
இந்த இதழில் ஒரு சிறுகதை பிரசுரமாகிறது. எழுதியவர் அது பற்றித் தன் குறிப்பாக, ”நடுத்தரக் குடும்பங்களில் நடக்கும் திருமண ஏற்பாடுகளையும், “நாலு பேர் என்ன சொல்வார்கள்” என்ற சமூகத்தின் பொதுப்புத்தி அழுத்தத்தையும் ஒரு பெண்ணின் பார்வையில் நக்கல், நையாண்டி மற்றும் எதார்த்தம் கலந்து இக்கதையில் பதிவு செய்துள்ளேன்.” என்று தன் கடிதத்தில் எழுதியிருந்தார்.
அக்கதையைப் படிக்க நேர்ந்த அதே சமயத்தில் தற்செயல் உடன் நிகழ்வாக ஓர் அமெரிக்க வலைப்பதிவாளரின் கட்டுரையைப் படிப்பதும் நடந்தது. அந்தக் கட்டுரை மேலை நாகரீகத்தில், கடந்த சில நூறாண்டுகளில், திருமண உறவுகள் உருவாகும் முறைகளில் என்ன மாறுதல்கள் நேர்ந்தன என்பதை ஒரு சிறு கட்டுரையில் பார்த்தது. அத்தனை பெரிய கருதுபொருளை, ஒரு சிறு கட்டுரையில் அடைப்பது சுலபமில்லை, அதில் நிறைய விடுபட்டிருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நமக்கு அத்தனை பழக்கமில்லாத ஒரு விஷயத்தில் ஓர் நுழைவாக அந்தக் கட்டுரை இருக்கும் என்று என் கருத்து.
இந்த இரண்டு படைப்புகளின் தாக்கத்தால், தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் மணம் புரிய தேர்வு முறைகளில் என்ன மாறுதல்கள் நேர்ந்திருக்கின்றன என்று தெரிந்து கொள்ள எனக்குத் தெரிந்த ஒரு இளைஞரிடம் பேசினேன், அவர் தன் அனுபவங்கள், தன் தோழர்களின் அனுபவங்களைத் தொகுத்து ஒரு சிறு குறிப்பை அனுப்பினார். இரு குறிப்புகளையும் சுருக்கி ஒரு ‘கட்டுரை’ போல வடிவமைத்து இங்கே தருகிறேன்.
இவற்றின் ஒட்டு மொத்தத் தாக்கம், கதையை மட்டும் படித்துப் பெறும் தாக்கத்திலிருந்து வேறுபட்டதாக இருக்குமா, அல்லது அந்தத் தாக்கத்திற்கு வலு சேர்க்குமா என்று என்னால் உறுதியாகச் சொல்லவியலவில்லை. எனவே கதையைப் பிரசுரிக்கும்போது மற்ற இரண்டின் சுருக்கத்தையும் பிரசுரிக்கலாம் ஒரு சம்வாதமாக இருக்கும் என்று நினைத்தேன்.
இரண்டு குறிப்புகளின் சுருக்கமான இந்தப் பகுதியைப் படிக்கு முன்னர், கதையைப் படிப்பது உதவும், அக்கதையைப் படித்திருக்காத வாசகர்கள், முதலில் அங்கே செல்லுமாறு கோருகிறேன்.
’யாருங்க அந்த நாலுபேரு?’ என்ற ஒரு கேள்வியைக் கதையின் மையப் பாத்திரமான இளம்பெண் எழுப்புகிறார், அவர் அந்தக் கேள்வியைக் கேலியாகத் தெரிவிக்கிற மாதிரி இருந்தாலும், அது உண்மையில் விமர்சனம், எதிர்ப்புக் குரல். கதையிறுதியில் அவர் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்துத் தேர்வு செய்யும் நபரும் தன்னிடம் எழுப்பப்படும் அந்தக் கேள்வியில் உள்ள விமர்சனத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார், அதன் கேலியுருவில் இருக்கும் வலுவையும் அங்கீகரிக்கிறார். அதுவே கூட இந்தப் பெண்ணுக்கு அவரைத் திருமணம் செய்து கொள்வது நல்ல துவக்கமாகவாவது இருக்கும் என்ற ஆசுவாசத்தைக் கொடுக்கிறது என்கிற மாதிரி நமக்குத் தென்படுகிறது. ஒரு கோணத்தில் அந்தப் பெண் தன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உள்ள பெரு நாட்டத்தை விட தன் கருத்தைப் பிறர் மதித்து அதன் உள்ளீட்டைக் கருதி யோசித்து அதற்குத் தர வேண்டிய இடம், நேரம், மறுவினை ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது. அசையாமல் இருப்பது போன்ற தோற்றம் தரும் பெரும் சமூகத்துப் பழக்கவழக்கங்கள் தன் குடும்பத்தினரிடம் எப்படிப் படிந்தன, பற்பல விதங்களில் தன் வாழ்வைத் தான் நடத்த முடிகிற மாதிரி ஆகி விட்ட பிறகும், அவர்களுடைய வற்புறுத்தல்கள் ஏன் தன் விருப்பங்களை மதிக்காமல் தாண்டிப் போய் தனக்கு ஒரு மண வாழ்வை வற்புறுத்தித் திணிக்கின்றன என்று அவர் யோசிக்கிறார். உரித்தால் மையமே இல்லாத வெங்காயம் போல அடுக்கடுக்காக எங்கிருந்து யார் மூலம் அவை விதியாக்கப்படுகின்றன என்பது புரியாத மர்மம் அந்தப் பெண்ணைக் குறைந்த பட்சம் ஒத்துழைக்க மறுப்பவராக ஆக்குகிறது.
கதை குடும்பம், சுற்றம், அக்கம்பக்கத்தினர் ஆகியோரைச் சில பாத்திரங்கள் மூலம் நமக்குத் தெரிவிக்கிறது. அவர்களில் சிலர் தவிர்க்கவியலாதபடி இந்தப் பெண்ணின் கூட வாழ்கிறவர்கள்- பெற்றோர். சிலர் முக்கியமான நிகழ்வுகளில் குடும்பத்தின் இயக்கத்தில் நுழைந்து உதவுகிறவர்கள்- அத்தை, ஆனால் தம் மதிப்பீடுகளால் இடையூறாகவும் ஆகக் கூடியவர்கள்.
