முந்தைய பாகத்தை படிக்க
அன்று சஞ்சய் பார்த்த முதல் நோயாளி அறுபத்திமூன்று வயது சான்ட்ரா கேலுஸ்கி. நரை மயிரில் ஒரு பின்னல். திறந்த வெளியில் அலைந்ததால் வந்த தேகத்தின் இளம்பழுப்பு நிறத்தில் அவன் மருத்துவக் கண்களுக்குத் தெரிந்த கொஞ்சம் வெளிர்ப்பு. எளிய, பலமுறை அணிந்ததால் நிறம் இழந்த நீல ஆடை. ஆண்டின் எல்லா நாட்களும் அவளுக்கு ‘பூமி தினம்’.
சந்திக்குமுன்பே தங்கள் உடல் குறைபாட்டின் விவரங்களையும் அதைக் குணப்படுத்தும் வழிமுறைகளையும் வலையில் தேடித் தெரிந்துகொண்டு மருத்துவருக்கே அறிவுரை வழங்கும் நோயாளிகளுடன் சஞ்சய்க்குப் பழக்கம். பெரும்பாலும் அவர்கள் அரைகுறையாகப் படித்து, தவறாகத் தெரிந்துகொண்டதைத் திருத்துவதும் அவன் கடமைகளில் ஒன்று. சான்ட்ரா அப்படிப்பட்டவள் அல்ல என்பதை அவளுடன் பேச ஆரம்பித்ததுமே உணர்ந்தான்.
“ஒரு காலத்தில் நீ டிராமா ஆசிரியை. எங்கே?”
“ஹியும்-ஃபாக் கலைப் பள்ளிக்கூடம்.”
“மாணவர்களுடன் பழகுவது உனக்குப் பிடித்திருக்கும்.”
“நிறைய.”
‘வேலையை ஏன் ஐம்பது வயதிலேயே நிறுத்த வேண்டும்?’ என்று அவன் கேட்காவிட்டாலும்,
“என் கணவனுக்கு நல்ல வேலை கிடைத்தது. ஒரே பையன் படிப்பை முடித்துவிட்டான். அதனால்…”
“பிறகு, வருமானம் இல்லாத சேவைகள்.”
“சிலவற்றில் அவ்வப்போது கொஞ்சம் சன்மானம்.”
“சில வாரங்களாக நாக்கின் தீராத தாகம். தண்ணீர் குடித்து அதை வெளியேற்ற உடலுக்கு அவசர உந்துதல். அவை டயபெடிஸின் ஆரம்பம் என நீ என்டோக்ரினாலஜிஸ்ட்டை பார்க்கப் போகவில்லை. ஏன்?”
“சர்க்கரை, சலித்த மாவு இரண்டையும் தவிர்த்த இயற்கை உணவைத்தான் முப்பது ஆண்டுகளாக சாப்பிடுகிறேன். சென்ற வாரம் வரை தினம் குறைந்த பட்சம் இரண்டு மைல் ஓட்டம். இரத்தத்தில் சர்க்கரை எப்போதுமே உயர் எல்லைக்குக் கீழே. ஒரு வேளை, லுகீமியாக இருந்தால்…”
“உனக்கு ஏன் அந்த சந்தேகம்?”
“ஒரு பழைய வீட்டை மலிவாக வாங்கி அதைப் புதுப்பித்து நல்ல விலைக்கு விற்பது என் தந்தையின் தொழில். வேலை நடக்கும்போது நாங்கள் அந்த வீட்டில் வசிப்பது வழக்கம். பழைய வர்ணங்களைத் தேய்த்து எடுத்து, தரையையும், சுவர்களையும் வெட்டி மாற்ற வேண்டும். அப்போது ஈயம், சிலிகா, ஆஸ்பெஸ்டாஸ் கலந்த தூசிகளை சுவாசித்திருப்பேன். உனக்குத் தெரிந்திருக்கலாம், அந்தக் காலத்தில் ஊர்திகளுக்கு ஈயம் கலந்த பெட்ரோல் பயன்படுத்தப்பட்டது. அதை எரித்தபோது ஈயம் வெளிப்பட்டு இருக்கும். இயற்கை உணவு என்று சொன்னாலும் நவீன விவசாயத்தினால் பூச்சிகொல்லிகளும், செயற்கை உரங்களும் என் உடலில் புகுந்திருக்கும். கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் இல்லத்தில் இருந்து ஒரு மைலில் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை. ரப்பர் மற்றும் டயர் தயாரிப்பில் பென்ஸீன் பெரும் அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒரு பங்கு நிச்சயம் வெளிப்பட்டு காற்றில் கலந்திருக்கும். இத்தனை வேதியியல் பொருட்களில் எதாவது ஒன்று, முக்கியமாக பென்ஸீன், என் உடலில் தங்கி கட்டுக்கடங்காத செல் வளர்ச்சியைக் கிளப்பிவிட்டிருந்தால்…”
“உனக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறதே!” அவன் பாராட்டின் பிரதிபலிப்பாக,
“இரசாயனப்பொருட்கள் எப்படி செல்களின் இயற்கையான வளர்-சிதை வினைகளை ஒருவழிப்பாதையில் திருப்புகின்றன என்பதை நீ நுண்துகள் மட்டத்தில் ஆராய்வதாக உன் வலைத்தளத்தில் படித்தேன்.”
