ஆங்கில மூலம்: சூபி தாபா
தமிழாக்கம் : எம் ஏ சுசீலா
(அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரான சூபி தாபா , தனது Tales from the *Dawn-Lit Mountains: Stories* from Arunachal Pradesh தொகுப்புக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கும் கோயெங்கா சாகித்திய சம்மான் விருது பெற்றவர். இதே சிறுகதைத் தொகுப்புக்காக Times of India வழங்கும் அறிமுக எழுத்தாளர் விருதையும் இவர் பெற்றிருக்கிறார். அருணாசலப் பிரதேசத்தின் காடுகளும் மலைகளும் சூழ்ந்த வித்தியாசமான நிலவியல் , அந்த மாநிலத்தின் தனித்துவமான பண்பாடு, அங்கே வாழும் இனக்குழுக்கள் ஆகிய பலவற்றையும் மையப்படுத்தியிருப்பவை அவரது சிறு கதைகள். குறிப்பிட்ட அந்தத்தொகுப்பிலுள்ள The Cobra Man என்னும் சிறுகதை ‘பாம்பு மனிதன்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது)
சிதிலமடைந்து போயிருந்த ஒரு மூங்கில் குடிலின் மேற்பகுதியில்,மரத்தாலான ஒரு தரையின் மீது புரண்டு படுத்தபடி, துருப்பிடித்துப் போயிருந்த தகரக் கூரைகளில் இருந்த ஓட்டைகளின் வழியே முகத்துக்கு நேராக விழும் ஏப்ரல் மாதத்துக் கடுமையான வெயிலை சபித்துக் கொண்டிருந்தாள் ஒரு மூதாட்டி. அவளுடைய எரிச்சலை மிகுதியாக்குவதைப் போல வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த வளர்ப்புக் கோழிகள் ‘கொக்கரக்கோ..கொக்கரக்கோ’ என்று ஓசை எழுப்பிக் கொக்கரிக்கத் தொடங்கியிருந்தன. இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட கோழிக்குஞ்சுகள், கண்மூடித்தனமாக இங்கும் அங்கும் அவசரமாக ஓடிக் கொண்டிருந்தன. தங்கள் சிறகுகளை அடித்துக் கொண்டு மர உச்சிக்குப் பாதுகாப்பாகப் பறந்து செல்லவும் முயற்சி செய்தன. கவலையோடு இருந்த ஒரு பெட்டைக் கோழி வெற்றிகரமாகப் பறந்து போய்க் கோடைகாலக் காற்றில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த மூங்கில் மரக் கிளைகளின் மீது அமர்ந்தபடி மற்ற கோழிகளை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிக் கொண்டு இருந்தது.
அந்த வயதான மூதாட்டி சற்று பருமனான உடல்வாகு கொண்டவள். கொஞ்சம் சோம்பேறித்தனமாக, மந்தமாகத்தான் அவளால் எதையும் செய்ய முடியும். அவள் மெல்லத் தலையைத் தூக்கி அங்கே நிலவிய கூச்சலான சூழ்நிலைக்கு என்ன காரணம் என்பதை நோட்டமிட்டாள்.
“சே, இந்தக் கோழிங்க பண்ற கூத்து தாங்க முடியலப்பா”
என்று முகச்சுளிப்போடு சொல்லிவிட்டுத் தன் மதிய நேரத்துத் தூக்கத்தைத் தொடர்ந்தாள் அவள். தொடர்ந்து கொஞ்ச நேரம் தலையைச் சாய்ப்பதற்கு முன்பு, ‘எங்க மேலே கொஞ்சம் கருணைகாட்டுங்களேன், எங்களை வெளியே விடுங்களேன்’ என்று முறையிடுவதைப் போல் அவளது வளர்ப்புப் பன்றிகள் வெறித்தனமாக அலற ஆரம்பித்திருந்தன.
இப்போது, பெண் பன்றி ஒன்று பதட்டத்தோடு குதித்து எழுந்து தனது வலிமையான பின்னங்கால்களால் கூண்டை உதைத்தது. பெட்டியின் கீல் தளர்ந்து போய்விட,எல்லாப் பன்றிகளும் அவை அடைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் இருந்து வரிசையாக வெளியே வந்தன.
