Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

உயிரில் கலந்து

இருள், இருண்ட சுவர். பதிலற்ற அமைதி. சுழல் மையம் என்னை சுற்றி சுற்றி இறுதியில் வெளியில் எறியும்பொழுது அந்தக் கேள்வி குன்றாது குறையாது உடனிருக்கும்.

என்ன நடந்தது?

கால் நூற்றாண்டு கடந்தும் கண்டறியக் கூடவில்லை.

திருமணம் ஆகி ஒரு வருடம் அமைதியாக இருந்திருக்குமா? இருக்கலாம். ரீமா பிறக்கும் வரை? தெரியவில்லை. எங்கு, எதனால் தொடங்கியது? தெரியாது. ப்ரேமாவிற்கே தெரிந்திருக்குமா? சந்தேகம்தான். பெண் குழந்தை பிடிக்கவில்லையா? அப்படியானால் ரித்விக் பிறந்தவுடன் சரியாகி இருக்கவேண்டுமே?

யாரிடமும் எதுவும் சொல்லாமல், ஏன் என்ற கேள்வியை மட்டுமே எஞ்சவிட்டு, அவள் தன்னை முடித்துக்கொண்டாள். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அரை மயக்கத்தில் அவள் கூறியது ‘இதுதான் அவனுக்கான தண்டனை.’ பைத்தியம்! அவன் சில மாதங்களில் மீண்டும் மாப்பிள்ளை, மீண்டும் தகப்பன்.

உண்மையில் தண்டனை அனுபவித்தது ரீமா, ரித்விக், நான், அப்பா, அம்மா. இதை அவள் முன்னரோ பின்னரோ உணர்ந்திருப்பாளா? பின்னர்? ஆம், பின்னரும்தான். அவள் இறையென நம்பிய பரமாச்சாரியாரின் தெய்வத்தின் குரலும் மற்ற அனைத்து உபன்யாசங்களும் குறிப்பது துர்மரணம் அந்த ஆத்மாவை அலைக்கழிக்கும் என்பதுதான். அது நிஜமா?

அவர்களுக்குள் சண்டை ஒன்றும் புதிதல்ல. அவள் அம்மா வீட்டிற்கு வருவதும் மீண்டும் அவன் வந்து கெஞ்சி அழைத்துச்செல்வதும் தொடர்கதை. அன்று அப்படி என்ன நடந்தது?

அப்பா புது துணிகள் வாங்கி வரும்போது கேட்பார் “எப்படி அப்பா செலக்‌ஷன்?” அவள் தன் மாறாத புன்னகையுடன் சொல்வாள் “உங்க செலக்‌ஷன் ஒண்ணே ஒண்ணத் தவிர எல்லாமே சூப்பர்தான்ப்பா.”

அவளின் அடையாளமேயான புன்னகை. அழைக்கும் குரலுக்கு திரும்பும் முகத்தில் எப்போதைக்குமான புன்னகை. எனது சுருங்கிய நெற்றிக்கு, ஃபோட்டோவிற்கு கூட சிரிக்காத முகத்திற்கு, நேர்மாறான புன்னகை. “ப்ரியாவுக்கு சிரிக்கவே தெரியாதா?” என்று கேட்போருக்கும் அதே புன்னகை. என் சிரிப்பையும் சேர்த்து அவளுக்கே கொடுத்துவிட்டானோ இறைவன்!

இப்படி இருந்தவளுக்கு அன்று அந்த புன்னகை எங்கே போயிற்று? அப்படி என்ன சொன்னான் அவன்? அவனிடம் கேட்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அவன் சொல்லும் எந்த சொல்லும் உணர்ந்து சொல்லப்படுபவை அல்ல. சுய அறிவோ சிந்தனையோ துளியும் கிடையாது. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை. அந்த சாவியை எப்போதும் கையில் வைத்திருக்கும் அவன் குடும்பம். “புருஷன் பொண்டாட்டின்னா சண்டை வராதா? அதுக்காக இப்படி பண்ணுவாளா?” என்று சாவு வீட்டில் பேசும் நரம்பற்ற நாவுகள்!

கருத்து எல்லோரும்தான் சொன்னார்கள்! ஆதங்கத்தில் பலர், அல்லாமலும் சிலர்.

“சே! கொழந்தைகள நெனைக்க வேண்டாமா? ரித்விக் மொகத்த ஒருதரம் பாத்திருந்தா இப்படி பண்ணியிருப்பாளா?”