அதனால் தான் அவனைத் தேடி வந்திருக்கிறாள்.
“எந்தவிதமான பொருட்கள்?”
“தினம் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்களில் இருக்கும் சில, மார்பகப் புற்றுநோய்க்குக் காரணிகளாக இருக்கலாம்.”
“எனக்கு உன்னையும் உன் ஆராய்ச்சியையும் பிடித்திருக்கிறது.”
“அப்படியென்றால், எனக்குத் துணையாக நான் தேடும் ரிசர்ச் ப்ரொஃபசர் பதவிக்கு…”
“நான் வரத் தயார்.”
“உன் அனுபவ அறிவு மிக உதவியாக இருக்கும். முதலில், உன் சந்தேகம் சரியா எனத் தீர்மானிக்க இரத்த சோதனை மற்றும் போன் மாரோ பயாப்ஸி.”
“இரண்டும் ‘நெகடிவ்’ ஆக இருந்தால்…”
“தினம் டெஸ்மாப்ரெஸின் இரண்டு முறை. அத்துடன் என் ஆய்வகத்தில் வேலை.”
“தாங்க்ஸ் டாக்!”
“நான் உன்னிடம் இருந்து நிறைய தெரிந்துகொண்டேன். அதற்கு நன்றி!” என்று எழுந்தான்.
செவ்வாய்க்கிழமை காலை வெங்கட் அவன் வீட்டில் இருந்து கிளம்பிய தகவல் வந்ததும் ரேவதி உடலையும் மனதையும் தயார் செய்து ஜன்னல் பக்கத்தில் காத்திருந்தாள்.
வியாழன் வெங்கட்டை வீட்டில் இறக்கியதும் மீதிநாள் வேலைக்குப் போனாள். மறுநாள் காலையிலும் மாலையிலும் வெங்கட் கூப்பிட்டு நலம் விசாரித்தான். அவள் நிலைமையைப் புரிந்துகொண்ட இன்னொரு ஆத்மா. ரம்யாவுக்கு நேர்ந்தது ரேவதிக்கும் நடக்கக்கூடாது என்கிற அவன் விருப்பமே அவள் சஞ்சலத்தை மட்டுப்படுத்தியது. சனிக்கிழமை ஷ்ரேயாவும் அவனும் டாக்டர் சந்திப்பை அவள் நினைக்காதபடி வேறு ஏதேதோ பேசினார்கள்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஐஸி நேரம் கழித்து எழுந்து முகத்தில் சுறுசுறுப்பைப் பூசி அம்மாவை அழைப்பதற்குள் பிற்பகல் வந்துவிடும்.
‘சாப்பாடு எப்படி?’
‘பாடங்களில் புரியாதது ஒண்ணும் இல்லையே.’
‘நல்ல வருமானம் தரும் இரண்டு திட்டங்களுக்கு பணம் வழங்கத் தீர்மானித்திருக்கிறோம்.’
‘இரண்டு மாதத்தில் வீட்டின் வாடகை அதிகமாகப் போகிறது.’
இன்னும் சில சாதாரண தகவல்களுக்கு நடுவில்…
“வர்ற செவ்வாய்க்கிழமை டாக்டரைப் பார்க்கணும்.”
“ஸ்பெஷல்லா ஒண்ணும் இல்லையே.”
“ஊகும். சும்மாத்தான்” என்பதைத் தொடர்ந்து பேச்சை மாற்ற,
“ஷ்ரேயா ரமணாவை உனக்குத் தெரிஞ்சிருக்கும். மூணு வருஷம் சீனியர்.”
“ஸ்டாட் போட்டியில பார்த்திருக்கேன். ரொம்ப புத்திசாலி.”
அதிக அழுத்தம் கொடுக்காமல், “நேத்திக்கி அவாளோட சாப்பிடப் போனேன்.”
“இப்ப ஷ்ரேயா என்ன பண்ணறா?”
“மெடிகல்.”
திங்கள்கிழமை அவள் பாஸ் ஃப்ரான்னிடம் மறுநாள் வேலைக்கு வர தாமதம் ஆகலாம் என்பதற்கான காரணத்தைச் சொன்னாள்.
“ஒன்றும் பிரமாதமாக இராது. மார்பகத்தில் ஒரு செல் தொகுதியை எடுக்கும் அறுவை சிகிச்சைக்கு நான் பயந்துகொண்டே போனேன். அது வெறும் கட்டி தான் என்று பயாப்ஸியில் தெரிந்தது.”
வெங்கட்டை சந்திக்காது இருந்தால்…
கடந்த நூற்றிஇருபது மணி நேரம்: ஒன்று, இரண்டு, … பதினொன்று, … இன்னும் நூறுக்கு மேல்.
அஷ்வினுக்குத்தான் இரத்தத்தில் குறைபாடு என்றால் அவளுக்குமா?
