Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

தானோட்டிக் கார்கள் – சமூகத் தேவை மற்றும் மனித ஓட்டுதல் பிரச்னைகள்

எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்திற்கும் ஒரு தேவை இருந்தாலே அது வெற்றி பெறுகிறது. தொலைதூரப் பயணம் என்பது மனிதர்களுக்குக் கால்நடையாகச் செல்வது அதிக நேரம் மற்றும் உடல் சோர்வு உண்டாக்குவதால், விலங்குகளில் ஆரம்பித்து (குதிரை, யானை), சைக்கிள் என்று முன்னேறி, கார் வரை தேவையானது. கடல் தாண்டிச் செல்ல கப்பல் மற்றும் விமானம் தேவையானது. தானோட்டிக் கார்களுக்கு என்ன தேவை?

மிக முக்கியமான காரணம் மனித ஓட்டுனர்கள்.

இந்தப் பிரச்னைகள் நம்முடைய பொறுப்பின்மையால் வந்ததா? எளிதாக ஆம் என்று சொல்லி விடலாம். ஆனால், வேறு வழியில்லை என்று வரும் பொழுது, நாம் பிரச்னைகளுடன் வாழப் பழகி விடுகிறோம். ஆனால், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் ஒரு விலையுள்ளது. சமூகம் அந்த விலையை வரிகள் மூலம் கொடுத்து வந்துள்ளது. இங்குப் பட்டியலிட்டுள்ள எல்லாப் பிரச்னைகளையும் தானோட்டிக் கார்கள் தீர்த்துவிடும் என்று அர்த்தமில்லை. ஆனால், மிகப் பெரிய பிரச்னையான விபத்துக்கள் மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டுதல் என்ற இரு பிரச்னைகளைத் தானோட்டிக் கார்கள் நிச்சயமாகத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக இந்தப் பிரச்னைகளைப் பார்ப்போம்.

பொதுவாக, நாம் பெட்ரோல் விலை அதிகமானால் சீறுகிறோம். அரபு சர்வாதிகாரிகளைத் திட்டுகிறோம். கார் செலுத்துவதன் பிரச்னைகளில், பெட்ரோல் ஒரு சின்னப் பங்கே வகிக்கிறது. மேலே உள்ள படம், ஒரு மைல் பயணத்திற்குச் சமூகம் தரும் விலையைப் பட்டியலிடுகிறது. நம்முடைய பாக்கெட்டிலிருந்து பெட்ரோல், கார் பராமரிப்பு மற்றும் காப்பீடு – இந்த மூன்றே செலவுகள் தான் என்று நினைக்கிறோம். சமூகத்திற்கு, இன்னும் பல செலவுகள் உள்ளன. போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் மற்றும் காற்று மாசு/புவி சூடேற்றம் பெட்ரோல் விலையை விடப் பல மடங்கு அதிகம்.

உதாரணத்திற்கு, AAA  என்ற அமெரிக்க அமைப்பு, வருடத்திற்கு 10,000 மைல்கள் ஓட்டப்படும் ஒரு சாதாரணக் காருக்கு ஆகும் செலவுகளை இப்படிப் பட்டியலிட்டுள்ளது;

 

செலவு விவரம் செலவு விளக்கம்
பெட்ரோல் செலவு $1,500.00 மைலுக்கு 15 சென்ட்கள் 10,000 மைல்களுக்கு $1,500
பராமரிப்புச் செலவு $500.00 மைலுக்கு 5 சென்ட்கள் 10,000 மைல்களுக்கு $500
டயர்கள் செலவு $100.00 மைலுக்கு 1 சென்ட். 10,000 மைல்களுக்கு $100
தேய்மானச் செலவு (depreciation) $3,244.00 பல கார்களின் சராசரி தேய்மானச் செலவு
கடன் வசதிக் கட்டணம் (finance charges) $831.00
குத்தகை மற்றும் பதிவுச் செலவு (leasing and registration charges) $600.00
மொத்த செலவு $6,775.00

 

நாம் முன்னே பார்த்த படத்தில், மைலுக்கு ஆகும் செலவில், அதாவது 15 சென்ட்களில், மற்ற சமூகச் செலவு பளூ எவ்வளவு என்று பார்தோம். 15 சென்ட்களில், 13.1 சென்ட்கள் இவ்வகைச் செலவிற்கே சரியாகி விடுகிறது. ஒரு கார் சராசரி 10,000 மைல்கள் ஒரு ஆண்டுப் பயணிக்கிறது என்று வைத்துக் கொண்டால், சமூகச் செலவு 13.1*10,000 = $1,310. அமெரிக்காவில், ஏறக்குறைய 2014 –ல் 243 மில்லியன் வாகனங்கள் இருந்ததாக ஒரு புள்ளி விவரம் சொல்லுகிறது. அதாவது, சமூகச் செலவு, இந்த வாகனங்களால்,

243,000,000 * $1,310 = $318,330,000,000

இந்திய ரூபாய்க் கணக்குப் படி (டாலருக்கு 66 ரூபாய்) 21 லட்சம் கோடி ரூபாய்கள். இந்தக் கணக்கில், கட்டுமானச்  செலவுகள் எதுவும் அடங்காது. சாலைப் பராமரிப்பு, புதிய சாலைகள் மற்றும் பாலம் கட்டும் செலவு, புதிய சிக்னல்கள், புதிய சாலைக் குறிகள் எதுவும் இதில் அடங்காது.

