சமீபத்தில் காலமான அமெரிக்க இயக்குனர் டேவிட் லிஞ்ச் (1946 – 2025) சமகால இயக்குனர்களைப் போல அசிரத்தையூட்டும் அறிவியல் புனைவுகளாலோ, புலன்களைத் தாக்கும் வேகத்தாலோ, உணர்ச்சி கேளிக்கைகளாலோ திரையுலகின் இதிகாசத்தில் இடம்பிடிக்க முயன்றவர் அல்ல. டேவிட்டின் முயற்சிகள், ஒன்றிரண்டை தவிர, பல தளங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் சந்திப்பு எனச் சொல்லலாம். அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இணையாகக் காட்சியமைப்புகளைக் கையாள இன்னொருவரால் முடியுமா என்பது சந்தேகமே. பிளவுண்ட திரைக்கதை, மௌனப் பின்னணி, உணர்ச்சியற்ற அண்மை முகக் காட்சிகளின் மூலம் தனித்துவக் கதைசொல் பாணியை உருவாக்கியவர். அவர் இயக்கிய சில திரைப்படங்களின் கதைச் சுருக்கங்கள் கீழ்வருபவை.
1 . கம்பளிக்குள் ஒரு குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறது. மற்றொரு காட்சியில் வேற்று கிரஹ வாசி தன் விண்கலத்தில் கைக்கம்பிகளை இயக்குகிறான். குழந்தை அடக்கமுடியாமல் அழ ஆரம்பிக்கிறது. இவை இரண்டிற்கும் ஏதோ ஓர் இணைப்பிருக்கிறது. முடிவில் வினோதமான சிகை அலங்காரம் கொண்ட கதாநாயகன் அந்தக் கம்பளியை அவிழ்த்துப் பார்க்கையில் குழந்தையென நினைத்தது ஆண் விந்தின் தலையுடைய வேற்று கிரஹ வாசி.
2 . எதிர்காலத்தில் நடக்கும் கதையில் வேற்றுக் கிரஹம் ஒன்றில் கிளர்ச்சி வெடிக்கிறது. அந்தக் கிரஹத்தில் இயற்கையாகக் கிடைக்கும் பதார்த்தம் ஞால அதிவிரைவு போக்குவரத்துக்கு இன்றியமையாதது. அந்தக் கிரஹத்தின் பழங்குடிகளை அடிமைப்படுத்திப் பதார்த்தத்தைச் சூறையாடுகிறது ஒரு கும்பல். பதார்த்த உற்பத்தி அரசியல் சூழ்ச்சிக்கு ஆளான இளவரசன் தன் தகப்பனை இழந்து பின்னர்க் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து சூழ்ச்சசிக்காரர்களை வீழ்த்தி கிரஹத்தின் பழங்குடிகளுக்குச் சுதந்திரம் கொடுத்துச் சிம்மாசனத்தை அடைகிறான். இதன் நடுவே அறநூறு அடி நீளமுள்ள ராட்சச மண் புழுவின்மேல் சவாரி செய்கிறான், உச்ச காட்சியில் கத்திச் சண்டை போட்டுத் தன் எதிரியை வீழ்த்துகிறான்.
