
அமெரிக்காவின் 2026 இடைத்தேர்தலின் முடிவுகள், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் குடியரசுக் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அளித்த முக்கியமான அரசியல் தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பல மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருப்பது, அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 3 அன்று நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு அவைகளிலும் ஆதிக்கம் செலுத்திய குடியரசுக் கட்சியின் கட்டுப்பாடு முடிவுக்கு வந்துள்ளது.
நவம்பர் 5 அன்று வெளியான தகவல்களின்படி, செனட்டில் ஜனநாயகக் கட்சிக்கு 54 இடங்களும் (இதில் இரு சுயேட்சை உறுப்பினர்களும் அடங்குவர்) குடியரசுக் கட்சிக்கு 44 இடங்களும் கிடைத்துள்ளன. அலாஸ்கா, மிசிசிப்பி ஆகிய மாநிலங்களின் செனட் தேர்தல் முடிவுகள் இன்னும் இறுதியாக அறிவிக்கப்படவில்லை. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி குறைந்தது 30 இடங்களைப் புதிதாகக் கைப்பற்றியுள்ளது. பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்வதால் இறுதி எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம். நவம்பர் 5 நிலவரப்படி ஜனநாயகக் கட்சி 247, குடியரசுக் கட்சி 153. 35 தொகுதிகளில் முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, ட்ரம்ப் 2024 அதிபர் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஆதரவு பெற்றிருந்த கான்சஸ், டெக்சாஸ், அயோவா, ஒஹையோ, மெயின், நார்த் கரோலினா, சவுத் கரோலினா போன்ற மாநிலங்களில் கூட ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று செனட் இடங்களைக் கைப்பற்றியது இந்தத் தேர்தலின் முக்கியத் திருப்பமாகும்.
டெக்சாஸில் 1993க்குப் பிறகு முதன்முறையாக ஜனநாயகக் கட்சி செனட் இடத்தை வென்றுள்ளது. ஆளுநர் பதவியிலும் குடியரசுக் கட்சியின் கிரெக் அபாட்டைத் தோற்கடித்து ஜீனா இனோஹோசா வெற்றி பெற்றுள்ளார். கான்சஸ் மாநிலம், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை செனட்டராகத் தேர்ந்தெடுத்துள்ளது. தெற்கு கரோலினாவிலும் ட்ரம்ப் ஆதரவு பெற்ற வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார்.
இந்த வெற்றிகள் ஜனநாயகக் கட்சி பாரம்பரியமாகத் தனக்குச் சாதகமான பகுதிகளில் மட்டுமல்லாமல், குடியரசுக் கட்சியின் வலுவான பகுதிகளிலும் ஆதரவைப் பெற்றிருப்பதைக் காட்டுகின்றன. இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் பொருளாதார அழுத்தம், அன்றாட வாழ்க்கைச் செலவு, ஈரானுடனான போர், அரசின் செயல்பாடுகள் குறித்த அதிருப்தி, அரசியல் பிரிவினை எனப் பல காரணிகள் ஒன்றோடொன்று இணைந்து வாக்காளர்களின் முடிவைப் பாதித்துள்ளன.
அமெரிக்கக் குடும்பங்களைத் தொடர்ந்து பாதித்து வரும் முக்கியமான பிரச்சினை வாழ்க்கைச் செலவு. உணவுப் பொருட்கள், பெட்ரோல், வீட்டு வாடகை, மருத்துவச் செலவு என அன்றாடத் தேவைகளுக்கான செலவுகள் அதிகரித்திருப்பது மக்களின் அதிருப்திக்குக் காரணமாகியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவேன் என்ற ட்ரம்ப்பின் வாக்குறுதி நடைமுறையில் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்ற கருத்து வாக்காளர்களிடையே வலுப்பெற்றுள்ளது.
