Site icon சொல்வனம் | இதழ் 318 | 12 மே 2024

மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’!

உலக சுகாதாரமைப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு தொற்றுநோயாகவும், உலகலாவிய பிரச்சனையாகவும் உள்ளது என கருத்துதெரிவித்துள்ளது. அத்துடன் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் தமது நெருங்கிய partner-ஆல் உடல் ரீதியான மற்றும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்ற தகவலையும் தெரிவிக்கிறது. இதனை பலரும் பெண்வெறுப்பு என்றே பதிவிடுகிறார்கள்.

இந்த பெண்வெறுப்பு என்பதைக் குறிக்கும் ஆங்கில பதமான மிசோஜினி (misogyny) என்ற சொல்லானது, கிரேக்க மொழியை தனது வேராக கொண்டுள்ளது. Misos – (hate) வெறுப்பு என்பதாகவும் Gyny – (woman) பெண் என்பதாகவும் கருதி பெண்வெறுப்பு என அர்த்தம் கொள்ளப்பட்டது. இந்த பெண்வெறுப்பு எனும் அர்த்தமானது கோட்பாட்டு மட்டத்தில் பொருத்தமானதுதானா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனெனில் இப்படிப்பட்ட ஆண்கள் எல்லா பெண்களையும் வெறுப்பதில்லை. அவர்களுக்கு தாய், மகள், தங்கை, துணைவி என உறவுகள் உண்டு. அத்துடன் பாதிக்கப்படும் நபரின் பாதிப்புகளை போதுமானளவு வெளிப்படுத்தவில்லை என்ற அங்கலாயிப்பையும் தெரிவிக்கின்றனர். ஆதலால் இந்த மிசோஜினி என்ற பதத்தின் விரிவான அர்த்தத்தை தேடுவதாகவே இக்கட்டுரை அமைகிறது. கிரேக்க இலக்கியத்தில் மிசோஜினி என்பது ஒரு நோயாகவும், சமூக விரோத செயற்பாடாகவுமே கருதப்பட்டு வந்துள்ளது. வரலாறு முழுவதும் பெண்வெறுப்பு. கருத்துக்களும், செயற்பாடுகளும் தொடர்நிகழ்வாகவே இருப்பதை நாம் காணலாம்.

வரலாற்று நோக்கில் மிசோஜினி எனும் கருத்து ஒரு சித்தாந்தம் போல் செயற்பட்டு வந்துள்ளது. இதனை கிரேக்க தத்துவஞானிகளின் கருத்துக்களிலும் காணலாம். கிரேக்கத்தின் சிறந்த தத்துவவாதிகளில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்றோர் முக்கியமானவர்கள் எனலாம். பிளேட்டோ கி.மு 427 – 347 காலப்பகுதியிலும், அரிஸ்டாட்டில் கி.மு 384 – 322 காலப்பகுதியிலும் வாழ்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பின்னரே யேசுநாதர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அதேசமயம் இன்றைய 19ம், 20 ம் நூற்றாண்டு சமூகவியலாளர்கள் மிசோஜினி குறித்து வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவே உள்ளது. இவ்வாறு காலகட்டங்களை அவதானிக்கும்போது பெண் வெறுப்பு(Misogyny) என்ற செயற்பாடு எவ்வளவு ஆழமாக புரையோடிப்போய் இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட கருத்துகள் வரலாற்று ரீதியாக மேலைநாடுகளில் மிசோஜினி எனப்படுவது பெண்கள் மீதான வெறுப்பாகவும், அதன் நடைமுறை அர்த்தமாகவும், நம்பிக்கையாகவும் கொள்ளப்பட்டதை எடுத்துக் காட்டுபவையாகும். இந்திய தமிழ் புராண, இலக்கியங்களில் கூட பெண்வெறுப்பு கருத்துக்கள் வெளிப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்ணிய ஆய்வாளர் செல்வி திருச்சந்திரன் தமது நூலில் நாலடியாரில் வரும் பாடல் ஒன்றை குறிப்பிடுகிறார்.

