
வெண்புலத்தில்
அலைந்து நெளிந்து
எழும்பி இறங்கும்
ஹார்பிக் கசிவுகளின் அலைச்சல்கள்
தூக்கிச் செல்ல
முட்டித் தள்ளிவிட
வேதிப் போராயுதம் தூக்குமளவு
எதிரிடையில் இருக்கும்
மஞ்சள் கசடுகளுடனான போராட்டம்
அந்த கழிவறைக்குள் மட்டுமல்ல
மூடியிருக்கும் கதவுக்கு
வெளியேயும்
பாத்ரூம் லைட் போடும்
சாவிகளுக்கு அருகேயும்
தொங்கிக்கொண்டிருக்கும்
துணி காயப்போடும் கயிறுகளின் முடிச்சிலும்
துரு பிடித்த அதன் வளையங்களிலும்
மெல்லிய சட்டையைக் கிழிக்கும்
கோரமான முனைகளாலான
இரும்பு கிளிப்களிலும்
இவற்றையெல்லாம்
ஆட்டுவித்து நகர்த்த
எண்ணிக்கொண்டே இருக்கும்
காற்றிலும் தயங்காமல்
காலடித் தடம் பதியாமல்
நடந்து கொண்டுதான் இருக்கிறது
