Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

கனியக்கா

  நோய்வாய்ப்பட்ட நோக்கியா பட்டன் போனில் விட்டுவிட்டுக் கேட்ட குரலை யாருடையதென்று விளங்க முடியாமல் வீட்டைவிட்டு வீதிக்குப்போயி, “இப்பும் சொல்லுங்க. எங்கருந்து பேசுறீய?” என்றாள் அம்மா.

   ” இந்திராக்கா… நா தடியங்கொளத்துல இருந்து கனி பேசுறேன்.”

   “ஏ கனி எப்படி  இருக்க. புள்ளையளு சோமா இருக்கா! கேரளாவுலருந்து எப்பும் ஊருக்கு வார?”

     ” யக்கா நா ஊருலருந்துதான் பேசுறேன்.”

    ” என்ன திடிரென வந்துருக்க. எதும் விசேசமா! செம்புலிக்கி இப்பும் ஒடம்பு பரவாயில்லையா?”

    ” யக்கா! அண்ண…”

             “………..”

  “ கனி…! என்னடி ஆச்சி அவனுக்கு?”

   “ யக்கா, அண்ணன் எறந்துப் போயிட்டாங்கா.”

    “யம்மாடி எப்பும் எறந்தான்? ஒரு பயயுள்ளயளும் எனக்குத் தகவல் சொல்லலயே…”

    “நேத்து சாந்தரம் ஐகிரவுண்டுக்கு 

கூட்டிட்டுப்போகும்போது நாங்குநேரித் தாண்டி தாழைகுளம் போற வழியிலயே உசுருப் போயிடுச்சுன்னு ஒரு ஏழுமணிவாக்குல எனக்குப் போன் போட்டாங்க. நான் நைட்டோட நைட்டா கெளம்பி இன்னைக்கு காலையிலயே வந்துட்டேன்.”

    “ ஏட்டி நல்லாருப்பிய நானும் ஒங்க அண்ணனும் வர்றதுக்குள்ள பிரேதத்தத் தூக்கிராதீங்க.”

    “சரிக்கா.” என்று கனியக்கா தொடர்பினைத் துண்டித்ததும், அம்மா துண்டித்த பல்லி வாலினைப்போல் துடிதுடித்து ஓடி வந்து, “ ஏல செந்திலு தடியங்குளத்து செம்புலிங்கண்ண ஏறந்துட்டானாம். சீக்கிரம் போயி ஒங்க அப்பாவக் கூட்டிட்டு வால.” – அழுதுகொண்டே அடித்தொண்டையில் கத்தினாள். அப்போது  அம்மாவிற்கு முகம் வியர்த்து வெடவெடத்திருந்தது. 

       எங்க அம்மாப் பொறந்த ஊருதான் தடியங்குளம். எங்க ஆச்சி வீட்டுக்குப் பின்னாடிதான் கனியக்கா வீடு. ஆச்சி இறந்தப்பிறகு அந்த ஊருக்கும் எங்களுக்கும் இருந்த போக்குவரத்து மிக மிக குறைவாகிப்போனது. எதாவது நல்லது கெட்டதுன்னா மட்டும் சொல்லி அனுப்புவாங்க. அதுக்கு அம்மாவும் அப்பாவும் போயிட்டு வருவாங்க. நான் படிச்சிமுடிச்சி சென்னையில ஒரு கம்பெனியில  வேலைக்கிச்சேந்து, அங்கயே லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதால எங்க ஊருக்கே நான் ரெண்டு வருசத்துக்கு ஒருமுறை நடக்கும் ஊய்க்காட்டாங் கோயில் கொடைக்கி மட்டுந்தான் ஊருக்குப்போவேன். எங்க ஆச்சி ஊருக்கெல்லாம் போயி கிட்டத்தட்ட பத்துப் பதினஞ்சி  வருசமிருக்கும். அதுக்குப்பொறவு இப்பந்தான் அந்த ஊருக்குப்போறேன். 

      ஊரே மாறிப்போச்சி! ஒடமரக் காடெல்லாம் வீடாகிப்போச்சி! வீட்டுக்கு வீடு முத்தத்துல ஒரு நல்லி. தெருப்பூராம் நல்ல வீதியா சிமெண்ட் ரோடு; அப்பும் ஒரே ஒரு ஓட்டலாட்டு பஸுதான் 7ம் நம்பர் போடு போட்டுக்கிட்டு நாங்குநேரிலிருந்து அம்பலம் வழியா தடியங்குளம் வந்து ஆள ஏத்திக்கிட்டு, திரும்பி அம்பலம் போயி மூலைக்கரப்பட்டிப் போவும். அந்த பஸுலப் போறதுக்குள்ள செத்தான் மனுசன். குலுக்குறக் குலுக்குல வாயி வழியா கொடலே வந்துரும். ஆனா, இப்பும் தார்ரோடு சும்மா தகதகண்ணு மின்னுது.வண்டியெல்லாம் காத்தாப் பறக்குது. 

      எங்க ஊரு குளத்துக்கு மேக்க ஒரு மாட்டுவண்டித் தடம் கிடந்தது. அந்த தடம்தான் ஆச்சி ஊருக்குப் போறதுக்கு ரொம்ப சாட்கட்டு.  ஒரு ரெண்டறக் கிலோ மீட்டர் இருக்கும். இப்பும் அந்தக் காட்டயெல்லாம் யு.பிகாரன் வாங்கி வேலிப் போட்டுட்டான். மாடுகீடு உள்ளப்போச்சு மாட்டுக்காரன் கெதி அவ்வளவுதான். அடியும் வாங்கணும்; அபராதமும் கட்டணும்! ஆடுகீடு உள்ளப்போச்சு அறுத்து சாப்பிட்டுறுவானுவ. பணத்துக்கு ஆசைப்பட்டு காட்ட வித்தவங்களால  இப்பும் ஆடுமாடு வச்சி பொழைக்கிறவன், மேய்க்க இடமில்லாமல் அவஸ்திப் படுறான்.

    அப்பலாம் நாங்க சின்னப்புள்ளையா இருக்கும்போது அந்தக் குளத்து வழியாத்தான் எங்கள ஆச்சி கூட்டிட்டுப் போவா. எனக்கு சூடம் முட்டாயும், அவனுக்கு ஆரஞ்சு முட்டாயும் வாங்கிக் கொடுப்பா. அவன் ஆரஞ்சு முட்டாய வாயில ஒதுக்கிட்டு கைய ரெண்டையும்  காத்துல நீட்டிக்கிட்டு, ‘டப டப’ன்னு புல்லட் சத்தம் குடுத்துக்கிட்டு எங்களுக்கு முன்னால வேகமா ஓடிப் போவான். நான் சூடம் முட்டாய சுத்திக்கிட்டு ஆச்சி ஏதாவது ஒரு கதை சொல்லுவா. அதுக்கு ‘உங்’ கொட்டிக்கிட்டு பின்னாலயேப் போவேன். கொஞ்சந் தள்ளிப் போயிட்டு புல்லட்ட சைடு ஸ்டாண்டு போட்டுட்டு ஒன்னுக்குப் போயிக்கிட்டே, “ என்ன ஆச்சி நடக்க முடியலையா? வந்து நம்ம வண்டியில ஏறு. அஞ்சே நிமுசத்துல கொண்டு வீட்டுல விட்டுருதேன்” என்பான். அதுக்கு ஆச்சி, “ ஓன் வண்டியில வந்தா ஊருக்குப் போவ முடியாது. சுருவாட்டுக்குத்தான் போணும்” என்பாள். பதிலுக்கு அவன், “ எப்படியும் நடந்து சாவத்தான் போற. அதுக்கு ஏன் வண்டியில வந்து சாவ வேண்டியதுதான” என்றதும் ஆச்சிக்கு சிரிப்பாணி தாங்க முடியாது. “பாத்தீயால ஓன் தம்பிய… இத்துனோன்டு கெடந்துக்கிட்டு என்னாப் பேச்சு பேசுறான்”னு எங்கிட்ட சொல்வாள். 

