Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

நகைப்பாடம் – பார்கின்சனின் விதி

நகை உரைகளில் (Epigram) இரண்டு வகைகள் உள்ளது. முதலாம் வகை கேட்பதற்கு நையாண்டித்தனமாக இருப்பினும் அதனுள் தர்க்க அல்லது கணிதவியல் உண்மைகள் இருக்கும். உதாரணத்திற்கு, 

“ஏதாவது தப்பாகும் வாய்ப்புகள் இருந்தால், அது தப்பாகும்” – மர்ஃபியின் விதி. 

இந்த விதியை பெரும்பாலும் எல்லோரும் “If Something can go wrong, it will” என கேட்டிருக்கலாம், அநேகமாக அனுபவித்தும் இருக்கலாம். எழுத்தாளர் பலமுறை படித்து திருத்திய பின்னும் வாசகர்கள் ஒரு எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டுவது இந்த விதியின் நடைமுறைக்கு சாட்சி. “பூஜ்யத்திற்கு மேல் சாத்தியக்கூறுகள் இருந்தால் அந்த நிகழ்வு நடக்காது எனச் சொல்ல முடியாது” என்பது இந்த விதியின் தர்க்க வாதம். 

மர்ஃபியின் விதிக்கு கணிதவியலில் ஆதாரம் உள்ளது.  நடைமுறை உதாரணம் சொல்லவேண்டுமானால், சீட்டாட்டத்தில் சிவப்பு (அல்லது கருப்பு) இருதய இனத்தின் எண் பதிமூன்று வருவதற்கு சாத்தியக்கூறு பூஜ்யம். இதனால் அது அடக்க முடியாத நிகழ்வு. ஆனால் சீட்டுகளை கலைத்த பின் ஐந்து பிரிவுகளாக பகிரப்பட்ட சீட்டுகளில் ஈட்டி இனத்தை சேர்ந்த ராஜா, ராணி, இளவரசன் மூவரும் ஐந்து முறையும் ஒருவருக்கே வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக குறைவு (கணக்கில் ஆர்வமுடையவர்கள் இதை சோதித்து பார்க்கலாம், விடை : 0.00064) ஆனால் நடக்க முடியாதது எனக்  கூறமுடியாது. நுண் அளவே சாத்தியக்கூறு இருந்தும் அந்த நிகழ்வு நடந்தால் அது விதியின் விளையாட்டு. 

இன்னோரு உதாரணம் “கை தவறி தரையில் விழும் ப்ரெட் துண்டு, வெண்ணெய்  தடிவியை பக்கமாகத்தான் விழும்” (“Toast always falls butter side down”) என்பது. ப்ரெட்டின் இரண்டு பக்கங்களில் வெண்ணெய் தடவப்பட்ட பக்கத்திற்கு பளு ஆதிகமென்பதாலும், சுதந்திரமாக புவியியல்பின் தாக்கத்தில் மட்டும் விழும் பொருட்களின் அசைவுமுறை சட்டத்தின்  அடிப்படையிலும் இதனை புள்ளியியல் மூலம் நிரூபிக்கலாம். 

இதே வகையில் இன்னொரு சர்ச்சைக்குரிய ஆனால் கணிதவியலால் மறுக்கமுடியாத உதாரணம், “அளவற்ற நேரம் இருந்தால்,  முறையில்லாமல்  தட்டச்சு  செய்யும் குரங்கு கூட, ஒரு முறையாவது ஷேக்ஸ்பியரின் முழு படைப்புகளையும் சரியாக அடித்து விடும்” (Infinite Monkey Theorem).  இந்த உரையின் தர்க்க ஆதாரங்களை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன் (“அளவற்ற” என்ற சொல்லில் அடங்கியுள்ளது சூட்சுமம்).  

இரண்டாம் வகை தர்க்கமில்லா தூய நகை உரைகள். இவ்வகைக்கு  தர்க்க வாக்கியம் எழுதமுடியாது. அத்தகைய உரைகளில் மிக பிரபலமானது  

“வேலை, கொடுக்கப்பட்ட நேரத்தை நிரப்பும்” – என்பது. 