“எல்லாத்துக்கும் ஏதோ கிறுக்குத்தான் பிடிச்சிருக்கு” என்று வெறுப்போடு கத்தினாள் கிழவி.
இதற்கெல்லாம் காரணம், மனிதர்கள் தன்னை ‘ராஜா’ என்று அழைப்பதைப் பற்றியெல்லாம் எதுவும் அறியாத ராஜ நாகம் ஒன்று, இரை தேடியபடி அடர்த்தியான மலைக்காடுகளில் இருந்து வெளிப்பட்டு, அந்தப் பெண் படுத்திருந்த உயரமான மூங்கில் வீட்டுக்கு அடியில் இருந்த வளர்ப்புப் பிராணிகளின் கூட்டுக்குள் எப்படியோ நுழைந்திருந்ததுதான். தன்னைப் பார்த்து அந்தப் பிராணிகள் அச்சம் கொண்டு நிலைகுலைந்து போவதை அது ரசித்துக்கொண்டிருந்தது.ஆனால் அதற்குள் முரட்டுத்தனமான ஒரு சில கிராமத்து நாய்கள் அங்கே வந்து சூழ்ந்து கொண்டு அந்தப் பாம்பைப் பார்த்துக் குலைக்கத் தொடங்கியிருந்தன. அதனால் பயந்து போன பாம்பு அங்கிருந்து வேகமாக நழுவி,மூங்கில் குடிசையின் மேல் ஊர்ந்து சென்று,உயிரற்ற மரக்கட்டை போல் தோற்றமளித்த அந்தப் பெண்மணியின் பின்னால் சுருண்டு படுத்துக்கொண்டது. கருப்பு நிறத்தில் வழுவழுப்பாய் இருந்த அந்த அந்த ராஜநாகத்தின் இருப்பில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் முறையில்
‘ஏ கருமமே போய்த் தொலை,எங்க கிராமத்தை விட்டு’ என்று சொல்வது போல நாய்கள் வெறித்தனமாகக் குரைத்துத் தள்ளிக் கொண்டு இருந்தன. ‘கடுமையான விஷத்தை நான் கக்குவதற்கு முன்பு நீங்கள் எல்லாம் ஓடிப் போய் விடுங்கள்’ என்று தன் பங்குக்குத் தெரிவிப்பது போல சீற்றத்தோடு படத்தை விரித்துத் தலையைத் தூக்கிப் பார்த்தது அந்தப் பாம்பு. தன் அருகே இருக்கும் பாம்பைப் பற்றி எதுவுமே அறியாமல் இருந்த அந்த மூதாட்டி கோபத்தோடு எழுந்து உட்கார்ந்தபடி குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் மீது சில விறகுக் கட்டைகளை வீசி எறிந்தாள். சற்றுப் பின்வாங்கிய நாய்கள்,
“உன் பின்னாடி ஒரு பாம்பு இருக்கு அதை முதல்லே பாரு பாட்டி” என்று சொல்வது போல இன்னும் அதிக சத்தத்தோடு குரைத்தன
“அல்ப ஜீவிங்களா…! (pikso-piktar)எல்லாம் எங்கேயாவது போய்த் தொலைங்க, சாகுங்க” என்று சாபமிட்டாள் அந்த முதியவள். நாய்களை விரட்டுவதற்காக ஆங்காரத்தோடு எழுந்து கொண்ட போதுதான் தனக்குப் பின்னால் படம் எடுத்த நிலையில் ஒரு பாம்பு நின்று கொண்டிருப்பதும்,நெடுமூச்சிட்டுச் சீறியபடி நாய்களோடு அது சண்டை போட்டுக் கொண்டிருப்பதும் அவள் கண்ணுக்குப் பட்டது.குலை நடுங்கிப் போன அந்தப் பெண்மணி, தான் இருந்த மாடிப்பகுதியில் இருந்து பின்புறமாக ஒரு தவளையைப் போல சரிந்து தரையில் விழுந்தாள். உடனே குதித்தெழுந்து ‘அய்யோ நாகப்பாம்பு,நாகப்பாம்பு’
என்று பதட்டத்தோடு கூச்சல் போட்டுக் கொண்டே சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சோம்பேறிக் கூட்டத்தை நோக்கி ஓடினாள். மனிதர்கள் வாழும் பூமியில் இப்படிப்பட்ட சாகச வேலைகளில் ஈடுபடத் துணிந்தது, தன் உயிருக்கே உலை வைத்து விடக்கூடும் என்பதைக் கூச்ச சுபாவம் உள்ள பாவப்பட்ட அந்தப் பாம்பு அறிந்திருக்கவில்லை. பயத்தில் அலறிய அந்த மனிதர்கள் கட்டைகளையும், கற்களையும் வீசி அதன் மீது தாக்குதல் தொடுத்தபடி ஓடும் நதியில் வீசி எறிந்து தங்கள் கிராமத்திலிருந்து அதை ஒரு வழியாக அப்புறப்படுத்தி முடித்தனர்.