   “ யாச்சியோ! இந்தப் பேச்செல்லாம் மணிமுத்தாறு கால்வாய் வரைக்கும்தான். அப்பறம் புல்லட்டும் ஓடாது. ஒரு புண்ணாக்கும் ஓடாது. ஐயா, தானா ஒங்கிட்ட வருவாரு பாரேன். ”  கால்வாய் வந்ததும் நானும் அவனும் கப்சிப்ன்னு வாய மூடிக்கிட்டு ஆச்சி கையப் புடிச்சிட்டுத்தான் நடப்போம். ஏன்னா, அந்தக் கால்வாய் பாலத்துக்கும்  மேக்கக் கரைய ஒட்டுனாப்புல நிக்கும் ஒத்தப் பனைக்கும் ஒரு முனிப் பாய்ச்சல் உண்டாம்! வெள்ளிச் செவ்வா ஆயுச்சுனா அந்த முனி முடிய விரிச்சிப் போட்டுக்கிட்டு  ஒரு பனை உயரத்துக்கு ஜல்லு ஜல்லுன்னு சலங்கையக் கட்டிக்கிட்டு நடந்துப் போமாம்! கால்வாய்க்கு அடுத்து கெப்பனக்காரிக் கிணறு. முப்பது வருசத்துக்கு முன்னாடி அந்தக் கெணத்துல நிறைமாத சூலியொருத்தி புருசங்கூட வந்த சண்டையில, கருக்கலானதும் காட்டுக்குப்போயிட்டு வாறேன்னு மாமியாக்காரிட்ட சொல்லிட்டு.  கெணத்துல விழுந்து  செத்துட்டாளாம்!  அம்மாவாசைக்கி அம்மாவாச அந்தக் கெணத்துலருந்து கொழந்த அழுற சத்தம் கேக்குமாம்! அந்தக் கெணத்தத் தாண்டி கொஞ்சம் தூரம் போனா. ஒரு கிழட்டு ஆலமரம். அந்தக் கிழட்டு ஆலமரத்துல சாதிவிட்டு  சாதி காதலிச்ச  அக்கா ஒருத்திய, குடும்பத்துக்காரனுவளே அடிச்சிக் கொன்னுட்டு… நாண்டுக்கிட்டு செத்துட்டான்னு ஊர நம்ப வைக்க அந்த மரத்த்துல கட்டித் தொங்க விட்டுட்டாங்களாம்! இன்னயவரைக்கும் அவ யாரையும் பிடிச்சதும் கிடையாது. பயமுறுத்தியதும் கிடையாது. ஆனா, ஊரடங்குனப் பிறகு ஒப்பாரிச்  சத்தம் மட்டும் கேக்குமாம்! இந்தக் கதைய ஒருதடவத்தான் எங்க ஆச்சி சொன்னா.  ஆனா, நாங்க ஆச்சி ஊருக்குப் போவும்போதெல்லாம் ஒவ்வொரு தடவையும் நினைச்சுக்கிட்டுத்தான் போவோம்; கால்வாய் வந்ததுமே கதி கலங்கிப்போவோம்! 

      கொஞ்சம் பெரியப் பயலுவளா ஆனபிறகு நாங்களே எங்கப்பா சைக்கிளை எடுத்துக்கிட்டு பொழுதடையறதுக்குள்ள ஆச்சி ஊருக்குப்போயி சேர்ந்திடுவோம். ஒருநாள் அப்படித்தான் வெள்ளிக்கிழமை. எங்க ஆச்சி ஊர்ல எசக்கியம்மங் சாமிக்கு கிடாவெட்டிப் பூசை. காலையில எந்தீரிச்சதுலருந்து சாயங்காலம் பள்ளிக்கூடம் போயிட்டு வர்ற வரைக்கும் கறிச்சோத்தை நினைச்சி நினைச்சி நாக்குல ஊருன எச்சிலொழுகி நீலச்சட்ட ஈரச்சட்டயா ஆகிடுச்சு!  நானும் என் தம்பி நாதனும் பள்ளிக்கூடம் விட்டதும் புத்தகப்பையத் தூக்கி முக்குலப் போட்டுட்டு, ஆச்சி ஊருக்குப்போவ  சைக்கிளயெடுத்தோம். எப்போதும் மீனுமாதிரி துள்ளுற சைக்கிளு. அன்னைக்கிப்பாத்து  கருவாடுமாதிரி ஓட மாட்டேங்கு; உருள மாட்டேங்கு. என்னாச்சுன்னுப் பாத்தா! பின்வீலு பஞ்சர். வந்தக் கோவத்துக்கு சைக்கிள ஆளுக்கொரு மிதி மிதிச்சோம். சைக்கிள அங்கனையேப் போட்டுட்டு அடுத்து என்ன பண்லாமுன்னு யோசிச்சோம்! அம்மக்கிட்ட நடந்துப்போறோமுன்னு சொன்னா, “ரெண்டுபேத்துக் காலையும் இப்பும் வெறவு வெட்டுறக் கட்டையில வச்சி துண்டுத் துண்டா தறிச்சிப்புடுவன் தறிச்சி படுக்காளிப் பயலுவளா…!” என பயங்கரமாய்  திட்டுவாளென்று பள்ளிக்கூடத்துச் சட்டையோடு நானும் தம்பியும் அம்மாக்கிட்ட சொல்லாமல் நடக்கத் துவங்கினோம். ஊரு குளத்தாங்கரையத் தாண்டி மாட்டுவண்டித் தடத்துல நடக்க ஆரம்பித்ததும், மேய்ச்சல் முடிந்து துள்ளாட்டம் போட்டு வீட்டுக்குத் திரும்பும் ஆடுமாடுகளைப்போல் பாதையில் துள்ளிக் குதித்து ஓடி, எங்க ஆச்சி ஊர் மணிமுத்தாறு கால்வாயிலிருந்து பாசனத்திற்காக எங்க ஊர் குளத்திற்குத் தண்ணீர் வரும் ஓடையில் கைநிறைய அள்ளி வயிறு நிறைய தண்ணீர் குடித்து தாகம் தீர்த்தோம். தாகம் தீர்க்கும்போது சிறு மீன்கள் பெரும் படையாய் ஓடும் தண்ணீரை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. அதில் சில மீன்கள், ‘யாருடா நீங்க? எங்கப் பாதையில ஏண்டா குறுக்க நிக்கீங்க!’ என்று நறுக்கென்று ஆளுக்கு நான்கு கடிகள் போட்டன. கடித்த மீன்களை அடித்தே தீருவேன் என அதன் பின்னால் அலைந்தவனை, ‘ஏல இப்பும் நீ வாரியா. இல்ல ஒன்ன உட்டுட்டுப் போட்டுமால’ என்றதும். பயந்தடித்து கரையேறினான். என் கால்தடத்தில் தாவித்தாவி அவன் கால்களை வைத்து விளையாடியபடி என்னைப் பின்தொடர்ந்தான்.

      ஒரு பத்தெட்டுதான் வச்சிருப்பான். அதுக்குள்ள, ‘அண்ணே! ஒன்னுக்கு வருது. கொஞ்சம் நில்லு’ என்றான். 

    “ சரி! சீக்கிரம் போயிட்டு வா. நேரமாவுது ” என்றேன்.

     அவன் பாதை மணலில் பல நாள் முயற்சிக்குப் பிறகு ‘சண்முகநாதன்’ என்ற தனது பெயரினை மூத்திரத்தால் முழுதாய் எழுதிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, “என்னோவ்! இங்க வந்துப்பாரேன். ஐயா தெறமைய” என்றான். 

   சில எழுத்துக்கள் காரச்சேவுக்காரரிடம் போடும் பழைய ஈயப்பாத்திரங்கள் போல நெளிந்தும் சில எழுத்துக்கள் புயலில் பாதி சரிந்த மரங்கள் போல சரிந்தும் கிடந்தன. கடைசி எழுத்தான ‘ன்’னில் மட்டும் ஒரு சொட்டு விடுவதற்குப் பதிலாக மூன்று சொட்டு மூத்திரம் விட்டிருந்தான். “என்னல ‘ன்’னுக்கு ஒரு புள்ளித்தான வைக்கணும். நீ மூணுப்புள்ளி வச்சிருக்க. அப்படி வச்சா அது ‘அக்கு’ல மக்கு” ன்னு பொடதியில ஒண்ணு வச்சேன். அவனுக்குப் பின்னந்தலையில் அடித்தால் கோவம் பயங்கரமாக வந்துடும். 

    “ஆமா! இவரு பெரிய தமிழ் டீச்சர் செல்லத்தாயி. திருத்த வந்துட்டாரு திருத்த. போயம்மல கருவண்டா” என்று எனது பட்டப்பபெயரைச் சொன்னதும், எனக்கு கெட்டக் கோவம் வந்தது. அவன் ஆசையாய் எழுதியப் பெயரை அப்பளம்போல் கால்களால் நொறுக்கினேன்.

  “ இன்னைக்கு நீ செத்தல” என்று நொறுங்கிய மூத்திர எழுத்துக்களில் ஒருகுத்து அள்ளி என் முகத்திலெறிய வந்தான். நான் அவனிடமிருந்து தப்பிக்க விண்ணில் பாயும் ஏவுகணையாய்  மண்ணில் வேகமேடுத்தேன். 

