
சாத்தூர் செல்லும் பஸ் வர இன்னும் அரை மணி இருந்தது. இந்த மத்தியான வெயிலில் கிளம்பி இருக்க வேண்டாமோ என்று தோன்றியது லீலிபுஷ்பத்துக்கு. வீட்டில் அவளால் இருக்க முடியவில்லை. தன் தாய் வீட்டிற்கு வருவதென்றால் மகிழ்ச்சி அடையும் லீலியின் மனசு இன்று அங்கிருந்து கிளம்பிவிட்டதில் அத்தனை ஆசுவாசம் கொண்டிருந்தது. லீலி புஷ்பம் வேலை பார்க்கும் டயோசிஸ் பள்ளியின் உயர்நிலை வகுப்பில் ஒரு ஆசிரியை பணி நிரம்ப இருக்கின்றது. அதை எப்படியாவது லீலியின் தங்கை சிறியபுஷ்பத்திற்கு வாங்கி விட வீட்டார் அனைவரும் முனைப்பாக இருந்தனர். சிறிய புஷ்பம் லீலியை விட ஐந்தாறு வயது இளையவள். மற்றுமொரு டயோசிஸ் பள்ளியிலேயே தற்காலிக ஆசிரியையாக கிட்டத்தட்ட 15 வருடம் வேலை பார்த்து கொண்டிருக்கிறாள். கொஞ்சம் முயன்றால் இந்த வேலை அவளுக்கு கிடைத்துவிடும். சிறியபுஷ்பமும் இந்த வேலைக்கு தகுதியானவள் தான். ஆனால் லீலிக்கு தான் மனசு அடித்துக் கொண்டது.
பூர்வீக கிராமத்தில் கொஞ்சமாவது நிலம் இருக்க வேண்டும் என நினைத்து அண்ணனுக்காக ஒரு சிறிய தோட்டத்தை விட்டு வைத்திருந்தார் இவர்களின் அப்பா. அதையே ‘தேவைப்பட்டால் மயிலாடித் தோட்டத்தையே விற்று விடலாம்’ என அவர் கூறிய போது ‘40 வயதாகியும் அரசு வேலை கிடைக்க விட்டால் என்ன கொள்ளையா போகிறது’ என்று பற்றி கொண்டு வந்தது லீலிக்கு, காலையிலிருந்தே குமுறிக் கொண்டிருந்தாள்.
கிராமப்புற பள்ளிகளில் வேலை வாய்ப்பு வந்த போதெல்லாம் எப்படியாவது வேலை வாங்கிவிட வேண்டும் என கண்ணீரோடு வந்து நிற்கும் சிறியபுஷ்பத்தை “எதுக்கு இப்படி ஒரு கிராமத்துக்கு போய் வேலை பார்க்கணும் பாப்பா, அதான் கொழுந்தன் நல்ல வேளையில் இருக்காருல்ல, டவுன்லையே போஸ்டிங் வரும். அப்போ தலையை கொடுத்தாவது முயற்சி பண்ணிடலாம்” என்றும் “அந்த ஊரு பிரசிடெண்ட் ரொம்ப மோசமானவராம்ள எப்படி அங்க போயி தங்க முடியும் அவன்கிட்ட பேசினாலே பேரு கெட்டுப் போயிடுமாம் வேண்டாம் பாப்பா” என்று எதை எதையோ சொல்லி குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டு தவிர்த்து விடுவாள். லீலியும் அவள் கணவர் அருள் தாசும் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்தனர். அருள்தாஸ் எல்லோரோடும் இணங்கி மாற்றலாகி வரும் குருவானவர்களை எல்லாம் அனுசரித்து சென்றதால் எந்த பணியிட மாற்றமும் இன்றி சாத்தூரிலேயே கடந்த 15 வருடங்களாக இருவரும் பணிபுரிந்து வந்தனர். லீலிக்கு எட்டாம் வகுப்பையும் அருள் தாஸுக்கு ஆறாம் வகுப்பையும் கொடுத்து விட்டால் கூட லீலி தலைமை ஆசிரியரிடம் சென்று கண்ணீர் விட்டு மாற்றி விடுவாள்.எல்லாரிடமும் தன் கணவரை குறிப்பிடும் போதெல்லாம் ‘நம்ம பெரிய சார்’தான்.
