கவிதை என்ன செய்யும்? மானுடக் குலத்திற்கு கவிதையால் ஆவது தான் என்ன? மண்ணில் இருக்கும் புல்லில் தொடங்கி இங்கே அனைத்துமாகி நிற்கும் பிரம்மத்தால் மானுடன் அடையக் கூடுவது என்னவோ அவை அனைத்தையும் கவிதை வழங்கும். கவிதையில் அல்ல கவிதையில் இருக்கும் ஒரு ஒற்றை சொல்லில் ஒருவன் தனக்காக மீட்பை பெற இயலும். பறவையில் பறத்தல் போல மொழியில் கவிதை.
மிக சாதாரணமாக நாம் பார்க்கும் கடந்து செல்லும் நிகழ்வுகளை தருணங்களை என்றோ ஒருநாள் கவிதையில் சந்திக்கும் போது இனிய அதிர்வு ஒன்று நம்முள் ஏற்படுகிறது. அப்படி பல இனிய அதிர்வுகளை நாம் கவிஞர். இசையின் கவிதைகளில் சந்திக்கலாம். அட இவற்றை எல்லாம் கவிதையில் கொண்டு வந்துவிட முடியுமா என தோன்ற செய்யும். வாசிக்க எளிதாக இருக்கும் பல கவிதைகள் சட்டென்று ஆகாயத்தில் மிதக்க வைக்கும். இசையின் சமீபத்திய கவிதை அப்படியானது.
பாடல்கள் அனைவருக்குமானது ஆனாலும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொவருக்கும் ஒவ்வொரு அர்த்ததை அளிக்கும். பல்லாயிரம் பாடல்கள் இருந்தாலும் ஒரு சில பாடல்களிலேயே வாழ்க்கையை ஓட்டி விடுவர்களும் உண்டு. காதலில் இருப்பவர்களுக்கு பாடல்கள் போல தன் அகத்தை சொல்ல பிற இனிய வழி எதுவுமில்லை. குறிப்பிட்ட பாடலோ அல்லது அதில் வரும் இரண்டு வரிகளையோ அவர்கள் முற்றிலும் தங்களுக்கு உரியதாக எண்ணுகிறார்கள். அவ்வரிகளை ஒருவர் மற்றவரை பாட சொல்லி கேட்கும் நிகழ்வு அவர்களுக்குள் நடக்கும் ஒர் ஆடல். மாலைநடையில் இருந்த என் பிரியத்திற்குரிய ஒருவரை போனில் பாடச் சொல்லி கேட்ட போது இந்த சத்தத்திலா என்றார் ஆம் என்றதும் பாட துவங்கினார் அவ்வளவு இரைச்சலிலும் அத்தனை ரகசியமாக ஒலித்தது பாடல். கேட்கும் போதே உள்ளிருந்து எழுந்து வந்தது இசையின் கவிதை. பாடல் முடிந்ததும் கவிதையை சொல்ல தொடங்கி புன்னகையோடு முடித்தேன்.
நீ மட்டுமே
மறுமுனையில்
காதலன்
விடாது கெஞ்சிக் கொண்டேயிருக்கிறான்
இவளோ
தலையை ஆட்டி
மண்ணைக் கீறி
நாணி
நாணி
கோணிக் கோணி
மறுத்துக் கொண்டிருக்கிறாள்
கடைசியில் ஒத்துக் கொண்டாள்
” ஒரே ஒரு வரி …”
அவளுக்கு கொஞ்சம் தள்ளி
அமர்ந்திருக்கிறான்
இந்தத் தடியன்
ஆகவே
அவள்
குரலில் ரகசியத்தைக் குழைக்கிறாள்
ரகசியம்
பேச்சையே பாட்டாக்குவது
பாட்டை
அது என்னென்ன செய்யும்
அடுத்த முறை
இன்னும்
அவளை நெருங்கி அமர்வேன்
இன்னும்
அவளை ரகசியமாக்குவேன்.”
இன்னும் இன்னும் ரகசியத்தை ரகசியமாக்கும் இந்த தடியனால் வாழ்கிறது கவிதை..
