
ஓவியம் என்பது யாதெனில் வண்ணத்தால்
காவியம் செய்யும் கலை
கிறள் (மீ.பா. சோமசுந்தரம் எழுதிய ‘நந்தவனம்’ நாவலில் இருந்து)
“உனக்கு எப்போது பணம் தேவைப்பட்டாலும் என்னைக் கேட்கணும். சரியா?”
சித்ராவின் பாதி தலையசைப்பில், ‘அதற்கு அவசியம் இராது, அப்பா!’
அவர் திருப்திக்காக…
“சரி” என்றாள்.
“செலவுக்கு எவ்வளவு வேணுமோ, அதைக் கேட்கறதுக்குத் தயங்காதே! நான் உன் அப்பா தானே.”
“அது தான் சரியென்று சொல்லிவிட்டேனே.”
“நீ எந்தவிதமான படங்கள் வரையப் போகிறாய் என்று தெரியாது.”
அவளுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. அது நிச்சயம் ஆனதும் சொல்லலாம்.
“கலையை ரசிக்கிற திறமை நிறைய பேருக்குக் கிடையாது.”
‘உன்னையும் சேர்த்து.’
அவர் மூளையில் ஒன்றுகளும் பூஜ்யங்களும் மட்டுமே.
“பசுமை சிறிதும் இல்லாமல் பட்டுப்போன மரங்களுக்கு முன்னால், ஆள் அரவமே இல்லாத வெட்டவெளியில் எரிந்து கரிந்த பைபிள். பல வருஷங்களுக்கு முன்னால் அந்தப் படம் செய்தித்தாள்களில் வெளிவந்து பிரபலம் ஆனது. அதில் ஓவியன் ஒளித்து வைந்திருந்த தகவலைப் புரிந்துகொள்ளாத காங்க்ரஸ் முட்டாள்கள் கலைகளுக்குக் கொடுக்கற பணத்தை வெட்டிவிட்டார்கள்.”
“அதைக் கேள்விப்பட்டிருக்கேன்.”
“எல்லாக்காலத்திலியும் கலைஞர்களை ஆதரிக்க புரவலர்கள் இருந்திருக்காங்க. தமிழ்நாட்டை எடுத்துண்டா அரசர்கள் காவியம் செய்த புலவர்களுக்கு பொன்னும் மணியும் தந்து சிறப்பிச்சாங்க. சிற்பிகளுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தாங்க. ராஜ்ஜியங்கள் இல்லாதபோது தயாள குணம் கொண்ட செல்வந்தர்கள் தமிழ் அறிஞர்களின் வயிற்றுப்பாட்டுக்கு வழி செய்திருக்காங்க. அப்படி நடக்காதபோது புலவர்கள் வறுமையில் வாடியதும் உண்மை.”
அப்பா பேசிக்கொண்டே போவார். கணினியில் நாள் முழுக்க வேலை. அதனுடன் பேச முடியாது. பேசலாம். ஒலியற்ற வார்த்தைகளில்.
“கவலைப்படாதீங்க அப்பா! நான் எப்படியாவது பிழைத்துக்கொள்வேன்.”
உயர் கல்விக்கு அவள் அகஸ்ட்டா ஆர்ட்ஸ் அகடெமியில் சேருவது என்று தீர்மானம் ஆகிவிட்டது.
“நீ எம்.எஃப்.ஏ. பட்டம் வாங்கியதும் டிஸ்னி, மைக்ரோசாஃப்ட், கூக்கில் இங்கெல்லாம் வேலைக்குப் போகலாம், இல்லையா?”
அப்படிச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள்.
“நான் அட்வைசரோட பேசினபோது, பட்டம் வாங்கினவர்களின் ஆரம்ப சம்பளம் சராசரியாக எழுபத்தியைந்தாயிரம் டாலர்னு சொன்னாள். கொஞ்சம் குறைச்சல் தான்.”
அப்பாவின் அளவுகோல் பணம் கொட்டும் தகவல் தொழில்.
“நீ எங்களுக்கு ஒரே பெண். சேர்த்த பணத்தை வைத்து என்ன செய்யப் போறோம்?”
“ஏன், அம்மாவும் நீயும் காற்றிலும் நீரிலும் தரையிலும் உல்லாசமாக உலகைச் சுற்றலாம். உயர் மட்ட விடுதிகளில் அடிக்கடி சாப்பிடலாம்.”
அது அப்போது. பட்டப்படிப்பின் இரண்டாவது கோடை விடுமுறையின் போது அவள் தாய்க்கு லுகீமியா என்பது நிச்சயம் ஆனது. கிறிஸ்மஸ் விடுமுறைக்கு முன்பே அவள் அதன் வேதனையில் இருந்து விடுதலை அடைந்ததில் அப்பாவுக்கும் பெண்ணுக்கும் நிம்மதி. சிறிது காலம் போனதும்,
“நீ மறுமணம் செய்து கொள்வது தான் அம்மாவின் விருப்பமாக இருந்திருக்கும்” என்று அப்பாவுக்கு அறிவுரை வழங்கினாள்.
“அவள் அப்படிச் சொன்னது உண்டு. விதவை அல்லது கொடுமையான திருமண பந்தத்தை முறித்தவள் கிடைக்கட்டும்.”