“அப்பா, அம்மா என்ன பாவம் பண்ணினாங்க? பாவமில்லியா?”

“கொஞ்சம் பொறுமையா இருக்கக்கூடாதா? பசங்க தலையெடுத்துட்டா அவங்க அவன அடக்கிடுவாங்களே!”

“சரிவரலன்னா விட்டுட்டு வந்திருக்கலாமே? நல்ல படிப்பு, நல்ல வேலை. வாழ முடியாதா?”

“நீங்கள்ளாம் யாரும் அவளுக்கு தைரியம் சொல்லலையா?”

“ஏன்? எந்த வீட்டுலதான் பிரச்சனையில்ல? இதெல்லாம் ரொம்ப செல்லம் குடுத்து குட்டிச்சுவர் பண்ணதால வர்றது.”

கருத்துகளும் அதை சொன்னவர்களும் கலைந்து காணாமல் போனபின்னும் என் கேள்வியும் அது கொண்டு சேர்க்கும் இருளும் கரையவில்லை.

“ஏம்ப்பா அப்படி பண்ணினா? என்ன நடந்திருக்கும்? நீங்க பாத்ததுல இப்படி பண்ணுவான்னு என்னிக்காவது தோணியிருக்கா?”

மாதவன் என்ன சொல்லமுடியும்?

“தெரிஞ்சுட்டா உங்கக்கா திரும்பிவந்துடுவாளா?”

“இல்லப்பா, என் மண்டையே வெடிச்சிடும்போல இருக்கு.”

“புரியறது. ஆனா தீர்மானமா அத தெரிஞ்சுக்க எந்த வழியும் இல்லன்னும்போது திரும்பத்திரும்ப அத யோசிச்சு என்ன பிரயோஜனம்? தேவையில்லாம உன்ன நீயே வருத்திக்கற. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.”

இது வெட்டி வேதாந்தம் இல்லை. உறுதுணையாக நின்றவர். கடந்துவர காரணமாயிருந்தவர். வருடங்கள் கடந்தும் நான் முற்றாக மீளவில்லையே என்ற ஆதங்கம்தான். ஆனாலும்…

நிறைவுறாத ஆன்மா ஆவியாக அலையும் என்பது உண்மையா? அவள் அப்படி அலைகிறாளா? எப்படி அறிவது? 

அவனை பழிவாங்குவாளா? இல்லையே! அவன் ஒரு கேடும் இன்றி நன்றாகத்தானே இருக்கிறான்!

சே! அவளைப்பற்றி அப்படி நினைக்கலாமா? சிறியன சிந்தியாதாள்! இன்னா செய்தார்க்கும் நன்னயம்தான்.

“நெஜம்மா சொல்றேன், உன் நாத்தனாரெல்லாம் நன்னாவே இருக்கமாட்டா.”

“வேண்டாம், ப்ரியா. விடுடா. நம்ம வாயால யாரையும் எதுவும் சொல்லவேண்டாம்.”

“உன்ன… உன்ன படைச்சானே அவன சொல்லணும்! போ, போய் விட்டஎடத்துலேர்ந்து ஸ்லோகம் சொல்றத கண்டின்யூ பண்ணு. அப்பதான் இன்னும் உன்ன நன்னா படுத்துவான்!”

“மனுஷாளுக்கு புத்திகெட்டுப்போனா பகவான் என்ன பண்ணுவான்? அவன திட்டாத. அவனுக்குத் தெரியும் எப்ப என்ன பண்ணணும்ன்னு.”

இந்த நம்பிக்கை பொய்யாகும்படி என்ன நடந்தது?

நாங்கள் சொந்த வீட்டில் குடியேறியபோது ப்ரேமாவிற்கு பன்னிரண்டு வயது. எனக்கு எட்டு. அந்த தெருவிலேயே முதலில் கட்டிய வீடு. எனவே பின்னர் வந்த அனைவருமே நல்ல பழக்கம். அதிலும் அவளுக்கு எல்லோரும் மாமா, மாமி, சித்தி, சித்தப்பா, அத்தை, அண்ணாதான். பெயருக்கேற்ற குணம்.

வாசல் கோலத்தில் ஏற்பட்ட தப்பை சரிசெய்வதிலிருந்து கிரிக்கெட் விளையாட்டு வரை அனைத்து வயதினருடனும் அவளுக்கு பேச விஷயமிருந்தது. சந்தேகங்களை தீர்க்க பொறுமையிருந்தது. அந்த பொறுமை அன்று என்னானது?