இந்த உடலின் முடிவு தேதி ஆறு மாதத்தில்? வறுவல் பையின் மேல் போட்ட தேதிக்கும் முன்பே.
வாழ்க்கையில் சாதிக்காதது அனுபவிக்காதது எதாவது இருக்கிறதா?
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து ஒரு கல்லூரிப்பட்டம், அதை வைத்து சுமாரான வேலை, பெற்றோர்களுக்குப் பிடித்த மாப்பிள்ளை, விசுவாசமான குடும்ப வாழ்க்கை. இதற்கு மேல் அவளுக்கு எதுவும் முக்கியமாகப் பட்டதில்லை.
யூ.எஸ். வந்த புதிதில் மாநிலச் சட்டங்களின் சிக்கலில் இருந்து தப்பிக்க, குடும்ப நண்பரின் அறிவுரையின்படி, ‘எனக்கு எதாவது நேர்ந்தால் என் மகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறேன்’ என்று உயில் எழுதினாள். நல்ல வேளை, அதற்கு அவசியம் நேரவில்லை.
கல்லூரியின் முதல் ஆண்டில் ஐஸிக்கும் அவளுக்கும் பொதுவாக ஒரு கடன் அட்டை. அநாவசியச் செலவு என்று அதில் எதுவும் அவள் கண்ணில் பட்டதில்ல. ஐஸியிடம், ‘ உன் குழந்தைகளைப் பார்க்க நான் கொடுத்துவைக்கவில்லை. சேமிப்பு, ஆயுள் காப்பீடு என்று ஒரு மில்லியனுக்கு மேல் தேறும். நான் இல்லாவிட்டாலும் உனக்குப் பாதுகாப்பு. பொறுப்பான வயது வரை உன்னை வளர்த்துவிட்ட திருப்தியுடன் போகிறேன்.’
டாக்டரை சந்திக்க அவளாகத் தனியாக புற்றுநோய் மையத்துக்குப் போக வேண்டும். காரை நிறுத்திவிட்டு க்ளினிக்கில் காத்திருக்கும்போது மனம் என்னவெல்லாம் கற்பனை செய்யும்?
வெங்கட்டின் ஊர்தி கண்ணில்பட்டதும் கைப்பையுடன் வீட்டைப் பூட்டிவிட்டு வந்தாள்.
“எல்லாம் எப்படி?”
“அதிகம் மனதை அலட்டிக்கொள்ளவில்லை.”
“குட்! நீ டாக்டரைப் பார்க்கும்போது மனதைத் திருப்ப வேலை வைத்திருக்கிறேன்.”
சஞ்சய் அடுத்த நோயாளியின் மருத்துவ அறிக்கைகளைத் தனித்தனியாகப் படித்தான். பிறகு விவரங்களை ஒருசேரப் பார்த்தான். அவர் சந்திப்புக்குத் தயார் என்று நர்ஸ் அறிவித்ததும் அவள் குறிப்பிட்ட சோதிக்கும் அறைக்கு நடந்து அதன் கதவைத் தட்டிவிட்டு நுழைந்தான்.
டாக்டரைப் பார்த்ததும் ரேவதிக்கு அஷ்வின் ஞாபகம் வந்தது. ஒரு குறிப்பிட்ட முடிதிருத்துநரிடம் தான் நம்பிக்கையுடன் அஷ்வின் தன் தலையை நீட்டுவது வழக்கம். வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் அவர் முருகன் கோயில்களுக்கு யாத்திரை கிளம்பி விடுவார். அதனால் பல சமயங்களில், ‘நான் உனக்குப் பின்னிவிடட்டுமா? அஷ்!’ என்று ரேவதி கேலி செய்ய வேண்டி வரும். இவருக்கும் அடர்த்தியான நீண்ட நரை எட்டிப்பார்க்காத தலை மயிர்.
“குட் மார்னிங், மிஸ் ரங்கநாத்!”
“குட் மார்னிங் டாக்டர்! ரேவதி என்றே அழைக்லாம்.”
“குட்! எப்படி இருக்கிறாய்? ரேவதி!”
“ஆன்காலஜிஸ்ட்டை சந்திக்க வருவதால் மனக்கலக்கம்.”
“புரிகிறது.”
“நீங்கள்? டாக்டர்!”
“நாளின் ஆரம்பத்தில் ஒரு சந்தேகமான கேஸ். உன் மருத்துவ அறிக்கைகளைப் பார்த்து மனம் தேறிவிட்டது.”
“ஓ! அப்படியென்றால் நான் போகலாமா?” என்று ஆசிரியருக்குப் பயந்த மாணவி போல எழுந்தாள்.
“நாட் ஸோ ஃபாஸ்ட்” என்று புன்னகைத்தான்.
பணிவுடன் உட்கார்ந்தாள்.
“டென்னஸி வங்கியில் நீ வேலை செய்வதாக அறிகிறேன்.”
“யெஸ். பெரிய ப்ராஜெக்ட்களில் முதலீடு செய்வது என் பொறுப்பு.”
“மில்லியன்கள் உனக்குச் சில்லறை.”
