Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

வல்லூழின் யந்திரத் துப்பாக்கி

தன் ரகசியங்களை
வாழ்க்கை வெளிப்படுத்துவதில்லை.
ஆச்சரியமோ அதிர்ச்சியோ
காலம் முன்னறிவிப்பு செய்வதில்லை.
நல்லூழ் சிரிக்கும்வரை
நாலு காசிருக்கும்வரை
கற்றது கடுகளவெனப் புரியும்வரை
வாலிபம் கரையும்வரை
நானடங்காது நாவடங்காது
சார்வாகனாய் திரிவான்.
வசந்தம் முடிந்து வல்லூழ் வரும்.
யந்திரத் துப்பாக்கியோடு வரும்.
அறிவு திறமை செல்வம் வெற்றி
சுற்றம் நட்பு அனைத்தையும் சுடும்.
நிற்கும் மண்ணும்
நிமிர்ந்து பார்க்கும் வானும்கூடப் பொய்யாகும்.
தலைசாய்த்தழ ஒரு தோளில்லா
தனிமையில் நினைப்பான் – தெய்வமே துணை.

Exit mobile version