Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்


இளையராஜாவின் சிம்பொனி இசைக்காகக் காத்திருந்த பலருள் நானும் ஒருவன். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ஐரோப்பிய இசையின் மேடைக்கச்சேரிகளுக்கு கடைகோடி ரசிகனாக இருந்து வந்துள்ளேன். பதிவு செய்யப்பட்ட இசையைக் கேட்பதை விட நேரடியாக கேட்கும் இசை நிகழ்வுகள் நம் ரசனையை சீர்கூட்டிக்கொள்ள உதவுபவை என்பதை ஒவ்வொரு முறையும் உணர்ந்திருக்கிறேன். அரங்கமைப்பும் நம் முன்னே மேடையில் வாசிக்கும் கலைஞர்கள் ஒவ்வொருவரின் மனோதர்ம இசை அனுபவமும் ஒன்று சேரும் போது பதியப்பட்ட கச்சேரிகளில் இல்லாத ஒரு உணர்வலை நேரடி கச்சேரியில் உருவாகிறது. மேடைக்கச்சேரியில் இசை ரசிகர்களின் நேரடியான பங்கு இந்திய இசையில் சாத்தியம். மேற்கத்திய இசை அரங்கேறும் போது பார்வையாளர்களின் பகுதியிலிருந்து சத்தம் துளியளவு கூட வராது. ரசிகர்களின் முக பாவனைகள் கூடத் தெரியாத வண்ணம் இருள் சூழ்ந்திருக்கும். கச்சேரிகளின் இடைவெளிகளில் தேக்கிவைத்த இருமல்களும் பேச்சுக்களும் கேட்கும். கச்சேரி துவங்கியதும் மீண்டும் கப்சிப். இந்திய இசை ரசிகர்களுக்கு இது மிகவும் வித்தியாசமான அனுபவம். மேடைக்கச்சேரிகளில் அவ்வப்போது ராஜாவிடம் செல்லமாகத் திட்டு வாங்கியதால் கச்சேரிகளின் போது கை தட்டுவதோ விசில் அடிப்பதோ குறைந்திருக்கிறது என்றாலும் நம்மை மீறி சில சமயங்களில் வந்துவிடுவதும் உண்டு. இவண்டிம் (London Eventim) மேடையில் மேடையில் தோன்றிய இளையராஜாவின் முகத்தில் அந்த கவலை கொஞ்சம் தெரிந்தது போல எனக்குத் தோன்றியது. இந்தக் கட்டுரை அங்கு வாசிக்கப்பட்ட இசையைப் பற்றிய விரிவான பார்வை அல்ல. ஒரு வரலாற்றுத் தருணம் நிகழ்த்தப்பட்ட கணத்தை முடிந்தவரை வரிசைகிரமமாகச் சொல்ல முற்படும் ஒரு முயற்சி மட்டுமே.

இளையராஜாவின் வேலியண்ட் சிம்பொனி 1 அரங்கேற்றம் கிட்டத்தட்ட 77 கலைஞர்களால் லண்டன் ஹாமர்ஸ்மித்தில் இருக்கும் இவெண்டிம் எனும் இசை அரங்கில் மார்ச்சு 8, 2025 ஆம் தேதி மாலை எட்டு மணிக்கு நிகழ்த்தப்பட்டது. ஏழு மணிக்கு கதவு திறக்கும் என செய்தி கிடைத்திருந்தாலும் அமெரிக்கா, ஸ்காட்லாந்து, இந்தியா, ஐரோப்பா மற்றும் பல ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் ஐந்து மணிக்கே அரங்கத்தின் வாசலில் திரண்டு விட்டனர். அருகில் இருந்த பல உணவுக்கூடங்களில் கூட்டம் வழிந்தது. கிட்டத்தட்ட ரெண்டாயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்தனர் எனப்பின்னர் செய்திகளின் வழி தெரிந்துகொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட எண்பது சதவிகித இடங்கள் அந்தப் பெரிய இசைகூடத்தில் நிரம்பியிருந்தன. மேடையில் பலவித வாத்தியக்கருவிகள் தயார் நிலையில் இருந்தன. கூடவே ஒரு ஓரத்தில் டிரம்ஸ் ஒன்று பதுங்கியிருந்தது – அது சிம்பொனிக்குப் பின்னான இசை நிகழ்வுக்கானது எனும் நம்பிக்கையை எனக்குள் கொடுத்து கூடுதல் சந்தோஷத்தைக் குவித்தது.