மேற்கண்ட வாக்கியம் 1955இல் சிரில் நார்த்கொட் பார்கின்சன் (Cyril Northcote Parkinson,  1909 -1993) என்ற ஆங்கிலேயரால் “தி எகனாமிஸ்ட்” (The Economist) என்ற இதழில் ஒரு கட்டுரையின் வாயிலாக வெளிவந்தது. ஆங்கிலத்தில்  “work expands so as to fill available time” எனப்படும் இந்த விதியை வேலை இடங்களில் சிலர் கேட்டிருக்கக்கூடும். வேலை செய்வதை தாமதிப்பத்திற்கும் அதனை தாமசிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தாமதம் என்பது வேலையில் இறங்கிய பின் சில சிக்கல்களால் முடிக்கமுடியாமல் திணறுவதை குறிக்கும். தாமசிப்பது வேலை துவங்குவதையே தள்ளிப்போடுவதை குறிக்கும். பார்கின்சன் விதி இந்த இரண்டிற்கும் சம்பந்தம் இல்லாதது. எதிர்பார்ப்பிற்க்கு மாறாக பார்கின்சன் இந்த வாக்கியத்தை ஒரு தன்னிச்சை விதியாகக்கூட   கூறவில்லை. அரசு அலுவலகங்களில்  வேலை செய்வோரின்  எண்ணிக்கைப் பெருக்கத்தை விளக்குவதற்கு ஒரு கருதுகோலாக இதனை முன்மொழிந்தார். பார்கின்சனின் விதி (Parkinson’s Law) என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் முதல் வாக்கியமாக இது அமைகிறது. படைப்பின் முதல் வாக்கியம் “பன்ச் டயலாக்” ஆக இருக்கவேண்டும் என யோசித்து இதனை எழுதியிருக்கக்கூடும். ‘பார்கின்சனின் விதி’ எனும் நூலில் ஒன்பது அத்தியாயங்கள் உள்ளன. அதில் சில மிக சுவாரஸ்யமானவை.  

1. சிப்பந்திகளின் பிரமிட் :

அரசு ஊழியத்தில் வேலை செய்யும் ஊழியர்  இரண்டு விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என்கிறார் பார்கின்சன். முதலாவது அவர்கள் மேலிருக்கும் மேலாளர்களை குறைத்துக்கொள்வது இரண்டாவது தங்களுக்கு கீழிருக்கும் சிப்பந்திகளின் எண்ணிக்கையை  பெருக்கி கொள்வது .  மேல்நோக்கி சுருக்கியும் கீழ்நோக்கி பெருக்கியும்  முடிவில் அத்துறை  ஒரு பிரமிட் வடிவத்தை அடையும் என்கிறார். எந்த வேலையை ஒருவரால் ஒரு மணிநேரத்தில் செய்யமுடிந்ததோ அதை  ஐவர் அதே ஒரு மணிநேரத்தில் செய்வார்கள் என நையாண்டித்தனமாக கூறுகிறார். இதற்காக தங்களுக்குத் தாங்களே தேவையில்லாத வேலைகளை உருவாக்கிக் கொள்வார்கள் என்கிறார். ஆங்கிலேய கடற்படையில் 1930 திலிருந்து 1960 வரை போர் கப்பல்கள், மாலுமிகள், போர்வீரர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் கடற்படை நிர்வாக துறையில் குமாஸ்தாக்களின் எண்ணிக்கை கூடியதை மேற்கோளாக காட்டுகிறார். ‘இதனால் வேலை குறையவில்லை ஒருவர் செய்த அதே வேலையை ஐவர் அதே நேரத்தில் செய்தனர்’ என ஆங்கில அரசுத் துறைகளின் வேலைத்திறமையை கேலியாக விமர்சனம் செய்கிறார். இந்த அத்தியாயத்தில் முதல் வாரியாக “வேலை, கொடுக்கப்பட்ட நேரத்தை நிரப்பும்” என்ற வாக்கியம் அமைகிறது. 

