
நினைவுதெரிந்த வரையில் அந்த வருடம் தான் முதன்முதலாக பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. மொத்தத்தையும் மாற்றிப்போட்டார்கள். ஆசிரியர்களுக்கான பிரதி அச்சிடப்பட்டு வந்திருந்தது. சோஷியல் ஸ்டடீஸ் எடுக்கும் மதன்குமார் பிரதியின் கன்டென்ட் பக்கத்தை படித்தார். முதல் பாடமாக ப்ரெஞ்சுப் புரட்சி இருந்தது. அவருக்கு அதுபற்றி தோராயமாக ஏதோ தெரியும். அவ்வளவுதான். ப்ரான்ஸ் நாடு நெப்போலியன் மட்டும்தான் அவருக்கு நியாபகம் வந்தது. ஐந்து வருட அனுபவம் கொண்ட ஆசிரியராக இருந்துகொண்டு தனக்கு இது பற்றி கொஞ்சமும் தெரியாதது பற்றி அவமானகரமாக உணர்ந்தார். இதில் பி.ஏ ஹிஸ்ட்ரி வேறு. முதல் பக்கத்தை திறந்த போது பாஸ்டில் ப்ரிஸன் உடைபடும் சித்திரம் ஒன்றிருந்தது. ‘அகோ என்றெழுந்தது பார் புரட்சி’ எனும் வரிகள் ஞாபகம் வந்தது. ஆனால் அது பாரதி ருஷ்ய புரட்சி பற்றி எழுதியது. அடுத்த பக்கத்தில் நெப்போலியனின் படம். இன்னொரு பக்கம் ராப்ஸ்பியர் என்பவரின் படம். சுமார் பன்னிரெண்டு பக்கம் ஓடிச்செல்லும் சாப்டர் அது. ஒரு வாரத்தில் கோடை விடுமுறை முடிந்து வகுப்புகள் துவங்க இருக்கின்றன. புத்தகத்தை மேஜையில் வைத்தார் அது காற்றில் புரண்டு முதல் பக்கத்தின் பாஸ்டில் ப்ரிஸன் காட்சியானது.
அதே பாஸ்டில் ப்ரிஸனைத்தான் சிபியும் அவன் நண்பர் குழுவும் பார்த்திருந்தது. முதல் பாடமாக எப்பொழுதும் சுதந்திரப் போராட்டம்தான் இருக்கும். காந்தி உப்பு சத்தியாகிரகத்திற்கு நடப்பது, சந்திர போஸ் ஸல்யூட் அடித்தபடி நிற்பதான படங்களை எதிர்பார்த்த சிபிக்கு ஒரு கோட்டைச் சுவருக்கு முன் ஆயுதம் கொண்டு இரு குழு மோதிக்கொள்வதன் காட்சி ஆச்சர்யமளித்தது. அங்கங்கு ஓரிருவர் இறந்து கிடந்தனர். இப்பொழுது திரைப்படங்களில் காண்பது போலல்லாமல் கத்தி முனை கொண்ட நீண்ட துப்பாக்கிகள். மனிதருக்கு வெகு அருகில் பீரங்கிகள் வேறு. பின் புலத்தில் நெருப்பும் புகையும். ஒரு கலகம் நிகழும் பூமியைக் காண்பித்தது படம். அழகரசன் எழுத்துக்கூட்டிப் படித்தான் ‘பி ஏ எஸ் டி ஐ எல் எல் இ – பாஸ்டில் ப்ரிஸன்.. ஸ்டராமிங்க ஆஃப் பாஸ்டில் ப்ரிஸன்’.
‘அழகு உனக்கு செம மூளடா’ என்றான் ரமணி.
அழகரசன் மேலும் ஊக்கம் கொண்டு ‘லிபர்ட்டி ஈக்வாலிட்டி ஃப்ரட்டர்னிட்டி’ என்பதையும் வாசித்துவிட்டான்.
நட்டு மேலும் ‘டேய்ய்ய்ய்…. செமடாஆஆ’ என்று ஆச்சர்யமாய் இழுத்தான்.
