என்றைக்கு சிவ க்ருபை’ கேட்பவர், திருவாசகத்திற்கு உருகுவது போல் உருகிப் போவார்கள்.
கோபுலுவின் கைவண்ணத்தில் மிளிரும் நகைச்சுவை, அவரது எழுத்திலும் மிளிர்கிறது. திருவையாற்றில் சங்கீதக் கச்சேரி மட்டுமா, கொசுக்களும் கூட இசைக்குமாம்! வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தூரிகைகளுக்கு, போர் சமயமாதலால் தட்டுப்பாடு. ஈச்சம்பாளை மட்டையில் தயாரித்த பிரஷ்களும், அணில்வால் முடியில் செய்த தூரிகைகளையும் கொண்டே அற்புதம் செய்திருக்கிறார்கள். வண்ணங்களைக் குழைக்க கொட்டாங்கச்சிகள். என்னவொரு கலை ஆர்வமும், ஈடுபாடும்!
மிருதங்கம் எந்த மரத்தில் செய்ய வேண்டும்? பலா, செம்மரம், கொன்னை, பனை, தென்னை, வேம்பு. பாலக்காடு மணி ஐயரின் அனைத்துப் பற்களும் தெரியும் புகைப்படம், மாலியின் பார்வையில் மணி என்ற கேலிச்சித்திரம், செம்பை, சஞ்சீவ ராவ், கரூர் சின்னசாமி ஐயர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர், (மணியின் குரு) அனைத்தும் கட்டுரைக்கு மெருகேற்றுகின்றன.
தில்லானா மோகனாம்பாள், நாவலும், திரைப்படமும் இரசிகர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை. அந்த நாவலில் வரும் பரமானந்த பரதேசியார் பாடுவதை கொத்தமங்கலம் சுப்பு எத்தனை ஈடுபாட்டுடன் வர்ணிக்கிறார், கேளுங்கள். “அவரது குரலிலிருந்து ஏழ்கடல் ஓசை பொங்குகிறது; ஸ்வரங்களை அகாரத் தில் அடுக்கிக் கொண்டே அவர் வரும்போது அவரது இரண்டு நெற்றிப் பொட்டிலுள்ள நரம்புகள் புடைத்தன. மதுரம் என்பது கண்டம்தான். அதிலும் மனம் லயித்துவிட்டால், அதுவே அண்டம். தன்யாசி ராகத்தைப் பாடிய போது, மூன்று ஸ்தாயிகளும் அவர் குரலில் அனாயாசமாகப் பேசின. இடையிடையே அபூர்வப் பிடிகள்.”
தமிழிசைக்காக திரு.வி.க ஏங்கியதும், அவரது அனுபவங்களும் அருமையாக வந்துள்ள கட்டுரை, ஒன்றும் இடம் பெற்றுள்ளது. தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சமய ஓதுவார்கள் படித்து இன்புற்று, பயிற்சி செய்து, மேடையேற்றவும் செய்ய வேண்டுவன இவை. 1940ல் சைவ சித்தாந்த மஹா சமாஜ மாநாட்டிலே சுந்தரமூர்த்தி ஓதுவார் படியதை திரு. வி.க சொல்வதைக் கேளுங்கள் “ஏழிசையாய், இசைப் பயனாய், இன்னமுதாய், என்னுடைய தோழனுமாய், யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி… என்ற சுந்தரர் தமிழை இசைத்த போது ஓதுவார் உள்ளம் அதிலே ஒன்றியது. அப்பாட்டிலே கூட்டம் திளைத்தது. மலை மயங்கியது, மரஞ்செடி கொடிகளும் மயங்கின. ஓதுவாரை ஒரு ஆனாயராக்கியது. தேவாரப் பண்ணின் திறத்தை யான் அன்று நன்கு உணர்ந்தேன்.”