மேலும், இறக்குமதிப் பொருட்கள் மீதான வரிகளும் அவற்றால் ஏற்படும் விலை உயர்வும் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய விவாதமாகின. முக்கியமாக, விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் அதிகரித்த வரிச் செலவுகளால் பாதிக்கப்பட்டனர்.
உள்நாட்டில் பிரச்சினைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்க, ஈரானுடன் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளும் தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்கு வகித்தன. போரின் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து ஏற்கெனவே பொருளாதாரச் சுமையைச் சந்தித்து வந்த குடும்பங்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டது. தேர்தல் முடிவுக்குப் பிறகு ட்ரம்ப், ஈரானுடனான போர் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் கட்சியின் தோல்விக்கு இந்தப் போர் முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டார்.
இதுவும் தவிர, அதிகாரத்தின் மீதான அதிருப்தியும் மிக முக்கிய காரணியானது. அதிபரின் முடிவுகளைக் கண்காணிக்கவும், நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கவும் காங்கிரஸ் இன்னும் வலுவாகச் செயல்பட வேண்டும் என்ற விருப்பமும் வாக்காளர்களிடம் வெளிப்பட்டுள்ளது. காங்கிரஸ் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்ததால் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக மக்கள் எண்ணும்படி தான் ஆட்சியை நடத்தினார் அதிபர் ட்ரம்ப். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், பத்தில் ஏழு வாக்காளர்கள் அதிபரின் அதிகாரத்திற்கு எதிராக காங்கிரஸ் போதுமான அளவு கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என்று கருதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் அரசியல் பேச்சு, குடியேற்றக் கொள்கை, நிர்வாகத்தின் செயல்பாடுகள், ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் போன்றவையும் தேர்தல் விவாதங்களில் இடம்பெற்றன.
ஆனால் இந்தத் தேர்தலை ஈரான் போர் அல்லது பொருளாதாரப் பிரச்சினை என்ற ஒரே காரணத்தால் விளக்கிவிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்காளர்களின் முன்னுரிமைகள் மாறுபட்டிருந்தன. இளம் வாக்காளர்களும் ஹிஸ்பானிக் வாக்காளர்களின் ஆதரவும் ஜனநாயகக் கட்சியை நோக்கி நகர்ந்ததும் இந்த வெற்றிக்குப் பங்களித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தலின் முடிவு ட்ரம்ப்பின் ஆட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகும். இதுவரை குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் அவரது பல முக்கிய முடிவுகளுக்கு ஆதரவளித்தது. இனி அந்த நிலை மாறும்.
ஜனநாயகக் கட்சியினர் இரு அவைகளையும் கட்டுப்படுத்துவதால், ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் நடத்தவும், ஆவணங்களைக் கோரவும், நிர்வாக அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்யவும் முடியும். செனட்டில் பெரும்பான்மை இருப்பதால், அதிபர் நியமிக்கும் பல உயர் அதிகாரிகளின் நியமனங்களையும் தடுக்க முடியும். ஆக, இனி இரு ஆண்டுகளுக்கு அரசியல் முடிவுகள் எடுக்கப்படாமல் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு இழுபறி ஆட்சி தான் நடக்கும்.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸின் கட்டுப்பாடு தான் மாறியிருக்கிறது. அதிபர் மாறவில்லை. ட்ரம்ப் தொடர்ந்து அதிபராகவே இருப்பார். வெளியுறவுக் கொள்கை, ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல துறைகளில் அவருக்கு இன்னும் கணிசமான அதிகாரம் உள்ளது. ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ், சட்டங்கள், நிதி ஒதுக்கீடு, விசாரணைகள் மற்றும் நியமனங்கள் வழியாக அவரது நிர்வாகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்யலாம். ஆனால் ஒவ்வொரு கொள்கையையும் உடனடியாக மாற்றிவிட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
புதிய காங்கிரஸ் ஜனவரி 3, 2027 அன்று பொறுப்பேற்கும் வரை குடியரசுக் கட்சியே இரு அவைகளிலும் அதிகாரத்தில் இருக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் அரசின் நிதி ஒதுக்கீடு, புதிய சட்டங்கள் போன்ற முக்கிய முடிவுகளை நிறைவேற்ற அதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்தத் தேர்தல், கட்சிகளின் வெற்றி, தோல்வியைத் தாண்டி பிரதிநிதித்துவத்திலும் பல முக்கியமான வரலாற்றுச் சாதனைகளை உருவாக்கியுள்ளது.
