- ஆங்கிலத்தில்: லூஸி போபஸ்க்யு
- தமிழில்: ககோலியன் (பதிப்புக் குழுவிற்காக)
2003ஆம் ஆண்டு, ‘Damas de Blanco’ (வெள்ளுடுப்பு மங்கையர்) என்ற அமைப்பை கூப அரசால் சிறை வைக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களது பெண் உறவினர்கள் துவக்கினார்கள். மார்ச் 2011 ஆம் ஆண்டு, அரசுக்கு எதிராக சுவற்றில் எழுதிய பள்ளிக் குழந்தைகள் சிரியாவிலுள்ள டாரா என்ற நகரில் கைது செய்யப்பட்டபோது அது போராட்டங்களுக்கான பொறியாய் அமைந்தது. ஏப்ரல் 2022ஆம் ஆண்டு, “அரசியல் உரையாடல்கள்” இடம் பெறக் கூடாது என்று தென் ருஷ்யாவில் எலெனா பய்பெகோவா என்ற கணித ஆசிரியையின் வகுப்பில் ஒரு மாணவர் எதிர்ப்பு தெரிவித்தபின் அந்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார். உலகெங்கும் சர்வாதிகாரத்தின் விளைவுகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன.
புக்கர் பரிசுக்கான முதற்பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த நாவலுக்காக பால் லின்ச் விரிவான ஆய்வு செய்திருப்பது தெளிவு: பிராஃபட் ஸாங்குக்காக அவர் தோற்றுவித்துள்ள சர்வாதிகார அரசு முழுமையாகவே நம்பும் வகையிலுள்ளது. அரசு எதிரியென அறிவிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், அல்லது, காணாமல் போக்கப்படுகிறார்கள்; அவர்களுடன் தொடர்பில் இருந்த குற்றத்துக்காக உறவினர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆட்சியாளர்களின் கட்டளைகளைப் பின்பற்ற மறுக்கும் ஆசிரியர்கள் ஊரறிய அவமதிக்கப்படுகிறார்கள். நீதியமைப்பின் உறுப்பினர்கள் அரசுக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது அவர்களுடைய பேச்சுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அமைதியாக போராடுபவர்கள் மீதும்கூட காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. உடல்களில் சிகரெட்டை அழுத்தி அணைக்கின்றனர், உளவுத்துறையினர். குழந்தைகளும்கூட ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார்கள்.
லின்ச்சின் டிஸ்டோப்பிய நாவல் ஏதோ ஒரு அன்னிய தேசத்தில் நடப்பதாக எழுதப்படவில்லை. அது ஐரிஷ் ரிபப்ளிக்கில் அண்மைய எதிர்காலத்தில்தான் நடக்கிறது. புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நேஷனல் அலயன்ஸ் கட்சி அவசர நிலை பிரகடனம் செய்திருக்கிறது. டப்ளினில் வசிக்கும் ஆசிரியர், தொழிற்சங்கத் தலைவர், லாரி ஸ்டாக், விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். பின்னர் குற்றம் சாட்டப்படாமல் கைது செய்யப்படுகிறார். அவரது மனைவி ஐலிஷ், விஞ்ஞானி, நான்கு குழந்தைகளுக்கு தாய், சமூக ஒழுங்கு குலைவதை எதிர்கொள்கிறார், தன் குடும்பத்தைப் பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். லாரி தலைமறைவானபின், கதை அவரது மனைவி ஐலிஷ்ஷின் பார்வையில் சொல்லப்படுகிறது. குண்டர்கள் வைத்து அவரது குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடையே பரஸ்பரம் சந்தேகம் வலுக்கிறது. மிக வேகமாகவே ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது போன்ற சூழல் உருவாகிறது. இறுதியில் இது உள்நாட்டு யுத்தத்தில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிப்பதாய்ச் சந்தேகிக்கப்படும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகிறார்கள். இவை அனைத்தையும் நம்ப முடியாத திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் ஐலிஷ் தன் மகளிடம் சொல்கிறார், “நாம் உலகின் ஏதோ ஒரு இருண்ட மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. சர்வதேச அமைப்புகள் நிச்சயம் ஒரு தீர்வு காண உதவும்”.
பத்தி பிரிக்காமல், உரையாடலைக் குறிக்கும் மேற்கோள் குறிகள் இல்லாமல், தொடரும் உரைநடையில் நீண்ட பகுதிகளாய் எழுதப்பட்ட காரணத்தால் கதைசொல்லலில் ஒரு அவசரம் உருவாகிறது. தேசீய சேவைக்கு அழைக்கப்பட்ட லாரி, ஐலிஷின் மூத்த மகன் மார்க்குடன் தலைமறைவாகிறார். மார்க் எல்லைக்கு அப்பால் தப்பிச் செல்ல வேண்டும் என்று ஐலிஷ் பதட்டப்படுகிறார். ஆனால் அவன் ‘விடுதலைப் படையில்’ சேர விரும்புகிறான். ஐலிஷின் சகோதரி ஐனே குடும்பத்துடன் கனடா வந்துவிடச் சொல்லி அவளை வற்புறுத்துகிறாள். ஆனால் லாரியையும் தனது தந்தை சைமனையும் விட்டுப் பிரிய அவர் தயங்குகிறார். சைமன் மூப்பு காரணமாய் டிமென்ஷியா பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். அரசியலை கவனப்படுத்தும் நாவலில் தந்தைக்கும் மகளுக்கும் இடையேயுள்ள அந்தரங்க கணங்கள் உள்ளத்தைத் தொடுவதாய் உள்ளன. தனது தந்தையின் உடல்நலக் குலைவைக் காணும் ஐலிஷின் அச்சம் மற்றும் இயலாமையுடன் நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம் – “நரம்பு மண்டல தட்பவெப்ப நிலையின் போக்கைக் காண்கையில், காற்றுத் தாழ்வு மண்டலம் திடீர் பொழிவுக்கு மாறுகிறது, ஐந்து நிமிடங்களில் சூரியன் பிரகாசிக்கும்”.
ஏன் மக்கள் தம் வசிப்பிடங்களை விட்டு வெளியேறுகிறார்கள், ஏன் சிலர் ஆபத்தான பாதைகளிலும் கடல் பயணத்திலும் புகலிடம் தேடி பயணிக்கிறார்கள் என்பதை விவரிக்கும் சக்திகரமான நாவல் இது. போரின் ஓயாத பேரவலைத்தை லின்ச் விவரிக்கிறார் என்றாலும் அவரது புனைவு அகதிகள் எப்படிப்பட்ட உளக்காயங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதில் வெளிச்சம் பாய்ச்சி அவ்வுணர்வுகளை வெளிப்படுத்துவதால் புலம் பெயரும் அகதிகளுக்கு எதிரான உரையாடல்களை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது. கருணை மிகுந்த, முன்னோக்கிச் செல்லும், காலத்துக்கு ஏற்ற நாவல், இது வாசகர் தன் கற்பனையாற்றலைப் பிரயோகிக்க கட்டாயப்படுத்துகிறது- இதுவே நானாக இருந்தால், என்ற கேள்வியைத் தூண்டி.
(தமிழாக்கம் : வலசை காகோலியன்)