அக்கம்பக்கத்தாரைப் பற்றி நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை. பல பத்தாண்டுகளாகவே தமிழ்ப் புனைவுகளில் அக்கம்பக்கத்தினர் இடையூறாகவோ, அல்லது நம்மை ஏதோ விதத்தில் குறுக்குபவர்களாகவோதான் சித்திரிக்கப்பட்டு வருகிறார்கள். அபூர்வமாகத்தான் அக்கம்பக்கம் என்பது உதவியாக, ஆறுதலாக, வலுச் சேர்ப்பதாகக் காட்டப்படுகிறது. இந்தக் கதையில் அக்கம்பக்கம் அதிகத் தாக்கம் இல்லாத பூடகமான விமர்சகர்களாக வருகிறார்கள்.
கதையின் மையக் கருத்தில் பிறர் என்பார்- பெற்றோராகவோ, உறவினர்களாகவோ, அக்கம்பக்கத்தினராகவோ யாராக இருந்தாலும் – நாம் நம் விருப்பப்படி இருக்க விடாதவர்களாகவே காணப்படுகிறார்கள். இது ஒரு சமீப நிகழ்வு இல்லை. சில பத்தாண்டுகளாக தமிழகத்திலும், அனேகமாக இந்தியா நெடுகவும் ஏற்பட்டு விட்ட ஒரு சமூக மாறுதல்தான். 70-80 ஆண்டுகள் முன்பு தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் குடும்ப உறவுகள் எப்படி இருந்தன என்பதை இன்று இளைஞராக இருப்பவர்கள் அறிந்து கொள்ள விரும்பினால், தம் முதிய உறவினர்களிடம் பேசுவது மூலம் ஓரளவு தெரிந்து கொள்ள முடியலாம்.
நினைவுகள் மூலம் வரலாறைத் தெரிந்து கொள்வது சாத்தியம் என்றாலும் அதில் நிறைய குறைகளும், விடுபடுதல்களும் இருக்கும் என்பது நமக்குப் பழக்கத்தில் தெரியும். ஒரே குடும்பத்தில் வளர்ந்த சகோதர சகோதரிகளிடம் பேசினாலும், ஒவ்வொருவரின் பார்வையிலும் கடந்த கால நடப்புகள் பற்பல உருக்களோடு இருப்பதை நாம் காண/ அறிய முடியும். இவற்றை எல்லாம் ஒரு சேரத் தொகுத்து அவற்றின் சாரத்தை நாம் அறிந்து கொள்ள முயல்வதன் மூலம் சுமாரான நம்பகத் தன்மை கொண்ட ஒரு குடும்ப வரலாறு கிட்டலாம். இது நம் விருப்பு வெறுப்புகள், மதிப்பீடுகளால் வழி நடத்தப்பட்டிருக்கும் என்பதை நாம் முதலிலேயே தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு குடும்பத்தின் காலக்கடப்பையே அறிவதில் சிக்கல்கள் என்றால் விரி குடும்பம், சூழலில் உள்ள ‘அக்கம்பக்கத்தினர்’, நாம் நம் சமூகம் என்று கருதும் கூட்டத்தின் மாற்றங்கள்/ பயணம், தவிர பெரும் சமுதாயத்தில் நேர்ந்து விட்ட ஏராளமான மாறுதல்கள் ஆகியனவற்றை நாம் நம்மால் புரிந்து தெரிந்து கொள்ளக் கூடிய வடிவில் அடைய நிறைய முயற்சி தேவைப்படும். தகவல் சேகரிக்கவே சில வருடங்கள் ஆகலாம்.
சாமானியரானவர்களுக்கு இத்தகைய முயற்சிகள் தோதுப்படாதவை. அப்படித் தெரிந்து கொள்ளும் முனைப்பும் நம்மில் பலருக்கு, பெரும்பான்மையினருக்கு இராது. அது சாத்தியமே இல்லை என்று கைவிடுவது நமக்கு ஓர் எளிய தேர்வாக இருக்கும். அதையே நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
ஒரு சுருக்கச் சுட்டலாக இதைச் சொல்கிறேன். 1940-50 கள் வரை ஒரு தெரு, சில தெருக்கள், ஒரு சிற்றூரில் வசிப்பவர்களுக்கு நாடு என்ற பெருந்தொகுப்பு, மாநிலம் என்ற அடுத்த பெரும் தொகுப்பு, ஊர் என்ற ஒரு சமூகம் ஆகியவற்றில் நடக்கும் அன்றாட மாறுதல்கள், நிகழ்வுகளில் துவங்கி, கடந்த சில வருடங்களோடு ஒப்பிட்டு இந்த வருடம் நடந்துள்ள நிகழ்வுகளின் விளைவுகள் பற்றிய சீர்தூக்கலோடு சேர்த்துக் கொடுக்கப்படும் தகவல் பெருக்கு எங்கிருந்து கிட்டி இருக்கும்? பத்திருபது குடும்பங்களில் இரண்டு மூன்று குடும்பங்களில் மட்டுமே வாங்கப்படும் செய்தித்தாள்கள், அதே போல சில குடும்பங்களில் மட்டுமே இருக்கக் கூடிய வானொலிப் பெட்டிகள், எப்போதோ ஒரு முறை சுற்று வட்டாரத்தில் நடக்கக் கூடிய சில கூட்டங்கள், சமூக நிகழ்ச்சிகள், வீட்டுக்கும் தெருவுக்கும் வந்து போகக் கூடிய உறவினர்கள், பிரமுகர்கள், கோவில்களில், சமூகக் கூடங்களில் நடக்கக் கூடிய கதா காலட்சேபம் என்ற வகை நிகழ்ச்சிகள் ஆகியன மூலம் பொதுத் தகவல் வந்து சேரும். அவை தவிர 40-50களில் பயாஸ்கோப் அல்லது சினிமா என்ற ஒரு ஊடகமும் சிற்றூர்கள் வரையாவது கிட்டின. அவை பெரும்பாலும் கதைகளை, நாடகமாகக் கொடுத்தன. ஆனால் அவை உலகளாவிய தகவல்களைக் கூடக் காட்டின. அண்டை நாடுகள், மேலை நாடுகள், கடல், மலை, பல மாநிலங்கள் பற்றிய தகவல்களோடு சில நேரம் அங்கு போய் வந்த மாதிரி பயணச் சித்திரங்களைக் கூடக் கொடுத்தன.