அப்படி யாரும் அதுவரை அவர்களாகவே அவர் வாழ்வில் நுழையவில்லை. அவள் அறிந்தவரையில் அவரும் தேடிப்போகவில்லை.
ஓவியக்கலையில் இருந்து அவள் மனதை மாற்றமுடியாது என்று தெரிந்ததும் இன்னொரு அறிவுரை.
“துணைக்கு இன்னொரு கலைஞனைத் தேடாதே! நிதி, ஆலோசனை, சட்டம் இப்படி.”
“உடலை அசைக்காமல் அடுத்தவர் பணத்தைத் தாராளமாகத் தன் பக்கம் தள்ளிக்கொள்ளும் தொழில்கள்.”
“அதில் என்ன தப்பு? அவன் டாலர் கொண்டுவரான். நீ கலையை வளர்க்கிறாய். உனக்குப் பாதுகாப்பு. அவனுக்கு திருப்தி.”
“மனசாட்சி என்று இருந்து அது தொந்தரவு கொடுத்தால் ஒரு நல்ல காரியத்துக்கு உதவுவதாக அவன் சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.”
“அப்படித்தான் இருக்கட்டுமே. ஒரு குடும்பத்தில் இரண்டு கலைஞர்கள் இருந்தால், காரை ரிப்பேர் செய்வதா இல்லை, வீட்டு வாடகையைத் தள்ளிப்போடுவதா என்று கணக்குப் பார்க்கணும்.”
அப்பா மட்டுமல்ல. அவர் நண்பரும் அதையேதான் சொன்னார். அவருடைய ஒரு பையனும் பெண்ணும் சிறப்பு மருத்துவர்கள், இன்னொரு பையன் வருமானவரி சட்டங்களின் ஓட்டைகளை ஒரு சரக்கு ஊர்தி நுழையும் அளவுக்குப் பெரிதாக்கினான்.
“நீ பட்டம் வாங்கியதும் உனக்கு நல்ல வருமானத்தில் என்ன வேலை கிடைக்கும்?”
கேள்வியின் அலட்சிய தொனியில், ‘கிடைக்காது.’
“நான் அதைப்பற்றி யோசித்ததே இல்லை.”
“ஏன்?”
“உங்கள் பையன்களில் ஒருவனை வளைத்துப்போடுவதாக இருக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அவர் அதை வேடிக்கையாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களை அவள் சந்திக்காமல் பார்த்துக்கொண்டார்.
பட்டம் வாங்கும் வைபவத்துக்கு அப்பா வந்தார். அதன் பரபரப்பு அடங்கியதும் எதிர்காலம் பற்றிய கேள்வி.
“மற்றவர்களைத் திருப்தி செய்கிறபடி படம் வரைய எனக்கு இஷ்டம் இல்லை. சுதந்திரமாகத் தொழில் நடத்தப் போகிறேன். இப்போது தான் இன்டெர்நெட் இருக்கிறதே. அதில் என் சித்திரங்களை விற்பனைக்குப் போடுவேன். பெயர் வர சில வருஷங்கள் ஆகும். பிறகு செலவுக்கேற்ற வருமானம். நடுவில் புத்தகங்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு கிடைக்கும்.”
“எந்தவிதமான படங்கள்?”
“நிச்சயமாகச் சொல்வதற்கு இல்லை. ஆனால், என் எல்லா ஓவியங்களிலும் பொதுவான ஒரு அம்சம் இருக்கும்.”
“அது என்னன்னு சொல்! எனக்குப் புரிகிறதான்னு பார்க்கலாம்.”
“என் பள்ளிக்கூடத்தின் கடைசி வருஷம். சென்னையில் நாம் ஒரு கல்யாணத்துக்குப் போனோம்.”
“அம்மாவும் கூட வந்தாள்.”
இருவர் மனதிலும் அவள் நடந்துசெல்ல, அஞ்சலி செலுத்தும் மௌனம்.
“உனக்கு சித்ரா என்கிற பெயரை மட்டுமல்ல, உன் கலை உணர்வையும் அம்மா தான் கொடுத்திருக்கிறாள்” என்று அப்பா மௌனத்தைக் கலைத்தார்.
“நாம் மண்டபத்தில் நுழைந்தபோது பூமாலைகள், மலர்கள், தரையில் கோலங்கள், அலங்காரங்கள், வண்ண பட்டுப் புடவைகள், மந்திரங்கள், வேள்வித்தீ, அங்குமிங்கும் அலைந்த குழந்தைகள், கண்ணுக்குக் குளிர்ச்சியான பதின்பருவப் பெண்கள்.”
“இதெல்லாம் திருமணத்தின் பின்னணி.”
“எனக்கு அப்படித் தோன்றவில்லை. அந்த சந்தடி என்னைத் தயார் செய்த பிறகுதான் மணமக்களைப் பார்த்தேன். சூழலுக்கு ஏற்றபடி அவர்கள் முகத்தில் பரவசம், எதிர்ப்பார்ப்பு, கொஞ்சம் அச்சம். உடல் மொழியில் ஒரு பரபரப்பு.”
அவர் மனதில் அக்காட்சி விரிந்தது.
“என் படங்களில் பின்னணி முதலில் கண்ணில் படும். அது சித்திரத்தில் இருக்கும் மனிதர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள, பார்ப்பவர்களைத் தயார் செய்யும்.”
