மூலம் : ரே ப்ராட்பரி
தமிழாக்கம் : ஜெகதீஷ் குமார்
“அது எப்படி சாத்தியம்?”
மறுமுனையில் அமைதி.
“நீங்கள் சொன்னதை இன்னொரு முறை சொல்ல முடியுமா?”
மீண்டும் அமைதி. பின் தொலைபேசியில் ஏதோ முணுமுணுப்புச் சத்தம்.
“லைன் சற்று சரியாக இல்லை. நீங்கள் சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லை! இன்னொருமுறை சொல்லுங்கள்.”
அந்த அரசு அதிகாரி தொலைபேசியைக் காதோடு அழுத்திப் பிடித்தபடி, மெதுவாகத் தன் இருக்கையிலிருந்து எழுந்தார். ஜன்னலை வெறித்துப் பார்த்தார். பின் உட்கூரையை. பின் சுவர்களை.
“இன்னொரு முறை சொல்லுங்கள்.”
தொலைபேசி மறுமுனையில் ஒலிகளை எழுப்பியது.
“ செனட்டர் ஹாம்ஃப்ரிட் என்றா சொன்னீர்கள்? ஒரு நிமிடம். நான் உங்களைத் திரும்ப அழைக்கிறேன்.”
அதிகாரி தொலைபேசியை வைத்துவிட்டு, தன் நாற்காலியைத் திருப்பி புல்வெளிக்கு அப்பாலிருந்த வெள்ளை மாளிகையை வெறித்துப் பார்த்தார்.
பின் கையை நீட்டி இண்டர்காம் பட்டனை அழுத்தினார்.
கதவருகில் அவரது செயலாளர் வந்து நின்றதும், “உட்கார். இதை நீ கட்டாயம் கேட்க வேண்டும்,” என்றார்.
மீண்டும் தொலைபேசியை எடுத்து, ஒரு எண்ணை அழுத்தி ஸ்பீக்கரில் போட்டார்.
மறுமுனையில் குரல் வந்ததும் சொன்னார், “நான் எலியட் பேசுகிறேன். நீங்கள்தானே சற்று முன் அழைத்தது? நீங்கள் என்னிடம் சொன்ன தகவல்களை மீண்டும் சொல்ல முடியுமா? செனட்டர் ஹாம்ஃப்ரிட் என்றுதானே சொன்னீர்கள்? செவ்விந்தியர்களின் கசீனோவா? வடக்கு டகோடாவிலா? சரி. எத்தனை செனட்டர்கள்? பதிமூன்று? அவர்கள் நேற்றிரவு அங்கிருந்தார்களா? நீங்கள் சொல்வது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்தானா? அவர் குடித்திருக்கவில்லைதானே? அப்படியா, குடித்திருந்தாரா? சரி, இப்போது தாமதமாகி விட்டது. நான் அதிபரை அழைத்துத் தெரிவிக்கிறேன்.”
அதிகாரி தொலைபேசியை வைத்து விட்டு செயலாளரின் பக்கம் திரும்பினார்.
“அந்த முட்டாள் ஹாம்ஃப்ரிட்டை உனக்குத் தெரியுமா?”
செயலாளர் தலையசைத்து ஆமோதித்தாள்.
“அந்தக் கேடுகெட்ட மூடன் என்ன செய்திருக்கிறான் தெரியுமா?”
“நீங்கள் சொல்வதற்காகத்தான் காத்திருக்கிறேன்.”
“சில மணி நேரங்கள் முன்பாக அவன் பனிரெண்டு செனட்டர்களை அழைத்துக் கொண்டு வடக்கு டகோட்டாவிலுள்ள ஓர் செவ்விந்தியக் குடியிருப்புப் பகுதிக்குச் சென்றிருக்கிறான். அந்தப் பகுதியில் ஆய்வு நடத்த வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறான்.”
செயலாளர் அதிகாரி தொடர்வதற்காகக் காத்திருந்தார்.
“அங்கிருப்பதிலேயே பெரிய பழங்குடிகளின் தலைவன் அயர்ன் க்ளவுடுடன் நிறைய ரௌலட் ஆட்டங்கள் ஆடியிருக்கிறான். நியூயார்க் நகரத்தைப் பணயமாக வைத்துத் தோற்றிருக்கிறான்.”