சாத்தூரிலேயே பெரிய வீடு கட்டி பால் காய்ச்சி வைத்த போது வந்திருந்த சிறியபுஷ்பத்தை எல்லாரிடமும் ஆசிரியராகவே பணியாற்றுவதாக அறிமுகப்படுத்திய போதும் தற்காலிக ஆசிரியை என்று எவரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை
“சும்மா இரு பாப்பா எல்லார்கிட்டயும் வேலை இல்லன்னு சொல்லாத ஆளாளுக்கு அறிவுரை சொல்ல வந்துருவாங்க நமக்குள்ளேயே வச்சுக்கிட்டு வேலை தேடுவோம் யாராவது கேட்டா ஆமா வேலை பார்க்கிறேன் என்று மட்டும் சொல்லு அடுத்த வார்த்தை அடுத்த கேள்விக்கு தான் புரியுதா” என்றாள்.
“நாலு பேருக்கு தெரிஞ்சா தானே ஏதாவது காலியிடம் வந்தால் சொல்லுவாங்க” என்ற தாயிடம்
“ஆமா அப்படியே வந்து சொல்லிட போறாங்க இவ நிரந்தர பணியில் இல்லை என்று தெரிஞ்சா இனி என்கிட்ட ஏதாவது போஸ்டிங் வந்தா சொல்றத கூட நிறுத்திடுவாங்க’என்று சொல்லி எரிந்து விழுந்தாள்.
லீலையின் அம்மாவுக்கு பி எட் முடித்தும் சிறியபுஷ்பத்திற்கு இன்னும் நிரந்தர வேலை கிடைக்கவில்லை என்பதால் மிகவும் வருத்தம். அவர் பார்ப்போரிடம் எல்லாம் சொல்லி வைத்து விடுவார். முதல் பெண் என்பதால் லீலி புஷ்பத்திற்கு எப்போதுமே வீட்டில் உரிமைகளும் சீராட்டல்களும் அதிகம் இவள் பேச்சை பெரும்பாலும் குடும்பத்தினர் யாருமே தட்டுவதில்லை. ஆசிரியர் பயிற்சி முடித்து லீலி ஒரு கத்தோலிக்க பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திருமணம் நடந்தது. அருள்தாசின் குடும்பம் பிஷப்பிற்கு கொஞ்சம் நெருக்கமாக இருந்ததால் எப்படியோ ஒரு கிராமப்புற பள்ளியில் லீலி புஷ்பத்திற்கு வேலையை பிடித்து விட்டனர்.
அதற்குப் பின்பும் சில கிராமங்களுக்கு மாற்றலாகி சென்றிருந்தாள். அருள்தாசும் வேறொரு கிராமப்புற பள்ளியில் இதே சாத்தூரில் வேலை பார்த்து வந்தார். அதனால் லீலிக்கு பிள்ளை பேரு முடிந்தவுடன் லீலியின் தாயும் கூடவே உடன் சென்று குழந்தையை பார்த்துக் கொள்ள சென்று விடுவார் அவர்கள்.பால் மறந்த பின்பு நாசரேத்துக்கே அழைத்து வந்து விடுவார் .இப்படியாக லீலியின் இரண்டு பெண் குழந்தைகள் ரோஸும் ஜாஸும் வளர்ந்தது என்னவோ சிறியபுஷ்பத்தின் மடியில்தான்.பிள்ளைகள் இருவருமே அம்மா என்று கூப்பிட்டது சிறியபுஷ்பத்தை தான்.
சிறிய புஷ்பம் திருநெல்வேலியிலேயே கல்லூரியும் பின்பு பி.எட்டும் படித்ததால் பிள்ளைகளை வளர்ப்பது எல்லோருக்கும் எளிதாக இருந்தது. சிறியபுஷ்பம் பிஎட் சேர்ந்த பொழுதே லீலிக்கு பிடிக்கவில்லை அவளையும் தான் பயின்ற ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட தன் தந்தையை வற்புறுத்தினாள்.