“கணினியின் மாய எண்களாக இருக்கும்வரை.”
“கடைசியாக…”
“மலேஷியாவில் பென்ஸீன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைக்க நாங்கள் உதவி செய்கிறோம். நைலான் உள்பட பலவிதமான ப்ளாஸ்டிக் உறைகள், உடையக்கூடிய பொருட்களைப் பாதுகாக்கும் பாலிஸ்டைரின், வெப்பம் வீணாவதைத் தடுக்கும் பாலியுரெதேன் நுரைகள் என்று நாம் தினம் பயன்படுத்தும் பலவற்றில் பென்ஸீன் அடங்கி இருக்கிறது.”
“அதனால், இது ஒரு நல்ல முதலீடு.”
சிறு யோசனைக்குப் பிறகு கணினித்திரையை ஒளிரவைத்தான்,
“உடலின் எதிர்பாராத, திடீர் மாற்றங்களை ஆரம்பத்திலேயே கவனித்து, தேவையான தடுப்பு வழிகளை மேற்கொள்ளுவது நல்லது என்று தான் டாக்டர் க்ரான்ட் உன்னை என்னிடம் அனுப்பி இருக்கிறார்.”
“உண்மை தான்” என்று கலங்கிய மனதைத் தெளியவைத்தாள்.
“எனக்கு உன்னைப்பற்றிய விவரங்கள் இன்னும் இரண்டு தேவை.”
“எதுவானாலும்.”
“சுருக்கமாகச் சொல்வதென்றால்… எலும்பின் உள்ளீட்டில் இரத்தத்தின் செல்களை உற்பத்தி செய்வதை ஜேஏகே2 என்கிற ஜீன் கட்டுப்படுத்துகிறது. அதில் எதேச்சையாக உண்டான சிறு மாற்றம் உன் இரத்தத்தில் வெள்ளை செல்கள் அதிகப்படியாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் ஊகம். அதைச் சரிபார்க்க இன்னொருமுறை இரத்தம் கொடுக்க வேண்டும்.”
“அதில் வித்தியாசம் தெரியும்.”
“ஜீன் என்பது மில்லியன் கணக்கான நியுக்ளியோடைட்களின் வரிசை. அதில் ஒன்று மாறுபட்டால் கூட அதைக் கண்டுபிடிக்க சில சோதனைக்கூடங்கள் இருக்கின்றன.”
ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“கடைசியாக எடுத்த உன் இரத்ததில் முழு வளர்ச்சி அடையாத செல்கள் அதிகம் இல்லை என்பதைக் கவனித்தேன். அதை உறுதி செய்ய ஒரு போன் மாரோ பயாப்ஸி” என்று கணினி வழியாக இரண்டு தகவல்கள் அனுப்பினான். “ஒரு நீண்ட ஊசியால் எலும்பின் நடுப்பகுதியில் இருந்து சிறிது சதை எடுப்பார்கள். கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும்.”
பயாப்ஸி என்ற வார்த்தை கொடுத்த பயத்தை ஒதுக்கி,
“அப்படியே செய்கிறேன்” என்றாள்.
“இவற்றின் முடிவுகள் தெரிந்ததும் இரண்டு வாரங்கள் கழித்து நாம் மறுபடி சந்திப்போம். அப்போது உன் நிலைமை பற்றி ஒரு நிச்சயமான கணிப்பு எனக்குத் தெரியும். அது வரை நீ இதைப்பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது.”
அவளுக்கு ஒரு வாரம் பின்னால் போனதுபோல இருந்தது.
“நோயாளிகள் உங்களுக்குக் கொடுத்த பாராட்டுக்களை இப்போது நம்புகிறேன்.”
“நீயும் ஒன்று தரப்போகிறாய்” என்று ஒரு வெற்றிப் புன்னகை.
ரேவதியின் மனம் இலேசானது.
“மீதி நாள் நல்லபடியாகப் போகட்டும்” என்று சஞ்சய் எழுந்தான்.
“உங்களுக்கும், டாக்டர்!”
அவளை அழைத்துச்சென்று க்ளினிக் நுழைவிடத்து மங்கையிடம் ஒப்படைத்துவிட்டு விடைபெற்றான்.
“தாங்க்ஸ், டாக்டர்!”
“ஞாபகம் இருக்கட்டும்! நிச்சயமாகத் தெரியும்வரை…”
“கவலையே பட மாட்டேன்” என்று மனம்விட்டு புன்னகை கொடுத்தாள்.
காத்திருந்த இடத்தில் இருந்து எழுந்துவந்த வெங்கட் அவள் முகத்தின் தெளிவைக் கவனித்தான்.
“போன் பயாப்ஸி செய்ய வேண்டுமாம்.”
அவன் எதிர்பார்த்தது தான்.
“வியாழன் காலை, பத்தரை மணி. இதே இடம்” என்று வரவேற்பு மங்கை ஒரு அட்டையை அவளிடம் நீட்டினாள்.
“தாங்க்ஸ்.”