அவன் குட்டியைத் தூக்க வந்தவனை குரைத்துக்கொண்டு கடிப்பதற்கு ஓடும் நாயைப்போல் என்னைத் துரத்தி வந்தான். எங்களின் காலடிச் சத்தம் கேட்டு கதிகலங்கிப்போய் பாதையோர இலந்தைச் செடியில் பம்மிருந்த கருவாலிகள் படபடவென பட்டாசு வெடித்ததுபோல் சிறகடித்தோடின. நாங்கள் அதன் சிறகடிப்புச் சத்தத்தில் பயந்து அந்த இடத்திலேயே சிலையாய் நின்றுவிட்டோம்.

     “ச்சீ! இந்தக் கருவாலியளு நம்மள பயங்காட்டிப்புட்ட”யென்று ஓடுவதை நானும் துரத்துவதை அவனும் மறந்து பெருமூச்சு விட்டு நிமிர்கையில்… கோயில் கொடைக்கு ஆலமரத்திலும் வேப்பமரத்திலும் தொங்கும் சீரியல் பல்புகளைப்போல் கருவாலிகள் பறந்த இலந்தைச் செடியில் காயும் பழமும் கொத்துக் கொத்தாக தொங்கிக் கொண்டியிருந்தது. இருவரும் ஓடிப்போயி எனக்குப் பிடித்த செங்காயையும் அவனுக்குப் பிடித்த பழுத்தப் பழங்களையும் பறித்து வாயையும் பையையும் நிறைத்துக்கொண்டு மீண்டும் நடந்தோம். 

        மாவுப்போன்று இருந்த  செங்காய்களை நான் தின்றுவிட்டு கொட்டைகளைப் பாதையின் இருபுறமும் துப்பியபடி முன்னால் போயிக்கொண்டிருந்தேன். அவன் கொட்டையைக்கூட விடாமல் கடாப்பல்லால் ‘கடக் மொடக்’கென்று கடித்துக் கூழாக்கி, ஆடுகளைப்போல் அசைப்போட்டுக்கொண்டு பின்னால் வந்தான். வழியில் வட்டமாய் சுருண்டுப் படுத்திருந்த பாம்பைக் கண்டு, “ ஏல தம்பி! பாம்புல” என்றதும் எட்டூருக்கு எட்டிப்போயி நின்று, ” எங்க? ” என்றான்.

    நான் அதனருகில் சென்று குனிந்து கூர்ந்து பார்த்தேன். அது மெல்ல அசைந்து என்னை தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தது. “ஏல பயந்தாங்கொள்ளி பக்கோடா! பயப்படாத சூவப்பாம்புதான்.” என்று சொன்னப்பிறகே அருகில் வந்தான்.

“நான் என்னவோ நல்லப்பாம்புன்னு நெனச்சிட்டேன்ல.” என்று தம்பி பாதையில் கிடந்த சிறிய கம்பினைக் கையிலெடுத்தான். 

  “ லேய் அடிச்சிராத, சூவப்பாம்பு ஒண்ணும் செய்யாது. பாவம்ல அது!”

    “அடிக்கிறதுக்கு கம்ப எடுக்கலப்பா. வழியில இப்படிக் கெடந்தா. வண்டியில கிண்டியில அடிப்பட்டு வம்பா செத்துப் போயிரும்லா. அதான் தூக்கி ஓரமா விட்டுருலாம்னு எடுத்துட்டு வந்தேன்.” 

“சூப்பர்ல தம்பி!” என்று தம்பி முதுகில் தட்டிக் கொடுத்தேன். தம்பி கம்பினால் குச்சியைக் கெம்புவதுபோல் அவன் வைத்திருந்த கம்பை வைத்து பாம்பினை ஒரு கெம்பு கெம்பினான். சூவப்பாம்பு சுழன்றுப்போய் சிறிது தூரத்திலிருந்த ஆவாரம் செடியின் மேல் விழுந்தது. விழுந்த மறுநொடி அதிலிருந்து விருட்டென்று ஒரு தாய் முயலும் மூன்று குட்டி முயல்களும் தலைத்தெறிக்க தாவிக்குதித்து ஓடின. தாய் முயலுடன் சென்ற இரண்டு முயல்குட்டிகள் யு.பிகாரன் வாழைத்தோப்புக்குள் புகுந்து தலைமறைவாகின. ஒற்றை முயல்குட்டி மட்டும் தாயின் பாதையிலிருந்து திசைமாறி நானும் தம்பியும் செல்லும் பாதையின் முன் குதித்தோடியும் குத்தவைத்தும் சென்றுகொண்டிருந்தது. 

  “ என்னோவ், முன்னாலப்பாரு…! ” என்று முயல்குட்டியைக் காட்டினான்.

     “ ஆமால. நம்மக்கிட்ட மொசக்குட்டி வசமா மாட்டிக்கிட்டு. நீ அந்தப்பக்கமா வா. நான் இந்தப்பக்கமா வாரேன்.” என்று நானும் தம்பியும் அரவம் காட்டாமல் பதுங்கி பையபைய முயல்குட்டியை நெருங்கினோம். காய்ந்த சருகுகளில் நான் கால் வைத்த சத்தம் கேட்டதும் மானைப் பிடிக்க பாயும் சிறுத்தையைப்போல் பாய்ந்தோடி அருகேயிருந்த எருக்கஞ் செடிக்குள் பதுங்கிக் கொண்டது. நான் செடியின் கிளைகளை அசைத்தேன். தம்பி ‘ச்சூ, ஸ்..ஸ், எஏ’ என கத்திக்கொண்டு கை நிறைய மண்ணையள்ளி செடியின் அடியில் வீசினான். எங்களின் தொந்தரவு தாங்காமல் பின்னங்கால்களால்  மண்ணை உதைத்து முன்னங்கால்களை தரையில் வலுவாய் ஊன்றி  துள்ளிக் குதித்து சரள்மேட்டில் நின்றிருந்த கள்ளிச்செடிக்குள் புகுந்து கொண்டது. அங்கிருந்து படர்ந்த பிரண்டைச்செடி, அடர்ந்த அரளிச்செடி, குவியலாயிருந்த கொளுஞ்சிச்செடி, குடைபோல் தரைவரை விரிந்திருந்த கருவேலமர மூடு, என்ன செடியென்று எண்ணமுடியாத செடிகொடிகள் நிறைந்த புதர்களிலெல்லாம் புகுந்து எங்களை ஏமாற்றிய முயல்குட்டி கடைசியில் சோற்றுக்கற்றாழை மூட்டில் சோர்ந்துபோய் ஒளிந்து கொண்டது.

     கற்றாழை மூட்டின் நடுப்பகுதியில் நடுங்கியபடி இருந்த முயல்குட்டியை தம்பி தன் கழுகு கண்களால் பார்த்து, குதிகால் தரையில் படாதவாறு பைய நடந்து அதன் பின்பக்கமாய் போய் ஒரே அமுக்கு. 

       பிடிபட்ட முயல்குட்டியை அவன் காதைப்பிடித்து தூக்கும்போது அது ‘கீர்கீர்’ என ஒலியெழுப்பி தன் கால்களால் காற்றை உதைத்து, அவன் கைகளில் சில கீறல்கள் போட்டது. இருவரும் குத்தவைத்து கொஞ்சநேரம் அதை, ‘ஒன்ன வெட்டித் தின்னலாம் மாட்டோம். வளக்கத்தான் போறோம். சும்மா வாளு வாளுன்னு கத்தாம, செத்தநேரம் அமைதியா இரு ! வீட்டுக்குப் போயிட்டு ஒனக்கு கேரட்டு முட்டைக்கோசுலாம் தாரோம் சரியா ! ‘ என்று தடவிக்கொடுத்தோம். முயல்குட்டி சத்தம் குறைத்து சாந்தமானது.

   முயல்குட்டியைத் தூக்கிக்கொண்டு எழுகையில்… “என்னோவ்!! கொஞ்சம் பின்னாடிப் பாரு…! “ என்றான் தம்பி. “பின்னாடி என்ன பேயால இருக்கு? இப்படி திருதிருன்னு முழிக்கிற !” என்றேன். “மொதல்ல திரும்பிப்பாருல கருவண்டு நாயே!” என்று கோபமாக கத்தினான். “எதுக்கு இப்படிக் கத்துறான்னு” திரும்பிப் பார்த்தால் முனிப்பாய்ச்சல் கொண்ட ஒற்றை பனைமரம் எங்களுக்கு முன் நின்றுகொண்டிருந்தது. அதன் உச்சியில்  தொங்கிக்கொண்டிருந்த பனையோலைகள் முனி தலைவிரிக் கோலமாய் நிற்பதுபோலிருந்தது. காற்றிலசைந்த காய்ந்த ஓலைகளின் சத்தம் எங்களுக்கு ‘ஜல் ஜல்’லெனக் கேட்டது. இருவருக்கும் கையும் காலும் உதறலெடுத்தது. இதயம் ‘பட் பட்’டென்று பயத்தில் அடித்த அடியில் மேல்சட்டைப் பையிலிருந்த இலைந்தைப்பழங்கள் எகிறி மண்ணில் விழுந்தன.