அதே போல பத்திரிகைகள், கதைப் புத்தகங்கள் மூலமும் புனைவுகள், கருத்துக் கட்டுரைகள் வழியே வடிகட்டப்பட்டு, உரு மாற்றி வனையப்பட்ட உலகுகள் வழியே நிஜ வாழ்க்கை என்ற கையில் பிடிக்கப்பட முடியாத ஒரு பெரும் ‘எதார்த்தம்’ சுருக்கப்பட்டு நேர வசதியென்ற சிறு புட்டிகளில் அடைத்த திரவமாகக் கொடுக்கப்பட்டது. குறுக்கப்பட்ட எந்தத் திரவமும் அதிகமான விறுவிறுப்பும், சுளீரென்று உணர வைக்கும் திறமும் கொண்டிருக்கும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமில்லையா? இந்தப் புனைவுகள், திரைப்படங்களுக்கு அத்தகைய தாக்கம் இருந்திருக்க வேண்டும். முன் சொன்ன தகவல் பெருக்கு சுற்றிலும் சிற்றோடையாகவாவது வழிந்தோடும்போது, அதை அதிகம் மதியாமல், கையில் உள்ள புனைவுலகால் பாதிக்கப்பட்ட நிலை அதிகம் இருக்கவே வாய்ப்பு அதிகம். பொதுவாகவே மனித மதி புனைவைக் கொண்டு செயல்படுவது அதிகம் என்பதால்தான் பிரச்சாரம், விளம்பரம் ஆகியனவற்றில் வர்த்தக முதலீடு நிறைய இருக்கிறது. இன்றைய அரசியல் உலகெங்கும் பிரச்சாரத்தையும் விளம்பரத்தையும் விட்டால் வேறெந்த வழியிலும் நடக்க வாய்ப்பில்லை என்றே கூடச் சொல்லலாம். தகவல் கடலில் மூழ்கி இருக்க வேண்டிய அரசு அமைப்புகள் கூட முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்தால் சுருக்கத் தகவல் (பெரும்பாலும் புனைவுகளால் ஆனது) அடிப்படையிலேயே செயல்படத் தொடங்குகின்றன.
இந்தச் சுருக்கப்பட்ட தகவல் சொரிவை வைத்துக் கொண்டு குடும்பம் என்னும் ஒரு சிறு அமைப்பு தன் உறுப்பினர்களின் வாழ்வை எப்படி வடிவமைக்க முயல்கிறது என்று பார்க்கத் தொடங்கினோமானால், குடும்பங்களின் நிர்வாகிகள், துவக்க நிறுவனர்கள் ஆகியோரின் இல்லாமை பொல்லாமைகள் நமக்கு உடனே கண்ணில் பட வாய்ப்பு அதிகம். நிறைகளை விடக் குறைகளே மனிதர் மனதில் நன்கு தைக்கின்றன.
இதைத்தான் குறளும் ‘தீயினால் சுட்ட புண்ணும்…’ என்று சொல்கிறது. ’இனிய உளவாக…கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்ற குறளும் அதையே வேறு வடிவில் எச்சரிக்கையாகச் சொல்கிறது.
இனி இரு புறத் தகவல் குறிப்புகளைப் பார்க்கலாம்.
***
நாடகம் – 2
வெர்லினின் கட்டுரையுடைய சுருக்கம்
இலக்கியத்தின் சமூகவியல் என்பது அந்தஸ்துப் போட்டியும் சந்தை அழுத்தமும் மட்டுமல்ல என்கிறார் ஜூலியான் வெர்லின். சமூக உலகை இலக்கியமும் வடிவமைக்கிறது, அதற்குக் காதலும் திருமணமுமே தெளிவான சான்று. சமூகவியல் மாயங்களைக் கலைப்பதோடு நிற்காமல், தனக்கே உரிய மாயவித்தையையும் செய்ய முடியாதா என்று அவர் முடிக்கிறார். அவர் வரி: “நாம் படைப்பூக்கம் கொண்ட உயிரினங்கள் அல்லவா; நம் தொடர்ச்சிக்கான சூழல்களையும் நாமே புனைந்துகொள்கிறோம்.”
வாதத்தின் சாரம்:
- முகமூடியைக் கிழிப்பதா, ரசிப்பதா? இலக்கியத்தைச் சமூக, பொருளாதாரச் சக்திகளின் வெளிச்சத்தில் அம்பலப்படுத்துவதா, அல்லது வடிவத்தையும் நடையையும் ரசிப்பதா என்று விமர்சகர்கள் ஓயாது மோதுகிறார்கள். இந்த இருமையே சமூகவியலை “வெற்றிக்கான போட்டி” என்று சுருக்கிவிடுகிறது என்கிறார். மதம், கூட்டு நினைவு, தலைமுறை முரண் போன்றவையும் சமூகவியலின் களங்களே. அங்கே இலக்கியம் பொருள்சார் சக்திகளின் நிழல் அல்ல, அவற்றின் ஒரு பகுதி.
- காதலுக்கும் சமூக வரலாறு உண்டு. இடைக்காலத்தின் பிற்பகுதிக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கும் இடையே, மணமகன் மட்டுமின்றி மணமகளையும் தேர்ந்தெடுப்பதில் காதலுக்கு இடம் வேண்டும் என்ற நம்பிக்கை வேரூன்றியது. அதற்கு முந்தைய அரசவைக் காதல் (லான்ஸ்லாட்–க்வானவியர், டிரிஸ்டன்–இசோல்ட, லாரா என்ற பெண் மீது கவிஞர் பெட்ரார்க்கா கொண்ட ஒருதலைக் காதல் விருப்பு ) பெரும்பாலும் திருமணத்துக்குப் பிறகே பிறந்தது, பெரும்பாலும் கள்ளக்காதலாக. பெற்றோர் முடிவுசெய்த திருமணங்களும், பதின்பருவத்திலேயே மணமாகும் பெண்களும் இருந்த சமூகத்தில் வேறு வழியில்லை.