“அது முடிந்ததும் யாராவது உன்னை வீட்டிற்கு அழைத்துப் போக வேண்டும். அடுத்த இரண்டு நாட்களைச் சுலபமாக எடுத்துக்கொள்வது நல்லது.”
“எல்லாம் என் பொறுப்பு” என்றான் வெங்கட்.
இரத்த சோதனைப் பகுதியில் பெயரைப் பதிவுசெய்து அழைப்பிற்குக் காத்திருந்த போது ரேவதி பார்வையை நேராக வைத்து அவன் கையை இலேசாக அழுத்தி,
“பல ஆண்டுகளாகச் செய்யாத ஒரு காரியம் செய்ய திடீரென்று எனக்கு ஆசை, வெங்கட்!” என்றாள்.
அவனும் அவள் பக்கம் திரும்பாமல்,
“ரேவதி! நானும் அதைச்செய்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று ஏக்கத்துடன் சொன்னான்.
அவள் வீட்டில் அவர்கள் நுழைவதற்கு எடுத்த ஒரு மணி ஒரு வருஷமாக நீண்டது.
மருத்துவத்தின் எத்துறையிலும் டாக்டர்கள் நோயாளிகளுக்கு சோக செய்தியைத் தர வேண்டிய தருணங்கள்.
‘மிகையான இரத்த அழுத்தம். சாப்பாட்டில் எண்ணெயும் உப்பும் இனி பாதி தான். தினம் முப்பது நிமிட நடை. இரண்டு வேளை இந்த மாத்திரை. இதனால் சில பின்விளைவுகள் இருக்கும்.’
அவர்கள் வாழ்க்கையில் சிற்சில மாற்றங்கள், அவ்வளவுதான்.
‘எலும்பு முறிவு எக்ஸ்-ரேயில் தெளிவாகத் தெரிகிறது. கட்டுப்போட்டதும் கையை ஆறுவாரங்கள் அசைக்காமல் வைத்திருக்க வேண்டும்.’
ஒரு கையினால், அது இடது என்றாலும், ஆடை மாற்றிக்கொள்வதில் இருந்து கார் ஓட்டுவது வரை எத்தனையோ காரியங்கள் செய்யலாம். கணினியின் சாவிகளைத் தொடுவது கூட இப்போது சாத்தியம். காலில் கட்டு என்றால் சிரமம் அதிகம். ஊன்று கோலில் நடக்கப் பழகவேண்டும். குளிப்பதில் இருந்து எதையும் யோசித்துக் கவனமாகச் செய்ய வேண்டும். ஆனாலும், காலப்போக்கில் எலும்புத்துண்டுகள் இணைந்து, கட்டு பிரித்ததும் வாழ்க்கை பழைய நிலைக்குப் போய்விடும் என்கிற நிச்சயம்.
புற்றுநோய் மருத்துவரின் நிலைமை அப்படி இருப்பதில்லை. அறிகுறிகள் கவனிக்கப்பட்டு அவரிடம் அனுப்பப்படும் போது நோய் முற்றி இருக்கும். சில சமயங்களில் முன்னறிவிப்பு எதுவும் தராமல் அது உடலைப் பற்றிக்கொள்ளலாம். ‘கொஞ்சம் கொஞ்சமாக உடல் சீரழிந்து இயக்கம் நிற்கப்போகிறது’ என்கிற அதிர்ச்சியை எப்படிச் சொல்வது? சில சமயங்களில் நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்களின் முன்னிலையில் தகவலைச் சொல்வது வழக்கம்.
சான்ட்ராவுடன் இரண்டாம் சந்திப்பு.
“என் தொழிலில் நான் செய்தாக வேண்டிய எனக்குப் பிடிக்காத காரியம்” என்று சஞ்சய் ஆரம்பித்தான்.
“எலும்பின் உள்ளீட்டில் நிறைய பிறழ்வுகள். இரத்த செல்களில் நிறைய வளர்ச்சி அடையாதவை. ஒரு வாரமாக என் உடலில் சக்தி குறைந்துவருவதில் இருந்து நானே எதிர்பார்த்தேன்.”
“அக்யுட் மயலாய்ட் லுகீமியா என்பதில் சந்தேகமே இல்லை” என்பதைத் தொடர்ந்து, “உன் அறிவைப் பயன்படுத்திக்கொள்வதாக இருந்தேன்” என்று துயரத்தை அவளுடன் பகிர்ந்துகொண்டான்.
“இதற்கு எந்த மருந்தும் இல்லை.”
“உன் வாழ்வை நீட்டிக்க எனக்குத் தெரிந்து ஒரு வழிதான்.”
ஒரு அச்சடித்த காகிதத்தைப் படித்தான்.