சிபிக்கு பொறாமையாக இருந்தது. இந்த அழகரசன் எப்படி இப்படி படிக்கிறான் எனபது ஆச்சர்யம் சிபிக்கு. அவன் அப்பா குப்பை லாரி ஓட்டுகிறார் அவன் அம்மா தன் வீட்டில் வீட்டு வேலை பார்க்கிறாள். ஆனால் அழகரசன் வகுப்பில் தொடர்ச்சியாக முதல் மூன்று ராங்குக்குள் வந்துவிடுகிறான். சிபிக்கு ஏதோ விதத்தில் தான் அவனைவிட சிறந்து விளங்கியே ஆக வேண்டும் என்று தோன்றியது. பாட்டி அழகரசன் வீட்டுக்குள் வரக்கூடாது என ஒரு சட்டம் இயற்றியது கூட இந்த சிறு மூளைக்குள் தான் ஏதோ விதத்தில் மேலானவன் எனும் எண்ணம் தோன்றக் காரணமாக இருக்கலாம். ஆனால் தான் தமிழ் வாசிப்பதில் அழகரசனை விட ஒரு படி மேல், மார்க்கிலும் அவனை தமிழில் வீழ்த்த ஆளில்லை என்பதை நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
‘சரிடா நான் வீட்டுக்கு போறேன்’ எனக் கிளம்பினான் சிபி.
வீட்டு வாசலில் அம்மா பாட்டி இருவரும் அமர்ந்திருந்தார்கள். தன் வீட்டை ஒட்டினார்போல் இருக்கும் பக்கத்து வீட்டில் மதன் ஸார் குடியிருப்பது சிபிக்கு கூடுதல் பெருமை.
‘குட் ஈவிங்க் ஸார்’ என்றான்.
மதன் ஸார் சிரித்தார். அவர் கையில் புதிய சோஷியல் புத்தகம் இருப்பதைக் கவனித்தான் சிபி.
‘என்னடா புதுப் புத்தகமெல்லாம் வாங்கியாச்சா?’ என்றார்.
சிபி பேசிக்கொண்டிருக்கும் போதே தங்கம்மா உள் நுழைந்து சந்து வழியாக பின் கட்டுக்குச் சென்றாள். தங்கம்மாவுக்கு பாத்திரம் ஒழித்துப்போட அம்மாவும் பாட்டியும் வீட்டுக்குள் சென்றார்கள்.
‘எப்ப ஸார் ப்ரெஞ்ச் ரெவல்யூஷன் நடந்துச்சு?’ என்றான்.
‘லேட் 18த் சென்சுரி’
சிபி சரி சரி என்று தலையாட்டினான். ஆனால் 18த் சென்சுரி என்றால் ஆயிரத்து எண்ணூற்றி சொச்சமா இல்லை ஆயிரத்தி எழுநூற்று சொச்சமா இல்லை ஆயிரத்தி தொள்ளாயிரச்சி சொச்சமா என்பது பலமுறை சொல்லிக் கொடுக்கப்பட்டும் தீராத குழப்பம். அழகரசனுக்கு இது சரியாகத் தெரியும் என்பதை நினைத்துக்கொண்டான் சிபி.