2. உயர் பொருளாதாரமும் சில்லறையும்:

உயர்மட்ட பொருளாதாரக் குழு  ஒரு மசோதாவின்மேல் முடிவெடுக்க எத்தனை நேரம் எடுக்கும்? இந்த கேள்விக்கு தர்க்க ரீதியாக பார்கின்சன் சொல்லும் பதில் “மசோதாவின் திட்ட செலவீட்டின் தலை கீழ் விகிதம்”. ஒரு உதாரணத்திற்கு அணுசக்தி ரியாக்டர் அமைக்க மூவாயிரம் கோடி என்ற மசோதா பரிசீலனைக்கு  வருகிறது. முதலில் அணுசக்தி ரியாக்டர் என்னவென்பதே குழுவின்  முக்கால்வாசி உறுப்பினர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் கம்மி. அப்படியே தெரிந்திருந்தாலும்  மூவாயிரம் கோடி ருபாய் அதன் சரியான செலவீடா என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கலாம். அரசியல் மற்றும் மின் தேவை அழுத்தங்களுக்கு உட்பட்டு இந்த மசோதாவின் மேல் அதிகபட்சம் அரை மணிநேரத்தில் அதிகம் கேள்விகள் கேட்காமல் திட்டத்தை நிறைவேற்றிவிடுவார்கள் என்கிறார். அதே குழுவிற்கு ஊழியர்களுக்காக சைக்கிள் கொட்டகை அமைக்க இன்னொரு மசோதா வருகிறது. திட்ட  செலவீடு மூவாயிரம் ருபாய். இந்த மசோதாவின் பரிசீலனையின் போது “இந்த சைக்கிள் கொட்டகை தேவைதானா?”, “தகரக்கொட்டகைக்கு  பதில் பிளாஸ்டிக் கொட்டகை அமைத்தால் ரெண்டாயிரத்தில் முடித்துவிடலாம்”, “ஊழியர்களுக்கு இந்த வசதி செய்து கொடுத்தால் நிச்சயம் மேலும் கேட்பார்கள்” போன்ற விவாதங்கள் எழ வாய்ப்புகள் உண்டு என்கிறார். இதனால் சைக்கிள் கொட்டகை  மசோதாவின்மேல் அக்குழு அணுசக்தி ரியாக்டர் மசோதாவைவிட அதிக நேரம் பரிசீலிக்கும் என்கிறார்.  நடுத்தர வர்க்கத்தினருக்கு கோடியை காட்டிலும் ஆயிரத்தில் மதிப்பு தெரிந்திருக்கும் என்கிறார் கிண்டலாக. 

3. வேலை விளம்பர மொழி இலக்கணம் :

வேலை விளம்பரங்கள் அவ்வேலை சம்பந்தப்பட்ட குறைகளையும்  நிறைகளையும் சரியாக குறிப்பிட்டால் விண்ணப்ப வெள்ளத்திலிருந்து தப்பிக்க முடியும் என்கிறார் பார்கின்சன்.  உதாரணத்திற்கு, ” தேநீர்த் தோட்ட மேலாளர் வேலை, மேலாண்மை அனுபவம் அவசியம், மாதம் எழுபதாயிரம், தங்குவதற்கு வீடு, கம்பெனி கார், வெளிநாடு செல்ல வாய்ப்பு” என்ற விளம்பரத்திற்கு சுமார் எழுநூறு விண்ணப்பங்கள் வர வாய்ப்பு உண்டு. சம்பளம் மற்றும் இதர சலுகைகள் கூடுதலாக இருப்பதினால் அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்க வாய்ப்புகள் உண்டு. அதையே, 

