Site icon சொல்வனம் | இதழ் 318 | 12 மே 2024

அபிராமியும், அண்டங்களும்

‘துணையே. எனது உயிர் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் மணியே’ என்று பாரதியாரின் விநாயக நான்மணி மாலை உருகுகிறது.

‘லலிதா சகஸ்ர நாமம் ‘லீலா க்லுப்த ப்ரும்மாண்ட மண்டலா’ என துதிக்கிறது. விளையாட்டுப் போலே அண்டங்களை உருவாக்கி, காத்து, மறைத்து அன்னை அருள்கிறாள். அதனால்தான், சுப்ரமண்ய ஐயர் என்ற அபிராமி பட்டருக்கு அவள், அண்ட சுழற்சியைக் கைக் கொண்டு அமாவாசை அன்று முழு நிலவைக் கொண்டு வந்தாள் போலும். உலகம் சுழன்றுகொண்டுதானிருக்கிறது, நாம் அதை உணர்வதில்லை என்பதை நினைவில் கொண்டால், அன்னை நிலவைக் காட்டியதைப் புரிந்து கொள்ளலாம்.

சூர்யனைச் சுற்றி வரும் நம் புவியின் வட்டப்பாதை மாறிக் கொண்டு வருகிறது; அது பெரிய அளவில் வருடம் தோறும் மாறுவதில்லை. சந்திரன், மற்றும் சில கிரகங்களின் ஈர்ப்பு இழுவைகளால், புவியின் சுற்று வட்டப் பாதை பாதிக்கப்பட்டு அதில் மாறுதல்கள் உண்டாகின்றன. இதனால், நம் பூமி காலநிலை/ பருவ நிலை மாற்றங்களுக்கு உட்படுகிறது. பூமியின் அச்சு சிறிது சாயும், அதன் சுழற்சி பாதை மாறும், மெலான்கோவிட்ச் கால நிலை சுழற்சிக்குக்(MilankOvitch Climate Cycles)  காரணமாகும். பூமியின் அச்சு 230.5 என்ற அளவில், (சூரியனைக் கணக்கில் கொண்டு) சாய்வதால், அதன் சுற்றுவட்டப் பாதை, கோடையில் சூரியனின் கதிர்கள் அதிகமாகப் படும் வகையிலும், குளிர் காலங்களில் பூமியில் அதே சூரியனின் கதிர்கள் குறைவாகப் படும் வகையிலும் இயற்கையில் அமைந்துள்ளது. சாய்மானம் குறைவாக இருந்தால், பருவ காலங்கள் அதீதமாக இருக்காது. சாய்மானம் பெரியதெனில், பருவங்கள் அதீதமாக இருக்கும். ஏனெனில், பூமி ஒரு சரியான வட்ட வடிவத்தில் சுற்றுவதில்லை; அது நீள்வட்டத்தில் சுற்றுகிறது. மற்ற அண்டப்பொருட்களின் ஈர்ப்பு விசை, பூமியில் ஏற்படுத்தும் தாக்கத்தால், அதன் வட்டப் பாதைச் சுற்று சிறிது சிறிதாக மாற்றத்திற்கு உள்ளாகிறது. அது வேகமாக ஏற்படுவதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நாம் புவியின் பல்வேறு பகுதிகளில் நிகழும் வெப்ப, குளிர் மாறுதல்களை அறிய வேண்டுமென்றால், பூமிச்சுற்று பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்பதை அறிய வேண்டும்.

ந்யூட்டனின் இயங்கியல் மற்றும் ஈர்ப்பு விசை விதிகள், முன் பின் காலங்களைக் கணக்கிட உதவுகின்றன. ஆம், வரம்பிற்கு உட்பட்டு, மிக மிகத் தொல் காலத்தில் பூமி எப்படிச் சுற்றியது என்பதை அறிய இந்த விதிகள் பயனாகின்றன.