அடுத்த ஒரு வாரம் கோடை விடுமுறையின் முடிவு முழு உக்கிரத்துடன் உபயோகப்படுத்தப்பட்டது. ‘வெயில் வீணா போவுதுல்ல… கிளம்பிட்டான் பாரு,… புதுப் புத்தகம் வந்திருச்சுல எடுத்து படிச்சாதான் என்னாடா…’ என்றாள் அம்மா. ஆனால் யாரும் எதையும் சட்டை செய்வதாயில்லை. கிரிக்கெட், கபடி, புட்டு, ஊதாரித்தனமாகத் திரிதல் என கடைசி ஒரு வாரத்தின் களியாட்டு பள்ளியில் முதல் நாளிலும் நீண்டது. முதல் நாள் என்பதால் ஒரு சில ஆசிரியர்கள் பாடம் ஏதும் எடுக்கவில்லை. மதியம் மூன்று மணி வகுப்புக்கு காத்திருந்தார்கள். சிபிக்கு லேசாகத் தூக்க கலக்கமாய் இருந்தது. வகுப்பின் ஜன்னல் வழி தூரத்தில் சின்னதாய் தெரியும் மலை வழக்கத்தை விட அதிகப் புகைமூட்டமாய் இருந்தது. அங்கு மழை பெய்கிறது என அர்த்தம். ஆனால் ஊரில் மழையே இல்லை. கண்ணைக் கொட்டி கொட்டி மலையை பரவசமாக அதில் ஒரு பறவையைப் போல் பறந்துகொண்டிருந்தபோது மதன் ஸார் வகுப்புக்குள் நுழைந்தார். அவருக்கு ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு பிரஞ்சுப் புரட்சியை எப்படி புரிய வைப்பது என யோசித்து இன்னும் பதில் கிடைக்காமல்தான் இருந்தார்.
வகுப்புள் நுழையவும் எல்லா பிள்ளைகளும் எழுந்து குர் ஆஃப்டர்நூன் ஸாஆஆர் என்றன.
‘குட் ஆஃப்டர்நூன் … ஸிட் ஸிட்’ என்றபடி புத்தகத்தை மேஜையில் வைத்துவிட்டு. வகுப்பின் மீது கண் ஓட்டினார்.
‘ஸைலன்ஸ் ஸைலன்ஸ்’ மழை மெல்ல ஓய்வது போல் ஓய்ந்தது வகுப்பு.
‘நாம் போன வருஷம்லாம் படிச்சோம் இல்லயா… பழைய காலங்கள்ல மன்னர்கள் ஆட்சி பண்ணாங்க… சேர…’ என நிறுத்தினார். வகுப்பு சேர சோழ பாண்டியர் என்றது.
‘அப்ப அவங்க நம்ம நாட்ட ஆட்சி பண்ணாங்க.. இப்ப யாரு பண்ணுரா?’ என்றார்.
‘ம் சொல்லுங்க.. இப்ப்ப யாரு ஆட்சி பண்ணுரா?’
சிபி ‘சீஃப் மினிஸ்டர்’ என்றான்.
‘குட்’
அழகரசன் ‘ப்ரைம் மினிஸ்டர்’ என்றான்.
‘வெரி குட்… சீஃப் மினிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர்… எப்டி மன்னர் ஆட்சிலேந்து மக்களாட்சிக்கு வந்தோம்?… பல சட்டங்கள் இயற்றுனது மூலமா புரட்சிகள் மூலமா வந்தோம்… அமரிக்கன் ரெவல்யூஷன், ருஷ்யன் ரெவல்யூஷன், ப்ரெஞ்ச் ரெவல்யூஷன்- இப்டி பல புரட்சிகள் இருக்கு.. இப்ப ப்ரெஞ்சுப் புரட்சி பத்தி படிக்கப்போறோம்..’
மதனுக்கு பிள்ளைகளுக்கு புரியவில்லை என்பது புரிந்தது. ஐந்தாம் வகுப்பில் துவங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை ப்ரெஞ்ச் ரெவல்யூஷன் எனும் சாப்டர் சேர்க்கப்பட்டிருந்தது. பன்னிரெண்டாம் வகுப்புக்கு புரிய வைப்பதே கடினம் எனும் போது, ஐந்தாம் வகுப்பு எப்படி?
‘சரி.. இப்ப த்ரீ ஐடியல்ஸ் ஆஃப் ப்ரெஞ்ச் ரெவல்யூஷன் என்னன்னு சொல்லப் போறேன்…’ கையை முகம் வரை உயர்த்தி சுண்டு விரலை மட்டும் நீட்டி ‘லிபர்ட்டி’ என்றார். சிபிக்கு அடுத்த இரண்டு வார்த்தைகள் அழகுக்கு தெரியும் என்பது தெரியும். அழகு ‘ஈக்வாலிட்டி ஃப்ரட்டர்னிட்டி’ என்றான்.