1. ஒரு மாதம். கேன்சர் செல்களை அழிப்பதற்கு அஸாசைட்டிடின் போல நிதானமாகச் செயல்படும் கீமோ (செல்களின் வளர்ச்சியைத் தடுத்து வித்தியாசமான செல்களைக் கொல்லும் மருந்து). ஒரு மாதம் முடியும்போது நோய் இல்லையென்றால்…
2. உடல் தேற 4-6 வாரங்கள். மறுபடி போன் பயாப்ஸி. அது சாதகமாக இருந்தால்…
3. பொருத்தமான இன்னொருவரின் ஸ்டெம் செல்கள் உன் உடலில் ஏற்றப்படும். இப்போதைய புதிய நோய்களைத் தடுக்கும் அமைப்பு முழுவதும் அழிக்கப்பட்டு அதன் இடத்தில் புதிய மாற்று அமைப்பு. அதன்போது ஒரு மாதம் மருத்துவகத்தில் தங்க வேண்டும்.
அதற்குப் பிறகும், அவ்வப்போது கண்காணிப்புக்கு வந்து போக மருத்துவ மையத்தின் பக்கத்திலேயே வசிப்பது நல்லது.
அவனிடம் இருந்து காகிதத்தை வாங்கிக்கொண்ட சான்ட்ரா,
“ஸ்டெம் செல்களுக்காக என்னுடன் ஒத்துப்போகும் ஒருவரைக் கண்டுபிடிப்பதில் இருந்து ஒவ்வொரு கட்டமும் சாத்தியக்குறைவான நிகழ்வுகள்.”
“கரெக்ட்.”
“எல்லாம் திட்டமிட்டபடி நடந்து நான் முழு குணம் அடைவதற்கு…”
“பதினைந்தில் இருந்து இருபது சதம்.”
“அதாவது, நடுவில் எதிர்பாராத சிக்கல்களால் உடல் நலம் இழந்து ஓய்ந்துவிடலாம்.”
சஞ்சயின் வருத்தம் கலந்த மௌனத்தில் ஒப்புதல்.
“இதற்கான செலவுகள்?”
“எனக்குத் தரப்பட்ட எண்களில் இருந்து உன் பங்கு எண்பதாயிரம் டாலரின் பக்கம்.”
“மீதி?”
“நூறாயிரத்துக்கும் அதிகம். அதை இன்ஷுரன்ஸ் அரசாங்கத்திடம் இருந்து பறித்துவிடும்.”
“யோசிக்க சில நாள் வேண்டும்.”
வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லாத சில நிமிடங்கள்.
இரண்டு வாரம் கழித்து சஞ்சயை சந்திக்கக் காத்திருந்த ரேவதிக்கு தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கைதியின் நினைவு வந்தது. சேச்சே! அப்படியொன்றும் இராது. வீணான கவலை. தொடை எலும்பின் நடுப்பகுதியில் இருந்து பல செல்கள் எடுக்கும் மருத்துவ செயல்பாட்டிற்கு வெங்கட் அழைத்துவந்தான். அது முடிந்ததும் அவள் இல்லத்தில் தங்கி உதவியாக இருந்தான். அவன் துணை இல்லாதிருந்தால் அவள் எப்படி சமாளித்திருப்பாள்? தந்தைக்கு முழு விவரம் தெரிவிக்காமல்,
‘ஹாஸ்பிடல்ல ஒரு செக்-அப். வெங்கட் கூட்டிண்டு போய் கொண்டுவந்து விட்டான். நீ கவலைப்படாதே!’ என்றாள்.
ஐஸியிடம் வாடகை அதிகமாகப் போவதால் ஒருவேளை அவள் இடம் மாறலாம் என்று மறைமுகமாகச் சொன்னாள்.
“உன்னை அதிக நேரம் காக்கவைத்துவிட்டேனா? மன்னிப்பைக் கேட்கிறேன்” என்று சொல்லியபடி சஞ்சய் வந்து அவள் முன் அமர்ந்தான். அவன் இறுக்கம் இல்லாத முகத்தையும் இன்னும் நீளமாக வளர்ந்திருந்த தலைமயிரையும் கவனித்து அவளுக்கு நிம்மதி.
“நல்ல சேதி சொன்னால் நான் உங்களை மன்னித்துவிடுவேன்” என்று புன்னகைத்தாள்.
“ஓரளவுக்கு நல்ல சேதிதான். எப்படிச் சொல்வது என்று தான் யோசிக்கிறேன்.”
“சந்தோஷமான தகவலை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.”
“இது எப்படி? புற்றுநோய் டாக்டர் என்பதால், ‘இந்த பூமியில் எனக்கு இன்னும் எத்தனை வருஷம், இல்லை எத்தனை மாதம்?’ என்று நோயாளிகள் என்னைக் கேட்பது வழக்கம். நான் உன்னைக் கேட்கிறேன், உனக்கு எத்தனை காலம் வாழ ஆசை?”
“சில வாரங்களுக்கு முன் கேட்டிருந்தால் பத்து பன்னிரண்டு ஆண்டுகள் போதும் என்று சொல்லி இருப்பேன். கல்லூரியில் இருக்கும் என் ஒரே பெண் படிப்பை முடித்து பொறுப்பான ஒருவனுடன் சீரான பாதையில் நடக்கத் தொடங்கியதும் எனக்கு இவ்வுலகைவிட்டுப் போக வருத்தம் இருக்காது. ஆனால்… இப்போது இருபது கூடப் போதாது.”
