Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

கவிதைகள்

கயிற்றரவு

உனக்கும்
எனக்கும்

கயிறு
அரவாகக் காட்சியாகலாம்.

அரவு
கயிறாகக் காட்சியாகலாம்.

ஏந்திய கழி இறக்கையாகி அந்தரத்தில்
கயிற்றில்
சிந்தை சிதறாது சிறுபறவையெனப் பைய நடக்கும்
மேனி ‘நறுங்கிய’ நாடோடிச் சிறுமிக்கு

கயிறு
கயிறே தான்.

அதனால்

அரவு
அரவே தான்.

oOo

வாட்ச் மேன்

எத்தனை முறை பார்த்திருப்பேன்.
எத்தனை முறை பேசியிருப்பேன்.

எத்தனை முறை
எத்தனையோ பணிகள் இட்டிருப்பேன்.
எத்தனை முறை ‘வாட்ச் மேன்’ என்று
கூவியிருப்பேன்.

எத்தனை முறை கூவியவுடன்
ஒளிந்து புகைக்கும் பீடியையும் போட்டு விட்டு
ஓடி வந்திருப்பான் அவன்.

எப்படி நடந்தது?

சற்று முன் சாலைக்குச் சென்ற ‘வாட்ச் மேனைப்’
பேருந்து அடித்துப் போயிருக்கும்.

வாசல்
ஒரு கணம் மனம் காலியாயிருப்பது போல் இருக்கும்.

இரங்கல் சுவரொட்டியில் வாசித்துத் தெரிந்து கொள்ள
எனைப் பார்த்துச் சிரிக்கும் ‘வேலு நாயக்கர்’ யார்?

வாட்ச்ச்ச் ——-?

குரல்வளைக்குள்
சொல்
தடுக்கி விழும்.

எத்தனை முறை வாசலில் ’வேலு நாயக்கர்’ இருக்கக் கண்டேன்
இனிமேல் இல்லாமல் போக?

’சுருக்’கென்று என் நெஞ்சில்
சுடுகாட்டில் கருவேல முள் குத்தியது போல் குத்தும்

oOo

மனைவியாகிறாள் அவள்

விடியலில் எழுந்து
வாசல் தெளித்துக் கோலம் போட்டு
துவைத்து
துணிகளை உலர்த்தி மடித்து வைத்து
காய்கறி வாங்கி வந்து சமைத்து
‘சாப்பிட வாங்க’ என்று ‘வீட்டுக்காரரை’ அழைத்து
சோர்விலாது வேலைக்கும் சென்று குடும்பம் நடத்தும்
என் அப்பாவின் மனைவியான என் அம்மா போல
எனக்கு
மனைவியாகிக் கொண்டிருக்கிறாள்
என்னைப் புதிதாய்க் கல்யாணம் கட்டிக் கொண்டு வந்தவள்.

என் ’அப்பா’வாகிக் கொண்டிருக்கிறேன்
நான்.

– கு.அழகர்சாமி

oOo

 

கவிராயர் எழுதிய வாக்குமூலம் 

 தன் மனைமாட்சியை
இருகரங்களால் அள்ளி
தூக்கமுயன்று தோற்றுப்போய்
மல்லாந்து மோட்டுவளையை
வெறித்திருந்த கவிராயர்
வெண்தாளொன்றை உருவி
விறுவிறுவென்று எழுதலானார்
கீழ்வருமாறு:
ஒரு கவிஞனின் வாக்குமூலம் 
என்னுள் இறைந்து கிடக்கும்
படிமங்களே குறியீடுகளே
இலக்கண இலக்கியங்களே
போலகளே போலிகளே
அணி தொனிகளே
ரசவாத இத்யாதிகளே
வணங்காமுடி விமர்சனங்களே
வணங்குகுடி வாசிப்புகளே
பிரசுரம் கண்ட கவிதைகளே
உடைகாட்டும்  விழாக்களே
எடைகூட்டும் கண்காட்சிகளே
திறக்காத பக்கங்களே
திறந்த துக்கங்களே
உங்கள்வழி கண்டிராத ஞானமே
அதை அண்டிவிடத் துடிக்கும்
நானெனும் ஞானசூனியமே
இருசெவி திறந்து கேளுங்களேன்
இன்றுநான் சுமந்துதெளிந்த ஞானத்தை :
மிகுகனம் தூக்கும் மாமள்ளர்க்கும்
சுயகனம் சுமத்தல் சொப்பணமாம்.
மேலதிகமாய் எழுத, எதுவும் வராமல்,எழுத்தாணியை வீசியெறிந்தார் கவிராயர்.

– எம்.ராஜா

Exit mobile version