         மேற்கிலிருந்த பெரிய இலைந்தைப்பழத்தினை யாரோ பறித்திருந்தனர். அடிவானம் பனம்பழத்தின் அடிப்பகுதியைப்போல் சிவந்தும், பொழுது மேல்பகுதியைப்போல் கருக்கவும் தொடங்கியிருந்தது. முயல்குட்டியைப் பிடிக்கும் ஆர்வத்தில் பொழுதுபோனதே  தெரியவில்லை. இனியும் ஒருநொடி இங்கிருந்தால் இறப்பு நிச்சயமென்று தெரிந்தது. ஆதலால் அவனது நொட்டாங்கையை எனது சோத்தாங்கையால்  பிடித்துக்கொண்டேன். அவன்  சோத்தாங்கையில் முயல்குட்டியை வைத்து வயித்தோடு அணைத்துக்கொண்டு இருவரும் ‘ஒன் டூ த்ரி’ சொல்லி ஓட்டம் பிடித்தோம். கால்வாய் கடந்து கெப்பனக்காரிக் கிணற்றைத் தாண்டும்போது கிணற்றிலிருந்து புறாக்கள் சடசடவென சிறகடித்துப் பறந்தன. இதயம் படபடவென அடித்தது. தம்பி பயத்தில் ‘ஆ’வென அலறினான். “புறாதான் பயப்படாதல” என்று நெஞ்சை தடவிக்கொடுத்தேன். அவன் மூச்சு வாங்கியபடி முன்னால் பார்த்து அழத்தொடங்கினான். 

      ஆம்! மீண்டுமொரு பேயாய் மிரட்டியது எங்கள் முன்னால் நின்ற கிழட்டு ஆலமரம். அதன் கிளையில் கட்டித் தொங்கவிட்டிருந்த நஞ்சுக்கொடி சாக்கு மூட்டைகள் வெட்டியத் தலைகள் போலவும்; யாரோ கொளுத்திவிட்ட நெருப்பு பிணமெரிவது போலவும்; பறவைகளின் கூச்சல்கள் போர்க்களத்தில் எழும் பேரிரைச்சலைப்போலவும்; கிளையில் பழுத்துக் கிடந்த பழங்கள் தூக்கில் தொங்கியவளின் சிவந்த கண்களைப்போலவும் பயமூட்டியது! தம்பியின் கையிலிருந்த முயல்குட்டியும் அந்த மரத்தினை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.  அந்த மரத்தினை ஒட்டினாற்போல் செல்லும் பாதையைத்தவிர, ஊருக்குச் செல்ல வேறு பாதையும் கிடையாது. ஆலமரத்தினைப் பார்த்துக்கொண்டே கடப்பதற்கு எங்களிடம் தைரியமும் கிடையாது. இன்னும் தாமதித்தால் இருட்டிவிடுமென்று கண்களை இறுக மூடிக்கொண்டு கடந்துவிடலாமென முடிவுசெய்து இருவரும் கைகளை சிக்கென்று பிடித்துக்கொண்டு ஓடத் துவங்கினோம். 

     நாய்கள் எங்கிருந்தோ இழுத்து வந்து பாதையில் போட்டிருந்த மாட்டு முட்டெழும்பில் கால்கள் மோதி என் முட்டி தரையிலடித்து நான் கவிழ்ந்தபடி விழுந்தேன். தம்பி குட்டிக் கர்ணமடித்து எனக்கு முன்னால் போய் விழுந்தான். முயல்குட்டி எங்கு விழுந்தது. எந்தப் பக்கம் போனதென்று தெரியவில்லை. இருவரும் கண்களைத் திறந்து மெல்ல தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தோம். எங்களுக்கு முன்னால் தூக்குக் கயிற்றைப்போல் ஆலமர விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்தது. பாதி உயிர் அதைப் பார்த்தவுடனயே போய்விட்டது. மீதி உயிர் போகும்படி விழுதுகள் தொங்கும் கிளைக்கு மேலுள்ள கிளையில் வடக்குப்பார்த்து அமர்ந்திருந்த ஆந்தையொன்று தன்னுடலை துளிகூட அசைக்காமல் தலையை மட்டும் திருப்பி தென்புறமாக விழுந்த எங்களை முண்டக்கண்ணை விரித்து இமைத் தட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பார்வை எங்களின் தலையை முதுகுப் பக்கமாகத் திருகி கொண்டை முடிச்சினை முறித்துக் கொல்வதுபோலிருந்தது. 

    உயிர் போவதற்குள் ஊர்போய்விட வேண்டுமென்று கைகளை ஊன்றி எழ முடியாமல் எழுந்து நின்றோம். விழுந்த இடத்தில் சிதறி நசுங்கிய இலைந்தைப் பழத்தைப்போல் கால் கையெல்லாம் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. காயத்திற்கு எச்சிலையும்  மண்ணையும் மருந்தாய் போட்டுக்கொண்டோம்.

அச்சத்தில் எனக்கு அடிவயிறு கலக்கியது. அவனோ! சிறுநீர் கழித்து கால்சட்டையின் கால்பகுதியை நனைத்திருந்தான். ‘ஊருக்கு வர்ற வழியில எதையாவது கண்டு பயந்தீங்கன்னா, மேக்கமாக்க இருக்குற எசக்கியையும் வடக்கமாக்க இருக்குற முத்தாரம்மன்னையும் கையெடுத்து கும்புட்டுட்டு, மூணுத்திருப்பு த்தூ த்தூன்னு நல்ல காறித் துப்பிட்டு, யாருட்டக் காட்ற ஓன் வேலைய? சில்லாட்டயப் பிச்சிப்புடுவென் பிச்சின்னு சொல்லிட்டு, பின்னாடித் திரும்பிப் பாக்காம ஒங்கப் பாட்டுக்கு நடந்து வந்துருங்க. ஒரு பேயும் ஒங்கக்கிட்ட அண்டாது.’ என்று ஆச்சிச் சொன்னது  ஞாபகம் வந்தது. அதுபோலவே நாங்களும் செய்துவிட்டு, அங்கப் பிடித்த ஓட்டத்தை ஆச்சி வீட்டில்தான் நிறுத்தினோம்.

     ஆச்சி குண்டுபல்பு வெளிச்சத்தில் துண்டு விரித்து வாரியலுக்காக தென்னை ஓலையில் ஈக்கு கிழித்துக்கொண்டிருந்தாள். நாங்கள் ஓடி வந்து மூச்சிரைப்பதைப் பார்த்து, “ ஏ… எம்மாடி ரெண்டுபேரும் எந்த நேரத்துல வந்துருக்காணுவப்பாரு. ஏல, ஒங்கக்கிட்ட எத்தன நாளு சொல்லிருக்கேன் கருக்கல்ல வரக்கூடாது “ என்று ஆச்சி காளியைப்போல் நாக்கைத் துருத்தி கைப்பிடியளவு ஈக்குச்சிகளை எடுத்து உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் ரெண்டுபேரையும் வாங்கு வாங்குன்னு குச்சிகள் பிய்யுமளவிற்கு அடி பிச்சியெடுத்தாள். 

    “பள்ளிக்கூடம் நாலு நாலரைக்கி வுட்டாலும் அஞ்சரைக்கி வூடு வந்து சேந்துருக்கலாம். இவ்வளவு நேரம் என்னலப் பண்ணுனய?” என்றாள். 

      நான் அழுகையை நிறுத்திவிட்டு, “இவந்தான் ஆச்சி மொசக்குட்டியப் பிடிக்கப்போயி நேரத்தக் கடத்திட்டான்” என்றேன்.

     “ஆச்சி! கருவண்டன் பொய் சொல்றான். ரெண்டுபேரும் சேந்துதான் புடிச்சோ”மென்றான் தம்பி. 

      “ சின்னபய சொன்னாம்ன்னா! மாடுமாதிரி வளந்துருக்குற ஒனக்கு எங்கலப்போச்சி புத்தி?” என்று நடு மண்டையில் நங்கு நங்குன்னு நாலு குட்டு வைத்தாள்.

      நான் அடிவாங்குவதை ஓரக்கண்ணால் பார்த்து உள்ளுக்குள் சிரித்தான் தம்பி.

