மூலம் : நிகிதா கில்
தமிழாக்கம் : ஆர். ரமணன்
குழந்தைப் பருவத்தில் இருக்கும் என் தந்தையை
இன்னொரு உலகில் சந்தித்தேன்.
அங்கிருந்த தோட்டத்தில் பந்து விளையாடிக் களித்தோம்.
விளையாட்டின் இடையில் அவர் கூறினார்
‘ இங்கு எனக்கு அழுவதற்கு அனுமதியில்லை.
மற்றவர்கள் காயப்படுத்தும்போது
வலியை எப்படி பொறுப்பது என்று தெரியவில்லை ‘
ஆகவே அவர் சாய்ந்து அழ
என் தோள் தந்தேன்.
குலுங்கி குலுங்கி அழுதார்.
கண்ணீர் வற்றும் வரை அழுதார்.
ஒரு ஐஸ் கிரீம் வாங்கி தந்தேன்.
மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தார்.
தான் இருக்க பத்திரமான இடம் கண்ட குழந்தையின் மலர்ச்சி.
அவருக்கு இது போல்
யாரும் கிடைத்திருக்க கூடாதா?
அது ஒரு மாறுதலை ஏற்படுத்தியிருக்குமா?
அது ஒரு மாறுதலை ஏற்படுத்தியிருக்குமா?
எளிதாய் சிரிக்கும் வடிவு எங்கே?
குழந்தைப் பருவத்தில் இருந்த
என் அன்னையை இன்னொரு உலகில் சந்தித்தேன்.
கை கோர்த்து கடற்கரையில் நடந்தோம்.
உலகில் அவள் நேசித்த
அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் பேசினாள்.
ஆயிரம் அங்கதங்கள்
பரிமாறிக் கொண்டோம்.
எந்த கவலையும் இல்லாமல்
எளிதாய் சிரித்தாள்.
கண்கள் விரிந்த கவலையற்ற
மனமெங்கும் மகிழ்ச்சி நிறைந்த
எளிதாய் சிரிக்கும் அந்த வடிவை காண விரும்பினேன்.
அவள் ஆழமாய் நேசித்த உலகு
அவள் இதயத்தை நொறுக்கு முன் இருந்த
அந்த வடிவை காண விரும்பினேன்.
நிகிதா கில் ஒரு ஐரிஷ்-இந்திய கவிஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் விளக்கப்பட கலைஞர் ஆவார். எட்டு கவிதைத் தொகுதிகளை எழுதித் தொகுத்துள்ளார்.
