Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

சொல்லாத கதைகள்

ஸ்பாரோ (SPARROW- Sound & Picture Archives For Research on Women)

வாய்மொழி வரலாற்றுப் பயிலரங்கில் பெண்களின் பதிவுகள்

வாய்மொழி வரலாற்று பயிலரங்குகள் ஸ்பாரோவின் செயல் திட்டங்களில் முக்கியமான பங்கு வகிப்பவை. பெண்களின் பாடல்களும் நாட்டுப்புற பாடல்களும் கதைப் பாடல்களும் கதைகளும் நம் பண்பாட்டில் பாரம்பரியமாக வாய்மொழி வரலாற்றைக் கட்டமைத்து வருகின்றன. இன்றும் பேச்சு மொழி சமகாலப்  பொருத்தப்பாட்டுடன் உயிர்ப்போடு நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்றுவரை குரல் நெரிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அனுபவங்களுக்குக்  குரலும் மொழியும் அளிப்பது வாய்மொழி வரலாற்றைப் பாதுகாக்கும் பணியாகும். மௌனம்காக்கப்பட்டவை வெளிப்பாடு கொள்ளும் போது  அந்த வெளிப்[பாடு  பரஸ்பரத்  தொடர்பிற்கும் உறவிற்கும் பகிர்தலுக்கும் இட்டுச்செல்கிறது.  இதனைக் கருத்தில் கொண்டு பெண்கள் சிலரைக் குறைந்த அளவு பார்வையாளர்களுடன் கலந்துரையாட ஸ்பாரோ ஏற்பாடு செய்து வருகிறது. சுவாரசியமிக்க இவர்களின் வாழ்க்கை அறியப்படாமல் இருக்கின்றது. தற்காலத்துக்கு உகந்ததாக இருந்தாலும் இவர்களின் அனுபவங்கள் கவனம் பெறாமல் இருக்கின்றன. ஒவ்வொரு பயிலரங்குக்குப் பிறகும் ஸ்பாரோ பயிலரங்குகளின் அடிப்படையில் சிறிய நூல் ஒன்றை வாழ்க்கை வரலாற்று  வடிவில், வெளியிடுகிறது.

முகப்போவியம் : பாரதி கபாடியா
©
Sound & Picture Archives for Research on Women

கலா ஷஹானி – முன்னுரை

கலா ஷஹானியை என்னுடைய நெருங்கிய நண்பர்களான கோவிந்தின் அம்மாவாகவும் ரோஷனின் மாமியாராகவும்தான் நான் பரிச்சயப் பட்டிருந்தேன். விடுதலைப் போராட்டத்தில் அவர் பங்கு கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. எப்போதும் அன்புடனும் நட்புடனும் பழகிய அவர் தன்னைப் பற்றி அதிகம் பேசியதில்லை; அதில் விருப்பம் காட்டியதுமில்லை. கோவிந்த்திடம் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தற்செயலாக ஏதோ குறிப்பிடப் போகத்தான் எனக்கு கலா ஷஹானியின் இன்னொரு பக்கம் தெரியவந்தது. தன்னடக்கமும் அமைதியான சுபாவமும் அதேநேரம் மனவுறுதியும் கொண்ட இந்தப் பெண்மணியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள என்னைத் தூண்டியது இதுதான். ஐம்பதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கும் விவாதங்களும் கொண்டாட்டங்களும் நடந்து வரும் இந்த வேளையில், கலாவைப் பங்கேற்கவைத்து வாய்மொழி வரலாற்று பயிலரங்கு ஒன்றை நடத்தினால் என்ன என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இந்தச் சந்தர்ப்பத்தில் மிகப் பிரபலமான விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியபோது, எனக்கு என் சிறுவயதில் கேட்ட கதையொன்று ஞாபகத்திற்கு வந்தது. இலங்கையைச் சென்றடைவதற்காக ராமன் ஒரு பாலத்தைக் கட்டலானான். ஒரு சிறிய அணிலும் இந்தப் பணியில் தன்னால் இயன்றதைச் செய்ய விருப்பம் கொண்டது. எனவே அது நீரில் போய் குதித்து, பின்னர் மணலில் சென்று உருண்டு விட்டு, பாலம் கட்டப்படும் இடத்திற்கு வந்து தன்மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் மணலை உதறிவிட்டுச் சென்றது. அதன் இந்த வினோதமானச் செய்கையைப் பார்த்து ஆச்சரியமடைந்த ராமன் அந்த அணிலிடம் என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று விசாரித்தான். அணிலும் பாலம் கட்டும் பணியில் தன்னால் இயன்றதைச் செய்துகொண்டிருப்பதாகப் பதில் கூறியது. இந்த அணிலைப் போலவே விடுதலைப் போராட்டத்தில் ஆரவாரமில்லாமல் பங்கேற்றவர்கள் பலர் இருப்பார்கள் என்று எனக்குப்  பட்டது. இவர்கள் ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும். கலா ஷஹானிக்கும் நம்மோடு பகிர்ந்துகொள்ளக் கட்டாயம் ஒரு கதை இருக்கும் என்று எண்ணினேன்.