மதன் ஸார் ஆச்சர்யப்பட்டு ‘எக்ஸலன்ட் அழகு’ என்றார். ‘வா இங்க வா’ என மேடைக்கு அழைத்து அவனை ஒவ்வொரு வார்த்தையாக சொல்ல வைத்து வகுப்பை திரும்ப சொல்லச் செய்தார். ஒவ்வொரு வராக வந்து இப்படிச் சொல்லவேண்டும். முதல் நாள் எந்த வகுப்பும் நடக்காத காரணத்தால் பள்ளிக்கூடம் முழுவதும் லிபர்ட்டி ஈக்வாலிட்டி ஃப்ரட்டர்னிட்டி என ஒலித்தது.
அன்று பள்ளி விட்டு வீடு திரும்பும் போது ரமணி சிபியை லேசாகச் சீண்டினான். பின் விளையாட்டாக தள்ளினான். சிபி கையை நீட்டி திட்ட வந்தவன்… ‘போடா… லிப்பர்ட்டி’ என்றான். குழு சிரித்தது. ரமணிக்கு அடுத்த வார்தை தெரியவில்லை. ‘நீதான்டா லிப்பர்ட்டி’ என்றான்.
அழகு எடுதுக்கொடுத்தான். ‘நீ ஈக்வாலிட்டின்னு திட்டுடா’ என்றான். மெல்ல அம்மூன்று சொல்லும் விளையாட்டுச் சொல்லானது. எங்கு பார்த்தாலும் உளறித்திரிந்தார்கள் அச்சொற்களை.
சிபியின் பாட்டி ‘என்னடா டீ டீன்னு உளரிட்டு திரியிர’ என்றார்.
‘ஐடியல்ஸ் ஆஃப் ப்ரெஞ்ச் ரெவல்யூஷன் பாட்டி.. சொல்லு பாப்போம்.. லிபர்ட்டி ஈக்வாலிட்டி ஃப்ரட்டர்னிட்டி’ என்றான்.
தங்கம்மாவை திட்டும்போது வாயில் நுழையாத வசவுச் சொற்களை சரளாமாகக் கொட்டித் தள்ளும் பாட்டிக்கு இம்மூன்று வார்த்தைகள் வரவே இல்லை எவ்வளவு முயன்றும். எங்கு பார்த்தாலும் சொல்லி சொல்லி பல வருடங்களாக புழக்கத்தில் இருக்கும் சொல்போல் ஆகிவிட்டன அவை. சிபியின் தலைமுறை அதற்கு முந்தைய தலைமுறை அதற்கும் முந்தையது என மூன்று தலைமுறைக்கு அம்மூன்று சொற்கள் அறிமுகமானது.
ப்ரெஞ்சுப் புரட்சியைப் படிக்கப் புகுந்த மதன் ஸார் மாவட்ட நூலகமே கதியென இருக்கத் துவங்கினார். ஏற்கனவே குண்டு குண்டு நாவல்களாக வாசிப்பவர், இப்போது உலக வரலாறு பற்றிய குண்டு குண்டு புத்தகங்களாக வாசித்துத் தள்ளுகிறார். நூலகத்தில் மணிக்கணக்காக படிப்பதோடில்லாமல் வீட்டிற்கும் பள்ளிக்கும் கூட எடுத்து வந்து அந்த குண்டுப் புத்தகங்களை வைத்து வாசிக்கிறார். பாட்டி ‘இந்த வாத்தியார் புள்ளைக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வெச்சாதான் என்ன’ என்றார்.
ஒரு சனிக்கிழமை மாலையில் வழக்கபோல் கையில் ஒரு புத்தகத்தோடு வாசலோரம் ஒரு சேரை போட்டு அதன் மேல் ஒரு பெரிய அளவு ரைட்டிங் பேடை வைத்து குறிப்பெடுக்கும் நோட்டை விரித்து வைத்தபடி ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார்.
‘குட் ஈவிங்க் ஸார்’ என்றான் சிபி.