நியூ மெக்சிகோவில் டெப் ஹாலண்ட் முதல் பூர்வகுடி அமெரிக்கப் பெண் ஆளுநராகவும் ஜார்ஜியா மாநிலத்தில் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் முதல் கறுப்பினப் பெண் ஆளுநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அதுவும், அமெரிக்கா தனது 250வது விடுதலையைக் கொண்டாடும் வருடத்தில் இந்த வரலாற்றுச் சாதனைகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோலவே, மினசோட்டாவைச் சேர்ந்த பெக்கி ஃபிளனகன் வெற்றி பெற்று, அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்கப் பழங்குடியினப் பெண் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். மிச்சிகனில் அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்று, அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இஸ்லாமியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். செனட்டில் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிப்படையாகத் தன்னை ஓரினச்சேர்க்கையாளராக அடையாளப்படுத்தும் ஆண் உறுப்பினர் கிறிஸ் பப்பாஸ் இந்தத் தேர்தலின் வரலாற்றுச் சாதனைகளில் ஒருவர். இந்த வெற்றிகள் அமெரிக்க அரசியலில் பல்வேறு இன, சமூகப் பின்னணிகளைக் கொண்டவர்களின் பிரதிநிதித்துவம் விரிவடைந்து வருவதைக் காட்டுகின்றன.
அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் என்பது அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் நிகழ்வாக மட்டும் முடிந்து விடுவதில்லை. உலகின் பல நாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, போர், தூதரக உறவுகளிலும் அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் இந்தத் தேர்தல் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள் இந்த வெற்றியை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பாகப் பார்க்கின்றன. உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடருமா, ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பெறுமா, காலநிலை மாற்றம், சர்வதேச ஒத்துழைப்பில் அமெரிக்கா மீண்டும் தீவிரமாகச் செயல்படுமா என்பதே தற்பொழுது முக்கியக் கேள்விகளாக உலக மேடையில் விவாதமாகி உள்ளன.
நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே, இந்தத் தேர்தல் அமெரிக்க வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் வலுவான அறிகுறி எனக் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், வெறுப்பு, பாலினப் பாகுபாடு, காலநிலை மாற்ற மறுப்பு போன்ற அரசியல் போக்குகளுக்கு எதிராக அமெரிக்க மக்கள் வாக்களித்துள்ளதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்த முடிவு உலக உறவுகளில் ஒரு புதிய காலகட்டத்தை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான தங்கள் நாட்டின் உறவு மேம்படும் என்றும் அவர் எதிர்பார்த்துள்ளார்.
ஈரான், இந்த முடிவைத் தனது நாட்டுடனான போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் செய்தியாக விளக்குகிறது. ஈரான் நாடாளுமன்றத் தலைவர், அமெரிக்கர்கள் “போருக்கு ஆதரவாக இல்லை” என்று கூறியிருப்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்க வாக்காளர்கள் அனைவரும் ஈரான் போரை எதிர்த்தே ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தனர் என்று கூற முடியாது. வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட உள்நாட்டுப் பிரச்சினைகளும் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
ரஷ்யா, ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறை தங்களுக்குச் சாதகமாக இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளது. சீனா, அமெரிக்கத் தேர்தல் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று கூறியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை நிர்வகித்து ஒத்துழைப்பைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. ஜப்பான், தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தனது வெளியுறவுக் கொள்கையின் அடித்தளமாகத் தொடரும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவுடனான வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி, எரிசக்தி உறவுகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும். ஆனால் இந்தத் தேர்தல் முடிவால் இந்திய-அமெரிக்க உறவில் உடனடியாக என்ன மாற்றம் ஏற்படும் என்று இப்போதே முடிவெடுக்க முடியாது.
