Site icon சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

முன்னும் பின்னும் – சமத்துவத்தின் வியக்கத்தக்க தோற்றமும் அதன் அரசியலும்

[1]

மார்ஜின் கால் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் ஜெர்மி ஐன்ஸ் தன்னுடைய சகா விடம் பேசும் ஒரு காட்சியில், “இந்த உலகத்தில யாரும் சமத்துவம் மேல நம்பிக்கை இருக்கு னு சொல்லக்கூடாது – ஏன்னா அப்படி ஒண்ணு இருக்குனு உண்மையாவே யாரும் நினைக்கல. சொல்லப்போனா 

அந்த மாதிரி ஒரு எண்ணம் தான் காலம் காலமா இந்த ஏற்றத் தாழ்வ அப்படியே  மாறாம  வச்சிருக்கு. 

இப்பவும் முன்னாடி இருந்த நிலைமையே தான் இருக்கு. ஜெயிக்கிறவங்க, தோக்கறவங்க எண்ணிக்கையில் வேண்ணா மாறி இருக்கலாம் ஆனா சதவீதம்? அது அப்படியே தான் இருக்கு”

யதார்த்தத்தில், பெரும்பான்மை மக்களின் எதிர்வினை திரைப்படத்தில் வந்த ஜெர்மி ஐன்ஸ் கருத்திற்கு மாறாகவே இருந்தது. உதாரணமாக, 2008 ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கடந்த ஐம்பது வருடங்களில் காணாத அளவு  சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வையும், விமர்சனத்தையும் மக்கள் இடையே உண்டாக்கியது. 2011ல் நடந்த வால் ஸ்ட்ரீட் கைப்பற்றும் போராட்டம் தொட்டு குறிப்பிட்ட ஒரு சதவீதத்தினரின் ஏற்றத்திற்கு எதிராக திரண்ட பெரும்பான்மையான அமெரிக்க மக்களின் போராட்டங்கள், 2016 மற்றும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் பெர்னி சாண்டரஸ்க்கு ஆதரவாக திரள்வது வரை சென்றது. இந்தக் காலகட்டங்களில், பிரெஞ்சு பொருளாதார நிபுணர் – தாமஸ் பிக்கெட்டி, இந்த இயக்கத்தின் நியாயத்தை நிரூபிக்கும் ஆதாரங்களை வாசகர் உலகிற்கு முன்வைத்தார்: 2014ல் ஆங்கிலத்தில் வெளியீடப்பட்ட “இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் முதலாளித்துவம்” என்ற புத்தகத்தில் வட அட்லாண்டிக் பகுதி முழுதும் பொருளாதார சமமின்மை வளர்ந்து வருவதாக சொல்லும் அவர்,  முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகள் சமமின்மையை வளர்த்து விட்டாலும், அதற்கு எதிரான அரசியல் மக்கள் போராட்டங்கள் அதை கட்டுப்படுத்த முயற்சி செய்தே வருகின்றன என்றும் குறிப்பிடுகிறார்.     