நிகழ்ச்சி தொடங்கியதும் நேரடியாக சிம்பொனிக்குள் செல்லாமல், ஸாஷ்டகோவிச் உருவாக்கிய ஓவர்ட்யூர் ஒன்று வாசிக்கப்பட்டது. லண்டன் ராயல் சிம்பொனி கான்சர்ட் குழுவினர் ஐரோப்பாவில மிகப்பிரபலான குழுவினராக அறியப்படுகின்றனர். லண்டன் சிம்பொனி ஆர்க்கெஸட்டிரா ஐரோப்பிய க்ளாசிக்கல் இசையை மட்டும் மேடையில் நிகழ்த்துவர் என்றால் சிம்பொனி கான்சர்ட் குழுவினர் செவ்வியல் கச்சேரிகளைத் தவிர சினிமா இசை, ராக் மற்றும் பாப் பாடல்களுக்கான பின்னணி இசை மற்றும் பல கணினி விளையாட்டுகளுக்குக் கூட இசை அமைத்துள்ளனர். அதனால் கான்செர்ட் குழுவினருக்கு பல வகைப்பட்ட இசை வடிவங்கள் மீதான அனுபவங்கள் உள்ளன. இக்குழுவினரின் பிரதான இசை நடத்துனர் (conductor) மிகேல் டோம்ஸ் என்பவர் வழிநடத்த அன்றைய மாலை நிகழ்வுகள் தொடங்கின.

இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்வைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் ஐரோப்பிய சிம்பொனி பற்றி சிறு அறிமுகம் செய்துகொள்ளலாம். இக்கட்டுரை வருவதற்கு முன்னரே சிம்பொனி பற்றி மிக விரிவான காணொளிகள் இணையத்தில் வந்துவிட்டன என்றாலும் நமக்குத் தேவையான குறிப்பு மட்டும் அடுத்த பத்திகளில். கொஞ்சம் இசை வகுப்பு போல இருந்தாலும் இந்த சிறு அறிமுகம் சிம்பொனியின் வடிவத்தைப் புரிந்துகொள்வதற்கு மிக அவசியம்.

எல்லா இசை பாணி போலவே சிம்பொனிக்கென்று ஒரு இலக்கணம் ஒன்றுள்ளது. பொதுவாக இலக்கணம் என்பது வடிவம் ரீதியாக அமையும் ஒன்று. சரணம் பல்லவி அனுபல்லவி, ராகம் தானம் பல்லவி, ஸ்தாயி மற்றும் அந்தரா என ஒவ்வொரு பாணிக்கும் ஒரு குறிப்பிட்ட வடிவம் அமைந்திருக்கும். பல்லவிக்குள் சில நுண் அமைப்புகள் இருக்கும் – பூர்வாங்கம், உத்தராங்கம், அறுதி என்பது போல ஒவ்வொரு பகுதிக்கும் உபபகுதி உண்டு. சிம்பொனி என்பது பொதுவாக மூன்று/நான்கு பகுதிகள் கொண்டிருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் தனிப்பட்ட இலக்கணங்கள் உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் சில உட்பகுதிகள் உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் – முதல் பகுதி வேகமான தாள கதியில் இருக்கும். அதில் மிகத் தெளிவான இசைக்கருப்பொருள் (theme) ஒன்று அறிமுகப்படுத்தப்படும். இதை Exposition எனக்கூறுவர். முதல் பகுதியிலேயே Development எனும் உட்பகுதி உண்டு. அதில் அடிப்படை கருப்பொருள்கள் வெவ்வேறு வாத்தியக்கருவிகள் அறிமுகப்படுத்தப்படும். வாத்தியக்கருவிகளின் ஸ்வர வளர்ச்சியின் சாத்தியங்களும் அவற்றின் பேதங்களும் இசைக்கப்படும். உதாரணத்துக்கு பிரதானமாக கீழ் ஸ்தாயிக்கருவிகளான செல்லோ அல்லது டபுள் பேஸ் மைய இசைக்கருப்பொருள் துணுக்கை விரிவாக்கம் செய்து அதி மந்திர ஸ்வர வரிசையில் சிலபுதிய ஸ்வரக்கோர்வைகளை உருவாக்கும். அதற்கு அடுத்து மேல் ஸ்தாயியின் பிகாலோ அல்லது டிரம்பெட் அதை மேலும் வரிவாக்கும். மிகத் திடமான டிரம்பெட் இசையை உருவாக்கியதன் மூலம் வேலியண்டின் அர்த்தம் அங்கங்கே அழுத்தமாக நிலைகொள்கிறது. Recapitulation எனும் உபபகுதியில் மைனர் ஸ்வரங்களிலிருந்து தாய் ஸ்வரங்களுக்குத் திரும்பும் படலம் துவங்கும். கேட்பவர்களுக்கு இசை முழுமை அடைந்த உணர்வை இது அளிக்கும்.  ரெண்டாம் பகுதி மிக மெதுவாக அமைந்திருக்கும். அறிமுகப்படுத்திய கருப்பொருளின் பல சங்கதிகள் எல்லா இசைக்கருவிகளிலும் விரிவாக்கம் பெற்றிருக்கும். மூன்றாம் பகுதி என்பது கிட்டத்தட்ட முதல் பகுதியின் வேகத்தைப் போலவே துள்ளலாக அமைந்திருக்கும் (மெலடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்). நான்காம் பகுதி முத்தாய்ப்பான முடிவுப்பகுதி. முதல் பகுதியின் கருப்பொருளை முழுமையாக்கும் விதமாக அமைந்திருக்கும். கிட்டத்தட்ட இப்பகுதி முழுவதுமே ஒரு Recapitulation அல்லது home coming தான்.