செயலாளர் அதிகாரியை நோக்கிச் சற்றே குனிந்தாள்.
“பின் ஒவ்வொரு மாநிலமாக வைத்து சூதாடியிருக்கிறான். எல்லாவற்றையும் இழந்து விட்டான். ஒரு செவ்விந்தியத் தலைவரோடு அதிகாலை இரண்டு மணி வரை சாவதானமாகக் குடித்தபடியே மொத்த ஐக்கிய அமெரிக்க நாடுகளையுமே சூதில் இழந்து விட்டானாம்.”
“ஹோலி ஷி***!” என்றாள் செயலாளர்.
“எனக்கு பதற்றத்துல தற்கொலை செய்து கொள்வேனோ என்று தோன்றுகிறது. ஆனால் இப்போ யார் வெள்ளை மாளிகையை அழைத்து, அமெரிக்க அதிபரிடம் இது பற்றிச் சொல்வது?”
“நான் இல்லை,” என்றாள் செயலாளர்.
* * *
அமெரிக்க அதிபர் விமான நிலையத்தின் வளாகத்தில் கிட்டத்தட்ட ஓட்டமாக விரைந்தார்.
“மிஸ்டர் பிரசிடெண்ட்!” என்றார் உதவியாளர். “நீங்கள் இன்னும் உரிய உடை உடுத்துக் கொள்ளவில்லை!”
அதிபர் தன் மேல்கோட்டுக்கு உள்ளே உடுத்தியிருந்த இரவு பைஜாமாவைப் பார்த்துக் கொண்டார்.
“விமானத்தில் உடைமாற்றிக் கொள்கிறேன். இப்போ நாம் எந்த எளவு இடத்துக்குப் போகிறோம்?”
உதவியாளர் விமானியை நோக்கித் திரும்பினார். “இப்போ நாம் எந்த எளவு இடத்துக்குப் போகிறோம்?”
விமானி தன் முன்னிருந்த அட்டையைப் பார்த்தார். “போகஹோண்டாஸ் பெருஞ்சிவப்பு கசீனோ. ஓஜிப்வே, வடக்கு டகோடா,” என்றார்.
“எங்கே இருக்கிறது இந்த இடம்?”
“கனடாவில் எல்லைப் பகுதியில்,” என்றார் உதவியாளர். “இந்த இடம் பாதுகாப்பானதுதான். கரிபோ இன மக்கள் மட்டும்தான் இங்கு ஓட்டுரிமை பெற்றவர்கள். சென்ற ஆண்டு இங்கு ஒரு நிலச்சரிவு கூட ஏற்பட்டது.”
“ஏர்ஃபோர்ஸ் ஒன்று இறங்குமளவுக்கு அதன் விமான நிலையம் பெரிதாக இருக்குமா?” என்றார் அதிபர்.
“கிட்டத்தட்ட.”
“இப்போ மணி என்ன?”
“மூன்று.”
“கடவுளே! இந்த நாட்டை நடத்துவதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது,” என்றார் அதிபர்.
விமானத்தில், பானங்கள் ஊற்றப்பட்டுக் கொண்டிருக்க, அதிபர் அமர்ந்திருந்தார். “என்ன நடந்ததென்று விளக்கமாகச் சொல்லுங்கள்,” என்றார்.
“வந்து… இதுதான் நடந்தது மிஸ்டர் பிரசிடெண்ட். வடக்கு டகோடாவில் ஜனநாயகக் கட்சியின் செனட்டர்களின் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. அதில் பதிமூன்று பேர் போகஹோண்டாஸ் பெருஞ்சிவப்பு கசீனோவுக்கு இரவு முழுக்க மஜா பண்ணுவதற்காகச் சென்றிருக்கிறார்கள்…”
“பரவாயில்ல அப்படியே சொல்லுங்க,” என்றார் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர்.
“விஷயம் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறி, மாறி கடைசியில் மொத்த நாட்டையே இழந்து விட்டு நிற்கிறார்கள்.”
