மே 10, 2026
அன்புள்ள மாலினி,
ஜூன் 7ம் திகதி, என்னுடைய எழுபதாவது பிறந்தநாளை ஒரு சிறிய தேநீர் விருந்துடன் கொண்டாவுள்ளோம். உங்களின் வரவை அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
தயவுசெய்து அன்பளிப்பு எதுவும் கொண்டுவர வேண்டாம். எனக்கு ஏதாவது தரத்தான் வேண்டுமென நினைத்தால், தயவுசெய்து அதை என் சார்பில் உங்களுக்குப் பிடித்த ஏதாவதொரு அறநிறுவனத்துக்குக் கொடுங்கள் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
அன்புடன்,
மீனா
பெயரை மாற்றி மாற்றி அதே மின்னஞ்சலை நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் இருபது பேருக்கு மீனா அனுப்பினாள்.
இதுவரை மீனா எதையும் கொண்டாடியதில்லையே. இதென்ன புதிதாகவிருக்கிறது என அதைப் பார்த்தவர்கள் எல்லோரும் வியந்தார்கள். ஒரேயொரு மகளின் கலியாணத்துக்குக்கூட எவரையும் அழைக்கவில்லையே, உங்களுக்கும் அழைப்பு வந்ததா? என்னவாயிருக்கும்? என ஒருவரோடு ஒருவர் கதைத்தும் கொண்டனர். எவருக்குமே பதில் தெரியவில்லை.
ஏழு வருடங்களுக்கு முன்னர் மழை ஓயாமல் கொட்டிக்கொண்டிருந்த ஒரு நாள் அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது. செப்ரெம்பர் ஐந்தாம் திகதி, 2019 அன்றுதான் அவளுக்கு மறதிநோய் வந்திருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருந்தது. அதுவரை திறப்பை எங்கே வைத்தேன், கதவு பூட்டினேனா, இல்லையா என்ற சந்தேகங்களை வயதுடனான மறதி என்றே அவள் நினைத்திருந்தாள். சுந்தரும் ஆரணியும்கூட அப்படித்தான் நினைத்தார்கள்.
ஒரு நாள் மீனாவுக்கு வீட்டுக்கு வரும் வழி மறந்துபோயிருந்தது. கைப்பையைப் பற்றிக்கொண்டு தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்தாள். CIBCஇல், அவளுடன்கூட வேலைசெய்த மிலசா அவளைக் கண்டதும், “இந்தக் குளிருக்கை எங்கை போறீங்க” என வினவினாள். உடனே அவள் அழ ஆரம்பித்து விட்டாள். அவள் ஏன் அழுகிறாள் என்பது மிலசாவுக்கு விளங்கவில்லை. பக்கத்திலிருந்த ‘ரிம் ஹோட்டனுக்கு’ அவளைக் கூட்டிச் சென்றாள்.
இருவருக்கும் தேநீரை வாங்கிக்கொண்டு அவளருகே மிலசா அமர்ந்தாள். சற்று நேரம் அமைதியில் கழிந்தது. “வீட்டிலை ஒருத்தரும் இருக்கேல்லை. தலையிடியாயிருக்கு ரைலனோல் வாங்குவமெண்டு வந்தன். பிறகு வீட்டுக்கு எப்பிடிப் போறேண்டு தெரியேல்லை,” கண்கலங்கச் சொன்னாள் மீனா.
“ஓ, நான் கொண்டுபோய் விட்டுவிடுறன்,” மீனாவை மிலசா அமைதிப்படுத்தினாள்.
மிலசாவுடன் மீனா வீட்டுக்கு வருவதைப் பார்த்த சுந்தர், “ரண்டு பேருமா எங்கை போட்டு வாறியள்?” மீனான்ரை போனை மேசையிலை பாத்தநேரத்திலிருந்து, எங்கை போயிருப்பா எண்டு யோசித்துக்கொண்டிருந்தன்,” என்றான். மிலசா எதுவும் சொல்லாமல் மென்மையாய்ப் புன்னகைத்தாள்.