மஹாவைத்தியநாத ஐயரை சவாலுக்கு அழைத்த ‘அபயாம்பிகா கடாட்சம்’ கட்டுரை நல்ல நகைச்சுவை. குரு கருணையானந்த ஞானபூபதி சில வித்வான்களை பலமாகக் குட்டுகிறார். “இக்கட்டான இடங்களில், பல்லவி எடுப்புகளை வைத்துக் கொண்டு, தாழங்குடையில் மழை பெய்கிற சத்தம் போல், சுர நிரவல் செய்து, பக்கவாத்யக்கார்களும், பாடகரும், தலைவிரி கோலமாய் தாளங்கள் போட்டு வேதாளமாகி…..”
உ. வே.சா, தமிழ் செய்யுள்களை எப்படி இசையுடன் படிக்க வேண்டுமென்றும், அவை கீர்த்தனைகளைப் போல் இராகத்துடன் பாட வேண்டியதில்லை என்றும் எழுதியுள்ள பல்லவி ராகம் என்ற சிறிய கட்டுரையில் விஷயமும், வினயமும், நகைச்சுவையும் இருக்கிறது. ஓவியர் நாணு வரைந்துள்ள உ வே சாவின் ஓவியம், கோபுலு வரைந்துள்ள கேலிச் சித்திரம் இரண்டும் அழகோ அழகு.
சுயகௌரவம் மிக்கவர் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள். மயிலைக் கோயிலில் இவர் கச்சேரி. தேர் புறப்படும் போது கோயில் ஊழியர்கள், அன்று நிலவி வந்த மரபின் படி விசில் ஊத, கடுங்கோபம் கொண்டு வாசிப்பை நிறுத்திவிட்டு கிளம்பி விட்டாராம். சிக்கில் சண்முகசுந்தரம் நினைவிற்கு வருகிறாரா?
சங்கீதம் எதற்காக? மன இளைப்பாறுதலுக்காக, தானழிந்த துல்லிய ஆனந்தம் வசப்படுவதற்காக, மத, தேச ஆசாரங்கள் போன்ற எல்லைகளைத் தகர்த்து மனிதனை ஒன்றிணைப்பதற்காக. பீதோவனும், பகவத்கீதையும் நூலை ஆங்கிலத்தில் மீராபென் எழுதியிருக்கிறார். வி ரவிசங்கர், அந்த நூலின் 5வது அத்தியாயத்தை மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். “பீதோவன் பல இடங்களிலிருந்து கீழைப் பிரதேச ஆன்மீகச் சிந்தனைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அதில் அவர் காட்டிய தீவிரமானதும், ஆழமான உணர்ச்சியுமுள்ள மறுவினை, அறிவுத் தளத்தைத் தாண்டிய ஒன்று. முந்தையதோர் ஆன்மிக அனுபவத்தின் எதிரொலியை அது உலுக்கி எழுப்பியது போலத் தெரிகிறது. இயற்கையிடம் அவருக்கு இருந்த தீவிர ஈடுபாட்டோடு அது பூரணமாக ஒத்திசைந்திருந்தது.”
மரியன் ஆண்டர்சன் என்ற பாடகியின் சுயசரிதையை தமிழில் குண்டூசி கோபால், உதய ராகம் என்ற தலைப்பில் 1958ல் எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் ஒரு சுவையான செய்தி. ஹோரோவிட்ஸ் கச்சேரி செய்ய வேண்டிய தருணத்தில், அவர் வர இயலாமல் போக, நிகழ்ச்சி ஏற்பாடு செய்த லொம்பார்டு, தற்செயலாக மின்னியாபொலிஸ் நகரத்திற்கு வந்திருந்த மரியனைக் கேட்க, மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு இவர் ஒத்துக் கொள்ள, அன்றைய கச்சேரியை இரசிகர்கள் மகிழ்ந்து கொண்டாட நாமே நேரில் பங்கேற்றது போல் உணர்கிறோம். இதைப் போலவே ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடனான மரியனின் அறிமுகம், அவரும் கச்சேரிக்கு வந்திருந்தது, அவரது பிரின்ஸ்டனின் இல்லத்தில் மரியன் தங்கியது, ஐன்ஸ்டைனே வரவேற்றது… பல இயற்பியலாளர்களுக்கு கிடைக்காத ஒரு பேறு மரியனுக்கு வாய்த்திருக்கிறது.
