1
தான் எடுத்த
புகைப் படத்திலிருந்து
தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான்
யாரையோ பார்ப்பதைப் போல
எப்போதும் தன்னையே பார்த்துக்
கொண்டிருக்கும்
ஒருவன்
யாராவது அவன் புகைப்படத்தைப் பார்க்கும் போது
தன்னைப் பார்த்து விடுவார்களோ என்ற கூச்சத்தோடு
விலகிப் போகும் அவனுடன் எப்போதும்
கூடவே செல்கின்றன
அவன் அமர்ந்து பேசி சென்ற
சில மரங்களின் பழைய நிழல்கள்
நாய்க்குட்டியை தூக்கிச் சென்ற
அவன்
சட்டைப்பையில்
விழுந்த
பேய் மழையின் கடைசி துளிகள்
நேசத்தின் பிடியற்ற
கத்தி அறுத்த
காயங்கள்
புகைத்துப் போட்ட சிகரெட் துண்டின் முனையோடு
எறிந்து போன
அவன் நியாயங்கள்
இன்னொரு முறை அவன் எடுத்த புகைப்படத்தைப்
பார்க்கும் போது
அதனிடம் உரையாடுங்கள்
வெறுமனே பார்த்துவிட்டு நகர்ந்து போகாதீர்கள்
அதில் புகைப்படமான
அத்தனையும்
யாரோ ஒருவர் யாருக்கோ தெரியாமல் விட்டுச்சென்ற
நிகழ்தலின் பரவசங்கள்
2
நினைவின் அடுக்குகள் சரிய
அதன் இடுக்குகளில் சிக்கிக்கொண்ட
மத்திம வயதுக்காரன்
ஒருவன்
மெல்ல தன்னை இழந்து எடையற்றவனாகிறான்
அவனுடன் இதுவரை இருந்த நம்பிக்கைகளும்
பயங்களும்
பேதமற்று
பெருவெளியின்
முடிவிலியில் சுழலும் ஆரக்கால்களில்
நசுங்கத் துவங்குகின்றன
முதலில் நடுக்கத்தை உணர்ந்த அவன்
மெல்ல மெல்ல
தனக்கு தானே அளித்துக் கொண்ட
சமாதனங்களினால்
அமைதியடைகிறான்
இதுவரை
இல்லாத கண்ணீரின் கடைசித் துளி
அவன்
கடைவாயில் விழுகிறது
உண்மையில்
அவனுக்கு அது அப்போதைய அமிர்தம்
பெருங்கருணையின்
புனிதப் பிரசாதம்
அதை மெல்ல விழுங்கி
துயில் கொள்கிறான்
அவன் உடல் வனமாகி
பெருவெளியில் மிதக்கும் துவங்குகிறது
அவன் மீண்டும் வனத்திலிருந்து
விடைபெற்ற
மலர்களின்
மகரந்தம் ஆகிறான்
அவன்
மாமிசத்தின்
துகள்களை எறும்புகளும் பூச்சிகளும்
கோடானுகோடி
உயிரினங்களும்
உண்டு திளைக்கின்றன
அவன் இப்போது
எங்குமில்லை
இருப்பதெல்லாம்
அவன் வாசம் மட்டுமே என்றாகிவிட்டான்
இனி
எதையும் சுமந்து திரிய வேண்டியதில்லை என்பது
எத்தனை பெரிய நிம்மதி
3
யாருடைய நடுக்கமோ
யாருடைய பிறழ்வோ
யாருடைய பயமோ
யாருடைய வாழ்வோ
ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டிக்குள்
உறைந்து
போய் கிடக்கிறது
கடைசியாய் வந்தமர்ந்த
ஈயோடு
4
ஒரு பின்னிரவில்
நதியென்று தான் நம்பி வாழ்ந்த நீரில்
மூச்சுவிட முடியாமல்
வாயைப் பிளந்து திறந்து
மூடி
தவித்து அலைகிறது
இதுவரை
வலையில் சிக்காமல் தப்பிய மீனொன்று
அதுவும் பிடிபட்டிருந்தால்
இத்தனை அவஸ்தை
தேவையிருந்திருக்காது
5
அறையில் தான் இருந்தேன்
அந்த அறையில்
என்னுடன் சேர்ந்து
ஒரு மேசை
புத்தகங்கள்
பேனா
பென்சில்
மகள்கள் வரைந்து ஒட்டிய
ஓவியங்கள்
வண்ணங்கள்
அப்பிய
கை விரல்களின்
அச்சுக்கள்
ஒரு படுக்கை
இரண்டு தலையனை
ஒரு மடிக்கணினி
கொக்கியில் தொங்கும்
சட்டைகள்
ஒரு மின்விசிறி
ஒரு குழல் விளக்கு
அத்தனையும் இருந்தன
எனக்குத்தான் தெரியவில்லை