பிளாஸ்டிக் குப்பைகளும்,பலரது கால்களில் இருந்து நழுவிப்போய்த் தொலைந்து போன ரப்பர் செருப்புகளும் குப்பை கூளங்களாக மண்டிக் கிடந்த ஆற்றங்கரை ஓரத்தில், பரட்டையான தலை முடி கொண்டவனும்,குடிகாரனும்,வாழ்க்கையில் சலித்துப்போனவனுமான ஒரு கிழவன் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். செத்துப்போய்க்கிடந்த ராஜ நாகத்தின் உடல் மீது அவன் பார்வை படிந்தது. கருப்புக் குவியல் போலக் கிடந்த அதை நோக்கி நடந்த அவன்,ஒரு குச்சியையும் கையில் எடுத்துக்கொண்டான், குச்சியால் குத்திப்பார்த்து அது செத்துப் போய்விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு அந்த பாம்பைக் கையில் எடுத்துக் கொண்டான். அதன் மிக அதிகபட்சமான நீளம் அவனை வியப்பில் ஆழ்த்தியது.
“ஏய்..இதைக் கொஞ்சம் பாரேன்”
என்று தன் நண்பனைக் கூப்பிட்டான்.மொட்டைத் தலையுடன் இருந்த அவனும் இவனைப் போலவே கட்டை குட்டையாக இருந்தான். தன் நண்பனின் கண்டுபிடிப்பால் தூண்டப்பட்டபடி வேகமாக நொண்டியடித்துக்கொண்டு அருகில் வந்தான் அவன்.
இந்தியாவில் நடக்கும் அரசியல் மாநாடுகளில், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு அணிவிக்கும் மிக நீளமான சாமந்திப்பூ மாலைகளைப் போல அவர்கள் இருவரும் அந்தப் பாம்பைத் தங்கள் தோள்களைச் சுற்றிப் போட்டுக் கொண்டார்கள். தலை ஒருவனிடமும்,வால் மற்றொருவனிடமும் இருந்தது. நதிக்கரை ஓரமாக அவர்கள் நடந்து சென்றபோது
அந்தக் காட்சியைப் பார்த்து அதிசயித்துப் போன சிறுவர்கள் ஆர்வத்தோடு அவர்களை மொய்த்துக் கொண்டு,
“ஹை…பாம்பு மனுஷன்… பாம்பு மனுஷன்” என்று கத்தினார்கள். கொரோனா காலத்து நீண்ட பொது முடக்கத்தால் அலுத்துப்போய்க் கிடந்த கிராமவாசிகள்,அந்தப் பாம்பைப் பார்ப்பதற்காகத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வந்து அவர்கள் இரண்டு பேரையும் சூழ்ந்து கொண்டார்கள்.
“அட, எவ்வளவு பெரிய பாம்பு?”
என்று தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்.