“அதற்காக …”
“பின்னணி பல விவரங்களுடன் தனித்து நிற்கும். அதை ரசித்ததும் மனிதர்களின் உணர்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.”
“நீ படங்கள் வரைந்ததும் எனக்கு அனுப்பு! முதல் போணி என்னுடையது.”
தந்தையின் எச்சரிக்கையை அறிவுரையை கோடை காலத்தை ஆரம்பித்து வைத்த அந்தத் திங்கள்கிழமை முதன்முதலாக சித்ரா உணர்ந்தாள்.
‘அப்பா! ஞாபகம் இருக்கா?’
‘எது?’
‘நான் அகஸ்ட்டா அகடெமி போறதுன்னு முடிவு செய்ததும் நீ…’
காலையில் விழித்ததுமே ‘ஷார்ப்பர்’ பதிப்பகத்தின் ஏஞ்சல் டியாகோ அனுப்பிய சோகச் செய்தி.
- புத்தகம் நவீன வடிவத்தில் வெளிவரப்போகிறது. அதனால் அதன் சித்திரங்களும் புது வழியில் தயாரிக்கப்படும்.
- உனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். இது விற்பனை ஆட்கள் செய்த தீர்மானம். நான் செய்யக்கூடியது எதுவும் இல்லை.
ஏஞ்சலுடன் பேச்சளவில் நடந்த ஒப்பொந்தத்தில் சித்ராவின் ஆறுமாதத் தேவைகளை சந்திக்கும் வருமானம். அது மட்டுமல்ல, அதன் வழியாக அவள் கற்பனை வளம் கொண்ட தரமான ஓவியராக அறியப்படுவாள் என்கிற எதிர்பார்ப்பு.
அவள் வங்கிக் கணக்கையும் சாப்பாட்டு அலமாரிகளையும் திறந்து பார்த்தாள். இரண்டிலும் நிரப்புவதற்கு நிறைய இடங்கள்.
அன்று சில மணி நேரம் கழித்து நடந்ததை அவள் சித்திரமாக வரைந்தால்…
முதலில், பின்னணி.
ஒரு வரவேற்பு அறை. சொகுசான சோஃபா. சீராக வர்ணம் பூசிய சுவர்கள். பின்னால் மாட்டிய கண்ணாடியில் எதிர்ப்பக்கச் சுவரில் பதித்த தொலைக்காட்சித் திரையின் பிம்பம். சற்றுத்தள்ளி சமையலறையின் நவீன அடுப்பும், ஒரேயொரு கோப்பை காபி தயாரிக்கும் இயந்திரமும் தெரிகின்றன. சோஃபாவின் ஓரத்தில் ஒரு பெண். வெளியில் அணியும் கௌரவமான ஆடையில் இருந்து அவள் வருகை தந்தவள் என்பது தெரிகிறது. கட்டம்போட்ட சாதாரண சட்டை அணிந்து கைகளைக் கோர்த்து முன்பக்கமாகச் சாய்ந்து அமர்ந்திருந்த ஆண் இருக்கையின் இன்னொரு கோடியில். அவள் சோக முகம் அவன் பக்கம் திரும்பி இருக்கிறது. அவனுடைய கருமை படர்ந்த முகம் அவள் பக்கம் திரும்பி இருந்தாலும் அவன் பார்வை அவளையும் தாண்டி தொலைவில்.
உடல் மொழியில் இருந்து அவர்களுக்குள் நடந்த உரையாடலை ஊகிக்க முடிகிறது.
“செலவுகளைக் குறைக்க நம் இரண்டு இல்லங்களை ஒன்று சேர்த்தால்…”
“அது எப்படி முடியும்?”
“இம்மாத முடிவில் அபராதம் இல்லாமல் என் இடத்தைக் காலி செய்து நான் இங்கே நகரலாம்.”
“நீ மட்டும் வந்தால் சமாளிக்கலாம். உன்னோடு ஒரு வண்டி நிறைய உன் உபகரணங்கள்.”
“அதிகம் புழங்காத பின்புறத்துச் சின்ன அறை…”
“அங்கே இப்போது என் அலுவலகம். அதை சித்திரக்கூடமாக மாற்றினால் வர்ணங்கள் கம்பளத்தில் சிந்தலாம். காற்றோட்டம் குறைச்சல். வீட்டிலிருந்து வேலை செய்யும்போது அது எனக்குத் தொந்தரவாக இருக்கும்.”
“சரி, நீ என் இடத்துக்கு.”
“அங்கே என் டெஸ்லாவை வெளியில் நிறுத்த வேண்டும்.”
அது மழையிலும் வெயிலிலும் வாடி வதங்கி…
“குறைவான வாடகையில் வீடு அகப்பட்டால் நான் கூப்பிட்டுச் சொல்கிறேன்.”
அது உரையாடலுக்கு முற்றுப்புள்ளி.
இரண்டாவது ஏமாற்றத்தைச் சுமந்து வீட்டிற்கு நடந்தபோது,
தந்தையிடம் உதவி. அதை எப்படி கேட்பது?