இவ்வாறு உலக நாடுகள் கவனிப்பது ஒரு கட்சியின் வெற்றியை மட்டுமல்ல. அமெரிக்கா தனது கூட்டாளிகளிடம் எவ்வளவு நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்ளப் போகிறது, சர்வதேசப் பிரச்சினைகளில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதையும் அவை கவனிக்கின்றன. சில நாடுகள் இந்த மாற்றத்தை வரவேற்றாலும், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் பிரிவினை அதன் சர்வதேசச் செயல்பாடுகளை எவ்வாறு பாதிக்கும் என்ற கவலையும் அவற்றிடம் உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர்களின் வெற்றியும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினர் படிப்படியாகத் தங்கள் இடத்தை வலுப்படுத்தி வருவதற்கு இந்தத் தேர்தலும் சான்றாக அமைந்துள்ளது. அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பியா தண்டியா (Pia Dandiya), ஃபுளோரிடாவின் 22வது காங்கிரஸ் தொகுதியில் குடியரசுக் கட்சி வேட்பாளர் கேசி அஸ்கரைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். ஃபுளோரிடாவிலிருந்து காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் தெற்காசிய வம்சாவளிப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சுஹாஸ் சுப்ரமணியம் (Suhas Subramanyam), வர்ஜீனியாவின் 10வது தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தனது நாடாளுமன்றப் பதவியைத் தக்கவைத்துள்ளார்.
ரோ கன்னா (Ro Khanna), கலிஃபோர்னியாவின் 17வது தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமி பேரா (Ami Bera), கலிஃபோர்னியாவின் 3வது தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வாகியுள்ளார்.
பிரமிளா ஜெயபால் (Pramila Jayapal), வாஷிங்டன் மாநிலத்தின் 7வது தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
அரிசோனாவின் 1வது காங்கிரஸ் தொகுதியில் போட்டியிட்ட மருத்துவரும் முன்னாள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினருமான அமிஷ் ஷாவும் (Amish Shah) பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வாகியுள்ளார்.
இவர்களுடன், மேரிலாந்து துணை ஆளுநர் அருணா மில்லர் (Aruna Miller), ஆளுநர் வெஸ் மூருடன் இணைந்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மேரிலாந்து மாநில நிர்வாகத்தில் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
நவம்பர் 5 அன்று வெளியான தகவல்களில் விஸ்கான்சின் அட்டர்னி ஜெனரல் ஜோஷ் கால், வாஷிங்டன் டி.சி. கவுன்சில் உறுப்பினர் அபர்ணா ராஜ், ஜார்ஜியா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜ்யோத் சிங், டெக்சாஸ் மாநிலச் சட்டமன்றத் தொகுதியில் பூஜா சேத்தி ஆகியோரின் வெற்றிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனைவருக்கும் இந்தத் தேர்தல் வெற்றிகரமாக அமையவில்லை. ஒஹையோ ஆளுநர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் விவேக் ராமசாமி (Vivek Ramaswamy), ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டனிடம் தோல்வியடைந்தார். நியூயார்க் அட்டர்னி ஜெனரல் பதவிக்குப் போட்டியிட்ட சரிதா கோமதிரெட்டி (Saritha Komatireddy)யும் வெற்றி பெறவில்லை.