“ஆமாம்…இந்த ராஜநாகம் உங்களுக்கு எப்படிக் கெடச்சது” என்று கேட்டபடி ஒரு இளைஞன் தன் கைபேசியில் வீடியோ பதிவு செய்யத் தொடங்கினான். சற்றும் எதிர்பாராமல் பிறரது கவனம் தங்கள் மீது திரண்டு வருவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த அந்த இரண்டு குடிகாரர்களும் நேராக நிமிர்ந்து நின்றபடி கேமராவையே பார்த்தனர்.
“அதோ அங்கே ….தூ…ர…த்திலே தெரியுதே… அந்த மலைக்காட்டிலே இருந்துதான் இதைக் கண்டெடுத்தேன்”
என்று சொன்னபடி பருமனான தன் சுண்டு விரலால் தொலைதூரத்தில் உள்ள மூங்கில் மரக்காட்டைச் சுட்டிக்காட்டினான் கிழவன்.
“எங்களுக்குப் பசி எடுத்ததாலே மலையிலே இருந்து ஏதாச்சும் காய்கறி பறிச்சுக்கிட்டு வரலாம்னு போனோம். அப்ப அதிர்ஷ்டவசமா இந்த நாகப்பாம்பு எங்க கண்ணுல பட்டது. அதை அடிச்சுக் கொன்னுட்டோம்”
“ஆமாம், அதைச் சாப்பிடணும்னு எங்க பல்லெல்லாம் ரொம்பத்தான் நமைச்சல் எடுக்குது”
என்று வெற்றிலைக் காவி படிந்த பற்களைக் காட்டிச் சிரித்தபடி பக்கமேளம் வாசித்தான் அவனது நண்பன்.
“இந்தக் கொள்ளை நோய் வந்ததாலே எங்க வீட்டிலே எல்லாம் அரிசியே இல்லாமப்போச்சு.பசியும் பட்டினியுமாக் கெடந்தோம். இப்ப இது கெடச்சிட்டதாலே இதை சமைச்சு சாப்பிடப்போறோம்” என்று குடிபோதையுடன் அறிவித்தபடி கேமராவுக்கு முன்னால் வந்து நின்று, அந்த உயிரற்ற பாம்பின் தலையைப் பிடித்து உலுக்கினான் கிழவன். சிறிது இடைவெளி கொடுத்தபடி, சுற்றுமுற்றும் கூடிக்கொண்டே வந்த கூட்டத்திலிருந்து தனக்குப் பாராட்டு எதுவும் கிடைக்கிறதா என்றும் அவ்வப்போது பார்த்துக் கொண்டான். காட்டில் விளைந்த காய்கறிகளைக் கூடை நிறையத் தூக்கிக்கொண்டு அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த விவசாயி ஒருவன்,அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து கொண்டான். திறந்த வாய் மூடாமல் அந்தப் பாம்பைப் பார்த்துக் கொண்டிருந்த அவனும், அந்த இரண்டு குடிகாரர்களோடு சேர்ந்து அந்தக் காணொளியில் இடம்பெறத் தொடங்கியிருந்தான்.
“ஆமாமாம், மலையிலே எங்களுக்கு எந்தக் காய்கறியுமே கிடைக்கலை” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி போதையில் கிறுகிறுத்துக் கொண்டிருந்த தன் தலையை ஆட்டி ஆமோதித்தான் நண்பன்.
“நாங்க இதைச் சாப்பிடப் போறோம், இனிமே இது எங்க வயத்துக்குள்ளே இருக்கும்”
என்று தன் வயிற்றை விரலால் சுட்டிக்காட்டிப் பல் இளித்தான் அவன்.
அவர்கள் இருவரும் ஒரு வாழை இலையைத் தரையில் விரித்து வைத்து எல்லோரும் பார்க்குமாறு அந்த ராஜ நாகத்தை அதில் கிடத்தி வைத்தார்கள். சுற்றி இருந்த கூட்டத்தார் அந்தக் காட்சியைப் புகைப்படமாகவும் வீடியோவாகவும் தங்கள் கைபேசிகளில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். 11 அடி நீளமும் கருப்பான மேல் தோலும் வெண்மையான வயிற்றுப் பகுதியும் கொண்ட அந்த ராஜநாகத்தைக் காணும் ஆர்வத்தோடு குட்டைப் பாவாடை அணிந்து கொண்டிருந்த பெண்களும், துறுதுறுப்பான இளைஞர்களும்,உற்சாகக் கிளர்ச்சியோடு இருந்த சிறுவர்களும் அந்த இடத்தில் சூழ்ந்து கொண்டார்கள்.
