Site icon சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

துகள் வாழ்வுக்குள் மாய உச்சி

சமீபத்தில் சுரேஷ் சுந்தரேசன் எழுதியுள்ள கரானா நாவலைப் படித்துமுடித்தேன்.

சுரேஷின் வலைப்பூவைத் தொடர்ந்து படிப்பவன் என்பதாலும், அவருடைய நாவல் இசையைக் களமாகக் கொண்டது என்பதாலும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நூலைப் படித்தேன்.

ஹிந்துஸ்தானி இசையில் இசைப் பரம்பரைகளை ‘கரானா’ என்று குறிப்பதுண்டு. தான்தோன்றியாய் முகம்மது ஜாஃப்ரி என்றொருவர் கராச்சியில் தொடங்கி, சஜ்ஜத் ஹுசைன், ஜாஃபர் அலி, நிஸ்ஸார் ஹுஸைன், சந்திரகாந்த், வைஷாலி என்று தொடரும் குரு பரம்பரையை முன்னும் பின்னுமாய், பல கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் நாவலை நகர்த்தியிருக்கிறார் சுரேஷ்.

குரு -சீடர் உறவில் உணர்ச்சிப் பெருக்குகள், வெளிப்படையாய் தெரியும் அன்புப் பெருக்கு, பூடகமாய் ஒளிந்திருக்கும் அன்பு, உளக் குமைச்சல், பொறாமை, போட்டி, ஆற்றாமை என்று பல சாத்தியங்களை வெவ்வேறு குரு-சிஷ்ய உறவுகளின் வழியாகக் காட்சிப்படுத்துகிறது கரானா.

மிகப் பெரிய எழுத்தாளர்கள் கூட, பல சமயம் இசையைக் களமாகக் கொண்டு எழுதும் போது அடிப்படை புரிதல் கூட இல்லாமல், தங்கள் கற்பனைகளை மட்டுமே முதலாகக் கொண்டு கதைகள் புனைவதை நிறையவே பார்க்கலாம். அந்தக் கற்பனைகளை இசை தெரிந்தவர்கள் படித்தால் நகைப்பே மிஞ்சும். இன்னும் சில கதைகளில் எதற்கு வம்பென்று இசை நுணுக்கங்கள் பக்கமே செல்லாமல் கதை நகரும். சுரேஷின் ஆழ்ந்த இசை ஈடுபாட்டால், இத்தகு குறைகள் இல்லாமல் நாவலொன்றைப் படிப்பதே பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.

நாவலின் பலம் அதன் சரளம். இசை தெரிந்தவர்கள் ஊன்றி நுணுக்கங்களை ரசிக்கும்படியான சில பகுதிகளும், இசை தெரியாவிட்டாலும் கதைக் களனை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்கிற வகையிலும் கதை வேகமாக நகர்கிறது.

குறிப்பாக எந்த பின்புலமும் இல்லாத சிறுவன், கர்நாடகத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, இயற்கையாகவே இசையின் பால் ஈர்க்கப்பட்டு, தற்செயலாய் சோட்டே உஸ்தாதை கண்டுகொண்டு – பம்பாயில் தன்னைச் சுற்றி ஒரு புதிய உலகம் விரிந்திருக்க, அதைப் பற்றி பிரக்ஞையே இல்லாமல் ராகக் கடலில் சதா சர்வ காலமும் மூழ்கித் திளைக்கும் பகுதிகளும் – ‘இப்படியொரு குழந்தையா?’ என்று அவனைச் சுற்றி உள்ளோர் எல்லாம் அவன் மேல் காட்டும் ஆதுரமும் என்னை மிகவும் நெகிழ வைத்தன.

காலப்பெருவெளியில் ஒரு மனித வாழ்வு எத்தனைச் சிறியத் துகள்! அந்தத் துகள் வாழ்வுக்குள் மாய உச்சியை அடைய எத்தனை வேட்கை! அடைந்த உச்சியில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முன்னரே காரணமேயின்றி சிம்மாசனம் பிடுங்கப்பட்டு கீழே தள்ளும் சூழல்கள்.  கற்பனைகளை விரித்துக் கலைகளுக்குள் சஞ்சரிக்கும் போது லௌகீக உலகிற்குள்ளும் அந்தக் கற்பிதங்கள் ஊடுருவி, கலையின் மையப்புள்ளி தன்னைச் சுற்றி இயங்குகிறது என்ற அபத்தம். அது  பேருருவாகும்போது அதைக் காலம் தாட்சண்யமின்றி சுக்குநூறாக்கும் நிதர்சனம். இதையே கரானாவின் ஒவ்வொரு தலைமுறை முதன்மைக் கலைஞர்களின் வாழ்க்கைகளை இணைக்கும் சரடாக புனைந்துள்ளார் சுரேஷ்.