இரு பொருட்களுக்கான சுற்றுப் பயணத் தீர்வுகள் இருக்கின்றன. ஆனால், இரண்டிற்கும் மேற்பட்டவை? இங்கேதான் கணக்கீடுதல்கள் உதவுகின்றன. ஆயினும், மிகப் பழைய நிகழ்வுகள் தரும் தகவல்களைக் கொண்டு, மிகப் பெரும் சூர்யகுடும்பத்தின் ஈர்ப்புத் தாக்குதல், அதனால் புவியின் சுற்றுப் பாதையில் ஏற்படும் சாய்வுக் கோண அச்சு மாற்றம், இவற்றைக் குழப்பங்கள் இல்லாமலும், துல்லியமாகவும் சொல்வது கடினம். நம்மிடம் இப்போது மின் காந்த இலைக் கருவி (Radar)  தரும் செய்திகளும், மற்றைய அளவீடுகளும், 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் சுற்று வட்டப் பாதை எவ்வாறு இருந்தது என்பதை நம்பகத்துடன் கணிக்க அதிர்ஷ்டவசமாக உதவுகின்றன. விந்தை என்னவென்றால், இது சரியான வழிமுறை என்றே நினைத்தோம். கடந்து செல்லும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அண்மை அறிவியல் கட்டுரை சொல்கிறது. 54 மில்லியன் வருடங்களுக்கு முன்னான பூமியின் சுற்றை கீழ்க் காணும் படம் காட்டுகிறது. மிகத் தொலைவில் இருக்கும் விண்மீன்கள் இந்த பூமியின் சுற்று வட்டப் பாதையில் தாக்குதல் ஏற்படுத்தும் என்பது ஊர்ட் மேகங்களின் (Oort Clouds) பாறைகள் புவியின் மீது மோதும் என்பதைப் போன்றதுதான். அவையென்ன ஊர்ட் மேகங்கள்? நம்து சூரியக் குடும்பத்தைச் சுற்றி இருக்கும் மாபெரும் கோள வலை தானது. மலை போன்ற பெரும் வடிவம் கொண்ட விண் குப்பைகளின் குளிர் பொருட்கள் பில்லியன் கணக்கில் அதில் உள்ளன.

இப்போது நம் கட்டுரைக்குத் திரும்புவோம். தொலைதூர நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை நம் புவியின் சுற்றுப் பாதையில் மாற்றம் தராது என்றாலும், எதிர்பாராத, தொல்லை தரும் விருந்தினர், நம் வீட்டிற்கு வந்து, நம் குடும்பத்தில் சில குழப்பங்களை ஏற்படுத்திவிட்டு சென்று விடுவதைப் போல, சில நட்சத்திரங்கள், ‘எப்படி இருக்கிறாய், புவியே?’ என்று கேட்பது போல், முழங்கையால் இடித்துவிட்டுப் போய்விடும். பயப்பட வேண்டாம், பாதிப்பு இருக்காது, பூமி சிறிது சுழற்சியை மாற்றிக் கொள்ளும். அப்படி சமீபத்தில் வந்தது HD 7977. தற்போது அது நம்மிடமிருந்து, 250 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கிறது. ஆனால், 2.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், அது 30,000 AU (Astro Unit) என்ற அதி நெருக்கத்தில் வந்திருக்கிறது. இந்த 30,000, கிட்டத்தட்ட சூரிய ஒளி ஆண்டில் பாதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இந்த முக்கிய நிகழ்வுகளை நம் கணக்கீட்டில் கொண்டு வந்து கால/பருவ மாறுதல்களை அறிய முற்படுகையில், நம்மால் 50  மில்லியன் ஆண்டுகள் வரையிலான பூமிச் சுற்றை சற்று நம்பகமாக அறிய முடியும். இதை அறிவது, புவி எதிர் கொள்ள நேரிடும் வருங்கால கால நிலைகளை கணக்கிட முக்கியமான ஒன்று.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், பாலியோசீன்-இயொசீன்- (Paleocene- Eocene Thermal) காலத்தில் பூமியின் வெப்பம் மிகவும் அதிகரித்தது. பாலியோசீன் பருவத்தில், முன்னர் இருந்த பல விலங்குகள், டைனோசர் உட்பட அழிந்தன. பாலூட்டிகள் பல்கின. இயோசீனில், வெப்பம் குறைந்து, பனிக்கட்டிகள் நிறைந்து, அன்டார்டிகாவில் பனிப்படலம் பேரளவில் இடம் பிடித்தது. இந்த அதிக வெப்பம், மற்றும் அதிகப்பனி காலத்தில், பூமியின் சுற்று வட்டப் பாதை விசித்திரமாக இருந்தது என்று முந்தைய மாதிரிகள் தெரிவித்தன. இப்போது வெளியாகியுள்ள அறிவியல் ஆய்வு, இந்தக் கருத்தை கேள்விக்குரியதாக்கி, வேறு பல புவியியல் காரணங்களும் இருக்கக்கூடும் என்று தெளிவாக்கியுள்ளது.