எறி என்றுஎதிர் நிற்பாள் கூற்றம் அதிகாலை

அட்டில் புகாதாள் அரும்பிணி- அட்டதளை

உண்டி உதவாதாள் இல்வாழ் பேய் இம்மூவர்

கொண்டானை கொல்லும் படை

இதன் அர்த்தமாக கணவனை எதிர்த்து நிற்பவள் எமன் எனவும், அதிகாலையில் சமையல் அறைக்கு போகாதவள் பெரும்நோய் போன்றவள் எனவும், சமைத்த உணவை உண்பதற்கு உதவாதவள் வீட்டில் வாழும் பேய் எனவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பெண்கள் கொண்டவனை கொல்லும் தன்மை உடையவர் என அர்த்தம் கொள்ளப்படுகிறது.

இதேபோல் கீழே உள்ள திருக்குறளில்

“பெண் ஏவல் செய்தொழுகும் ஆண்மையில் நாணுடைப்

பெண்ணே பெருமை தரும்”

எனக் கூறப்படுகிறது. இதன் பொருள் மனைவிக்கு பணிவிடை செய்வது ஆணுக்கு அவமானம். அத்தகைய ஆணைவிட நாணமுடைய பெண்ணே பெருமையானவள் எனப் பொருள் படுகிறது.

அதேபோன்று தொல்காப்பியத்தில்

“தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளர்த்தல்

எண்ணுங்கானா கிழத்திக்கில்லை”

தலைவன் முன் தன்னைப்பற்றி புகழ்ந்து பேசும் உரிமை பெண்ணுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

பட்டினத்தார் பாடல் ஒன்று

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னை.                                                                            
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கி கடிதடத்து
புண்ணாங் குழியிடைத் தள்ளி என் போத பொருள் பறிக்க
எண்ணாதுனை மறந்தேன் இறைவா கச்சி ஏகம்பனே
இதில் பெண் என்பவள் மாயப்பிசாசு எனவும், கண்ணால் வெருட்பவள், முலையால் மயக்குபவள், புண்ணாங்குழி யோனியில் தள்ளுபவள் என அருவெருப்பாகவே கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

சித்தர் பாடல் ஒன்றில்

“வட்டமுலை யென்றுமிக வற்றுந்தோலை
  மாமேரு என்றுவமை வைத்து கூறுவர்
  கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர்
  கெடுவரென்றே நீ துணிந் தாடாய் பாம்பே”

இதன் பொருளானது வற்றிப்போகும் தோலையுடைய முலைகளை மேன்மையான, உயர்ந்த மாமேரு என உவமை கொள்வதும், கெட்ட நாற்றமுள்ள யோனிக்குழிக்குள் வீழ்ந்துபோவதால் அழிந்துபோவாய் என கூறுகிறது.

இதுபோன்று பெண் வெறுப்பை வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான ஐதீகமும் பழமொழிகளும் நடைமுறையில் இருப்பதையும் காணலாம். அவற்றில் சிலவற்றை கீழே கிறுப்பிடுகிறேன்.

இவ்வாறு புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும்,சித்தர் பாடல்களிலும் பெண்கள் குறித்து அவர்களை மிக மோசமாக கீழ்படுத்தும் வகையிலும்,ஆணாதிக்க சமூக விழுமியங்களை தொடர்ந்து தக்க வைக்கும் வகையிலும் இதை செய்யவேண்டும், இதை செய்யக்கூடாது என்பதாக வலியுறுத்தும் வகையிலுமே இந்த பெண்வெறுப்புக் கருத்துக்கள் இருப்பதைக் காணலாம்.

பொதுவாக பெண்களுக்கு எதிராக குற்றங்கள், வன்முறைகள் நிகழும்போது பாதிக்கப்பட்டவரை குறைகூறுவதை காணலாம். அதாவது பெண்கள் மீது பழியை மாற்றும் கேள்விகள் கேட்கப்படுகின்றது.

ஆண்களை பொறுப்பு கூற வைப்பதற்கு பதிலாக எல்லாப் பழிகளும் பெண்கள் மீதே சுமத்தப்படுகிறது. பெண்கள் புறக்கணிக்கப்படும் ஆண்மைய சமூகமானது தொடர்ந்து பெண்களை கீழ்நிலைப்படுத்தி வைத்திருப்பதில் முன்னிற்கிறது. சில சமயங்களில் ஆண்மைய சித்தாந்தங்களை உள்வாக்கிய பெண்களிலும் இவ்வாறு பெண்களையே குறைகூறுவதைக் காணலாம். ஆனால் உண்மையில் மிசோஜினியின் மூலவேர் ஆண்மைய சமூகத்திலேயே ஆழமாக பதிந்துள்ளது.