‘எல்லாக்காலத்திலும் புரவலர்கள் ஆதரிக்காதபோது கலைஞர்கள் வறுமையில்…’ என்று ஆரம்பித்து, ‘வர்த்தக உலகத்துக்கு கலைரசனை கிடையாது’ என்று அவரைத் தயார் செய்து, ‘என் ஒரு மாத செலவு…’
அலைபேசியை எடுத்து தந்தையின் தொடர்பை அழுத்தப்போன போது விரல் மூளையின் ஆணையைச் செயல்படுத்த மறுத்தது.
ஏன்?
இன்னொரு வழி.
அவள் கற்பனையில் எழுதிய ஓவியத்தை ஒருநாளில் வரைந்து, ‘இது விற்பனைக்கு அல்ல’ என்கிற தலைப்புடன், அவருக்கு அனுப்பினால், அவர் அதைப் பார்த்துவிட்டு அவளை அழைப்பார். அப்போது ஏஞ்சல் டியாகோவையும் அவள் ஆண்-தோழன் கைவிட்ட கதையையும் வெட்டிவிட்டு நேரடியாக,
‘உன்கிட்ட பண உதவி கேட்கலாம்னு நீ சொன்னது ஞாபகம் இருக்கா?’
‘அவனை நான் சந்தித்தபோது ஆசாமி பிடிகொடுத்துப் பேசவில்லை. அப்போதே அவனைக் கழட்டிவிட்டு இருக்கலாம்’ என்று அவள் நிலைமைக்கு அவளே காரணம் என்று குற்றம் சுமத்த மாட்டார். சரியான ஆண்துணை கிடைப்பது எவ்வளவு சிரமம் என்று அவருக்குத் தெரியும்.
‘நிச்சயமா இருக்கு.’
‘இப்போ அந்த நிலைமை.’
‘எவ்வளவு பணம் வேணும்?’
அரசாங்கத்திடம் வருமானம் இல்லையென உதவி வாங்க முடியுமோ?
முடியலாம். அது எவ்விதத்தில் உயர்ந்தது?
அக்கேள்விக்கு பதில் தேடுமுன், அலைபேசி அழைப்பு வந்ததை அறிவிக்க… அவளுடன் அகஸ்ட்டா ஆர்ட்ஸ் அகடெமியில் சில ஆண்டுகளைச் செலவழித்த மித்ரா.
“ஹாய் மித்ரா!”
“ஹாய் சித்ரா!”
“என்ன விஷயம்?”
“ஒரு தொடர் சித்திரத்துக்கு ஆலோசனை கொடுக்க அட்லான்ட்டா வந்தேன். மதியம் திரும்பிப் போகிறேன். அதற்கு முன்?”
“ம்ம்… சந்திப்போம்.”
அவள் குரலின் தொனியில் இருந்து,
“உனக்கு ஏதோ கவலை என்று தெரிகிறது. அப்போது அதைச் சொல்!”
ஒரு கணம் யோசித்தாள்.
அலைபேசி வழியாக ஒலியும் படமும் இருந்தாலும் தந்தையிடம் நேரில் உதவி கேட்பது சுலபமாக இருக்கும். அது கூட வேண்டாம். அவள் முகத்தைப் படித்து அவரே,
‘ஏன் ஒரு மாதிரியா இருக்கே? செலவுக்கு பணம் வேணுமா? எவ்வளவுன்னு சொல்!’
‘பணத்தைவிட தங்குவதற்கு ஒரு இடம் உடனே வேண்டும். இங்கே வீட்டின் கீழ்த்தளத்தில் என் ஓவியக்கூடம். தரை அழுக்கானால் கவலைப்பட வேண்டாம். மாத சாப்பாட்டு செலவு கொஞ்சம் அதிகமாகும்.’
‘அவ்வளவு தானே. நாளைக்கே போய் இடத்தைக் காலிசெய்து, கணக்கைத் தீர்த்துவிட்டு, உன் சாமான்களை எடுத்துண்டு வந்துடுவோம்.’
“சித்ரா!” என்று நிகழ்காலத்துக்கு அவளை இழுத்தான்.
“திடீர்னு எனக்கு ஒரு ஐடியா.”
“சொல்!”
“நீ இப்போ கூப்பிட்டதில் என் பிரச்சினைக்குத் தீர்வு இருக்குன்னு நினைக்கிறேன். நான் உன்னோட வரேன்.”
“தாராளமா வா! பேச்சுத்துணை இருந்தா நாலரை மணி நீளமாகத் தெரியாது.”
தந்தைக்கு ஒரு தகவல்
– மித்ரா அழைத்துவர நம் வீட்டுக்கு வருகிறேன்.
அப்பாவுக்கு அந்தத் தகவல் பிடித்திருந்தது.
மித்ரா வருவதற்குள், மிச்சம் இருந்த காய்கள், பழங்கள்…
வீட்டு வாசலிலேயே காத்திருந்தாள். மித்ரா ஊர்தியை நிறுத்தி அவள் பெட்டியைப் பின்னால் வைத்தான். சாப்பாட்டுக் கூடையில் அவன் பார்வை விழுந்ததும்,
“கூட்டிப்போறதுக்குக் கூலி.”
உயரக்கட்டடங்கள், நெடுஞ்சாலையில் ஐந்தாறு தடங்கள். அவை மூன்றாகக் குறைந்ததும், ஓய்விடம்.