“காரணம் நான் தெரிந்துகொள்ளலாமா?”
“தாராளமாக.” அலைபேசியில் ஒரு தகவல் அனுப்பினாள்.
கதவு தட்டும் ஓசை.
சஞ்சய் எழுந்துசென்று அதைத் திறந்து வெங்கட்டை வரவேற்றான்.
“இந்த மனிதர் தான் காரணம். எல்லா மருத்துவ சந்திப்புகளுக்கும் கூடவே வந்தார். இவரால் வாழ்க்கையில் பிடிப்பும் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையும் எனக்கு வந்திருக்கின்றன.”
“வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கும்போது, இப்படிப்பட்ட ஒருவன் துணைக்கு வரும்போது உடலுக்கு வாழ என்ன தயக்கம்? நான் அறிந்த வரை, உன் நிலைமையில் இருபது ஆண்டுகள் நிச்சயம், முப்பது சாத்தியம்.”
“அது போதும் டாக்டர்!”
“கவனத்தில் வைக்க வேண்டிய சில மருத்துவ விவரங்கள். நான் நினைத்தபடி ஜேஏகே2 ஜீனில் பிறழ்வு நிகழ்ந்திருக்கிறது. அதனால் எலும்பின் உள்ளீட்டில் வெள்ளை செல்களும் ப்ளேட்லெட் துகள்களும் ஆரோக்கிய அளவுக்கு அதிகமாக உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் புற்றுநோய் சிதைவுக்கான அடையாளங்கள் தென்படவில்லை. தற்போதைக்கு ஆபத்து இல்லை என்றாலும் பாதுகாப்புக்காக தினம் 89 மிகி ஆஸ்ப்ரின் எடுத்துக்கொள்வது நல்லது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்த சோதனை. வெள்ளை செல்கள் மற்றும் ப்ளேட்லெட் துகள்களின் அளவுகள் கட்டுக்குமீறிப் போனால் மட்டுமே என்னை சந்திக்க வந்தால் போதும். அப்போதும் ஜேஏகே2 ஜீன்ஸின் செயல்பாட்டைக் குறைக்க ஆபத்தில்லாத மருந்து இருக்கிறது.”
ரேவதி எழுந்து சஞ்சயின் கையைப் பற்றி,
“உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது, டாக்டர்!”
“டாக்டர் ரமணா! உன் மனைவியைக் காப்பாற்ற முடியாமல் போன மருத்துவர்களில் நானும் ஒருவன். அதை இனிமேல் நான் நினைக்கப் போவதில்லை” என்று ரேவதியைப் பார்த்துச் சொன்னான்.
சிகிச்சையைத் தொடங்குவதற்காக சான்ட்ரா மருத்துவகம் வரவில்லை என்பது அவள் தன்னுடன் யாரையும் அழைத்து வராததில் இருந்து சஞ்சய்க்குத் தெரிந்துவிட்டது. சம்பிரதாய வார்த்தைகளைத் தவிர்த்து அவள்,
“எனக்கு மிச்சம் இருக்கும் காலத்தை என் இல்லத்தில், என் குடும்பத்தின் சூழலில், என் தோட்டத்தைப் பார்த்தபடி செலவிட ஆசை. புதிய இலைகளும் பூக்களும் அலங்கரிக்கும் இளவேனில் பருவத்தை கடைசி தடவையாக அனுபவிக்கிறேன்.”
அவள் கணவன், ஒரு மகன் இருவரும் அவள் மனதை மாற்ற முயற்சித்து அதைக் கைவிட்டு இருப்பார்கள்.
“என்னால் அரசாங்கத்துக்கு அநாவசியச் செலவு வேண்டாம். இளையவர்களின் வாழ்வை நீட்டிக்க அது பயன்படட்டும்!”
விதிக்கு நிச்சயமாகக் கண் இல்லை.
“உன் காலம் சிரமம் இல்லாமல் கடந்துபோக நான் உதவி செய்வேன். உடல் வலியைக் குறைக்க மருந்து. கூடியமட்டிலும் நீ விரும்பியதைச் செய்வதற்கான சக்தியைக் கொடுக்க வாரம் ஒருமுறை உடலில் இரத்த ஏற்றம்.”
“தாங்க்ஸ் டாக்!”
“மரண தண்டனை விதித்ததும் நோயாளிகளை, ‘நீ சாதிக்க விரும்புவது எதாவது இருக்கிறதா?’ என்று ஆறுதலுக்கு நான் கேட்பது வழக்கம். சில நாட்களாக உன் வாழ்க்கை விவரங்களைப் பார்த்தபோது அந்தக் கேள்வி அநாவசியம் என நினைக்கிறேன். நீ பிறந்தபோது இருந்தததை விட இறக்கும்போது இந்த பூமி சிறப்பாக இருக்க நீ எவ்வளவோ செய்திருக்கிறாய். நாடகங்கள் வழியாக இளைஞர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வைக் கொடுத்தாய். மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆதரவாகப் பழகி இருக்கிறாய்.”