சிம்பொனியின் உள் இலக்கணம் போலவே அதன் தலைப்புக்கும் ஒரு அர்த்தம் உண்டு. இளையராஜாவின் சிம்பொனி 1 என்பது அவரது முதல் சிம்பொனி, தலைப்பு – வேலியண்ட் (வீரம்). கூடவே இதில் விட்டுப்போனது ஒன்றுள்ளது. சிம்பொனியில் வரும் மைய ஸ்கேலை (மிக மேலோட்டமாக – ஸ்வரவரிசை) தலைப்போடு வைத்திருப்பார்கள். பீத்தோவனின் ஐந்தாவது சிம்பொனியின் தலைப்பு – சிம்பொனி 5 சி மைனர் பகுதி 67. இதில் சி மைனர் என்பது இந்தச் சிம்பொனியின் துவக்கத்தில் வரும் ஸ்கேலின் பெயர். இதில் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. முழு சிம்பனியும் ஒரே ஸ்கேலில் அமைந்திருக்காது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு ஸ்கேலில் இருக்கலாம். சில சமயம் ஒரே பகுதியில் கூட ஸ்கேல் மாறலாம். இதைக் கொண்டே ரெண்டு விதமான சிந்தனைப் பள்ளிகள் உள்ளன. இறுதிப்பகுதியில் முடியும் ஸ்கேலைக் கொண்டு பெயர் வைப்பது வியன்னா முறை. இத்தாலியைச் சார்ந்த கலைஞர்கள் முதல் பகுதியின் தொடக்கத்தில் அமைந்திருக்கும் ஸ்கேலை பெயரோடு சேர்த்து வைப்பார்கள். ஒரு மைனர் ஸ்கேலில் தொடங்கிய முதல் பகுதியின் இசையை நான்காம் பகுதியில் மேஜர் ஸ்கேலின் சாயலுக்கு மாற்றி சுழற்சி முறையில் ஒரு முழுமையைத் தருவதும் உண்டு. அப்படி முடிப்பது ஒரு வகையில் முழுமை பெற்ற இசையாக அமையும்.