எதிர்பாராத விதமாக, இந்த புத்தகம் அதிக விற்பனையான ஒன்றாக, சமத்துவமின்மை புதிய நூற்றாண்டின் விவாத பொருளாக மாறியது. ஆனால் ஒரு தசாப்தம் பிறகு, வரலாற்று ஆய்வாளர்கள், பொருளாதாரா நிபுணர்கள், அரசியல் கோட்பாட்டாளர்கள் வேறொரு கேள்வியை நோக்கி தங்கள் பார்வையை திருப்பினார்கள் – இன்றும் தொடர்ந்து வரும் சமத்துவமின்மை குறித்தோ அல்லது அதன் தோற்றுவாய்  குறித்தோ அது இல்லாமல் – அதன் எதிர் நிலையான சமத்துவம் என்பது எங்கிருந்து வந்தது என்பதே அது. “சமத்துவத்தின் சுருக்கமான வரலாறு” புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் செல்வம் மற்றும் வருமானத்தை சமமாக பங்கீட்டு வந்த நிலை, தற்போதைய காலகட்டத்தில் எப்படி தலைகீழாக மாறியது என்பதை பிக்கெட்டி வெளிப்படுத்துகிறார். கடந்த ஒரு வருடமாக, இந்த பொது ஏற்பு கருத்தை விரிவுபடுத்தும் விதமாக பல புதிய புத்தகங்கள் வெளியாகின.  டாரின் மெக்மாஹனின் “சமத்துவம்” என்ற புத்தகத்தில் வகுப்புவாத பிரிவினை குறித்த தற்கால கேள்விகளை அதனுடைய வரலாற்று இடத்தில் வைத்து அணுகுகிறது. பால் சாகரின் “அடிப்படை சமத்துவம்” என்ற புத்தகம் “நவீன காலத்தின் தொடக்கத்தில்,  எல்லா மனிதர்களும் ஒன்றே என்ற கருதுகோளை எப்படி அடைந்தது” என்பதை குறித்து விவரிக்கிறது.  ஏறக்குறைய இதே போன்ற ஒரு கேள்வியை தெரசா பீஜேன் “சமத்துவம் எதற்காக?” என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறார்.  டேவிட் லே வில்லியம்ஸின் “மாபெரும் சமூக நோய்” (The Greatest of All Plagues: How Economic Inequality Shaped Political Thought from Plato to Marx) என்ற புத்தகத்தில் பொருளாதார படிநிலை என்ற கருத்தினை பிளாட்டோ முதல் மார்க்ஸ் வரையான அசல் சிந்தனையாளர்கள் எப்படி பார்த்தனர் என்பதை அணுகுகிறது. இந்த ஒவ்வொரு புத்தகமும் சமத்துவம் என்ற சிந்தனை எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதற்கான விடையை தருகிறது. ஆனால் இந்த கேள்வி இதை விட மிக முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகிறது – சமத்துவம் என்பது உண்மையிலே முக்கியமான ஒன்றா?

[2]

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இடையிலான வரலாற்று நிகழ்வுகளை தொகுத்து அறியும் திறன் உடைய மெக்மாஹன் சமத்துவம் குறித்து வியப்பான ஒரு கண்டுபிடிப்பை அளிக்கிறார். “Z வளைவு” என்று பீட்டர் டர்ச்சினால் சொல்லப்பட்ட சமத்துவம் என்ற நிலை மனித வரலாற்றில் எப்படி முன்னும் பின்னும் சென்று வந்திருக்கிறது என்பதை மெக்மாஹன் விளக்குகிறார். நமது மூதாதையர்கள் இன்றிருக்கும் குரங்கினத்தை போலவே படிநிலை வாழ்க்கை முறை கொண்டிருந்தனர். பின்னர், பல்வேறு கூட்டுறவு வாழும் முறைகளால் அந்த படிநிலை ஆதிக்கத்தின் வீரியம் கட்டுக்குள் வைக்கப்பட்டது. இது முதல் திருப்பம். சற்றே பத்தாயிரம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நவீன கற்கால புரட்சியில் சமத்துவத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இக்காலக் கட்டத்தில், வேளாண்மையை அதிகம் நம்பியிருந்த மனித சமூகத்திற்கு தொழிலாளர் படையே தேவைப்பட்டது, மேலும் ஆரம்பகால அரசுகள் பிரபுக்களையும் அரசர்களையும் முன்னெடுக்க தொடங்கின. இது அடுத்த திருப்பம். பொதுவாக, அதன் பிறகான வரலாற்றின் போக்கு சமத்துவத்திற்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது.

கிரேக்க அரசியல் அற்புதம், கிறிஸ்துவ மத சீர்திருத்தம், அறிவொளி இயக்கம் அதை தொடர்ந்த புரட்சிகள் என்று தனது ஆய்வினை தொடரும் மெக்மாஹன், வர்க்க, பாலின, இன சமத்துவம் வேண்டி போராடும் உள்ளூர் மற்றும் உலகளாவிய இயக்கங்கள் குறித்தும் தன்னுடைய புத்தகத்தில் பேசுகிறார்.    

18 ஆம் நூற்றாண்டு பிரான்ஸ், தத்துவ வரலாற்றின் மிக சிறந்த சமத்துவாதியான ஜான் ஜாக்யூ ரூசோவை உலகிற்கு கொடுத்தது. சமத்துவம் மற்றும் குடியுரிமைக்கான  பண்டைய வரலாற்று முறைகளை மீட்டு அளித்தமைக்காகவும், வர்க்க ஏற்ற தாழ்வுகள் குறித்த அதீதமான அக்கறையினாலும் ரூசோ காலம் கடந்து இருக்கிறார். அவருடைய பணிகள் அட்லாண்டிக் பெருங்கடலின் இருப்புறம் இருக்கும் பிரதேசங்களில் தனி மனித (ரூசோ வெறுத்த பெண்கள் இனம் இதில் சேர்க்கப்படவில்லை) சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சட்டங்களை இயற்றவும் அதன் வழியே சமூக மற்றும் பொருளாதார சமநிலையின்மையை சற்றே குறைக்கவும் வழிவகுத்தது.    