“York Mills & Don Mills சந்தியிலை மீனாவைக் கண்டன். எப்பிடி வீட்டுக்குப் போறதெண்டு தெரியேல்லையெண்டா. எனக்கொண்டுமாய் விளங்கேல்லை. மீனாக்கு ஏதாவது பிரச்சினையே?” சுந்தரிடம் தன் சந்தேகத்தைக் கேட்டாள் மிலசா.
“ஓ, சிலவேளையிலை அவவுக்குத் தலைச்சுத்து வாறது, அதுதான் பிரச்சினை,” என்றான் சுந்தர்.
மிலாசா போனதும், ஆரணியைத் தொலைபேசியில் அழைத்தவன், மீனா தொலைந்துபோன கதையை அவளுக்குப் பதற்றத்துடன் சொன்னான். Wingreen Ct இலிருக்கும், அவர்களின் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்றர் தூரத்துக்குக் குளிருக்குள் அலைந்திருக்கிறாள் என்பது அவர்கள் இருவரையும் அச்சம் கொள்ளவைத்தது. அது கிறிஸ்மஸ் விடுமுறைக் காலமாக இருந்ததால், ஜனவரி 2ம் திகதிதான், மீனாவை டொக்டரிடம் கூட்டிக்கொண்டு போகமுடிந்தது. வருடம் பிறந்தவுடன் ஏன் டொக்டரிடம் போவான் என மீனா தள்ளிப்போட முயன்றபோதும், விடாப்பிடியாகச் சுந்தர் அவளை அழைத்துச் சென்றிருந்தான்.
மருத்துவர் தலையை ஆட்டி ஆட்டி அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டார். பின்னர் ஞாபகசக்தி, மொழிப் பயன்பாடு, கிரகித்தல் போன்றவற்றைச் சோதிக்கும் MMSE எனப்படும் சோதனையைச் செய்தார். மீனாவின் உடலியக்கங்களை, சமநிலையைச் சரிபார்த்தார். முடிவில், “இது மறதி நோயாக இருக்கலாம். எதற்கும் விரிவாகச் சோதிப்பதற்காக நரம்பியல் மருத்துவருக்குப் பரிந்துரைக்கிறேன்,” என்றவர், “இதைப் பற்றி ஏதாவது கேள்விகள் இருக்கா?” என்றும் கேட்டார். மீனாவும் சுந்தரும் மூளை எதையும் சிந்திக்கக்கூடிய நிலையில் அப்போது இருக்கவில்லை.
ஒன்பது மாதங்களின் பின் நடந்த நரம்பியல் நிபுணருடனான சந்திப்புக்கு, ஆரணியும் சுந்தரும் மீனாவுடன் போயிருந்தனர். குடும்பச் சரித்திரம் பற்றிக் கேட்ட அந்த மருத்துவர், மேலும் சில சோதனைகளைச் செய்தார். பின்னர் “உங்களின் குடும்ப மருத்துவர் சொல்லியிருப்பாரென நினைக்கிறேன். உங்களுக்கு மறதிநோய் வந்திருக்கிறது. அதை உறுதிப்படுத்துறதுக்கு இரத்தப் பரிசோதனையும் செய்து பார்ப்போம்,” என்றார். அவர்கள் மூவரினதும் முகங்கள் வெளிறிப்போயின.
வீடு திரும்பும் வழியில் காருக்குள் நிசப்தமே நிறைந்திருந்தது. மூவரும் அடிக்கடி கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தனர். வீட்டிற்கு வந்ததும், ஆரணி, அம்மாவை இறுகக்கட்டியணைத்து அழுதாள். மீனாவும் அவளுடன் சேர்ந்து அழுதாள். பின்னர், “அப்பாவைப் பாத்துக்கொள், பிள்ளை. அவர் தன்னைக் கவனிக்க மாட்டார். தெரியும்தானே, முதல் தரம் மாரடைப்பு வரேக்கே உன்னைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுபோறதுதான் முக்கியமெண்டு நினைச்சார். பிறகு ரண்டாம் தரம் என்னைத் தனியவிட்டிட்டுப் போகேலாது எண்டு நீ வரும்வரைக்கும் வலியோடை இருந்தார்,” என்றாள். ஆரணி தலையை ஆட்டினாள். அம்மாவின் முதுகை ஆதரவாக வருடினாள்.