3. இளம் பெண்ணொருத்தி கதாநாயகி ஆகும் கனவுடன் ஹாலிவுட் வருகிறாள். விபத்தில் காயமடைந்த இன்னொரு பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். விபத்தினால் நினைவிழந்த பெண்ணும் இவளும் காதலில் விழுந்து உறவு கொள்கிறார்கள். படத்திற்காகக் கதாநாயகி தேர்வு செய்யும் இயக்குனரிடம் ‘நாளை நாங்கள் காட்டுபவளை தேர்ந்தெடு’ என மர்ம ஆசாமி மிரட்டுகிறார். இயக்குனர் கோபமடைந்து மறுக்கிறார் அதனால் அன்று முழுவதும் இன்னல்களுக்கு உள்ளாகிறார். பயந்த இயக்குனரை ‘கவ்பாய்’ என்பவர் மீண்டும் மிரட்டுகிறார். காலை வெள்ளோட்டத்தில் மர்ம ஆசாமிகள் சொன்ன அதே பெண்ணை ‘இவள்தான்’ எனத் தேர்ந்தெடுக்கிறார் இயக்குனர். பல திருப்பங்களுக்குப் பிறகு காயமடைந்த பெண்ணிற்கு மெதுவாக நினைவு திரும்புகிறது. படத்தில் பலமுறை கனவும் நிஜமும் பிணைந்துக் காட்சி அளிக்கிறது. அவர்கள் இருவரும் உறவுகொண்டதுகூட நிஜமா என யோசிக்கத் தோன்றுகிறது. சில பாத்திரங்களின் பெயர்களோடு முதல் பாதியில் ஒருவரும் பின் பகுதியில் இன்னொருவரும் வருகின்றனர். சில பாத்திரங்கள் ரெட்டையர்கள்போலத் தோன்றுகிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் தோன்றும் சரடுகள் இறுதியில் பிணைந்து ஒரே கயிறாகிறது (பல்ப் ஃபிக்ஷன்னை நினைவூட்டுகிறது). இறுதியில் நடப்பது என்ன என்பதை நேயர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார் டேவிட்.
மேற்கண்ட சூழல்களும் காட்சிகளும் டேவிட் இயக்கிய எரேசர்ஹெட் (Eraserhead, 1977), ட்யூன் (Dune, 1965), முல்ஹோலண்ட் டிரைவ் (Mulholand Drive, 2001) படங்களில் வருபவை. டேவிட்டின் தனித்துவம் அகவுலகையும் அயலுகையும் லாவகமாகப் பிணைப்பதில் அடங்கியுள்ளது. முல்ஹோலண்ட் டிரைவ் அமெரிக்கத் திரைப்படங்களில் மிகச்சிறந்த பத்துத் திரைப்படங்களில் ஒன்றாகத் தொடர்ச்சியாக வாக்காளர்கள் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் மசாலா படங்களை முற்றிலும் துறந்து, சிந்திக்க வைக்கும் அல்லது அசூயையூட்டும் கதைகளைத் தேர்ந்தெடுத்து அதனை நேர்த்தியாகக் கையாண்டதே டேவிட்டின் சிறப்பு. காஃப்கா, கோகுல் (Gogol) போன்றவர்களின் தாக்கம் டேவிட்டின் படைப்புகளில் காணலாம். காஃப்காவின் புழ்பெற்ற மெட்டமோர்போசிஸ் சிறுகதை எரேசர்ஹெட் படத்தை இயக்க ஊக்கமாக இருந்ததெனலாம். விந்தையான மர்ம சூழ்நிலைகளே டேவிட் கதைகளின் உயிர் துடிப்பு. ட்யூன் திரைப்படம் முதலில் வெளிவந்தபோது டேவிட்டின் தீவிர ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மசாலா திரைப்படங்களின் பாணியில் எந்தவித தனித்தன்மையும் இல்லாத படம் என்றனர். ட்யூன் டேவிட்டின் சொந்த கதையல்ல, பிரபலமான நாவலின் திரையாக்கம். மேலும் பெரிய ஸ்டூடியோ தயாரிப்பான ட்யூன் படத்தை இயக்கும்போது தயாரிப்பாளர்கள் தனக்கு ஆக்கச் சுதந்திரம் கொடுக்கவில்லையெனக் குற்றம்சாட்டி தன் பெயரைப் பாராட்டு பட்டியலிலிருந்து நீக்க விண்ணப்பித்தார். ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவிய ட்யூன் சில ஆண்டுகளில் அக்காலகட்டத்தின் அடையாள (Cult Classic) திரைப்படமாக உருவெடுத்து 2021 / 2024 யில் மறு ஆக்கமும் கண்டது. ட்யூன் படத்திற்குப் பிறகு டேவிட் சொந்த கதைகளை மட்டுமே இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்ஹோலண்ட் டிரைவ் திரைப்படத்திற்கு முன்னுதாரணமாக இங்மார் பெர்க்மன் (Ingmar Bergmann) இயக்கிய பெர்சோனா (Persona, 1966) இருந்ததெனக் கூறலாம். இரு பெண் கதாபாத்திரங்களை முன் வைத்து எடுக்கப்பட்ட பெர்சோனா, அவர்களிடையே நடக்கும் உளவியல் ரீதியான போராட்டத்தைத் திரைக் காவியமாக்கியது. பெர்சோனா தீவிர உளவியல் தேடல். இரு பாத்திரங்களில் ஒருவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் திடீரெனப் பேச்சுத்திறன் இழந்தவர் இன்னொருவர் அவருக்குப் பேணுகை செய்யவந்த பெண் செவிலியர். இவர்களுக்குள் ஒரு தீவில் நடக்கும் கலந்துரையாடல், செயல்கள், சிந்தனைகள் போன்றைவையே கதை. இரு பாத்திரங்களை மட்டும் ஒரு கண்ணாடிக்கூண்டில் அடைத்துக் கேமரா மூலம் புலன்விசாரணை கோணலிலிருந்து உருவாக்கப்பட்டது பெர்சோனா. பெர்சோனாவின் திரைக்கதை சீரான வேகத்தில் முன் செல்கிறது. முல்ஹோலண்ட் டிரைவ் இந்த விஷயங்களில் வேறுபடுகிறது. முக்கியக் கதாபாத்திரங்களின் பாதுகாப்பின்மையை (Insecurities) அடிப்படையாகக் கொண்டதெனலாம். பாத்திரங்களின் பின்னணியில் டேவிடிற்க்கு ஈடுபாடு இல்லை. நேயர்களின் காட்சி புலன்களைத் தலைகீழாகத் திருப்ப முயல்கிறது முல்ஹோலண்ட் டிரைவ். மேலும் திரைக்கதை நிஜத்திற்கும் கனவிற்குமிடையே சுமூகமாகத் தாவுகிறது. முல்ஹோலண்ட் டிரைவ் மர்மப் படம், மீஎதார்த்தமல்ல.
“செக்ஸ், மர்மம் கலந்த சக்தியைக் காக்கும் கதவு. அதைத் தப்பாகச் சினிமாவில் காண்பிக்கிறார்கள்” – டேவிட் லிஞ்ச்
மேற்கண்ட வாக்கியத்தின் பிரதிபலிப்பு லாஸ்ட் ஹைவே (Lost Highway, 1997) யில் தெரிகிறது. கதாநாயகியுடன் உறவு கொள்ளும் கதாநாயகன் வேறொருவனாக மாறுகிறான். கதாநாயகியேகூட மர்ம மனிதரின் இன்னொரு ரூபம் போல் தோன்றுகிறாள். அதே சமையம் இரட்டையருள் ஒருவர் போலவும் தோன்றுகிறாள். கடைசிவரை மர்மம் விலகாமல் முடிகிறது கதை. இயலுமா? எப்படி முடியும்? யார் செய்தது? போன்ற கேள்விகள் இருந்தாலும் மெய்சிலிற்கவைக்கும் பார்வை புதிர். வன்முறை, உடல் வேட்கை, குருதி கோரங்கள் போன்றவற்றுடன் டேவிடிற்கு இருந்த மோகத்தின் பிரதிபலிப்பு.
இன்லண்ட் எம்பைர் (Inland Empire, 2006) டேவிட் இயக்கிய கடைசி திரைப்படம். முல்ஹோலண்ட் டிரைவ் பாணியில் பெண் பாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இம்முயற்சியில் பல தனித்துவங்கள் உள்ளன. சினிமா கேமராவை உபயோகிக்காமல் கையேந்தி பொழுதுபோக்கு கேமராவினால், அன்றைய தினத்திற்கு மட்டுமே எழுதப்பட்ட திரைக்கதையின் திரையாக்கம். பல சரடுகளாக கதை சொல்லப்டுடுகிறது.
