(1)
’தொபுக்’-
சட்டென்று
குதித்தது
கரையிலிருந்து
என் மனதுக்குள்
ஒரு தவளை-
அலைகள் பரவுகின்றன
குளத்தில்
(2)
கரையிலிருந்து
குதிக்க
சதா தயாராகிக் கொண்டே
இருக்கும்
மரத்திற்கும்
எப்போது அது குதிக்குமென்று
சதா எதிர்பார்த்துக் கொண்டே
இருக்கும்
குளத்திற்குமிடையே
முடிவில்லாததாய்த் தோன்றும்
கால இடைவெளியை
சரேலென்று மரத்திலிருந்து
ஓர் உலரிலை வீழ்ந்து
சடுதியில்
நிரப்பும்.
(3)
சலனித்துக் கொண்டே இருக்கின்றன மீன்கள், நிசியிலும்-
சயனிக்க வைக்க குளத்தை.
(4)
நீரில்
நனையாது
நீந்த முடியாது
நீரில்
நீந்தும் மீன்களோடு
நீந்தும் என் விழிகள்
நனைந்தா
அல்லது
நனையாதா
நீந்துகின்றன என்று
முடிவு செய்ய
முடியவில்லை
என்னால்
குளக்கரையிலிருந்து-
ஒரு வேளை
குளத்திற்கு
முடிவு செய்ய
முடிந்திருக்குமோ?
(5)
குளத்தில் மிதக்கிறது
முன்பு எப்போதோ
கடைசியாய்ப் பார்த்து
மலங்கலாய் நினைவுபடுத்திக் கொள்கிற
ஒரு பால்ய சிநேகிதியின்
முகம் போல்
முழுநிலவு.
(6)
ஓடும்
நதி போலில்லாமல்
போக விடாமல்
நினைவு வைத்துத் கொண்டே இருக்கிறது
தண்ணீரை
குளம்.
காலம்
தேங்கிக்
கலங்கிய தண்ணீரில்
மிதக்கிறது
வெளிறிச்
சூரியப்
பிரேதம்
உப்பி.
(7)
குளத்தின் மீது
நீரும் ஆகாயமும்
தொடும் மேற்பரப்பில்
ஒரே சமயத்தில்
நீந்துவது போலவும்
பறப்பது போலவும்
எப்படி வித்தை காட்டிப் போகிறது
ஒரு பறவை!
(8)
குளக்கரையில்
மெளனமாய் அமர்ந்திருந்தேன்.
என்னை விட்டு
என் மெளனம்
படிக்கட்டுகளில்
இறங்கிப் போனது.
குளத்தின் தண்ணீருக்குள்
இறங்கியதும் அது ’சப்தித்தது’
சப்தித்தது
என்னுள்.
(9)
ஒரு கல்
வீழ்ந்து
குளத்தினுள்
கலைத்த அலைகள்
பரவுகின்றன
நிச்சலனத்தைத் தொடுவதற்கு
தொட முடியாமல்-
நெருங்குவதற்குள்
நெருங்க முடியாததாயிருக்கும்
கரை நோக்கி
’தொபுக்’-
சட்டென்று
குதித்தது
கரையிலிருந்து
என் மனதுக்குள்
ஒரு தவளை-
அலைகள் பரவுகின்றன
குளத்தில்