“ஒரே ஒரு பகடை உருட்டில் மொத்த நாட்டையுமேவா இழந்தார்கள்?”
“இல்லை. நான் கேள்விப்பட்டவரை ஒவ்வொரு மாகாணமாகத்தான் இழந்திருக்கிறார்கள்”
“கடவுளே!”
“துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால், முதலில் அவர்கள் நியூயார்க் நகரத்தைத்தான் இழந்திருக்கிறார்கள். ஆனால், முதலில் இழந்த மாகாணம் ஃப்ளோரிடா.”
“அது சரியாத்தான் பொருந்தி வருது.”
“அதன் பின் பெரும்பாலான தெற்குப் பகுதி மாகாணங்கள். இதற்கும் உள்நாட்டுப் போருக்கும் தொடர்பிருக்கும் என்று நினைக்கிறேன்.
“அது எப்படி?”
“எப்படி என்று தெரியவில்லை. எல்லாமே இன்னும் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், நம் உள்நாட்டுப் போரை யாரும் இன்னும் சுத்தமாக மறந்து விடவில்லை. தெற்குப்பகுதியின் ஜனநாயகக் கட்சியினர் சிவப்புக் குடியரசுக் கட்சியினருக்குச் செய்ததைப் போலவே ஆகியிருக்கிறது.”
“அப்புறம் என்ன ஆச்சு?”
“வெல், ஒரு கடலிலிருந்து மற்றொரும் மின்னும் கடல் வரையுள்ள அழகிய அமெரிக்கா, மாகாணம் மாகாணமாக, கடைசி மாகாணமான அரிசோனா வரை, அயர்ன் க்ளவுடுக்குக் கையளிக்கப்பட்டு விட்டது.”
“செவ்வியந்தியர்களின் தலைவருக்கா?”
“ஆமாம். அவர்தான் அந்தக் கசீனோவின் முதலாளி.”
அதிபர் சற்று அமைதிக்குப் பின் சொன்னார். “அந்த மடையர்களால் குடிக்க முடியும் என்றால் என்னாலும் முடியும். இன்னொரு கிளாஸ் ஊற்று”.
* * *
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் போகாஹோண்டாஸ் பெருஞ்சிவப்பு கசீனோவுக்குள் நுழைந்ததும், சுற்றும் முற்றும் நோட்டம் விட்டார்.
“எங்கே அந்த புகை மண்டிய அறை?”
உதவியாளர் அந்த அறை இருந்த திசை நோக்கிக் கை காட்டினார்.
“அந்த மூளை கெட்ட, முட்டாள் செனட்டர்கள் எங்கே?”
“வேறெங்கே, அதே அறையில்தான் இருக்கிறார்கள்.”
அதிபர் கதவை ஓங்கி அறைந்து திறந்த வேகத்தில் அறைக்குள் தலை குனிந்து நின்றிருந்த செனட்டர்கள் அதிர்ந்து நிமிர்ந்தார்கள்.
“உட்காருங்கள்!” என்று கத்தினார் அதிபர். “இல்லை, எல்லாரும் நின்றபடியே இருங்கள். அப்போதுதான் அறைவதற்கு வசதியாக இருக்கும். சரி. ஒரு கேள்வி. எல்லாரும் தெளிவாகத்தான் இருக்கிறீர்களா?”
எல்லாரும் தலையாட்டினார்கள்.
“அப்போ எல்லாரும் முதல்ல ஒரு ரவுண்டு போடுவோம்.”
ஸ்மித், அதிபரின் உதவியாளர், அறையை விட்டு வேகமாக வெளியேறினார். சில கணங்களிலேயே வோட்கா கொண்டுவரப்பட்டது.
“ஆல்ரைட். முதல்ல எல்லாரும் இதைக் குடிங்க. இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பதென்று அடுத்தது யோசிப்போம்.”
பிறகு அவர்களைப் பார்த்து எரிச்சலில் முகம் சுளித்தார். “சே! ரொலிங்க் ஸ்டோன்ஸையே இயேசுவின் கடைசி விருந்து மாதிரி மாத்திருவீங்க போலருக்கே!”
அங்கு ஒரு நீண்ட அமைதி நிலவியது.