- டியூடர் காலக் கவிஞர்கள். வயாட், சர்ரே, வாக்ஸ் ஆகியோர் 14 முதல் 17 வயதுக்குள் மணமுடிக்கப்பட்டனர். அவர்களின் காதல் கவிதைகள் திருமணத்துக்கு வெளியே பிறந்ததில் வியப்பில்லை.
- யூரோப்பிய மணமுறை. 1965-இல் ஜான் ஹொய்னால் என்ற ஹங்கெரிய ஆய்வாளரால் அடையாளம் காணப்பட்ட இந்த முறையில் திருமணம் இருபதுகளின் நடுப்பகுதிக்கும் பிற்பகுதிக்கும் தள்ளிப்போனது; நான்கில் ஒருவர் வரை மணமே செய்துகொள்ளவில்லை. இதுவே “மணமுறை கதைத்திட்டம்” (marriage plot) இலக்கியத்தின் மையக் காதல் கதையாக உயர்ந்ததற்குச் சிறந்த விளக்கம் என்கிறார். Much Ado About Nothing-இன் பியாட்ரிஸ்–பெனடிக்கில் தொடங்கி, மீட்சிக்காலத்து (Restoration) நகைச்சுவை நாடகங்கள் வழியாக, எலைசா ஹேவுட் போன்றோரின் தொடக்க கால நாவல்கள் வரை இது நீள்கிறது.
- தரவு. 645 ஆங்கில மறுமலர்ச்சி எழுத்தாளர்களை ஆராய்ந்ததில், 1530–1579-இல் பிறந்தவர்களில் 84% பேர் மணந்தனர்; 1630–1680-இல் பிறந்தவர்களில் 71.5% பேர் மட்டுமே. 1650–1680களில் பிறந்த ஆண் எழுத்தாளர்களின் முதல் திருமண வயதின் இடைநிலை (median) 29. அவர்களுக்குத் திருமணம் கடந்துவிட்ட வாசல் அல்ல, நோக்கிச் செல்லும் தொடுவானம்.
- இலக்கியம் வாழ்க்கைக்குள் திரும்பப் பாய்கிறது. கவிதைகளும் கடிதங்களும் உண்மையான காதல் அடையாளங்களாகப் புழங்கின. பெனடிக்கின் மோசமான கவிதையே (சானெட்) அவன் காதலுக்குச் சான்றாகிறது.
பின்னூட்டங்களில் இருந்து: நடுத்தர வர்க்கத்தினரிடையே “நல்ல விருப்பம்” முக்கியப் பங்கு வகித்தது என்றும், திருமணம் தடைசெய்யப்பட்ட பொருளாக இருந்திருந்தால் நாடகங்களுக்கு அது கருவாகியிருக்காது என்றும் ஒரு வரலாற்றாசிரியர் சேர்க்கிறார். மணமுறைக் கதைத் திட்டங்கள் உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் அதிகம் எழுந்தனவா, பதினெட்டாம் நூற்றாண்டில் நாடோடி வாழ்வுக் கதைகள்தானே (picaresque) மேலோங்கி இருந்தன என்று இன்னொரு வாசகர் கேட்கிறார்.
மேற்கண்ட கட்டுரையின் மூலத்தைப் படிப்பவர்களுக்கு சுருக்கத்தில் கிட்டியதை விட சுவாரசியமானதும், சத்துள்ளதுமான விஷயங்கள் கிட்டும் என்பதால் அதைப் படிக்க வாசகர்களை ஊக்குவிப்பது என் பொறுப்பு.
இந்தச் சுருக்கமே நமக்குப் பல விஷயங்களைத் தருகிறது. நம் அன்றாட வாழ்வில் சூழலில் நாம் காணும் திருமண ஏற்பாடுகள் என்ற சகஜமான நடப்புக்குப் பின் எத்தனை அழுத்தங்கள், சமூக அமைப்புகள்/ அவற்றில் ஏற்பட்டு வருகிற மாறுதல்கள், சமூக அமைப்பு என்பதால் அதன் பின்னே உள்ள பொருளாதார மாற்றங்கள், வாழ்நிலைத் தெர்வுகள்/ அமைவுகள், பின் நிலப்பரப்பு/ குடிபெயர்தல் போன்றனவற்றின் தாக்கங்கள், கல்வி, ஊடகம், அரசியல் ஆகியவற்றின் பாதிப்புகள் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்பதற்கான ஒரு சுட்டல் கிட்டுகிறது. இவற்றிலிருந்து தப்பித்துப் போய, தனிமனிதர் கம்பு சுற்றினால் களத்தை ஆளலாம் என்பது ஒரு நம்பிக்கை, சிறு அளவில் இது சாத்தியமாவது கூட நடக்கலாம்- அது போதுமே என்று சிலர் சொல்லக் கூடும்- ஆனால் கூட்டத்தினளவில் இதன் தாக்கம் மெல்லியதாகத்தான் இருக்கும்.
வண்ணத்துப் பூச்சியின் இறகசைவுகளால் பின்னாளில் பெரும் புயல், சூறாவளி, கடல் கொந்தளிப்பு ஏற்படலாம் என்று ஒரு கருத்து சில வருடங்களுக்கு முன் பரவலாகிக் கொண்டிருந்தது. அதன் பொருள் வேறு என்றாலும் அதன் சூட்சுமம் இதுதான். நேரடித் தாக்கம் ஒன்றுதான் பொருட்படுத்தப்பட வேண்டியது என்றில்லை. சிறு தேர்வுகளின் பரவல் அதிகரித்து பெரும் சமூகமாற்றமாக அது ஆகலாம் என்பது உட்கிடை.
வெர்லின் அவர்களின் கருத்து பெரும்பாலும் மேலை நாகரீகங்களையே சுற்றி வந்திருக்கிறது என்றாலும், மேலை நாடுகள், உலக நாடுகள் பெரும்பாலானவற்றைப் பலவிதங்களில் தாக்கி மறு உருவாக்கம் செய்திருக்கின்றன. கடந்த சில நூறாண்டுகள் உலகளவில் மக்கள், மேலை நாகரீக, பொருளாதார, தொழில் நுட்ப ஆட்சியின் கீழ்தான் கழிந்திருக்கின்றனர்.