இருள் படரத் தொடங்கி விட்டதால் அந்த இரண்டு மனிதர்களும் பாம்பைத் தூக்கித் தங்கள் கழுத்தில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்திருந்தனர். அன்று நடந்த வேடிக்கையான சம்பவங்களை அசைபோட்டுச் சிரித்தபடியும், அரிசிக் கஞ்சியோடு சேர்த்துச் சாப்பிடுவதற்கு ஏற்ற விதத்தில் அந்தப் பாம்பைப் பக்குவமாக எப்படிச் சமைக்கலாம் என்று பேசிக்கொண்டும் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
” நாம இந்தப் பாம்பை இளசான மூங்கில் குருத்துக்களோடயும், நல்ல காரமான மிளகாயோடயும் சேர்த்து சமைப்போம், சரியா”
என்று ஆலோசனை கூறியபோது சுவையான அந்தப் பதார்த்தம் பற்றிய எதிர்பார்ப்பில் நண்பனின் நாவில் எச்சில் ஊறிக் கொண்டிருந்தது.
“அப்படி வேண்டாம், நாம இதை ஒரு மூங்கில் குழாய்க்குள்ள வச்சுக் கணப்புக்குப் பக்கத்திலே இருந்து சமைப்போம், நான் இறைச்சி சாப்பிட்டே ரொம்ப நாள் ஆச்சு, வா வேகமாகப் போவோம்,பசி வயத்தைக் கிண்டுது” என்று மெல்லிய குரலில் கூறிய கிழவன், தனது மூங்கில் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தபோது உற்சாகமாகப் பாடினான். அவனது மனைவி நெருப்பு உண்டாக்கிச் சோறு சமைத்துக் கொண்டு இருந்தாள்.
” ஏய்… இதை வந்து பாரேன், இன்னிக்கு உனக்காக என்ன கொண்டு வந்திருக்கேன் பாரு”
என்று தோளில் போட்டிருந்த பாம்பைக் காட்டி இளித்தான் கிழவன்.
” சே, சே, நாசமாப் போறவனே, அதை மொதல்லே தூக்கிப் போடு..! நீயெல்லாம் ஒரு மனுஷன்னு..”
கோபத்தின் உச்சத்தில் இருந்த அவள், தங்கள் இருவரையும் நோக்கி விறகுக் கட்டையோடு வருவதைப் பார்த்த அவர்கள் எலியைப் போல பயந்து ஒடுங்கிக்கொண்டனர்.
“இன்னிக்கு மத்தியானம் நான் தூக்கிப் போட்டதை இப்ப என்கிட்டேயே திருப்பிக் கொண்டு வந்திருக்கீங்க,என்ன தைரியம் இருக்கணும் உங்களுக்கு” என்று கத்தினாள் அவள்
****************
ஒரு வாரம் கழிந்தபிறகு, அந்தக் கிழவன் அதீத உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் தன் மூங்கில் வீட்டுக்குள் நுழைந்து இப்படிப் பெருமை அடித்துக் கொண்டான்.
“இதோ பாரு, இனிமே.. நீ என்கிட்ட கொஞ்சம் நல்லா, மரியாதையா நடந்துக்கணும்.ஏன்னா இப்போ உன்னோட புருஷன்தான் இங்கே தலைப்புச் செய்தியாவே இருக்கான் தெரிஞ்சிக்கோ”
என்று சந்தோஷக் கிளுகிளுப்போடு சொன்னான் அவன். அப்படி அவன் உறுதியாக அறிவித்ததில் லேசாகக் குழம்பிப்போனாலும்,அதை லட்சியம் செய்யாமல் காய்ந்த பூசணி விதைகளை ஒரு உரலில் போட்டு இடிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள் அவன் மனைவி. அந்தக் கிழவன், அடுத்த வீட்டில் குடியிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டான்.அந்தப் பையன்தான் அன்று காலையில் அந்த வீடியோவை அவனுக்குக் காட்டியவன். அவன் வேகமாக அங்கே வந்து அந்த வீடியோவைப் போட்டான். அவனது மனைவி கைபேசியின் திரையை ஆர்வத்தோடு கண்கொட்டாமல் பார்த்தாள். அதில் பெண் அறிவிப்பாளர் ஒருவர் இப்படி வேகமாக செய்தி வாசித்துக் கொண்டு போனார்.
