Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

குளக்கரை


[stextbox id=”info” caption=”நாட்டை பாதுகாக்க சீனாவின் தணிக்கைதான் ஒரே வழியா?”]

கீழே உள்ள சுட்டியில் காணும் கட்டுரை முன்னும் பின்னுமாக ஊசலாடுகிறது. ஒரு புறம் சீனக் கம்பெனிகளின் அசுர வளர்ச்சியைப் பார்த்து அதிசயிக்கிறது, இன்னொரு புறம் அவை அந்த நாட்டைக் கடந்து வேறெங்கும் வளர முடியாது என்று சுட்டும் அதே நேரம் ஆசுவாசமும் கொள்கிறது. ஆனால் சீன அரசின் இரும்புக்கை மாயாவி அணுகலை எதிர்ப்பதாகக் காட்டும் கட்டுரை, அமெரிக்க/ யூரோப்பிய உளவு/ காவல் நிறுவனங்கள் வலையுலகில் என்னென்ன விதங்களில் தம் ஊடுருவலைச் செய்கின்றன என்பதையோ, பொய்த் தகவலைப் பரப்புவதை எப்படிச் செய்கின்றன என்பதையோ ஆராய்வதில் அல்லது சுட்டுவதில் கூடச் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. ரஷ்ய, சீன அரசுகள் வலையுலகை எப்படி நிர்வாகம் செய்கின்றன என்பது தொடர்ந்த மேலைப் பிரச்சாரத்தில் நமக்கு இப்போது ஓரளவு தெரியும். ரஷ்யா உலக வலைத் தளங்களை உருக்குலைத்து அழிப்பதில் காட்டும் கவனம், மிக்க ஈடுபாடு ஆகியனவற்றை அரசு நிறுவனத்தின் கையில் வைக்காமல், அரசுடைய ஒத்துழைப்போடும், ஒரு வேளை தொடர்ந்த கண்காணிப்போடும் செயல்படும் தனியார் (குற்றக் கும்பல்கள்) கையில் வைத்திருப்பது, இங்கிலிஷில் ‘டினையபிலிடி’ என்று சொல்லும் உத்தியைச் சார்ந்த அணுகல். இது ரஷ்யாவுக்கும், ரஷ்யருக்கும் பல நூறாண்டுகளாகக் கை வந்த கலை. ரஷ்யருக்கும் சீனருக்கும் ஒர் புள்ளியில் நிறைய ஒற்றுமை உண்டு. இரண்டும் பெரும் ஏகாதிபத்திய அரசுகளின் வாரிசுகள். இரண்டும் அடக்குமுறை அரசுகளின் வாரிசுகள். இரண்டும் ரத்தக் களரிகளை அலட்சியமாகக் கடந்து, முந்தைய காலத்தின் சுத்திகரிக்கப்பட்ட, தற்போதைய அரசுக்கு வசதியான வரலாற்றை மட்டுமே ஜனங்களுக்கு அனுமதிக்கும் அரசுகள். இரண்டும் சர்வாதிகாரிகளை, சூழ்ந்த கும்பலின் உதவியோடு ஆள அனுமதிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லாத மக்கள் திரளைக் கொண்ட நாடுகள். இரண்டும் கடும் பஞ்சம், பொருளாதார மெலிவு ஆகியவற்றோடு பெரும் நிலப்பரப்பு கொண்டிருப்பதால் மிக்க வளங்களைக் கொண்ட நாடுகள், ஆனால் இரண்டும் விவசாயத்தில் பெரும் மெலிவு கொண்ட நாடுகள். இரண்டும் தொடர்ந்த கவனத்தால் மேற்கோடு ஒத்த நிலைக்குத் தாம் வர வேண்டும் என்ற ஒரு பேராசையால் மக்கள் திரளைக் கடுமையாக உழைப்பில் ஈடுபட வைத்து, சூழலை நாசம் செய்து, ஒரு சிறு சதவீதம் மக்களை பெரும் உயரத்துக்கு அழைத்துச் சென்று, அந்த மேல்நிலை மக்களின் உதவியோடு உலகப் பொருளாதார, அறிவியல், தொழில் நுட்பச் சூழலில் தம் நாட்டைப் பொருத்த முடிந்த நாடுகள். இதற்கு என்ன சமூக நஷ்டம் ஏற்பட்டது என்பதை மறக்க அந்த ஆட்சியாளர்களுக்கும் முடியும், மக்களுக்கும் முடியும், மேல்தட்டில் இன்று இருப்பவர்களுக்கும் முடியும்.