    “பெரியவனே! இனும என்னைக்காவது அவஞ் சொன்னான் இவஞ் சொன்னான்னு பொய் சொன்ன வையி. கம்பிய நல்ல காயவச்சி நாக்குல சூடு வச்சிடுவேன் பாத்துக்கோ!” என்று திட்டிவிட்டு எங்கள் இருவரையும் வெந்நீரில் குளிப்பாட்டி, வேறு உடை அணிவித்து, வேட்டித் துணியில் திரிசெய்து, அளவாய் எண்ணெய் ஊற்றி விளக்கினைப் பற்ற வைத்தாள். நாங்கள் ஆச்சியின் கால்களில் விழுந்து வணங்கி கண்மூடியபடி நிமிர்ந்து நின்றோம். ஆச்சி விளக்காங்குழியிலிருந்த காலியான சூடம் டப்பாவில் கொட்டி வைத்த திருநீறையெடுத்து, ” அம்மா முத்தாரம்மா, தாயே.. எசக்கி நீங்கதான் எம்புள்ளையளுவ காத்துக்கருப்பேதும் அண்டாம காப்பாத்தித் தரணும்.” என்று ஆச்சியும் கண்களை மூடி வணங்கிவிட்டு நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டாள். 

      “ஏல, ரெண்டுபேரும் வுட்டவுட்டு எங்கயும் போவக்கூடாது! நா கடக்கிப் போயிட்டு அப்பளம் வாங்கிட்டு வந்து பருப்புக் கடஞ்சி பொரிச்சித் தாரேன். அடுப்புல ஒல வச்சிருக்கேன். கொஞ்சம் பாத்துக்கோங்க.” என்று ஆச்சி கடைக்குப் போனதும் நாங்கள் கனியக்கா வீட்டை நோக்கி ஓடினோம்.

    ஆச்சியிடம் அடியும் உதையும் வாங்கினாலும், ஆச்சியின் ஊரும் பாதையும் எங்களை பயங்கரமாய் பயமூட்டினாலும் வாராவாரம் வெள்ளிக் கிழமையானதும் எங்கள் ஆச்சி ஊருக்குப் போவதற்கு ஒரே காரணம் கனியக்கா மட்டுமே. கனியக்கா ஆச்சியைவிட அன்பானவள். ஆகாசத்தைவிட எங்கள்மீது அளவற்ற பாசமும் நேசமும் கொண்டவள். அக்காவிற்கு பூர்வீகம் கேரளா. அக்காவின் முழுப்பெயர் மாங்கனி. பெயருக்கு ஏற்றார்போல் செந்தூரப்பழ நிறம். கூந்தல் அவிழ்த்து விட்டால் ஐந்தருவியாய் அடிவரைக் கிடக்கும். அள்ளி முடித்தால் களக்காடு மலைக் குன்றுபோலிருக்கும். காலையில் குளித்து முடித்து தோட்டத்தில் நிற்கும் குண்டுமல்லி செடியில் ரெண்டு இணுக்குப் பறித்து வைத்து கோலம் போடுவாள். குண்டுமல்லி செடியில் இருந்ததைவிட அக்கா தலைமுடியிலிருக்கும்போது அவ்வளவு அழகாய் இருக்கும். அவள் நிறத்திற்கு நகைநட்டெலாம் எடுப்பாவே இருக்காது. கழுத்தில் கருநிற பாசிமணிதான் எப்போதும் போட்டிருப்பாள். நெற்றியில் சின்னதாய் சிவப்புக்கலரில் வட்ட வடிவப் பொட்டும், பொட்டிற்கு கீழ் மோதிரவிரலால் சந்தனத்தைத் தொட்டு முல்லைப்பூ அளவில் ஒரு கோடு வரைந்திருப்பாள். ஒயர்கூடை நிறைய பீடிக்கட்டுகள் வைத்திருந்தாலும், பீடிக்கடைக்குச் செல்லும்போதெல்லாம் தெருவெங்கும் மல்லிப்பூ வாசம் நிரப்பிச் செல்வாள். மூலைக்கரைப்பட்டி பீடிக்கடைக்குப் போயிட்டு வரும்போது தீன் புரோட்டா ஸ்டால்லருந்து புரோட்டா மட்டன் சால்னாவும், தெக்குப் பஜாரிலிருக்கும் செட்டியார் கடையிலிருந்து முட்டக்கோஸும் வாங்கிட்டு வருவாள். அந்தக் கடையிரண்டும் ருசிக்கு ரொம்ப பெயர்ப் பெற்றதென்றாலும், அக்காக் கையால ஊட்டும்போது அவ்வளவு ருசியாகயிருக்கும். 

     இப்பதான் எல்லார் வீட்டிலும் சண்டே சண்டே கறி எடுக்குறாங்க. அக்கா வீட்டுல  அப்புமே வெள்ளிச் செவ்வாத் தவிர மத்தநாளெல்லாம் கறி தான். அதுவும்  ஞாயித்துக்கெழம ஆச்சுன்னா பன்னிக்கறி இல்லாம இருக்காது. ஏன்னா, ஞாயித்துக்கெழமதோறும் கனியக்கா அப்பா பன்னியறுத்து வீட்டு முத்தத்துல ஓலைப்பாய் விரிச்சி, ஒவ்வொரு கிலோவா தராசுல நெறுத்து கூறுவச்சி வியாபாரம் பண்ணுவாரு. வீட்டுக்கு ரெண்டுக்கூறு எடுத்து மொதல்லயே கொடுத்துருவாரு. சில நாள் வியாபாரம் சரியில்லாமல் கறி மீந்துப்போச்சுன்னா. ஓவ்வொரு கூறையும் பனையோலைப் பட்டையில் போட்டு பொதிஞ்சி ஓலைப்பெட்டியில் அள்ளிப்போட்டு, சைக்கிள் பின்னாடி  வச்சுக் கட்டிக்கிட்டு பக்கத்தூரு… எங்கூருக்கெல்லாம் விக்க வருவாரு. அவர் குரலும் மலையாள வாடை கலந்த அழகான தமிழும் வாங்க விருப்பமில்லாதவர்களையும் வாங்க வச்சுரும். அவர் வியாபாரம் செய்வதே ஒரு தனி ஸ்டைல்தான். பன்னிக்கறின்னு சொல்ல மாட்டாரு. “ஐயா வாங்க, அம்மா வாங்க அல்வாத்துண்ட வாங்கிப்போங்க! காட்டுப்பக்கம் போகாதது. கண்டதத் திங்காதது. சூட்டுக்கும் மூலத்துக்கும் சூப்பரான மருந்து” என வாயில் வெற்றிலையைக் கொதப்பியபடி கூவிக்கொண்டே வருவார்.

    அக்கா சமையலில் ஒரப்பு எப்பவும் தூக்கலாக இருக்கும். ஆனால், வயித்துக்கு எந்தப் பாதிப்புமிருக்காது. ஞாயித்துக்கெழம எட்டு எட்டரைக்கெல்லாம் கறிக்குழம்பையும் சோத்தையும் ரெடி பண்ணிட்டு அக்கா குளிக்கப் போயிருவாள். அவ வர்றதுக்குள்ள அடுப்புல மண்சட்டியில் கெடக்குற பன்னிக்கறி வாசம் ஆள இழுக்குற சுழல்மாதிரி அப்படி இழுக்கும். குளிச்சிட்டு வந்து கொட்டார சம்பா அரிசியில் பொங்கினச் சோத்த தட்டுலப் போட்டு, அதுக்குமேல தனி வாருக்கறியாய் எடுத்துப்போடுவாள். சும்மா இருட்டுக்கடை அல்வாமாதிரி தொண்டையில் வழுக்கிக்கிட்டு இறங்கும். திங்கத் திங்க கொண்டா கொண்டாங்கும்! 

      அக்கா கறியை அள்ளி வச்சிக்கிட்டே இருப்பாள். போதும் போதுமென்று நாங்கள் சட்டையைத் தூக்கி, “ இங்கப்பாரு வயிறு பேத்தக்குட்டிமாதிரி வீங்கிப்போச்சி. இன்னும் ஒரு பருக்க உள்ளப்போச்சுன்னா! வயிறு வெடிச்சே செத்துருவோம்” என்போம். அக்கா வயித்த அமுக்கிப் பாத்துட்டு, “இந்தப்பக்கம் கொஞ்சம் எடம் கெடக்குப்பாரு”ன்னு… கடைசியா ஒரே ஒரு கரண்டிச்சோறு வைக்கிறேன் என்பாள். “அம்மாடி ஆள விடு”ன்னு அவள் மடியிலயே சாஞ்சிருவோம். தட்டினில் கைக்கழுவ வைத்து தாவணியால் வாய் துடைத்துவிடுவாள்.