சிரித்தார். ‘என்ன புக் ஸார் இது’ என்றான்.
‘நீதான் படியேன்’ என்று அவனிடம் நீட்டினார்.
தலைப்பு தமிழில் இருக்கவும் தான் எப்படியும் படித்துவிட முடியும் எனும் நம்பிக்கை பிறந்தது.
‘ஜனநாயக யுகத்தில் நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்கள்’ சரளமாகவே படித்தான்.
‘எக்ஸலன்ட்டா தம்பி… இந்தா இதப் படிப் பார்ப்போம் என தான் குறிப்பெடுக்கும் நோட்டைக் கொடுத்தார்.
‘ஐந்தாம் வகுப்பு அறையின் ஜன்னலிலிருந்து தூரத்தில் புகை மூட்டமாய் தெரியும் செல்லி அம்மன் ஆலயம் இருக்கும் மலை பசுமையானது. ஒரு நாளுக்கு ஒரு முறையாவது மழை பெய்வதுண்டு. ஆனால் இங்கு மழையே இல்லை. வரண்டு மண் வெடிக்கும் நிலை. நாம் நம் உடமைகளை இல்லங்களை ஊர்களை அப்படியே விட்டுவிட்டு அந்த பசுமை நோக்கி செல்ல வேண்டும்’ சிபிக்கு எதுவும் புரியவில்லை. படித்து முடித்து ஒரு கேள்வியோடு மதன் ஸாரை பார்த்துக்கொண்டிருந்தபோது வீட்டுக்கு உள்ளிருந்து ஒரு ஓலம்.
வாய் வழி மூக்கின் வழி காற்றை உள்ளிழுத்து ‘ஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ன்ன்’ என்பது போல் ஒரு ஒலி. அம்மாதான் எழுப்பினாள். மதன் ஸார் புத்தகத்தை கீழே வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். சிபியும் அவர் உடனேயே ஓடிச் சென்றான். அம்மா நடு ஹாலில் அரண்டு நின்றிருந்தாள் நெஞ்சைப் பற்றியபடி.
என்னாச்சுங்க என ஸார் கேட்டுக்கொண்டிருந்தபோது சிபி பார்த்து விட்டான்.
‘பாம்பு’ என்றாள் அம்மா.
‘எங்க எங்க’
அதன் வால் படுக்கை அறைக்குள் சென்று சொடுக்கி மறைவதை பார்த்துவிட்டான் சிபி. ரூம்குள்ள போச்சு ரூம்குள்ள போச்சு எனக் கத்தினான். பாட்டி வந்துவிட்டிருந்தாள். அம்மா கொடுத்த பிரளயக் குரலுக்கு தங்கம்மாவும் வீட்டுக்குள் வந்துவிட்டிருந்தாள். மதன் ஸார் அறைக்குள் நுழைய இருந்தவரை அம்மா தடுத்துவிட்டாள். ‘நாகப் பாம்பு கடிச்சு கிடிச்சு வெச்சிரப் போது’
பாட்டி அந்தக் களேபரத்திலும் தங்கம்மாவை திட்டத் துவங்கினாள்.. ‘ஏ தங்கம்மா நீ எப்டி வீட்டுக்குள்ள வந்த’
மதன் ஸார் ‘அம்மா.. அவங்க பாம்பு பிடிச்சு பழக்கம் இருக்கவங்க.. சும்மா இருங்க கொஞ்சம்.. தங்கம்மா புடிச்சிருவீங்களா?’
‘புடிச்சுரலாம் தம்பி…’ என்றவள் மெல்ல அறைக்குள் நுழைந்தாள்.பாட்டிக்கு பாம்பு அறைக்குள் புகுந்தது அவ்வளவு பெரிய பிரச்சனையாக இல்லை.