“இதுக்கு யாரு காரணம்? செனட்டர் ஹாம்ஃபேட்டா?”
“ஹாம்ஃப்ரிட்,” முணுமுணுத்தார் செனட்டர்களில் ஒருவர்.
“ஹாம்ஃப்ரிட். ஒரு நிமிஷம். ஸ்மித். இது பத்தி நியூஸ் மீடியாக்குத் தெரியுமா?”
“இதுவரைக்கும் தெரியாது சார்.”
“கடவுளே! அவனுங்களுக்கு மட்டும் தெரிஞ்சுது, நாம செத்தோம்.”
“ஒரு மணி நேரத்துக்கு முன்னால் சிஎன்என்னிலிருந்து அழைத்திருந்தார்கள். என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ள வேண்டுமாம்.”
“யாரையாவது அனுப்பி அவனுங்களைச் சுடச்சொல்லு.”
“நாம் அதைச் செய்ய முடியாது, மிஸ்டர் பிரசிடெண்ட்.”
“முயற்சி பண்ணு.”
அமெரிக்க அதிபர் அந்த பதிமூன்று செனட்டர்களை நோக்கி மீண்டும் திரும்பினார். “சரி, நமது ஊதா நிற மலைகளையும், பழங்கள் செறிந்த சமவெளிகளையும் எப்படிப் பறிகொடுத்தீர்கள் என்று விளக்கமாகச் சொல்லுங்கள்.”
“எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாப் பறிகொடுத்துடல, சார்,” என்றார் ஒரு செனட்டர். “துண்டு துண்டாத்தான் போச்சு.”
“துண்டு துண்டா!” கத்தினார் அதிபர்.
“மெதுவாத்தான் ஆரம்பித்தோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஆட்டம் சூடு பிடித்தது. முதல்ல போக்கர்தான் ஆடினோம். அப்புறம் கொஞ்சம் உற்சாகமாகி பிளாக்ஜாக்குக்கு நகர்ந்தோம். கடைசியா ரௌலட் ஆடறதுதான் சரின்னு தோணிச்சு.”
“சரிதான். ரௌலட். அதிலதான் எல்லாத்தையும் வேகமா இழக்க முடியும்.”
“வேகமா,” செனட்டர்கள் தலையசைத்து ஆமோதித்தனர்.
“ஆட்டத்துல தோற்கும்போது எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும். நம்ம பந்தயத்தை இரட்டிப்பாக்குவோம். நாங்களும் அப்படியே இரட்டிப்பாக்கினோம். வடக்கு கரோலைனா, தெற்கு கரோலைனா இரண்டையும் பந்தயம் வைத்தோம். கடவுள் மனசு வைக்கல. இழந்துட்டோம். அப்புறம் எல்லாரும் கொஞ்சம் குடிச்சோம். அதில உற்சாகமாகி வடக்கு, தெற்கு டகோடா இரண்டையும் பணயம் வைத்தோம். அவற்றையும் இழந்தோம்…”
“மேல சொல்லுங்க,” என்றார் அதிபர்.
“அப்புறம் கலிஃபோர்னியாவைப் பணயம் வைத்தோம்.”
“அது எப்படி இரட்டைப் பணயமாகும்?”
“சார், உண்மையில கலிஃபோர்னியாங்கறது நாலு மாகாணங்கள் சேர்ந்தது. வடக்கு, தெற்கு கலிஃபோனியா, ஹாலிவுட், மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ்.”
“ஓ,” என்றார் அதிபர்.
“எப்படியோ சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்து விட்டோம். யாரோதான் வாஷிங்டன் டி.சியை அழைத்துச் சொல்ல வேண்டுமென்று ஆலோசனை சொன்னார்கள்.”
“அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி,” என்றார் அமெரிக்க அதிபர். “ஸ்மித். இப்ப இங்க நடந்த கூத்து சட்டப்படி செல்லுமா?”
“இந்த விஷயம் தெரிந்தால் ஃபிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சைனா போன்ற நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பதைப் பொறுத்தது அது, மிஸ்டர் பிரசிடெண்ட்.”