     சிப்பிப்பாறை வேட்டை நாய் ரெண்டு; செல்லம் கொஞ்ச சடை நாய் ஒண்ணு; ஒழவுக்கு ரெண்டு ஒட்டாங்காளை; பாலுக்கு ஒரு பசுமாடு; வெள்ளச்சின்னு ஒரு பெண்பூனை; வேலியாடு பத்து; வளர்ப்புப் புறா நாற்பது; வேப்ப மரத்தடியில் வகை வகையாய் சேவலும் பெட்டையும்; உடைமர மூட்டில் ‘உரி உரி’ன்னு சத்தம் போடும் பன்னிக்கூட்டமென கனியக்கா வீடே சரணாலயம் மாதிரி இருக்கும். வெள்ளச்சியின்  குட்டிகளையெடுத்து எங்கள் கைகளில் தருவாள். அது டென்னிஸ் பந்துபோல் அங்குமிங்கும் உருளும். கோழிக் குஞ்சுகளையும் புறாக் குஞ்சுகளையும் தொடுகையில் பட்ரோஸ் பூக்கள் மாதிரி மிருதுவாக இருக்கும். அக்காவின் வீடும் அக்காக்கூட இருப்பதும் எங்களுக்கு எல்லையில்லா சந்தோசத்தைத் தரும். ஆனால், அக்கா சந்தோசமாக ஒரு நாளும் இருந்ததே கிடையாது.

     செம்புலிங்கண்ணன் நம் நாட்டின் குடிமகன் மட்டுமல்ல, அந்த ஊரின் குடிமகனும் கூட. ஊரில் ஏதாவது எழவு விழுந்தால் சவத்துக்கு செய்ய வேண்டிய எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டு கண்கள் சிவந்து கால்கள் தள்ளாடியபடி வீடு வருவான். ஊரிலிருக்கும் அனைவருக்கும் முடித்திருத்தம் செய்பவனும் அவன்தான். சிறுவர்களுக்கு ஐந்து ரூபாய். பெரியவர்களுக்கு பத்து ரூபாய். கட்டிங் சேவிங் பதினைந்து ரூபாய். சில வசதிப் படைத்தவர்கள் வருடத்திற்கு ஒருமூட்டை நெல் அல்லது தானியங்கள் வழங்குவார்கள். பெரியவர்களுக்கு தலைமயிரை வெட்டிவிட்டு மூக்கு மயிரை வெட்டிவிடுவான். சிலருக்கு மூக்கிலிருந்து சளியொழுகும்; சிலருக்கு மூக்குச்சளி பிசின்மாதிரி காய்ந்து போயிருக்கும். பார்க்கும் எங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும். அடுத்து கம்புக்கூட்டத் தூக்கி காண்பிப்பார்கள். அதிலுள்ள மயிரில் அடை அடையாய் அழுக்குப் பிடித்து மஞ்சப் பூத்துப் போயிருக்கும். அண்ணன் அதை எந்த அருவருப்புமின்றி மழித்து சுத்தம் செய்வான். எல்லா வேலையும் முடித்து திண்ணையில் அமர்ந்திருக்கும் அண்ணனிடம், “என்னோவ்! கம்புக்கூட்டத் தூக்குனதும் கக்கா வாட அடிக்கி, நீ அந்த அசிங்கத்தயெல்லாம் தொட்டு எப்படித்தான் வெட்டுறியோ? “ என்போம். அதற்கு அண்ணன் “ இந்த நாத்தம் புடிச்சவங்களுக்கு முடி வெட்டனும்னா, இந்த நாத்தம் புடிச்ச சாராயத்த ரெண்டு கிளாசு போட்டாத்தான் முடியும்ல”ன்னு எக்குல சொருவி வச்சிருந்த  பாட்டிலையெடுத்து மிச்சமிருக்கும்  சாராயத்தை சில்வர் கிளாசில் ஊற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கண்கள் ரெண்டையும் இறுக மூடி கடகடவென உள்ளிறக்கி, வெட்டுவதற்கு ஒன கொடுக்கும் கோயில்கிடாவைப்போல் தலையை ஒரு உலுப்பு உலுக்கிவிட்டு, “எல தம்பியளா! இந்தக் கருமம் புடிச்ச வேலலாம் என்னோடப் போட்டும். நீங்க ரெண்டுபேரும் நல்லப் படிச்சி போலீசு வேலைக்குப் போனும். சரியா!” என்பான். நாங்களும் ஆட்டுமென்று தலையாட்டுவோம். கோழிகளுக்கு முற்றத்தில் இரைபோட்டுக்கொண்டிருக்கும் கனியக்காவின் அம்மா” நீங்க போலீசானதும் மொதல்ல இந்தக் குடிகாரப்பயல உள்ளத் தூக்கிபோட்டு, முட்டிக்கி முட்டிக்கி நல்லச் சாத்துங்கல! “ என்பாள். எல்லோரும் சிரிப்போம். “ யென் தம்பியளுதான அடிச்சா அடிச்சிட்டுப் போறாணுவ” என அண்ணனும் நல்ல சிரித்து மெல்ல திண்ணையில் சரிந்துவிடுவான். 

      நாங்க மத்தத் தெருவுக்கு கோலிக்கா,குச்சிக்கம்பு,பம்பரம் விளையாடப்போனாலோ, இல்ல எங்க சேக்காளிகளைப் பார்க்கப் போனாலோ என்ன?,எதுக்கு?ன்னு ஆயிரத்தெட்டு கேள்விகளும் விசாரணைகளும் செய்வார்கள். அங்க நில்லு, இங்க நில்லு, வெளிய நில்லு அவன வரச் சொல்றேன் என்பார்கள். ஆனால், அவர்கள் தெரு வயதான ஆண்களும் வயசுப் பசங்களும்   செம்புலிங்கண்ணனை வேலைக்குக் கூப்பிடுவதுபோலவும்; நேரங்கெட்ட நேரத்திலெல்லாம் முடிவெட்ட வருவதுபோல் அக்காவைப் பார்க்க வருவார்கள். திண்ணையிலமர்ந்து திமிராக மீசையைத் திருகி அக்காவை நோட்டமிட்டுக்கொண்டே இருப்பார்கள்.  அக்கா பருந்தினைக் கண்டு பயந்து தாயின் றெக்கைக்குள் பதுங்கிக் கொள்ளும் கோழிக்குஞ்சுகளைப்போல் அவர்கள் இருக்கும்வரை வீட்டை விட்டு வெளிய வரவே மாட்டாள். 

எப்போதாவது செம்புலிங்கண்ணன் வெளியூருக்கோ அல்லது வயக்காட்டு வேலைக்கோ சென்றால் கனியக்காவின் தம்பி சுவாமிநாதனும் என் தம்பி சண்முகநாதனும் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வார்கள். நானும் அக்காவும் மாடுகளைப் பத்திக்கொண்டு போவோம். போகும்போது தின்பதற்கு பண்டாரநாடார் கடையில் தேங்காய் மிட்டாயும் இலந்தைப்பழ மிட்டாயும் வாங்கித் தருவாள். காளைகளை நீளக் கயிற்றால் பனைமூட்டில் கட்டி மேய்ச்சலுக்கு விடுவோம். பசுமாடு எங்கும் போகாதென்பதால் அப்படியே கயிற்றோடு விட்டு விடுவோம். பனைமர நிழலிலமர்ந்து தின்பண்டங்களை தின்பதற்குள் பக்கத்து மாட்டுக்காரன் ஒருவன் அக்காவைப் பார்வையால் தின்று செரித்திருப்பான். இன்னொருவன் முடையடித்தப் பெட்டை ஆடுகளை விரட்டிக்கொண்டு திரியும் கிடாவைப்போல் ‘ஊ.ஆ..ப…ப’என பனைமூட்டின் பின்னால் மறைந்திருந்து காமக்குரல் எழுப்புவான்.  அங்கொருவன் காட்டில் மறைவிடம் இருந்தாலும் கையில் பிடித்துக்கொண்டு அக்கா பார்க்கும்படி ஆட்டி ஆட்டி ஒன்னுக்கடிப்பான். அக்கா அவனை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு தலையைக் கவிழ்ந்து கொள்வாள்.    “ என்ன கனி தல குனிஞ்சி உக்காந்திருக்க? அங்கப்பாத்தீயா ஓன் பொண்ணத் தேடி எத்தனை மாப்ளயளு வந்திருக்காணுவப்பாரு! இன்னைக்கு ஓன் மாட்ட செனையாக்காம உடமாட்டானுவ” என்று அக்காவின் பசுமாட்டின் பக்கம் காளைமாடுகளைப் பத்திவிட்டு வம்பிழுப்பானொருவன். அக்காவைப்போல் பக்கத்துத் தெரு அக்காக்களும் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களையெல்லாம் கூப்பிடாமல் அக்காவைக் கூப்பிட்டு,” ஏ!தாயி இந்த கொழுப்பெடுத்த மாட்டக் கொஞ்சம் அந்த மூட்டுலக் கட்டிட்டுப் போயேன். இது பின்னாடி என்னால அலைய முடியல” என்பான் கிழவனொருவன். அக்காவும் வயசான ஆளென்று ஓடிப்போய் உதவிசெய்வாள். ஆனால், அந்தக் கிழவன் குனிந்து மாடு கட்டும் அக்காவைப் பார்த்து “மாட்டுக்கு மடி எத்தாப் பெருசாருக்கு” என்று அவன் வயதொத்த இன்னொரு கிழவனிடம் இரட்டை அர்த்தத்தில் சொல்லி சிரிப்பான். அக்காவும் அவளால் முடிந்தளவு அவர்களுக்குப் புரியும்படி 