இந்தக் காலகட்டத்தை விவரிக்கும்போதே, பிரெஞ்சுப் புரட்சி அதன் பின்னான வரலாற்றில் சமத்துவம் பரவுவதற்கு ஏற்படுத்திய காரணிகளை மெக்மாஹன் வியப்பூட்டும் வகையில் தயக்கத்துடன் ஏற்கிறார். 1789ஆம் ஆண்டின் நிகழ்வுகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அடிமைகள், யூதர்கள், பெண்கள் ஆகியோராலும் மற்றும் அவர்கள் சார்பாகவும் முன்வைக்கப்பட்ட புதிய கோரிக்கைகளுக்கு வித்திட்டன என்று மெக்மாஹன் குறிப்பிடுகிறார். ஆனால் புரட்சியின்போது நிறுவப்பட்ட ஜாக்கோபின் முன்னோடி நல வாழ்வு நடவடிக்கைகளை அவர் ஏனோ குறைத்து மதிப்பிடுகிறார். அதே வேளையில், “மாற்றத்தை   ஏற்காதவர்களை ” அக்கால சமத்துவத்தின் பெயரால் தண்டிப்பதை குறித்தும் அவர் கவலை கொள்கிறார்.

மெக்மாஹனின் நூல் மிகச் சிறப்பான சாதனையாக கருதப்பட்டாலும், அவரது பேராவல் முரணப்படும் பல கதைகளைச் சொல்ல அவரைத் தூண்டுகிறது., சில நேரங்களில், இக்கதைகள் யாவும் ஒரு புள்ளியில் இணைந்து ஒரு முழுமையான கதையாக மாறுகின்றன என்று அவர் கருதுவதாக தோன்றுகிறது. மானுடவியல் அறிஞர் மார்ஷல் சாலின்ஸ் “தொன்மையான செழிப்பு சமூகம்” என்று குறிப்பிட்ட வேட்டையாடி-உணவு சேகரிப்பு குழுக்களில் காணப்பட்ட சமத்துவம், நம் முன்னோர்கள் கருத்தியல் ரீதியாக சமத்துவத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதைக் குறிக்காது. மறுபுறம், கிறிஸ்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளுவதைப் போல தோற்றம் இருந்தாலும் கடவுளின் பார்வையில் அனைவரும் சமம் என்று கூறுவதால் மட்டுமே அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. சமத்துவம் என்பது ஒரு கருத்தியலின் அடிப்படையில் உருவாக வேண்டியதில்லை; மேலும் சமத்துவத்தின் கொள்கைகள் குறிப்பிட்ட வகையான சமத்துவத்திற்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்பதில்லை. உண்மையில், அனைவரும் கடவுளின் பார்வையில் சமமானவர்கள் என்பதை கிறிஸ்தவம் எளிதாகக் கூறுவதற்கான காரணம், அந்தக் கருத்திலிருந்து பெரிய மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்பதேயாகும். நமது பின் கிறிஸ்தவ காலகட்டத்தில், பலர் சமூக அந்தஸ்தில் சமமாகப் பார்க்கப்படுதல் மற்றும் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுதல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை மறுக்கின்றனர்.

மெக்மாஹனின் புத்தகம், நூற்றாண்டுகள் தோறும் சமத்துவத்திற்கான பங்களிப்புகளை நிகழ்த்திய பல்வேறு வேறுபாடுகளை அடங்கிய வரலாற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளுகிறது. முடிவில், சமத்துவம் என்று தனியாக ஒன்று இல்லை என்று சொல்கிறது. சமத்துவத்திற்கான வரலாற்றை ஒன்றிணைக்க நினைக்கும் கனத்தினாலயே, அவருடைய நூல் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால்தான், மெகமாஹனின் ஆயிரம் ஆண்டுக்கால பரந்து விரிந்த ஆய்வில் இருந்து இரண்டு முக்கியமான திருப்பங்களைப் குறித்த  நுண்ணிய பார்வையை அறிஞர் குழு கண்டடைந்திருக்கிறது. முதலாவதாக, மனிதர்கள் யாவரும் சமம் என்று  கருத முடிந்ததை சாத்தியமாக்கியது. இரண்டாவது, மக்கள் வருமானத்தில், வைத்திருக்கும் சொத்துக்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தவறானவை என்று சொல்ல முடிந்ததை சாத்தியமாக்கியது.