“பிஎஸ்சி படிச்சிட்டாமா பாப்பா இனி பிஎஃப் பண்ணட்டும் நமக்கும் மதிப்பு தானே பெரிய மருமகன் மாதிரி அவளுக்கும் நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். அவங்களும் உங்களை மாதிரியே சேர்ந்து வேலை பார்த்துக் கிட்ட போறாங்க”என்று அவர் அன்பாக சொல்லி மறுத்துவிட்டார்.
தானும் தன் கணவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தன் தங்கையும் அவள் கணவரும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களா என்று எண்ணிய போது அப்போதே லீலிக்கு வயிற்றைப் பிசைந்தது. ஆனால் லீலி பயந்தவாறு இல்லாமல் சிறிய புஷ்பத்திற்கு ஒரு தனியார் கம்பெனியில் உதவி மேனேஜராக பணியாற்றிக் கொண்டிருந்த எட்வின் கணவராக அமைந்தார். நல்ல வீடு வாசல் என்று இருந்தாலும் சிறியபுஷ்பமும் எட்வினும் தங்களுக்கென்று தனியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலவில்லை. பெரிய குடும்பம் தம்பி தங்கைகள் என்று எட்வினுக்கு பொறுப்புகள் அதிகம். சிறிய புஷ்பமும் தான் படித்த படிப்புக்கு எப்படியாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல பள்ளிகளில் வேலை பார்த்தாள். வீட்டையும் குடும்பத்தையும் சமாளித்துக் கொண்டு எப்படியாவது வேலைக்கு சென்று விடுவாள். சில சமயங்களில் வெறும் டியூஷன் எடுக்க மட்டும் கூட பள்ளிகளுக்கு சென்று இருக்கிறாள். இந்த தற்காலிக பணியில் கூட சீனியாரிட்டியை விடாதிருக்க ஒரு குழந்தை போதும் என்று மகள் டெய்சியோடு நிறுத்திக் கொண்டாள்.
சிறிய புஷ்பம் லீலியின் வீட்டுக்கு வந்து தங்கும் போதெல்லாம் “ஏன் வீட்ட இப்படி குப்பையா வச்சி இருக்க என் மாமியார் தான் ஒரு பிளாஸ்டிக் கரண்டியை கூட வெளியில போட விட மாட்டேங்குது, உனக்கென்ன தனி சாம்ராஜ்யம் தானே நல்லா சுத்தமா அழகா வைக்க வேண்டியதுதானே’என்று சொல்லி அலமாரிகள், அடுப்படி என அத்தனையையும் அடுக்கி அழகுப்படுத்தி கொடுத்து விடுவாள். லீலி கூட பல சமயங்களில் பீரோவை அடுக்க மாய்ச்சல்பட்டு சிறிய புஷ்பம் வரும் வரை காத்திருப்பதுண்டு.
“சித்திக்கு தனி குடித்தனம் போயி இப்படி எல்லாம் வீட்டை வைத்திருக்க வேண்டும் என்று ஆசைடி, ஆனா அவ வாங்குற சம்பளத்துக்கு முடியாது இல்லையா அதனால அவ ஆசைய நம்ம வீட்ல நிறைவேத்திக்கட்டும்’ என்று ரோஸ் இடமும் ஜாசிடமும் சொல்லும்போது சிறிய புஷ்பம் முகம் சுண்டி போவாள். ஆனால் பிள்ளைகளுக்கு சித்தி என்றால் இன்னொரு அம்மா. அவர்கள் உருகுவதை பார்க்கும் போதெல்லாம் லீலிக்கு எரிச்சல் வந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டாள். எத்தனையோ மடங்கு அதிக சம்பளம் சொத்து சுகம் என்று இருந்தாலும் லீலிக்கு ஏனோ சிறியபுஷ்பத்தின் முன் தான் ஒரு படி குறைந்து இருப்பதாகவே தோன்றும். ஏதோ ஒரு மினுக்கு தன்னிடம் இல்லாததாகவே மருகுவாள்.
கழுத்து நிறைய நகையுடன் தான் நிற்கும் போது கூட வெறும் நீலச்சங்கிலியும் தாலிக்கொடி மட்டும் அணிந்து வரும் தங்கைதான் நாகரிக யுவதியாக லீலையின் கண்களுக்கு தெரிவாள்.