“சரி. இந்த நாசமாய்ப் போன கசீனோவில் வழக்கறிஞர்கள் யாராவது இருக்கிறார்களா?”
“கண்டிப்பா,” என்றார் உதவியாளர். “மேலே மாடியில் ஒரு இருநூறு பேர் போக்கர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அழைத்து வரட்டுமா?”
“உனக்கென்ன பைத்தியமா?” சீறினார் அதிபர். “கொஞ்ச நேரத்தில நாம கழுத்து வரைக்கும் முழுகிடுவோம்.”
அதிபர் கண்கள் மூடியபடி, முழங்கால்களை இரு கைகளாலும் இறுகப்பிடித்தபடி, நீண்ட நேரம் அமர்ந்திருந்தார். மலைப்பாதையில் கண்களைக் கட்டியபடி ஓடுகிறவன் போலிருந்தார்.
பின் உதடுகளை ஒரு சிலமுறை ஈரப்படுத்திக் கொண்டார். தன் முழங்கால்களை இறுக்கிக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தபோது, வாயிலிருந்து ஆவி சீறிப்பாய்ந்து எச்சில் தெறித்தது. “எல்லாருமே முட்டாள்! மங்கல் பல்பு!அரை புத்தி! அரைக் கழுதை! பைத்தியம்! -”
“ஆமாம், சார்.” செனட்டர்களில் ஒருவர் கூறினார்.
“நான் இன்னும் முடிக்கல.” அதிபர் கத்தினார்.
“ஆமாம், சார்.”
“எல்லாக் கேடு கெட்டக் குருட்டு முட்டாள்-”
அதிபர் நிறுத்தினார்.
“மங்கல் பல்பு தேவடியாப் பசங்க?” யாரோ ஒருவர் பரிந்துரைத்தார்.
“ரம் பாட்டில் தலையர்கள்! முட்டாத் தேவடியாப் பசங்க!”
எல்லாரும் தலையசைத்து ஆமோதித்தனர்.
“வெறி பிடித்த, பைத்தியக்கார, அறிவுகெட்ட முட்டாள்கள்! ஜீஸஸ்! கடவுளே! எல்லாம் வல்ல பிதாவே!”
அதிபர் மெல்லத் தன் கண்களைத் திறந்தார். “உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது புரிகிறதா? இதை ஒப்பு நோக்கினால் நம் ஐக்கிய நாடுகள் சபை தேவதூதர்களின் கூட்டம் போல தோற்றமளிக்கும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா? அல்லது ஐன்ஸ்டைகளின் கூட்டமைப்பைப் போல; தந்தை, மகன், பரிசுத்த ஆவிகள் நிறைந்த வீட்டைப் போல.
அங்கு கனத்த அமைதி நிலவியது.
“மிஸ்டர் பிரசிடெண்ட், உங்கள் முகம் முழுக்க சிவந்து விட்டது.”
“இன்னேரம் அது ஊதா நிறத்துக்கு மாறியிருக்க வேண்டும்,” என்றார் அதிபர். “நம் அரசியலமைப்பில் ஒன்றுக்கும் உதவாத முட்டாள் செனட்டர்களை அடித்துத் துவைக்கவோ, படுகொலை செய்யவோ, தூக்கிலிடவோ, மின்சாரம் பாய்ச்சிக் கொல்லவோ அனுமதிக்கும் சட்டம் ஏதாவது உள்ளதா?”
அப்படி நம் அரசியலமைப்பில் எதுவும் இல்லை, மிஸ்டர் பிரசிடெண்ட்,” என்றார் ஸ்மித்.
“காங்கிரஸின் அடுத்த அமர்வில் அதைச் சேர்த்து விடுங்கள்.”
அதிபர் இப்போது கொஞ்சம் ஆசுவாசமான மாதிரித் தெரிந்தது. இறுக்கியிருந்த முஷ்டிகளைக் கொஞ்சம் தளர்த்தினார். திறந்து கிடந்த இரண்டு வெற்று உள்ளங்கைகளிலும் இந்தப் பிரச்னைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்பதைப் போல அவற்றை வெறித்துப் பார்த்தார். அவரது இமை மயிர்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சொட்டின.