*

இசைஞானி இளையராஜா அமைத்து ராயல் பில்ஹார்மோனிக் கான்சர்ட் ஆக்கெஸ்ட்ரா அரங்கேற்றம் செய்யப்போகும் சிம்பொனி தமிழ் இசை ரசிகர்களிடையே கடந்த ஆறு மாதங்களாகவே பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பி இருந்தது. தொன்னூற்று மூன்றாம் ஆண்டுக்கு முன்னர் இளையராஜா செய்த சிம்பொனி முயற்சி கைகூடாமல் போனதால் ( இதற்கு சிம்பொனி இலக்கணம் சார்ந்த குழப்பங்கள் காரணமாக இருக்கலாம் எனச் சிலர் பதிவு செய்திருந்தார்கள். இளையராஜாவைத் தவிர யாருக்கும் அதன் காரணம் தெரியாது என்பது தான் உண்மை) ரசிகர்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவே ஆர்வத்தோடு காத்திருந்தனர். பொதுவாகவே ராஜாவின் இசை செவ்வியல் இசைக்கு நெருக்கமாக அமைந்திருக்கும். பல திரைப்படங்களின் பின்னணி இசையும், பாடல்களின் இடையிசையில் வரும் வயலின், செல்லோ, குழல் கருவிகளின் ஒத்திசைவும் ராஜாவுக்குள் இருந்த செவ்வியல் கலைஞரை வெளிப்படுத்தி வந்துள்ளது. மெலடியும் ஐரோப்பிய இசையின் மையமான ஹார்மனியும் (பல்லிசை/சேர்ந்திசை) இணைந்து உருவாகும் எண்ணிலடங்கா பாடல்களும், பின்னணியும் இசையும் அவரது ஐம்பதாண்டுகால இசையை நிரப்பியுள்ளன. திரைப்பட இசையை விட்டு வெளியே ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், திருவாசகம், பிரபந்தம் பாடல்கள் என தனியிசை ஆல்பங்களும் ஐரோப்பிய இசையின் பல பரிமாணங்களை ரசிகர்களுக்குக் காட்டியது. ஹவ் டு நேம் இட் இசைத் தொகுப்பில் தந்தி இசைக் கருவிகளின் இணைப்பும், நத்திங் பட் விண்ட் தொகுப்பின் குழல் இசையும் உருவாக்கிய நெகிழ்வும் செவ்வியலுக்கே உரித்தானவை. திருவாசகம் தொகுப்பின் ஒரட்டாரியோ எனும் குரலும் இசையும் சேரும் பாணியும் ஐரோப்பிய இசையின் பாடலிசை (ஆபரா) பாணியை ஒத்திருந்தது. தந்தியிசை கன்சர்ட்டோவிலும், திருவாசகம் ஒரட்டாரியோவிலும் இந்திய இசையின் ராக நுணுக்கங்களை இணைத்துக்காட்டியது ராஜா அளித்த கொடை எனலாம். ஐரோப்பிய இசையோடு சேர்ந்து ஒரு சேம்பர் இசையை அளிக்கும் சாத்தியத்தை இது திறந்து காட்டியது. பின் நாளில் ஸ்டிரிங் டெம்பிள் குழுவினர் (வி.எஸ்.நரசிம்மன்) உருவாக்கிய ராகசாகா போன்ற இசைத்தொகுப்புகளுக்கு இவை முன்னுதாரணம் எனக் கொள்ளலாம். இவை மட்டுமல்லாது, பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்தும்போதெல்லாம் முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்களான நெளஷத், ரோஷன், மதன்மோகன், சலில்தா கர்னாடக இசைக்கலைஞரான பாலமுரளி கிருஷ்ணா போன்றோருடன் மோசார்ட், பெத்தோவன், ஷுபர்ட் பற்றியெல்லாம் தொடர்ந்து இளையராஜா அறிமுகம் செய்து பேசி வந்திருக்கிறார். சினிமா இசையினால் ஈர்க்கப்பட்டு வந்த ரசிகர்களுக்கு இவை பெரிய திறப்புகள் எனலாம். ஒரு துறையில் ஜாம்பவான்கள் எப்போதும் தங்களுக்கு முந்தையை வித்தகர்களைப் பற்றிப் பேசி ஒரு தொடர் வரிசையை உருவாக்குவர். கலையைப் புரிந்துகொள்ள அணுகும் ரசிகர்களுக்கு அவை மிகப்பெரிய திசைகாட்டியாக அமையும். ராஜாவைத் தொடர்ந்து வருபவர்களுக்கு இதுவரை சொன்ன எதுவுமே புதிதல்ல. அந்தளவு அவர் பல இடங்களில் இவற்றைப் பற்றிப் பேசியுள்ளார். இசையின் சாத்தியங்களையும் இசை எனும் கலையின் மேஜிக் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லி வந்ததாலேயே சினிமா எனும் ஜனரஞ்சகமான அல்லது பொழுது போக்குத் துறையிலேயே இருந்தாலும் அதைவிட ஒரு பெரிய விஷயத்தை அவரால் ரசிகர்களுக்குச் சுட்டிக் காட்ட முடிந்திருக்கிறது. இவற்றை கிட்டதட்ட நாற்பது வருடங்களும் மேலாகப் பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள் ஐரோப்பிய செவ்வியல் இசைக்கு ஓரளவு தயார் ஆனவர்கள் என நம்மால் கட்டாயம் சொல்ல முடியும். ஆனாலும், நாற்பத்து ஐந்து நிமிடங்கள் முழுவதுமாக கருவியிசையை மட்டும் அமைப்பதும் கேட்பதும் பொதுப்பரப்பில் அத்துணை பிரபலம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இனி அப்படிப்பட்ட அனுபவம் தமிழ் இசை ரசிகர்களுக்கும் ஆர்வமிருக்கும் பிற இந்திய ரசிகர்களுக்கும் கிடைக்கப்போகிறது என்பது இந்த வரலாற்று தருணத்தின் ஆகப்பெரிய பலன் என நினைக்கிறேன்.

இளையராஜாவின் மேடைக்கச்சேரியைக் கேட்கச் செல்பவர்களுக்கு இருக்கும் பயம்/அல்லது கவலை ஒன்றுண்டு. தேவைக்கதிகமாக சத்தமிட்டோ கூச்சலிட்டோ அவரது கச்சேரிகளை ரசிக்க முடியாது. விசில் அடித்தும் தேவயற்ற இடத்தில் கையைத் தட்டியும் ராஜாவிடம் திட்டு வாங்கிய கூட்டம் அதிகம். ‘இதயம் போகுதே’ பாடலைக் கொண்டு அவர் சிம்பொனியின் அமைப்பை விளக்கத் துவங்கும் கச்சேரியில் கைத்தட்டி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக அவர் கூட்டத்தைக் கடிந்துகொண்டார். அந்தளவு இசையைத் துல்லியமாக அதன் உண்மை அமைப்போடு ஜனங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டு. பொதுவாக சிம்பொனியைக் கேட்டிராத ரசிகர்கள் நான்கு பகுதிகளின் சிறு இடைவெளிகளில் கூட கைத்தட்டிவிட வாய்ப்புண்டு. ஓரிரு இடங்களில் அப்படிப்பட்ட குழப்படி இவெண்டிம் சிம்பொனி அரங்கேற்றத்தில் நடந்தது – முதலாம் பகுதி முடியும் தருவாயில் ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் கோடா எனும் துணுக்கு வந்தது. ஆனால் அன்று அரங்கத்தில் அந்த இடைவெளியைத் தவறாகப் புரிந்துகொண்டு கைத்தட்டத் தொடங்கியதும் ராஜா முகத்தில் கண நேரம் எரிச்சல் உண்டானது.