“ஏன்மா போறது ஞானஸ்தான வீட்டுக்கு, அதுக்கு ஏன் இவ்வளவு நகை போட்டுட்டு வர்றீங்க சித்திமாவை பாருங்க எப்படி சிம்பிளா வராங்க’ என்று ரோஸ் சொல்லும்போது மனதில் குறுகி போனாலும்
“ஏய் ரெண்டு பொம்பள பிள்ளை வச்சிருக்கேன். இப்படி போனாதான் லீலி பிள்ளைகளுக்கு நல்லா செய்வான்னு நெனச்சி பொண்ணு கேட்டு வருவாங்க. அவளுக்கு என்ன ஒத்த பொண்ணு எதுவும் இல்லாட்டினாலும் இருக்கிற வீடு டெய்சிக்கு தான்னு எல்லாருக்கும் தெரியும். வர்றவன் வருவான். நீங்க சும்மா வாய மூடிட்டு இருக்கணும் பாத்துக்கோங்க’ என்று வாயை அடைத்து விடுவாள். பிறர் வாயை அடைத்து விட்டாலும் எப்போதோ தைத்த நெருஞ்சிலாய் கண்ணுக்கு தெரியாத ஒரு முள் எப்போதும் அறுத்துக் கொண்டே இருக்கும் லீலியை.
இப்படி பலவற்றையும் எண்ணிய வாரே பஸ்ஸில் பயணம் செய்தவள் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். வீட்டில் அருள்தாஸ் இல்லை. எப்போதும் சாவி வைக்கும் இடத்தில் இருந்து சாவியை எடுத்து வீட்டுக்கு உள்ளே சென்றவள் சிறியபுஷ்பம் கொடுத்து விட்டிருந்த அத்தனை சான்றிதழ்களையும் ஒரு முறை பார்த்தாள். சிறியபுஷ்பம் ஞாயிறு வேதாகம பள்ளி எடுத்த சான்றிதழ்களை கூட கோர்த்து வைத்திருந்தாள். லேசாக லீலிக்கு பரிதாபம் வந்தது, கூடவே சிரிப்பும் வந்தது அந்த சிரிப்பு ஏதோ ஒரு வகையில் கிறக்கத்தை கொடுத்தது. சிரித்தவாறு எல்லாவற்றையும் எடுத்து தன் பீரோவில் பட்டு சேலைகளுக்கு அடியில் வைத்தாள். அருள்தாஸ் எங்கே போயிருப்பார் என்று யோசித்தாள்.ஒரு வேளை அப்பா ஏதும் போன் செய்து குருவானவரை பார்க்க சென்று இருப்பாரோ என்று தோன்றியது
“இந்த மனுஷன் போய் என்னத்தையாவது வேலை கொடுங்கையா மாலை கொடுங்கையா ண்ணு கேட்டுட்டு இருக்க போறாரு, ரோஸ் வேற அடுத்த வருஷம் காலேஜுக்கு போறா. அவளையும் ஒரு பி எட் பண்ண வச்சிட்டு அவளுக்கு வேலை கேட்கணும். இப்போ கொழுந்தியாளுக்கு வேலை கேட்டா பின்னாடி எத்தனை பேருக்கு தான் வேலை கேட்பீங்கன்னு சபையில் எல்லாரும் குதிப்பானுங்க. அவ அவ பாடு அவ அவ அவளுக்கு” என்று உரக்க முணுமுணுத்தவாறு வீட்டை பூட்டிவிட்டு சர்ச்சை நோக்கி நடந்தாள்.
அங்கு எங்கும் அருள்தாசை காணாமல் வீடு திரும்பினாள். வீட்டு வாசலில் அருள்தாஸ் நின்று கொண்டிருந்தார்
“என்ன சர்ச்சுக்கு போயிருந்தியாக்கும்”என்று கேட்டார் அருள்தாஸ், “ஐயரே பார்த்தியா’
“ஆமா நீங்க எங்க போயிருந்தீங்க”என்று கேட்டாள் எரிச்சலுடன்.
“மாமா போன் போட்டு இருந்தாக அதான் நீ வர்றதுக்குள்ள ஐயரே ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். அவர் ஏதோ வீடு சந்திப்புக்கு போயிருக்கிறதா கோயில் குட்டியார் சொன்னார். இப்போ கிடைச்சாரா என்ன’என்று கேட்டார் அருள்தாஸ்.