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதோடு, மேற்கால் பெருமளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் இது ஒன்று என்று நாம் நோக்குவது எதார்த்தமான அணுகலாக இருக்கும். எனவே மேற்கில் திருமண உறவுகளில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு இந்திய மண முறைகள் மீது தாக்கம் இருக்குமா என்ன என்று யாரும் கேட்க நினைத்தால், இருக்கலாம் என்றோ, இருக்கும் என்றோ நாம் பதில் சொல்ல முடியும். அது தவிர காலனிய ஆட்சியின் கீழ் பல நூறாண்டுகள் கழித்த நாம், அவர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்ட சட்டதிட்டங்கள், அரசாட்சி முறை, சமூக ஒப்பந்தங்களின் அமைப்பு, சமூக உறவுகளின் வழிமுறைகள் ஆகியவற்றால் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். காலனியம் நம் பொருளாதார அமைப்பைத் தீவிரமாகப் பாதித்து நிறைய உருமாற்றி விட்டுத்தான் போயிற்று.
தவிர கிராமத்திலிருந்து துவங்கி மாநகரம் வரை நம் சூழல், நம் வசிப்பிடங்களின் அமைப்புகள், வாழ்க்கை வசதிகள், சுகாதார ஏற்பாடுகள் என்று எதையெல்லாமோ காலனியம் மாற்றி அமைத்திருந்தது. அவை நிச்சயம் நம் வாழ்க்கை முறைகளைப் பாதித்தன, அந்தப் பாதிப்புகள் நம் குடும்பங்களின் அமைப்பையே ஆட்டிப் படைத்தன, அந்த பாதிப்புகள் நம் உளநிலைகள், மற்றும் உறவுகளைப் பற்றிய நம் மனப்பாங்குகள் ஆகியவற்றையும் மறு உருவாக்கவே செய்தன.
இதையெல்லாம் சாதாரண மனிதர் கருதிப் பார்த்து தம் மனநிலைகளை, பாங்கை, நடத்தையை மாற்றுவது சாத்தியமா என்றால் அதற்கு உறுதியான் பதிலை புறத்திருந்து பார்க்கும் நாம் சொல்ல முடியாது. அந்தந்த மனிதர்கள்தான் சொல்ல வேண்டி இருக்கும். அவர்களே தம் வாழ்வின் போக்குக்கு நிர்வாகிகள், எஜமானர்கள்.
இந்தக் கடைசி வாக்கியம் ஒன்றே சாட்சி, நான் 21 ஆம் நூற்றாண்டில், உலகப் பண்பாட்டில் தோய்க்கப்பட்ட மனிதனாக இருந்து இப்படிச் சொல்கிறேன் என்பதைக் காட்ட.
***
அடுத்து, என் உறவினரான ஒரு இளைஞரிடம் நான் பேசியபிறகு அவர் எனக்கு அனுப்பிய குறிப்பைக் கீழே தருகிறேன். இது குறிப்பிட்ட தனி நபர் அடையாளங்கள் நீக்கப்பட்ட குறிப்பு.
மைத்ரேயன்
நிஜமெனும் நாடகம் -3
ஹாய் மாமா,
இன்றைய “புதுப்பிக்கப்பட்ட” மணமகன்/மணமகள் தேடல் முறையைப் பற்றி உங்களுக்கு எழுதுகிறேன். அவர்கள் வளர்ந்த பகுதி, சமூக நடைமுறைகள், வளர்ப்பு, வெளியுலகத் தொடர்பு, தனிப்பட்ட குணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து இது மிகவும் மாறுபடுகிறது. என் வயதினரோடு கூட, எனக்கு ஒரு தலைமுறை இடைவெளி இருப்பதுபோலத் தோன்றுகிறது. சிலர் தங்கள் “இமேஜை” காப்பாற்றிக்கொள்ள, துணையை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதைப் பற்றிப் பொய் சொல்கிறார்கள். எனக்கு அது ரொம்பவே விசித்திரமாகப்படுகிறது. ஆனால் என்னையும் மக்கள் விசித்திரமாகத்தான் நினைப்பார்கள் போலிருக்கிறது.
இருந்தாலும் இன்றைய சூழல் புரிய வேண்டும் என்பதற்காகச் சில கதைகளைச் சொல்கிறேன்.
கதை 1: 80-களின் பாரம்பரிய வகை
பத்து வருடங்களுக்கு முன் என் கல்லூரித் தோழிக்கு நடந்தது இது.
அவள் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவள். அவள் எந்தச் சமூகம் என்று எனக்குத் தெரியாது. கல்லூரி விடுதியிலிருந்து நள்ளிரவில் போன் செய்து, அம்மா வைக்கும் மீன் குழம்பு இல்லையே என்று அழுவாள் என்பது மட்டும் நினைவிருக்கிறது. “வத்தக் குழம்பு நான் வாங்கித் தருவேன், மீன் குழம்புக்கு மட்டும் என்னால உதவ முடியாது” என்றேன்.
அவர்கள் வழிமுறை ரொம்பவே பாரம்பரியமானது. மாப்பிள்ளை வீட்டார் எல்லோரும் வருவார்கள், அவள் புடவை கட்டிக்கொண்டு காபி கொடுப்பாள், வழக்கமான சடங்குதான். அவள் சரியாக நடக்கிறாளா, சரியாகப் பேசுகிறாளா என்றெல்லாம் பார்ப்பார்கள்.
அவள் திருமணத்துக்குப் போனது எனக்கு ஒரு சாகசம்தான். காலை 4 மணிக்கு, உச்சரிக்கவே தெரியாத நிறுத்தத்தில் இறங்கி, கிராமத்தின் முன்பின் தெரியாத தெருக்களில் நடந்து, பலமுறை வழி தவறி, ஒருவழியாகத் திருமணத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
திருமணம் முழுக்க வியாபாரம் போலவே இருந்தது. சொந்தக்காரர்கள் எல்லாவற்றையும் எடைபோட்டுக்கொண்டும், வம்பு பேசிக்கொண்டும் இருந்தார்கள்.