சிம்பொனி இசை என்பது குறைந்தபட்சம் 45 நிமிடங்களேனும் நடக்கும் இசைக்கச்சேரி . வேலியண்ட் துவங்கும் முன் ஸஷ்டகோவிச் சிம்பொனி நான்கின் முதல் பகுதி இசைக்கப்பட்டு ரசிகர்களை முன்தயாரிப்பு செய்தார்கள். அந்த ஐந்து நிமிடங்களில் அடுத்து வரப்போகிற 45 நிமிட இசைக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. ராயல் சிம்பொனி கன்சர்ட் குழுவினரின் துல்லியமான ஒலிக்கும் அரங்கத்தின் ஒலி அமைப்பும் பிரமிக்கும்படியாக அமைந்திருந்தது. சிம்பொனியின் முன்னோட்டத்தில் ராஜா சொன்னதுபோல ஒவ்வொரு ஒலியும் தனித்தனியாக முழுமையாக அமைந்திருந்தது. சுருதி சுத்தத்தோடும், தீர்க்கமான தொடக்கம் மற்றும் முடிவோடும் அமைந்த ஒவ்வொரு ஸ்வரத்தையும் கேட்டதும் அரங்கில் நிசப்தம். ராஜாவின் சிம்பொனி தொடங்கப்போகிறது எனும் படபடப்பு அரங்கில் இருந்த ஒவ்வொரு ரசிகரிடமும் அப்போது தெரிந்தது. ஒருவித பரவச நிலையில் அனைவரும் அந்த நொடிக்காகக் காத்திருந்தனர்.

வேலியண்ட் சிம்பொனி பெயருக்கு ஏற்றபடி முழு தன்னம்பிக்கை மற்றும் தெளிவுடன் துவங்குகிறது. வயலின் மற்றும் செல்லோ முன்செல்ல குழல் கருவிகளின் நான்கைந்து வகைகள் பின்னே சரம்கோர்ப்பதுபோல பேஸ் ஒலி துவங்கி மேலே மேலே என எழும்பியபடி இருந்தன. முழுவதும் ஐரோப்பிய பாணியில் முழு சிம்பொனியை அமைத்திருந்தாலும், சில ஸ்வர வரிசைகள் இந்திய இசையின் ‘பா’வத்தைக் கொண்டிருந்தன. ரெண்டாம் பகுதியில் மின்னல் போல சட்டென வந்து போன வயலின் மற்றும் மேல் ஸ்தாயியில் வரும் பிகாலோ (குழல்) மற்றும் க்ளாரினெட் வாத்திய டூயட் ஒரு அற்புதமான மெலடி. ஆனால் இதை சங்கம இசை என்றோ ஐரோப்பிய கட்டமைப்பில் உருவான இந்திய இசை என்றோ கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இது முழுக்க முழக்க இந்தியர் அமைத்த ஐரோப்பிய சிம்பொனி இசை. 