எல்லோருக்கும் எப்போதும் நேசிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு காலமோ சூழ்நிலையோ நல்லூழோ அமைந்துவிடுவதில்லை. கல்வியின் பொருட்டோ பணியின் பொருட்டோ அல்லது வாழ்வின் அழுத்தத்தினாலோ பிரிவு அமைகிறது. இதில் பேரன்பும் பெருங்காதலும் பிரிவின்றி நிறைவு கொள்ளாத தெய்வங்கள். தொலைத்தூர உறவில் காதலில் இருப்பவர்கள் சாலையில் பயணிக்கும் போது எல்லை பலகையில் தெரியும் ஊரும் அவற்றின் கிலோ மீட்டர்களும் அளிக்கும் கிளர்ச்சியையும் துயரையும் நன்கு அறிவார்கள். ஆனாலும் எங்கே சென்றுவிட்டாய் இதோ இங்கே தானே இந்த புவியில் தானே.. நம்மை தீண்டும் காற்று, நீயும் நானும் பார்க்கும் நிலா, ஒரே வானின் கீழ் வசிக்கும் நம் இருப்பு என நம்மை தொடர்புபடுத்திக் கொண்டே தானே இருக்கிறோம். அவ்வாறு எண்ணி வாழ்வை முன்னகர்த்தி செல்லுபவர்களுக்கு …
என் ஊர்
“என் ஊருக்கு
அடுத்து
இன்னொரு ஊர்
அதற்கடுத்து
இன்னொரு ஊர்
பிறகு
வேறொரு ஊர்
ஊர்கள்
ஊர்கள்
ஊர்கள்
இப்படியாக
உனக்கும் எனக்கும் இடையே
ஒன்பதாயிரம் ஊர்கள்
ஆனால்
ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு.”
வானத்தை எவ்வண்ணம் அளவிட முடியாதோ அது அளிப்பதையும் அளவிட முடியாது ஏனெனில் அத்தனை விரிவும் அளியும் கொண்டது. அகம் உருகி என் விளிக் கேள் தெய்வமே என்று கூவினால் குனிந்து கருணையோடு கூர்ந்து கேட்க கூடியது எந்த கருவறை தெய்வத்தையும் விட மேலானது. ஒருநாளில் வானம் பார்த்தல் என்பது அன்றாடம் செய்ய கூடிய காரியமாக என் வாழ்வில் மாறியுள்ளது ..வானம் பார்த்தல் என்றால் வானம் பார்த்தலே தான் வேற எதுவும் செய்வதில்லை எண்ணங்கள் அங்கும் இங்கும் எங்கும் ஓடி முட்டி சட்டென்று வானமாக மட்டுமே நிற்கும் கணங்கள் எனக்கான ஊழ்கம். வீட்டின் சுவர்களும் கட்டிடத்தின் கூரைகளும் அழுத்த துவங்கும் போது விரைந்து வெட்டவெளியில் வானின் கீழ் நிற்கும் போது உணரும் அமைதியும் விடுதலையும் பகிர இயலாதது. இசையின் கவிதைகளில் மிக அணுக்கமான ஒன்று ..
பார்த்திருத்தல்
“வானத்தை அண்ணாந்து பார்க்கையில் மனிதன் ஏன் அவ்வளவு விடுதலையடைகிறான்?”
என்று கேட்டான் ஒரு நண்பன்.
அந்தக் கேள்விக்குவிரிவாக விடையளிக்கும் தோரணையில்
நானும்அண்ணாந்து பார்த்தேன் வானத்தை
அவன்பதிலறிவதற்காகக் கேட்கவில்லை.
நானும் பதிலளிப்பதற்காக பார்க்கவில்லை.”
கவிதைகளுடான உரையாடல் அலாதியானது. சிலது குழந்தைகளுக்குரிய விரைவுடன் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு சில கவிதைகள் ஆழ்ந்த தனித்த மெளனத்தில் இருக்கும் நாம் அணுகி அறிந்தால் ஒழிய அது கனிவதில்லை. கவிஞர். இசையின் கவிதைகளை நான் என் வரையில் என்னுடைய களித்தோழனாகவே எண்ணிக்கொள்கிறேன். விளையாடுவது முன்முடிவுகள் அற்றது உடன் பயணிப்பது “ என்ன இப்படி சொல்லிட்டே” என்று நம்மை கூச்சலிட வைப்பது, “எப்படி சொல்லிடுச்சு பாருங்க” என்று பிறரிடம் வியந்து கூற வைப்பது. எப்போது திருவிழா சென்றாலும் அங்கே மகிழ்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் நான் மகிழ்வும் உற்சாகமும் கொள்வது பலூனை காணும் பொழுதில் தான். என் அகத்திற்கு இசையின் கவிதைகள் அத்தகைய ஒன்று. அனைவருக்கும் வாழ்வில் அவர்கள் அடையும் எய்தும் மெய்மை ஒன்று உண்டு. பெரும்பாலும் தீரா தனிமையில் கடுந்துயரில் வெறுமையில் அது கைவரும் ஆனால் இனித்து இனித்தே அங்கே சென்று சேருபவர்கள் நல்லூழ் கொண்டவர்கள் கவிஞர். இசை அவர்களில் ஒருவர்.