‘ கோவிட் 19 பொது முடக்கத்தால் எங்கேயும் அரிசி கிடைக்காததால் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மனிதர் ஒருவர் சாப்பாட்டுக்காக ஒரு ராஜ நாகத்தைக் கொன்றிருக்கிறார். உணவுப் பற்றாக்குறை காரணமாக அருணாச்சலப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பாம்புகளைக் கொன்று சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கும் ஒரு சம்பவம்’
கிழவனும், அவனது நண்பனும் இறந்து போன ராஜ நாகத்தை மாலையாகப் போட்டுக்கொண்டு அதைக் கொன்று விட்டதாகச் சொல்லும் காட்சி, அந்தக் காணொளியில் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது.
“எது எப்படியோ…என்னோட வீட்டுக்காரர் பிரபலமாயிட்டார்” என்று அந்த மனைவி கொஞ்சம் சந்தேகத்துடனேயே எண்ணிக் கொண்டாள். செய்தி வாசிப்பவர் ஆங்கிலத்தில் சொன்ன எல்லாவற்றையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் அந்தக் காணொளியைப் பதிவு செய்த இளைஞன் அதைத் தன் நண்பனுக்கு அனுப்ப,அவன் மற்றொரு நண்பனுக்கு அனுப்ப,அவன் இன்னொருவனுக்கு அனுப்ப ….இப்படியே அந்தக் காணொளி பரவிக்கொண்டே சென்றது. யாரோ சில பத்திரிகைக்காரர்கள் அதைப் பார்த்துவிட்டு நாடு முழுவதும் ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ‘பாம்பு மனிதன்’ என்ற தலைப்போடு அதை ஒளிபரப்பு செய்திருந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்த எல்லோருக்கும் இந்தச் செய்தி சீக்கிரமாகவே பரவி விட,பாம்பு மனிதன் பற்றி எல்லோருமே பேசத் தொடங்கி இருந்தார்கள். நாடு தழுவிய பரபரப்பை ஏற்படுத்தி விட்ட உற்சாகத்தில் கிழவனும் துடிப்பாக, சுறுசுறுப்பாகத் தன் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தான். ஆனால் சமூக ஊடகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல காரசாரமான விவாதங்களுக்கும்,பூசல்களுக்கும்,வாக்குவாதங்களுக்கும் தான் காரணகர்த்தா ஆகிவிட்டோம் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சமூகத்தின் சில தரப்பினர், பாம்பைக் கொன்று சாப்பிடுவது இரக்கமற்ற செயல் என்று கண்டித்துப்பேச, வேறு சிலரோ அந்தக் காணொளியை அவ்வாறு காட்டுத் தீயாகப் பரவ விட்ட பத்திரிகை நிறுவனங்களையும், பத்திரிகைக்காரர்களையும் விமரிசித்துக் கொண்டிருந்தார்கள், இன்னும் சிலரோ தங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்தபடி, அதை ஒரு நகைச்சுவையாக மாற்றிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
இதனால் தரும சங்கடத்துக்கு ஆளானவர் முதலமைச்சர்தான்!
‘அருணாச்சலப்பிரதேசத்தில் அரிசிப் பற்றாக்குறை என்பது இல்லவே இல்லை. மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கான அரிசி கையிருப்பில் உள்ளது, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இலவசமாக ரேஷனும் வழங்கப்பட்டு வருகிறது,அருணாசலப்பிரதேசத்தைப் பொறுத்தவரை உணவுத் தேவைக்காக பாம்பைப் பிடிக்க வேண்டிய தேவை எவருக்கும் இல்லை’
என்று தன்னை விடாமல் துரத்திக் கொண்டிருந்த பத்திரிகைக்காரர்களுக்குத் தெளிவுபடுத்தியபடி, அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார் அவர்.