நிழல் கொட்டகையில் நிதானமாக மதிய உணவு. சான்ட்விச், சீஸ் கலந்த பழத்துண்டுகள், காப்பி.
“மித்ரா! நீ அதிருஷ்டசாலி.”
அவன் கலை முயற்சிகளுக்கு மாளவிகா துணையாக இருப்பதைக் குறிப்பிடுகிறாள் என்று தெரியும். ஒப்புதலாகப் புன்னகைத்தான்.
அப்படி அவளுக்கு யாரும் இல்லை என்பது குரலின் தொனியில்.
அவளே விவரம் சொல்லட்டும்.
“‘ஆஃப் ஹியுமன் கம்யுனிகேஷன்’ வெளிவர இருக்கும் ஒரு புத்தகம்.”
“மனிதர்களைப் பற்றி செயற்கை மூளை எழுதியது இல்லையே.”
“இல்லை. பொது மக்களுக்குப் புரிகிறமாதிரி ஒரு அறிவியல் வரலாறு என நினைக்கிறேன். புத்தகத்தைப் படித்து பொருத்தமான பத்துப் பன்னிரண்டு படங்கள் வரைய ஒரு மாதம். இன்று கைவிரித்து விட்டார்கள்.”
சுதந்திரக் கலைஞர்களின் நிலையற்ற வருமானம் அவனுக்குத் தெரியும். வருத்தம் தெரிவிப்பதில் அர்த்தம் இல்லை.
“மாதத்தில் பெரிய செலவு வீட்டு வாடகை. அவன் இடத்துக்கு நகரலாமான்னு கேட்டேன்.”
அதன் பதில் அவள் முகத்தில்.
“அப்பாவிடம் உதவி கேட்கத் தயக்கமா இருக்கு.”
தன் பெற்றோரின் நிழலில் சிலகாலம் வாழ்ந்ததை மித்ரா நினைத்தான்.
“துணையைக் கேட்பதற்கும் பெற்றோரைக் கேட்பதற்கும் என்ன வித்தியாசம்?”
மித்ராவின் எண்ணம் வார்த்தையாக வெளிப்பட்டது.
“அந்த கேள்விக்குப் பதில் சொல்கிற மாதிரி ஒரு நாடகம் தயாரிக்கப் போறியா?”
“இல்ல, நிஜமாகத்தான் கேட்கறேன்.”
“ஒரு குடும்பப் பந்தத்தில் இருவரும் ஒன்று. மாளவிகாவும் நீயும் போல. குழந்தையை வயது வரும் வரை வளர்த்து, தொழிலுக்கு வேண்டிய படிப்புக்குச் செலவு செய்வதுடன் பெற்றோரின் கடமை முடிந்துவிடுகிறது. ஆடிசம் இல்ல டௌன் சின்ட்ரோம் குழந்தைகளை வளர்ந்தபிறகும் காப்பாற்றணும். எனக்கு எந்த குறைபாடும் இல்லையே.”
“உன் அம்மா உயிரோடு இருந்தால் உதவி கேட்பது சுலபமாக இருந்திருக்குமோ?”
அந்த சாத்தியத்தை சித்ரா யோசித்தாள்.
“உண்மை தான்.”
உணவு தீர்ந்தது, உரையாடலும் முடிந்தது. ஊர்தியில் திரும்ப ஏறியதும்,
“கவலைப்பட்டது போதும். நீ அட்லான்ட்டா வந்த கதையைச் சொல்!”
நெடுஞ்சாலையில் இருந்து வெளியே வந்ததும் தந்தைக்கு ஒரு தகவல்.
- இன்னும் பத்து நிமிடங்கள்.
அவள் வளர்ந்த இல்லத்தின் முன் ஊர்தி நின்றது. இறங்கினார்கள். அவள் கூடையை எடுத்துக்கொள்ள, மித்ரா பெட்டியை எடுத்து வைத்தான்.
“திரும்பிப் போவதற்கு முன் ஒரு முறை சந்திப்போம்” என்றான்.
‘ஒரு முறை மட்டும் தானா?’ என்பதை ஒரு புன்னகையில் பதித்து விடைகொடுத்தாள்.
கதவைத் திறந்த அப்பா முகத்தில் பரவசம். ஏதோ புதிய செய்தி சொல்லப்போகும் ஆர்வம். உள்ளே நுழைந்து பெட்டியையும் கூடையையும் தரையில் வைத்த சித்ராவும் வருகையின் காரணத்தை வந்தவுடனேயே சொல்வது சரியில்லை என நினைத்தாள். குறும்புப் புன்னகையை வரவழைத்து,
“எனக்கு ஒரு ஸ்டெப்-மதர். படத்தைக் காட்டு, பார்க்கலாம்!”
“அது அறிமுகக் கட்டத்தில்.”
“அந்த மட்டிலும் சந்தோஷம்.”
“இது வேறொரு விஷயம்.”
அவள் தந்தை சாப்பாட்டு மேஜைக்கு நடக்க சித்ரா பின்தொடர்ந்தாள்.
“குடிக்க இளநீர்?”
“ம்ம்..”
இரண்டு குளிர்ந்த பாக்கெட்டுகளை எடுத்துவந்து வைத்தார்.