” தொழிலாளர் கலவரங்கள்மிக்க தேநீர் தோட்டத்தை மேலாண்மை செய்ய ஒருவர் தேவை, முப்பத்தி ஐந்து வயதிற்கு கீழ் மணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும், யானை மிதித்து அல்லது வெட்டுப்பட்டு சாகும் அபாயம் உண்டு, மாதம் எழுபதாயிரம், பேய் நடமாடும் காட்டு பங்களாவில் தங்கும் வசதி, 1977 மாடல் பிரேக் இல்லாத ஜீப் வண்டி கொடுக்கப்படும் (பராமரிப்பு உங்கள் செலவு), அதிகபட்சமாக  இலங்கை செல்ல வாய்ப்பு” என குறைகளையும் நிறைகளையும் சரியாக நிலைப்படுத்தி விளம்பரம் கொடுத்தால் அதிகபட்சம் இரண்டிலிருந்து  ஐந்து தேர்ந்த விண்ணப்பங்கள் மட்டுமே வரும், தேர்வும் சுலபமாகும். இதற்கு மேலும் நேர்காணலில் தகுதியானவரை தீர்மானிக்க முடியவில்லை என்றால் ‘பக்கத்தில் இருக்கும் பணிப்பெண்ணிடம் கேளுங்கள். அவள் சரியாக காட்டிவிடுவாள்’ என்கிறார் பார்கின்சன். ஆண்களால் பிற ஆண்களிடம் மதிப்பிட முடியாத வசீகரத்தை பெண்களால்தான் காணமுடியும் என்கிறார். 

4. சீனத்து நாய்த் தடை:

பணம் படைத்தவர்கள் எல்லோராலும்  ‘பணக்காரன்’ என்ற பட்டத்தை அடைந்துவிட முடியாது. ‘பணக்காரன்’ என்பது ஒரு தனித்துவ வட்டத்தின் உறுப்பினர்களுடைய பெயர், அதில் இடம் பிடிப்பது கடினம் என்கிறார் பார்கின்சன். ஒரு சீன கோடீஸ்வரரை சந்தித்த போது அந்த சீனர், “கூலிக்காரன் பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் ஒரு பணக்காரனால்தான் பணக்காரனைப்போல வாழ முடியும்” என விளக்கங்கள் கொடுக்காமல் சொல்கிறார். இந்த புதிரான வார்த்தைகளை ஆராயத் தொடங்கும் போது பார்கின்சனுக்கு “சீனத்து நாய்த் தடை” (Chinese Hound Barrier) என்ற கோட்பாடு தெரியவருகிறது. குடிசைவாழ் கூலியாக வாழக்கையை ஆரம்பித்த ஒருவன் கடின உழைப்பாலும் கூடவே சில தில்லு முல்லுகளாலும் ஓரளவுக்கு செல்வம் ஈட்டுகிறான். கல் வீட்டிற்கு குடி பெயர சக்தி இருந்தும் வருமான வரித்துறையினருக்கு பயந்து குடிசையிலேயே சில காலம் வாழ்கிறான். திடீரென ஒரு நாள் அல்சேஷன் நாய் காவலுக்கு நிற்கும் பெரிய பங்களாவிற்கு மாறுகிறான். குடிசையிலிருந்து ஒரே அடியாக பங்களாவிற்கு தாவும் இந்த மாறுதலை “சீனத்து நாய்த் தடை”யை தாவுவது என குறிப்பிடுகிறார். நாய்த் தடையை தாண்டினாலும் அவன் இன்னும் சீன சமுதாயத்தில் ‘பணக்காரன்’ என்ற அந்தஸ்தை  பெற இயலாது. ஈட்டிய செல்வத்தை சரியாக முதலீடு செய்து மேலும் செல்வந்தனாக ஆனபோது  அவனுக்கு ஒரு வட்டத்தில்  சேர அழைப்பு வருகிறது. அந்த வட்டத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே ‘பணக்காரன்’ என்ற அந்தஸ்தை சமுதாயத்தில் பெற்றவர்கள். இந்த வட்டத்தில் இருப்பவர்களை ஆள் கடத்தல் கூலிப்படைகள் தொட முடியாது, அவர்களை பற்றி அவதூறாக  பத்திரிகைகளில் எழுதமுடியாது. அத்தகைய சக்திவாய்ந்த செல்வாக்கு வட்டம். அந்த வட்டத்தில் சேர்ந்து அவர்களுடன் தோளுக்கு தோள் நின்று சமுதாயத்தில் வலம் வரும் போதுதான் அவன் அசல் ‘பணக்காரன்’ என்ற அந்தஸ்தை பெறுகிறான் என்கிறார் பார்கின்சன். 