கிராமவாசிகள் அந்த கிழவனோடு தற்படம் எடுத்துக்கொள்ள முண்டியடியடித்துக் கொண்டிருந்தனர். தங்களைக் குதூகலப்படுத்தும் வகையில் அவனை ஏதாவது சேட்டை செய்யச் சொல்லியும் அவர்களில் சிலர் கேட்டுக் கொண்டார்கள். ஒருநாள் மாலை வேளையில் சில ஊடகக்காரர்களும்,வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் அந்தப் பாம்பு மனிதனைப் பார்ப்பதற்காக அந்தச் சிறிய கிராமத்துக்குக் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள்.
“இன்று மாலை – இந்த கோவிட் தாக்குதலையும் மீறி அந்தப் பாம்பு மனிதனை உங்களுக்குக் காட்டுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்” என்று
‘என்-95’ முகக்கவசங்களை அணிந்து கொண்டிருந்த ஊடகக்காரர்கள் ஆவேசமாகப் பேசினார்கள்.
” நான்தான் அந்தப் பாம்பு மனிதன்” என்படி,தன் மூங்கில் குடிசையில் இருந்து வெளிப்பட்டு மரத் திண்ணையில் நின்றபடி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னான் முதியவன்.
“நீங்கள்தான் பாம்பு மனிதனா? அப்ப அந்த ராஜ நாகத்தை நீங்கள் கொன்று தின்றதும் நிஜம்தானா”
தங்கள் புகைப்படக் கருவிகளை ஆயத்த நிலையில் வைத்துக் கொண்டபடி அவன் தரப்போகும் பதிலுக்காக அவர்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
“ஆமாமாம்…”என்றான் கிழவன். கேமராவைப் பார்த்தபோது கலைந்திருந்த தன் தலைமுடியை வேகமாக சரி செய்து கொண்டு, தன் அரைக்கால் சட்டையையும் மேலே இழுத்து ஒழுங்குபடுத்திக் கொண்டான் அவன்.
“ராஜநாகம் என்பது இந்தியாவோட தேசிய (ஊர்ந்து செல்லும்) விலங்கு அப்படீன்னு உங்களுக்குத் தெரியுமா? ராஜநாகங்கள் இன்னிக்கு ரொம்பக் குறைஞ்சு போனதாலே IUCN ( பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்- International Union for Conservation of Nature ) சிவப்புப் பட்டியல்லே அதைச் சேர்த்து, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாத்துக்கிட்டு வரோம்.அதனாலே சட்டப்படி அதையெல்லாம் பிடிக்கறதும்,கொல்றதும் குத்தம்.அப்படிச் செஞ்சதுக்காக அஞ்சு வருஷம் சிறை தண்டனை கிடைக்கும்ங்கிறதாவது உங்களுக்குத் தெரியுமா?”
என்று அவனிடம் வனத்துறை அதிகாரி கேட்டார்.
“என்னது….ஆனா…”
என்ற அந்த முதியவன் இடைவெளி விட்டபடி முணுமுணுத்தான்.
“இல்லே, எனக்கு அதைப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. மிருகங்களைப் பாதுகாக்கிற சட்டத்தைப் பத்தியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது.”
பிறகு அவன் பயத்தோடு இப்படிக் கத்தினான்.
“சார் …நான் ரொம்பப் பாவப்பட்டவன் சார்… அந்த நாகப்பாம்பை நான் கொல்லவே இல்லை. நான் அதை எதுவுமே செய்யலை. அன்னிக்கு நான் குடிச்சிருந்தேன், அப்ப ஆத்தங்கரை ஓரமா செத்துக் கெடந்த ஒரு பாம்பைக் கையில தூக்கிக்கிட்டேன், அப்ப யாரோ என்னை வீடியோ எடுத்துப் பரப்பி விட்டுட்டாங்க,என்னை விட்டுடுங்க ஐயா! தயவு செய்து என்னை விட்டுடுங்க! நான் அந்தப் பாம்பைக் கொல்லவே இல்லை”
மாடி வெளிப்புறத்தில் நின்றிருந்த அவன் மனைவி,தன் கணவனுக்குத் தற்செயலாக கிடைத்த புகழ், இப்போது அவனை எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது என்பதை அறிந்தபடி குமுறிக் கொண்டிருந்தாள்.
