Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

ரவிசுப்பிரமணியன் கவிதைகள், இசை வடிவம்

காலையில் மாலையில் கூவும் பறவை

https://solvanam.com/wp-content/uploads/2025/04/ரவிசுப்பிரமணியன்-கவிதைகள்-இசை-வடிவம்-1.-காலையில்-மாலையில்-கூவும்-பறவை.mp3

காலையில் மாலையில் கூவும் பறவை
இடையில் எங்கே போய் வருமோ

சுதியில் இசைக்கும் பறவையைப் பார்த்து
மேலும் பறவைகள் வந்தமரும்

ஒலிக்கும் குரலின் இனிமையாலே
மொக்குகள் எல்லாம் பூத்திருக்கும்

காலையில் மாலையில் கூவும் பறவை
இடையில் எங்கே போய் வருமோ

கறுத்த மூக்கைக் கிளையில் தீட்டி
சிறுத்த உடலையது உதறிச் சிலிர்த்தபடி

இரண்டு புறமும் தலையை நீட்டி
யாரைப் பார்க்குமோ சில சமயம்

கூவும் பறவை சிலவேளை
மண்ணில் வந்தும் விளையாடும்
தாவிப் பறந்து நடந்து வரும்
சுறுசுறு பர பர பறவையுனக்கு
கரு கரு இருட்டு என்றால் ஆகாதோ.

காலையில் மாலையில் கூவும் பறவை
இடையில் எங்கே போய் வருமோ
சுறுசுறு பர பர பறவையுனக்கு
கரு கரு இருட்டு என்றால் ஆகாதோ
உனக்கு இருட்டு என்றால் ஆகாதோ.

ஹம்சநாதம்


மலரின் இருப்பு மணத்தை சொல்லுகையில்

https://solvanam.com/wp-content/uploads/2025/04/ரவிசுப்பிரமணியன்-கவிதைகள்-இசை-வடிவம்-3.-மலரின்-இருப்பு.mp3

மலரின் இருப்பு மணத்தை சொல்லுகையில்
மரத்தின் அசைவு காற்றை சொல்லுகையில்

பறவையின் பாடல் இசையை சொல்லுகையில்
வாலின் அசைவு வாஞ்சையை சொல்லுகையில்

சொல்லால் ஆவதென்ன என்
சொல்லால் ஆவதென்ன நீ சொல் அமுதே

சொல்லால் ஆவதென்ன நீ
சொல் அமுதே சொல் அமுதே சொல் அமுதே.

காபி ராகம்.


நினைவின் கமஹங்களை இசைத்தபடி

https://solvanam.com/wp-content/uploads/2025/04/ரவிசுப்பிரமணியன்-கவிதைகள்-இசை-வடிவம்-2.-நினைவின்-கமஹங்களை.mp3

நினைவின் கமஹங்களை இசைத்தபடி
எங்கோ தொலைவில்
இழைகிறதொரு வயலின்

எந்நேரமும் உந்தன் சந்தேகக் கற்பனைகள்
திரண்டு குவிந்து மெளனத்தில் நீளும்

இந்த அமைதியின் நடுவே
மெளனத்தில் நீளும்
இந்த அமைதியின் நடுவே
நம் நல் மணங்கமழ் நினைவின்
கமஹங்களை இசைத்தபடி
எங்கோ தொலைவில்
இழைகிறதொரு வயலின்

நினைவின் கமஹங்களை இசைத்தபடி

நாரச குறை ஒசைகள் நித்தம் பழகிய செவிக்கு
நறுந்தேன் இனிதன்றோ
தரும் இதம் இசையன்றோ
அல்லது ஏன், நல்லது கேள்
அது சுநாத சுகமன்றோ

நம் நல் மணம் கமழ் நினைவின்
கமஹங்களை இசைத்தபடி
எங்கோ தொலைவில்
இழைகிறதொரு வயலின்.


ரீதி கெளளை

Exit mobile version