- அறிவியல் கொள்கைகளுள் அழகானது
- துளிமம்
- பிரபஞ்சத்தின் கட்டமைப்பு- 3
- துகள்கள்
- வெளியின் துகள்கள்
- நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்
- நாம்
மூலம் : கார்லோ
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளி மற்றும் காலத்தின் செயல்முறை விளக்கத்தை ஐன்ஸ்டைனும் , பொருட்களின் விசித்திரமான துளிம பண்புகளை கணித சமன்பாட்டில் அமைப்பதை நீல்ஸ் போரும் அவரது இளம் சிஷ்யர்களும் செய்து முடித்தனர். நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த இரண்டு தேற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டு பேரண்டமாகிய பிரபஞ்சத்தின் கட்டமைப்பு முதல் சிற்றண்டமாகிய நுண்துகள் உலகம் வரை இயற்கையின் பல்வேறு தளங்களில் இயற்பியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த கட்டுரையில் பிரபஞ்சத்தின் கட்டமைப்பு குறித்தும் அடுத்த கட்டுரையில் நுண்துகள் உலகம் குறித்தும் சொல்லப் போகிறேன்.
இந்த கட்டுரை பெரும்பாலும் வரைபடங்களாலானது. ஏனெனில், அறிவியல் என்பது பரிசோதனைகள், அளவீடுகள், கணித சமன்பாடுகள் மற்றும் கறாரான அனுமானம் ஆகியவற்றிற்கு முன்பு பார்வையையே அடிப்படையாகக் கொண்டது. அறிவியல், காட்சிகளிலிருந்தே துவங்குகிறது. ஏற்கனவே கண்டறிந்தவற்றின் மீதான புதிய அவதானத்தில் இருந்து தான் அறிவியல் சிந்தனை தழைத்தோங்குகிறது. நான் இங்கு அவ்வாறான பார்வைகளுக்கு இடையிலான பயணத்தை எளிய சுருக்கமாக தருகிறேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் பூமி கீழாகவும் வானம் மேலாகவும் உருவகிக்கப்பட்டது என்பதைக் காணலாம். இருபத்து ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அனாக்ஸிமேன்டரின் பெரும் அறிவியல் புரட்சி சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எவ்வாறு பூமியை சுற்றி வருகின்றன என்ற கேள்விக்கு விடையாக பிரபஞ்சத்தின் உருவகத்தை கீழ்க்கண்டவாறு மாற்றியது.
இப்போது வானம் பூமிக்கு மேலே மட்டும் இல்லாமல் பூமியைச் சூழ்ந்திருப்பதாகவும் பூமி கீழே விழாமல் வானத்தில் மிதக்கும் ஒரு பெரிய கல் எனவும் உருவகம் மாறியது. கூடிய விரைவில் யாரோ ஒருவர் ( பர்மெனிடிஸ் அல்லது பைதாகரஸ்) , சம தொலைவுகள் காரணமாக இந்த பறக்கும் பூமியின் வடிவம் கோளம் எனவும், அரிஸ்டாட்டில் பூமி மற்றும் வானம் இரண்டுமே கோளத்தின் வடிவில் தங்களது போக்கில் செல்கின்றன என்று நேர்த்தியான அறிவியல்பூர்வமான வாதங்களையும் முன்வைத்தார். எனவே பிரபஞ்சத்தின் உருவகம் கீழ்க்கண்டவாறு மாறியது.
வானுலகில் ( On the heavens) என்ற தனது நூலில் அரிஸ்டாட்டில் விளக்கிய இந்த பிரபஞ்ச உருவகம் மத்திய தரைக்கடல் நாகரீகத்திலிருந்து தற்போதய மத்திய கால நாகரீகம் வரையில் அதன் அடிப்படைகளுள் ஒன்றாக இருந்தது. தாந்தேவும் ஷேக்ஸ்பியரும் அவர்களது கல்விக்கூடங்களில் படித்த உருவகமும் இதுவே.
மாபெரும் அறிவியல் புரட்சிக்கு வழிவகுத்த கோபர்நிகஸிடம் இருந்து பிரபஞ்ச உருவகத்தின் அடுத்த தாவல் நிகழ்ந்தது. ஒரு முக்கிய மாற்றம் தவிர்த்து கோபர்நிகஸின் பூமி அரிஸ்டாட்டிலிடம் இருந்து அவ்வளவு வேறுபட்டதில்லை. ஏதோ ஒரு பழங்கால சிந்தனையிலிருந்து, கிரகங்களின் நடனத்தின் மையமாக இருப்பது சூரியனே அன்றி பூமி அல்ல என்பதை கோபர்நிகஸ் உணர்ந்து விளக்கினார். நமது கிரகம் மற்ற கோள்களுள் ஒன்றாக, அதிவேகமாக தனது அச்சில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனை வலம் வருகிறது.