அலுவலகம் செல்லும் வழியில் ஆட்டோவை நிறுத்தி வாசலோடு ரித்விக்கை அம்மாவிடம் விட்டுச்செல்வாள். “பால் பாக்கெட் போடற மாதிரி” என்பார் மாதவன். பாதிநாள் சாப்பிட நேரமின்றி பட்டினிதான். ஆனால் ரோஷன் பிறந்து நான் அம்மா வீட்டில் இருந்தவரை அவனுக்கு மையும் பொட்டும் இடுவது தவறாது.

“அம்மா, நான் வர்ற நேரத்துக்கு குழந்தைய குளிப்பாட்டி ரெடியா வை.”

மை டப்பாவில் இருக்கும் ப்ளாஸ்டிக் குச்சியை கொண்டே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிஸைனில் பொட்டு. “உங்கம்மா மாதிரியே நெத்திய சுருக்காதடா!” என்று ஒரு கொஞ்சல். திருஷ்டிப்பொட்டு. “இப்போ நாழியாயிடுத்து. ப்ரேமாம்மா சாயந்தரம் வந்து நிதானமா உன்ன கொஞ்சறேன், செல்லம்.” அது சொல்லளவிலேயே நின்றது.

மீண்டும் மீண்டும் என்ன, ஏன்! இந்த இரண்டு வார்த்தைகளையும் என் மூளையிலிருந்து நீக்கமுடியுமானால்…

என் ஒன்பது வயதில் என் பாட்டி இறந்தபோது புரியாத ஒரு பயம் தோன்றியிருந்தது. இருளில் மட்டும் வரும் பயம். பேய் உண்டோ என்ற பயம். அது மாறி அவள் வரவை எதிர்நோக்கத் தொடங்கினேன்.

இரவில் சிள்வண்டு சத்தம், திரைச்சீலை அசைவு, தெருநாய் குரைப்பு – அவளா? இருளுக்குள் பக்கம் பக்கமாக தேடி சலிப்புறும் கண்கள்.

ஆனால் அவ்வப்பொழுது ஒரு சொல் எனக்கு மட்டுமாக ஒலிப்பது கேட்கும். ‘நீ போகுமிடமெல்லாம் நான் உன்னை தொடர்வேன்’ – ஒரு பாடல் வரியாகவோ, கூட்டத்தில் யாருடைய குரலாகவோ, ஆட்டோக்களில் எழுதியிருக்கும் சொல்லாகவோ. நான் இருளின் அடியாழத்திற்கு செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அது ஒலிக்கும். அவளுடன் என் உரையாடலும் தொடங்கிவிடும்.

ஆம், நான் அவளுடன் பேசுவது மனதிற்குள்ளா அல்லது வாய்விட்டா என்று பல சமயங்களில் எனக்கே தெரியாது. அவளிடம் சொல்லிவிட்டால் ஏதொரு விஷயமும் அவளது பொறுப்பாகிவிடும். அவள் பார்த்துக்கொள்வாள். குழந்தைகளின் படிப்பு, திருமணம் அவள் அருள்தான். அப்பா அதிகம் அவஸ்தைபடாமல் இறையடி சேர்ந்தது அவள் கொடைதான்.

அருவமாகத்தான் அவளை நான் உணரமுடியுமா? கண்ணில் தெரியும் ஏதேனும் ஒரு வடிவம் காட்டமாட்டாளா? கதைகளில், சினிமாவில் வருவதுபோல் என்றாவது வருவாளா? ‘ஈரம்’ சினிமா பார்த்தபின் என் பித்து தலைக்கேறியது. என் உடலை, அசைவுகளை உற்று நோக்கத் தொடங்கினேன். தூங்கும்போது எனக்குள் வந்து என்ன நடந்ததென்று சொல்வாளோ? உளறிக்கொண்டு விழிப்படைந்தால் மாதவனை உலுக்கி “நான் இப்போ என்ன சொன்னேன்? நீங்க கவனிச்சேளா?” என்று கேட்பேன். “தூங்கும்போதும் நான் அதையேதான் பண்ணணுமாடி?” என்று கோபத்தை வேடிக்கையாக மாற்றிக்கொள்பவரை பார்த்து பரிதாபம் தோன்றினாலும் அது நெடுநாள் நிலைக்காது.