“நாம் இப்போது என்ன செய்யப் போகிறோம்?” அவர் குரல் ஆடு கனைப்பதைப் போலிருந்தது. “நாம் இப்போது என்ன செய்யப் போகிறோம்?”
“மிஸ்டர் பிரசிடெண்ட்.”
“நாம் இப்போது என்ன செய்யப் போகிறோம்?” என்றார் அழும் குரலில், மென்மையாக.
“சார்.”
அதிபர் நிமிர்ந்து பார்த்தார்.
உயரமான தொப்பி அணிந்த ஓர் அமெரிக்க பூர்வகுடி மனிதர் அங்கே நின்றிருந்தார். குள்ளமாக, ஒரு ஸ்க்வா பறவையைப் போலிருந்தார்.
“”ஐயா, நான் ஒரு ஆலோசனை கூறலாமா? இரோகுயிஸ் வௌகேஷா சிப்பேவா கவுன்சிலின் தலைவரும், தற்போது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உரிமையாளருமான இந்த கேசினோவின் உரிமையாளர் அவரை நீங்கள் சந்திக்க விரும்புகிறீர்களா என்று கேட்கச் சொன்னார்,” என்றா அந்தக் குள்ளமான அமெரிக்க பூர்வகுடி மனிதர்.
அமெரிக்க ஜனாதிபதி எழ முயற்சித்தார்.
“வேண்டாம்,” என்றபடி உயரமான கருப்பு தொப்பி அணிந்த அந்த குட்டையான மனிதன் திரும்பி கதவைத் திறந்தான், மின்னும் இரும்புக் கண்கள் கொண்ட பிரம்மாண்ட நிழலுருவம் ஒன்று உள்ளே நுழைந்தது.
அந்த மனிதர் நிழலுக்குள் நிழலென தன் மென்மையான பூனைப்பாதங்களில் மிதப்பதைப் போல் நடந்து வந்தார். ஏழு அடிக்குக் கொஞ்சம் உயரம் குறைவு; அமைதி தவழும் முகத்தில் முடிவின்மையின் சாயல். இறந்து போன அதிபர்களின் வெற்றுப் பார்வையும், வீழ்ந்த இந்திய குடித்தலைவர்களின் வீரமும் இந்தப் புதியவரின் நீண்டு சரிந்த முகத்தில் உயிர் பெற்றுக் காட்சியளித்தன.
ஸ்க்வா பறவை போலிருந்த அந்த வழிகாட்டி ஏதோ கொண்டாட்டப் பாடலை முணுமுணுப்பதைப் போலிருந்தது: அந்தத் தலைவரைப் பற்றி; அவரைப் புகழ்வது போல.
பல சூதாட்ட விடுதிகளின் தலைவரான அவரது உயரமான ஆகிருதியிலிருந்து ஒலியடக்கப்பட்ட புயல்களின் தொனிகொண்ட குரல் எழுந்தது.
அந்த ஸ்க்வா பறவைப் பணியாளன் அதை மொழிபெயர்த்தான்.
“இங்கே என்ன பிரச்னை என்று கேட்கிறார்.” இதைக் கேட்டதும் அங்கிருந்த செனட்டர்கள் அனைவருக்கும் அங்கிருந்து வெளியே குதித்து விட வேண்டும் என்ற ஒரு கூட்டு உந்துதல் ஏற்பட்டது. ஆனால்அமெரிக்க அதிபரின் புருவ நரம்புகளிலிருந்து வெடித்து எழுந்த மெல்லிய சப்தம் அந்த இடத்திலேயே அவர்களை உறைய வைத்தது.
அதிபர் தன் தலையை இரு பக்கங்களிலும் அழுந்தத் தடவிக் கொடுத்து சினத்தில் பொங்கியெழும் நரம்புகளை அமைதிப்படுத்தினார்.
“நீங்கள் எங்கள் நாட்டை திருடிவிட்டீர்கள்.”
குரல் மேலே பேசியது. கீழே மொழிபெயர்க்கப்பட்டது.
“ஒவ்வொரு மாநிலமாக.”