கார்களில் சேர்க்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் ஒவ்வொன்றும் பல கோடி கார்கள் ஓடுவதால், அதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என்பது பல வல்லுனர்களின் கருத்து. ஆனால், பாதுகாப்பு அம்சங்கள், பெரும்பாலும், விபத்தை எப்படித் தவிர்ப்பது என்ற நோக்கத்தையே முன் வைக்கின்றன. உயிர் சேதத்தை எப்படிக் குறைப்பது என்பதே இவற்றின் நோக்கம். உதாரணத்திற்கு, இருக்கை வார் (seat belts) மற்றும் காற்றுப் பைகள் (air bags) விபத்து விஷயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய முன்னேற்றங்கள். ஆயினும், உயிர்சேதத்தைக் குறைத்த இவ்வகை அம்சங்கள், விபத்தைத் தவிர்ப்பதில் வெற்றி பெறவில்லை. ஒரு 5 ஆண்டுகளுக்கு முன்பு, கார் விபத்துக்களால் இருந்த உயிரிழப்பு அளவு, இன்று இல்லை என்பது நிச்சயம். ஆனாலும், விபத்துக்கள் நேர்ந்த வண்ணம் இருக்கின்றன. நாம் பார்த்த 2.4 சென்ட்கள் (ஒவ்வொரு 15 சென்ட்களுக்கும்) இன்னும் குறைந்தபாடில்லை.

அத்துடன், இந்தப் படத்தில் காட்டாத இன்னொரு விஷயம் வாகனங்களை நிறுத்துமிடம் பற்றியது. ஒரு புள்ளிவிவரத்தின் படி, லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள நிலப்பரப்பில் 81% கார்கள் நிறுத்துமிடத்திற்கே சரியாக உள்ளது. இதன் அர்த்தம், வெறும் 19% –ல் கட்டிடம், மனிதர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் என்பதல்ல. பல மாடி கார் நிறுத்துமிடங்களின் நிலப்பரப்பையும் சேர்த்துக் கொண்டால், கணக்கு இப்படி பூதாகரமாகத் தெரிகிறது. உலகின் எல்லாப் பெரிய நகரங்களிலும் இதுவே பிரச்னை.

இன்னொரு புள்ளி விவரப்படி, ஒரு சராசரிக் கார், தன்னுடைய பயனுள்ள ஆயுளில், வெறும் 5% நேரமே செலுத்தப்படுகிறது. 95% நேரம் நிறுத்தப்படுகிறது. இதைப் போன்ற நில விரயம் வாய்ந்த ஒரு தொழில்நுட்பம் ஏதுமில்லை. கார்கள் வருவதற்கு முன்னர், லண்டன் மாநகரத்தின் பெரும் பிரச்னை, குதிரை நிறுத்துமிடம் மற்றும் அதன் சாணம் என்றிருந்தது. இன்று, நம்முடைய பல நகரங்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் ராட்சசனாகக் கார் மாறிவிட்டது!

பிரச்னைகளை அடுக்கியாகிவிட்டது. அடுத்தபடியாக, தானோட்டிக் கார்கள் எந்த வகைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும் என்று பார்ப்போம்.

டெஸ்லா போன்ற கார்கள் மின்கார்களாகவும், தானோட்டித் தன்மை வாய்ந்த கார்களாகவும் இருப்பதை, இங்கு ஒரு விதிவிலக்கு என்றே அணுகுவோம். இன்னும் சில ஆண்டுகளில் வரும் கார்கள் பெட்ரோலிலேயே இயங்கும் என்று வைத்துக் கொள்வோம்.

நாம் பார்த்தப் படத்தில் உள்ள 13.1 சென்ட்களில், குறைந்தபட்சம், பாதியாவது மிஞ்சும் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. மின் கார்கள் ஒலியளவையும் சற்றுக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின் ஒரு பகுதியில், இந்த வகைக் கார்கள் எப்படிப் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று விரிவாகப் பார்ப்போம். ஈலான் மஸ்க் சொன்னச் சட்ட புறம்பான மனித கார் ஓட்டுனர்கள் என்ற நிலை வர இன்னும் 50 ஆண்டுகளாவது ஆகும் என்று சொல்லலாம். ஒன்று மட்டும் நிச்சயம் – மோசமான மனித கார் ஓட்டுனர்களால், சமூகத்திற்கு ஏராளமான பொருளாதார/சுகாதார பளு கடந்த 60 ஆண்டுகளாக  நேர்ந்துள்ளது மறுக்க முடியாத நிகழ்வு.

பாதுகாப்பு அம்சங்களைப் படிப்படியாக வாகனத் தயாரிப்பாளர்கள் அறிமுகப் படுத்தி வந்துள்ளார்கள் என்று பார்த்தோம். பல அரசாங்க போக்குவரத்து மற்றும் பொறியாளர்களும், உண்மையில், தானோட்டிக் கார் என்றால் என்னவென்று அழகாகப் பட்டியலிட்டுள்ளார்கள்.

நன்றி: Scientific American, June 2016

Society of Automobile Engineers (SAE) என்ற அமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன், இதை முன் வைத்தது. வழக்கம் போல, அமெரிக்க அமைப்பான National Highway Traffic Safety Administration (NHTSA) சற்று, இதை மாற்றி, SAE –யின் 6 அடுக்குகளுக்குப் பதில் 5 அடுக்குகளை முன் வைத்துள்ளது. உலகின் பல நாடுகளும் SAE முறையை அங்கீகரித்துள்ளதால், அதோடு, இரண்டிற்கும் அதிக வித்தியாசம் இல்லாததால், அரசாங்க சச்சரவிற்குள் சிக்காமல், நாம் SAE முறையை இங்கு விளக்குவோம்.

மிகவும் மதிநுட்பமான தொழில்நுட்பம் இவ்வகைக் கார்களின் பின்னால் இயங்குகின்றது. வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்பத்தை, அடுத்த சில பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்

Exit mobile version