நாற்பத்து ஐந்து நிமிடங்கள் சிம்பொனி இசைத்த பின் இருபது நிமிட இடைவெளி விடப்பட்டது. இடைவெளிக்குப் பின் இளையராஜாவின் சில பாடல்களின் இசைவடிவமும், பின்னணி இசையும் இடம்பெறும் எனக் கூறியதால் ரசிகர்களின் ஆரவாரத்துடன் இடைவெளி விடப்பட்டது. நண்பர் வயலின் விக்கி மற்றும் பிற லண்டன் நண்பர்களான வெற்றி ராஜா, ராஜேஷ், கனகுராஜா, பிரேம் என ராஜ வரிசை நண்பர்களுடன் அளவிலாவிய பின் துவங்கிய ரெண்டாம் பகுதியில் இளையராஜா திரைப்பட இசையிலிருந்து சில பாடல்களின் இசைவடிவம் வாசிக்கப்பட்டது. முதலில் 3 இன் 1 எனும் ராஜாவின் பிரபலமான இசைவடிவம் வாசிக்கப்பட்டது. மூன்று ஸ்வரங்களில் இசையமைக்கப்பட்டு பலமுறை மேடையில் இளையராஜா அவர்களால் செய்து காட்டப்பட்ட அற்புதம் இது. ‘பாடப் பிறந்தது பாட்டுத்தான்’ எனும் பாடலை முதலில் பாடிக்கட்டினார். அதற்குப் பின்னர் ‘இதயம் போகுதே’ பாடல் இசைக்கப்பட்டது. ஷுபெர்ட் எனும் ஐரோப்பிய இசைக்கலைஞர் அமைத்த முடிவுறாத சிம்பொனி (அன்ஃபினிஷ்ட் சிம்பொனி) எனும் அமைப்பின் முதல் பகுதியின் அமைப்பை ஒட்டி இப்பாடலை அமைத்திருப்பதாக ராஜா கூறினார். இதுவும் முன்னர் பல மேடைகளில் இசைக்கப்பட்டது தான் என்றாலும், இப்போது ஆர்க்கெஸ்ட்ரேஷனில் முழுமையைக் கொண்டு வந்து அந்த சிம்பொனியில் சிறு துணுக்கை முழுவதுமாக வாசித்தார்கள். கூடவே ராஜாவும் பாடியது சிறப்பாக அமைந்தது. 82 வயதானாலும் ராஜாவின் குரலில் இருக்கும் மாயம் குறையவில்லை. நாற்பது வருடங்களாக அக்குரலுக்கென்றே இருக்கும் ரசிகர்களை இப்போதும் அவரால் ஈர்க்க முடிவது பேரதிசயம் தான். ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா, பூவே செம்பூவே, கண்ணே கலைமானே போன்ற பிரபலமான பாடல்களை ஆர்க்கெஸ்டிராவின் அமைப்பில் கேட்கும்போது வந்து ஒலியமைப்பு திரைப்பாடல்களை விட மிகவும் மேம்படுத்தப்பட்ட வடிவில் இருந்தன. நாம் வழக்கமாகக் கேட்கும் இசைத்தட்டுக்களில் அல்லது பதியப்பட்ட யூடியூப் பாடல்களில் சில பின்னணி இசையும், நுணுக்கமான பேஸ் ஒலி அமைப்பும் வெளிப்படாமல் இருக்கச் சாத்தியம் உள்ளது. செல்லோ, வயோலா, வயலின், குழலின் பல வகைகள், ஓபோ, சாக்ஸ் எனப் பல ஒலியமைப்பு ஒன்றாக இசைத்து ஒரு மேடையில் வழங்கும்போது நம்மைத் தீண்டும் அனுபவத்தை வார்த்தையால் விளக்குவது கடினம். ரசிகர்களின் பலத்த ஆரவாரத்தோடு இப்பகுதி நிறைவு பெற்றதும் இளையராஜா இசையமைத்த பல திரைப்படங்களின் பின்னணி இசை வாசிக்கப்பட்டன. முழுமையான இசைத் தொகுப்பை நண்பர் வயலின் விக்கி தனது பதிவில் சேர்த்துள்ளார். பொதுவாக சிம்பொனி இசைக்குழுக்கள் செவ்வியல் இசையைத் தவிர பிற பாடல்களை வாசிக்க மாட்டார்கள். இவர்கள் கான்செர்ட் ஆர்க்கெஸ்ட்ரா என்பதால் இவற்றை வாசித்தார்கள் என எண்ணுவதற்கு இடமுண்டு. அதேபோல் பிபிசி வாய்ஸ் எனும் அமைப்பிலிருந்து சில குரலிசைக் கலைஞர்களும் இவர்களோடு சேர்ந்து கொண்டதால் பாடல்களின் இசைவடிவத்தைத் தாண்டி பாடுபவர்களின் ‘பா’வங்களும் கலந்துவிட்டிருந்தன.

முதல் சிம்பொனி என்பதைத் தவிர இதில் என்னென்ன சிறப்பம்சங்கள்.

சிம்பொனி எனும் அமைப்பின் இலக்கணத்திலிருந்து துளி கூட விலகாது அமைத்திருந்ததை முதலில் பாராட்டியாக வேண்டும். அதுவும் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாகப் பழகிய திரை இசை வடிவத்திலிருந்து அசுர பாய்ச்சல் எடுத்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் குறைவுதான். வேலியண்ட் இசையின் கம்பீர லயமும், உருக்க வைக்கும் மெலடிப்பகுதிகளும் கண்டிப்பாக இசை ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். அதுவும் ராஜா இசையை கேட்டு வளர்ந்த தலைமுறைக்கு இது தங்கள் வாழ்நாளில் கேட்டதிலேயே மிகவும் ரசிக்கத்தக்க இசையாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நிமிடம் கூட தொய்வடையாது எடுத்துக்கொண்ட திசையில் இசையை விரித்து விரித்துச் சென்றது உணர்ச்சிமிக்க அனுபவம் தான்.