ஏறத்தாழ 20 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை, 10,000 AUவிற்கு உட்பட்டு ஒரு விண்மீண் சூரியனைக் கடக்கிறது என்கிறார்கள். மண்ணுலக நட்சத்திரங்களைப் பார்ப்பது போல, நாம் விண்ணுலக மீன்களையும் பார்க்க வேண்டும்.

கார்ல் சகன் என்ற புகழ் பெற்ற இயற்பியலாள்ர் சொன்னர்: நாம் விண்மீன்களால் அமைந்தவர்கள். நம் முன்னோர்கள் இதை எளிமையாக ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது’ என்று சொல்லி விட்டர்கள். பெரு வெடிப்பிற்கும் முன்னரே அண்டம் இருந்தது என்ற கோட்பாடும் இப்போது வலு பெற்று வருகிறது. ஹைட்ரஜன் முதலில், அண்ட உலை, ப்ரோடான்கள், ந்யூட்ரான் கள், அணுக்கதிர் இணைவு, ஹீலியம், கார்பன், என்று தொடர்ந்து இரும்பு முதலானவை நட்சத்திரங்களின் கொடை. அவைகளின் வாழ்விறுதியில் சூபர் நோவா, வெள்ளைக் குள்ளர்கள், கேல்சியம், அயோடின், தங்கம், ப்ளாடினம், விண்மீன்களின் எச்சத்திலிருந்து பூமியின் பிறப்பு, வெளியின் ஆழத்தில் உண்டான தண்ணீர் மூலக்கூறுகள் என்று அவை கொடுத்தவை அனேகம். நம் உடலில் தோரயமாக 65% உயிர்வாயு, கார்பன் 18.5% மற்றும் இரும்பு, நைட்ரஜன். கால்சியம் பாஸ்பரஸ், பொடாசியம், சல்ஃபர் எல்லாம் விண்மீன் தந்தவைகள் என்று அறிவியல் (அண்டவியல்) சொல்கிறது.

தமிழ் நாட்டில் கும்பகோணத்தில்  சார்ங்கபாணி ஆலயம் உள்ளது. தை முதல் ஆனி வரை ஆறு மாதங்களுக்கு உத்ராயண வாயில் வழியே செல்ல வேண்டும்; ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாயில் வழியே உள்ளே செல்ல வேண்டும். இதன் அர்த்தம் நம் முன்னோர்கள் சூர்யனின் விண்வெளி இயக்கத்திற்கும், பூமியின் அச்சு சுழன்று அதன் வட்டப்பாதையில் எவ்விதம் செலுத்தும் என்றும் அறிந்திருந்திருக்கிறார்கள் என்பதே. எங்கே தொலைத்தோம் இந்த அறிவியல் ஆற்றல்களை?

“விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான்வெளி என நின்றனை

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

மண்டலத்தை அணு அணுவாக்கினால் வருவது எத்தனை அத்தனை யோஜனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை

கோலமே நினைக் காளி என்று ஏத்துவேன்”- பாரதி

uthra

Reference: Kaib, Nathan A. and Raymond, Sean N. “Passing Stars as an Important Driver of Paleoclimate and the Solar System’s Orbital Evolution.” Astrophysical Journal Letters 962 (2024): L28.

Exit mobile version