“இதோ பாருங்க, நீங்க பேசற பாஷையிலே பேசாம இருக்கறதாலேயே ஒரு பிராணியோட உயிர், மனுஷ உயிரை விட எந்த வகையிலேயும் மதிப்புக்குறைஞ்சதுன்னு அர்த்தமில்லை”
என்றார் வனத்துறை அதிகாரி.
“மன்னிச்சிடுங்க ஐயா,எனக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது”
“ஆமாம் சார்,அவரை மன்னிச்சிடுங்க,அவருக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது. பாம்பை அவர் கொல்லவும் இல்லை”
என்று அந்த கிராமத்து இளைஞர்களும் வனத்துறை அதிகாரியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள்.
“நல்லது நானுமே இந்த வயசானவர் செஞ்ச குற்றத்துக்கு அவரை மன்னிச்சிடலாம்னுதான் முடிவு செஞ்சிருக்கேன். ஆனா இனிமே காட்டிலே இருக்கிற பிராணிகளுக்கு யாரும் தொந்தரவு கொடுக்கக் கூடாது,அப்படி யார் தொல்லை கொடுத்தாலும் அவங்களுக்கு உடனுக்குடனே கட்டாயம் தண்டனை கொடுத்துடுவோம்” என்றார் அதிகாரி.
அதிகாரிகள், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள்,கிராம மக்கள் எல்லோரும் அங்கே இருந்து போன பின், தன் மனைவி ஒரு விறகுக் கட்டையை எடுப்பதற்காக அடுக்களைப் பக்கம் செல்வதைப் பார்த்த கிழவன், மேலிருந்து குதித்து அன்றிரவு தன் நண்பன் வீட்டில் அடைக்கலம் தேடிக் கொள்ளலாம் என்று விரைந்தான்.
நிகழ்வுகளின் வேடிக்கையான திருப்பத்தைக் கண்டு சிரிப்பது போலப் பன்றிகள் ஓசையிட்டன. நாய்கள் அங்கிருந்த ஆரவாரத்தால் குழம்பிப்போய்க் குரைத்துத் தள்ளின.
குறிப்பிட்ட அந்த உயிரினம் எவ்வளவு அரிதானது என்பதையும், அதைக் கொன்றால் சொல்லவே முடியாத- எப்படிப்பட்ட விசித்திரமான விளைவுகள் நேரும் என்பதையும் உணர்ந்து விட்டதாலோ என்னவோ, அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள எவரும் உயிருள்ள பாம்போடோ செத்த பாம்போடோ விளையாடத் துணியவில்லை.
~oOo~
The Cobra Man: பாம்பு மனிதன்
(அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரான சூபி தாபா , தனது Tales from the Dawn-Lit Mountains: Stories from Arunachal Pradesh தொகுப்புக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கும் கோயெங்கா சாகித்திய சம்மான் விருது பெற்றவர். இதே சிறுகதைத் தொகுப்புக்காக Times of India வழங்கும் அறிமுக எழுத்தாளர் விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.
அருணாசலப் பிரதேசத்தின் காடுகளும் மலைகளும் சூழ்ந்த வித்தியாசமான நிலவியல் , அந்த மாநிலத்தின் தனித்துவமான பண்பாடு, அங்கே வாழும் இனக்குழுக்கள் ஆகிய பலவற்றையும் மையப்படுத்தியிருப்பவை அவரது சிறு கதைகள். – குறிப்பிட்ட அந்தத்தொகுப்பிலிருந்து : ‘The Cobra man’ – என்னும் சிறுகதை ‘பாம்பு மனிதன்’என்ற தலைப்பில்..மொழியாக்கம்