நமது அறிதலின் வளர்ச்சி தொடர்ந்தது. மிக விரைவிலேயே மேம்படுத்தப்பட்ட கருவிகளின் உதவியால் சூரியன் மற்ற நட்சத்திரங்களைப் போல சாதாரண ஒன்று எனவும் சூரிய குடும்பம் போல பல அமைப்புகள் பிரபஞ்சத்தில் இருப்பதையும் கண்டுபிடிக்க முடிந்தது. பலநூறு கோடி நட்சத்திரங்களாலான பால்வெளி புகை மண்டலத்தில் துளியிலும் துளியான அற்பமான புள்ளி நாம்.
ஆனால் 1930ல் நட்சத்திரங்களுக்கு இடையில் காணப்படும் சிறிய வெண்ணிற படலங்களை ஆராயும் வானியலாளர்கள் பால்வெளி மண்டலம் என்பதும், மிக சக்திவாய்ந்த தொலைநோக்கிகளின் காட்சி எல்லைவரை பரவியுள்ள விண்மீன் மண்டலங்களாலான படலத்தின் துளியிலும் துளி என்பதை கண்டறிந்தனர். இப்போது பிரபஞ்சம் ஒரு சீரான எல்லையற்ற விரிவு என்று அறியப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் வரையப்பட்டது அல்ல. ஹபிள் தொலைநோக்கி எடுத்த , இதுவரையில் இல்லாத அளவு ஆகாயத்தின் மிக ஆழமான புகைப்படம். வெறும் பார்வைக்கு அடர்கருமையாக காட்சியளிக்கும் வானம், ஹபிளின் புகைப்படத்தில் மிக விலகிய புள்ளிகளாலான புழுதிமயமாகத் தெரிகிறது. இந்த புகைப்படத்தில் காணப்படும் ஒவ்வொரு கரும்புள்ளியும் நமது சூரியனைப் போல பலநூறு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் மண்டலமாகும். மிகப் பெரும்பான்மையான நட்சத்திரங்கள் கிரகங்களால் சுற்றி வரப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பூமியைப் போன்று ஆயிரம் ஆயிரம் ஆயிரம் கோடி கோள்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. வானில் எந்த திசையில் பார்த்தாலும் நமக்கு கிடைக்கும் காட்சி இதுவே.
ஆனால் வானின் இந்த எல்லையற்ற சீர்மை ( uniformity ) நேர்க்காட்சியில் தெரிவது போல் இருப்பதில்லை. வெளி நேராக இல்லாமல் வளைந்திருக்கின்ற ஒன்று என்பதை முதல் கட்டுரையில் சொல்லியிருந்தேன். எனவே பிரபஞ்சத்தினை கடலலை போல அலைகளால் சிதறடிக்கப்பட்ட விண்மீன் மண்டலங்களும், அந்த சிதறலின் எதிரிடையாக கருந்துளைகளாலான இடைவெளியும் கொண்டதான காட்சியுருவகமாக காண வேண்டியுள்ளது. அலைகளின் தடங்களுடைய பிரபஞ்சத்தினை இவ்வாறு வரையலாம்.
விண்மீன் மண்டலங்கள் பொறிக்கப்பட்ட , அளவற்ற , நெகிழக்கூடியதான, உச்சகட்ட வெப்பமும் அடர்த்தியும் கொண்ட மிகச்சிறிய புகைமண்டலத்திலிருந்து உருவான, ஆயிரத்து ஐநூறு கோடி ஆண்டுகளாக வளர்ந்து வருகின்ற ஒன்று தான் பிரபஞ்சம் என்பதே நம் இறுதியான கண்டறிதல். ஏதேனும் ஒரு நிலை என்றில்லாமல் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வரலாற்றின் காட்சியமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறிய உருளையாக தொடங்கிய பிரபஞ்சம் பிறகு இன்றைய பிரம்மாண்ட அளவிற்கு வெடித்துச் சிதறியது. நமது உச்சகட்ட அளவீடுகளின் அடிப்படையில் இதுவே பிரபஞ்சத்தின் தற்போதைய தோற்றம்.
இதற்கு அப்பால் ஏதேனும் உள்ளதா? இதற்கு முன் ஏதேனும் இருந்ததா? அநேகமாக இருக்கலாம். இன்னும் சில கட்டுரைகளுக்குப் பிறகு அதைப் பற்றி எழுதுவேன். வேறு ஏதாவது பிரபஞ்சங்கள் உள்ளனவா? நமக்குத் தெரியாது.