2018ம் ஆண்டு ஆண் ஒருவர் ரொரன்டோ நகரில் கனடாவில் வாகனம் ஒன்றினால் பாதசாரிகளை மோதி பத்துப்பேரை கொன்றதுடன் பலரை காயப்படுத்தியும் உள்ளார். இச்சம்பவத்தை விபரிப்பதற்கு Misogyny பெண்வெறுப்பு என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் இச்செயற்பாட்டை செய்தவர் ஒரு Involuntary Celibates (Incel) (அ-து தனது விருப்பததிற்கு மாறாக பிரமச்சாரியத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்) எனவும் கூறப்படுகிறது. பெண்கள் மீதான காதல் முயற்சிகளில் ஒருபோதும் வெற்றி பெறாத ஒருவர், பெண்கள் மீது தீவிர வெறுப்பு உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும், அது வன்முறையாக, கொலை செய்யுமளவிற்கு தீவிரமாகவும் வெளிப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகள் ஆபத்தானவை என சமூகவியலாளரும், குற்றவியல் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெறுப்பு நிமித்தமாக பல வன்முறைகள் உலகெங்கும் நிகழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. 1989 டிசம்பர் 6 ல் முதன்முதலில் Marc Lepine என்பவரால் கனடா மொன்ரியல் பல்கலைக்கழகத்தில் 14 பெண்கள் சுட்டு கொலை செய்யப்பட்டும், 10 பேரை காயப்படுத்தியதுமான கொடூர நிகழ்வு யாவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவர், “நான் பெண்களை வெறுக்கிறேன்” என கத்திய வண்ணமே இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளார். இன்று கனடாவில் டிசம்பர் 6இல் பெண்களுக்கு எதிரான வன்முறையின் தேசிய ஞாபகார்த்தமாக நினைவு கூறப்படுகிறது. “Nationalday of Remembrance and Action on Violance Againts Womem”. பொதுவாக சமூக வெளித்தளங்களில் பெண்கள் மீதான வெறுப்பு உணர்வுகளுடன் தொடர்புடையதாகவே மிசோஜினி பொருள் கொள்ளப்படுகிறது. எனினும் (Cornell University) கோனல் பல்கலைக்கழக தத்துவ பேராசிரியர் கேட் மன்னே (Kate Manne) என்பவர் கோட்பாட்டுரீதியாக பெண்ணிய பகுப்பாய்வினை மேற்கொண்டு தமது கருத்துக்களை ‘Down girl’ (The logic of Misogyny) எனும் நூலில் வெளியிட்டுள்ளார். மிசோஜினி (Misogyny) என்பதற்கு கொடுக்கப்படும் ‘பெண்வெறுப்பு’ என்ற வரையரையானது போதுமானகாக இல்லை என கேட் மன்னே (Kate Manne) வாதிடுகிறார்.

எலியட் ரோட்ஜர் (Elliot Rodger) என்பவர் கல்போனியாவில் Santa Barbara College கல்வி கற்றவர். அவர், தன்னை நிராகரித்த அனைத்து பெண்களையும் பழிவாங்கும் விதத்தில் வன்முறையாக துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றை நிகழ்த்தினார். இச்சம்பவத்தில் பெண்களும், ஆண்களும் என ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயங்களுக்கும் உள்ளானார்கள். அவர்களை சுட்டுக் கொன்ற பின்னர் எலியட் ரோட்ஜர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்கிறார். இந்த சம்பவத்தை எழுத்தாளர்கள் விவரிக்கும்போது அவரது உளவியல் உறுதியற்றது. அவர் பெண்களை வெறுக்கவில்லை. அதிகமாக விரும்பினார் என்ற கருத்துக்களை தெரிவித்தனர். 2014 ல் இந்த எதிர்வினைகளை படித்தபோது கேட் மன்னே மிசோஜினியின் அர்த்தமாக கொள்ளப்படும் பெண்வெறுப்பானது கருத்தியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் குறைபாடு கொண்டிருப்பதை உணர்ந்தார். மிசோஜினியின் நடைமுறை அர்த்தமானது அப்பாவித்தனமான கருத்தாக (naive conception) உள்ளது என்றார். இப்படிப்பட்ட ஆண்களை சரிவர அடையாளம் காணும் விதத்தில் ஒரு சோதனை (litmus test) செய்தால், இந்த ஆண்கள் எல்லா பெண்களையும் வெறுக்கவில்லை என்பதை அறியலாம். மிகக் குறைந்தளவான ஆண்களே பொதுவில் பெண்களை வெறுப்பவர்களாக இருப்பர். பெரும்பாலான ஆண்களுக்கு தாய், சகோதரி, மகள், மனைவி உள்ளனர். எனவே மிசோஜினி என்பது உளவியல், கட்டமைப்பு மற்றும் நிறுவன வெளிப்பாடுகள் கொண்ட ஒரு சமூக மற்றும் அரசியல் நிகழ்வாகும். பாதிக்கப்பட்டவரின் கண்ணோட்டத்தில் இருந்தே அந்த வெளிப்பாடுகளை மதிப்பீடு செய்தல் வேண்டும் என கேட் மன்னே குறிப்பிடுகிறார்.