[3]

“அடிப்படை சமத்துவம்” என்ற புத்தகத்தின் ஆசிரியரான பால் சாகர்க்கு சமத்துவத்தின் உச்சமான – எல்லா மனிதர்களும் சமம் என்ற கருத்தின் ஆரம்பம் ஒரு புதிராக இருப்பதாக குறிப்பிடுகிறார். மனித இனத்தில் இயற்கையாக உள்ள வித்தியாசங்கள், வேறுபாடுகள் சுற்றியே  அரசியல் கோட்பாடுகள் பிளட்டோ காலம் முதற்கொண்டு இயங்கி வந்திருக்கிறது. உதாரணத்திற்கு, சமூகத்தில் ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதமாய் நடத்துவதில் எவ்வித தயக்கமும் இருந்ததே இல்லை, சொல்லப்போனால் அது இயல்பானது என்றே கருத்தே நிலவியது. அதே போல், நிறத்தை வைத்து மனிதர்களை நடத்தும் விதம் இன்றைய சமக்காலத்திலும் தொடர்ந்தே வருகிறது. இப்படியாக இருக்க அனைவரும் சமம் என்ற கருதுகோள் நடைமுறையில் புறக்கணிக்கப்பட்டாலும்  எப்படி அனைவராலும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது? 

ஒரு தலைமுறைக்கு முன்பு, தத்துவாதி ஜெர்மி வால்டரன் மதக்கோட்டுப்பாடுகளே அத்தகைய நம்பிக்கைகளை வழங்கியது என்று வாதிடுகிறார். சமத்துவம் என்ற கருத்தினை அனைவரும் ஏன் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்கிறார் சாகர். மனித இனத்தின் உணர்வெழுச்சியான் ஒரு  நிலை  என்று எண்ணாமல், சமூகமாக மனிதர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு கற்பனை என்று கருதலாம். முதலில் கிறிஸ்துவ முகம் அணிந்து பின்னர் மதச்சார்பற்ற முகம் அணிந்து வந்த இந்த கற்பனை சமீபகாலங்களில் எப்படி பிரபலமானதாக மாறியது என்பதை மறக்கக்கூடாது என்கிறார். 

சாகரின் வாதம் மிகச் சிறப்பாக இருந்தாலும், மனிதர்களின் அடிப்படை சமத்துவம் பற்றிய அவரது கவனம், நவீன காலத்தில் சமத்துவத்தின் சர்ச்சைக்குரிய அரசியல் போராட்டங்களின் எழுச்சி பற்றி எதையும் கூறவில்லை. அனைத்திற்கும் மேலாக, எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நெறிமுறை அளவில் சமம் என்ற கிறிஸ்தவ மற்றும் பின்னர் மதச்சார்பற்ற நிலையாளர்களின் நம்பிக்கை, பொதுவாக அந்தஸ்து, நடத்தப்படும் விதம், மற்றும் செல்வம் ஆகியவற்றில் காணப்படும் பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொண்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. உண்மையில், தாங்கள் சமம் என்ற கருத்தை மனிதர்கள் மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் எப்போது, ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதையோ, அல்லது அத்தகைய நம்பிக்கை இருந்தும் ஒருவரை ஒருவர் எவ்வாறு இவ்வளவு சமத்துவமற்ற முறையில் நடத்த முடிந்தது என்பதையோ இது விளக்கவில்லை.