‘சொகுசா ம்ருதங்க தாளமு’ என்று பாடுகிறார் தியாகராஜ ஸ்வாமிகள். தனி ஆவர்த்தனத்தின் போது சிலர் கச்சேரியிலிருந்து வெளியே செல்வதை தகுந்த காரணங்களோடு எதிர்க்கிறார் வெ. ராஜகோபாலன். “தாள நுட்பங்களிலும், அவற்றின் உள் பங்கீடுகளிலும் கர்னாடக சங்கீதத்திற்கு இணையானது உலக லய வாசிப்பில் எங்கேயும் கிடையாது. மிருதங்கம் முழுக்க முழுக்க உள்நாட்டு வாத்தியம். பாட்டுக்கு ஏழு ஸ்வரங்கள் ஆதாரமாக இருப்பது போல, மிருதங்கத்திற்கு ஏழு சொல், ஏழு நாதம் ஆதாரம். உலக சங்கீதத்தில் எத்தனையோ லய வாத்தியங்கள் இருந்த போதும், ஏழுவகை சொல்லமைப்பு ஒரே வாத்தியத்தில் அமைந்திருப்பது இல்லை. தவிர்க்கக் கூடாத விஷய ஞானமுள்ள கட்டுரை. (ஒரு முறை பாலமுரளி கிருஷ்ணா, மிருதங்கம் இல்லாமல் பாடி, இரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் என்று படித்திருக்கிறேன்!)
கரூர் என்ற கர்ப்புரி எப்படி ஒரு சங்கீதக் கருவூலம் என்று டி.சங்கரன் சிறப்பாகச் சொல்கிறார்.
சங்கீதத்துக்குத் தேவை ஒரு ஸர்வான்டஸ் என்று சொல்கிறார் ரங்கராமானுஜ ஐயங்கார். 40-50 களிலே செய்த ஒரு பொது அலசல் என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர். சாகித்தியம் இழந்துவிட்ட ஸ்தானத்தை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாடல்களின் கருத்தை மிகவும் உணர்ந்து பாட வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார். சம்ஸ்க்ருதம், தெலுங்கு முதலிய மொழிகளில் படிக்க எழுதத் தெரிந்திருப்பது உதவும் எனவும் சொல்கிறார். ‘சக்கனி ராஜ மார்க்கமு’ என்ற கிருதியை அதன் அர்த்தம் விளங்காமலே கூட அனுபவிக்க முடியுமே? வாத்திய இசையில் எந்த மொழி வருகிறது? ஒரே மொழிதானே- அது ஆன்ம மொழி அல்லவா?
‘பாடிக் கொண்டேதான் ஆடுவேன்’ என்று மயிலாப்பூர் கௌரி அம்மாள் சொல்கிறார். பாலசரஸ்வதி, ருக்மணி தேவி, கௌரி அம்மாள் ஆகியோரின் புகைப்படங்கள் தெளிவாக வந்துள்ளன.
பரத நாட்டியம் நமது மரபின் பொக்கிஷம் என்ற வே. ராகவனின் கட்டுரையில் தான் எத்தனை நுட்பமான செய்திகள். ‘நிருத்தம்’, ‘ நிருத்தியம்’ இவை இரண்டிற்குமான வேறுபாடுகள் , நன்றாய்ப் பாடும் வல்லமை பெற்ற நடிகை தானே பொருளைத் தரும் வாசிகாபிநயம் என்ற முறையில் பாடலையும் பாடி ஆடலாம், காளிதாசரின் மாளவிகை, சிலப்பதிகார மாதவி, போன்றோர் ஆடிய சதிர் தான் பரத நாட்டியமாக வடிவெடுத்துள்ளது என்று எழுதுகிறார் ராகவன். சில அஸம்யுத ஹஸ்தங்கள் என்று 28 வகைகளையும், சில ஸம்யுத ஹஸ்தங்கள் என்று 8 வகைகளையும் வரிசைப்படுத்தி அற்புதமான ஒரு கட்டுரையை வழங்கியுள்ளவருக்கு சிறப்பான நன்றிகள்.