Kate Manne தமது கோட்பாட்டுரீதியான ஆய்வில் வரலாற்று கண்ணோட்டத்தில் இருந்த மிசோஜினிக்கான(பெண்வெறுப்பு) வரையறையை கேள்விக்குட்படுத்தி, விரிவான விளக்கத்தினை முன்வைக்கிறார்.

ஆகிய கேள்விகளுக்கு விடை காணும் வகையில் நடைமுறை அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்தினார். மிசோஜினி பற்றி பாரம்பரியமான கண்ணோட்டத்திற்கு மாறாக புதிய வரையறையை கேட் மன்னே முன்வைக்கிறார். தனிநபர்களின் மனோபாவம் என்பதற்கு மாறாக, ஆணாதிக்க ஒடுக்குமுறையின் கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையினை ஒழுங்குபடுத்தும் சமூகநெறிகள் குறித்தும், அவற்றின் எதிர்பார்ப்புகள் குறித்தும், அவற்றை நிறைவேற்றத் தவறும்போது ஏற்படும் விளைவுகள் பற்றியதாகவுமே மிசோஜினி என்பது அமைகிறது என்கிறார். இந்த ஆணாதிக்க சமூக ஒழுங்குகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றாத பெண்கள் மீது அளிக்கப்படும் தண்டனையாகவே மிசோஜினி செயற்படுகிறது.அதாவது பெண்களை ஆணாதிக்க சமூகஒழுங்குகளை பின்பற்றும்படி கட்டுப்படுத்துவதாகவே மிசோஜினி செயற்படுகிறது. இவ்வாறு மிசோஜினியால் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்கள் பெண்களே ஆவர். ஆனால் பாதிப்பிற்கு உள்ளானவருக்கு என்ன தாக்கத்தை உருவாக்கிறது என்பதை ‘பெண்வெறுப்பு’ என்ற விளக்கம் சுட்டிக்காட்ட தவறிவிட்டது. குற்றவாளியின் மனதில் நிலவும் உளவியல் சிக்கலாக இந்த கருத்தாக்கம் கருதுகிறது. மிசோஜினி என்ற கருத்தாக்கமானது யதார்த்த நிலைமைகளில் இருந்து குற்றவாளிகளின் உளவியல் நோக்கி கவனத்தை திரும்புகிறது. இதன் மூலம் அவரை மன்னே ‘ஆண்மீதான அனுதாபம்’ (Himpathy) என அழைக்கிறார். இது பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவரைக் காட்டிலும் குற்றவாளியான ஆணுக்கு அளிக்கும் அதிகப்படியான அனுதாபத்தைக் குறிக்கின்றது. இது பழிவாங்களின் கதைகளை மாற்றியமைத்து அநீதிக்கு வழிவகுக்கிறது என கேட் மன்னே குறிப்பிடுகிறார்.