இவ்வளவு சொன்னாலும், எனக்கு இந்த நாவல் முழுமையான திருப்தியைத் தரவில்லை .

சுரேஷின் முதல் நாவல் இது. இன்றைய சூழலில் அறிமுக எழுத்தாளராக ஆங்கிலத்தில் சரளத்தில் கவனத்தைச் செலுத்தாமல் ஆழங்களை நோக்கிப் பயணித்து நாவல் எழுதினால் – அதை யாரும் பதிப்பிப்பார்களா என்ற கேள்வியும் நிதர்சனமான ஒன்றுதான். இந்தப் பின்புலத்தில் நாவலின் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இருப்பினும்…

சுரேஷைப் படிப்பவர்களுக்கு அவருடைய பலங்களிள் முக்கியமான ஒன்று எடுத்துக் கொண்ட தலைப்பில் ஆழத்தை நோக்கிச் சென்று மிக விரிவாக அலசி எழுதுவது. பல இசை மேதைகளைப் பற்றி பல்வேறு பாகங்களில் அவர் அலசி இருப்பதை அவருடைய வலைப்பூவில் பார்க்கலாம். அவப்போது டிவிட்டரில் ஏதேனும் ஒரு தலைப்பில் பாடல்களைப் பட்டியலிடும் போது கூட இந்த நுனிப்புல் மேயாத தன்மையை நாம் கண்டுகொள்ளக் கூடும்.

இந்தப் பின்னணியில், இசைப் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு சுரேஷ் எழுதியுள்ளார் என்று அறிந்து கொண்ட போது, நானே என் மனத்துள் ஹிந்துஸ்தானி இசைப் பாரம்பரியத்தைப் பற்றிய விரிவான சித்திரத்தை, ஒரு ‘கரானா’ உருவாகும் விதத்தை, ஒரு தனிப்பட்ட கலைஞனின் பாணிக்கும் (style) ஒரு இசைப் பாரம்பரியத்துக்குமான வேறுபாட்டை எல்லாம் உணர்ந்து கொள்ளத் தேவையான விரிவோடு இந்த நாவல் எழுதப்பட்டிருக்கும் நிர்ணயித்துவிட்டேன்.

ஹிந்துஸ்தானி இசைக் கற்பதில் முதல்படியாய்  தம்புராவைச் சேர்த்து ஷட்ஜத்தில் மட்டும் நிற்பதையே சில வருட காலப் பயிற்சியாய் செய்வார்கள் என்கிற பின்புலத்தில் நான் நாவலின் காலப்ரமாணத்தை அனுமானித்திருந்தேன். 280 பக்கங்களில் பலதலைமுறைகள் பரவும் கதையைச் சொல்லி இருப்பதால் என் மனத்தில் இருந்த காலப்ரமாணத்தைவிட நாவலின் வேகம் பன்மடங்கு அதிகமாக அமைந்ததாக எனக்குப்படுகிறது. இதனால் இன்னும் ஆழங்களுக்குள் சென்றிருக்கக்கூடிய சாத்தியங்களை (சுரேஷின் பின்புலம் இருந்தும்) தவறவிட்டுவிட்டதாகத் தோன்றுகிறது.

நாவல் பல குரல்களில் வெளிப்படுவதாய் அமைக்கப்பட்டிருந்தாலும், படிக்கும்போது ஏனோ அதில் ஆசிரியரின் குரல் மட்டுமே கேட்பதாக எனக்குத் தோன்றியது. சம்பவங்களில் மட்டும் வெவ்வேறு கோணங்களை கையாளாமல், அவற்றை விவரிக்கும் குரல்களுக்கும் தனித்துவம் கொடுத்திருக்கலாமோ என்றும் எனக்குப் பட்டது.

இந்த நூலை எனக்கு அறிமுகமில்லாத ஒருவர் எழுதியிருந்தால் இந்த நாவல் எனக்குத் திருப்தியளித்திருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன்.

சுரேஷ் தமிழிலும் சரளமாக எழுதக்கூடியவர். இந்தக் களங்களை அவர் வழக்கமான பாணியில் விரித்து தமிழில் எழுத வேண்டும் என்பது என் ஆசை. அப்படி எழுதினால் தமிழ் எழுத்து உலகம் இன்னும் வளமாகும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

Gharana, Suresh Sundaresan
Price : ₹600.00
Published by: South Side Books
316 pages
Publication date: 1 January 2024
ISBN: 9788194324676

Exit mobile version