சிம்பொனியின் வடிவத்திலிருந்து விலகாதிருப்பது ஒருவிதத்தில் இசை ரசிகர்களுக்கு ஒரு குறையாகவும் இருக்கலாம். ஏனென்றால் இந்திய இசைக்கும், திரைப்பட்ட பின்னணி இசைக்கும் தன்னால் பிரத்யேகமாக ஒரு யானைப்பாதையைப் போட்டுத்தந்திருக்கும் ராஜாவால் நான்கு நூற்றாண்டுகளாக செவ்வியல் இசையின் உச்சம் எனச் சொல்லப்படும் ஐரோப்பிய இசைக்கு தன்னுடைய முத்திரையை பதித்திருக்கும் வாய்ப்பு ஒன்று திறந்துள்ளது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஆசிய நாடுகளான சீனா, தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகள் சிம்பொனி இசைக்குழுக்கள் மூலம் தங்களது தனித்துவமான இசையை கோலோச்சி வருகிறார்கள். முழுவதும் சீன இசைக்கருவிகளால் மட்டுமே அமைக்கப்பட்ட சிம்பொனி இசையைக்கொண்டு புது ஒலிகளையும், வாசிப்பு முறைகளையும் சிம்பொனி எனும் நான்கு பகுதிக்குள் உருவாக்கி வந்துள்ளனர். தெற்காசிய நாடுகளுக்கு எனப் பிரத்யேகமான தாள வாத்தியங்களும், நுண்ணிய தாள அமைப்புகளும் உண்டு. அதேபோல, நம் ஸ்ருதி அமைப்பு மிகவும் நெகிழ்வு தன்மை கொண்டது என்பதால் பல விரிவாக்கப்பட்ட ஸ்ருதிகளைக்கொண்ட கருக்களில் இசையைக் கோர்க்க முடியும். ஒரு ஹுலூசி, ஒன்பது துளை குழல், நான்கு தந்திகள் கொண்ட சீன வயலின் அமைக்கும் இசை அவர்களது கலாச்சாரத்தின் இசையாக அமைகிறது. பல ஸ்வரங்களை ஒரே நேரத்தில் இசைப்பதும், மந்தர ஸ்வரங்களுக்கும் கீழே அமைந்துள்ள அதி மந்தர ஸ்வரங்களையும் இசைப்பதாலும் இவர்களது இசையில் பல புது இணைப்புகளையும் உணர்வுகளையும் உண்டாக்க முடிகிறது. அப்படி பல வருடங்கள் பயிலும் போது அந்தந்த நாட்டின் இசைக்கலை வளர்வதோடு மட்டுமல்லாது இளைஞர்கள் பயிலும் பண்டைய இசைக்கருவிகளின் சாத்தியங்களும் விரிவடைகின்றன. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கருவி இசையில் பெரும் பாய்ச்சல்களை இந்த தெற்காசிய நாடுகள் செய்திருக்கின்றன. ஒற்றை வாத்தியக்கருவிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த தந்தி மற்றும் குழல் இசைக்கருவிகள் இப்போது பல்லிசை அமைப்பில் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரம்மாண்ட காட்சி ஊடகங்களும், பிரத்யேகக் கலாச்சாரங்களில் பயிலப்படும் இசைக்கருவிகளும் இணையும்போது ஒருகுறிப்பிட்ட நிலப்பகுதிக்கென அமைந்த கலை உலகளாவிய இசை அனுபவமாக மாறுகிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த Dune 2 திரைப்படத்தில் உபயோகப்படுத்திய டுடுக் (Duduk) எனும் அர்மேனிய குழலிசைக்கருவி நிலப்பகுதியின் வறட்சியை இசைப்படுத்தி உள்ளது. க்ளாடியேட்டர் படத்திலும் இக்கருவி பின்னணி இசையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.இரு புயல்களிடையே அமைதி எனும் இந்த இசைக்கோவையை கீழுள்ள உசாத்துணையில் கேட்கலாம்.

பண்டைய காலங்களில் பல்லிசை என்பது அதிகம் புழக்கத்தில் இல்லை. ஒரே நேரத்தில் பல இசைக்கருவிகள் வாசிப்பதை சிலப்பதிகாரத்தில் வரும் சில குறிப்புகளிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம். ஆனாலும் தெற்காசிய இசை என்பது குழலும் யாழும் கலந்த ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. குழலும் தந்தி இசைக்கருவியும் இல்லாத பண்டைய நாகரிங்கள் என எதுவும் இல்லை. குழல் இசை எப்போது கிராமிய இசையோடு கலந்த ஒன்றாகவே பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கிழக்காசியா முழுவதும் இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் அவற்றின் இலக்கணங்கள் உருவாகி வந்ததோடு வாத்தியக்கருவியின் சாத்தியங்கள் வளரும்போது அவை மேடையில் ஒலிக்கத் தொடங்கின. இப்படி ஐரோப்பிய இசை இலக்கணம் சில குறிப்பட்ட இசைக்கருவிகளை மட்டும் சிம்பொனியில் அமைத்து வந்த பிறகு இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் பல புதிய ஸ்ருதி மற்றும் லய பரிசார்த்த முயற்சிகள் தொடங்கின. அப்போதும் கூட அவை சில குறிப்பிட்ட இசைக்கலைஞர்களிடம் மட்டுமே அதிகம் வெளிப்பட்டன (ஷோன்பெர்க், பிலிப் க்ளாஸ்).