“பார்த்தேன் எல்லா கடிதத்தையும் கொடுத்தாச்சு பிஷப் ஆபிஸ்ல இருந்து இன்டர்வியூவுக்கு அழைப்பு வந்தா கண்டிப்பா செஞ்சுருவோம்ன்னு சொல்லி இருக்கார் முதல்ல இன்டர்வியூ காடு வரட்டும் அப்புறம் எல்லாரையும் பார்த்து பேசிக்குவோம். நீங்க போயி தொன தொனக்காதீங்க,அவரே ஒரு முசுட்டு பிறவி. அப்புறம் எனக்கு ஒன்னுமே தெரியாது,எதுவும் கைக்கு வரலன்னுடுவார் பார்த்துகிடுங்க,காரியத்தை கெடுத்துடாதீக, அது போதும். முதல்ல அப்பாவுக்கு ஒரு போன போட்டு இரண்டு பேரும் போய் ஐயர பார்த்துட்டு வந்தோம்னு சொல்லிடுங்க,அவுகளுக்கும் சமாதானமா இருக்கும். கெடந்து மனசு அடிச்சிட்டு கெடப்பாக ” என்று பல்லை கடித்தவாறு கூறியபடி லீலி அருள்தாசை கடந்து வீட்டுக்குள் சென்றாள்.
‘எப்படியும் வேலை எடுத்துருவோம் லீலி, நீ ஒன்னும் கவலைப்படாதே,கார்டு எப்படியும் வந்துரும்,வரட்டு பார்த்துகிடுவோம்மா’ என்று சொல்லியவாறே அருள்தாஸ் லீலியை பின் தொடர்ந்து உள்ளே சென்றவர் தொலைபேசியை எடுத்தார்.
சிறிய புஷ்பத்துக்கு இன்டர்வியூ கார்ட் வரவே இல்லை. மற்றவர்களுக்கு வந்ததை அறிந்த அருள்தாஸ் லீலியிடம் கேட்டார். “லீலி சிறியபுஷ்பத்திடம் கேளு,கார்டு கெடச்சு தானு”.
“அவளே போன் போடட்டும், வந்தா தான் சொல்லுவாள்ள” என்றாள்.
‘எல்லாருக்கும் நேத்தே கிடைச்சிடுச்சு, திருநெல்வேலியில இருந்து பாளயம்கோட்டை போக மணி கணக்கு போதாதாக்கும்” என்று சற்று எரிச்சலுடன் கேட்டார்.
“ஒரே ஊருங்கறதால லேட்டா அனுப்புவான்களாயிருக்கும். நாளைக்கும் பாப்பாட்டருந்து போன் வரலனா நாம போன் போடுவோம்” என்றாள்.
“ஏட்டி இன்னும் நாலு நாள்ல இன்டர்வியூ, நாளைக்கு போன் போடுவோம், நாளன்னிக்குக்கு போன் போடுவோம்னு பேசிட்டு இருக்க நீ” என்று கோபமாக கேட்ட அருள்தாசை இடைமறித்த லீலி “நாதான் கேக்குறேன்னு சொல்றேன்ல, நீங்க ஏன் இப்படி நாண்டுக்கிட்டு நிக்கிறீங்க” கொழுந்தியாளுக்குன்ன உடனே தூக்கிப்போட்டு அடிக்கிதோ” என்று பெருங்குரலில் கத்தினாள்.
“அட போம்மா, நீயாச்சு, உன் தங்கச்சி ஆச்சு எப்படியும் .நாசமா போங்க” என்று கோபத்தில் கத்தியவாறு வெளியே கிளம்பி விட்டார் அருள்தாஸ்.
கார்டு பிறருக்கு வந்து விட்டதை அறிந்த சிறிய புஷ்பம் ஓடி வந்தாள். கண்ணீரும் கம்பலையுமாக நின்றவளை எட்வின் தான் தேற்ற முயற்சித்துக் கொண்டே இருந்தார். குருவானவருக்கும் அருள்தாசுக்கும் இடையே சண்டையே வந்துவிட்டது. எந்த சான்றுகளும் விண்ணப்பமும் தன் கைக்கு வரவேயில்லை என்று குருவானவர் வாதாட
“நீங்க மனசுல எதையோ வச்சிக்கிட்டு தான் இப்படி பழி வாங்குறீங்க, உங்க டயோசீஸ் குரூப் சண்டைக்கு எங்கள பழி கெடா ஆக்குறீங்க” என்று அருள்தாஸ் கத்த அங்கே இரு கோஷ்டிகள் உருவாகி மோதல் ஆனது.