“அதை ‘மென்ட்டல் ஹெல்த் செர்வீஸ்’ நிறுவனத்தின் சார்பில் செய்தேன். அப்போது நான் கவனித்த ஒரு உண்மை. இந்த இரண்டு வாரத்தில் அந்த கவனிப்பை புதிய நோக்கில் மறுபடி பார்க்கிறேன். அதைச் சொல்லலாமா?”
“கட்டாயம்”.
“பெரும்பாலும் மனநோயின் ஆரம்பம் வேலை இழப்பு. அதிலிருந்து நிதிப்பற்றாக்குறை, அல்கஹாலுக்கு அடிமை, குடும்பத்தில் பிளவு, வீட்டில் இருந்து வெளியேற்றப்படுதல் என்று படிப்படியாக இறக்கம். ஆழ்துயரத்திற்கு எட்டியதும் பாதிக்கப்பட்டவர்கள் மனநோய் மருத்துவர் கவனத்துக்கு அனுப்பப்படுவார்கள். அவர் சிபாரிசில் ப்ரோஸாக், பாக்ஸில் போன்ற மருந்துகள். இந்த வீழ்ச்சியை ஆரம்பத்திலேயே தடுத்துநிறுத்த அனைவருக்கும் அடிப்படை வருமானம், அதற்கான செலவும் குறைவு என்று நான் சொன்னது மேல் அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. மற்ற வர்த்தக நிறுவனங்களைப் போல, சென்ற ஆண்டை விட இந்த வருஷம் காணிக்கை பத்து சதம் அதிகம், கவனிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்று சேவை அமைப்பின் வளர்ச்சியைக் காட்டுவதில் தான் அவர்களுக்குக் குறி. அரசுக்கும் மருந்து கம்பெனிகளுக்கும் சேவை நிறுவனம் தங்களை நம்பித்தான் நடக்கிறது என்கிற பெருமை. நியாயமாகப் பார்த்தால் ஒரு சேவை நிறுவனத்தின் குறிக்கோள் அதன் உதவி தேவைப்படுகிறவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக இருக்க வேண்டும். ஹார்ட் அஸோசியேஷன் என்றால், அதன் பிரதான வேலை மக்களின் இதயத்தை வலுப்படுத்துதல். இந்த ரீதியில் நான் எழுதப்போகும் கட்டுரை எனது கடைசி முயற்சி.”
அவள் சொன்னதை சஞ்சய் தீர யோசித்து,
“நீ அனுபவத்தில் கண்டறிந்த உண்மையை நான் இப்போது முழுமையாக உணர்கிறேன். ‘க்யூர் ஃபார் ப்ரெஸ்ட் கேன்சர்’ நிறுவனத்தில் நான் ஒரு கௌரவ அங்கத்தினர். மார்பகப் புற்றுநோய் என்றதும் நிர்வாகத்தினருக்குத் தெரிந்தது குடும்ப சரித்திரம் மற்றும் உணவில் மிகையான கொழுப்பு மட்டுமே.”
“அந்த இரண்டையும் விட்டுவிட்டு, சுற்றுச்சூழலில் வேதியியல் பொருட்களை அகற்றுவதில் கவனம் செலுத்தினால் புற்றுநோய் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அது அந்நிறுவனத்துக்கு ஆபத்து. அதற்கு பதிலாக, மருந்து கண்டுபிடிக்க அரசிடம் பணக்காரர்களிடம் மானியங்கள் கேட்பது சிறந்த வழி. அப்படி நடக்கும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஒவ்வொரு புற்றுநோய்க்கும் ஒரு மருந்து உருவாக்கி பல ஆயிரம் டாலருக்கு விற்பது ஃபார்மா கம்பெனிகளின் சந்தை மதிப்பை உயர்த்தும் வழி. பாதகமான பின்விளைவுகளை உண்டாக்கும் வேதியியல் பொருட்களைக் கட்டுப்படுத்த ஈ.பி.ஏ.(என்விரன்மென்ட்டல் ப்ரொடெக்ஷன் ஏஜென்ஸி)க்கு அதிகாரம் மிகக்குறைவு என்பதால் சேவை நிறுவனங்களும் நிலையான எதிர்காலத்துக்குத் திட்டமிடலாம்.”
“புரட்சிகரமான இக்கருத்தை வெளிப்படுத்தும் உன் கட்டுரையை எனக்கு அனுப்பு! அதைப் பிரபலப்படுத்த முயற்சிப்பேன்.”
“என்னை எதிர்பாராமல் தாக்கி என் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவரும் இந்நோய்க்கு அர்த்தம் கிடைக்கட்டும்!”
எழுந்து கட்டிக்கொண்டு விடைபெற்றார்கள்.
தன் அறைக்குப் போனதும் சஞ்சய் ஒரு தகவல் அனுப்பினான்.
– – ரேவதி! பென்ஸீன் தயாரிப்பில் முதலீடு செய்வதை நிறுத்த முடியுமா? – –
அடுத்த முறை அம்மாவை அழைத்துப் பேசும்போது, “புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது இனிமேல் என் குறிக்கோள் இல்லை” என்று சொல்ல வேண்டும்.
முற்றும்.