சிறிது நேரத்தின் பின், “பள்ளிக்கூடம் முடிகிற நேரமாச்சு, விதுவைக் கூட்டிக்கொண்டு வரோணும்,” எனப் போய்விட்டாள். களைப்பாக இருக்கிறதெனத் தேநீர் தயாரிப்பதற்காக மீனா குசினிக்குள் சென்றாள். கேத்தலில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. அவளின் மனம் எதிர்காலம் பற்றிய பீதியில் வெந்துகொண்டிருந்தது. இரண்டு கோப்பைகளில் தேநீரை நிரப்பிக்கொண்டு வரவேற்பறைக்குச் சென்றாள். சுந்தர் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு கோப்பை தேநீரைக் அவனிடம் கொடுத்தபடி, “இனி அப்பா நாள்களை எண்ணித்தான் வாழோணும்,” எனப் பெருமூச்சு விட்டாள்.
அவனுக்குப் பிடித்தமாதிரி அவள் கொண்டுவந்திருந்த நுரை நிறைந்திருந்த தேநீர்க் கோப்பையை வாங்கிச் சுந்தரம் மேசையில் வைத்தான். அவளின் கையை மிருதுவாகத் தடவினான். “பயமா இருக்கா?” எனக் கண்கலங்கக் கேட்டான்.
“உங்களை மறந்திடுவனோ எண்டு நீங்களெல்லோ பயப்பிடவேணும்,” அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்புக்குள் மறைந்திருந்த வேதனை சுந்தரையும் வேதனைப்படுத்தியது.
ஒரு காலத்தில், தலையைச் சாய்த்து வரிசையான வெண்பற்கள் தெரியச் சிரிக்கும் அவளின் சிரிப்புத்தான் அவனை அவளிடம் இழுத்துச் சென்றிருந்தது. 1975ஆம் ஆண்டு, மே மாதத்தில் ஒரு நாள், ராக்கிங் தொந்தரவில் மனம் நொந்துபோய் முகத்தைக் கீழே போட்டுக்கொண்டு வகுப்பின் ஒரு மூலையில் அவன் அமர்ந்திருந்தான். திடீரெனச் சிரிப்புச் சத்தம் கேட்டது. அப்போது, இரண்டு மாணவிகள் வகுப்புக்குள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்தபோது அவனுக்கு வியப்பாக இருந்தது.
“என்னெண்டு இப்பிடிச் சிரிக்கிறியள், உங்களுக்கெல்லாம் ராக்கிங் நடக்கிறேல்லையே?” அருகில் வந்து இருந்தவர்களிடம் கேட்டான்.
“அதை நினைச்சுத்தான் சிரிக்கிறம். விவசாய பீடமெண்டவுடனை ‘புல்லைப் பிடுங்கித் தலையிலை வைச்சுக்கொண்டு போ, எண்டிச்சினம்,” முகத்தில் விழுந்துகொண்டிருந்த சுருட்டை மயிரை ஒதுக்கியபடி ஒருத்தி மீளவும் சிரித்தாள். அவளின் கன்னத்தில் விழுந்த குழி அவளின் சிரிப்புக்கு மேலும் அழகூட்டியது. தலையிலிருந்த புல்லை எடுத்துக்காட்டியபடி மற்றவளும் சிரித்தாள்.
“பொம்பிளையாய்ப் பிறந்திருக்கலாம் போலையிருக்கு. ராத்திரி நித்திரைகூடக் கொள்ளேல்லை.” அவன் சலித்துக்கொண்டான். இருந்தாலும் அவர்களின் சிரிப்பு அவன் சோகத்தைக் கொஞ்சம் கரைத்துவிட்டது. ஆளுக்கு ஆள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
அந்த அறிமுக உரையாடலுடன் தொடங்கிய அவர்களின் நட்பு, நாளடைவில் சுந்தரையும் மீனாவையும் காதலர்கள் ஆக்கியிருந்தது. நேரம் போவது தெரியாமல் அவர்கள் புத்தகங்களைப் பற்றிப் பேசினார்கள், திரைப்படங்களை விமர்சித்தார்கள். மனித மனங்களின் விசித்திரங்களை வியந்தார்கள்.