அந்த பெரிய உயரத்திலிருந்து, ஒரு முணுமுணுப்பு குள்ளமான இந்தியன் மீது விழுந்தது, அவன் பலமுறை தலையசைத்து ஆமோதித்தான்.
பிறகு அதிபரிடம், “எங்கள் தலைவர் ஒரு கடைசி ஆட்டத்துக்கு உங்களை அழைக்கிறார்,” என்றான். “இந்த முறை மொத்த நாட்டையும் பணயம் வைத்து சூதாட அவர் தயாராயிருக்கிறார். சூதில் அதை இழக்கவும்.”
நிலநடுக்கம் போன்ற ஒரு அதிர்வு, செனட்டர்களை உலுக்கியது. அவர்களது உதடுகளில் மெலிதான புன்னகை நடுங்கியது. அதிபருக்கு மயக்கம் வரும் போலிருந்தது.
“ஒரு கடைசி ஆட்டம்?” அதிபர் முணுமுணுத்தார். “மீண்டும் நாங்கள் தோற்றுவிட்டால்? நாங்கள் எதைக் கொடுப்பது?”
பெருத்த செவ்விந்தியச் சதை கொண்ட தலைவரிடம் சிறிய இந்தியர் சிறிது நேரம் உரையாடினார்.
“நீங்கள் எங்களுக்கு பிரான்சையும், ஜெர்மனியையும் கொடுங்கள்.”
“அதை எங்களால் செய்ய முடியாது!” கத்தினார் அதிபர்.
“அப்படியா?” என்றது பெரும் புயல் குரல்.
அதிபர் தன் ஆடைக்குள் இருமடங்கு உடல் சுருங்கியதைப் போல் உணர்ந்தார்.
“மேலும்…”
“மேலும்?” என்றார், திடீரென்று முன்னாள் ஆகிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி.
“விதிமுறைகள்,” என்றார் மொழிபெயர்ப்பாளர். “நீங்கள் தோற்றால் அமெரிக்கா எங்கள் வசமே இருக்கும். மேலும் நீங்கள் ஐம்பது மாகாணங்களிலும் கசீனோக்களை உருவாக்க வேண்டும். இந்தியப் பகுதிகள் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். சரியா?”
அமெரிக்க ஜனாதிபதி தலையசைத்தார்.
“நீங்கள் வென்றால், உங்கள் மாநிலங்களைத் திரும்பப் பெறுவீர்கள், ஆனால் அதே விஷயங்கள் நடக்க வேண்டும்: நீங்கள் வெற்றி பெற்றாலும், எல்லா பிரதேசங்களிலும் பள்ளிகள் மற்றும் சூதாட்ட விடுதிகளை உருவாக்க வேண்டும்.”
“நம்பமுடியவில்லை! வெற்றியோ தோல்வியோ அதே விதிகளை எப்படிப் பயன்படுத்த முடியும்?”
அங்கிருந்த நிழல்கள் கிசுகிசுத்தன.
“என்ன செய்வது? தட்ஸ் த வே த குக்கி க்ரம்பில்ஸ்!”
அதிபர் மெல்ல விழுங்கி விட்டு, பின், “தொடங்குவோம்” என்றார். ஐம்பது மாநிலங்களின் பெருஞ்சிவப்பு கசீனோக்களின் உரிமையாளரின் நிலக்கரி அள்ளும் மண்வெட்டி அளவிலான விரல்கள் காற்றில் நகர்ந்தன. அவற்றுக்கிடையில் ஒரு சீட்டுக்கட்டு செருகியிருந்தது.
“ஆகட்டும்!” மேலிருந்து குரல் எதிரொலித்தது.
அதிபர் தன் அங்கங்கள் செயலிழக்கக் கண்டார்.
“பிளாக் ஜாக்,” கிசுகிசுத்தான் உதவியாளன். “தலா இரண்டு அட்டைகள்.”
கடைசியாக, மெதுவாக, அமெரிக்க ஜனாதிபதி சீட்டுகளை பரப்பினார்.
மேலிருந்து குரல் ஒலித்தது.
“முதலில் நீங்கள்,” என்றான் உதவியாளன்.