தொன்னூறுகளுக்குப் பிறகு புதிய அலையாக ஐரோப்பிய செவ்வியல் இசை வடிவங்களில் பண்டைய இசைக்கருவிகளை இணைக்கும் பணியை கொரியா, சீனா போன்ற நாடுகள் செய்து வருகின்றன. புதிய திசையிலிருந்து அடிக்கும் காற்றைப்போல இது பல்லிணைவு இசைக்கு புதிய சாத்தியங்களைத் திறந்துவிட்டிருக்கின்றது. ஒரு ஹுலூசி, ஷாமிசன், எர்ஹூ , ஜப்பானிய கோஹோ, பாலி கமேலன் கொண்டுவரும் புது ஒலிகளும் சாத்தியங்களும் (ஒரே தாவலில் பல ஸ்ருதிகளை இணைக்கும் முறை ஒரு உதாரணம்) சிம்பொனி, கான்செர்ட்டோ (ஒரு மையக்கருவியைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பிற கருவியிசை) எனும் அமைப்புக்குள் பொருத்தப்பட்டு பல வடிவ சோதனைகளில் வாசிக்கப்படுகின்றன. இதுவரை குரலிசையின் பின்னணியாகவோ, அல்லது ஒற்றை இசைக்கருவியாகவோ மட்டும் வாசிக்கப்பட்டவை பல ஒலிகள் ஒன்றாய் அமைந்து புது உணர்வுகளை உருவாக்கும் சாத்தியத்தைத் திறந்து வைத்துள்ளது. கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே இம்மாற்றங்கள் நடந்து வருகின்றன.

இளையராஜாவால் இப்படிப்பட்ட சாத்தியங்களின் முக்கியத்துவத்தை உணர முடியும். பல இந்திய வாத்தியங்களை தனது பாடல்களில் நல்ல முறையில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது அவற்றைக் கொண்டு தேவையான உணர்வுகளை ரசிகர்களிடையே உண்டாக்க முடியும் என உணர்ந்த ஒரு ஞானவான் அவர். அடுத்தடுத்த வரும் சிம்பொனிகளில் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ரசிகர்களாக நமது வேண்டுகோளாக இருக்க வேண்டும். இந்திய இசைக்கும், இளைஞர்களிடையே செவ்வியல் இசைக்கலையில் எதிர்காலம் பற்றி அவை பல புதிய திறப்புகளை அளிக்க முடியும். அது மட்டுமல்லாது, ஐரோப்பிய இசை வடிவங்களுக்கு நமது பெரும் கொடையாக நம் பாரம்பரிய இசை வடிவங்கள் இருக்க முடியும். இந்திய இசையின் மெலடியின் பல ஜாலங்களை நமக்கு அளித்தவரால் இதனூடாக கர்னாடக, நாட்டாரிய கொண்டு ஐரோப்பிய இசையில் ஒரு இந்திய வண்ணத்தைக்கொடுக்க முடியும். இன்றைக்கு இருக்கும் உலகளாவிய இசைக்கலைஞர்களில் இசைக்கோப்புகளை ஒவ்வொரு கருவிக்கும் தனித்தனியாக எழுதி உருவாக்கும் முறையை இளையராஜா தவிர வேறு யாரும் கடைபிடிப்பதில்லை என்பது நிதர்சனம். அவரால் மட்டுமே செய்யக்கூடிய செயலாக இது இருக்கும் என்பதில் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களைப் போல எனக்கும் பெரிய நம்பிக்கை உள்ளது.

சில இணைப்புகள்

  1. இளையராஜாவின் சிம்பொனி நிகழ்வு பற்றி வயலின் விக்கியின் இசைப் பதிவு – https://www.youtube.com/watch?v=yDKAWUTydlY
  2. ஹுலுசி குழல் மற்றும் சீன பாரம்பரிய இசைக்கருவிகள் கொண்டு அமைக்கப்பட்ட சிம்பொனி – https://www.youtube.com/watch?v=2LX7QoL1Dxk
  3. கொரிய பாரம்பரிய தந்தி இசைக்கருவியான ஷாமிசன் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சி https://www.youtube.com/watch?v=qRJnc46HkOk
  4. பாலி கமேலன் இசைக்குழுவினர் கூட்டிசை நிகழ்வி – https://www.youtube.com/watch?v=HXIW4h8R4Hg
  5. எர்ஹூ இசைக்கருவியை மையமாகக் கொண்டு அமைந்த தாய்வான் இசைக்குழுவின் சிம்பொனி இசை – https://www.youtube.com/watch?v=tu5XohUR3Pg&t=907s
  6. சீன பாரம்பரிய இசைக்கருவியான குசெங்கில் அமைந்த Hotel California பாடல் – https://www.youtube.com/watch?v=gf6v59c5yuY. பாடலின் தந்தியிசை பாணியில் சீன ஒலியமைப்புகளை இப்பாடலில் கேட்கலாம்.
  7. Legend of Condor Heroes – சிம்பொனி வடிவில் சீன இசை – https://www.youtube.com/watch?v=-hQSzKhSVMs
  8. ஐரோப்பிய இசைக்கருவிகள் கொண்டு ஜப்பானிய இசை வடிவம் – https://www.youtube.com/watch?v=7C49yV-Odu0

Exit mobile version