Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

தனிப்படர்மிகுதி

தொல்லை

உனை காதலிக்க சொல்லி
தொந்தரவு செய்பவர்கள் என
ஒரு பட்டியல் நீட்டினாய்
என் செவிகளில்.
இன்னமும் நினைவிருக்கிறது
ஒவ்வொரு பெயரும்
அதில் பாதி
என் ‘உயிர்’ நண்பர்கள்.
ஜாதி மதம் பாராமல்
எல்லோரும் ஒன்றாகி விட்டார்கள்
உன்னை பின் தொடர்வதில்.
அவர்களை கடக்கும் போதெல்லாம்
புகைப்படம் எடுத்து
எனக்கனுப்புவாய்
“தொல்லைகள்” என்ற குறுஞ்சேதியும்
அதனுடன் ஒட்டிய
உரக்க சிரிக்கும் ஒரு ஸ்மைலியும்
அரிவாளில் குத்திய எழுமிச்சை போல
நம் பிரிவுக்கு பிறகான
அடுத்த சந்திப்பில்,
எனை புகைப்படம் எடுத்து
நீ அனுப்பும்
அந்த பாக்கியசாலிக்கு
என் வாழ்த்துக்கள் !


வறுமை

நண்பர்களுடன் செல்லும்
உணவகங்களில்
என்றைக்குமே நான்
பணம் செலுத்த முந்துவதில்லை
அத்தனை கனமான எண்கள்
என் பையிலோ
வங்கி கணக்கிலோ இல்லை.
அடுத்த மாதம்
வந்து சேரும் வரவு என்ற
எந்த உத்திரவாதமும் அற்று
பூஜ்ஜியங்கள் குறையும்
என் வங்கிக்கணக்கு
குறைந்த பட்ச இருப்பின்
எல்லைக்கு முன்னும் பின்னும்
ஒரு அகதியைப் போல
அலைகிறது
மாதம் முழுதும்.
அதனால்,
அதிகபட்சம் நான் செய்வது
செலவழிக்க எத்தனிப்பது போல
பைக்குள் கையை விட்டபடி
மேலெழுவது தான்.
யாரேனும் வேண்டாமென்று
கரம் பிடித்து மறுத்து விட
கடவுளை வேண்டிக் கொள்வேன்
அப்படியாக ஒரு தேவ தூதன்
ஒவ்வொரு முறையும்
காப்பாற்றி விடுவார்.
சிலமுறை
யாரும் தடுக்காத வஞ்சத்தில்
காலாவதியான
ஒரு வங்கி அட்டை
சரியான நேரத்தில்
எனை காப்பாற்றி விடும்.
இதற்காகவே
எந்த செயலிக்கும்
என் அலைபேசியில் இடமில்லை
மீன் இல்லா குளத்திற்கு
தூண்டில் எதற்கு.
இப்படியான
எந்த ஒரு பாசாங்குமற்று
என் மேஜைக்கு வரும் ரசீதை
நான் எழாமல்
எனக்கு முன்பே பெற்றுக்கொள்ளும்
அவளிடம் மட்டுமே
வெளிப்படையாக அறிவித்தேன்
என் வறுமையை…


விலாசம்

கையொப்பமிட்டு பரிசளித்த
உன் புத்தகங்களை
திருப்பித்தர வேண்டி
விண்ணப்பித்திருந்தாய்.
உன் வேண்டுதலை
மறுக்க முடியாத
சிறைபட்ட கடவுளானேன்.
அடுக்கி வைத்த
உன் பெயர் ஏந்திய புத்தகங்களில்
நீ கையெழுத்திடாமல் பரிசளித்த
என் பாட புத்தகம் ஒன்றையும்
சேர்த்து வைத்தேன்
அதையும் எடுத்துச்சென்றாய்
வேண்டுமென்றே.
பார்த்த ஆத்திரத்தில்
மறந்து போனது
நீ எடைக்குப் போட்ட
கடையின் விலாசம்


இறுதியாக ஒரு முறை

ஒரு யுகம் தாண்டி
எனைக் காண உன் வருகை
ஆனந்த தாண்டவம்
ஆடியது மனம்.
எனக்குப் பிடித்த
எனக்காக வாங்கிய
அதே சிவப்பு நிற ஆடையில்
பளிச்சிட்டது என் கண்கள்.
பிரிந்து சென்ற
காலத்தின் பிழையை
திருத்த முடியாமல்
சிந்தும் உன் கண்ணீரில்
கறைந்து போனது
என் ஏக்கங்கள்.
அத்தனை காயங்கள்
கண்ட பின்னும்
காணத்தவித்த என் ஏக்கங்களில்
நான் மறந்து போன
உன் பிழைகளை
நீயாகவே அடுக்கி வைத்தாய்
நான் கலைத்து விட்டேன்.
மலர்களை பரிசளித்துக்கொள்ளாத
விநோதமான காதலென்று
நமக்குள் நாமே சிரித்துக்கொண்டோம்
இன்று முதல் முறையாக
அத்தனை மலர்கள்
உன் கரங்களில்.
அழுது முடித்த
அமைதியின் பின்
உன் கரங்களில் வந்து சேர்ந்தது
ஒரு பிடி மண்.
மீண்டும் ஒரு முறை
திறந்து பார்க்கிறது
உறைந்து போயிருக்கும்
என் பிரேதத்தின் கண்கள்.
இறுதியாக ஒரு முறை
பார்த்துவிட்டு வழியனுப்பு
கரைந்து போக காத்திருக்கும்
என் ஆன்மாவை…

Exit mobile version