ஒரு நாள் தேநீர் குடிக்கவென கன்ரீனுக்குப் போயிருந்தபோது, “பாரதியாரின்ரை கவிதைகள் உங்களுக்குப் பிடிக்குமோ?” என்று மீனாவைச் சுந்தர் கேட்டான்.
உதட்டருகே தேநீர்க் குவளையைக் கொண்டுசென்ற அவள், மீளவும் அதை மேசையில் வைத்துவிட்டு, “பாரதியாரின்ரை கவிதைத் தொகுப்பை எட்டாம் வகுப்புப் படிக்கேக்கை வாங்கினனான். இண்டைக்கும் அது என்ரை மேசையிலை இருக்கு,” எனப் பதிலளித்தாள்.
“அப்பிடியெண்டா, ‘மானுடரில் வேற்றுமை இல்லை’ எண்டதும் பிடிக்குமோ?” மீனா சிரித்தாள்.
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பது அவளின் கருத்தாக இருந்தாலும், அவளின் குடும்பத்தவரின் கருத்து அதாக இருக்கவில்லை. அவன் உனக்கு வேண்டுமானால் எங்களை மறந்திடு என்றார்கள். பிள்ளை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடுமெனச் சுந்தரின் குடும்பம் ஆறுதல் சொன்னது. ஆனால், நாற்பது ஆண்டுகளாக எவரும் அவளைத் தேடவில்லை. காலம் காயங்களை ஆற்றும் என்பது அவள் வாழ்வில் நடக்கவேயில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு விடயத்தையும் சுந்தர்தான் கவனித்துச் செய்கிறான். அவளைக் கேட்டு அவளை அசெளகரியப்படுத்தக்கூடாது என்பதற்காக, மருந்தெடுத்தாளா, அடுப்பை அணைத்தாளா என்பதையெல்லாம் தானே சென்று உறுதிப்படுத்திக் கொள்வான். சிலவேளைகளில் வீட்டுத் திறப்பைக் குளிரூட்டிக்குள் கண்டெடுப்பான். சிலவேளைகளில், பால் அலுமாரிக்குள் இருக்கும். இன்னும் சிலவேளைகளில், மூக்குக் கண்ணாடியைத் தோய்க்கவென வைத்திருக்கும் ஆடைகளுக்குள் தேடியெடுக்க வேண்டியிருக்கும்.
போன மாதத்தில் ஒரு நாள் விது வந்து பாட்டியின் மடியில் அமர்ந்தான். “பாட்டி இதைப் பாருங்கோ, நேற்று பீச்சிலை பொறுக்கினான்” என்று சில சிப்பிகளைக் காட்டினான். மீனா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். பல தடவைகள் முயன்றும் பேரனின் பெயரை அவளால் நினைவுகொள்ள முடியவில்லை. மறதி தன்னை நோக்கி விரைவாக வந்துகொண்டிருக்கிறது என்பது அவளுக்குத் தெரிந்தது. அவளின் கண்கள் குளமாயின. மெல்ல மெல்ல நேற்று என்ன செய்தாள் என்பதும் நினைவில்லாமல் போனது.
ஞாபகசக்தியை முழுமையாக இழப்பதற்கு முன்பாகச் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்து முடிக்கவேண்டியதன் அவசியம் அவளுக்கு விளங்கியது. அதில் ஒன்றாக மருத்துவ உதவியுடனான இறப்புக்கு விண்ணப்பித்தாள். பின்னர் தன்னில் அன்புள்ளவர்களுக்குத் தான் இவ்வுலகை விட்டுப் போவதைத் தெரிவிக்க வேண்டுமென நினைத்தாள்.
தேநீர் விருந்தில் பால்தேநீருடன் வடை, மோதகம், முறுக்கு, சிப்பி, சமோசா என இனிப்பும் உறைப்பும் கலந்திருந்தன. வரவேற்பறை உரையாடல்களாலும் சிரிப்புகளாலும் கலகலத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவருடனும் கதைக்கும்போது, அவர்களை நினைவிருக்கிறா என்பதைச் சோதிப்பதற்காக மீனா அவர்களைப் பெயர் சொல்லி அழைத்தாள்.