நாட்டிய நாடக வரிசையில் ஈ. கிருஷ்ணய்யர் மெலட்டூர் மேள நாட்டிய நாடகம் பற்றி எழுதியுள்ள அபாரமானக் கட்டுரையும் இந்த இசை மலரில் வந்துள்ளது. பிரகலாத நாடக காட்சிகள், நரசிம்ம முகமூடியை தூக்கி வரும் காட்சி, மிலட்டூர் நடேச ஐயர் புகைப்படம் அனைத்தும் அழகிற்கு அழகு சேர்க்கின்றன. பொடி சங்கதிகளில் பாகவத மேளத்தின் வேர் என்ற கட்டுரையில் இருக்கும் நரசிம்மரின் வரைபடம் தான் எத்தனை உயிர்ப்புடன் இருக்கிறது!
பொடி சங்கதிகள் கூட இசை வரலாற்றின் பகுதிகள் தான். ஐந்து வயதில் இசை அமைத்த மேதை யாரென்று தெரியுமா? பாலமுரளிக்ருஷ்ணாவின் இளம் வயது சாதனை என்னவென்று அறிந்து கொள்ள வேண்டுமா? மேடையில் விரிப்பு இல்லாமல் நாகஸ்வரம் வாசிக்க மாட்டேன் என்ற கலைஞர் யார்? காவடிச்சிந்து பாடிய ரெட்டியாரின் ராக ஞானம் பற்றி அறிய வேண்டுமா? வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் பாடல்களை இசைத்தவர் யார்? வக்கீல் பாட்டு, அது என்னது? அதிலுள்ள சித்திரம் , சிரிக்காதவர்களையும் கூட புன்னகைகச் செய்துவிடும். பட்டணத்தின் பொடிப்பாட்டை யார் எழுதியிருக்கிறார்கள் என்ற ‘பொடி’ சங்கதியை சுவையாக சிவகுமார் சொல்கிறார். இந்தப் பாடலைப் பாருங்கள், என்னவென்று புரிந்து கொள்ள, அவரது ‘இசையும், இட்லி காப்பியும் என்ற கட்டுரையைப் படியுங்கள்.
‘ம்ருது தவள ஸூகோஷ்ணா
ப்ராதர் இட்லி, மனோக்ஞா,
பரிமள க்ருத பக்வா,
உப்புமா சாரு ரம்யா,
சுரபி மதுர காபி.
மித்ர ஸங்கேன பீத;
நரஹரி சரணாப்தே
பக்தியுப்தோ பபூவ’
என்.சி. வசந்தகோகிலம், தன் சொத்தின் பெரும்பகுதியை மாதர் கல்விக்குப் பயன்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தாராம்; ராஜம் புஷ்பவனம் என்ற நடிகை, திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் கம்பெனியார், ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதை எதிர்த்து கோர்ட்டிற்குப் போய் அந்தக் காலத்திலேயே வென்றிருக்கிறார். எஸ். வி வியின் கட்டுரை என்னை ஈர்க்கவில்லை.
முன்னட்டையிலும், பின்னட்டையிலும் விஸ்மயத்தின் அழகிய சிற்பங்களின் புகைப்படங்கள், அரிய புகைப்படங்கள், ஓவியங்கள், கோட்டுச் சித்திரங்கள், கட்டுரைகளுக்கு ஏற்றாற் போல், அந்தக் காலத்தில் வெளியான விளம்பரங்கள், கருத்துச் செறிவுள்ள ஆக்கங்கள், அனைத்திற்கும் சிகரமாக எஸ். சிவகுமார் கொடுத்துள்ள முன்னுரைகள், ஒவ்வொரு கட்டுரை மற்றும் கதைகளில் அவர் கொடுத்துள்ள சாராம்சங்கள், அவரது அபார உழைப்பு, சங்கீத ஞானம், நினைவாற்றல், இந்த இசை வரலாற்றை வெளியிட்டுள்ள பரிவாதினி, இன்னும் எண்ணற்ற கலைஞர்கள் யார்யாரோ, அந்தரிகி வந்தனமுலு.