நாற்காலியில் உட்கார்ந்த வேகத்தில் அவள் ஒன்றைக் காலிசெய்ய, அவர் நிதானமாக அமர்ந்து அதன் மூடியைத் திறந்தார்.
“எனக்குக் கலை உணர்வு இல்லை என்று நீ நினைத்திருக்கலாம்.”
“என்னைவிடக் கொஞ்சம் குறைச்சல், அவ்வளவுதான்” என்றாள் சமாதானமாக.
“இது எங்கள் காலம்.”
“யார் அந்த ‘எங்கள்’?”
“நாங்கள் ஆங்கில இலக்கணமும் வார்த்தைகளும் முறையாகக் கற்றுக்கொள்ளாவிட்டால் என்ன? எழுதும்போதே எழுத்துப்பிழைகளைத் திருத்தி வாக்கியங்களைச் சீர் செய்ய ‘ரைட்ஸாரஸ்’. கற்பனை வறண்டுவிட்டால் இப்போது செயற்கை மூளை ‘சாட்ஜிபிடி’.”
“ஒரு வக்கீலுக்கு அது தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் அத்தனையும் பொய்” என்று அதை மட்டம் தட்டினாள்.
“அந்தத் தொழிலை அது நன்றாகத் தெரிந்துவைத்து இருக்கிறது.”
“சரி, ‘சாட்ஜிபிடி’ போல…”
“சித்திரம் வரைய ‘ரவிவர்மா’.”
சித்ரா அது வரைந்த படங்கள் பலவற்றை வலைத்தளத்தில் மற்றும் அச்சில் பார்த்திருந்தாள். ‘ரவிவர்மா’வைப் போட்டியாக அவள் நினைக்கவில்லை. இணைய எழுத்தாளர்கள் தங்கள் கட்டுரைகளை அதிகம் செலவு செய்யாமல் அலங்கரிக்க – ஒரு போர்க்காட்சி, மாலை நேரத்தில் ஒரு கஃபே, வேக ரயிலில் பயணிக்கும் தாயும் மகளும் – இப்படி சாதாரண படங்கள். மரபுகளை மீறாத அவற்றைக் கலையில் சேர்ப்பதற்கு இல்லை. உயர்வான கற்பனையோ, மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வர்ணங்களோ அவற்றில் இல்லை. ஒரு ஆழமான கருத்தை, வாழ்க்கைத் தத்துவத்தை ஒரு மனித ஓவியரால் தான் படத்தில் கொண்டுவர முடியும். அதனால்,
“எனக்கு ‘ரவிவர்மாவை’ப் போன்ற செயற்கை மூளைகளால் ஆபத்து இல்லை” என்றாள்.
“அவ்வளவு நிச்சயமாக இருக்காதே!”
“ஏன்?”
இளநீரை சுவைத்தபடி,
“‘ஆஃப் ஹியுமன் கம்யுனிகேஷன்’ என்று ஒரு பிரபலமான அறிவியல் புத்தகம். விரைவில் வெளிவரப்போகிறது. ஒரு காலத்தில் முக பாவங்களாலேயே குரங்குகளைப் போல உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டோம். பிறகு தகவல்களை உள்ளடக்கிய வார்த்தைகள். முக்கியமாக அவற்றின் தொனிகள். அதனால் தான் மங்களூரில் இருந்தபோது என் அம்மாவும் அடுத்த வீட்டுக்காரியும் ஒருவருக்கு மற்றவர் மொழி அதிகம் தெரியாவிட்டாலும் எப்படியோ வீட்டுக்கதைகளை மணிக்கணக்காகப் பேசுவார்கள். இப்போது கிட்டத்தட்ட எல்லாருமே ஆங்கிலத்தைப் பயன்படுத்தினாலும் ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் புரிவதில்லை. பேபல் கோபுரத்தில் இருக்கிறோம்.”
“புத்தகம் சுவாரசியமாக இருக்கும்போல் தெரிகிறது” என்று அசுவாரசியமாகச் சொன்னாள்.
“பிடிஎஃப் வடிவத்தை ஒரே நாளில் படித்துமுடித்தேன்.”
“உன் புதிய சிநேகிதியிடம் பெருமை அடித்துக்கொள்ளவா?”
கேள்வியின் கேலியை ஒதுக்கிவைத்து,
“அது, அத்துடன் இன்னொரு காரணம். அந்தப் புத்தகத்துக்கு பன்னிரண்டு சித்திரங்கள் தயாரிக்க வேண்டும்.”
“அதற்கு நீ.”
“நான் தான்.”
அவள் தந்தையே அவளுக்குப் போட்டி.
“உனக்கே தெரியும். கணினியில் நாம் என்ன நுழைக்கிறோமோ அது தான் வெளியில் வரும். ‘ரவிவர்மா’விடம் நிறைய விவரங்கள் கொடுத்து வரையச் சொன்னால் எல்லாவற்றையும் ஜீரணித்துத்து நான்கு சாதாரண படங்கள் கொடுக்கும்.”
“நீ அப்படிச் செய்யவில்லை.”
“ஊகும். நான் அதனிடம் கேட்ட படங்களின் முக்கிய அம்சம் – உரையாடும் இரு மனிதர்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் இடம். மீதி அதன் கற்பனைக்கு.”