டேவிட்டை, லூயி புனுயேல் (Luis Bunuel), சால்வடார் டாலி (Salvador Dali) போன்ற மீஎதார்த்த இயக்குனர்கள் பட்டியலில் சேர்ப்பது தவறு. டேவிட்டின் பாணி மீஎதார்த்த பாணி அல்ல. டேவிட்டின் ஆரம்பகால ஓவியங்களினால் இத்தகைய வகைப்படுத்தல் பிறந்திருக்கலாம். லூயி புனுயேல் இயக்கிய தி எக்ஸ்டர்மிநேடிங் ஏன்ஜெல் (The Exterminating Angel, 1962), அன் அண்டுலுசியன் டாக் (An Andalusian Dog, 1929) போன்ற படைப்புகள் மீஎதார்த்த முயற்சிகள் எனலாம். இப்படங்களில் காணும் மீஎதார்த்த பாணி வித்தியாசமானது. உதாரணத்திற்குத் தி எக்ஸ்டர்மிநேடிங் ஏன்ஜெல் படத்தின் மையக் கரு மனிதர்களின் நனவிலித் தடைகள். இரவு உணவிற்குக்கூடும் மேலக்குடியினர் சிலர் உணவு முடிந்தும் அறையின் கற்பனைக் கோட்டை தாண்ட முடியாமல் தங்களை தாங்களே அறையில் அடைத்துக் கொள்கிறார்கள். வெளியிலிருந்து அவர்களுக்கு உதவ முயலும் மனிதர்களாலும் அந்தக் கோட்டை தாண்ட முடியவில்லை. நிஜத்தில் அத்தகைய கோடு எதுவுமில்லை. ஒரு காட்சியில் அறையில் இருப்பவர்கள் எங்கிருந்தோ வந்த ஆட்டையும் கரடியையும் வெட்டித் தின்கிறார்கள். நிலைமை மோசமாகி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுகிறார்கள், ஒருவன் இன்னொருவனைச் சுட்டுக் கொல்கிறான். உச்ச காட்சியில் மர்மமாக எதுவும் நடக்காததுபோல எல்லோரும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்கள். கற்பனையின் எல்லைகளை ஆராய்வது மீஎதார்த்தம், நடக்கமுடியாத சூழல்களினால் சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்த முயல்வது மீஎதார்த்தம். எரேசர்ஹெட் படத்தை இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் முல்ஹோலண்ட் டிரைவ், ப்ளூ வெல்வெட் போன்ற படங்கள் இப்பட்டியலில் அடங்கா. டேவிட்டின் படங்கள் (மீண்டும் எரேசர்ஹெட், ட்யூன் தவிர) கண்ணுக்குத் தெரியா இரண்டு ஞாலங்கள் சந்திக்கும்போது நடக்கும் நிகழ்வுகள் எனக் கருதலாம்.
ப்ளூ வெல்வெட் (Blue Velvet, 1986) உள்ளுணர்வில் பதுங்கியிருக்கும் அப்பட்ட எண்ணங்களின் வெளிப்பாட்டியம். வன் பால் துன்புறுத்தல், பாலியல், தற்காதல் (Narcissism) போன்றவற்றை ஆராயும் படைப்பு. டேவிட்டின் கையெழுத்து பாணியில் காட்சி பிழையைப் போல ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது. மெதுவாக நகரும் கேமரா பார்வை மோகத்தன்மை கொண்டுள்ளது. திரைப்படங்கள் மட்டுமின்றிச் சின்னத்திரையிலும் தொடர்களை இயக்கியுள்ளார் டேவிட். ட்வின் பீக்ஸ் (Twin Peaks, 1990) தொடர் டேவிட்டின் தனித்துவ பாணியில் வெளிவந்த கொலை மர்மம். கனவுப் புதிர்கள், மர்ம மனிதர்கள், வன்மம் போன்றவற்றால் காட்சிப் புனைவை நேயர்களுக்கு வழங்கியுள்ளார். புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரொசாவா எப்படி டோஷிரோ மிஃபுனே (Toshiro Mifune) வை தன் பெரும்பாலான படங்களில் கதாநாயகனாக உபயோகித்தாரோ அதேபோல் டேவிட் கைல் மேக்லாக்லான் (Kyle Maclachlan )னை கதாநாயகனாக உபயோகித்தார்.