ஆணாதிக்க சமூக கட்டமைப்பில் பெண்களுக்கான பாத்திரம் அடிபணிதலாகவே உள்ளது. பெண்களது சமூக பாத்திரங்களாக கருதப்படும் வீட்டுவேலைகள், ஆண்களின் பாலியல் தேவையை நிறைவு செய்தல், குழந்தைவளர்ப்பு போன்றவற்றை மறுக்கும் பெண்கள், அதாவது ஆணாதிக்க ஒழுங்கை சீர்குலைக்கும் பெண்களை கட்டுக்கடங்காதவர்கள், கீழ்படியாதவர்கள் அடங்காபிடாரிகள் என்று இழிவு செய்வதை காணலாம். இப்படிப் பட்டவர்களை சூனியக்காரிகள் (witches), விபச்சாரிகள்( bitches,sluts) என்றும் அழைக்கின்றனர். மிசோஜினியானது பெண்ணை கீழ்படுத்துவதன் ( Down girl) வாயிலாக தண்டிக்கிறது என்றும் அவற்றில் பெண்களை வெகுளிப்பெண்ணாக பார்த்தல், ஏளனம்செய்தல், பரிகாசம் செய்தல், அவமானப்படுத்தல், அவமதிப்பு செய்தல், குற்றம் சாட்டல், விலக்குதல், வெறும் பாலியலாக குறுக்குதல் (sexualisation) என பல்வேறு வழிமுறைகளில் கீழ்படுத்துவதைக் காணலாம். எனவே எந்தவொரு பெண்ணும் மிசோஜினிக்கு இலக்காக இருக்க முடியும்.

கேட் மன்னே, ஆணாதிக்க ஒழுங்கின் சட்ட அமுலாக்க கிளையாகவே மிசோஜினி செயற்படுகிறது என்கிறார். அதாவது ஆணாதிக்க சமூக விதிகளை கண்காணிக்கும் காவல் துறையாக சேவையாற்றுவதன் மூலம் மிசோஜினி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. பொதுவாக சமூகத்தில் சட்ட ஒழுங்கு விதிகளை பாதுகாப்பவராக காவல்துறையே செயற்படுகிறது. அதை ஒத்ததாகவே மிசோஜினி செயற்படுகிறது என மன்னே குறிப்பிடுகிறார். பால்வாதம் (Sexism) ஆனது ஒரு சித்தாந்தமாக உள்ளது. இது ஆணாதிக்க சமூக விதிமுறைகளை நியாயப்படுத்த உதவுகிறது. இந்த ஆணாதிக்க அமைப்பிற்கு அச்சுறுத்தல் வரும்போது மிசோஜினி அவற்றை கட்டுப்படுத்துவதாக, அல்லது தண்டனை அளிப்பதாக வெளிப்படுகிறது. இதனை கேட் மன்னே ஆணாதிக்க அமைப்பில் ‘பால்வாதமானது ஒரு ஆடையாக இருக்கிறது. மிசோஜினியானது சூனியவேட்டையில் இறங்குகிறது’ என்கிறார்.(Sexism wears a lab coat, Misogyny goes to witch hunts). பால்வாதமும், மிசோஜினியும் ஒன்றுடனொன்று வேறுபட்டாலும் நடைமுறையில் பெரும்பாலும் இரண்டும் கைகோர்த்து செல்வதும் ஆணாதிக்கத்தை தர்க்கரீதியாக பின்பற்றுவதுமாகவே உள்ளது. அத்துடன் அவை (பால்வாதமும், மிசோஜினியும்) சுதந்திரமாகவும் தனித்தும் வெளிப்பட முடியும் எனவும் அவரது நூலில் ‘Down Girl’ குறிப்பிடுகிறார்.

