Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

செல்வசங்கரன் கவிதைகள்

எம்பிக் குதித்தல்

எம்பிக் குதித்தால் வானைத் தொட முடியாது
எல்லாரும் அறிந்த ஒன்று
ஆனால் அவர் அதற்காக குதிக்கவில்லை
எல்லாரும் அறிந்த ஒன்றை எல்லாருக்கும் சொல்கிறார்
குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள்
குறிப்பெடுப்பது என்பது வானத்தை நோக்கி
ஒரு முறை தவ்வுவது
வானத்தை நோக்கிப் போவது
ஒரு சம்பிரதாயம் போல
திரும்ப எல்லாரும்
பூமி வருவதும் ஒரு சம்பிரதாயம்


உலக விசாரணை

எனக்கென தனியாக எதுவும் இல்லை
உதாரணத்திற்கு
பழுத்த இலைகளுக்கிடையே ஒன்றாக
நானும் இருக்கிறேன்
உலக விசாரணையில் இருக்கையில்
மொத்தமாக நடந்து கொள்வது தான் நியாயம்
அப்படியாயின்
மொத்த துக்கத்தில் என் சொந்த துக்கமெங்கே


குளங்கள்

நீரைக் கையால்
அள்ளும் போது
நீர் என்ன செய்கிறது
ஏற ஒத்துழைத்தது
ஏறியதை இழுத்தது
ஏறியதே இறங்கியது
எல்லாவற்றையும் செய்தது
எல்லாவற்றிலும் இருந்தது
இப்பொழுது கை ஒரு குளம்
பொதுவாக நீரினுள்
ஒரு சொட்டு ஒரு குளம்

Exit mobile version