மேற்கண்ட விதிகள் நையாண்டித்தனமாகவும் சமுதாய கேலி விமர்சனமாகவும் இருந்தாலும் எள்ளளவு உண்மை இருக்கத்தான்  செய்கிறது. பார்கின்சன் வெகு காலம் சிங்கப்பூரின் ராஃபிள்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியராக பணிபுரிந்தார். அக்காலத்தில் கிழக்காசிய பண்பாடுகளை கவனிக்க வாய்ப்பு  கிடைத்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள பண்பாடு வித்தியாசங்களை விமரிசையாக எழுதியுள்ளார். நகைச்சுவையாக எழுதப்பட்டாலும் சில யதார்த்தங்களை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. கீழ்க்கண்டவை அவற்றில் சில, 

1. ஒரு அரசுத் துறையின் மத்திய செயலகம் கட்டிட வடிவமைப்பின் அழகியல் உச்சத்தை தொடும் முன்னமே அத்துறை வீழ்ச்சி கண்டுவிடும். உதாரணத்திற்கு புது தில்லியில்  பாராளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். வார்சைல்ஸ் மாளிகை முடிக்கப்பட்டபோது ஃப்ரெஞ்சு புரட்சி வெடித்து முடியாட்சியையே தகர்த்தெறிந்து விட்டனர். “முழுமை என்பது நிறைவு, நிறைவு என்பது மரணம்” என்கிறர் பார்கின்சன். 

2. அமைச்சரவையின் உறுப்பினர் எண்ணிக்கை ஐந்தை தாண்டும்போது அதன் முக்கியத்துவம் போய்விடுகிறது என்கிறார். அமைச்சரவையின்  உறுப்பினர் எண்ணிக்கை எப்போது பதினைந்தை தாண்டுகிறதோ அப்போது அது வலுவிழந்து அதிகாரம் இல்லாத வெற்று கூட்டமாகிவிடுகிறது என்கிறார் பார்கின்சன். இந்நிலையில் விரிவடைந்த அமைச்சரவையில் இன்னொரு சிறிய அமைச்சரவை வேறேதாவது பெயரில் முக்கிய வேலைகளை செய்யத் தொடங்கும் என்கிறார். 

3 .ஓய்வு வயது பிறருக்கு மட்டுமே. வயதான ஒருவரை மேலாண்மை பதவியிலிருந்து நீக்கவேண்டுமென்றால் இடைவிடாமல் அவரை சர்வதேச பயணம் அனுப்பினால் காலை மாலை வித்தியாசம் மறந்து தூக்கமின்மையால் அவரே ஒய்வு பெற்றுக்கொள்வார் என்று ஓய்வு வயது நிர்ணயத்தை பற்றிச் சொல்கிறார் பார்கின்சன்.  

மேல்பார்வையில் பார்கின்சனின் விதிகள் நையாண்டித்தனமாகவும் கிண்டலாகவும் தோன்றினாலும் அக்காலத்து ஆங்கிலேய அரசுத் துறைகளில் மற்றும் சமுதாயத்தில் நிலவிவந்த யதார்த்தங்களையே விமர்சித்துள்ளார் என்பது புலப்படும். மேலாண்மை ஒரு அறிவியல் முறையாக வேர் கொண்டு வளர்ந்திருக்கும் நிகழ் காலங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த விதிகள் பிற்காலத்தில் தீவிர விவாதங்களுக்கு அடிப்படையாகி நிர்வாகத்தில் பல மேம்பாடுகளை கொண்டு வந்துள்ளது.  

Exit mobile version