சாடைமாடையாய் சொல்லாமல் நேரிடையாகவே நாக்கைப் புடுங்கி நாண்டுக்கிட்டு சாவுறமாதிரி எதிர்த்துக் கேள்விக் கேட்பாள். என்னதான் நீச்சலடிப்பதில் பெரிய வீரனாகயிருந்தாலும், கரையேறும் போதெல்லாம் ஏறவிடாமல் அவனை எட்டி மிதித்துக் கொண்டேயிருந்தால் எவ்வளவு நேரந்தான் அவனால் தண்ணிக்குள்ளத் தம்கட்ட முடியும். அதுபோலத்தான் அக்காவும் ஒரு கட்டத்திற்குமேல் ஆத்திரத்தையும் கோபத்தையும் அடக்க முடியாமல் கண்களில் நீர் பொங்க ” தம்பி, மாட்ட அவுறுல வீட்டுக்குப் போலாமெ”ன்பாள்.

      இத்தனை வருடங்கள் கழித்து அக்காவைப் பார்க்கும்போதும் மூலையில் சாத்தி வைத்திருக்கும் செம்புலிங்கண்ணன் கால்களைப் பிடித்துக்கொண்டு முட்டி முட்டி அழுதுகொண்டிருந்தாள். எங்க அம்மாவைப் பார்த்ததும், “யக்கா… அண்ணன் இப்படி என்ன ஒத்தயா வுட்டுட்டுப் போயிட்டானே…!” என்று கட்டியணைத்து அழத்தொடங்கி விட்டாள். கனியக்காவின் அம்மா அழுதழுது ஆவியற்றுப் போயி சுவற்றில் சாய்ந்தபடி உக்காந்திருந்தாள். எங்க அப்பா அழுது நான் பார்த்ததேதில்லை. அன்று அண்ணனைப் பார்த்துவிட்டு வேப்பமரத்தடியில் கீழே உக்காந்திருந்த அப்பாவின் கண்கள் சாராயம் குடிக்காமலேயே சிவப்பாகயிருந்தன. சரணாலயம் மாதிரி இருந்த வீட்டில் கதறல்களும், காட்டுக் கூப்பாடுகளும், ஒப்பாரிகளையும் கேக்க கேக்க எனக்கு கொல்லாம்பழம் தின்றதைப்போல் துக்கத்தில் தொண்டைக் காறுவதுபோலவும்; அடைப்பதுபோலவுமிருந்தது.

      சாய்ந்தரம் ஐந்து மணியளவில் செம்புலிங்கண்ணனை பாடைக்கட்டி, குளத்தாங்கரையில் கொண்டுபோய் புதைத்துவிட்டு வீடு வந்தோம். அக்கா வீட்டு வாசலில் வாளியில் வைத்திருந்த தண்ணீரில் கால் அலசிவிட்டு எரிந்துக் கொண்டிருந்த விளக்கினைத் தொட்டுக் கும்புட்டுட்டு திண்ணையில் வந்து எல்லாரும் அமர்ந்தோம். அக்கா காப்பிப் போட்டு எடுத்து வந்தாள். அப்போது என்னைக் காட்டி ” ஏட்டி இது யாருன்னு தெரியுதா?” என்றாள் எங்கம்மா. 

     குறுந்தாடியும் ஸ்பைக் வச்ச மண்டையும், கருவண்டு போலிருந்த நான் கொஞ்சம் மாநிறமாய் மாறியிருந்ததும் அக்காவால் என்னை அடையாளம் காண முடியவில்லை. “என்னட்டி! இப்படி திருதிருன்னு முழிக்கிற? காலச் சுத்துறப் பூனமாதிரி ஓன் பின்னாடியே திரிவானே, அவன ஒனக்குத் தெரியலயாக்கும்.” என்று அம்மா சொன்னதும் “ யக்கா!! என்ன சொல்லுற நம்ம செந்தியா? என்று கட்டியணைத்துக் கொண்டு, ”ஒல்லிக்குச்சான் மாதிரி இருந்தவன். இப்பும் ஒட்டாங்காள மாதிரி வளந்து, ஆளே மாறிட்டயல செந்தி!” என்று எப்போதும்போல் தலைகோதி நெற்றியில் முத்தமிட்டாள். செந்தில்வேல் என்று பெயர் வைத்த என் அம்மாக்கூட  செந்தில் என்றுதான் கூப்பிடுவாள். செந்திலையும் சுருக்கி ‘செந்தி’யென்று அக்கா மட்டுந்தான் செல்லமாய் அழைப்பாள்.

   “தம்பி செந்தி! நீ சின்னப்பயலா இருக்கும்போது ஒனக்கு முடி முள்ளெலி மாதிரி நட்டுக்கிட்டு இருக்கும். அதப்படிய வைக்க நான் பட்டப்பாடு ஒங்கம்மைக்கும் எனக்குந்தான் தெரியும். இப்பும் என்னன்னா நல்லாருக்குற முடிய முள்ளெலி மாதிரி வச்சிக்கிறதுதான் ஒங்களுக்கெல்லாம் ஸ்டெயிலாத் தெரியுது”என என் தலையைக் 

கோதிவிட்டபடி அம்மாவிடம் அக்கா சொன்னாள். 

      “ என்ன எழவெடுத்த ஸ்டெயிலோ, மண்ட சூப்பிப் போட்ட பனங்காமாதிரி இருக்கு!” – அம்மா சொன்னதும் அக்கா விழுந்து விழுந்து சிரித்தாள். அக்காவின் சிரிப்பு சில நிமிடங்கள்கூட நிலைக்கவில்லை. அதற்குள் சொந்தகாரர்களும் தெரிந்தவர்களும் துஷ்டிக் கேட்டு அக்காவை மீண்டும் அழ வைத்தனர். “யக்கோவ் போயிராத, சோறு பொங்குறேன். சாப்புட்டு நீயும் தம்பியும் காலையிலப் போங்க.”- அக்கா வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சொன்னாள். 

     மறுநாள் காலை நானும் அம்மாவும் குளித்து உடைமாற்றிவிட்டு ‘ஊருக்கு கெளம்புறோம்’ன்னு சொல்வதற்காக அக்கா வீட்டுக்குப் போனோம். அக்கா வீட்டு முத்தத்தில் தெருவே கூடி நின்றது. ஒரே கூச்சல் சத்தமாகயிருந்தது. எங்கம்மா ஓடிப்போயி கூட்டத்துக்குள் புகுந்து “ஏ…என்னாச்சு என்னாச்சு” என்றாள். 

அக்கா பொட்டிப் படுக்கையோடு எங்களுக்கு முன்னால் ஊருக்குப்போவத் தயாராக நின்று கொண்டிருந்தாள். 

       “ஏட்டி கனி, ஒனக்கு என்ன கோட்டிகீட்டி புடிச்சிப்போச்சா? காடாத்து கருமாதி ஒண்ணும் பண்ணாம நீ பாட்டுக்கு ஊருக்கு கெளம்புறன்னு ஒத்தக்காலுல நிக்குற. அதுவும் இந்தக் கெழவியக் கூட்டிக்கிட்டு” என்று அக்காவைப் பார்த்து சுசிலா அத்தை கோவமாகக் கத்தினாள். 

      “சுசிலாக்கா எனக்கு இந்த காடாத்து கருமாதிய விட எம்புள்ளைங்க படிப்புதான் முக்கியம். காட்டுவழியாத்தான் பள்ளிக்கூடத்துக்குப் போனும் வரணும். நாந்தான் கூட்டிட்டுப் போவேன்; கூட்டிட்டு வருவேன். அவுங்க ரெண்டுபேரும் நேரத்துக்கு  சாப்பிட்டானுவளா பள்ளிக்கூடத்துக்குப் போனங்களான்னு மனசுக் கெடந்து தவியா தவிக்கித்துக்கா. நான் இப்பம்  கெளம்புனாத்தான் ராத்திரி எஸ்டேட்டுக்குப் போய் சேரமுடியும். அப்பா போயிட்டாரு. அண்ணனும் போய் சேந்துட்டான். அம்மய யாரு பாப்பா! அதான் அவளையும் கூட்டிட்டுப் போறேன். தயவு செஞ்சி வழிய விடுங்க.” 