அதிபர் சீட்டுக்களை எடுத்தார். அவர் முகத்தில் ஒரு பெரிய புன்னகை விரிந்தது. புன்னகையை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை.
இந்தியத் தலைவரைப் பார்த்து, “இப்போது உங்களுடைய முறை,” என்றார்.
மேலே இடி ஒலித்தது.
மொழிபெயர்ப்பாளன், “முதலில், உங்கள் கையைப் பார்ப்போம்” என்றான். அமெரிக்க ஜனாதிபதி தனது சீட்டுக்களை புரட்டினார்.
எண்ணிக்கை மொத்தம் பத்தொன்பது வந்தது.
“இப்போது நீங்கள்,” ஜனாதிபதி கிசுகிசுப்பாகக் கூறினார்.
இடி மீண்டும் இடித்தது. குள்ளமான இந்தியன் சொன்னான், “தேவையில்லை. நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.”
“அதெப்படி உங்களால் சொல்ல முடியும்?” என்றார் அதிபர். “நீங்கள் உங்கள் அட்டைகளைத் திருப்பவே இல்லையே! ஒரு வேளை நீங்கள் இருபது, இருபத்தொன்று எடுத்திருக்கலாம் அல்லவா?” அறையின் சூழ்நிலை மெல்ல மாறிக் கொண்டிருந்தது. குள்ள இந்தியன் சொன்னான்: “நீங்கள்தான் வெற்றி பெற்றுள்ளீர்கள். இனி இந்த நாடு உங்களுடையது. ஆனால், கடைசியாக ஒரு சிறிய விஷயம்.”
அவன் ஒரு காகிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்தான்.
காகிதத்தில் இவ்வாறு பொறிக்கப்பட்டிருந்தது: இருபத்தி ஆறு டாலர்கள், தொண்ணூறு சென்ட்கள்.
“இது,” சிறிய இந்தியன் சொன்னான், “பல நிலவுகளுக்கு முன்பு மன்ஹாட்டனை வாங்குவதற்குச் செலுத்தப்பட்ட அதே அளவு பணம்”. அதிபர் தன் பாக்கெட்டிலிருந்து பணக்கற்றையை வெளியில் எடுத்தார். மேலிருந்து குரல் ஒலித்தது.
“சிறிய பில்கள் மட்டும் கொடுங்கள் என்கிறார்,” என்றான் மொழிபெயர்ப்பாளன்.
ஜனாதிபதி பணத்தை கையளித்தார், ரெட்வுட்டின் பெரும் கை நீட்டி அதை வாங்கிக் கொண்டது.
கூரையை நோக்கி மீண்டும் குரல் ஒலித்தது.
“இப்போ என்ன?” என்று ஜனாதிபதி கேட்டார்.
மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்தார். ” எங்கள் தலைவர் சொல்கிறார். இனி நீங்கள் நிறைய, நிறைய கப்பல்களை உருவாக்குவீர்கள் என்று நம்புவதாகவும், அவற்றில் நீங்கள் எல்லாரும் எங்கிருந்து வந்தீர்களோ அங்கு திரும்பிச் செல்லுவீர்கள் என்று நம்புவதாகவும் அப்படித் திரும்பிச் செல்லும்போது உங்களுக்குப் பிரியாவிடை அளிக்க அவர் துறைமுகத்திற்கு வர விரும்புவதாகவும் கூறுகிறார்.”
“அப்படியா சொன்னார் அவர்?”
அமெரிக்க ஜனாதிபதி மேசையில் இருந்த சீட்டுகளை இன்னும் தொடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“நான் உங்களை ஏமாற்றவில்லையென்பதை உறுதிப்படுத்துவதற்காகவாவது நான் அவற்றைப் பார்க்க வேண்டாமா?”
உதவியாளன் தலையசைத்து மறுத்தான்.
ஜனாதிபதி வாசலுக்குச் சென்று திரும்பி, “அது என்ன கப்பல் பயணம்? நான் எங்கும் செல்லப்போவதில்லை,” என்றார். மேலிருந்து ஒரு குரல் கிசுகிசுத்தது.
“ஓ! அப்படியா?”
செனட்டர்களைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் அந்த கசீனோவை விட்டு வெளியேறினார்.