மெக்மாஹனைப்  போலவே தெரசா பீஜேன்னும் சமத்துவம் என்கிற கருத்தியல் பழங்காலத்திலும் நவீனக்காலத்திலும் எப்படி மாறுபடுகிறது என்பதை சுட்டுகிறார். தற்போதைய காலத்தில், சமத்துவம் என்பது சமூகத்தின் பல்வேறு பிரிவுகள், நிலைகளில் உள்ள அனைவரையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்ற கருதுகோளை நோக்கி நகர்ந்திருப்பதாக சொல்கிறார். 17 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து குறித்த விவாதத்தில் அன்றைய சமூகம் வெள்ளை நிற மக்கள் எல்லோரும் சமம் என்ற நிலையை ஏற்றுக்கொண்டது. பின்னர், டிஃகர்ஸ், லெவெல்லர்ஸ் போன்ற தீவிரவாத குழுக்கள், வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்களும் ஒன்றே என்று கருத வேண்டும் என்றனர். இன்றைய சமத்துவ இயக்கங்கள் சமத்துவத்தின் அடுத்த நிலையாக குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே கிடைக்கும் சலுகைகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று கேட்க தொடங்கிருப்பதாக பீஜேன் சொல்கிறார். சமூக நிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையினை மேல்நிலையில் உள்ளவர்களுக்கு சமானமாக  உயர்த்த வலியுறுத்துகிறது.   

பீஜேன் மற்றும் சாகர் இருவரும் அடிப்படை சமூக அந்தஸ்து பற்றியே பெரிதும் கவனம் செலுத்தினர். ஆனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மீதான இடதுசாரி கோபம் ஏன் முக்கியத்துவம் பெற்றது என்பதை ஆராயவில்லை. இந்த எதிர்ப்புணர்வு லெவெல்லர்ஸ் போன்ற சிறு குழுக்களுக்கு மட்டுமல்லாமல், நவீன காலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கும் முக்கியமானதாக மாறியது. கைப்பற்றுதல்  இயக்கம், பிக்கெட்டியின் கருத்துக்கள் பெற்ற செல்வாக்கு, மற்றும் சாண்டர்ஸின் செயல்பாடுகள் இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றிய விழிப்புணர்வை மீண்டும் உயிர்ப்பித்தன. டேவிட் லே வில்லியம்ஸின் புதிய ஆய்வு நூல் ‘மாபெரும் சமூக நோய்’ இந்த கேள்வியை மையமாகக் கொண்டுள்ளது.

வில்லியம்ஸ் தனது நூலில் ஒரு முக்கியமான பணியாக, பல காலம்  தவறவிட்ட ஒரு உண்மையை நோக்கிய கவனத்தைக் குவிப்பதாக இருந்தது. வெறும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, மேற்கத்திய அரசியல் சிந்தனையாளர்கள் பலரும் செல்வக் குவிப்பை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர். பிளேட்டோ மற்றும் புதிய ஏற்பாட்டில் தொடங்கி, ரூசோ, மார்க்ஸ், ஜான் ஸ்டுவர்ட் மில் ஆகியோரின் சிந்தனைகள் வரை, பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த கருத்துக்களின் தொடர்ச்சியையும் மாற்றங்களையும் வில்லியம்ஸ் ஆராய்கிறார். பிளேட்டோ இயற்கையான வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டாலும், சிலரிடம் குவியும் அதிக செல்வமும், வறுமையால் ஏற்படும் அரசியல் நிலையின்மையும் அவருக்கு கவலையளித்தன என வில்லியம்ஸ் சுட்டிக்காட்டுகிறார். ரூசோ பொருளாதார ஏற்றத்தாழ்வின் அரசியல் விளைவுகளை – குறிப்பாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் செல்வம் நிரந்தர சலுகைகளை உருவாக்குவதை – வலுவாக முன்வைத்தார். பொறாமை உணர்வு அதிகரித்தால் ஆபத்தான சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்பது பிளேட்டோவுக்கே தெளிவாக தெரிந்தது. ஆனால் ரூசோவைப் பொறுத்தவரை, 18ஆம் நூற்றாண்டின் புதிய வணிக யுகத்தில் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வு, பிற வகையான சமத்துவங்களையும் அச்சுறுத்தியது.

[4]

மெக்மாஹனைப் போலவே, வில்லியம்ஸும் தனது ஆய்வில் மார்க்ஸை விரிவாக விவாதிக்கிறார். ரூசோவுடன் ஒப்பிடுகையில் – குறிப்பாக முதல் கம்யூனிஸ்ட் என கருதப்படும் மற்றும் பிரெஞ்சு புரட்சியின் இலட்சியங்களை மீட்க “சமத்துவத்திற்கான சதி” என அழைப்பு விடுத்த கிராக்குஸ் பெஃப் உடன் ஒப்பிடுகையில் – மார்க்ஸ் சமத்துவத்தை மிகக் குறைவாகவே பேசினார் என்பது சிலருக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கலாம். மெக்மாஹன் குறிப்பிடுவது போல, கம்யூனிஸ்ட் அறிக்கையில் “சமத்துவம்” என்ற சொல் ஒரே ஒரு முறை மட்டுமே வருகிறது, அதுவும் இழிவுபடுத்தும் விதமாக. நவீன வணிக சமூகங்களின் பெரும் பிரச்சனையாக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ரூசோ தொடர்ந்து கவனம் செலுத்திய அதே வேளையில், மார்க்ஸ் அப்படி செய்யவில்லை. மாறாக, அவரது கவலை சுதந்திரமின்மை பற்றியது – குறிப்பாக தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு இல்லாத சுரண்டல் உழைப்பு முறையில் அவர்களது சக்திகள் பிறருக்கு அந்நியமாக்கப்படுவது பற்றியது.

