Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

சொல்வனம் வழங்கும்..

இந்தியாவில் பிறந்து வளர்ந்து, அதன்பின் அமெரிக்காவில் படித்து பணியாற்றி வரும் பல பொறியாளர்களைப் போன்றதுதான் என் பின்புலமும் என்று நிச்சயம் சொல்லலாம். நான் 1970களில் பயின்றதெல்லாம் கிராம அல்லது சிறுநகர, மிகவும் சாதாரண அரசாங்க தமிழ் மொழி வழிப் பள்ளிகளில்தான். மிகப்பெரும்பாலான என் பள்ளி நண்பர்களைப் போலவே எங்கள் வீட்டிலும் எனக்கு முந்தைய தலைமுறைகளில் யாருக்கும் கல்லூரி செல்லும் வாய்ப்புக்கள் இருந்ததில்லை. எனவே வீட்டில் நூலகம் போல் புத்தகங்கள் வைத்துக்கொள்ளும் பழக்கமோ அல்லது நல்ல நூலகங்களைத் தேடிப் பிடிக்கும் வழக்கமோ எதுவும் கிடையாது. நல்ல சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற விஷயமே அப்போதெல்லாம் எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. பிளஸ் 2 வாக்கில் அந்த பிரக்ஞை வந்தபோதும் தமிழில் மூளையைக் கிளறி யோசிக்க வைக்கும் புத்தகங்கள் நிறைய சுலபமாய் கிடைத்ததில்லை. ஓரிரு பத்தாண்டுகளுக்குப் பின் நான் வளர்ந்த கிராமங்கள், சிற்றூர்களை சென்று பார்த்தபோதும் நிலைமை அப்படி ஒன்றும் முன்னேறி விட்டதாய்த் தோன்றவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் வலையின் வருகையும், திறன்பேசிகளின் பரவலான உபயோகமும் தேவையான தகவல்களை தேடிப்பிடித்து படித்துக்கொள்ள ஓரளவு வழி செய்திருக்கின்றன என்றாலும், சினிமா அரசியலைத் தாண்டி, தமிழ் கூறும் வலையுலகில் உருப்படியான தகவல்கள் அவ்வளவு நிறைய எழுத/பகிரப் படுவதாகத் தெரியவில்லை. இந்தக் குறையை நிவர்த்திக்க என்னாலான சிறு முயற்சியாய் சில வருடங்களுக்கு முன் தமிழில் எனக்குத் தெரிந்த துறைகளைப் பற்றி, குறிப்பாக தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை சொல்வனம் தந்த பக்கங்களில்  எழுத ஆரம்பித்தேன். எண்ணெய்யும் தண்ணீரும்பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள்தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சிஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி? போன்ற கட்டுரைத்தொடர்கள் அப்படி வெளிவந்தவை. அந்த முயற்சியின் ஒரு பகுதியாய் நான் எழுதிய சிந்தனைச்சோதனைகள் என்ற தொடரை நீங்கள் படித்திருக்கலாம்.

பன்னிரண்டு பகுதிகளாய் சொல்வனத்தில் வெளிவந்த அந்தத்தொடரில் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல் முதலிய பல துறைகளில் இருந்துவரும் பிரச்சினைகளை அலசவும், கருத்துக்களை விளக்கவும் உலகெங்கிலும் உருவாக்கப்பட்ட சிந்தனைச்  சோதனைகளைத் தொகுத்து வழங்கி இருந்தேன்.  செயற்கை நுண்ணறிவு பற்றிய   சீன அறை வாதம் (Chinese Room argument ), இயற்பியலில் பல காலமாய் பேசப்பட்டு வரும் ஷ்ரோடிங்கரின் பூனை (Schrodinger’s cat ), முடிவிலி (Infinity) என்ற ஒன்றை விளக்க முயலும் Hotel Infinity என்ற கணித சோதனை, நியாயம்/தர்மம் போன்ற கொள்கைகளை நடைமுறைப் படுத்த மதம் தேவையா என்று அலசும் ட்ரொலி பிரச்சினை ( Trolley Problem ) போன்ற பல சோதனைகள் அந்தத்தொடரில் தலை காட்டி இருந்தன. கடந்த ஒரு வருடமாக அந்தத் தொகுப்பை இன்னும் நிறைய மெருகூட்டி, புதிதாக ஜனநாயகம், மருத்துவம் பற்றிய அத்தியாயங்களையும், ஆழ்ந்த அறிதல் (Deep Learning) முதலிய விவாதங்களையும் சேர்த்து ஒரு புதிய மின் புத்தகமாக “சிந்தனைச்சோதனைகள் – பணச்செலவில்லா பிரபஞ்சச்சுற்றுலா” என்ற பெயரில் வெளிக்கொணர்ந்து இருக்கிறோம். சொல்வனம் ஆசிரியர் குழுவின் உதவி/ஆசியுடன் வெளிவரும் இப்புத்தகம், ஒரு சொல்வனம் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலை இணைப்புகளின் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் QR குறியீட்டை உபயோகித்தோ நீங்கள் வாங்கலாம்.

