Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

மதார் கவிதைகள்

1.
மரத்தின் கிளைகள்
அசைவது
கனவு
என்றே
தோன்றுவது எப்படி

கண் அறியாக் காற்று
கனவன்றி வேறென்ன

கிளையசையும் மரம்
தூக்கத்தில் அது
உளறுவதுதான் என்ன


2.

தெருவில்
ஒருவன் இறந்து கிடக்கிறான்

அவன்
காலில்
ஒற்றைச் செருப்பு
மாத்திரமே உள்ளது

இன்னொன்று
எங்கோ
தூக்கி வீசப்பட்டிருக்கும்

அந்த இன்னொரு செருப்பைத்
தேடிக் கண்டுபிடித்து
எடுத்தாக வேண்டும்

அவன் கால்களில்
அதை அணிவித்திட வேண்டும்

கையை எடுத்து வந்து
பொருத்துவதைவிட
அது எளிதானது

சீக்கிரம் முடியும் வேலையும் கூட..


3.
ஒரு காகமும்
அதன் நிழலும்
அருகருகே
அமர

வித்யாசத்திற்காய் –
காகம் பறந்தது
நிழல் நீந்தியது


4.
ஆத்தங்கரையோரப்
பிள்ளையார்
அழுது புலம்பி
வழி கேட்டாலும்
ஆற்றுக்கு
வழி கேட்டாலும்
ஆற்றுக்கே
வழி சொல்கிறார்


5. அக்னிப் பிரவேசம்

சமைந்த குமரி போல்
குத்த வைத்த
இந்தப் பாறைமீது

மழை
தொடங்குகிறது

கடந்த பஸ்ஸின்
சன்னல் வழி
நீராட்டு விழாவைப் பார்த்த
ஏராளம் பேரில்
JK வும் ஒருவர்


6. மக்க மதினா

மக்காவுக்கும் மதினாவுக்கும்
உம்மாவை அனுப்ப
என்னிடம் காசில்லை

யாராவது
மக்கா சென்று வந்தால்
உம்மாவுக்கு ஆசை வந்துவிடும்

நிலைகுத்திய விழிகளோடு
சன்னலில் அமர்ந்திருப்பாள்

தொட்டிலில் பேரன் அழுவது
கேட்டதும் திரும்பிவந்து தூக்குவாள்

முத்து
வைரம்
மாணிக்கம்
என்றெல்லாம் அடுக்கிவிட்டு
மக்கா என்பாள்
மதினா என்பாள்

“மக்க மதினா
மக்க மதினா”

Exit mobile version