“மாலினி, வடிவான சீலை உடுத்திருக்கிறீங்க, வடையையும் எடுங்கோ. வத்சலா இந்தாங்கோ சீனி குறைஞ்ச தேத்தண்ணி. வைதேகி அக்கா, உங்கடை சீலையின்ரை நேவி புளூ எனக்கு நல்லாய்ப் பிடிச்சிருக்கு. உங்களுக்குப் பலகாரங்கள் பிடிச்சிருக்கா?”
“இந்த பேர்த்டேயை வலு வித்தியாசமாகக் கொண்டாடுறாய், மீனா. ஏதாவது ஸ்பெசலா?” மாமி வதனி விசாரித்தா.
“நானும்தான் கேட்க நினைச்சனான்” என்றாள் சினேகிதி வத்சலா.
மீனா சுந்தரைப் பார்த்தாள். ஆறு மாதங்களுக்கு முன் ஏற்பட்டிருந்த மூன்றாவது மாரடைப்பு அவனின் உடலின் பாதி உற்சாகத்தை எடுத்துச் சென்றிருந்தது. அவன் அவளைக் கனிவுடன் பார்த்தான்.
“விசேஷம்தான், சொல்றனே,” என அவள் எழுந்துநின்றாள். “இண்டைக்கு இங்கை வந்து எங்களை மகிழ்விச்ச உங்களுக்கெல்லாம் என்ரை மனமார்ந்த நன்றி. முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லுறதுக்காண்டித்தான் கூப்பிட்டனான்.
சுந்தரையும் ஆரணியையும் அவள் மாறிமாறிப் பார்த்தாள். “எனக்கு… எனக்கு…” அவளின் வார்த்தைகள் தடுமாறின. “…மறதி நோய் வந்திருக்கு.” வரவேற்பறையில் அவளின் மூச்சுச் சத்தம் மட்டுமே கேட்டது.
“ஒரு நாளைக்கு… நான் ஆரெண்டதுகூட… எனக்கு நினைவிருக்காது.” அவளின் குரல் பிசிறியது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஆரணி எழுந்துசென்று அம்மாவை அணைத்தபடி கண்ணீர் மல்கினாள். ஆரணியின் தலையைத் தடவி மீனா அவளைச் சாந்தப்படுத்திவிட்டுத் தொடர்ந்தாள்.
“இதுக்குச் சிகிச்சையில்லை. ஆனா, மறதி குறையிற வேகத்தை குறைக்கிறதுக்கு மருந்துகள் எடுக்கலாமெண்டு டொக்டர் சொன்னபடி மருந்தெடுக்கிறன். எண்டாலும் எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கும்தானே.” சொன்னவள் எல்லோரையும் ஒரு தடவை பார்த்தாள்.
“சுந்தரை, ஆரணியை, விதுவை மறக்கிறதுக்கு முதல் நான் போயிடோணும்… எண்டதுதான் என்ரை ஆசை. அதோடை ஆரணிக்கோ, சுந்தருக்கோ நான் சுமையா இருக்கக்கூடாது,” ஆழமாக மூச்செடுத்தாள். “அதுதான்… MAIDஐத் தெரிவுசெய்திருக்கிறன்”.
சுந்தர் மெதுவாக அவளின் கையைப் பற்றினான். சுந்தரின் அக்கா வைதேகி கையிலிருந்த தேநீர்க் குவளையைக் கீழே வைத்தாள். “மீனா…” அவளின் குரல் தழுதழுத்தது. வத்சலா வாயில் வைத்திருந்த மோதகத்தை கடித்த குறையில் தன் தட்டில் போட்டாள். மாலினி அதிர்ந்துபோய் மீனாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். வதனி வந்து அவளைக் கட்டிக்கொண்டாள். சிலரால் அந்தச் செய்தியை நம்ப முடியவில்லை. மீனா மென்மையாகப் புன்னகைத்தாள்.