இப்போது அவளுக்கு குழந்தை இருக்கிறது. நாங்கள் இப்போது அவ்வளவாகத் தொடர்பில் இல்லை. மற்றவர்களுக்குத் திருமணம் ஆயிற்றா, குழந்தை இருக்கிறதா என்று கேட்கும் வகை அவள்.
ஆனால் அதுதான் வாழ்வதற்கான ஒரே வழி என்பது பலரின் கருத்து. உங்கள் பத்திரிகையின் கதையும் இதோடு ஒத்துப்போகும் என்று தோன்றுகிறது.
கதை 2: பெரும்பாலும் 80-களின் மத்தியப் பாரம்பரியம்
எட்டு வருடங்களுக்கு முன் என் இன்னொரு கல்லூரித் தோழிக்கு நடந்தது.
அவள் சென்னையைச் சேர்ந்தவள். மேட்ரிமோனி புரொஃபைலில் அவள் நிறத்தை “fair” என்று அவள் அப்பா ஏன் எழுத வேண்டும் என்று அவரிடமே கேட்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நம் நிறத்தைப் பற்றி நேர்மையாகச் சொல்லலாமே, அதில் வெட்கப்பட ஒன்றுமில்லையே என்றேன். “எனக்கு அதெல்லாம் முக்கியமில்லை, எல்லோரும் விரும்புற நிறத்தையே காட்டுவேன்” என்றார் அவர்.
ஒருநாள் மாலை திடீரென்று போன் செய்து, ஒரு குடும்பம் அவளைப் பார்க்க வந்ததாகவும், அவள் வீட்டார் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதாகவும், அவளுக்கு அது சரியாகப் படவில்லை என்றும் சொன்னாள். விவரம் தெரியாத தோழியாக நான் உடனே அவளைக் காக்க வேண்டும் என்று தோன்றி, வீட்டில் எதிர்த்துக் கலகம் செய் என்றேன். இரண்டு நாள் கழித்து, கல்யாணத்துக்கு அழைக்க வீட்டுக்கு வருவதாகச் சொன்னாள். என்ன முடிவெடுத்தாய் என்று கேட்டேன். மாப்பிள்ளை அவர்கள் வீட்டிலிருந்து வெளியே போய் வண்டியில் ஏறும்போது திரும்பி அவளைப் பார்த்தாராம். ஒருமுறை போனில் பேசியபோது அவர் நல்லவர் என்று தோன்றியதால் திருமணம் செய்துகொண்டாள். (அவள் வீட்டார் ஏற்கெனவே திருமணத்தை முடிவு செய்துவிட்டதால், அவள் முடிவு எப்படியும் பொருட்டில்லைதான்.) இப்போது அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.
கதை 3
மதுரையைச் சேர்ந்தவள் தோழி. நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தோம். அவள் மேட்ரிமோனி இணையதளத்தில் தானே மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறது. அவர் வயதில் சிறியவர், பார்க்க நன்றாக இருப்பவர், அப்போது அவருடைய சம்பளம் சராசரிதான். அவள் அம்மாவுக்கு இந்த ப்ரொஃபைலில் அவ்வளவு விருப்பமில்லை. ஒரு கோயிலில் அவரைச் சந்தித்தாள் (அவள் குடும்பத்தினரும் வந்தார்களா என்பது எனக்கு நினைவில்லை). முடிவெடுக்க அவருக்குச் சில மாதங்கள் தேவைப்பட்டன, அதனால் போனில் நிறையப் பேசிக்கொண்டார்கள். அவர் அமைதியாகவும் ஜாலியாகவும் இருந்தார், பெற்றோரிடம் தெளிவான எல்லைகளை வைத்திருந்தார்.
அதனால் என் தோழி மாமியார் வீட்டில் வாழ வேண்டிய அவசியம் இல்லை, உபசார வார்த்தைகள் பரிமாறிக்கொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இல்லை. இது அவளுக்கு எல்லாவற்றையும் எளிதாக்கியது. அவள் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றுதான் சொல்ல வேண்டும். அழகான குழந்தை இருக்கிறது. நிறையப் பயணங்கள் போகிறார்கள், நண்பர்கள் உறவினர்களோடு கூடுகிறார்கள். அவள் தன் வசதிக்கேற்ப வேலைக்குப் போகிறாள், விடுகிறாள், அவர் பெரிதாகத் தலையிடுவதில்லை. அவர்கள் முற்போக்கான மில்லெனியல் தம்பதி. மற்றவர்களின் பொருளாதார வாய்ப்புகளையோ சமூகம் வகுத்த பட்டியலையோ வைத்து அவர்கள் யாரையும் மதிப்பிடுவதில்லை.
கதை 4: பள்ளித் தோழி
சென்னையைச் சேர்ந்த நவீன குடும்பம். கதை 2-ன் தோழியோடு வெளியே போயிருந்தேன். நாங்கள் கஃபே காஃபி டேவுக்குப் போனோம், அப்போது அது ஜாலியான சந்திப்பு இடம். அங்கே ஒரு பெரிய கூட்டம் இருந்தது, என் பள்ளித் தோழி தன் அப்பா அம்மாவுடன் உட்கார்ந்திருந்தாள். நான், “ஹாய் டி! எப்படி இருக்க? நான் ஷாப்பிங் போயிருந்தேன், அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியுமா” என்று ஏதேதோ பேசி ஜோக்கும் அடித்தேன். அந்த முன்பின் தெரியாதவர்கள் ஏன் என் ஜோக்குக்குச் சிரிக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அது அவ்வளவு நகைச்சுவையே இல்லை.
எனக்கும் என் கல்லூரித் தோழிக்கும் ஆர்வம் தாங்காமல், ஒட்டுக் கேட்டோம். “matrimony” என்ற வார்த்தை காதில் விழுந்தது. உடனே மேசையின் மறுபக்கத்திலிருந்தே அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன்: “ஏய், matrimony-னா என்ன?” அவள், “இப்போ நடக்குறது அதுதான்” என்றாள். எனக்கு உற்சாகம் வந்து, “உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டேன். “இன்னிக்கு ராத்திரி வரை பொறு” என்றாள். அன்றிரவு மெசேஜ் செய்து, அந்த மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது என்றாள். இப்போது இரண்டு மகள்களோடு சிங்கப்பூரில் இருக்கிறாள். உலகம் சுற்றும் தம்பதி, தம்பதிகளுக்கே உரிய கருத்து வேறுபாடுகளும் உண்டு.