கூகிள் இணைப்பு : https://goo.gl/5qufqJ

அமெஸான் இணைப்பு  : https://goo.gl/vzaD3f

சுமார் 180 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலையை $1.99 என்று நிர்ணயித்திருக்கிறோம். புத்தகத்தை விற்பதில் இருந்து கிடைக்கும் லாபமனைத்தும் சொல்வனம் தளத்தைப் போய்ச்சேரும். சுய முயற்சியில் ஓரளவு தரமான ஒரு புத்தகத்தை பிரசுரிப்பது என்பது, அது மின்-புத்தகமாக இருந்தாலும் கூட, அவ்வளவு சுலபம் இல்லை என்பது இந்த அனுபவத்தின் மூலம் புரிய வந்தது. இது பொருளாதார எதிர்பார்ப்புகள் அதிகம் இன்றி ஒரு தன்னார்வ சமூக சேவையாக தரமான விவாதங்களையும், கருத்து அலசல்களையும் பொதுமக்களிடையேயும், மாணவர்களிடையேயும் ஏற்படுத்தவே படைக்கப்படும் புத்தகம் என்ற விளக்கங்களுக்கு அப்புறமும் ஓரிரு படங்களை புத்தகத்தில் உபயோகித்துக்கொள்ள அனுமதி கோரியபோது ஆயிரக்கணக்கில் பணம் கேட்ட சில ஊடகங்கள், ஆகவே அந்தப் படங்களை எடுத்து விட்டு என் சகோதரன் சாரதியை வரைந்து கொடுக்கச் சொல்லி சேர்க்கப்பட்ட படங்கள், புதிதாக ஆர்டர் கொடுத்து உருவாக்கிய அட்டைப்படம், பணம் செலவழித்து உரைநடையை பிழை பார்த்து திருத்தம் செய்ய ஆள் தேடிய அனுபவம், சொல்வனம் ஆசிரியர் குழுவினருடன் சேர்ந்து புத்கத்திற்கான ISBN எண் வாங்கிய கதை என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு வழியாக எல்லாம் முடிந்து புத்தகம் நீங்கள் வாங்குவதற்கு ரெடியாக வலையில் இப்போது உட்கார்ந்திருப்பது சந்தோஷமாய் இருக்கிறது.

எங்கள் செலவிலேயே காகித வடிவிலும் சில நூறு பிரதிகள் அச்சிட முயன்று வருகிறோம். நிச்சயம் படித்து மாணவர்களிடையே சுவையான அலசல்களை நடத்துவார்கள் என்று தெரியும் உற்சாகம் மிகுந்த சில ஆசிரியர்/ ஆசிரியைகளுக்கும், படித்துப்  பயனுறுவார்கள் என்று தெரியும் சில தமிழ் மாணவ/மாணவியர்களுக்கும்   அந்த காகித பிரதிகளை இலவசமாக அஞ்சலில் அனுப்ப எண்ணம். எனவே இப்புத்தகம் சம்பந்தமான மூன்று கோரிக்கைகளை உங்கள் முன் வைக்கிறோம்.

  1. புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கி படித்துப் பாருங்கள். கூகிள் வழியாக வாங்கினீர்களானால், சொல்வனம் 52% ராயல்டி பெறும். அமெஸான் வழியாக வாங்கினீர்களானால் 35% ராயல்டி கிடைக்கும். உங்களுக்கு எதன் வழியாக வாங்குவது சுலபமோ அதன் வழியே வாங்குங்கள். முடிந்தால் இன்னும் நான்கு பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு பரிசாக வழங்குங்கள்.
  2. ஒரு நாவலை படிப்பதுபோல் விறுவிறுவென்று படித்து முடிக்க முயலாமல், முன்னுரையில் சொல்லியிருப்பதுபோல், மெதுவாக புத்தகத்தைப் படித்து, இணைய தளங்களில் புத்தகத்தின் குறை நிறைகளை விமரிசனம் செய்யுங்கள். நானும் சொல்வனம் குழுவினரும் எதிர்காலத்தில் பிரசுரிக்க இருக்கும் புத்தகங்களின் தரத்தை உயர்த்த உங்கள் விமரிசனங்கள் மிகவும் உதவும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் புத்தகத்தை வாங்கிப் படித்து விமர்சிக்குமாறு கொஞ்சம் விளம்பரம் செய்யுங்கள்.
  3. இந்தப் புத்தகத்தை நிச்சயம் படித்து ரசித்து விவாதிப்பார்கள் என்று உங்களுக்குத் தோன்றும் ஒரு சில ஆசிரிய/மாணவ/மாணவிகளின் முகவரிகளை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள். அச்சுப் புத்தகம் வெளிவந்தவுடன் எங்கள் செலவில் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்ப முயற்சிக்கிறோம்.

அன்புடன்
சுந்தர் வேதாந்தம்

 

Exit mobile version