எங்கும் தட்டுப் படவில்லை. பாம்பு இருப்பதைப் பற்றி அறியாதவர் அந்த அறைக்குள் நுழைந்தால் அது ஒரு சாதாரணமான அறை. சுகமான மெத்தை அலங்கார மேஜை. ஆளுயரக் கண்ணாடி. மரத்தில் இழைக்கப்பட்ட அழகான பீரோ. மணம் கமழும் அட்டாடச்ட் பாத்ரூம் டாய்லெட். ஆனால் அதற்குள்தான் பாம்பு இருக்கிறது. தங்கம்மா எவ்வளவு தேடியும் சிக்கவில்லை. அன்று தெருவே வீட்டுக்குள் வந்தது. இரண்டு மணி நேரம் ஆகியும் எந்த பலனுமின்றி தேடுதல் தொடர்ந்தது. சாதாரண நாட்களில் அழகரசனுக்க்கு வீட்டுக்குள் வர அனுமதியில்லை. ஆனால் அது பாம்பின் நாள் என்பதால் அவனும் உள் வந்து பயப்படாமல் அறைக்குள் சென்று அவன் அம்மாவுடன் சேர்ந்து தேடத் துவங்கினான். மர பீரோவை ரெண்டு தட்டு தட்டினான். உள்ளுக்குள் இருந்து புஸ் என சத்தம் வந்தது. வெகு நேரமாய் சிபி கட்டுப்படுத்தியிருந்த சிறுநீரை அந்த புஸ் சத்தம் வெளியேற்றியே ஆகவேண்டும் என நிர்பந்தித்தது. கொல்லைக்குச் சென்றான். அழகரசன் பீரோவை திறக்க முயன்றான். பூட்டியிருந்தது.
பாட்டி அடித்துப் பேசினாள் ‘பீரோ பூட்டியிருக்கு.. அதுக்குள்ள போக வாய்ப்பே இல்ல.. சாவிலாம் குடுக்க முடியாது’
மதன் ஸாரின் இடையீட்டுக்குப் பின் சாவியைக் கொடுத்தாள். பிரோவைத் திறந்த போதும் தட்டுப்படவில்லை. மீண்டும் அழகரசன் பீரோவைத் தட்டினான். பாட்டியின் புடவை மெல்ல எழுந்தது. தன் அம்மாவை இருக்கச் சொல்லிவிட்டு புடவைக்குள் இருந்து லாவகமாகப் பிடித்தான். அழகு அதன் தலையை ஒரு கையில் பிடித்து வாலை மறு கையில் பிடித்திருந்தான். அறையின் வாசலை நோக்கி அவன் வந்த போது, நின்றிருந்த அத்தனை பேரும் தெரித்து ஓடினர். இரண்டு வீடு தள்ளியிருக்கும் வி ஏ ஓ ஸார் கைலி இடறி விழுந்தார். அழகரசன் பாம்பை வாசலுக்குக் கொண்டு வந்தான். அதற்குள் பாம்பை என்ன செய்வது என விவாதம் கிளம்பியது.
பாட்டி உறுதியாகச் சொன்னாள் ‘கொன்னு பாலூத்தி பொதைக்கனும்’ என்று.
அழகரசன் போன வருட ஸயன்ஸ் புத்தகத்தில் இருந்து நியாபகப்படுத்தி ‘பாப்புலேஷன் டிக்ரீஸிங்க ஸ்டேடஸ்ல இருக்கு ஸார்… ஃபாரெஸ்ட் டிப்பார்ட்மென்ட்ல குடுக்கலாம்’ என்றான்.
‘டேய் ஒளர்ராம் பாரு… அக்கம் பக்கத்து ஜனங்களை நோக்கி ‘எப்டியாவது கொன்னு பொதச்சிருங்க.. இல்லன்னா வந்துட்டே இருக்கும்’ என்றாள் பாட்டி.
மதன் ஸார் ‘அதெல்லாம் வேண்டாம்… அழகு சொல்றதுதான் சரி.. பாம்பை ஃபாரஸ்ட் டிப்பார்ட்மென்ட்ல குடுத்துறலாம்’
வி ஏ ஓ ஸார் ‘என்ன மதன் ஸார் அறிவு கெட்டத்தனமா பேசிக்கிட்டு… கொல்றதுதான் சரி’ என்றார்.