மிசோஜினி எனப்படும் செயற்பாடானது எப்பொழுதும் பெண்களுக்கு மனிதநேயமற்று துன்பத்தினை அளிப்பதாகவே உள்ளது, ஆனால் பெண்களை மனிதநேயம் கொண்ட சேவைகளை வழங்குபவர்களாகவே எதிர்பார்க்கிறது. கேட் மன்னே, மிசோஜினியை அமுல்படுத்தும் விதிமுறைகளை விவரிக்கும்போது பெண்கள் ஆண்களுக்கு கடமைப்பட்டிருப்பதாக சொல்லப்படும் ஆணாதிக்க சமூக அமைப்பில் இருக்கிறார்கள். இங்கு அறிவார்ந்த முயற்சிகள், விளையாட்டு, வணிகம், அரசியல் போன்றவை ஆண்களுக்குறியதாகவும், வீட்டுவேலைகள், குழந்தை பராமரிப்பு, வீட்டில் உள்ளவர்களை கவனித்தல் போன்றவை பெண்களுக்குறியதாகவும் நம்பும் கருத்தியல் நடைமுறையில் காணப்படுகிறது. முதலில் பெண்கள் பாலியல் சேவை, கவனிப்பு, ஊதியமற்ற வீட்டுவேகள் போன்றவற்றை வழங்க வேண்டும். பெண்களால் வழங்கப்படும் சேவைகள் குறித்து பேசக்கூடாது. இறுதியாக ஆண்கள் பெறும் சலுகைகள் எதனையும் பெண்கள் பெற்று விடக்கூடாது. அதாவது வரலாற்று ரீதியாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய அரசியல், கல்வி, விளையாட்டு (sports) போன்ற விடயங்களில் பெண்கள் நுழையும்போது அவர்களை கட்டுப்படுத்துவதாக மிசோஜினி செயற்படுகிறது. அவ்வாறு நுழையும் பெண்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பாத்திரங்களை பூர்த்தி செய்யாவிடின் ஆண்கள் தமது சகாக்களுடன் சேர்ந்து வெகுளி, தகுதிக்கு மிஞ்சிய வேலை என கேலி செய்யப்பட்டு அலட்சியம் செய்யப்டுத்தப்படுவதையும் காணலாம். 1967இல் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற மரதன் (Boston marathon) ஓட்டத்தில் முதன்முறையாக பங்குபற்றிய கத்ரின் ஸ்விட்சர்(Kathrine Switzer) என்னும் பெண் உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகினார். அதேபோல் 2010 இல் அவுஸ்திரேலிய அரசியலில் Liberal party ல் Julia Gillard தெரிவு செய்யப்பட்டபோது உளரீதியான தாக்கத்திற்கு உள்ளானார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த Donal Trump இடமும் இத்தகைய செயற்பாடுகள் காணப்பட்டது. இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளானது ஆண்களின் அதிகாரம், அதிகாரத்திற்கு சவால்விடும் பெண்களை நோக்கியதாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது.

மிசோஜினி பெண்களை கட்டுப்படுத்துவதோடு பால்வாத விதிமுறைகளை மீறுவதில் இருந்து அவர்களை தண்டிப்பது மட்டுமன்றி, பால்வாத விதிகளை பின்பற்றும் பெண்களுக்கு வெகுமதியும் ( அன்பான மனைவி, நல்ல நண்பி, விசுவாசமான செயலாளர் ) அளிக்கிறது. இதனால் மிசோஜினி பெண்களை நல்லபெண்கள், கெட்டபெண்கள் என வேறுபடுத்துவதுடன் பெண்களையே பெண்களுக்கு எதிராக திருப்ப முடிகிறது. ‘I am not like other girl’ , other girls are to much drama. பெண்களைக்ககொண்டே மற்றைய பெண்களின் நடத்தைகளையும் கட்டுப்படுத்த முடியும். இதனால் ஆணாதிக்க மதிப்பீடுகளின் அடிப்படையில் தன்னை உயர்த்திக் கொள்ளலாம். அல்லது ஆணாதிக்க நபர்களிடம் தங்கள் விசுவாசத்தை அடையாளம் காட்டலாம் என்ற விதத்தில் பெண்களை ஊக்குவிக்கிறது.

பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் என்ற நம்பிக்கை இன்றைய சமூக அரசியல் அமைப்புகளில் காணப்படுகிறது. ஏன் சில மார்க்சிய அரசியலமைப்புகளில் கூட பெண்கள் தமது பங்களிப்பை இன்றுவரை செலுத்தியபோதிலும், இடதுசாரி மார்க்சியவாதிகள் பலர் இன்னும் வர்க்கப் போராட்டத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு பால்வாதத்தை புரிந்து கொள்வதில்லை. பால்வாத்தின் சார்பளவிலான சுயாதீனமான தன்மை, அதற்கெதிராக குறிப்பாக நடத்தப்பட வேண்டிய போராட்டங்கள், அவை வர்க்கப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டியதன் அவசியம் என்பவற்றை இப்படிப்பட்டவர்கள் மறுக்கிறார்கள். மார்க்சிய அமைப்பினுள்ளும் பெண்கள் குறிப்பெடுக்கும், வரவேற்கும், தேனீர் தயாரிக்கும் பணிகளையே, அதாவது ஆணாதிக்க சமுதாயம் வெளியில் பெண்களை பணிக்கும் அதேவிதமான பணிகளையே பெண்கள் தமது அமைப்பினுள்ளும் எப்பொழுதும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றைவிட மிகவும் முக்கியமான பிரச்சனைகளிலும் மார்க்சிய அமைப்புகள் மற்றும் போராட்ட அணிகள் சிக்கிக்கொள்கின்றன. இது இப்படிப்பட்ட அமைப்புகளினுள்ளேயே இழைக்கப்படும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை பற்றியதாகும். குறிப்பாக அமெரிக்காவில் முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தப்பட்ட Occupy Wall Street இயக்கத்தின்போது நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், அந்த இயக்கத்தை பலவீனப்படுத்திய ஒரு முக்கியமான அம்சமாக மாறியது. இவ்வாறே அமெரிக்காவில் உள்ள முக்கிய இடதுசாரி அமைப்பான ‘சர்வதேச சோசலிய அமைப்பு’ இனுள் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்களையும் குறிப்பிடலாம்.