டேவிட் கலைக் கல்லூரியில் ஓவியராகப் பயின்றவர். அவர் ஓவியங்கள் இரு வகைப்படும். பின்பியல் வெளிப்பாட்டியங்கள் அல்லது உடற்குறியியல்கள். சாம்பல், கருப்பு வண்ணங்களை உபயோகித்து வரையப்பட்ட சித்திரங்கள் உள்ளுணர்வில் பயம், தேடல் போன்ற உணர்ச்சிகளை நேயர்களுக்கு அளிக்கிறது. உடற்குறியியல் புகைப்படங்களில் சில ஃபிரான்சிஸ் பேகன்னை நினைவூட்டுகிறது. வெளிப்படையான உடல் இன்ப வேட்கை, வடிவியல் எளிமை அவர் படிப்புகளில் தெரிகிறது. குறிப்பாகச் சித்தரங்களுள் வாக்கியங்களை எழுதுவது பேச்சு சிந்தனையாளரின் அறிகுறி.
“கண் காணும் காட்சிகளுக்குப் பின் மர்மமான உலகம் இருப்பதைச் சிறுவயதிலிருந்தே உணர்ந்திருக்கிறேன் ஆனால் அன்று அதன் இருப்பிற்குச் சாட்சிகள் என்னிடம் இல்லை. நீல வானத்திலும் பூக்களிலும் தெரியும் நற்குணத்தின் மறுபக்கத்தில் இருள்-சூழ் அழிவும் கூட இருக்கிறது” – டேவிட் லிஞ்ச்
டேவிட்டின் உலகம் இந்த இருமையையே தேடியது, பெரும்பாலும் இருளையே நாடியது. டேவிட்டின் கதை மாந்தர்கள் விந்தையானவர்கள், மர்மம் நிறைந்தவர்கள், உளச்சிக்கல் உடையவர்கள். ஆழ்மன தியானத்தால் இறையை அடைய முடியும் எனும் பரவலான கருத்தைத் தகர்த்து, ஆழ் மனதில் அடங்கியிருப்பது இனம் தெரியா இருள் சக்தியென நேயர்களுக்குக் காட்ட முயன்றவர் டேவிட் லிஞ்ச். அந்தத் தேடலின் சாட்சிகள் கதை மாந்தர்கள். டேவிட் பெண் பாத்திரங்களை வெகுவாக வன்முறைக்கு உள்ளாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு. டேவிட்டின் பாத்திரங்களை ஆராய்ந்து பார்க்கையில் விசித்திர பாத்திரங்களை ஆண்கள் மட்டும் தான் சுமக்கிறார்கள். உதாரணத்திற்கு முல்ஹோலண்ட் ட்ரிவில் வரும் ஸ்டூடியோ முதலாளி (சக்கிற நாற்காலியில் காணப்படுபவர்), ‘கவ்பாய்’ (Cowboy) பாத்திரம், எரேசர்ஹெட் படத்தின் கதாநாயகன், ப்ளூ வெல்வெட்டின் ஃபிரங்க் பூத் (Frank Booth), லாஸ்ட் ஹைவேயின் மர்ம வெள்ளை முக ஒப்பனை நபர் போன்றவர்கள். மாறாகப் பெண் பாத்திரங்கள் மென்மையாகவும், மெல்லிய உணச்சிகள் உடையவர்களாகவும், ஆண் ஆதிக்கத்திற்கு அடிபணிபவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய உலகில் பெண்கள்மீது இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் எதிர்பார்க்கப்படுபவையே. உலகம் ஆண் வர்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதைக் காட்ட முயல்கிறார் டேவிட்.
நாற்பது ஆண்டுச் செயல் வாழக்கையில் ஒன்பது திரைப்படங்கள் இரண்டு தொடர்கள்மூலம் தனக்கெனத் தனிப் பாணி அமைந்துகொண்டவர் டேவிட். பின் வந்த காலங்களில் கொரிய திரைப்படங்களான பர்னிங் (Burning, 2018) , மெமோரிஸ் ஆப் மர்டர் (Memories of Murder, 2003) போன்ற படங்களில் டேவிட்டின் ஒளிப்பதிவு பாணியின் தாக்கங்கள் தெரிகின்றன.