“டொக்டரின்ரை உதவியோடை கிடைக்கப்போற அந்த விடுதலை எப்பவும் கிடைக்கலாம். அதுக்குப் பிறகு மரணச்சடங்கு எண்டு ஒண்டும் வேண்டாமெண்டும் முடிவெடுத்திருக்கிறன். செத்தாப்போலை அழுகிறதிலை என்ன பிரயோசனம்?” மீளவும் சுற்றியிருந்தவர்களை மீனா பார்த்தாள்.
“அதுதான் எல்லாரையும் கூப்பிட்டு நானே பிரியாவிடை தாறன்… ஒரு நாளைக்கு உங்களை எங்கேயோ பாத்திருக்கிறனே எண்டு சொன்னா, அல்லது என்னாலை உங்களை அடையாளம் காணமுடியாமலிருந்தா, எனக்கு அடையாள நினைவின்ரை சிதைவு தொடங்கியிருக்கெண்டு உங்களுக்கும் தெரியவரும். அந்த நேரத்திலை தயவுசெய்து அழாதேயுங்கோ. அழுது என்னையும் கவலைப்படுத்தாதேயுங்கோ.”
அவளின் வார்த்தைகள், புயல் வரப்போகிறது என்பதை அறிவிக்கும் இடிமுழக்கம் போலவிருந்தது. பேச்சை முடித்துக்கொண்டு சுந்தர் அருகே போய் அமர்ந்தாள். சுந்தரின் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டாள். சுந்தர் அவளை அன்புடன் அணைத்துக் கொண்டான். மீனாவுடன் தங்களுக்கு இருந்த பிணைப்புகள் பற்றியும், அவளுடன் சேர்ந்து அவர்கள் கடந்துவந்த பாதைகள் பற்றியும், அவளின் நற்பண்புகள் பற்றியும் சிலர் பேச்சாகப் பகிர்ந்துகொண்டனர்.
இரண்டு கிழமைகளுக்குப் பின்னர் வாசல் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தவள் உறைந்துபோனாள். அவளது அண்ணாவும், தங்கையும் வாசலில் நின்றிருந்தனர்.
“உள்ளை வரலாமோ…?” அண்ணாவின் குரல் அவளை இவ்வுலகுக்குக் கொண்டுவந்தது. “இந்த வீட்டுக்கை உனக்கு இடமில்லை,” என்று அன்று சொன்ன குரல் இன்று அனுமதி கேட்டது.
“வாங்கோ.”
நாற்பது ஆண்டுக் கதைகளை எப்படிக் கதைத்து முடிப்பது? கோபத்தை, கவலையை எப்படிக் காட்டுவது, காயத்துக்கு எப்படி ஒத்தடம் கொடுப்பது, எதுவுமே எவருக்கும் தெரியவில்லை.
ஆரணி தேநீர் போட்டுக் கொடுத்தாள். சுந்தர்தான் அவர்களின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், வானிலை என்று அதிகமாகக் கதைத்துக் கொண்டிருந்தான். அண்ணாவும், தங்கையும் அவளைப் பார்ப்பதும், தரையைப் பார்ப்பதுமாக இருந்தனர். உட்குழிந்திருந்த கண்களை அண்ணா அடிக்கடி துடைத்துக்கொண்டார். தங்கையின் கண்களாலும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
வீட்டைவிட்டுப் போகும்போது, “அடிக்கடி வரலாமோ?” தயக்கத்துடன் தங்கை கேட்டாள்.
“வரலாம், ஆனா, தேவையில்லை… மிஞ்சியிருக்கிற கொஞ்சக் காலம் முழுவதையும் என்ரை குடும்பத்தோடை செலவழிக்கோணுமெண்டு விரும்புறன்,” என்றாள் மீனா. தங்கை அவளைக் கட்டிக்கொண்டாள்.
பின்னர் வாசல்வரை போய் அவர்களை வழியனுப்பி வைத்தாள். அதுவரை, அவனின் அப்பாவின் மடியில் அமைதியாக இருந்த விது, அவள் வீட்டுக்குள் வந்ததும் ‘பாட்டி’ என ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டான். குனிந்து அவனைத் தூக்கிய மீனா, அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளின் கண்களின் ஓரங்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