சில மணி நேரத்துக்கு முன் அவள் கற்பனையில் தோன்றிய சித்திரத்தை நினைத்தாள். இபத்தியோராம் நூற்றாண்டின் கால் பகுதி முடியும் காலம்; கலை உணர்வு இல்லாத நாகரிக இருப்பிடம்; படுக்கையை ஆனால் இல்லத்தைப் பகிர்ந்துகொள்ளாத இருவார்.
“புத்தகத்தின் எல்லா படங்களும் வெவ்வேறு காலங்களையும் சூழல்களையும் மனிதர்களையும் சித்தரித்தாலும் அவற்றுக்கு ஒரு பொதுவான பாணி இருப்பது நல்லது.”
“அதாவது, ஒரு ஓவியர் வரைந்த மாதிரி.”
“கரெக்ட். அதற்காக வலைத்தளத்தில் தேடிப்பிடித்து பொருத்தமான ஒரு ஓவியரின் பல படங்களை ‘ரவிவர்மா’வில் புகுத்தினேன்.”
“அவர்?”
“சொல்கிறேன். முதலில் படங்களைப் பார்!”
சுவரில் மாட்டியிருந்த திரையை ஒளிரச்செய்தார்.
முதல் படம்.
மழைக்காட்டின் பசுமையான பலவகை இலைகள். குளிர்ச்சி தரும் நீர்த்துளிகள். மரங்களின் ஒரு கிளைக்கொம்பில் ஒரு குரங்கின் சிவந்த முகம். புஷ்பங்கள் அழகுசெய்த தெளிந்த நீரோடையின் கரையில் இருவர். அவர்கள் ஒரு கொம்பில் பூத்த இரு மலர்கள், இயற்கையின் அங்கம். முகத்தில் ஆழ்ந்த சமனநிலை. திறந்து காட்டாமலே ஒருவரின் எண்ணங்கள் இன்னொருவருக்குத் தெரியும் என்பது அதில் வெளிப்படுகிறது.
“ரவிவர்மாவிடம் நீ கேட்டது…”
“ஆப்பிரிகாவில் ஆதி மனிதர்கள்.”
முதன்முதலாக அவளுக்கு ‘ரவிவர்மா’ மேல் மதிப்பு வந்தது.
அடுத்ததாக…
ஒரு சாதாரண இல்லம். பொருட்கள் அதிகம் இல்லை. சுவரின் பல இடங்களில் வர்ணம் அழிந்து, சில இடங்களில் வேறொரு நிறத்தில் பூசிய திட்டுகள். நாற்காலிகளில் நடுவயதைத் தாண்டிய ஆணும் பெண்ணும். பருத்தியிலும் கம்பளியிலும் தைத்த அவர்கள் ஆடைகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தைக் குறிப்பதாகத் தோன்றியது. முகத்தில் ஆழ்ந்த சிந்தனையைக் காட்டிய அப்பெண்ணின் வார்த்தைகளில், அவள் முகத்தில், கை விரல்களின் அசைவில் ஆணின் முழு கவனம். கட்டை விரலுக்கும் பிற விரல்களுக்கும் நடுவில் முகவாயைத் தாங்கி சற்று அவள் பக்கம் குனிந்து அவள் பேசி முடிப்பதற்கு அவன் காத்திருக்கிறான். அவள் நிஜம், அவன் நிஜம், அவள் சொல்லும் கதையும் நிஜம்.
“அவள் பேசும்போது அவன் குறுக்கிட மாட்டான் என்பதைப் படம் அழகாகக் காட்டுகிறது” என்றாள்.
“இது உனக்கு மிகவும் பிடிக்கும்” என்ற முன்னுரைக்குப் பின், “நான் கொடுத்த விவரம்: பிராண சிநேகிதர்கள்; இடம் ஒரு ஐரிஷ் பப்.”
படம் விரிந்ததும் சித்ரா சித்திரம் போல உறைந்தாள். ஆகா! என்ன அற்புதமான ஓவியம்! இதை வரைந்தது நிஜமாகவே கற்பனைவளம் நிறைந்த உன்னத ஓவியர்.
தொங்கும் பழங்கால விளக்கின் மங்கிய ஒளியில் விடுதியின் எல்லா விவரங்களும் தெரிகின்றன – பல அளவுகளில் புட்டிகள் அடுக்கிய அலமாரி, தாறுமாறாக வர்ணம் பூசிய சுவர், ஓரங்கள் உடைந்த மேஜை. அதன் மேல் இரண்டு கோப்பைகள்.
வெண்ணிற தாடி, தொப்பிகள் மறைக்காத நரை மயிர், சுருக்கங்களும் பள்ளங்களும் நிறைந்த சுமுகமான முகங்கள். அவற்றில் என்ன தத்ரூபமான வெளிப்பாடுகள்! காலமெல்லாம் தோழமை கொண்டாடிய இருவர். பரஸ்பர அன்பு, நம்பிக்கை, ஒருவரின் ரகசியங்களையும் குறைபாடுகளையும் மற்றவர் அறிந்த அன்னியோன்யம். உரையாடலில் ஒரு இடைவெளி. அந்தக் கணம் சித்திரத்தில் உறைந்திருக்கிறது. ஒருவர் ஏதோ சொல்ல நினைக்கிறார். அதற்கு சரியான வார்த்தைகளைத் தேடுகிறார். அடுத்தவர் பொறுமையுடன் காத்திருக்கிறார். இடைவெளி என்று ஏன் அதைச் சொல்ல வேண்டும். அதுவும் உரையாடலின் ஒரு அங்கம். அப்போதும் எண்ணங்கள் இடமாறுகின்றன. ஒரு பானம் வாங்கி அவர்களுக்கு அடுத்த மேஜையில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்க முடிந்தால்… சந்திப்பு முடிந்ததும் அவர்களுடன் நடந்து அவர்கள் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் விவரங்களைக் கேட்க முடிந்தால்…
பார்ப்பவர்களின் சிந்தனையைத் தூண்டுவது தான் கலையின் உச்சம்.