கடைசியில் “எனக்கு ஒன்னும் தெரியாது,அது கடவுளுக்கு தெரியும். நீங்க யாரையும் போய் பாருங்க, இன்டர்வியூ கார்டு வாங்கிட்டு வாங்க. நான் என்ன செய்யணும்னு செக்ரட்டரி சொல்றாரோ அது எல்லாத்தையும் செய்றேன்”என்று கூறி முடித்துவிட்டார் குருவானவர்.
செக்ரட்டரியை பார்த்து பேச எட்வினும் அருள்தாசும் சிறிய புஷ்பத்தை கூட்டிக்கொண்டு போனார்கள். இருக்கும் கோஷ்டி மோதல்களை சுட்டிக்காட்டி “யாருக்கு என்ன நல்லது பண்ணாலும் அடுத்த கோஸ்டி சண்டைக்கு வந்துடுறாங்க தாஸ், இரண்டு தரப்பும் சான்றிதழ்களை சரிபார்த்து ஆளெடுத்து தான் கால் கார்டு அனுப்பி இருக்கான்ங்க. இப்போ உங்க பேர எப்படி உள்ள அனுப்புறதுனு நான் யோசிக்கிறேன். எட்வின் பொண்டாட்டி பேர சொல்லி கார்டு அனுப்புனா எதிர் கோஷ்டி 100 பேர கூட்டிட்டு வருவானுங்க. பிஷப்பை வேணா போய் பாருங்க” என்று சொல்லிவிட்டார் செக்ரட்டரி.
சிறியபுஷ்பம் அழுது அழுது முகம் வீங்கி போய் உட்கார்ந்து இருந்தாள்.அன்று மாலையே அருள்தாசும் எட்வினும் சில முக்கியஸ்தர்களை கூட்டிக்கொண்டு பிஷப்பை பார்க்க சென்றிருந்தனர். வீட்டில் அம்மா சற்று கண் அசந்திருந்த வேளையில் சிறிய புஷ்பத்திடம் லீலி மிகவும் வருத்தமான குரலில் “ஏன் பாப்பா கடவுளுக்கு சித்தம் இல்லன்னு விட்டுட வேண்டியதுதானே ஏன் இப்படி கிடந்து போராடுற”என்றாள்.
‘அத்தான் போன் போட்டு சர்டிபிகேட் கொடுத்தாச்சு, கார்டு வந்ததும் பாத்துக்கலாம்னு சொன்னதுல இருந்து ஒவ்வொரு நிமிஷமும் எதிர்பார்த்துட்டு இருக்கேன்கா. என்னால தாங்க முடியல . இந்த வேலை கிடைக்கலன்னா எனக்கு இனிமே கவர்மெண்ட் வேலையே கிடைக்காதுக்கா” என்று விம்மி விம்மி அழுதாள்.
“அத்தானையும் போட்டு இவ்வளவு கஷ்டப்படுத்தறியே பிள்ள, நாளைக்கு ரோஸ் படிச்சு முடிச்சிட்டானா அவளுக்கும் போய் நிக்கணும்.இப்படி எத்தனை பேருக்கு தான் போய் நிப்பாரு அந்த மனுஷன்.திருப்தியா இரு பாப்பா, அதான் பெரிய சொத்து” என்று முகத்தில் பெரும் எரிச்சலை காட்டி கூறினாள் லீலி.
அழுது கொண்டிருந்த சிறிய புஷ்பம் மெதுவாக அழுகையை நிறுத்தினாள். எட்வின் வந்து “கார்டு வராது, அடுத்த முறை பார்க்கலாம்” என்று பிஷப் சொல்லியது தெரிந்த பின்னும் சிறிய புஷ்பம் அழவில்லை. மிகுந்த மன கஷ்டத்தில் இருந்த எட்வின் லீலியின் பலத்த உபசரிப்புகளை மறுத்துவிட்டார். சிறிய புஷ்பமும் ‘வேண்டாங்க்கா, கிளம்புறோம் “என்று கிளம்பி விட்டாள்.