பயிலரங்கை மனத்தில் வைத்துக்கொண்டு அவரை அணுகியபோது தன் வாழ்க்கை எவருக்காவது சுவாரஸ்யமாக இருக்குமா என்ற சந்தேகத்தை அவர் கிளப்பினார். தேசிய விடுதலைப்  போராட்டத்தில் தான் பங்குகொண்டது பற்றியும் காந்திய வழியில் தான் மேற்கொண்ட திட்டமிட்ட எளிய வாழ்க்கையைப் பற்றியும் பேசத்தான் வேண்டுமா என்று கேட்டார். கலா ஷஹானியைப்  போன்று மானிட மதிப்பீடுகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டோருக்கு நாட்டிற்காக, அதன் விடுதலைக்காகப் போராடியதும் தான் வரித்துக் கொண் ட மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதும்  அரசியல் செயல்பாடல்ல; மாறாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து அவர்களின் ஆளுமையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிய ஓர் ஆன்மீகத் தேடல். அவர்கள் சுய லாபத்தையோ அங்கீகாரத்தையோ கருதாமல் தேசத்திற்குத் தொண்டாற்றுவதையு ம் சில மதிப்பீடுகளுக்காக வாழ்வதையுமே இலட்சியமாகக் கொண்டவர்கள். கலா ஷஹானியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப்  பங்குகொண்ட அவர் கணவர் சாந்தி ஷஹானியும் இன்ன சாதி இன்ன மதம் என்றில்லாமல் மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழத் தகுதியானவர்களே என்ற எண்ணம் கொண்டிருந்தனர். மனித குலத்தை இழிவுபடுத்துபவை ஒவ்வொன்றும் அவர்களை வேதனை கொள்ளவைத்தன. சிந்துவைச் சேர்ந்த ஞானியான ஸாமியின் பொன் மொழிகளின் மொழிபெயர்ப்பு நூலான ஸாங்க் ஆஃ த ஸ்பிரிட் (ஆன்மாவின் பாடல்) என்ற நூலுக்கு சாந்தி ஷஹானி எழுதிய முன்னுரையிலிருந்து இதை அறிந்து கொள்ள முடிகிறது. 1947 அக்டோபர் 3ஆம் தேதி, பிரிவினைக்கால கலவரங்களை நேரில் கண்டிருந்த சாந்தி ஷஹானி எழுதுகிறார்:

“நம் மக்களின் கண்களை ஒரு பனித்திரை மறைத்துக் கொண்டிருக்கிறது. நாம் எவற்றையெல்லாம் புனிதமென்றும் அன்புக்குரியதென்றும் எண்ணிப் போற்றி வந்தோமோ அவை அனைத்தும் நொறுங்கிப்போய் குரோதத்தின் பயங்கரத் தீ நாக்குகளால் விழுங்கப்பட்டு விடுமோ என்று தோன்றுகிறது.”

ஆனாலும் சாந்தி நம்பிக்கையிழந்துவிடவில்லை. அதை ஓர் இடைப்பட்ட காலமென்றும் ஆன்ம பலத்தின் மூலம் நாம் கடந்து சென்றுவிட முடியுமென்றும் அவர் நம்பினார். அவர் எழுதுகிறார்:

“இந்த பனித்திரை விரைவில் விலகிவிடும். இந்த இருள் திரையின் பின்னால் ஓரு பொற்காலமும் பிரகாசமான விடியலும் காத்திருக்கின்றன. மரணத்தையும் அழிவையுமே கொண்டு வந்துள்ள இந்தக் கட்டுக்கடங்காத வன்முறையிலிருந்து, பழையவற்றின் சாம்பலிலிருந்து, ஒரு புதிய ஒழுங்கு நிச்சயம் எழும். நமது புராதன நாகரிகத்தின் தொட்டிலை இன்று உலுக்கிக் கொண்டிருக்கும் புயல் ஓய்ந்தபின் மரண அமைதியிலிருந்து இந்துப் பிரதேசம் எங்குமுள்ள சூஃபிகள் மற்றும் சிந்து பிரதேசத்தின் புனிதத் துறவிகளின் தணிவானதும் அமைதியானதும் ஆனால் வீரியமிக்கதுமான குரல் எழுந்து நொந்து நைந்துபோன நமது இதயங்களையும் ஆன்மாக்களையும் ஆட்கொள்ளும்.”