என் “வழிமுறை”
பெற்றோர் தொடங்கி வைத்தால், அவர்கள் முக்கியம் என்று கருதினால் ஜாதகம் பார்ப்பார்கள், அடிப்படை விவரங்களைத் தெரிவிப்பார்கள், ஐடிகளைப் பகிர்வார்கள், எண்களைப் பரிமாறிக்கொள்வார்கள். ஆண்களே தாங்களாகக் கையாண்டால், பல தளங்களில் தொடர்புகொள்கிறார்கள். எனக்கு WhatsApp, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஏன் LinkedIn-லும் கூட மெசேஜ் வருகிறது. சில மெசேஜ்கள் முறையாக இருந்தன; சில சுவாரசியமாக இருந்தன. சில ஃபேஸ்புக் மெசேஜ்களுக்கு நோட்டிஃபிகேஷன் வராததால் நான் பார்க்கத் தவறிவிட்டேன்; பார்த்தபோது அந்த ஆண்களுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டிருந்தது.
மெசேஜ் செய்வோம், போனில் பேசுவோம், சரியாகப் போனால் சந்திப்போம். இதுவரை அதிகபட்சம் மூன்று முறை சந்தித்திருக்கிறேன். சில சமயம் வரிசையைக் கலந்தும் செய்வேன். இருவருக்கும் முன்னெடுத்துச் செல்ல ஒப்புதல் ஆன பிறகுதான் பெரும்பாலும் பெற்றோர் இதில் ஈடுபடுகிறார்கள். என் அனுபவங்களுக்கு உண்மையில் நாவலே தேவைப்படலாம்.
என் தலைமுறையில் சிலர் டேட்டிங் ஆப்களிலும் இருக்கிறார்கள், வெற்றி வெவ்வேறு அளவில். உதாரணம்: டேட்டிங் ஆப்பில் ஒரு நண்பர் கிடைத்தார். ஒடிசாவைச் சேர்ந்தவர். அவர் அந்த ஆப்பில் இருப்பது, பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்துக்கு முன் சும்மா ஹூக்-அப் செய்யத்தான் என்று சொன்னார். “நான் ஒரு அயோக்கியன்னு எனக்குத் தெரியும்” என்றும் சொன்னார். இப்போது ஜெர்மனியில் மகிழ்ச்சியாகத் திருமணம் செய்து வாழ்கிறார்.
இன்னொரு உதாரணம்: மும்பையைச் சேர்ந்த ஒரு “மாப்பிள்ளை”யும் அதே காரணத்துக்காகத்தான் டேட்டிங் ஆப்களைப் பயன்படுத்துவதாகச் சொன்னார். பெண்கள் அந்த ஆப்களில் காதலை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறார்கள் என்றும் சொன்னார். தன் நண்பர்களின் எண்ணிக்கையை விடத் தன் “கணக்கு” குறைவு என்று அவர் வருத்தப்பட்டதாகவும் தெரிந்தது. அவரால் எனக்கு மனம் வெறுத்துப்போய், அந்த ஆப்பை நீக்கிவிட்டேன்.
இன்னொரு மாப்பிள்ளை, என் மேட்ரிமோனி கோரிக்கையைப் புறக்கணித்தார். ஆனால் Bumble என்ற டேட்டிங் ஆப்பில் என்னைப் பார்த்த உடனே ஏற்றுக்கொண்டார். இரவு 10 மணிக்குப் பிறகும் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்துகொண்டே இருந்தார். உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் முன்வந்து போன் செய்யுங்கள் என்றேன். நிச்சயமாக, அவர் செய்யவில்லை.
அடுத்த தலைமுறை இதில் இன்னும் தளர்வாக இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் இன்னும் 20-களில் இருப்பதால் இருக்கலாம். மேட்ரிமோனி தளத்தில் பழகிய பெண்ணோடு பிரிந்த பையனை எனக்குத் தெரியும். அவர்கள் ஒன்றாகப் பயணம் போனார்கள், எட்டு மாதங்களுக்கு மேல் டேட்டிங் செய்தார்கள். டேட்டிங் ஆப்கள் இனி பாதுகாப்பானவை அல்ல என்பதால், சிலர் சாதாரண டேட்டிங்குக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மேட்ரிமோனி தளங்களும் பாதுகாப்பற்றவை ஆகின்றன.
என் உறவினர் (Gen Z) நிறைய ஆண்களிடம் பேசுகிறாள். ஒருவன் அவளிடம், தன்னைவிட “வண்ணமயமான” கடந்த காலம் உள்ள பெண் தனக்கு வேண்டாம், அதேசமயம் அவள் virgin-ஆகவும் இருக்கக் கூடாது என்றானாம். அப்போதுதான் உறவில் தனக்கு “leverage” இருக்குமாம். எனக்கு இரண்டாம் கட்டக் கூச்சம் வருகிறது.
மக்கள் பிரிவதையும், கள்ளத் தொடர்புகள் வைத்திருப்பதையும், துயரமான திருமணங்களில் தொடர்ந்து வாழ்வதையும் பார்க்கும் கட்டத்தில் இருக்கிறேன்.
ஆனாலும் அவர்களுக்குத் திருமணமாகாதவர்களை விட அதிகச் சமூக அங்கீகாரம் உண்டு.
முப்பதுகளில் இருக்கும் தனிப் பெண்கள் பல சுரண்டல்காரர்களுக்கு எளிதான இலக்காகத் தெரிகிறார்கள்.
சமூக இமேஜில் வெறி கொண்ட சமுதாயத்தில் சின்னச் சின்ன காரணங்களுக்குக் கூட மக்கள் பொய் சொல்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், தர்மம், இதிகாசங்கள், தெய்வீகம், “மகான்கள்” பற்றி நிறைய ஆன்மிகம் பேசுகிறார்கள், ஆனால் தங்கள் தேர்வுகளில் முழுக்க முழுக்கப் பாசாங்குக்காரர்கள். இதுவும் சமூகத்தில் மேலேறுவதற்கான முயற்சியின் பகுதியாக இருக்கலாம்.
