Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

சேரன் கவிதைகள்

எல்லை தரும் இன்றைய பாடம்

மொழி தெரியாது
குரலும் தெரியாது
அவலத்தில் இருந்தோர் பாடல்
எனத் தெரிகிறது

தென்னோலையில் செய்த குறும் படகு
காற்றையும் கடலையும்
எதிர்த்துச் செல்கிறபோது
பிறக்கும் ஒரு பாடல்

ஈரத்தில் நனையாத அலைபேசியும்
அதில் சேமித்து வைத்திருக்கும் படங்களும்
ஊர்க்காற்றும்
நிறைவெய்தாத என் காமமும்
வழி முறிந்த பாலை வனத்தில் எரிந்தாலும்
தளராமல் தொடரும் நடை.

எல்லை கடந்து வருகிறேன்

காற்றாகலாம்
கடவுளாகலாம்
கல்லறையாகலாம்
கதை சொல்லியாகலாம்.

மனிதனாக முடியாது.


கடலில் ஒரு பெட்டி
ஒரேயொரு பெட்டியைத்தான்
நீங்கள் கொண்டு வரலாம்.
படகோ சிறிது.
நெடுந்தூரப் பயணம்.
பெருங்கடல்.
பாரம் கூடினால் கடலே சுடலை.


பெட்டியில் எவற்றை நான் வைத்தேன்?

என் கையெழுத்தில் எஞ்சியிருந்த கவிதைகள்,
முத்தம் பதிந்திருந்த சில நூல்கள்
சில கடிதங்கள்
சில மாவிலைகள்
அம்மாவின் படம்,
எப்போதோ கைக்கெட்டிய ஒரு சயனைட் குப்பி
காய்ந்து போன மூன்று
பூவரசம் பூ
இன்னும் எவையெவை எல்லாவற்றையும்
வைத்திருக்கலாமோ என்ற
அந்தர நினைவு.

உங்கள் பெட்டியில்
எதை வைத்தீர்கள்?

Exit mobile version