மார்க்ஸின் முக்கிய இலக்கு சுதந்திரம் என்பதை வில்லியம்ஸ் ஒப்புக்கொள்கிறார், ஆனால் “கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த மார்க்ஸின் கவனமும், கவலையுமே அவரது ஆக்கபூர்வமான அரசியல் தத்துவத்தின் அடிப்படையாக அமைந்தது” என்று அவர் குறிப்பிடுகிறார். இது நியாயமானதே: உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளின் சமகால ஆய்வாளரான பிராங்கோ மிலனோவிக் தனது சமீபத்திய நவீன பொருளாதார வல்லுநர்களின் கணக்கெடுப்பான ‘சமத்துவமின்மையின் தரிசனங்களில்’ விவாதிப்பது போல, மார்க்ஸின் காலத்தில் வட அட்லாண்டிக் பகுதி செல்வத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டது – எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் மேல்தட்டு 1 சதவீதத்தினர் 60 சதவீத செல்வத்தை வைத்திருந்தனர் – எனவே பொருளாதார ஏற்றத்தாழ்வு அவரது சிந்தனைக்கு பின்னணியாக இருந்தது இயல்பானதே. இதனால்தான், ஏற்றத்தாழ்வை மார்க்ஸ் தனிப்பட்ட பிரச்சனையாக பார்க்காமல், சுதந்திரமின்மையின் அடையாளமாகவும் சின்னமாகவும் பார்த்தது மிகவும் முக்கியமானது: சமத்துவமற்ற சமூகம் சுதந்திரமற்றதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மார்க்ஸைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வு அல்ல, சுரண்டல்தான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்யக்கூடிய மிக மோசமான விஷயமாக கருதினார்.

எனவே, மார்க்ஸின் அரசியல் பொருளாதாரக் கோட்பாடு முதலாளித்துவத்தின் முழுமையான விளக்கத்தை உள்ளடக்கியது என்பது ஆச்சரியமல்ல. அவர் 1 சதவீதத்தினர் மீது மட்டும் குறுகிய கவனம் செலுத்தவில்லை, மாறாக உழைப்பு முறை முதல் அரசியல் புரட்சியை உருவாக்கும் என அவர் கருதிய அமைப்பு சார்ந்த இயக்கவியல் வரை அனைத்தையும் ஆராய்வதற்கு ‘மூலதனம்’ என்ற நூலை அர்ப்பணித்தார். அதே போல், சுதந்திரமான சமூக உறவுகளுடன் பொருந்தி இருக்கும் வரை, கம்யூனிச விடுதலை, மக்களிடையே சில ஏற்றத்தாழ்வுகளை அனுமதிக்கலாம் என்றும் அவர் கருதினார். மெக்மாஹன் சுட்டிக்காட்டுவது போல, மார்க்ஸை பின்பற்றிய லெனின் மற்றும் ஸ்டாலின் அவர்கள், சமத்துவத்திற்காக வெறும் வாய் பேசுபவர்களை, குறிப்பாக வர்க்க அமைப்பை மாற்றாமல் அநீதியைப் பற்றி மட்டும் பேசுபவர்களை, வெறுமனே புறக்கணித்தனர்.