என் சொந்தத் தோழி தன் திருமணக் கதையை மற்ற நெருங்கிய நண்பர்களுக்கு (நாங்கள் எல்லோரும் ஒரே குழு) வேறு விதமாகச் சொன்னது வேடிக்கையாக இருந்தது. இப்போதெல்லாம் தினமும் அவரோடு பேசுகிறேன் என்று எனக்குச் சொன்னாள். முன்பு போனிலும் வீடியோ காலிலும் சில முறை பேசியதாகவும், அவர் தன் பெற்றோருடன் அவளைப் பார்க்க வந்ததாகவும், பிறகு அவள் அவர்கள் வீட்டுக்குப் போய் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் சொன்னாள். இதில் எதுவுமே மற்றவர்களுக்குச் சொல்லப்படவில்லை.
அவர்களிடம் சொல்லப்பட்ட கதை: என் தோழி பாரம்பரியமான பெண், இன்னும் அவரிடம் பேசவே இல்லை, அவள் மாமா எல்லாவற்றையும் விசாரித்து, குடும்பத்தோடு போய் அவரைச் சந்தித்தார், ஜனவரியில் திருமணம்.
என் சொந்தக் குழுவிலேயே ஒரு படிநிலை இருப்பதை நான் உணர்ந்ததே இல்லை. நமக்கு எந்த அளவுக்குத் திரிக்கப்பட்ட உண்மை கிடைக்கிறது என்பது நமக்குத் தெரியவே தெரியாது.
இவை அனைத்தும் சென்னை போன்ற, நடுத்தர வர்க்க, ஓரளவு பழமைவாத, நகர்ப்புறச் சூழலை அடிப்படையாகக் கொண்டவை. அங்கே வியாபாரம் போன்ற எதிர்பார்ப்பு இது: பெண் வேலைக்குப் போகிறவளாக இருக்க வேண்டும், ஆனால் கணவனிடம் கோரிக்கைகள் வைக்கும் அளவுக்கு லட்சியம் உள்ளவளாக இருக்கக் கூடாது; வீட்டுக் கடனை அடைக்க உதவ வேண்டும், அவன் குடும்பச் செலவுகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும், இருந்தும் வீட்டை நிர்வகிக்கும் அளவுக்கு “அடக்கமாக” இருக்க வேண்டும்.
பணக்காரர்களிடமும், சமூகத்தின் கீழ்த்தட்டினரிடமும், கிராமப்புறங்களிலும் இது நிச்சயம் வேறுபடும். ஆனால் அடிப்படையில் ஒன்றுதான், வடிவம் மட்டும் வேறு என்று தோன்றுகிறது.
சமூகப் படிநிலை, சாதி, பொருளாதாரம் ஆகியவற்றில் கீழே செல்லச் செல்ல விலை அதிகமாகிறது.
வரதட்சணைக் கொலைகள், தற்கொலைகள், வன்முறை, திருமணத்துக்குள் நடக்கும் பாலியல் வன்புணர்வு, ஆணவக் கொலைகள் இன்னும் நடக்கின்றன.
எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நிலவுடைமை இடைநிலைச் சாதிகள் இன்னும் தங்கம், பணம், மானம், சாதிக் கௌரவம் ஆகியவற்றில் பெரும் வெறியோடு இருக்கின்றனர். மகள் திருமணத்திலிருந்து வெளியேறுவது அவமானமாகப் பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் ரிதன்யா வழக்கு ஓர் உதாரணம். 100 சவரன் தங்கம், வெள்ளிப் பொருட்கள், ஸ்கோடா கார் ஆகியவை கட்டாயம் என்றிருந்தது.
வியாபாரிகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் வியாபாரம் செய்யும் விதம் மட்டுமே வேறுபடுகிறது.
எனவே முடிவு என்னவென்றால், சமூகத்தின் வெவ்வேறு பகுதிகளில் விஷயங்கள் வெவ்வேறு விதமாக முன்னேறுகின்றன, எல்லா முன்னேற்றமும் உண்மையான “முன்னேற்றம்” அல்ல. சில சமயம் என் அப்பா தலைமுறை மாமாக்கள்தான் இன்னும் உண்மையானவர்களாகத் தெரிகிறார்கள்.
***
(மைத்ரேயனின் பின் குறிப்பு: )
இந்த இரு குறிப்புகளில் ஒன்று பொதுவாகச் சமூகத்தை நோக்கினாலும், தனிநபர் தேர்வுகளின் அடிப்படைகளைப் பற்றிப் பேசுவதால் தரையிறங்கின தகவல்களை நமக்குத் தருகிறது. இது நுண்ணிய அளவு நோக்கு இல்லை. உளநிலைகள் பொதுப்படையாகவே பேசப்படுகின்றன. அதே நேரம் பரந்து பட்ட சமூக நிலையை நோக்குமளவு தகவல் சேகரித்து ஆராய இந்த விவரணை செல்லவில்லை. ஒரு நபரின் அனுபவத்தை விரித்து பொதுமையாக்கும் முயற்சி இது.
ஜூலியன் வெர்லின் பல நாடுகளின் சமூகங்களை பிரசுரங்கள் வழியே பெருமளவும் நோக்குகிறார். கிட்டும் வரலாற்றுத் தகவல்களோடு பல தனிநபர் வாழ்க்கை விவரங்களை இணைத்து அவை வரலாற்றுப் போக்குகளுக்குச் சுட்டிகள் என்று கொடுக்கிறார். முக்கியமாகப் புனைவுலகு எதார்த்த உலகைப் பிரதிபலித்தது என்பதை விட அதோடு பின்னிப் பிணைந்து ஒரு கட்டத்தில் மனிதர்களின் கற்பனைகளில் ஊடுருவி மதிப்பீட்டு மாறுதல்களை ஊக்குவித்து வருவதன் மூலம் மாறுதல்களுக்கான கிரியா ஊக்கிகளாகக் கூட ஆகின்றன என்பதை நிறுவ முயல்கிறார்.
இனி இவற்றின் பின்புலனில் பிரசுரமான கதையை வாசகர் எப்படி சீர் தூக்குவார்?
***