அவள் மூளையில் ஒரு பொறி.
“டாட்! உண்மையைச் சொல்! “
“உன் ஆரம்ப முயற்சிகளுக்குப் பிறகு நீ வரைந்து எனக்கு அனுப்பிய எல்லா தரமான படங்களின் மின்வடிவங்களையும் (ஜேபெக்) ‘ரவிவர்மா’வுக்குக் காட்டினேன்.”
அவற்றையெல்லாம் பார்த்து, அவள் ஓவியங்களின் பொதுவான அம்சத்தைப் புரிந்துகொண்டு அதே பாணியில் காலத்துக்கு ஏற்றபடி இந்தப் படங்களை அது வரைந்திருக்கிறது. என்ன சாமர்த்தியம்!
“இதைப் பார்!”
உயிர்த்தோழிகள்.
நடக்கும் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு கஃபே. சுவர்களில், மேஜையில், காபி தயாரிக்கும் இடத்தில் வண்ணச்சிதறல்கள். வலப்பக்கத்தில் கோப்பையைக் கையில் எடுத்த பெண்ணுக்கு மகிழ்ச்சி பொங்கிவழிகிறது. எதிரில் இருந்தவளின் முதுகு வளைவில், முகச்சாய்வில் வருத்தம். அவள் கோப்பையைப் பார்த்துச் சொல்லும் சோகக்கதை என்னவாக இருக்கும்? வேலையின் சுமை, அலட்சியம் செய்யும் ஆண் தோழன், பணிவிடை தேவைப்படும் பெற்றோர்கள், எதிர்பாராத பணச்செலவுகள். சொல்லி முடித்ததும் மற்றவளின் உற்சாகம் அவளை மெல்லப் பற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்க வைக்கிறது.
“பெண்கள் இன்னும் வார்த்தைப் பரிமாற்றங்களை மறந்துவிடவில்லை” என்று தன் இனத்துக்குப் பெருமைப்பட்டாள் சித்ரா.
நேரம் கொடுத்திருந்தால் அவள் அப்புத்தகத்துக்கு வரைந்த ஓவியங்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் தரமாக இருந்திருக்கும் என்ற எண்ணம் மகிழ்ச்சி தரவில்லை.
கடைசி படத்தைப் பார்த்ததும் அவளுக்கு எது நிஜம் எது கற்பனை என்கிற குழப்பம்.
“இப்போது நம் உரையாடல்களில் தகவல் பரிமாற்றம் இல்லை என்பதைச் சித்தரிக்கும் படம். ‘ரவிவர்மா ‘காட்டிய நான்கில் இது எனக்குப் பிடித்திருந்தது. இப்படத்தில்… பெண்ணின் வார்த்தைகளையும், உணர்ச்சிகளையும் அவற்றின் வழியே அவளுடைய நிலைமையையும் ஆண் புரிந்துகொள்ளவே இல்லை. ஒரு அரசியல்வாதி போல அவன் எண்ணங்கள் அவனைச் சுற்றியே” என்று தந்தை அறிமுகம் செய்ய…
ஒரு வரவேற்பு அறை. சொகுசான சோஃபா. சீராக வர்ணம் பூசிய சுவர்கள்… அவள் சோக முகம் அவன் பக்கம் திரும்பி இருக்கிறது. அவனுடைய கருமை படர்ந்த முகம் அவள் பக்கம் திரும்பி இருந்தாலும் அவன் பார்வை அவளையும் தாண்டி தொலைவில்…
படத்தையே சில நிமிடங்கள் உற்றுபார்த்த சித்ராவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடி பணத்தேவை மறந்துவிட்டது.
அவள் யார்? அவளுக்கும் கோடிக்கணக்கான கட்டளை நிரல்களால் உருவான ‘ரவிவர்மா’வுக்கும் என்ன உறவு? கலைத்திறனில் ‘ரவிவர்மா’வால் இயலாமல் அவள் மட்டுமே சாதிக்கக்கூடியது எதாவது இருக்கிறதா?
“சித்ரா! உன் அழுகையின் காரணம் எனக்குத் தெரியும்” என்று தந்தை ஒரு காகிதத்துண்டை நீட்டினார்.
அதனால் தன் கண்ணீரைத் துடைத்தாள்.
“அழுகையை நிறுத்திவிட்டு, சிரி!”
“சிரிப்பதற்கு எதாவது காரணம் சொல்!”
“இந்த ப்ராஜெக்ட்டுக்கு ‘ஷார்ப்பரி’டம் அறுபதாயிரம் டாலர் வாங்கினேன். நியாயப்படி அது உனக்குத் தான்.”