அவர்களின் அம்மா தான் அழுது கொண்டிருந்தார் “அவளே கவலைப்படாமல் ஜம்முன்னு கிளம்பிட்டா, நீங்க ஏன் உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கீங்க, சாப்டுட்டு படுங்க”என்றாள் லீலி.
” ஏம்மா பாப்பாம்மா எவ்வளவு அழுக அழுதாக, நீங்க என்னடான்னா அவுக கவலையே படலங்க மாதிரி பேசரீக” என்றாள் ரோஸ்.
‘ஆமா உங்க பாப்பா அம்மாவுக்கு அழ சொல்லியா தரணும்” என்று சொல்லியவாறு அடுத்த நாள் பள்ளிக்கு ஆயத்தமாக புடவையை எடுத்து வைக்க தொடங்கினாள் லீலி.
சிறிய புஷ்பம் ஒரு சில மாதங்களில் தான் பார்த்துக் கொண்டிருந்த டயோசீஸ் பள்ளி தற்காலிக வேலையை விட்டு விட்டு பாளையங்கோட்டையிலேயே ஒரு பெரிய தனியார் பள்ளியில் சேர்ந்து வேலை பார்க்க தொடங்கினாள். அத்தனை பிரபலமான பள்ளியில் வேலை கிடைத்ததே பெரிய விஷயம் அதனால் சிறிய புஷ்பம் மிகவும் மன நிறைவோடு அந்தப் பள்ளியில் சேர்ந்தாள்.
‘ஏப்ள,எதுக்கு வேலைய விட்ட,அடுத்த வருசம் ஏப்டுயாவது வேலய எடுத்துரனும்னு இன்னைக்கு கூட அத்தான் சல்லிட்டு இருந்தாக, நேரம் கைகூடி வரும் போது இப்படி பன்றீயேப்ள.அந்த ஐயர சொல்லனும்,இப்படியொரு மனுசனுக்கு அங்கி தேவையா ‘
‘போதும்க்கா, அவர ஏன் குறை சொல்ற, போய் பாத்த அன்னைக்கும் பதறி போயி தான் பேசினாரு,குலையன்கரிசல் அசனத்துல பாத்தப்போ ப்ரேயர் பண்ணினாறு. மைக்கேல்சில வேலை கிடைக்கிறதுனா சும்மாவா. சந்தோசமா இருக்கேன்’ ஏன்றவள் சில நிமிடங்களிலேயே போனை வைத்து விட்டாள்.
லீலியை சந்திப்பது பெரும்பாலும் குறைந்து போயிற்று. அப்படியே எங்காவது சந்தித்தாலும் முன்புபோல சிறிய புஷ்பம் லீலியிடம் தனக்கு வேலை இல்லை என்று குறைபட்டுக் கொள்வதே இல்லை. எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும் முன்பை விட அதிகம் மிடுக்கோடு காணப்பட்ட சிறிய புஷ்பத்தை கண்டு லீலி மேலும் குறுகிப் போனாள். சொந்தங்கள் அனைவரும் சிறியபுஷ்பம் ஏதோ ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டியில் வேலை பார்ப்பது போல் நடத்த ஆரம்பித்தனர். யாரும் கோவில் பள்ளிக்கூடத்தில் பிள்ளைக்கு இடம் வேண்டுமென்று லீலியிடம் வந்ததே இல்லை. இப்பொழுதெல்லாம் லீலி ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் பள்ளிக்கு பிள்ளைகளை சேர்க்க வீடுகளுக்கு சென்று கேட்கும்போதெல்லாம் நினைத்துக் கொள்வாள் “பேசாமல் சிறிய புஷ்பத்தையும் இந்தப் பள்ளியிலேயே சேர்த்து விட்டிருக்கலாம்” என்று.
எப்பொழுதுமே உறுத்திக் கொண்டிருந்த நெருஞ்சில் இப்பொழுது கோபத்தோடு அதிகமாக குத்தத் தொடங்கியிருந்தது லீலியை.