2019 ல் அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பில் lSO (International Socialist Organization) பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு அமைப்பு களைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மிசோஜினி கலாச்சாரத்தில் பல ஆண்கள் பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர். இன்னும் பல ஆண்கள் தாம் பெண்களை விட உயர்ந்தவர்களாகவும், பாதுகாப்பவர்களாகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதிகமான ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள். இது தவறு என்பதை புரிந்துகொள்ளாத காரணத்தினால் அல்ல. தங்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்க விரும்பாததால் ஆகும்.

சில்வியா பெடிரீச்சி( Silvia Federici)யின் சூனியக்காரிகளின் வேட்டை (Witches Witch-Hunting and Woman) நூலில் குழந்தைப்பேறு, கருக்கலைப்பு, மற்றும் இயற்கை மருத்துவத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை சூனியக்காரிகள் என தண்டிப்பதன் மூலம் அவர்களை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார். இதன் வெளிப்படையான அர்த்தம் பெண்களை மருத்துவ துறையில் இருந்து ஒதுக்கி வீட்டுக்குள் முடக்குவதே ஆகும். ஆனால் இன்று பெண்கள் கல்வித்துறையில் மிக முன்னேற்றம் கொண்டிருந்தபோதிலும் மருத்துவதில் அறுவைசிகிச்சை செய்வதற்கு பொருத்தமானவர்கள் அல்ல என்ற வாதம் சில ஆண் வைத்தியர்களாலேயே முன்வைக் படுகிறது. இவ்வாறு ஆண்மையதிகார சமூகஅமைப்பில் அதிகாரம் கொண்டவர்கள் பெண்களை என்றும் விளிம்புநிலைக்கு தள்ளுவதன் மூலம் தமது நலன்களையும், சலுகைகளையும் தொடர்ந்து பேணுவதையே வெளிப்படுத்துகிறது எனலாம். எனவே இத்தகைய சமூக அமைப்பில் நிலையாக ஆதிக்கம் செலுத்தும் சித்தாந்த கருத்துக்களை வலியுறுத்தும் இதிகாச புராண இலக்கிய சித்தர் பாடல் யாவும் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுவது இன்றியமையாத தேவையாக உள்ளது எனலாம்.

மிசோஜினி என்பது ஆரம்ப காலத்தில் பெண்வெறுப்பாக அர்த்தம் கொண்டிருந்த போதிலும், அது பாதிக்கப்பட்டவரை விளங்கிக் கொள்வதற்கு போதுமானளவு விபரிப்பை கொண்டிருக்கவில்லை என தத்துவ பேராசிரியர் கேட் மன்னே குறிப்பிடுகிறார். அவர் தமது ஆய்வில் நடைமுறை சம்பவங்களை விபரிப்பதாகவும் அதிலிருந்து தீர்வு காண்பதுமாகவே (from description to prescription) ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். கேட் மன்னேயின் தீர்மானமாக கூறப்படுவதாவது, ஆணாதிக்க சமூகமைப்பின் ஒழுங்கு நெறிகளை மீறும் பெண்களுக்கு எதிராக மிசோஜினி அவர்களை கட்டுப்படுத்தவும், தண்டனையாகவும் செயற்படுகிறது என்பதாகும். இங்கு பெண்களை பொறுத்தவரை முதலாளித்துவ உற்பத்திமுறையும், ஆணாதிக்க உறவுமுறைமே (System, power, Control) அவர்களை ஒடுக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது எனலாம்.

Exit mobile version