‘அழகு யாராச்சும் உன் கிட்ட வந்தா அவங்க மேலயே பாம்ப விடு பாத்துக்கலாம்’ என்றார் மதன்.
தெருவே இரு அணியாகத் திரண்டது. மதன் ஸாருடன் அழகு நின்றிருந்தான். விஷயம் விபரீதமாபவதை உணர்ந்த சிபி தன் நண்பர்களை அழைத்து வந்தான் மதன் ஸாருக்கு துணை நிற்க. மதன் ஸார் பாம்பை சாக்குப் பைக்குள் போட வேண்டாம் என்றார். சாக்குக்குள் போட்டால் அதை பறிக்க முயலலாம் தெருவாசிகள். அழகுவை கவனம் குறையாமல் பத்திரமாக கையில் வைத்திருக்கும்படியும் அருகில் யாரேனும் வந்தால் மேலே வீசிவிடு எனும் எச்சரிக்கும் தொனியிலும் சொன்னார்.
இந்தக் களேபரத்தில் வாசலில் நாயொன்று இறந்து கிடப்பதை யாரும் பார்க்கவில்லை. ‘பாம்புதான் நாயக் கடிச்சிருச்சு… இன்னும் யாரையெல்லாம் கடிக்கப்போவுதோ… படிச்ச வாத்தியாரும் இப்டி பண்றாரே’ என விதம் விதமாக புலம்பினார்களே ஒழிய ஒரு பயல் பக்கம் வரமுடியவில்லை. அழகு நெப்போலியன் போல் ஒரு படி மேல் கால் வைத்து கையில் பாம்புடன் நின்றிருந்தான்.
இன்னும் கண் கூசச் செய்யும் மாலை வெளிச்சம் இருக்கும் போது அழகுவின் அப்பா முனிசிபள் தட்டு ரிக்ஷாவை மிதித்தபடி வந்தார். நாயை எடுத்து தட்டு ரிக்ஷாவில் போட்டார். தெருவே அவரிடம் பாம்பைக் கொன்றுவிடும்படி ஆணையிட்டது.
‘கோபு ஸார்.. நீங்க பாம்ப கொன்னுராதீங்க, இவங்க சொல்றத கேட்டுட்டு.. செல்லியம்மன் மலை கிட்ட ஃபாரஸ்ட் ஆஃபீஸ் இருக்கு அங்க போய் குடுத்துறுங்க’ என்றார் மதன் ஸார். அழகரசனின் அப்பா கோபு உடனே ஒப்புக்கொண்டார். ‘படிச்ச தம்பி நீங்க சொல்றீங்க.. கேக்காம பின்ன’.
தட்டுரிக்ஷாவில் அழகரசன் உட்கார்ந்துகொண்டான். சிபியும் நண்பர் குழுவும் ஆளுயரக் கழிகளை கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு ரிக்ஷாவின் பின்னால் செல்லத் தயாரானது. பாட்டி அம்மாவிடம் சொன்னாள் ‘முதல்ல வீட்ட பூரா சுத்தம் செய்யனும்… தண்ணி போட்டு தொடைக்கனும்… எப்டி வெச்சிருந்த வீடு, இன்னக்கி தெருவே உள்ள வந்திருச்சு’ என்றாள்.
மதன் ஸாருக்கு பிள்ளைகள் கையில் கழியுடன் திரண்டிருப்பதைப் பார்த்து நகைத்தபடி எங்கடா கிளம்பிட்டீங்க என்றார்.
சிபி ‘பாஸ்டில் ப்ரிஸனுக்கு’ என்றான்.
மதன் ஸார் சப்தமாய் கைத்தட்டிச் சிரித்தார். தட்டு ரிக்ஷா நகரவும், படை லிபர்ட்டி ஈக்வாலிட்டி ஃப்ரட்டர்னிட்டி என்றபடி ரிக்ஷாவின் பின் சென்றது. அழகரசன் ரிக்ஷாவில் நின்றபடி பாம்பை உயர்த்திப்பிடித்து கோஷமிட்டான்.