இந்த வெற்றிகளின் முக்கியத்துவம், சில இந்திய வம்சாவளியினர் பதவிகளைப் பெற்றனர் என்பதில் மட்டும் இல்லை. அமெரிக்காவில் குடியேறிய குடும்பங்களின் அடுத்த தலைமுறையினர், உள்ளூர் அரசியலிலிருந்து மாநில நிர்வாகம், காங்கிரஸ் எனப் பல நிலைகளில் தங்கள் பங்களிப்பை விரிவுபடுத்தி அமெரிக்காவின் அரசியல், பொருளாதாரம், சமூகக் கொள்கைகளை உருவாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளனர் என்பதில்தான் உள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம். காலத்தின் கட்டாயமும் கூட.
இந்தத் தேர்தலின் மற்றொரு முக்கிய அம்சம் வாக்குப்பதிவு அளவு. ஆரம்பக் கணக்கீடுகளின்படி, சுமார் 12.27 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. 2018 இடைத்தேர்தலுக்குப் பிறகு, நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் பதிவான மிக அதிகமான இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகளில் இதுவும் ஒன்றாகும். மெயின், மினசோட்டா, மிச்சிகன் போன்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது. தேர்தல் முடிவுகள் மட்டுமல்லாமல், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிக்க முன்வந்ததும் அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தையும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகிறது.
மாற்றம் காங்கிரஸுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஆளுநர் தேர்தல்களிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் ஜனநாயகக் கட்சி முன்னேற்றம் கண்டுள்ளது. கிடைத்துள்ள முடிவுகளின்படி, ஆளுநர் பதவிகளில் ஐந்து இடங்களையும், மாநிலச் சட்டமன்ற அவைகளில் ஏழு இடங்களையும் கூடுதலாக ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இவ்வாறாக 2026 இடைத்தேர்தல் முடிவுகள், 2028 அதிபர் தேர்தலுக்கான அரசியல் களத்தையும் இப்போதே மாற்றத் தொடங்கியுள்ளன. ஜனநாயகக் கட்சியினர் தங்களது வெற்றியை நாடு முழுவதும் விரிவுபடுத்த முடியுமா என்பதையும், குடியரசுக் கட்சி தனது வாக்காளர் கூட்டணியை மீண்டும் கட்டமைக்க முடியுமா என்பதையும் அடுத்த இரண்டு ஆண்டுகள் தீர்மானிக்கும்.
ட்ரம்ப் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காது. எனவே குடியரசுக் கட்சியில் அடுத்த தலைமையை யார் ஏற்கப் போகிறார்கள் என்ற கேள்வி முக்கியமாகிறது. துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் 2028 அரசியல் களத்தில் எவ்வாறு தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதும் கவனிக்கப்படும்.
ஜனநாயகக் கட்சியிலும் அடுத்த அதிபர் வேட்பாளர் யார் என்ற போட்டி உருவாகலாம். ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் மட்டுமே 2028 தேர்தலின் முடிவை முன்கூட்டியே தீர்மானித்துவிடாது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரம், போர், குடியேற்றம், வேலைவாய்ப்பு, அரசியல் தலைமை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களே இறுதியில் வாக்காளர்களின் முடிவைத் தீர்மானிக்கும்.
இந்தத் தேர்தல் அமெரிக்க அரசியலுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறது. பொருளாதார நெருக்கடி, போர், வாழ்க்கைச் செலவு, அரசின் செயல்பாடுகள் என மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசுகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். அதிகாரம் என்பது மக்களால் வழங்கப்படும் பொறுப்பு. அது நிரந்தரமான உரிமையல்ல என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இறுதியில், தேர்தல் என்பது வெற்றியாளர்களையும் தோல்வியாளர்களையும் மட்டும் அடையாளம் காட்டுவதல்ல. மக்களின் குரலைக் கேட்கத் தவறும் எந்த ஆட்சிக்கும் ஜனநாயகத்தில் நிரந்தர இடமில்லை. அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதைவிட, அந்த அதிகாரம் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதே ஒரு ஜனநாயகத்தின் உண்மையான அளவுகோல் என உரக்கச் சொல்லியிருக்கிறது.