[5]

மார்க்ஸிட்டாக ஒருவர் இருந்தாலும், இல்லை என்றாலும்,  ஏற்றத்தாழ்வினைக் குறித்த பல ஆண்டுகள் தொடர்ந்து வரும் கவலையினை முடிவுக்கு கொண்டு வந்ததில் மார்க்ஸின் கருத்து முக்கியமானது. மெக்மாஹனின் ஆயிரமாண்டு கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்ட முக்கிய முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் மனச்சோர்வூட்டும் வகையிலும் உள்ளன. மனிதக்குல வரலாற்றில் சமத்துவமும் ஏற்றத்தாழ்வும் தவிர்க்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை அவர் வலியுறுத்த விரும்புகிறார் – குறிப்பாக பாசிசம் பற்றிய அவரது அத்தியாயத்தில் இது மிகவும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது. பாசிசம் ஒதுக்கப்பட்டவர்களை அழித்தொழித்த அதே வேளையில் ஆரிய “இனத்திற்குள்” சமத்துவத்தை நாடியது.

எந்த விதமான உன்னத சமத்துவ சமூகத்திலும் ஏதோ ஒரு விதமான சமத்துவமின்மை இருந்தே தீரும் என்று மெக்மாஹன் உறுதியாக நம்புகிறார். சமத்துவத்தை விரும்பும் அதே நேரத்தில் போட்டியில் மேலோங்கி வெற்றி பெறுவதே அடிப்படையாக இருப்பதால்  மனிதர்கள் சமத்துவத்தைக் குறித்து இருவேறு  மனநிலையுடனே இருப்பதாக  கருதுகிறார். மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படாவிட்டால், பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் உண்டாகி, ஆழமாக வேரூன்றி விட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்.

சமத்துவத்தின் குறித்த வரலாற்றாசிரியர்களின் இந்த முடிவுகள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தாலும், மார்க்ஸ் கூறியது போல, உண்மையில், ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதுதான் மிக முக்கியமானது. அனைவரையும் ஒன்றாக நடத்துவதில், அனைவருக்கும் சமமாக பகிர்வதை, சமத்துவத்தின் வெற்றியாய் பார்க்கும் வேலையில், இதில் ஏதாவது இல்லாமல் ஆகும் போது மக்களிடையே எழும் கோபங்கள், போராட்டங்கள் சமத்துவதிற்கான பெரும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் பொருள், சமூகம் அனைத்து பரிமாணங்களிலும் முழுமையான சமத்துவத்தை அடைய முடியும் அல்லது அடைய வேண்டும் என்பதல்ல. எப்போது மற்றும் எந்த எந்த வடிவங்களில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் களைந்தெறிய வேண்டிய அநீதி என்பதை அறிந்து அதை விடுதலை மற்றும் சுதந்திரத்தின் பெயரால் ஒன்று சேர்ந்து எதிர்ப்பது என்பதைக் குறித்த தெளிவான பார்வையே தேவைப்படுவது என்கிறார் மார்க்ஸ். சில மாதங்களுக்கு முன், வரலாற்றாசிரியர் குயின் ஸ்லோபோடியன், பிக்கெட்டிக்குப் பிறகு ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு குறித்த முழு விமர்சங்களையும் புறந்தள்ளினார். பிக்கெட்டியே குறிப்பிட்டது போல படித்த, உயர் நிலையில் இருக்கும் பிரிவினை சேர்ந்தவர்கள் சமகால பொருளாதார ஏற்றத்தாழ்வினை குறித்து கடுமையான கருத்துக்களை கொண்டிருந்தாலும்,  ஏற்றத்தாழ்வினால் வரும் தனிப்பட்ட  லாபங்களை அனுபவிப்பதால், அதை மாற்ற எந்தவிதமான முன்னெடுப்புகளையும் செய்ய தயாராக இருப்பதில்லை என ஸ்லோபோடியன் வாதிட்டார்.

ஏற்றத்தாழ்வு பற்றிய இத்தகைய விவாதங்கள் ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. இது நம்மை ஆழமான மேலும் பல கேள்விகளுக்கு அழைத்துச் செல்கிறது.பொருளாதார பிரிவினைகளைத் கடந்து, தனி மனிதனாய், ஒரு சமூகமாய் சுதந்திரமாக செயல்பட இயலாத நிலையை ஏற்படுத்தும் காரணங்களை நோக்கி நம்மை வலுவாக சிந்திக்க செய்கிறது.

நன்றி: The Surprising Origins and Politics of Equality | The Nation: Samuel Moyn

Samuel Moyn teaches law and history at Yale. His most new book is Humane: How the United States Abandoned Peace and Reinvented War (Macmillan).

Translated from https://www.thenation.com/article/society/politics-equality-paul-sagar-darrin-mcmahon-teresa-bejan-david-lay-williams/

Books in review

Exit mobile version