ஏனெனில் அவற்றைச் சுட்டிக் காட்டக் கூடிய ஊடகங்களோ, எதிர் சக்திகளோ, மேலை உளவாளிகளோ, இதர நாடு பிரிப்புச் சதிகாரர்களோ உள்ளே அத்தனை சுதந்திரமாக உலவ முடிவதில்லை. இரண்டும் இது வரை அந்நிய அரசுகளின் கீழ் அடிமைகளாக இருந்ததில்லை. அப்படிச் சீனா இருந்ததும், தாக்கம் சிறிதும் இல்லாமல் போகக் காரணம், அந்த ஆட்சியாளர்களையே சீனர்களாக ஆக்கி விட்டதால் அழிந்து விட்ட வரலாறாக அந்த நூற்றாண்டுகள் ஆனதுதான்.

இவை மேற்குக்குப் பொருந்தக் கூடிய அரசாட்சி முன்மாதிரிகளா என்றால், மேற்கு இதே வகை ஆட்சி முறைகளைப் பல வரலாற்றுக் கட்டங்களில் பற்பல நாடுகளில் முயன்று பார்த்திருக்கிறது. அவை எல்லாம் தோற்றிருக்கின்றன. இன்னமும் அதே முறைகளை மேற்கு முயன்று கொண்டுதான் உள்ளது. ஆனால் அவை முழு வெற்றி பெறாமல் போக உள்ளேயே இருக்கும் பல வகை எதிர்ப்பு சக்திகள் ஒரு காரணம். இன்னொன்று மேற்கு தன் மக்களைக் கனவுகள், திசை திருப்பல், தொடர்ந்த பிரச்சாரப் புகை மூட்டம், சுதந்திரமாக இருப்பதான போலி நம்பிக்கைகளைக் கொண்டே மக்களைக் கட்டி வைக்க முடியும் என்று கண்டு விட்ட திறமை என்று பலவற்றைச் சொல்லலாம். அவற்றை ஒரு செய்தி அறிக்கை கையாள முடியாதுதான். ஆனால் வாசகர்களான நாம் அவற்றை மனதில் கொள்வது அவசியம்.

இனி அந்தச் செய்தி அறிக்கையைப் படிக்கப் போவோம்.

https://www.nytimes.com/2017/10/16/world/asia/china-internet-cyber-control.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஊழற்சதை”]

உலகில் இன்று மருத்துவத் துறைக்கு ஆகப்பெரிய சவாலாக விளங்குவது, உடல் பருமன் என்ற குறைபாடுதான். உடல் பருமானால் ஏற்படும் நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. மனிதர்களைக் கொல்லும் முக்கியமான வியாதிகள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால், அவற்றின் அடிப்படைக் காரணங்கள் உடல் பருமனிலும், புகைபிடிக்கும் பழக்கத்திலும் வந்து நிற்கின்றன. இதனால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதில் ஏற்படும் செலவினங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை வியாதி, இரத்தக்கொதிப்பு ஆகியவற்றை குணப்படுத்த ஆகும் செலவு மட்டும் மிக மிக அதிகம். அரசுகள் இந்த விஷயத்தில் போதிய கவனம் செலுத்த வில்லையென்றால், 2025க்குள் உலகில் மூன்றிலொரு பங்கு மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள் என்ற பிரச்சாரம் அதிகரித்துவரும் சர்க்கரை சார்ந்த உணவுப்பொருட்களான இனிப்புகள், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றின் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துகொண்டே போகிறது. இந்தச் பிரச்சனையை விரைவில் தீர்ப்பது, உடல்பருமன் என்ற குறைபாட்டைத் தடுப்பது உலக நாடுகளின் செலவினங்களைப் பெருமளவில் குறைக்கும்

https://www.theguardian.com/society/2017/oct/10/treating-obesity-related-illness-will-cost-12tn-a-year-from-2025-experts-warn
[/stextbox]


[stextbox id=”info” caption=”அபுத்திரகன்”]

அக்காலத் தமிழ்த் திரைப்படத்தில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்குப் பின், ஒரு பஞ்சாயத்து கூடும். அதில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்ணை அதை நிகழ்த்தியவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற (வழக்கமான) விசித்திரமான தீர்ப்புக் கூறப்படும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகண நீதிமன்றம் அளித்துள்ளது. பாலியல் வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தையை அதன் தாயோடு, அந்த வன்முறையை நிகழ்த்தி அவளைக் குழந்தைக்குத் தந்தையாக்கியவனும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்றும், தனது கட்சிக்காரரை இரண்டாவது முறையாக சட்டம் தண்டித்துள்ளது என்றும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

https://www.msn.com/en-us/lifestyle/whats-hot/rape-victim-must-share-custody-of-son-with-her-attacker/ar-AAtgGLP
[/stextbox]

Exit mobile version