      “அதான்டி நாங்களும் சொல்றோம். அந்தக் காட்டுல, அதுவும் மிருகங்க நடமாட்டம் ஜாஸ்தியா உள்ள இடத்துல தெனம் பயந்து பயந்து வாழ்றதுக்குப் பதிலா இங்க வந்து நாலு சாதிசனத்தோடு சந்தோசமா இருக்கலாம்லா. நம்ம ஊரு பள்ளிக்கூடத்துலயே இப்பம் பன்னான்டாப்புவரைக்கும் சொல்லிக்குடுக்குறாவ. புள்ளையளையும் இங்கயே சேத்துட்டு நீயும் ஏதொரு வேலையப் பாத்துக்கிட்டு நிம்மதியா இருக்க வேண்டியதுதானே.” என்று எதிர்வீட்டு சித்திரை சொன்னாள்.

      “நீங்களாம்  தெரிஞ்சிப் பேசுறீயளா, இல்ல தெரியாம பேசுறீயளான்னு எனக்குத் தெரில. ஆறுமாசத்துக்கு முந்தி நம்ம ஊரு பள்ளிக்கூடத்துல  வேணின்னு ஒரு டீச்சர வேலையவிட்டுத் தூக்குனது எதுக்குன்னு யாருக்காவது தெரியுமா?!” 

     “கோயில் தெருவுலருந்து ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறப் பய ஒருத்தன் பள்ளிக்கூடத்துலயே வெளிக்கிப் போயிருக்கான். அத நம்ம புள்ளையளக் கூப்டு அள்ளிபோட சொல்லிருக்கா. அதான் அந்த வாத்திச்சிய தூக்குனாவ.

 ஏதோ ஒருத்தி தப்புப் பண்ணிட்டான்னு எல்லாத்தையும் குத்தம் சொல்ல முடியுமா?” 

    “இப்படி எல்லாத்தையும் சாதாரணமா எடுத்துக்கிட்டு, அவுங்க சொல்ற சாக்குபோக்குக்கு மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு சமாதானமாப் போறதாலதான் இன்னையவரைக்கும் நம்மள கீழப்போட்டு நல்ல ஏறி நொட்டுறானுவ! தப்புப் பண்ணுன ‘அந்த ஒருத்தி’ பைத்தியக்காரியோ, படிக்காத கூமுட்டையாவோ இருந்தா கழுத விடுன்னு போயிரலாம். ஆனா, சாதியில்லன்னு புள்ளையளுக்குப் படிச்சிக் குடுக்குற பட்டம் படிச்ச ஒரு டீச்சருக்கே இவ்வளவு சாதிவெறி இருக்குன்னா!! படிக்காத காட்டுமிராண்டிக்கிட்ட எவ்வளவு இருக்கும். இவங்கலாம் என்னைக்கி மாறுறது!! நாமலாம் என்னைக்கி நிம்மதியா வாழுறது!! அம்பதுபேரு படிக்கிற பள்ளிக்கூடத்துல, அஞ்சுப் புள்ளையளு மட்டும் கூட்டிப் பெருக்கணும், கொடத்தத் தூக்கிட்டுப்போயி தண்ணியெடுக்கணும், மோண்டாத் தொடைக்கணும், பேண்டா அள்ளணுமுன்னு ஒரு டீச்சர் சொன்னா! மீதியிருக்கிற நாப்பத்தஞ்சிப் புள்ளையளும் நம்ம அஞ்சிப் புள்ளையள அடிமையா நெனைக்காது; அதிகாரத்தக் காட்டாது; அவுங்க மேல தன்னோட ஆதிக்கத்தச் செலுத்தாது. அவுங்கள அடிச்சித் துன்புறுத்தாது! “ அக்கா கேட்டக்  கேள்வியில் அனைவரும் கழுவில் குத்தியக் கோழியாய் தலையைக் கீழேப் போட்டுக்கொண்டனர்.

    “ ஊருல அது வந்துடுச்சி, இது வந்துடுச்சி. எல்லாம் அப்படியே தலைகீழா மாறிடுச்சின்னு தையோ தக்கான்னு குதிச்சியள எல்லாரும்… இப்பம் என்ன ஒருத்தர்கிட்டயும் ஒரு அணக்கமும்  காணும்! நானும் ஊர்ல கொஞ்சமாவது மனுசங்க மாறியிருப்பாங்கன்னு தான் நெனச்சேன். ஆனா, நான் நேத்து பஸ்சுல வரும்போது யாருன்னு தெரியாத வரைக்கும் ஒரசிக்கிட்டு உக்காந்திருந்தா. ஆள் இன்னாருன்னு தெரிஞ்சதும், லேசா கையிப்பட்டதுக்கு என்னமோ… பீயத் தொட்டதுமாறி அவளுக்கு மூஞ்சுமோர அப்படி கோணிக்கிட்டுப் போவுது.  பஸ்சவிட்டு ஏறங்கியதும் நா பாக்க பொறந்தப் பயளுவலாம்  பஸ்டாண்டுல உக்காந்துக்கிட்டு, 

‘ இன்னா போறாளா.. இவதான் சுப்ரமணியன் மவ கனிங்கிறானுவ.’ எப்படி வலிக்குது தெரியுமாக்கா மனசு!”

       “ என்னத்தச் சொல்ல. எல்லாம் நம்ம தலைவிதி. பாவிப்பய கடவுளு நம்மள இப்படி படைச்சிட்டானே!” என்றாள் அம்மா.

     “ இப்படி தலைவிதின்னு எல்லாத்தையும் நம்புறதாலதான். நம்ம இன்னும் தலை குனிஞ்சியே வாழ்ந்துட்டு இருக்கோம். அதிகார ருசி கண்ட அவனுவ ஒருநாளும் மாற மாட்டானுவ. ஒரு நிமுசங்கூட அந்த போதையிலிருந்து தெளிய மாட்டானுவ. ஆனா, நம்ம மாறியே ஆகணும். அப்புந்தான் நம்மப் புள்ளையளாவது தலநிமுந்து நடக்கும்.”

      “ இந்திராக்கா எங்க அம்மப்பேரு என்ன? ”

     “ ராசாத்தி ”

    “ஆனா, ஊர்ல ஒருத்தனாவது ராசாத்தி ஊடுன்னு சொல்லிருக்கானா?! சிறுசுலருந்து பெருசுவரைக்கும்; ஆணுலருந்து பொண்ணுவரைக்கும் ‘நாசுவத்தி ஊடு’ன்னுதான சொல்றாங்க. சொல்லட்டும் சொல்லட்டும்…! இன்னைக்கி நாசுவத்தியா ஊரவிட்டுப் போற நான். எம்புள்ளயள நல்ல படிக்கவச்சி, ஒரு நல்ல நெலமைக்கி அவுங்கள ஆளாக்கி ‘ராசாத்தி’யாத்தான் திரும்ப நம்ம ஊருக்கு வருவங்கா” என்று  அழுத அக்காவை கண்ணீர் துடைத்து தேற்றினாள் அம்மா. அக்கா அம்மாவை இறுக அணைத்துக் கொண்டாள். ‘ஏ கனி, நீ நெனச்சது கண்டிப்பா நடக்கும். நீயொன்னும் கவலபடாத.’ அம்மாவும் தெருச்சனமும் அக்காவை வாழ்த்தி வழியனுப்பினார்கள். அக்கா கட்டப்பையை கையில் தூக்கினாள். 

     “குடுக்கா நான் வச்சிக்குறேன்.” என்றேன் நான். 

    “ஏல செந்தி, இதுல வெயிட்டா ஒன்னுமில்ல. அஞ்சாறு துணிமணியளுதான் இருக்கு.” 

   “பரவால்ல. நானே தூக்கிட்டு வாறேன்.”

     “சரி, தூக்கிட்டு வா.” என்று என் தோளில் கைபோட்டபடி எல்லோரையும் பார்த்து கையசைத்துவிட்டு பேருந்து நிலையம் நோக்கி நானும் கனியக்காவும் நடந்தோம். 

    “ யம்மாடியளா! நேரங் கெடைக்கியும்போது வீட்டக் கொஞ்சம் எட்டிப் பாத்துக்கோங்க.” என்று அக்காவின் அம்மா சுருக்குப் பையை இடுப்பில் இறுக சொருகிக்கொண்டு  வீட்டைத் திரும்பித் திரும்பி பார்த்தபடி எங்கள் பின்னால் வந்தாள். 

     ஏழாம் நம்பர் பஸ். எருமைமாடுபோல் கத்திக்கொண்டே காட்டு சுடலைமாடன் கோயில் தாண்டி ஊருக்குள் வந்துகொண்டிருந்தது.

Exit mobile version