மனிதர்கள் மீதான இந்த நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எடுத்துக்காட்டாக கலா ஷஹானியின் வாழ்க்கை திகழ்கிறது. 1947க்குப் பல ஆண்டுகள் கழித்து பிறந்த கல்லூரி மாணவியருக்கு வரலாற்றை அதில் பங்கெடுத்துக்கொண்ட ஒருவரின் வாய்மொழி மூலம் அறிந்து கொள்வது வரலாற்றைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அளிக்கும் என்று கூறியே கலாவை இணங்கவைக்க வேண்டிவந்தது. இந்தப் பயிலரங்கு பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் பரஸ்பரம் கலந்துரையாடவும் ஒரு பரப்பை ஏற்படுத்தும் என்றும் எடுத்துச் சொன்னோம். இந்தப் பயிலரங்கில் இளம் வயதினரே அதிகம் கலந்து கொள்வார்கள் என்ற உண்மையே அவரை இறுதியில் ஒத்துக்கொள்ள வைத்தது. தன் பேச்சு அவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்குமோ என்னவோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்தாலும், முயன்று பார்ப்போமே என்று எண்ணினார்.

1997 ஜூலை 27 அன்று நடந்த பயிலரங்கு உரையாடல் வடிவத்தில் — தாய்க்கும் மகனுக்குமிடையேயான உரையாடலாக — நடந்தது. கோவிந்த் ஷஹானியின் கேள்விகளுக்கான பதில்களினூடாக கலா ஷஹானியின் வாழ்க்கை விரிந்தது. கலா பேச்சின்போது அடிக்கடி தான் புத்திசாலியோ அதிகம் படித்தவளோ இல்லையென்றும்  பின்னணியில் ஒதுங்கி நின்று பணியாற்றியவள் என்றும் குறிப்பிட்டார். காந்தியைப் பற்றி முதல்முதலாகக் கேள்விப்பட்ட நாளிலிருந்தே, தனது பத்து வயது முதல், கலா கதராடை மட்டுமே அணிந்து வருகிறார். முப்பத்து ஏழு வயதில் விதவையான அவர் இந்துஸ்தான் என்ற சிந்தி நாளிதழில் பணிக்குச் சேர்ந்தார். இந்த எழுபத்தெட்டு வயதிலும் பணியாற்றி வருகிறார்; தனது சொந்தக் காலிலேயே நிற்க ஆசைப்படுகிறார் அவர். தேசமும் தானும் வேறுவேறல்ல, தேசத்திற்காக உழைப்பது சுய பலாபலன்களை எதிர்பார்த்து அல்ல போன்ற எளிய ஆனால் உறுதியான எண்ணங்கள் அவருக்கு உண்டு. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளை கலா பெற்றுக் கொள்ளவில்லை. “தாய் நாடென்பது தாய்க்குச் சமம். நாம் நம் தாய்க்காக உழைத்தோம். ஏன் அதற்காகப் பணம் பெற்றுக்கொள்ள வேண்டும்?” என்கிறார் அவர்.

தேசியக் கல்லூரி மற்றும் மகராஷ்டிரா கல்லூரி மாணவியர் மற்றும் மாணவர்கள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர். கலாவின் எளிமையான, ஒளிவுமறைவில்லாத, தெளிவான மொழியும் வாழ்க்கையும் மாணவியரையும் மாணவர்களையும் மிகவும் கவர்ந்தன. அவரது மகனது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், மாணவியரும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஸ்பாரோ அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவரது எதிர்வினைகள் இவற்றிலிருந்து நமது வரலாற்றின் முக்கியமான காலகட்டம் மீள்உருவாக்கம் பெற்றது. இந்த மீள்உருவாக்கம் தனித்துவமிக்கதாகவும் தனித்தன்மையுடனும் ஆழமான சுய அனுபவ சாயத்துடனும் இருந்தது. இந்த வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, பயிலரங்கில் நடந்த உரையாடல்கள் மற்றும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

சி. எஸ். லக்ஷ்மி

தொடர்புள்ள பதிவு:

ஆங்கில பிரதி உருவாக்கம் : சி. எஸ். லக்ஷ்மி
தமிழ் தொகுப்பு : அ. ஸ்ரீனிவாஸன் , எம். சிவசுப்ரமணியன்
முகப்போவியம் : பாரதி கபாடியா
முகப்பு வடிவமைப்பு : தமால் மித்ரா
புகைப்பட உதவி : ப்ரியா டிஸுஸா
கலா ஷஹானி கோட்டோவியங்கள் : இரீனா ஸாக்கியான்

Series Navigationதனியாய் ஒரு போராட்டம் >>
Exit mobile version