ஒருநாள் தூக்கம் கண்ணை இழுக்கும்போது திடுப்பென விழித்துக்கொண்டேன். காரணமின்றி கண்ணீர் பெருகியது. கேவலாக மாறியது. சத்தம் கேட்டு மாதவன் எழுந்து “ப்ரியா, என்னாச்சு? ஒடம்பு சரியில்லியா? ஃபோன் ஏதாவது வந்துதா? அழுகைய நிறுத்திட்டு என்னன்னு சொல்லேன்! ப்ளீஸ், என்னாச்சு?” என்று பதறினார். இத்தனை காலம் தாண்டியும் இன்னும் அகாலத்தில் ஃபோன் அடித்தால் எனக்கு ஏற்படும் நிலைகுலைவு அவர் அறிந்ததுதான். தானே என் கைபேசியை எடுத்து அழைப்பு ஏதும் வந்ததா என்று பார்த்தார்.

“ப்ரியா, என்னாச்சு? சொன்னாதானடி புரியும்!”

“எனக்கே தெரியலப்பா. தூக்கம் கண்ண சொருகறச்சே ஏதோ தூக்கிபோட்ட மாதிரி முழிச்சுண்டேன். அழுகையா வர்றது. சொல்லத் தெரியல. அவ என்ன விட்டுபோயிட்டாளாப்பா?”

எனக்கே புரியாத குழறலாக என் குரல் ஒலித்தது. தண்ணீர் கொடுத்து என்னை படுக்கவைத்து முன்புபோலவே பாட ஆரம்பித்தார். பாவம்! இன்னும் எவ்வளவு காலம் என் பைத்தியம் இவரை வதைக்குமோ!

நேற்று என் பெரியம்மா மகள் வாட்சாப்பில் ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தாள். எதையோ தேடும்பொழுது இந்த ஆல்பம் சிக்கியதாம். என் தாத்தா சதாபிஷேகத்தன்று எடுத்தது. தாத்தாவுடன் நாங்கள் நால்வரும் இருக்கும் புகைப்படம். மீண்டும் இன்று அதை பார்த்து எதோ நினைவில் மூழ்கியிருந்தேன். ரோஷன் என் கைபேசியை பிடுங்கிக்கொண்டான். 

“டேய்…”

“எதுக்கு இப்போ கத்தற? ரொம்ப நேரமா அப்படி ஆடாம அசையாம என்னத்த பாக்கற ஃபோன்ல? ஓ! மலரும் நினைவுகளா?”

“டேய்! குடுடா அத…”

“இரு இரு, அப்பா, இங்க வாயேன். இதப்பாரு! ப்ரியாகுட்டிய பாரேன். அப்பா, என்ன மொறைப்பு! ஏம்மா, உன் குடும்பத்துல மத்த எல்லாரும் நன்னாதான சிரிக்கறா? தாத்தாகூட சிரிக்கறா, நீ மட்டும்தான் உர்ருன்னு இருக்க. உன் பாஷைலயே சொல்றதானா வெருகு மாதிரி. நீ என்னம்மா சிரிக்கா விரதம் எடுத்திருக்கியா?”

“நல்லவேளைடா, நம்மகிட்ட பண்ற மாதிரி ஃபோட்டோகிராஃபர் மூஞ்சிக்கு நேர கைய நீட்டி மெரட்டல!” என்றான் ரித்விக்.

“ஊமைக்கோட்டான், இதுக்கெல்லாம் நன்னா வாய் வரும். ம்ஹூம்.”

“ஓய்! என்னடா ரெண்டுபேரும் ஓவரா பேசறேள் எம்பொண்டாட்டிய! இதோ வரேன்…”

“வா வா… நீயே பாரு, இந்தா.”

“நீங்க மூணு பேரும் போறுமா இல்ல இன்னும் யாரையேனும் கூப்பிடணுமா? உருப்படியா ஒரு வேல சொன்னா யாருக்கும் காதுல ஏறாது. என்னை கலாய்க்கறதுன்னா நன்னா வருவேளே! குடுடா என் ஃபோன…”

“ஆனா பசங்களா, ஒண்ணு கவனிச்சேளா? இப்போல்லாம் அம்மா இப்படி மொறைக்கறேதே இல்ல! சிரிக்கக்கூட ஆரம்பிச்சுட்டா. ரொம்ப கனிஞ்சுட்டா!”

நிஜமா? அப்படியென்றால்…

Exit mobile version